தேவதையிடம் வரம் கேட்டேன் 33

3176

அத்தியாயம் 33
நடப்பது யாவும் கனவா? நனவா? என்றே மதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருத்ரமகாதேவியோடு எந்த சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள கூடாதென்று சொன்ன அக்ஷய் அவளை இறுக அணைத்திருந்த விதம் இன்னும் மதியின் கண்களுக்குள் நிற்க, அவர்களுக்கு என்ன சம்மந்தம் என்று அறியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.
 
மதி அக்ஷையை நெருங்க விடாமல் மெய்ப்பாதுகாவலர்கள் சடனாக மறித்து அவளை வீட்டுக்குள் அனுப்பியதுதான் தெரியும்.
 
அன்னை அவளை கண்டு கட்டியணைத்து குசலம் விசாரித்தது “டில்லி குளிருக்கு கருத்து விட்டாயா? முகம் இருண்டு போய் இருக்கிறதே! சரியாக சாப்பிடவில்லையா? இளைத்து போய் இருப்பது போல் தெரிகிறாய்” என்று சொன்னதெல்லாம் காதில் விழுந்தாலும் மூளையை அடைய மறுத்தது.
 
அன்னை அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டு போக, மதியின் மூளையும், மனமும் ஏதோ சரியில்லை என்று மாத்திரம் அடித்து சொல்ல. ஒரு நிலையில் இல்லாமல் தவித்தவள் அக்ஷையை உடனே காண வேண்டும் என்று வீட்டை தாண்ட முற்பட்டால், மெய்ப்பாதுகாவலர்கள் அவளை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை.
 
அவள் வீட்டை விட்டு வெளியேறாதபடி வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள அவளுக்கு சில நொடிகள் போதுமானதாக இருக்க, ஏன் என்று மட்டும் புரியவில்லை. அலைபேசியில் அக்ஷய்க்கு அழைத்தால் பாஸ்கர் எடுத்து “சார் பிசியாக இருக்கிறார்” என்று அனைத்து விடுகிறான்.
 
“என்ன நடக்கிறது? என்று அறிந்துகொள்ளாமல் மண்டையே வெடித்துவிடும் போல் இருக்க, தந்தையும் இல்லாத சூழ்நிலையில் நிர்மலை அழைத்து விட்டாள்.
 
“என்ன மதி ஆர்மி கேம்ப் உள்ளுக்கு வார மாதிரி இருக்கு. இவ்வளவு பாடிகாட்ஸ் எதுக்கு. அதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருச்சே” கேட்டபடியே உள்ளே வந்த நிர்மல் மதியின் முகம் பார்த்து அவளை நன்கு அறிந்தவனாக “என்ன பிரச்சினை மதி” என்று கேட்டு விட
 
அவனது கேள்வியில் தோழனை கட்டிக்கொண்டு மனபாரம் நீங்க கதறி அழலானாள் மதி.
 
அவள் வாழ்வில் காதல் என்ற ஒன்றை நெருங்க விடாமல் பார்த்துகொண்டாளா? அல்லது காதலை புரிந்துகொள்ள பிடிக்காமல் இருந்தாளா? தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவளிடம் கல்யாணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்டு காதலிக்கிறேன் என்று கூறி, அன்பை பல விதமாக உணர்த்தியவன் அக்ஷய். பெண்களை தேவதை என்று வர்ணிப்பார்கள் தேவதையே! கிடைத்த உடன் அவள் பின்னாடி சென்று விட்டானா?
 
“இல்லை. அக்ஷய் அப்படிப்பட்டவனில்லை. எங்கயோ தப்பு நடக்கிறது. நான் அக்ஷய பார்க்கணும், பேசணும். பேசினால்தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும். என்னை ஒதுங்கி இரு என்றவன் காரணம் இல்லாமல் கூறி இருக்க மாட்டான்” அழுது கரைந்தவள் புலம்பி தீர்க்க,
 
“மதி ரிலாக்ஸ். நான் பார்த்த என் பிரென்ட் மதி இல்ல இது. அவ இப்படி அழு மூஞ்சியா இருக்க மாட்டா. நீ ஒரு போலீஸ். உன்ன யார் தடுக்க முடியும் நைட் நாம அக்ஷய் சார மீட் பண்ணுறோம் ஓகே” நிர்மல் கூற
 
“எப்படி?” மதி குழந்தை போல் கேட்க
 
“சுவரேறி குதிக்க தேவையே இல்ல. பதுங்கியே போலாம். சான்ஸ் கிடைக்கட்டும். யு டோன்ட் ஒர்ரி” அவளை தேற்ற மதியின் முகம் தெளியவில்லை.
 
 நிர்மலும் காதலிப்பவன் தானே! காதலின் வலியும் வேதனையும் நன்கு அறிந்தவன் உணர்ந்தவன் அவன். மதியை இவ்வாறு அவன் பார்த்ததே இல்லை. மனம் பிசைந்தாலும் வெளியே காட்டாது அவளுக்கு இந்த சூழ்நிலையில் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்று பாடம் எடுக்க, கடுப்பான மதி
 
“போடா உன் ஸ்வீட்டி ஆவியா அலைஞ்சப்போ நீ அழுது கரஞ்சத விட ஒன்னும் நா அழல” என்று முறிக்கிக்கொள்ள
 
“உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு” என்று அவள் தலையில் கொட்டியவன் ஓட்டம் பிடிக்கலான். அதன் பின் அங்கே இருந்தால் அவனை மதியிடமிருந்து யார் காப்பாற்றுவது.
 
முத்துலட்சுமியை சுற்றி சுற்றி சண்டை போட்டவர்கள் களைப்படைந்து அமர மனதிலிருந்த சஞ்சலமும் சிறிது நேரம் மறந்துதான் போயினர்.
 
 இரவானதும் “மிஷன் இஸ்டார்ட்” என்று நிர்மல் சைகை செய்ய பதுங்கி பதுங்கி மெய்ப்பாதுகாவலர்களின் கண்களில் படாமல் அக்ஷையின் வீட்டை அடைய சமையலறை கதவு திறந்தே தான் இருந்தது.
 
“என்ன மதி நாம வருவது முன் கூட்டியே சொன்னியா? கதவு திறந்து இருக்கு” நிர்மல் ரகசியம் பேச
 
“முதல்ல உள்ள வந்து தொலைங்க” பிர்ஜூ உள்ளே இருந்து மெதுவாக கூற
 
“என் சகோதரன் இருக்காண்டா” என்று மதி உள்ளே நுழைய நிர்மலும் அவள் பின்னாடி உள்ளே நுழைந்தான்.
 
கதவை சாத்திய பிர்ஜு இருவரையும் இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு சென்று தனதறையில் அமர்த்தி
 
“என்ன நடக்குது மதி? யார் அந்த ருத்ரமகாதேவி? அக்ஷய் சாருக்கு என்ன ஆச்சு என்னமோ மாதிரி பேசுறாரு” பிர்ஜு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் கூற நிர்மலும், மதியும் குழம்பித்தான் போயினர்.
 
“நான் அக்ஷய பார்க்கணும் பிர்ஜு. என்ன வீட்டுல சிறை வச்சிருக்காங்க. ஒன்னும் புரியல” மதி விரக்தியாக சொல்ல
 
“அவர் எங்க இங்க இருக்காரு. மதியம் அந்த ருத்ரமாதேவியோடு கிளம்பி போனவருதான் இன்னும் வரல”
 
“என்ன சொல்லுற” பதட்டமானாள் மதி.
 
“ம்ம்.. நீ அக்ஷய் சார ஏமாத்துவானு நினச்சேன். சார் தான் உன்ன ஏமாத்திட்டாரு” பிர்ஜு பெருமூச்சு விட
 
“என் அக்ஷய் ஒன்னும் அப்படி பட்டவரில்லை” மதி கோபமாக முறைக்க,
 
“ஆமா அவர் அக்ஷையாக இருந்தா கண்டிப்பா அப்படி செய்திருக்க மாட்டாரு. அவர்தான் வெற்றிவேலாச்சே” என்றவாறு அந்த இடத்துக்கு பாஸ்கர் வர
 
“யாரு அந்த வெற்றிவேல்” மதியும் நிர்மலும் ஒன்று சேர்ந்து கேட்க,
 
“சகோதர பாசம்” என்று பிரஜூவை முறைத்த பாஸ்கர்
 
“மதி மேடம் இப்போ நான் சொல்லுறது கேட்டு உங்களாக நம்ப முடியாம இருக்கலாம். ஏன் நான் சொல்வது பொய்னு கூட நினைக்கலாம் ஆனா அதுதான் உண்மை” பாஸ்கர் புதிர் போட
 
“முதல்ல சொல்லித் தொலை” கடுப்பான நிர்மல் கத்த
 
“அக்ஷய் சார் போன ஜென்மத்துல வெற்றிவேலா பொறந்திருக்குறாரு. ருத்ரமாகாதேவிய காதலிச்சிருக்குறாரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல. அவங்க ஒன்னு சேரல. சார் இறந்துட்டாரு. இந்த ஜென்மத்துல ருத்ரமகாதேவியை பார்த்ததும் சாருக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் வந்திருச்சு”
 
“நீ சொல்லுறது நம்பும்படியா இல்லையே!” நிர்மல் தாடையை தடவ
 
“அதுதான் சார் பழைய ராஜா காலத்துல பேசுற மொழியெல்லாமா பேசுறாரா?” என்றான் பிர்ஜு.
 
மதியின் கண்களுக்குள் அக்ஷய் ருத்ரமகாதேவியை “தேவி” என்று அழைத்த விதமும் அந்த குரலில் இருந்த இளகிய தன்மையும், குலைவும், காதலும் அது அக்ஷய் இல்லை என்றே அவளுக்கு தோன்ற உடைந்தே போனாள்.
 
“அப்போ என் அக்ஷய் எங்க?” குரல் கமர உதடு கடித்தவள் அழும் நிலைக்கு செல்ல நிர்மல் அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.
 
“சாருக்கு மதி என்ற பெண்ணை நியாபகம் இருக்கு. அவரோட பாடிகார்டா வேலைக்கு சேர்ந்தது வரைக்கும். உங்கள விரும்பினது. கல்யாணம் பண்ண கேட்டது எதுவும் அவர் நியாபகத்தில் இல்லை” பாஸ்கர் சாதாரண குரலில் கூற
 
அவன் சட்டையை பிடித்த நிர்மல் “என்ன விளையாடுறியா? சும்மா இருந்த பொண்ணு பின்னாடி காதல்னு அலஞ்சி நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கும் கொடுத்து, இப்போ ஒண்ணுமே இல்லனா?” நிர்மல் மேலும் என்ன பேசி இருப்பானோ
 
“விடு நிர்மல் அதான் அக்ஷய்க்கு நான் யார் என்றே தெரியாதுன்னு சொல்லுறாரே! ஆக்சிடண்ட்டுல அம்னிஷியானா, என்னிக்கோ ஒருநாள் நியாபகம் திரும்ப வரும்னு காத்திருக்கலாம். இது முன்ஜென்ம காதல் கதை. இதுல நான் என்னைக்குமே உள்ள நுழைய முடியாது. ஒதுங்கித்தான் இருக்கணும். அதுதான் சரியும் கூட, முறையும் கூட” கண்களில் பெருக்கெடுத்து வழியும் கண்ணீரை துடைத்தவாறு மதி கூற
 
“ஈஸியா சொல்லிட்ட, உன் அம்மாக்கு என்ன பதில் சொல்ல போற? உன் மாமனாருக்கு என்ன பதில் சொல்ல போற?அவருகிட்டயே நியாயம் கேப்போம். அவர்தானே நிச்சயம் பண்ணி வச்சாரு” நிர்மல் எரிந்து விழ
 
“கல்யாணம் நடந்தாத்தானே! மாமனார், மச்சினர் உறவெல்லாம்” கசந்த முறுவலை சிந்தியவள் “அம்மா கிட்ட பேசி புரிய வைக்கலாம். வா போலாம். என்னால இங்க இருக்க முடியல. முள்ளு மேல இருக்குற மாதிரி இருக்கு. என்ன இங்க இருந்து கூட்டிட்டு போ ப்ளீஸ்” மதி இறைஞ்சலாக பார்க்கா அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் நிர்மல். அக்ஷையின் வீட்டிலிருக்குதும் அவன் வாழ்க்கையிலிருந்தும்தான்.
 
புலம்பி தீர்த்த முத்துலட்சுமியை கூட ஒருவாறு சமாதான படுத்தி விட்டாள். மனது சரியில்லாததை உடம்பு முடியவில்லை என்று காரணம் கூறி மூன்று மாதங்கள் விடுப்பு வேண்டும் என்று கமிஷ்னரிடம் நேரடியாக லீவ் கேட்டு இருந்தாள் அது கூடு கிடைத்து விட்டது.
 
 
அவளை தனியாக விட கூடாதென்று நிர்மல் மதியையும் முத்துலட்சுமியையும் அவனது வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தான். ஸ்வீட்டியும் அடிக்கடி வந்து அவர்களோடு பேசி அவ்விடத்தை கலகலப்பாக்க முயற்சி செய்ய அந்த நேரத்தில் சிரித்து பேசினாலும் தனித்து விடும் பொழுது தனியாக மருகிக் கொண்டிருந்தாள் மதி.
 
முத்துலட்சுமிதான் நிர்மலின் பெற்றோரிடம் புலம்பிக் கொட்ட “அத்த மதி முன்னாடி நீங்க இப்படி பேசிகிட்டே இருந்தா அவ எப்படி மனச தேதிபா?” என்று அதட்ட
 
“வாய் விட்டு கதற கூட முடியல” அதற்கும் புலம்பியவாறு உள்ளே செல்வாள் முத்துலட்சுமி.
 
மறக்க முடியாமலும், நினைக்க பிடிக்காமலும் நாட்கள் ஒருவாறு நகர அவ்வளவு சீக்கிரம் உன்னை நிம்மதியாக இருக்க விட்டு விடுவேனா என்றிருந்தது மதியின் விதி.
 
அவளின் நிம்மதியை குழைக்கவென்றே அவளை தேடி நிர்மலின் வீட்டு கதவை தட்டி இருந்தாள் ருத்ரமகாதேவி.
 
மதியின் சோர்வான முகம் எல்லாம் ருத்ரமாகாதேவியின் சத்தோசமான மனநிலையில் கவனத்தில் பதியவில்லை. வந்தவள் அவளை கட்டியணைத்து.
 
“மதி எனக்கும் என் வெற்றிக்கும் வருகிற முகூர்த்தத்தில் திருமணம். எல்லா ஏற்பாட்டையும் அவரேதான் பார்த்துக்கொள்கிறார். என் சார்பாக கலந்துகொள்ள உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறாள். நீதான் முன் நின்று எல்லாவற்றையும் எனக்காக செய்ய வேண்டும்”
 
“நானா?”
 
“என்ன நானா என்று கேட்கின்றாய். இதுவே உன் திருமணம் என்று இருந்தால்
நான் முன்நின்று செய்திருக்க மாட்டேனா? என் வெற்றி உன் அருகில் இருந்தும் எனக்கு தெரியாமல் போய் இருக்கிறதே! தெரிந்திருந்தால் என்றோ வந்து அவரை சந்தித்திருப்பேன்” ருத்ரமகாதேவி பேசிக்கொண்டே போக

 
“அன்றே சந்தித்திருந்தால், இன்று எனக்கு இந்த வேதனை வந்திருக்காது” மதியின் மனம் கூற
 
“என்ன மதி அமைதியாக இருக்க. உனக்கு கூட ஆச்சரியமாக இருக்கா? எங்க முன்ஜென்ம காதல் கதையை கேட்டு” என்ற ருத்ரமகாதேவி அழகாக வெட்கப்பட
 
தன்னையே! நொந்துகொண்டு மதி “ருத்ராமாகாதேவி இல்லாவிட்டால் இறந்து  ஆவியாக அலையும் தந்தையை பாத்திருக்க முடியுமா? ஸ்வீட்டியைத்தான் காப்பாற்றி இருக்க முடியுமா? இன்னும் எத்தனை எத்தனை பேர்? ஏன் அக்ஷய் குடும்பம். இவளிடம் முகம் திருப்புவதா? இல்லை”
 
வரவழைத்த புன்னகையோடு “கண்டிப்பாக நானே எல்லாம் செய்கிறேன் ருத்ரமகாதேவி” என்று கூற
 
“நன்றி மதியழகி. கல்யாணபட்டு வாங்கணும். நாளை வெற்றி என்னை அழைத்து செல்வதாக கூறினார் நீயும் எங்களோடு வா” என்று விட
 
அதிர்ச்சியடைந்தவள் “நான் எதற்கு”
 
“இப்பொழுது தானே சொன்னாய் எல்லாவற்றுக்கும் உதவியாக இருப்பதாய்”
 
“வரேன்” ஒற்றை சொல்லில் மதி முடித்துக் கொண்டாலும் நாளை அக்ஷையை சந்தித்தால் கடந்த இரு வாரங்களாக தேற்றிய தன் மனம் என்ன பாடு படும் என்ற அச்சம்தான் உருவானது.
 
கல்யாணம் காட்டு கோவிலில் தான் நடக்கிறதாம். அது வெற்றியின் குலதெய்வ கோவிலும் கூட. ருத்ரமாகாதேவியின் அம்மன் வீற்றிருக்கும் கோவில் என்று அந்த கோவிலை பற்றி அருமை பெருமைகளை பாடிக்கொண்டு வந்தாள் ருத்ரமாகாதேவி.
 
அக்ஷய் வண்டியை ஓட்ட பாஸ்கர் அவனருகில் அமர்ந்திருக்க, ருத்ரமாகாதேவியும் மதியும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
 
மதியின் கவனமெல்லாம் ருத்ரமாகாதேவியின் பேச்சில் இல்லை. கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு பிறகு அக்ஷையை காண்கிறாள். ஒருவார்த்தை கூட அவளோடு அவன் பேசவில்லை. அவனிடம் வேலை பார்த்தவள் என்ற எண்ணத்தில் கூட நலம் விசாரிக்கவில்லை.
 
இதோ இந்த வண்டியில் பப்லியை தேடி செல்லும் பொழுது முத்தமிட்டான். அவன் மறந்து விட்டான். அவளால் மறக்க முடியுமா? டில்லியில் கழித்த பொழுதுகள் எவ்வளவு சந்தோசமான பொழுதுகள்.  அந்த நாட்கள் திரும்ப கிடைக்குமா? என்ற ஏக்கம் மதியின் மனதில் உருவானது.
 
நடப்பதெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா? அக்ஷய் ஒருதடவையாவது ரியர் வீவ் கண்ணாடியினூடாக தன்னை பார்க்க மாட்டானா என்று கண்களை அந்த கண்ணாடியில் வைத்திருந்தாள். ஆனால் அவன் பாஸ்கரோடு கல்யாண வேலைகள் பற்றி பேசியவாறு வந்தானே தவிர இவர்களது பேச்சில் கலந்து கொள்ளவில்லை.

 
கல்யாணபட்டு தேர்வு செய்யும் பொழுதும் சரி மற்ற துணிகள் வாங்கும் பொழுதும் சரி ருத்ரமகாதேவியோடு அமர்ந்திருந்த அக்ஷய் அவளை விட்டு நகரவில்லை. பார்த்து பார்த்து அவளுக்காக துணிகளை வாங்கிக் கொண்டிருந்தவன் திடுமென
 
“தேவி உன் தோழிக்கு ஏதும் வாங்க வேண்டுமென்றால் வாங்கிக் கொடு” என்று கூற
 
“பாத்தீர்களா? இது எனக்கு தோன்றவே இல்லையே!” என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் மதிக்கும் கல்யாணத்துக்காக ஒரு பட்டுப்புடவையை எடுத்துக் கொடுக்க மதி மறுக்கலானாள்.
 
தன்னை அழைத்து வந்தது அவளுக்கு புடவை தேர்வு செய்ய. இங்கே அதற்கு அவசியம் இல்லாதது போல் அக்ஷய் ருத்ரமகாதேவியை விட்டு நகராமல் எல்லாம் பார்த்து பார்த்து செய்ய தான் பார்வையாளராக அமர்ந்திருப்பது பெரும் அவஸ்தையாக இருப்பது போதாதென்று அவர்கள் வாங்கி கொடுப்பதை அணிய வேண்டுமா? அதை விட முள்ளாலான துணியை போட்டுக்கொள்ளலாம். மதியின் மனம் கூவ
 
“இந்த பெண்ணுக்கு இந்த நிறம் பிடிக்கவில்லையோ என்னமோ தேவி” என்ற அக்ஷய் தானே ஒரு பட்டுப்புடவையை எடுத்து மதியின் கையில் திணித்து கல்யாணத்துக்கு கண்டிப்பாக இதை அணிந்து வரும்படி வற்புறுத்தி சொல்ல மதியால் மறுக்க முடியவில்லை.
 
அக்ஷய் தன்னிடம் பேச மாட்டானா? பார்க்க மாட்டானா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவள்,  அக்ஷய் தன்னிடம் பேசி விட்டான் என்று சந்தோசப்படுவதா? அவனுக்கும் ருத்ரமகாதேவிக்கும் நடக்கும் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கிறானே! என்று வருந்துவதா? கண்ணை கரித்துக்கொண்டு வந்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவோ மனதில் தெம்பில்லை. அமைதியாக புடைவையை வாங்கிகொண்டாள்.
 
பாஸ்கர் எல்லாவறையும் வேடிக்கை மாத்திரம் பார்த்துக்கொண்டிருந்தான். மதியை அவனால் பாவமாக கூட பார்க்க முடியவில்லை. அவனின் முதலாளி விசுவாசம் அத்தகையது. அக்ஷையின் சந்தோஷமும் நிம்மதியும்தான் அவனுக்கு முக்கியம். அவன் சொல்வதை செய்யத்தான் இவன் இருக்கிறான். விதியின் விளையாட்டு வேடிக்கையானது என்று அமர்ந்திருந்தான் பாஸ்கர்.
 
நகைக்கடைக்கு போனாலும் அங்கேயும் அதே கதைதான் தொடர்ந்தது. “ஏன் வந்தேன்” என்று மதி எண்ணும் அளவுக்கு இருந்தது அக்ஷய் ருத்ரமகாதேவியின் கொஞ்சல் மொழிகள்.
 
ருத்ரமகாதேவி வந்து பேசி விட்டு சென்ற பின் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது நிர்மல் மட்டும்தான். முத்துலட்சுமிக்கு அவள் யார் என்றே தெரியாது. தனக்கு உதவி செய்திருக்கிறாள் அவளை தான் அக்ஷய் திருமணம் செய்ய போகிறான் என்று கூறவும் இது ஏதோ தனது மகள் நன்றி கடனுக்காக விட்டுக்கொடுக்கிறாள் என்று எண்ணி விட்டாள் முத்துலட்சுமி.
 
தான் அமைதியாக இருந்தால் மகளின் வாழ்க்கை என்ன ஆவது என்று கிளம்பி அக்ஷையை சந்திக்க சென்றவள் மெய்ப்பாதுகாப்பாளர்கள் தடுக்க சுவரில் அடித்த பந்தாக திரும்பி வந்தாள்.
 
“போ.. போய் உதவிசெய். திருமணத்துக்கு நாம் எல்லோரும் செல்கிறோம்” என்று ஆனித்திரமாக முத்துலட்சுமி கூறினாலும் அவள் மனதில் மணமேடையில் வைத்து அக்ஷையின் சட்டையை பிடித்து நாலு கேள்வி கேக்காமல் விடமாட்டேன் என்ற சபதம் இருந்தது அங்கே இருந்த யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
அதன் பின் ருத்ரமகாதேவியோடு கல்யாணபட்டெடுக்க வந்தவள் இதோ கையாளாதவளாக நகைக்கடையில் அமர்ந்திருக்கிறாள். நிர்மலை அழைத்து தன்னை அழைத்தது செல்ல வர சொல்லலாமா என்ற எண்ணம் தோன்றினாலும். அவன் வசை மழையை இப்பொழுது கேட்க வேண்டுமா? என்று மனம் கேட்க அவன் வந்தால் இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கேள்வியும் எழுந்தது.
 
பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருக்க, ஒருவாறு நகைகளை எடுத்து விட்டார்கள் போலும் மதியிடம் வந்த ருத்ரமகாதேவி “மதியழகி இந்த நகைகள் உனக்கு எடுத்த புடவைக்கு பொருத்தமாக இருக்கும். அணிந்து வா என்று கொடுக்க” மதி மறுக்க, அக்ஷய் வற்புறுத்த, மதி பெற்றுக்கொண்டாள்.
 
“சரி நான் வீட்டுக்கு கிளம்பவா?” மதி பொறுமை இழந்தவளாக கேட்க
 
“எங்கே செல்கிறீர்கள்? எங்களோடு உணவருந்தி விட்டு செல்லலாமே! தேவி உன் தோழியை அழைக்க மாட்டாயா?” அக்ஷய் புன்னகை முகமாக சொல்ல
 
“என்ன பாஷை இது” மதி அக்ஷையை அதிர்ச்சியாக பார்க்க
 
“அவளை அழைத்து வந்தது நான். வீட்டில் விடுவதும் என் பொறுப்பு. எங்களோடுதான் வருவாள்” என்ற ருத்ரமகாதேவி மதியை இழுக்காத குறையாக அழைத்து சென்று வண்டியில் அமர்த்த தன்னை மீறி எல்லாம் நடப்பதால் மதி அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
 
நாட்கள் உருண்டோடி கல்யாண நாளும் விடிந்திருந்தது. இடம்தான் காட்டுக்கோவில் ஆனால் கோவிலும் கோவிலை சுற்றி உள்ள இடமும் சுத்திகரிக்கப்பட்டு வண்டிகள் செல்ல கூடிய விததிதில் மண் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
 
மாப்பிள்ளையாக அக்ஷய் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க அவன் வீட்டார் மொத்தமும் அவனை சுற்றி நின்றிருந்தனர். அவன் மெய்ப்பாதுகாவலர்களும் கோவிலை சுற்றி நிற்க அங்கே அவர்களை தவிர வேறு யாருமில்லை.
 
அய்யர் பெண்ணை அழைத்து வரும்படி கூற மதி ருத்ரமகாதேவியை அழைத்து வந்தாள். நிர்மல், முத்துலட்சுமி, ஸ்வீட்டி நிர்மலின் பெறோர்கள் அனைவரும் மேடைக்கு அருகே மெய்ப்பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டில் அவர்கள் ஏதும் செய்து விடாதபடி கண்காணிப்பில் இருந்தனர்.
 
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” நாதஸ்வர இசையோடு அய்யர் தாலியை எடுத்துக்கொடுக்க அக்ஷய் அவள் கழுத்தில் பொன்தாலியை கட்டியிருந்தான்.