தேவதையிடம் வரம் கேட்டேன் 34

3511

அத்தியாயம் 34
அக்ஷையின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். சிறு வயதில் சகோதரர்களோடு. வாலிபத்தில் வணிகத்தோடு. இடையில் முன்ஜென்ம நியாபகங்கள் வேறு வந்து பாடாய் படுத்த, மதியை சந்தித்த பின்புதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தது. வாழ்வதற்கான அர்த்தமே வந்தது.
 
 
“ஆனால் ருத்ரமகாதேவி. அவள் ஒரு தேவதை. அவள் சக்திகள் அபாரமானவை. அவளோடு தன்னால் மோத முடியுமா? நிச்சயமாக முடியாது. மானிடப் பிறவியோடு நேருக்கு நேராக மோதலாம். தேவதைகளோடும், ராட்சகர்களோடும் மோத முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒருகாலமும் முடியாது.
 
 
 மதியுடன் திருமணம் நிகழ்ந்து விட்டால் ருத்ரமகாதேவியால் ஒன்றும் செய்து விட முடியாது. திருமணம் ஆகாத பட்சத்தில் வசியம் கூட செய்து விடக் கூடும் என்று சுவாமி ஜெகதீஸ்வரன் கூறி இருக்க, ருத்ரமகாதேவியை சந்திப்பதை தவிர்த்தவன், மதியையும் சந்திக்க விடாது தடுத்தான்.
 
 
ஆனால் விதி வசத்தால் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் டில்லியில் இருக்கும் பொழுது அவன் மனதில் எழ, தன் குடும்பத்தில் நடந்த எதிபாராதா சம்பவங்கள் போல் வாழ்க்கையில் நடக்க கூடும். நடந்தால் முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான் அக்ஷய்.
 
 
கொடிமலரான மதிக்கு முன்ஜென்ம நியாபகங்கள் இல்லை. இருந்தால் ருத்ரமகாதேவியோடு சண்டைக்கு நிற்பாளா? அவளிடமே உதவி கேட்ட தன் விதியை நினைத்து உடைந்து போவாளா?
 
 
மதிக்கு முன்ஜென்ம நியாபகங்கள் இல்லாததும் ஒருவிதத்தில் நல்லதுதான். ருத்ரமகாதேவி மதியையும் ஏதாவது செய்து என்னையும் வசியம் செய்து விட்டால் எதுவுமே செய்ய முடியாமல் எல்லாம் கையை மீறி போய் விடும்.
 
 
ஆனால் இந்த மதி ருத்ரமாகாதவி செய்த உதவி என்று, நன்றி கடன் என்றும் என்னை அவளுக்கு திருமணம் செய்து கொடுத்தாலும் கொடுத்து விடுவாள். அவளையும் நம்ப முடியாது. என்ன செய்யலாம்” அக்ஷய் யோசனையில் ஆழ்ந்திருக்க
 
 
“ஏதாவது பிரச்சினையா சார்” பாஸ்கர்  அக்ஷையின் யோசனைக்குளான முகம் பார்த்து நிற்க
 
 
“ஏதோ தப்பா நடக்க போறது மாதிரியே உள்மனம் சொல்லுது பாஸ்கர். ஒருவேளை நான் ருத்ரமகாதேவியை சந்திச்சா என்ன பண்ணனும்னு சொல்லுறேன் அதன் படி செய்ங்க”
 
 
“நீங்க என்ன சொல்லுறீங்களோ அதன் படியே செய்யிறேன் சார்” என்று விட்டான் பாஸ்கர்.
 
 
அக்ஷையின் உள்மனம் சொன்னது போல் அவன் வீட்டிலையே ருத்ரமாகாதேவி அவன் கண்முன்னாடி வந்து நின்றாள். யாரை சந்திக்கவே கூடாது என்றிருந்தானோ! அவளை கட்டித் தழுவினான்.
 
 
 அக்ஷய் என்ன சொன்னானோ அதன் படிதான் எல்லாம் நடந்தது. அக்ஷய் ருத்ரமகாதேவியை சந்தித்த உடன் மதி அவர்களை நெருங்கி விடாத படி பாஸ்கரின் கண்ணசைவில் மெய்ப்பாதுகாவலர்  மதியை அவள் வீட்டில் சிறை வைத்திருக்க, அதன் பின்பும் அக்ஷையை சந்திக்க விடாமல் பார்த்துக்கொண்டான்.
.
 
 
அக்ஷையும் அங்கே தங்காமல் ருத்ரமகாதேவியோடு கிளம்பி அவள் இடத்துக்கு சென்று விட்டான். எல்லாம் மதிக்காக. மதி மதியாக இருந்தாலும் பிரச்சினை. கொடிமலராக மாறினாலும் சிக்கல் என்று புரிந்து கொண்டுதான் அக்ஷய் நாடகம் ஆட ஆரம்பித்திருந்தான். அந்த ஆட்டத்தில் யாரையும் கூட்டு சேர்க்காததுதான் விந்தை. ராஜாவும் மந்திரியும் ஆடும் சாணக்கிய ஆட்டம் போல் பாஸ்கரோடு சேர்ந்து தீட்டிய திட்டங்களை அமுல் படுத்திக்கொண்டிருந்தான்.
 
 
உடனே மதிக்கும் அவனுக்குமான திருமணம் நடக்க வேண்டும். வீட்டார் ஆசிர்வாதமும் வேண்டும். ருத்ரமாகாதேவியை ஏமாற்றவும் வேண்டும். எல்லாம் ஒழுங்காக செய்யவும் வேண்டும். அவனுக்கு தெரியும் மதி அவனை தேடி வருவாள் என்று அதனாலயே அவன் வீட்டில் தங்கவில்லை.
 
 
அவளுக்கு உதவி செய்யத்தான் சகோதரன் என்று பிர்ஜு இருக்கின்றானே! பிர்ஜு அக்ஷய் மீது பாசம் வைத்திருப்பவன்தான். ஆனால் மதியை அக்ஷய் மணந்தால் அவன் வாழ்க்கை சிறக்கும் என்று நினைப்பவன். அக்ஷையோடு சண்டை போட முடியாமல் மதிக்கு மறைமுகமாக உதவி செய்வான் என்று அவன் மீது ஒருகண்ணை வைக்குமாறு பாஸ்கரனிடம் சொல்லி இருந்தான் அக்ஷய்.
 
 
ருத்ரமாகாதேவிக்கு நன்றி கடன் என்று மதி அமைதியாக இருந்தாலும், காதல் கொண்ட மனம் ஜெயித்து  அவள் ருத்ரமகாதேவியை சந்தித்து நியாயம் கேக்க வேண்டும் என்று கிளம்பக் கூடாதென்ற அச்சமும் இருக்க, பாஸ்கர் மூலம் மதிக்கு சொல்ல வேண்டிய கதையை அழகாக சொல்லி அவளை நம்ப வைத்தான் அக்ஷய். மதியை தவிர மற்றவர்களால் ருத்ரமகாதேவியை சந்திக்கவும் முடியாது. மதி மறுத்தால் அவளிடத்தில் அக்ஷையை பற்றி யாரும் பேசவும் மாட்டார்கள். அக்ஷையிடம் சண்டை போட்டாலும் ஒரு பெண்ணிடம் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.
 
 
பாஸ்கர் சொன்ன கதையை கேட்டு மதி அவனை விட்டு செல்வாள் என்று தெரியும் வீட்டை விட்டு, வேலையை விட்டு செல்வாள் என்று எண்ணவில்லை. வலித்தது, அவளை காணாமல் கஷ்டமாக இருந்தது. பொறுக்க முடியாமல் ருத்ரமாகாதேவிடமே “உன் சார்பாக திருமணத்தில் கலந்துகொள்ள யாராவது இருந்தால் அழைப்பு விடு” என்று கூற அவளும் மதியை அழைப்பதாக கூறி இருந்தாள்.
 
 
மதியை பார்க்க வேண்டும் என்று உள்மனம் துடிக்க, புடவை எடுக்க யாராவது இன்னுமொரு பெண் கூட இருந்தாள் நன்றாக இருக்கும். எனக்கு சரியாக தெரியவில்லை” என்று கூற ருத்ரமகாதேவி தான் மதியை அழைத்து வருவதாக கூற உள்ளுக்குள் குஷியானவன் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தான்.
 
 
மதி ருத்ரமாகாதேவியோடு வரும் பொழுதே அவளை பார்வையால் முழுங்கிக்
கொண்டவன் அதன் பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பாவம் மதி இதையெல்லாம் அறியாமல் அவன் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்.
 
 
கல்யாணபட்டு ருத்ரமாகாதேவிகா? மதிக்கா
? என்ற சந்தேகமே வேண்டாம் மதிக்குத்தான் சூட்சமமாக அதை கையில் கொடுத்து பொருத்தமான நகைகளையும் கொடுத்து தான் கொடுத்ததை அவள் மறுக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக அவளோடு இன்னும் சிறிது நேரம் இருக்க, உணவருந்தி விட்டு செல்லலாம் என்று வேறு கேட்டு அவளை வெறுப்பேத்தி அழைத்து சென்று அவளோடு நேரம் கடத்தி இருந்தான் அக்ஷய்.
 
 
இதெல்லாம் அவன் சொல்லும் பொழுது மதியிடம் அடி வாங்க வேண்டும் என்பது விதி என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அக்ஷய் வகுத்த திட்டப்படிதான் நடந்து கொண்டிருந்தது அசோக் அஜித், காஜலோடு வந்திறங்கும் வரை. மதியும் அவர்களின் வரவுக்காகத்தான் காத்திருந்தாள். நம்பிக்கையை கைவிடாது.
 
 
அக்ஷய் சொல்லும் கதையை கேட்டு “உன் வாழ்வில் மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது. மதியிடம் உண்மையை கூற முடியாது சரி. சம்மந்தியம்மாவிடம் அல்லது அவள் நண்பனிடம் கூறலாமே!”
 
 
“வேறு வினையே வேண்டாம். அத்த ஏதாவது உளறிடுவாங்க, நிர்மல் ஒரு ஆர்வக்கோளாறு ஏதாவது செய்துவிடுவான். ருத்ரமகாதேவி சாதாரண பெண் என்றால் நேருக்கு நேர் நின்று மோதலாம். தேவதையிடம் சாதாரண மனிதனான நான் எவ்வாறு மோதுவது? தந்திரமாகத்தான் அவளை வெற்றிகொள்ள வேண்டும்” அக்ஷய் தான் செய்வதுதான் சரி என்று பேச
 
 
“உன் கைல ஒரு காப்பிருக்கே” அஜித் கேட்க
 
 
“அது கூட வெற்றிக்கு அவ கொடுத்ததுதான். அவ சக்தியை வச்சி அவளை ஒன்னும் பண்ண முடியாது. சுவாமி ஜெகதீஸ்வரன் கிட்ட பேசிட்டேன். காட்டுகோவில்ல வச்சி மதி கழுத்துல குறிப்பிட்ட முகூர்த்தத்துல தாலி கட்ட சொன்னாரு. எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொன்னாரு. டென்ஷனா இருக்கு”
 
 
“டோன்ட் ஒர்ரி ப்ரோ. தனியா இவ்வளவும் பண்ணி இருக்க, இதையும் பண்ணிடுவ”
 
 
“மதி கழுத்து தாலி கட்டும் வர  நிர்மல், அத்த வேற யாரும் தடுக்காம பாத்துக்கணும். அதே சமயம் ருத்ரமகாதேவிக்கும் சந்தேகம் வரக்கூடாது”
 
 
“ஏன் அக்ஷய் மதித்தான் கொடிமலர்னு அந்த ருத்ரமகாதேவிக்கு தெரியாதா?” அதிமுக்கியமான சந்தேகத்தை காஜல் கேட்க
 
 
“அதுதான் எனக்கும் இன்னைக்கு வர புரியல. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா மதிக்கு அவ ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டா. ஒருவேளை இருட்டுல பார்த்ததுல முகம் சரியா நியாபகத்துல இல்லையோ! என்னவோ” அக்ஷய் யோசனையா சொல்ல
 
 
“மதிக்கும் முன்ஜென்ம நியாபகங்கள் வரலைனா. இன்னும் என்னவோ பாக்கி இருக்கு. என்னன்னுதான் புரியல” காஜலும் யோசனைக்குள்ளானாள்.
 
 
“ஆமா உன் முன்ஜென்மத்துல நாங்க யாரும் இல்லையா? அஜித் கேலியாக கேட்க
 
 
தாடையை தடவிய அக்ஷய் “ஒருவேளை வெற்றியின் புரவியாக இருந்திருப்பாய்’ என்று இழுத்து கூற
 
 
“அது என்ன” என்று அஜித் சந்தேகமாகவே கேட்டான்.
 
 
உனக்கு இருக்கும் கோபத்துக்கும், துள்ளலுக்கும் கண்டிப்பாக வெற்றியின் குதிரைதான் என்று கூறி அஜித்தின் கையால் சில அடிகளையும் பெற்றுக்கொண்டான் அக்ஷய்.
 
 
“இப்போதான் வீட்டுல கல்யாண கலையே! வந்திருக்கு” அசோக் சிரிக்க, காஜலும் சிரித்தாள்.
 
 
தூரத்தில் இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த பிர்ஜு மதிக்கு அழைப்பு விடுத்து “போச்சு அக்ஷய் சார் குடும்பமே அவர் பக்கம் சாஞ்சிருச்சு இனி ஒன்னும் பண்ண முடியாது” என்று கூற தனக்கு இருந்த சிறு நம்பிக்கையையும் இழந்து, முற்றாக உடைந்து போனாள் மதி.
 
 
கல்யாணத்துக்கு செல்ல வேண்டாம் என்று நிர்மல் எவ்வளவோ தடுத்தும் மதியும் முத்துலட்சுமியும் காலையிலையே தாயாராகி நின்றனர். அவர்களை அழைத்து செல்ல பாஸ்கர் வந்திருந்தான். எங்கே கடைசி நேரத்தில் மதி வராமல் இருந்து விடுவாளோ! என்ற அச்சம்தான் அக்ஷய் பாஸ்கரை அனுப்பி வைத்திருந்தான்.
 
 
அவனை முறைத்த நிர்மல் தாங்கள் வண்டியிலையே வருவதாக கூற பாஸ்கர் எதுவும் பேசவில்லை. காரியம் தான் பெரிது. அவன் பாஸிடம் கற்ற பாடம். நிர்மலின் வண்டியை பின் தொடர்ந்து வந்த பாஸ்கரின் வண்டி காட்டுக்கோவிலை அடைந்தது.
 
 
அவர்களை கைது செய்யாத குறையாக மெய்ப்பாதுகாவலர் சூழ்ந்துகொண்டு ஓரிடத்தில் பிடித்து வைக்க நொந்தே போனாள் முத்துலட்சுமி. நிர்மலால் அக்ஷையை முறைக்க மட்டுமே முடிந்தது. அக்ஷையின் குடும்பத்தார் இவர்களை கண்டுகொள்ளவே இல்லை அந்த கோபம் வேறு உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது.
 
 
மதி அக்ஷய் எங்கே என்று பார்க்க அவன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக்கொண்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் அவன் ருத்ரமஹாதேவியின் கணவன். நினைக்கும் பொழுதே உள்ளம் வலிக்க, அக்ஷையின் குடும்பத்தார் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்பவில்லை. அவர்களிடம் என்னவென்று பேச? யார் மீது தவறு?
 
 
 அங்கே நடப்பதெரியெல்லாம் கண்டுகொள்ளாமல் மதி ருத்ரமகாதேவி அலங்காரம் செய்யவென கட்டி இருந்த கூடாரத்தினுள் நுழைந்திருந்தாள்.
 
 
“வா மதி. இந்த புடவையில் நீ மணப்பெண்ணா? நான் மணப்பெண்ணா? என்றே தெரியவில்லை” என்று நகைக்க அப்பொழுதுதான் மதியும் தன்னை பார்த்தாள்.
 
 
பெரிதாக ஒப்பனை எதுவும் செய்திருக்கவில்லை. குடும்ப விழாக்களில் புடவை கட்டுபவள்தான். அக்ஷய் எடுத்திருந்த புடவையின் நிறமும், வேலைப்பாடுகளும் சேர்ந்து அவளின் அழகை இன்னும் கூட்டி இருந்ததோ! தூசி படிந்த ஓவியம் போல் முகம் மட்டும் கொஞ்சம் கலை இழந்து காணப்பட்டது. அலங்காரம் செய்துகொண்டால் மணப்பெண்ணுக்கான கலை வந்துவிடும். மனதில் சந்தோசம் இருந்தால் அது தானாகவே வரும் மனம் எடுத்துரைக்க,  தன் எண்ணம் போகும் திக்கை எண்ணி நொந்துகொண்டவள், புன்னகைத்து சமாளித்தாள்.
 
   
அய்யர் மணப்பெண்ணை அழைத்து வரும்படி குரல் கொடுக்க, ருத்ரமகாதேவி வெக்கத்தோடு எழுந்து நிற்க மதி உள்ளம் வெம்பியவளாக அவளை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு சென்று அவளை அக்ஷையின் அருகில் அமர்த்தி இருந்தாள்.
 
 
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” நாதஸ்வர இசையோடு அய்யர் தாலியை எடுத்துக்கொடுக்க, தலை குனிந்து தாலியை ஏற்க ருதரமாகாதவி பாத்திருக்க, மனமேடையிலிருந்து எழுந்த அக்ஷய் நொடியும் தாமதிக்காமல் மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளை தனதாக்கிக் கொண்டிருந்தான்.
 
அங்கே என்ன நடக்க போகிறது அக்ஷய், அக்ஷய் குடும்பத்தார், பாஸ்கரை தவிர யாருக்கும் தெரியாது. மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்க, அக்ஷய் தாலி கட்டாமல் ஏன் எழுந்தான் என்று தலை உயர்த்தி பார்த்த ருத்ரமகாதேவி மதிக்கு தாலி கட்டுவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றது சில நொடிகள்தான், கோபமாக எழுந்தவள் அக்ஷையின் கழுத்தை பிடிக்க, அவள் கழுத்தை இறுக்கி இருந்தாள் மதி.
 
 
“என் அத்தானை கொன்று எங்கள் திருமணம் நடக்க விடாமல் செய்து விட்ட ருத்ரமகாதேவி இன்று திருமணம் ஆனா பின்பும் என் அத்தான் மீது கை வைக்கிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று நொடியில் கொடிமலராக மாறி இருக்க முத்துலட்சுமி மதியின் அவதாரம் கண்டு மயங்கி சரிய நிர்மலின் அன்னையும் ஸ்வீட்டியும் அவளை கவனிக்க அக்ஷய் மதியை தடுக்கும் முயற்சியில் இருந்தான்.
 
 
“நீ கொடிமலரா? ஆம் நீ கொடிமலர்தான். உன்னை என் கண்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறியதே!” மதியின் கைகளை பிடித்தவாறு ருத்ரமகாதேவி பேச
 
“மதி விடு கையை எடு” அக்ஷய் மதியை தடுக்க திண்டாடினான்.
 
“யார் மதி? நான் கொடிமலர். அத்தான். இவள் எங்களை பிரிக்க வந்த ராட்சசி” என்று கத்த
 
 
அருகில் இருந்தும் அவர்களிடம் நெருங்க முடியாமல் கால்கள் வேரூண்டி போய் இருந்தவர்கள் காற்று பலமாக வீசி மயக்கத்துக்கு செல்ல அக்ஷய், மதி, ருத்ரமகாதேவி மாத்திரம் எஞ்சி இருந்தனர்.
 
 
 
வீசிய காற்று அடங்கிய உடன் அவர்கள் முன்னிலையில் அம்மன் பிரவேசிக்க மூவரும் அம்மனை வணங்கி நின்றனர்.
 
 
 
“எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள்” என்று மதி அக்ஷையோடு ஆசிர்வாதம் வேண்டிக்கொள்ள அவர்களை அம்மன் ஆசிர்வாதம் செய்ய
 
 
 
“இது அநியாயம். அக்கிரமம். வெற்றி எனக்கு கணவனாக வேண்டியவர்” ருத்ரமாதேவி ஆவேசமாக கத்த
 
 
 
“யார் வெற்றி? நான் அக்ஷய். இது என் மதி” அக்ஷய் சொல்ல அம்மன் புன்னகை முகமாக வீற்றிருந்தாள்.
 
 
“அன்று இரண்டு முகங்களால் ஏமாந்து போனேன். இன்றோ இவர் தெரிந்தே என்னை ஏமாற்றி விட்டார். அதற் பதில் சொல்லட்டும்” கோபத்தை கைவிட்ட ருத்ரமகாதேவி ஆதங்கமாக பேச
 
 
“மன்னித்து விடுங்கள் அன்னையே யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, ருத்ரமகாதேவியின் சக்திக்கு முன்னால் சாமானியன் நான் ஒன்றும் செய்ய இயலாது. எனக்கு வேறு வழியும் தெரியவில்லை” அக்ஷய் தான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று நியாயப்படுத்த
 
 
“தேவதையானாலும் நான் ஒரு பெண். என்னை ஏமாற்றியது குற்றம். குற்றத்துக்கு தண்டனை கொடுங்கள் அன்னையே!” ஆவேசமானாள் ருத்ரமகாதேவி.
 
 
“தப்பு செய்கிறாய் ருத்ரமகாதேவி. அன்று அவசரப்பட்டு தப்பு செய்தாய். இன்றும்  எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யோசிக்காமல் தப்பு செய்கிறாய்” மதி ஆவேசமாக
 
 
மதியை அணைத்துக்கொண்டு அக்ஷய் “மதி அமைதியாக இரு. அன்னை பார்த்துக்கொள்வாள்’ என்று கூற
 
 
“அன்னையே! இதோ வெற்றி மறுஜென்மம் எடுத்திருக்கிறார். அவர் எனக்கு கிடைக்கா விட்டால் என் கையாலையே அவரை கொன்றால் தான் எனக்கு சாப விமோச்சனம் கிடைக்கும் என்று சொன்னாயே! என் வெற்றியை நான் எப்படி கொல்வேன்”
 
 
“தளபதி என்று நினைத்து என் அத்தனாய் கொன்றதை மறந்து விட்டாயா? ருத்ரமகாதேவி?” மதி எள்ளலாக கேட்க
 
 
மதிக்கு பதில் சொல்ல பிடிக்காமல் “கோபத்தில் செய்து விட்டேன் அன்னையே! அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன். எனக்கு என் வெற்றி வேண்டும்” பிடிவாதக் குரலில் ருத்ரமகாதேவி
 
 
அவர்களின் வாக்குவாதத்தை மெளனமாக செவி சாய்த்த அம்மன் “வெற்றியை நீ திருமணம் செய்தால், தேவதை என்ற உன் அந்தஸ்தை நீ இழக்க நேரிடும். சாதாரண மானிடப் பிறவியாகத்தான் வாழவேண்டி இருக்கும். அல்லது வெற்றியை மறந்து விண்ணுலகம் செல்கிறாயா? முடிவு உன்கையில்” அம்மன் முடிவை ருத்ரமாகாதவியின் கையில் கொடுக்க,
 
 
அக்ஷையை பார்த்தவள் “இன்னொருத்தியின் கணவன் எனக்கு வேண்டாம்”
 
 
“அது சரி. ஆனால் உனக்கு உன் வெற்றி வேண்டாமா?”
 
 
“அப்படியானால் இது என் வெற்றியில்லையா?”
 
 
“இல்லை. இது வீரவேலனின் மறுபிறப்பு”
 
 
“அப்படியாயின் என் வெற்றி எங்கே அன்னையே!”
 
 
“அவனை மறுஜென்மம் எடுக்க விடாமல் நீதான் தடுத்துக்கொண்டிருக்கிறாய்” என்று அம்மன் புன்னகை செய்ய,
 
 
“நானா?”
 
 
“ஆம். நீயே தான். உன்னை மறந்த அவன் பின்னாலையே அலைந்தாய். அவன் முதுமையடைந்து. இறந்ததும் அவன் உடலை யாரும் அறியாமல் கொண்டுவந்து காட்டில் அடக்கம் செய்து சிந்தி மரத்தை அவன் சமாதியில் நட்டுவித்தாய். அது பட்டுபோனது. அதை தொட்டால் எந்த உயிரினமானாலும் உடனே உயிர் துறக்கும். அதனால்தான் அவனால் மறுஜென்மம் எடுக்க முடியவில்லை. அது மட்டுமா? அவனுக்கான ஈமைக்கிரிகைகளை யாரும் செய்யவுமில்லை. உன்னை சோதிக்கத்தான் வீரவேலனின் மறுபிறப்பை வெற்றி என்று கூறினேன். எப்பொழுது நீ உன் தவறை உணர்ந்து, திரும்ப அந்த தவறை செய்ய மாட்டேன் என்றாயோ! அப்பொழுதே! உன்னை நான் மன்னித்து விட்டேன்” என்று கூற தன் தவறை உணர்ந்த ருத்ரமகாதேவி வருந்தலானாள்.
 
 
“சிந்தி மரமா? அதை எங்கையோ பாத்திருக்கிறேன்” என்று மதியின் மனம் சொல்ல ருத்ரமகாதேவியை முதன் முதலாக சந்தித்த பொழுது பாழடைந்த மண்டபம் போல் ஒரு இடத்தில் பட்டுப்போன ஒரு மரம் இருந்ததும். அதை தொட முற்பட்ட பொழுது ருத்ரமகாதேவியே மதியை காப்பாற்றி அதை தொட்டால் மரணம் நிச்சயம் என்று கூறியதும் நியாபகத்தில் வந்தது.
 
 
 
“இதற்கு என்ன பரிகாரம் அன்னையே!” கேட்டது அக்ஷய்
 
 
“சிந்தி மரத்தை அழிக்க யாகம் செய்ய வேண்டும். அதை ருத்ரமகாதேவி செய்வாள். அவனுக்கான காரியங்கள் நீ செய் மகனே! வெற்றி உனக்கே மகனாக பிறக்கட்டும்”
 
 
“ஆகட்டும் அன்னையே! என் அன்னை இந்திரா?”
 
 
“அவளும் மகளாக பிறப்பாள். கவலை படாதே!. வேறு ஏதாவது வரம் வேண்டுமா?”
 
 
“மதி மதியாகவே இருக்கட்டும். கொடியின் நியாபகங்கள் அவளுக்கு வேண்டாம்”
 
 
 
“அப்படியே ஆகட்டும்” என்று ஆசிர்வதித்த அம்மன் மாயமாக மறைந்து போக மதி மயங்கி அக்ஷையின் கைகளில் சரிய ருத்ரமகாதேவி பிறகு சந்திப்பதாக விடை பெற்றாள்.