தேவதையிடம் வரம் கேட்டேன் 32

3480

அத்தியாயம் 32
டில்லிக்கு அக்ஷையோடு அவனது தனியார் விமானத்தில் வந்தது போலவே அவனோடு சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் மதி.
 
டில்லிக்கு வரும் பொழுது மனதில் இருந்த அச்சமும், குழப்பமும்
இப்பொழுது இல்லை. தெளிவாக இருந்தாள். அக்ஷையின் வாழ்விலும் இருந்த எல்லா குளறுபடிகளும் சரியாகி விட்டது.
 
எல்லாம் சுமூகமாக நடந்தேறும் என்று மதி எண்ணி இருக்கவில்லை. சிம்ரன் இல்ல விட்டால், அவளுக்கு தான் எவ்வாறு இறந்தோம் என்ற நியாபகங்கள் வராவிட்டால் அஜய்யை அக்ஷய் நம்பி எந்த மாதிரியான விளைவுகள் நேர்திருக்கக் கூடும்?
 
இல்லை. இந்திரா அத்த உதவி இருப்பார்கள். ஆழ் மனம் சொல்ல. எப்படியோ எல்லாம் நல்லமுறையில் முடிவு பெற்று விட்டதே! ஆவியான அவர்களின் உதவி இல்லை என்றால்? இந்த அயோக்கியர்களை கண்டு கொண்டிருக்கவும் முடியாது. கைது செய்திருக்கவும் முடியாது என்பது முற்றிலும் உண்மை.
 
மதியின் சிந்தனை நடந்த ஒவ்வொன்றையும் அசைபோட்டுட்டவாறு கடைசியில் காஜல் அஜித்தை திருமணம் செய்ய சம்மதம் சொன்னதாக தந்தை வந்து சொன்னதில் வந்து நின்றது.
 
“எங்கப்பா போய்ட்ட? சொல்லிட்டு போக மாட்டியா?” மதி ராஜவேலுவை கடிந்துகொள்ள,
 
“ஐயோ அந்த காஜல் புள்ள கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வாளா? மாட்டாளான்னு தெரிஞ்சிக்காம என் மண்டை காயுது. அதான் அவங்க கூடவே பின்னாடி போய்ட்டேன்” ராஜாவேலு ராகமாக சொல்ல
 
புன்னகைத்த மதி “போனியே சம்மதம் சொன்னாளா? இல்லையா?”
 
“மதி அந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா? அப்பா பாசத்துல உன்னையே மிஞ்சுடுவா போல இருக்கே!”
 
“அங்க என்ன நடந்தது?” மதி கேக்க ராஜவேலு காஜலின் வீட்டில் நடந்ததை விவரிக்கலானான்.
 
“அப்பா நில்லுங்க” மதி பேசியவைகள் மனதில் உழன்றுக் கொண்டிருக்க, வீட்டுக்கு வந்த உடனே தந்தையை நிறுத்தி இருந்தாள் காஜல்.
 
“என்ன பப்லி?”
 
“நீங்க அஜித்தை எனக்கு கல்யாணம் பண்ண அசோக் மாமா கிட்ட பேசினீங்களா?”
 
காஜல் விரேந்தை அழைத்ததும் லஜ்ஜோவும் திரும்ப மகளின் கேள்வியில் கணவனை முறைத்தாள் லஜ்ஜோ.
 
மனைவியை கண்டு கொள்ளாத விரேந் காஜலின் தலையை தடவியவாறு “அது அப்போ பப்லிமா… உனக்கு பிடிக்காததை என்னைக்கும் அப்பா செய்ய மாட்டேன். நீ போய் தூங்கு” அன்பாக சொல்ல
 
“இப்போவும் உங்க மனசுல அந்த ஆச இருக்கா?”
 
“பப்லி அதான் அப்பா உன்ன போய் தூங்க சொல்லுறாருல்ல. போ” லஜ்ஜோ சத்தம் போட
 
“இப்போ என்ன? நான் தூங்கணும். பேச கூடாதில்ல. நிரந்தரமா தூங்கிடவா?” லஜ்ஜோவின் பக்கம் சில அடிகளை காஜல் எடுத்து வைக்க மிரண்டு போனாள் லஜ்ஜோ.
 
“என்னங்க, என்ன பேசுறா இவ”
 
“நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு லஜ்ஜோ” மனைவியை அதட்டிய விரேந் “பப்லி எதுவானாலும் காலைல பேசலாம்மா” மீண்டும் சொல்ல
 
தலையசைத்து மறுத்தவாறே “இல்லப்பா.. நா பொறந்ததிலிருந்தே எனக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணீங்க, ஆனா நான் வளர்ந்ததும். நீங்க செலெக்ட் பண்ணுற ட்ரெஸ் பிடிக்கல, கார் பிடிக்கல, ஜுவெல்லரி பிடிக்கல, ஏன் வெளில சாப்பிட போனா சாதாரண ஒரு ஐஸ் கிரீம் கூட உங்க விருப்பப்படி வாங்கி கொடுத்து நான் சாப்பிட்டதில்லை. அத கூட சிரிச்சி கிட்டே என் பொண்ணு வளர்ந்துட்டா அவளுக்கு எல்லாம் தெரியும்னு தலையை தடவிட்டு போயிடுவீங்க.
 
என் படிப்பிலிருந்து, என் ப்ரெண்ட்ஸ் வரைக்கும் நான் யார் கூட பழகணும்னு நான் தான் முடிவு பண்ணி இருக்கேன். எந்த கட்டுப்பாடும் விதிச்சது இல்லையே! எல்லாத்தையும் என் இஷ்டப்படி விட்ட நீங்க. அப்படி இருந்தும் உங்க மனசுல இப்படி ஒரு ஆச இருந்து ஏன்பா என்கிட்ட சொல்லாம விட்டீங்க” குரல் கமர கேட்டாள் காஜல்.
 
விரேந்த மௌனம் காக்க “அன்னைக்கி நான் அஜய்ய காதலிக்கிறதா வந்து சொன்னப்போ உங்க மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இருந்தும் சிரிச்சி கிட்டு சரினு சொன்னிங்களேப்பா. எப்படிப்பா”
 
“அஜய்யும் அசோக் பையன்தானேனு…” விரேந்த புன்னகைக்க,
 
“போங்கப்பா.. இவ்வளவு நடந்த பிறகும் சொல்லலாம்ல” தந்தையை அணைத்துக்கொள்ள லஜ்ஜோ என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்வையாளராக மாத்திரம் அமர்ந்திருந்தாள்.
 
“நா கேட்டு நீ மறுக்க மாட்ட, உனக்கும் மதிக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான். மதி பேசினா உன் மனசுல என்ன இருக்கும்னு தயங்காம சொல்லுவ. நீ மறுத்தாலும் பிரச்சசினை ஒன்னும் இல்ல. பப்லிமா”
 
“யாரு மறுத்தா? என் அப்பா ஆச அதுதான் என்றால் நான் அஜித்தை கல்யாணம் பண்ணிக்கிறேன்”
 
“நிஜமாவா?”
 
“பப்லி உனக்கு என்ன பைத்தியமா?” லஜ்ஜோ கத்த
 
மனைவியை முறைத்த விரேந் “அதான் என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டாளே! மூச் இனி நீ பேச கூடாது. பப்லிமா இரு இப்போவே அஷோக்கு போன் பண்ணி சொல்லிட்டு வரேன்”
 
“மாமா தூங்கி இருப்பாரு பா…”
 
“பரவலால்ல முதல்ல இருந்து தூங்கட்டும்” சந்தோசத்தில் கத்தியவாறே விரேந் அலைபேசியோடு வேக எட்டுக்களை எடுத்து வைக்க ராஜவேலு மதியிடம் விரைந்து வந்து காஜல் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன செய்தியை சொல்லி இருந்தான். 
 
அதன் பின் தாமதிக்காமல் திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
“இவ்வளவு கிரண்டா திருமணத்தை பண்ணனுமா? டேட்” என்று அஜித்தும் அசோக்கை கேட்க
 
“விரேந்கு ஒரே பொண்ணு. நம்ம குடும்பத்துல நடந்தத வச்சி கண்டபடி பேசுனவனுங்க வாய அடைக்கவேண்டியே பெருசா பண்ணனும். அக்ஷய் வேற சவுத்ல போய் கோவில்ல கல்யாணம் பண்ணுறேன்னு சொல்லுறான். உன்ன விட்டா என் ஆச படி கல்யாணம் பண்ணி பார்க்க யாரு இருக்கா?” என்று விட
 
“ஓகே உங்க இஷ்ட படியே பண்ணுங்க” என்று விட்டான்.
 
அஜித்துக்காக உடையிலிருந்து கல்யாண சாப்பிடுவரை அசோக்கின் தேர்வாக இருக்க, பொறுப்பு மட்டும் இரு மகன்களிடம் இருந்தது.
 
காஜல் தந்தைக்காக சம்மதம் சொல்லி விட்டாலும் மனதுக்குள் ஒரு நெருடல் ஓடிக்கொண்டே இருக்க, கல்யாண நாள் நெருங்க நெருங்க அது கூடியதே ஒழிய குறையவில்லை.
 
தந்தை, மகளை மீறி தன்னால் ஒன்றும் செய்து விட முடியாததால், காஜல் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்ற பிராத்தினையோடு லஜ்ஜோவும் கல்யாண வேலைகளை பார்க்கலானாள்.
 
நெருங்கிய சொந்தபந்தங்களை மாத்திரம் அழைத்து பரம்பரை மாளிகையிலையே அஜித் காஜல் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.
 
திடீர் திருமணம் என்றும் இல்லாமல். அஜய்க்கு பதில் அஜித்தா என்று கேட்பவர்களுக்கு இன்முகமாக காஜல் என்றுமே அசோக்கின் மருமகள் என்று கூறி. விரேந், அபேய், அசோக்கின் நற்பை பற்றி  பாலிய வயது காணொளியை ஓட விட்டு அவர்களின் உறவு நீடிக்கவே அஜய்க்கும் காஜலுக்கு திருமணம் பேசப்பட்டதாக உறுதி செய்து, அது இப்போது அஜித்தோடு நடந்தேறியதாக அழகாக அந்த காணொளி முடிவு பெற்றிருந்தது.
 
அதை பார்த்த பின்னரே லஜ்ஜோவுக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. இவ்வாறெல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும் என்று விட்டிருக்க முடியும்.
 
காஜல் அஜய்யை காதலித்தது உண்மை. அதற்காக அவள் ஒன்றும் அவனோடு ஊரை சுற்றவில்லை. வீட்டார் சம்மதத்தோடு தான் திருமணம் செய்ய எண்ணினாள். அதை கூட தப்பாக யாரும் ஒரு சொல் பேசி விடக் கூடாதென்று மெனக்கிட்டு செய்திருக்கும் இந்த முயற்சி லஜ்ஜோவின் மனதில் பெரும் நிம்மதியை வரவழைக்க இதை யார் செய்திருப்பார்கள் என்று கண்களால் அளவிட அங்கே கை தட்டலும், ஆரவாரமும் புன்னகை முகங்களும் தான் காணக் கிடைத்ததே ஒழிய யார் என்று தெரிய வில்லை. 
 
அஜித்தின் அறையில் அமர்ந்திருந்தாள் காஜல். அவள் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லி தான் செய்தது சரியா? தவறா? ஆயிரம் தடவைக்கு மேல் அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்டிருக்க மீண்டும் அதே கேள்வியை அவள் மனம் கேட்கவும்,
 
“அதான் திருமணமே முடிஞ்சிருச்சே!  இன்னும் என்ன?”
 
“அஜித்தை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது. இவன்தான் உன் கணவன் இனி இவனோடுதான் உன் வாழ்க்கை என்றால் எவ்வாறு ஏற்றுக்கொளவது?” மூளை கேள்வி எழுப்ப
 
“அப்போ பேசி பழகிட்டு கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியதுதானே!” அவள் மனம் கேலி செய்ய
 
“அவனும் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான். இந்த ஒரு வாரத்தில் ஒரு தடவையாவது அலைபேசியிலாவது உரையாட வேண்டும் என்று எண்ணி இருந்தால் அழைப்பை ஏற்படுத்தி இருந்திருப்பானில்லையா? ஏன் அழைக்கவில்லை. ஒருவேளை அசோக் மாமாவின் ஆசைக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பானோ! நான் அஜய்யை காதலிச்சது அவனுக்கும் தெரியும்தானே! அதை வச்சி பேசி என்னை….” நினைக்கும் பொழுதே உள்ளம் வலித்தது.
 
தந்தைக்காக திருமணம் செய்தாயிற்று எது நடந்தாலும் பொறுத்துதான் ஆகா வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளின் உள்ளம் மட்டும் பொறுமை இல்லமால் அலைக்கழிந்து கொண்டே இருக்க நேரம் மட்டும்  சென்று கொண்டே இருந்தது அவள் கணவன் மட்டும் அறைக்கு வருவதாக தெரியவில்லை. 
 
கொதித்துக் கொண்டிருக்கும் உள்ளத்தை அடக்க வழி தெரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளின் கண்ணில் அறையின் சுவரில் இருந்த புகைப்படங்கள் தென்பட அதை பார்வையிடலானாள்.
 
அஜித்தின் சிறு வயது புகைப்படங்கள்தான். அழகான கொழுக் மொழுக் குழந்தையின் பருவம். தங்களின் குழந்தைகளும் இவ்வாறு இருப்பார்கள் என்ற எண்ணம் நொடியில் தோன்ற. தான் இப்பொழுது என்ன நினைத்தேன் என்று அதிர்ச்சியடைந்தவள், தன் வாழ்க்கையே கேவிக்குறியாக இருக்கு. அதுவும் அஜித்தின் கையில் இருக்கு. என் ஆசைக்கெல்லாம் இடம் ஏது என்று எதை எதையோ எண்ணலானாள்.
 
“ஹாய் அண்ட் சாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா?” திடுமென கேட்ட குரலில் காஜல் திடுக்கிட, அவளின் முகபாவத்தை கண்டு குபீரென சிரித்தவன்
 
“நான் என்ன பேயா? இப்படி அச்ச படுற?  ஆமா இவ்வளவு அலங்காரம். இந்த ட்ரெஸ்ஸ பார்த்தாலே தெரியுது உன்ன விட வெயிட்னு எப்படி நீ ட்ரெஸ்ஸ சுமக்குறியா? அது உன்ன சுமக்குத்தானே தெரியல. ட்ரெஸ்ஸ மாத்திட்டு தூங்கி இருப்பான்னு நெனச்சேன். பரவால்ல வெய்ட் பண்ணுற. ஆனா எனக்கு செம்ம டயட் காஜல். காலைல பேசலாமா? நீயும் வந்து தூங்கு” என்றவன் துண்டோடு குளியலறைக்குள் நுழைந்திருக்க
 
“என்னடா நடக்குது இங்க? வந்தான் பலநாள் பழகினவன் மாதிரி பேசினான். போய்ட்டான்” காஜல் புரியாமல் முழிக்கலானாள்.
 
அஜித் குளியலறையிலிருந்து வரும் பொழுதும் காஜல் ஆணியடித்தது போல் அவ்விடத்திலையே நிற்க “என்ன ஆச்சு இவளுக்கு?” என்ற பார்வையோடு அவளை நெருங்கியவன்
 
“காஜல்” என்று அழைக்க
 
“ஆ..” என்று விழித்தவள் அவனை ஏறிட
 
“தூங்கல” 
 
“தூங்கணும்” என்றவள் அங்கேயே நிற்க அவளை புரியாது பார்த்தான் அஜித்.
 
அஜித் இலகுவாக எடுத்துக்கொண்டது போல் காஜலும் எடுத்திக்கொண்டிருப்பாள் அதனால்தான் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பாள் என்று எண்ணி இருந்தான் அஜித். 
 
அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் “என்ன பிரச்சினை காஜல். உனக்கு விருப்பம் இல்லாமைதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா?”
 
தலையசைத்து மறுக்க.
 
“இந்த தலையாட்டுறது. கையாட்டுறது ஒன்னும் வேணாம் எதுவேனாலும் வாய தொறந்து பேசு. இங்க நான் மட்டும் தான் இருக்கேன்” எரிச்சலாக மொழிய
 
“விருப்ப பாட்டுதான் சொன்னேன். ஆனா குழப்பமாக இருக்கு”
 
“என்ன குழப்ப?”
 
“நான் எடுத்த முடிவு சரியா? தவறா? நீங்க எதுக்கு சம்மதம் சொன்னீங்க?” 
 
“நாங்க ரெண்டு பேருமே நம்ம அப்பாக்களுக்காக சம்மதம் சொன்னோம் அது மறுக்க முடியாத உண்மை. நீ எடுத்த முடிவுல தப்பு என்ன இருக்கு? நீ எடுத்த முடிவு தப்புனா? என் முடிவும் தப்பு. புரியுதா?”
 
தலையை பலமாக ஆட்டியவளின் முகம் தெளியாமல் இருக்கவே! அவள் மனதில் மேலும் சஞ்சலங்கள் இருப்பது புரிய.
 
“இன்னும் என்னவோ! உன்ன தின்னுது. உன் மனச அரிக்குது. கேளு”
 
“அது. அது வந்து…. நான் அஜய்ய காதலிச்ச விஷயம் உங்களுக்கு….”
 
சத்தமாக நகைத்தவன் “காதலிச்சியா? ஏமாந்தியா?”
 
அவனது கேள்வியில் வெடுக்கென்று அவன் முகம் பார்த்து நின்றவள் மௌனியாக “லுக் காஜல். உன் பாஸ்ட் எப்படி இருந்தாலும் ஓகே. அத கைல வச்சிக்கிட்டு நாம நம்ம பியூச்சர வாழ முடியாது. புரியுதா? நானும் ரொம்ப நல்லவன் இல்ல. காலேஜ் டைம்ல சைட் அடிக்காத பொண்ணுங்களே இல்ல. சீரியஸா யாரையும் லவ் பண்ணது கிடையாது. எல்லாம் டைம் பாஸ் தான்” என்று கண்சிமிட்ட
 
“அடப்பாவி” காஜல் கண்களையே அவனை தும்சம் செய்ய
 
“அந்த ஏஜ் அப்படி மா.. இல்லன்னாதான் ஏதோ குறைன்னு டாக்டர் கிட்ட போக வேண்டி இருக்கும்” அவள் பார்வையில் நடுங்கியவனாக சிரிக்க காஜலும் புன்னகைத்தாள்.
 
“ஓகே இப்போ சீரியஸா பேசலாமா?”
 
“அப்போ இப்போ பேசினது சீரியஸ் மேட்டர் இல்லையா? எனும் விதமாக காஜல் பார்க்க அஜித் தொடர்ந்தான்.
 
“நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன உடனே உன் கூட போன்ல பேச சொல்லி மதியும், அக்ஷையும் மாறிமாறி சொல்லிகிட்டே இருந்தாங்க, ஆனா நேர்ல பேசுறது மாறி இருக்காதுன்னு பேசல. நீ தெளிவாத்தான் முடிவெடுத்திருப்பானு நெனச்சேன். ஆனா குழம்பிக்கிட்டு இருப்பான்னு தெரிஞ்ச அப்போவே பேசி இருப்பேன்.
 
ஆக்சுவலி விடிய விடிய பேசினாலும் பத்துநாள் பத்தாது. ஒன்னு பண்ணலாம் ஹனிமூன் போலாமா? அங்க போய் பேசலாம். நம்ம அப்பாக்களும் சந்தோச பாடுவாங்க” என்று கண்சிமிட்ட
 
“சந்தேக பாடுவாங்க” காஜல் அஜித்தை முறைக்க
 
சிரித்தவன் “உன்ன காதலிச்சு ஏமாத்தினது போல என்ன பாசம் காட்டி ஏமாத்தினாங்க. அக்ஷய்க்கு வந்த அவமானத்துக்கு நான்தான் காரணம். தக்க தருணத்துல அப்பாகிட்ட போட்டு கொடுத்து என்ன குடும்பத்துல இருந்து தொரத்துறதுதான் அவங்க பிளான். அப்பாக்கு தெரிஞ்சாலும் என்ன வெறுக்கவோ, ஒதுக்கவோ மாட்டாரு. அது அவங்களுக்கு புரியல.
 
அப்பாவை விஷம் வச்சி கொல்ல பத்தங்கனு தெரிஞ்சப்போ அவங்கள என் கையாலையே கொல்லணும்னு வெறிதான் வந்துச்சு. சாவெல்லாம் அவங்களுக்கு சாதாரணமான தண்டனை. டாச்சர் பண்ணனும்னு கடத்தி இதோ இந்த மாளிகைலதான் அடச்சீ வைக்கலாம்னு முடிவு பண்ணேன்”
 
நடந்தவற்றை தந்தையின் மூலமாகவும் மதியின் மூலமாகவும் அறிந்ததுதான். இருந்தாலும் கணவனின் வாக்குமூலமாக கேட்கும் பொழுது
காஜல் கண்களில் மிரச்சியோடு பார்க்க “ஒரு நொடி அப்பா என்ன செய்வாரு? அவருக்கு தெரிஞ்சா என்ன மாதிரியான விளைவுகள் வரும்னு நினைச்சி பார்த்தேன். அக்ஷய்க்கு பண்ணதே பெரிய கொடும. அதையே என் வாயால சொல்ல முடியல. மேலும் தப்பு பண்ணி அவர் முன்னாடி கூனி குறுகி நிற்கணுமான்னு தோணிருச்சு. சடனா முடிவு பண்ணி போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டேன்”
 
“நல்ல முடிவு” ஆசுவாசமானாள் காஜல்.
 
“பத்து நாளைக்கு சொல்ல வேண்டிய கதையை இப்படி இரத்தின சுருக்கமா சொல்ல வெச்சிட்டியே காஜல். உனக்கே நியாயமா இருக்கா?” நெஞ்சில் அடித்தில்கொள்ள
 
தலையணையால் அவனை சாத்தியவள் “போய் தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என்று கொட்டாவி விட
 
“ஹேய் உன் ஜுவெல்லரி ரொம்ப ஹெவியா இருக்கு கழட்ட நா வேணா ஹெல்ப் பண்ணாவா?”
 
“உதை பட போறீங்க” மிரட்டினாலும் தான் என்னென்னமோ நினைத்து வருந்த, நெடுநாள் பழகிய தோழன் போல அஜித்தின் பேச்சும், செயலும் சற்று நிம்மதியை கொடுக்க, ஆறுதலாக தோன்றவே அவனோடு பயணிக்கும் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும் என்ற ஐயம் தனக்கு இல்லை என்ற எண்ணத்தோடு சிரித்தவாறே துணி மாற்றும் அறையினுள் நுழைந்திருந்தாள் காஜல்.
 
அடுத்த நாள் காலையிலையே  மகளை பார்க்க மனைவியோடு வந்திருந்தார் விரேந். மகளை பிரிந்து ஒருநாள் கூட இருக்க முடியாதா? என்று அசோக் கிண்டல் செய்து கொண்டிருக்க, மகளை நினைத்து மனதுக்குள் வெம்பிக்கொண்டிருந்தது லஜ்ஜோ ஒருத்திதான்.
 
அஜித் ஏதோ சொல்ல அவன் தோளில் அடித்தவாறு படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் காஜலை கண்டு பெரியவர்கள் நிம்மதி பெருமூச்சு விட
 
“உங்க அண்ணன் ஒரே நாள்ல ரொமான்ஸ்ல பின்னுறாரு போல” மதி புருவம் உயர்த்த
 
“அப்போ நான் நான் உன் கூட கொஞ்சி பேசுறதில்லன்னு குறை சொல்லுறியா?” அக்ஷய் மதியின் புறம் குனிந்து கிசுகிசுத்தான்.
 
“உங்கள சுத்தி எப்போ பார்த்தாலும் நாலு தடிப்பசங்க இருக்கும் பொழுது ரோமன்ஸ் எப்படி பண்ணுறது?”
 
நகைத்தவன் “அவனுங்கள விடு போலீஸ்காரிய லுக்கு விட்டா ஈப்டிசின்னு உள்ள தள்ள மாட்டியே!” மதி அக்ஷையை நன்றாக முறைக்க, தந்தையை  கண்டு ஓடி வந்து காஜல் அணைத்துக்கொள்ள
 
“முதல்ல மாமா கால்ல விழுந்து வணங்கு காஜல். போய் பூஜை அறையில விளக்கேத்து” லஜ்ஜோ கடிய.
 
“விளக்கு மட்டும் ஏத்துமா. என் பசங்களையே கால்ல விழ விட மாட்டேன்” அசோக் சொல்ல காஜல் பூஜையறையை நோக்கி நடக்க அஜித்தும் அங்கிருந்தவர்ககுக்கு கண்சிமிட்டியவாறு கூடவே நடந்தான்.
 
பெரியவர்கள் நிம்மதியாக பாத்திருக்க “அப்பா இன்னைக்கு நானும் மதியும் சென்னைக்கு போலாம்னு இருக்கோம்”
 
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போலாமே அக்ஷய்” மகனை பிரியும் கவலையில் அசோக்.
 
“இந்த மகன் கல்யாணத்த பார்க்க வேணாமா?” குறும்பாக சிரிக்க,
 
“என்ன மதிமா… போன உடனே கல்யாண வேலைய ஆரம்பிச்சிடுவியா?” மருமகளிடம் கேட்க
 
“போன உடனே நாள் குறிச்சிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன் மாமா” மதி கொஞ்சம் வெக்கப்பட்டு சொல்ல,  அவள் கல்யாண நாள் என்று ஒன்று குறிக்கப்படுவதே இல்லை என்று அவள் அறிந்திருக்கவில்லை.
 
குடும்பத்தோடு காலை உணவை முடித்துக் கொண்டவர்கள் விடை பெற்று விமானம் ஏறி இருக்க, மீண்டும் சென்னை நோக்கி பயணம்.
 
சென்னை வந்திறங்கிய மதி அன்னையை காண ஆசையாசையாக ஓடோடி வந்தால் அவளுக்கா ருத்ரமகாதேவி வாசலில் வீற்றிருந்தாள்.
 
அக்ஷையை கண்டு அதிர்ச்சியடைந்த ருத்ரமகாதேவி மதியை கண்டுகொள்ளாது “வெற்றிவேலா” என்று அழைத்தவாறு அவனிடம் தாவ
 
“தேவி” என்று அவளை அணைத்து கொண்டிருந்தான் அக்ஷய்.
 
என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் மதி.