மாலை அவன் எழுந்து வந்தபோது வீட்டில் யாருமில்லை.சமையலறையில் செல்லம்மா ஏதோ வேலை செய்துகொண்டிருந்தாள் இவன் அங்கே சென்று நின்று அவளையே பார்த்திருக்க அடிக்கடி அறை பக்கம் எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தவள் இப்பொழுதும் திரும்பக் கணவன் அவள் முன்னே நின்றிருந்தான்.
அழகான ஒரு புன்னகை விரிந்தது அவள் இதழ்களில் “தலை வலி பரவாயில்லையா” என்றவள் கண்கள் கொஞ்சம் சிவந்து வீங்கி இருந்தது அழுத்திருக்கிறாள்.இரு கைகளாலும் தலையை அழுந்த கோதியவன் “சாப்டியா” என்றான்.
“ஹ்ம்ம் நீங்க வாங்க சாப்பிடுங்க” என்றவள் முன்னே நடக்க ஒன்றும் கூறாமல் அவளுடன் நடந்தான்.அவள் பரிமாறத் தொடங்கத் தன்னுடன் பிடித்து அமர்த்தியவன் “நீயும் சாப்பிடு” என்று அவளுக்கும் ஓர் இலையை வைத்தான், இருவருமாகப் பரிமாறிக்கொண்டு சாப்பிட்டனர்.
“அம்மா எதுவும் பேசினாங்களா” என்றான்.உண்பதை ஒருநொடி நிறுத்தியவள் “அதெல்லாம் இல்ல மாமா” என்றாள், அவனுக்குச் சலிப்பாக இருந்தது இத்தனை தூரம் பேசிவிட்டுச் சென்றபிறகும் இப்படி நடந்துகொள்ளும் தாயை என்ன செய்ய என்றே அவனுக்குத் தெரியவில்லை.
நாம் பெற்ற பிள்ளையாக இருந்தால் நான்கு அடி அடித்துக் கூட நல்லது சொல்லிக்கொடுக்கலாம்.பெற்றவளை என்ன செய்ய என் வீட்டில் இனிமேல் இருக்காதீர்கள் என்று வெளியில் அனுப்பவா முடியும்.
முதலில் அவன் மனசாட்சியே ஒத்துக்கொள்ளாது.அவனால் அது முடியவும் முடியாது அனைவரையும் நேசித்து அரவணைத்தே பழகிவிட்டானே வெட்டி எரிய முடியவில்லை, அப்படியே நூறில் ஒரு பங்காக எனக்கு என் பொண்டாட்டி நிம்மதி முக்கியம் அம்மா அப்பாவை நீங்க யாரவது பாருங்க என்று சொல்லிவிட்டால் போதும்.
அதோடு அனைவரின் உண்மை முகமும் வெளி வந்துவிடும்.இத்தனை வருடமாக இந்த குடும்பத்தைத் தூக்கி நிறுத்த அவன் பட்ட துன்பத்தையெல்லாம் தூசாக தட்டி விட்டுவிட்டு அவனை மிக மிகக் கேவலமானவனாகச் சித்தரித்துவிடுவார்கள்.
தான் இங்கிருந்து சென்ற பிறகு இவளை நிம்மதியாக வாழ விடுவார்களா? அவனுக்கு உணவே இறங்கவில்லை அவனையே தான் பார்த்திருந்தாள் செல்லம்மா, அவன் தவிப்பு அவளுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது ஆனால் என்ன யோசிக்கிறான் என்றெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.
அவளுக்கு என்னவோ அழுகைதான் வந்தது.இரண்டு வருடமாக இந்த நாளுக்காகத்தானே இருவரும் காத்திருந்தது… அது இப்படியா அமையவேண்டும் தன்னையே விழியில் நீரோடு பார்த்திருப்பவளின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவன் “மன்னிச்சுடு” என்றான்.
“மாமா…” என்று அவள் தடுக்கப் பார்க்க. “இல்லச் செல்லம் உனக்கு… உனக்கு நான் சரி சொல்லியிருக்கக்கூடாது நீ இன்னும் நல்லா இருந்திருக்கணும் எங்க சுயநலத்துல உன்னைச் சிக்க வெச்சுட்டு அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம நடந்துக்குறாங்க என்னை வெறுத்துடமாட்டல்ல” என்றவனின் குரலில் இருந்த வலியும் அவனின் தவிப்பும் புரிய அவன் தோள் சாய்ந்துகொண்டாள் செல்லம்மா.
“இப்படிலாம் பேசாதீங்க மாமா எனக்கு வேற எங்கயும் போக வேண்டாம் நீங்கதான் வேணும் எல்லாம் சரியாயிடும்.நீங்க இப்படி இருக்காதீங்க நான் உங்களை பிடிச்சுதான் கட்டிகிட்டேன் நீங்கன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்” என்றவளை அப்படியே தன்னோடு இறுக்கி அணைத்தான் மணிபாரதி.
அனைத்தையும் சரளாவும் விநாயகமும் கேட்டும் பார்த்துமே நின்றிருந்தனர். விநாயகம் மனைவியை அர்த்தமாகப் பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தார்.
“நீ தேவையில்லாம அந்த பொண்ணுகிட்ட பிரச்சனை செய்ற சரளா, உன் மவன்தானே எப்படி மனசொடிஞ்சு பேசுறான் பாத்தியா, இங்க வந்திருக்கிற மூணு மருமகள்களையும் விட அதிகமான சீதனம் கொண்டுவந்தது அந்த பொண்ணுதான்”.
“அதனால அதைப்பத்தி நீ பேசமுடியாது. அதுவும், அந்தச் சீதனம் நம்ம மவளுக்கு போய் சேந்திருக்கு அப்புறம் என்ன உனக்கு கோபம் நானும் ஏதோ வீட்டில மாமியார் மருமகள் பூசல் அப்படின்னு இருந்தேன் இன்னைக்கு நீ நடந்துக்கிட்டது கொஞ்சம் கூட சரியில்ல”.
“பாரதி நம்மள வீட்டை விட்டு வெளில போங்கன்னு சொல்ற நிலைமைக்குக் கொண்டுவந்திடாத அவ்ளோதான் சொல்லுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
“அதெப்படி நாங்கதான் வளத்து விட்டோம் பாத்தோம், அந்த வயசிலேயே காதலன்னு கண்ட கருமத்தையும் செஞ்சுட்டு வந்து நின்னப்போ நாங்கதான் யாருக்கும் தெரியாம சரிக்கட்டினோம். நான் பாத்து வளக்காமலா இன்னைக்கு இவ்ளோ வளைந்து நிக்குறான். மத்தவனுங்க அவனுங்க குடும்பம்னு போனமாதிரி இவனையும் விட்டுட்டா எங்க கடைசிக்காலத்துக்கு என்ன பண்றது அதெல்லாம் இந்த மனுஷனுக்கு தெரியுதா பிடிக்க வேண்டிய இடத்துல பிடிச்சாதான் உண்டு” என்று மனதில் கறுவிக்கொண்டார் சரளா.
பேருக்கு உண்டுவிட்டு எழுந்துகொண்டனர் இருவருமே, அவள் அனைத்தையும் ஒதுங்கவைத்து வர அவன் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான். உடன்பிறப்புகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர், அவன் அக்காவும் கணவன் பிள்ளைகளோடு வந்திருந்தாள்.
“காலைல வரமுடியலடா பாரதி இவர் சொந்தத்துல ஒரு விசேஷம்” என்றாள்.
“சரி” என்பதாகக் கேட்டுக்கொண்டான்.சலிப்பை முகத்தில் காட்டாமல் இயல்பாக இருந்தான், சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்றவன் இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து அனைவருக்கும் வாங்கிவந்த பொருட்களை எடுத்துக் கொடுத்தான்.
அத்தனை சந்தோசம் அவர்கள் முகங்களில், தாய்க்கும் தந்தைக்கும் அவர்களுக்கானதை எடுத்துக்கொடுத்தான் சரளா பூரிப்போடு வாங்கிக்கொண்டார்.
“ஏன் பாரதி செல்லம்மாவுக்கு ஒன்னும் வாங்கிட்டு வரலையா” என்றான் சுரேஷ்.
அதுதானே என்பதாக அனைவரும் அவனைப் பார்க்க “என் பொண்டாட்டிக்கு நான் தனியா குடுத்துப்பேன்” என்றான் அவன்.
“”அதெப்படி பாரதி எங்க எல்லாருக்கும் குடுத்த மாதிரி அவளுக்கும் இங்கேயே குடு அதென்ன மறச்சு கொடுக்குறது என்றார் சரளா.அவன் திரும்பிப் பார்க்கப் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த பரிசை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர் பெரியவர்கள் மட்டுமே இங்கு.
தாயைத் திரும்பிப் பார்த்தவன் “என் பொண்டாட்டியை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுப்பேன் அதை இங்கேயே குடுக்கட்டுமா” என்றான் காட்டமாக.
“அவ எதிர்பார்த்தது என்னை மட்டும்தான், என்னய பாத்தப்போ அவ முகத்துல வந்த சந்தோஷத்தை இந்த எந்தப் பரிசும் கொடுக்காது. அதோட, சம்பாரிக்குறது நான் என் மனைவிக்கு என்ன குடுக்கணும் எப்படி கொடுக்கணும்னு கூட உங்க கிட்ட சொல்லனுமா” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்தோடு.
“பாரதி விடு அவ ஒன்னும் சரியில்ல இப்படி எதையாவது பேசிட்டு திரியிறா இந்த பேச்சை விடுங்க, போ ராத்திரிக்கு என்னனு பாரு” என்றார் விநாயகம் அவனின் கோபத்தை குறைக்க.
சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது. “ஆயா பசிக்குது” என்று வந்து நின்றார்கள் பிள்ளைகள், சரளா உடனே “ஏய் செல்லம்மா மதியம் வெச்ச மீன் கொழம்பு கறிக்குழம்பு எல்லாம் இருக்கு சூடு பண்ணிட்டு, தோசை ஊத்திடு ரெண்டு கல்லு வை அப்போதான் சீக்கிரம் முடியும்,பிள்ளைங்க சாப்பிட்டதும் அப்படியே ஆம்பளைங்களுக்கு குடுக்கலாம்” என்க.
அவள் சம்மதமாகத் தலை அசைத்துக்கொண்டே எழ “எங்கப்போற?” என்றான் பாரதி.
அவள் அவனைப் புரியாமல் பார்க்க “வெளில சாப்பிட போகணும் கிளம்புன்னு சாய்ந்திரமே சொன்னேன்ல இன்னும் நிக்குற போ ரெடி ஆகு, இங்க அம்மா பாத்துப்பாங்க அண்ணிங்க இருக்காங்களே” என்றவன்.
“பசங்களா இந்த ஞாயித்து கிழமை தீம் பார்க் போகலாம் சரியா… இப்போ போங்க ஆயா தோசை குடுப்பாங்க” என்றவன் அண்ணன்களையும் அவர்களின் மனைவியரையும் பார்த்து “சண்டே வெளில போலாம் திங்கக்கிழமை செல்லம்மாவை கூட்டிட்டு தேக்கடி போறேன்.ஒரு வாரம்” என்றான்.
“ஒருவாரமா சொல்லவேயில்லை, பசங்களுக்கு லீவ் விடும்போது போலாம்ல பாரதி இல்லன்னா சனி ஞாயிறு போனா ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுக்கலாம்” என்றார் சரளா.
அவன் கழுத்தை அழுந்த தேய்த்துக்கொண்டு விழி மூடினான்.தேவிதான் “அத்த அவங்க ஹனிமூன் போறாங்க நாம எதுக்கு நடுவுல அதான் வெளில போறோமே” என்றாள்.
சரளா ஏதோ சொல்லவரா விநாயகம் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டார்.என்றாலும் இன்று வெளியில் செல்வது பிறகு தேக்கடி என்று செல்லம்மா மீது கோபம் வந்தது அவருக்கு, காரணம் இதுவரை அவன் வந்தால் குடும்பத்தோடு ஒரு ட்ரிப் போவார்கள் நான்கு நாட்கள்.இப்பொழுது அவளை மட்டும் அழைத்துச்செல்கிறானே என்று சின்ன பிள்ளைகளை விடக் கேவலமாகப் பொறாமை கொண்டார்.
அவன் அறைக்குள் நுழையும் போது அவள் யோசனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தாள் “என்னாச்சு கிளம்பலையா?” என்றான் பாரதி.
“நீங்க வெளில போறதை பத்தி ஒண்ணுமே சொல்லல மாமா” என்றாள் தயக்கத்தோடு.
“ஆமா சொல்லல” என்றவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி “அப்படி சொன்னதாலதான் அதிகமா பேசாம உன்னால உள்ள வரமுடிஞ்சது இல்லனா எங்க அம்மா கேள்வியா கேட்டிருப்பாங்க பதில் சொல்லியே என் பாதி உசிர் போயிருக்கும்” என்றான்.
உண்மைதான் அவளுக்கே சலிப்பாகத்தான் இருந்தது அனைத்திற்கும் ஏதேனும் ஒரு விளக்கம் என்று இருந்தால் எப்படி என்று.அவள் அவனையே பார்த்திருக்க “என்ன” என்றான்.
“இல்ல… என்ன டிரஸ் போட” என்றாள்.
“புடவையே கட்டிக்கோ” என்றான்.
“ஹ்ம்ம் சரி” என்றவள் குளித்து வேறு புடவைக்கு மாற அவன் உடைமாற்றி வெளியில் சென்றிருந்தான்.அனைவரிடமும் ஒரு தலையசைப்போடு அவன் செல்ல இவள் மாமியாரைப் பார்த்தாள்.
கடுகை போட்டால் அடுப்போடு பற்றிக்கொள்ளும் சூட்டோடு இருந்தார் அவர், “போயிட்டு வரேன் அத்த” என்றவள் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு வெளியில் சென்றாள்.
மதில் சுவரைத் தாண்டியவுடன் அவள் கையை இழுத்து தன் வயிற்றோடு வைத்துக்கொண்டான் பாரதி “என்னையவிட்டு கொஞ்சம் கூட நகரக்கூடாது பக்கத்திலே இருக்கணும் இல்ல அடிவெளுத்துடுவேன்” என்றான்.
மெலிதாகப் புன்னகைத்தவள் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள், இங்குதான் என்றில்லாமல் சுற்றினான் அரைமணி நேரம் சென்று ஓர் உணவகத்தில் நிறுத்தினான்.பார்த்துப் பார்த்து அவளுக்கு வாங்கிக்கொடுத்து உண்ணவைத்தான்.
மீண்டும் ஒரு பயணம் ஒருமணிநேரம் சுற்றிவிட்டுத் திரும்பிவருகையில் கடையை அடைத்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் மிச்சமிருந்த பூ அனைத்தையும் வாங்கி மனைவிக்கு வைத்துவிட்டான்.
“கொஞ்சம் இறுக்கமா கட்டிப்பிடி டி” என்றான்.அவள் பெரும் தயக்கத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டே நெருங்கி அமர்ந்தாள், ஒரு கையை மட்டும் முன்னே கொண்டு சென்று அவன் சட்டையை இறுக்கமாகப் பிடிக்க.
“ரெண்டு கையும் வெச்சு பிடி செல்லம் ப்லீஸ்டி” என்றான்.அந்தக் குரல் அவளுக்குள் குறுகுறுப்பை கூட்டிற்று இரு கைகளாலும் அவனை அணைத்துக்கொண்டாள், வீட்டை நெருங்கியவன் ஒரு ஓரமாக பைக்கை நிறுத்தினான்.
அவள் கேள்வியாகப் பார்க்கத் திரும்பி அவள் விழிகளைப் பார்த்தவன் “செல்லம்மா உனக்குச் சம்மதமா” என்றான் மெல்லிய குரலில்.
“எது… எதுக்கு” என்றாள் தடுமாறி முகத்தைக் குனிந்துகொண்டு, அவள் கன்னம்பற்றி தன்னை பார்க்கவைத்தவன் “உன்னை எனக்கு குடுக்குறதுக்கு உனக்குச் சம்மதமா” என்க வேகமாக அவன் தோளில் முகத்தைப் புதைத்தாள்.
“ஏய் செல்லம்” என்றவன் அவளை நிமிர்த்தப் பார்க்க “மாமா” என்று சிணுங்கினாள், சிரித்துக்கொண்டவன் வீட்டிற்கு வண்டியை விட்டான்.
தம்பதியர் இருவரும் உறங்கியிருக்கவில்லை வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.காம்பௌண்ட் உள்ளே வண்டி நுழைந்ததும் அவனைவிட்டுத் தள்ளி அமர்ந்துகொண்டாள் செல்லம்மா.
வாயிலில் வந்து வண்டியை நிறுத்தியவன் “ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க” என்க.
“ஹ்ம்ம் வெளில போனவங்களுக்கு வயசானவங்க வீட்டில இருக்காங்களேன்னு நினைப்பிருக்கணும் இவ்ளோ நேரம் கழிச்சு போறோமே அவங்களும் தூங்கணுமேன்னு எண்ணம் இருந்தா சரியான நேரத்துக்கு வந்திருப்ப” என்றவர் விழிகள் செல்லம்மாவை முறைத்தது.
அவள் தலை குனிந்துகொண்டு உள்ளே செல்ல “சரிம்மா என் வீட்டுச் சாவியை இனிமே நான் எடுத்துட்டே போறேன் எங்களுக்காக நீங்க காத்திருக்கவேண்டாம் நாங்களே தொறந்து வந்துக்குறோம்.அப்புறம் நாளைக்கு எங்களுக்கு எதுவும் சமைக்கவேண்டாம் அவ வீட்டில எங்களுக்கு விருந்து இருக்கு ராத்திரி அங்க தங்கிட்டு மறுநாள் காலைலதான் வருவோம் அடுத்தநாள் வெளில போலாம்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சரளாவால் ஒன்றுமே பேசமுடியவில்லை அவருக்குப் பேசும் வாய்ப்பையே அவன் தரவில்லை உள்ளே நுழைந்து கதவடைத்தவன் மனைவியை அப்படியே தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
இருவருமே தங்களைச் சுற்றியிருந்த அனைத்தையும் மறந்து போயினர், அவர்களின் இரவு மட்டும் நீண்டுகொண்டிருந்தது.காலை பத்து மணி கடந்தும் அறைக் கதவு திறக்கவில்லை சரளாவின் விழிகளுக்குச் சக்தி இருந்தால் கதவை அப்படியே பஸ்மம் ஆக்கியிருப்பார் போல.
காலை உணவை முடித்துக்கொண்டு விநாயகம் டி.வி பார்த்துக்கொண்டிருக்க கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான் பாரதி.அவன் பின்னே தயங்கித் தயங்கி வெளியில் வந்தாள் செல்லம்மா.
“அம்மா டீ குடு” என்று தந்தையின் அருகில் அமர்ந்தவன் தொலைக்காட்சியில் கவனம் வைக்க அடுப்படிக்குள் நுழைந்தவளைத் துளைக்கும் பார்வை பார்த்தவர் “உனக்கு வெக்கமா இல்ல மணி என்னவாவுது அவன்தான் அப்படின்னா வீட்ல மாமனார் மாமியார் இருக்காங்களே பக்குவமா இருப்போம்னு இல்ல, ஒரு குடும்ப பொம்பளை இவ்ளோ நேரம் புருஷனோட ரூம்ல இருக்குற என்ன வளர்ப்பு” என்றார்.
அவள் விழிகள் கலங்கிவிட்டது “என்ன” என்றபடி உள்ளே வந்தவன் மனைவியின் கலங்கிய முகம் பார்த்து தாயை நிமிர்ந்து பார்க்க அவர் சட்டென்று முகத்தை வேறுபுறம் திருப்பினார்.
காலையிலே மீண்டும் ஒரு வாக்குவாதத்தைத் தொடங்கவேண்டுமா என்று மண்டை காய்ந்தது.இவருக்கு என்னதான் பிரச்சனை என்று எரிச்சல் படமால் இருக்க முடியவில்லை.
டீயை குடித்து முடித்து “சரி அப்போ நாங்க கிளம்புறோம் நாளைக்கு எப்போ வருவோம்னு சொல்லமுடியாது நான் போன் செய்றேன்” என்றான் இருவரும் கிளம்பியும்விட்டனர்.
இங்கே சரளாதான் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் முணுமுணு வென்று புலம்பிக்கொண்டே இருந்தார்.
தடபுடல் விருந்து வைத்து அசத்திவிட்டனர் செல்லம்மாவின் வீட்டில் மரிக்கொழுந்துக்கும் செல்வத்திற்கும் சிங்கப்பூரிலிருந்து அவன் வாங்கிவந்திருந்த பொருட்களை அவனே அவர்களிடம் கொடுத்தான், அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு.
அதிலும் மகளின் முகம் பூரிப்பில் மிளிர்வதைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் நிறைந்தது அந்த தாய்க்கு, இரவு உணவும் முடிந்தபிறகு செல்வம் பாரதியிடம் “பின்பக்கம் நம்ம குடிசைதான் பேன் இருக்கு நல்லாவும் இருக்கு இங்க வசதி பத்தாது அங்க தங்கிக்கிறீங்களா” என்று தயக்கத்தோடு கேட்க.
“அதுக்கென்ன அங்கேயே இருக்கோம்” என்றான் அவன்.
சிறிய குடிசை வீடுதான் நல்ல சுத்தமாகக் குளுகுளுவென்று இருந்தது, முந்தின இரவின் கதையை இங்கேயும் விடிய விடிய மனைவியுடன் படித்துக்கொண்டிருந்தான்.
காலை உணவுக்குக்கூட எழுந்துகொள்ளவில்லை பதினொரு மணிக்குக் குளித்து வெளியில் வந்தவர்களைப் பார்த்த செல்வம் இளநீர் கொண்டுவந்து கொடுத்து சகஜமாகப் பேச, செல்லம்மா மெல்ல நழுவி தாயிடம் சென்றாள்.
மரிக்கொழுந்தும் மகளை ஆசையாக நெட்டிமுறித்து “இளநி குடிச்சியா புள்ள” என்க.
“குடிச்சேன்மா” என்றாள் அவள்.
நேற்று காலை மாமியாரின் பார்வை தன் மேல் அத்தனை வெறுப்போடு விழுந்ததையும் தன்னை கேவலமாகப் பேசியதையும் நினைத்தவள் திரும்பி தாயைப் பார்த்தாள்.அந்த முகம் அத்தனை சந்தோஷப் பூரிப்பில் திளைத்தது.
மகள் வாழ்வைத் தொடங்கிவிட்டாள் அவள் வாழ்வு அனைத்துச் செல்வங்களையும் பெற்று நிறைவாய் இருக்கவேண்டுமென்று அடிக்கடி அவர் கரங்கள் கூப்பி வேண்டிக்கொண்டார்.
நேற்றைய காலை ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வைத் தந்த கூடல் இன்று அப்படியே மாறி உயிர் வரை தித்தித்தது, இரண்டே இரண்டு விடியல், இருவேறு மனிதர்கள் இருவேறு மனநிலை… சிரித்துக்கொண்டாள்.
“சரி ஒரேதா சாப்பாடு சாப்பிடுங்க இதோ முடிஞ்சுது” என்றவர் வேகமாக உணவை அடுக்கினார்.,மாலைபோல அங்கிருந்து கிளம்பி வீடு வந்தனர், மறுநாள் தீம்பார்க், அடுத்தநாள் இருவரும் தேக்கடி கிளம்பிவிட்டனர்.
செல்லம்மா திருச்சியைத் தாண்டி எங்கும் சென்றதில்லை. ரயில் பயணமே அவளுக்கு அதுதான் முதல்முறை.
சிங்கப்பூரிலிருந்து அவளுக்கு உண்மையிலே அவன் எதுவும் வாங்கிவரவில்லை, இங்கு அவள் ஆசையாகப் பார்க்கும் அனைத்தையும் வாங்கி குவித்தான், ஒருவாரம் அவர்கள் மட்டுமே அவர்கள் உலகில்.இந்த இரண்டு வருடமும் அலைபேசியில் பேசி பேசியே இருவரும் மற்றவரை நன்றாகப் புரிந்துவைத்திருக்க, இப்பொழுது துணைக்கான தேடலோடு காதலாகக் கடந்தது நாட்கள்.
வீட்டிற்கு வந்தபிறகும் அவனுடனே அவளை வைத்துக்கொண்டான், அப்படித் தங்கினான், கொண்டாடினான் இந்த முறை குழந்தையைப் பற்றியெல்லாம் அவன் எந்த எண்ணமும் வைத்திருக்கவில்லை.வராமல் இருந்தால் நலம்தான் என்ற எண்ணமே.
அவளுக்கு இருபது தானே அடுத்தமுறை இங்கேயே இருப்பது போல வந்துவிடவேண்டும் அதன்பிறகு மனைவி குழந்தை என்று வாழ்வை நிறைவாய் வாழவேண்டும் என்ற எண்ணமே.
ஊருக்குப் போகவேண்டிய நாள் நெருங்கியது, அவனுக்கு செல்லம்மாவை அதிகம் தேடியது அவளுக்கு அவனை நொடியும் பிரிய மனமில்லை.அந்தத் தேடல் அவர்கள் எதிர்பாராமல் அவளுள் கருவாய் தங்கிவிட்டது.