தேவதையிடம் வரம் கேட்டேன் 31

3622

அத்தியாயம் 31


“ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை” ராஜவேலு பாடிக்கொண்டிருக்க,
 
“அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு போ பா… அம்மா தனியா என்ன செய்றாங்களோ! தெரியல”
 
“உங்கம்மாவ யாரும் தூக்கிட்டு போக போறதில்ல. பலத்த பாதுகாப்போடு இருக்கா. அதான் அந்த வெட்டி பய நிர்மல் இருக்கானே! அவனை வந்து கூடவே இருக்க சொல்லு”
 
“ஐடில வேல பாக்குறவன் உனக்கு வெட்டி பயலா?” மதி தந்தையை முறைக்க, தந்தை மகளின் பேச்சு வார்த்தையை கதவில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் அக்ஷய்.
 
வெள்ளை உருவம் மதியின் பக்கவாட்டில் நிழலாடுவது தெரிய ராஜவேலு அங்கேதான் இருக்கிறான் என்று கண்டு கொண்ட அக்ஷேய், ராஜவேலு என்ன பேசுகிறான் என்று கேக்க முடியாவிட்டாலும் மதி சொல்லும் பதிலை வைத்தே கேட்ச் செய்தவன் தான் அங்கே இருப்பதை காட்டிக்கொள்ளாது அமைதி காத்தான்.
 
“ஐடி, வெட்டி ரைமிங் நல்லா இருக்கு மதி. அவனை போய் ஒரு எட்டு அம்மாவை பாத்துக்க சொல்லு”
 
“ஏன் நீ இங்க டேரா போட எண்ணமா?” தனது துணிகளை மடித்தவாறு மதி பேசிக்கொண்டிருந்தாள்.
 
“சிம்ரனோட பிரச்சினை என்னனு புரிஞ்சிருச்சு, அதிர்ச்சியாலயும், சடனா செத்ததாலையும்தான் இப்படி இருக்கா, அவளுக்கு பொருட்களை தொட ட்ரைன் பண்ணனும். பண்ணிட்டு வந்திடுறேன் மதிமா…” பாசமாக கெஞ்சி கேட்டுக்கொள்ள
 
“உன்னால முடியுமா?” மதி தந்தையை சந்தேகமாக ஏறிட
 
“ நிச்சயமாக முடியும்” உறுதியாக சொன்னான் ராஜவேலு.
 
“சரி. எதோ அவளுக்கு நல்லது நடந்தா சரி. அவ வேற அந்த மூணு பேரையும் கண்காணிக்கணும்னு கங்கணம்கட்டிகிட்டு அலையுறா.”
 
“ஆமா மதிமா சம்மதி அம்மா நினைச்சி இருந்தா அந்த பொம்பளைய ஒருவழி பண்ணி இருந்திருக்கலாம். உண்மை அனைத்தும் தெரிஞ்சும் அமைதியா ஏன் இருந்திருப்பாங்க” ராஜவேலு இந்திரா சமேலியை ஒன்றுமே செய்யவில்லை என்ற கோபத்தில் கேட்க,
 
 
“அத்தைக்கு அக்ஷய பாதுகாக்குறதுதான் முக்கியம்னு தோணி இருக்கும். அது மட்டுமில்ல கடைசி வரை கூடவே இருக்கணும்னு எண்ணி இருப்பாங்க, சமேலிய ஏதாவது பண்ண போய், பேய் விரட்ட அந்தம்மா ஏற்பாடு பண்ணி அத்தைய நிரந்தரமா, அக்ஷையிடமிருந்து பிரிச்சிடுவாங்கணும் பயந்திருப்பாங்க, அதனால தான் இருக்குறத காட்டிக்காம, அக்ஷய்க்கு ஆபத்து வரும் பொழுதெல்லாம் அக்ஷய அவங்க கிட்ட இருந்து காப்பாத்தி இருக்காங்க, தக்க சமயம் பார்த்து மாமா கண்ணுல காண்பிச்சு அக்ஷய பாதுகாப்பா வெளிநாட்டுக்கு அனுப்பியும் வச்சிட்டாங்க”
 
“ஓஹ்… போரிடுவது ஒரு முறை என்றால், போரிடாம தன் குழந்தையை காக்க, பதுங்குவதும் ஒரு முறைதான். மாப்புள வளர்ந்து பெரியவனாகி தாக்கிட்டாரே!”
 
அக்ஷய்க்கும் ராஜவேலு போல் அன்னை அவர்களை தும்சம் பண்ணி இருக்க வேண்டாமா என்று தோன்றியது உண்மைதான். ஒரு அன்னையாக இந்திராவின் எண்ணமும் செயலும் மகனின் பாதுகாப்பை கருதி மாத்திரம் இருந்ததில் இப்பொழுது தப்பாக தோன்றவில்லை. மதி கூறுவது போல் அன்னை ஏதாவது செய்திருந்தால் கண்டிப்பாக அன்னையின் ஆத்மாவை குடுவையில் அடைத்து கடலில் போட்டிருப்பார்கள். அன்னை செய்ததுதான் சரிதான்.
 
 
“சம்மந்திய பாரேன் இந்த வயசுலயும் ஜம்முனு இருக்குறாரு. அவருக்கென்ன இருக்குற சொத்துக்கு இன்னொரு கல்யாணத்த பண்ணி ஜாலியா பொண்டாட்டி கூட உலகத்தை சுத்த போய்டலாம்”
 
தந்தையை ஒரு பார்வை பார்த்த மதி “ஏற்கனவே மூணு கல்யாணம் பண்ணினவரு நாலாவது வேறயா? இத அவர் கிட்ட சொல்லித்தான் பாரேன். என்றவள் ஏன்…பா அம்மாவும் தனியாத்தான் இருக்காங்க பாவம் அவங்களுக்கும் ஒரு துணையை தேடி கொடுக்கலாமா?” அசால்டாக குண்டை தூக்கி போட
 
ஆவியான ராஜவேலுவுக்கே எரிய ஆரம்பித்தது “என்னது என் லட்சுக்கு கல்யாணமா? நா இருக்குறவரைக்கும் அது நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்”
 
“நீ தான் இல்லையே செத்து போய்ட்டியே!”
 
“அதெல்லாம் முடியாது” ராஜவேலு தன் எதிர்ப்பை பலமாக தெரிவிக்க,
 
“கோபம் வருதா? மத்தவங்க விசயத்துல அனாவசியமா இப்படி மூக்கை நுழைக்காத, நாளைக்கு உன் மாப்பிளையே என்ன விட்டுட்டு வேறொருத்திய கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னா? விட்டுடுவியா?”
 
“என்ன பேசுற மதி?” கேட்டது அக்ஷய்.
 
மதி ராஜவேலுவுக்கு புரியவைக்க அக்ஷையை சம்பந்த படுத்தி எதோ சொல்ல வர அவள் பேச்சு பிடிக்காமல் குறிக்கிட்டிருந்தான் அக்ஷய். ஆனால் அவள் எந்த நேரத்தில் அதை சொன்னாளோ! அது அவ்வாறுதான் நடக்க போகிறது என்று அறியாமல் தானே அந்த கல்யாணத்தை முன் நின்று நடத்தியும் வைக்க போவது அறியாமல் அங்கே அக்ஷையை எதிர்பார்க்காத மதி குழம்பி நின்றாள்.
 
“விளையாட்டுக்கு கூட இப்படி பேசாத” கண்டிப்பான குரலில் மதியை மிரட்டினான் அக்ஷய்.
 
“வாங்க மாப்புள” என்று அவனை வரவேற்ற ராஜவேலு அடுத்த செக்கன் அறையிலிருந்து மாயமாக மறைந்திருந்தான்.
 
“இல்ல அக்ஷய் இந்த அப்பா சும்மா உளறிக்கிட்டு இருக்காரு” மதி விளக்கமளிக்க முயல, அந்த பேச்சு பிடிக்காத அக்ஷய்.
 
“அவரை விடு. காஜல் கிட்ட பேச நல்ல நாள்? நேரம் ஏதும் பார்க்கணுமா என்ன?”
 
“இல்லையே!” தனது புருவங்களை உயர்த்தி ஏறிட்டாள் மதி.
 
“நீ நேத்தே பேசுவனு எதிர்பார்த்தேன்”
 
“அவ அஜய் கொடுத்த ஷாக்ள இருந்து முதல்ல வெளி வரட்டும். ரெண்டு நாள்ல பேசலாம்னு இருக்கேன்”
 
“அப்பாவும் அஜித்தும் நம்ம பரம்பரை வீட்டுக்கே குடிபோறதா முடிவு பண்ணிட்டாங்களாம். இந்த வீட்டை வித்துடலாம்னு அஜித் சொல்லுறான். அவ்வளவு கசப்பா இருக்காம். நானும் சரி உங்க இஷ்டப்படியே! பண்ணுங்கன்னு சொல்லிட்டேன். எங்களையும் அங்க வந்து தங்க சொல்லுறாங்க. அது மட்டும் முடியாதுனு சொல்லிட்டேன்” சொல்லி முடிக்கும் பொழுது அவன் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது.
 
அந்த புன்னகை மதிக்கு பல கதைகள் சொல்ல “ஏன் முடியாதுனு சொன்னீங்க?” மனதில் எழுந்த தவிப்பை முகத்தில் காட்டாது இருக்க பெரும் பாடுபடலானாள்.
 
அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் தோளில் கை போட்டு, அவள் தலை மீது தன் தலையை சாய்த்து “ஏன்னா… என் பொண்டாட்டி அவ அம்மாவை விட்டுட்டு வர மாட்டா. அது மட்டுமா.. அவளோட கஞ்சி போட்ட காக்கி சட்டையை அவ ஊர்லதான் போடுறேன்னு அடம் பிடிக்கிறா. அதனால நான் வீட்டோட மாப்பிள்ளையா போய்டலாம்னு இருக்கேனு சொன்னேன்”
 
அக்ஷய் இழுத்து சொன்ன விதத்தில் மதியின் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது. இந்த இரண்டு காரணங்களையும் மதி கூறுவாள் என்று கணித்து தந்தையிடம் பேசி இருக்கிறான் என்றால் அவன் அன்புதான் எத்தகையது.
 
வேலையை விடமாட்டேன் என்று மதி கூறிக்கொண்டு இருப்பதுதான். அதற்காக கல்யாணமானால் அவள் அக்ஷையோடு தான் இருக்க வேண்டும் என்பது அவள் அறிய மாட்டாளா என்ன. அவன் ஒரு வார்த்தை அப்பாவோடுதான் டில்லியில் தான் இருக்க போகிறோம் என்று விட்டால் அன்னையை பிரிய நேரிடும். அதையும் மனதில் வைத்து முடிவெடுத்திருக்கிறான். இவன் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேனோ! என்று மதியின் மனம் அவளிடம் கேள்வி கேக்கலானது.
 
இத்தனை வருடங்களாக அக்ஷய் பிரிந்திருந்தான் என்ற கவலை அசோக்கை வாட்ட அக்ஷய் மறுத்தது வேதனையாகத்தான் இருந்தது. அஜித்தும் நேரடியாகவே “என்னால் தான் மறுக்கிறாயா?” என்று பொறுக்காமல் கேட்டு விட்டான்.
 
 “இல்லை” என்றவன் ஒற்றை சொல்லில் “மதி” என்று விட
 
புன்னகைத்த அசோக் “நீ பொழச்சுக்குவடா மை சன்” என்று அவன் தோளில் தட்டி விட்டு அகல  
 
“உன்கிட்ட நிறைய கத்துக்க வேண்டி இருக்கு போலயே ப்ரோ” என்றான் அஜித்.
 
 
பல வருடமாக பரம்பரை மாளிகை பூட்டி இருந்ததால் பூஜை செய்தே குடி செல்லலாம் என்று முடிவு செய்த அசோக். காஜல் குடும்பத்தினரையும் அழைத்திருக்க, மதி அங்கே வைத்து காஜலிடம் பேசுவதாக அக்ஷையிடம் கூறி இருந்தாள்.
 
அசோக் அழைத்து காஜல் என்றுமே வர மறுத்ததில்லை. லஜ்ஜோ வேண்டா வெறுப்பாக கணவனோடு வந்திறங்க அவர்களை வாசலில் இருந்து வரவேற்றான் அஜித்.
 
“வாங்க வாங்க, விரேந் அங்கிள் சின்ன வயசுல ஓடியாடி விளையாடினதா அப்பா சொல்லி கிட்டு இருந்தாரு. காஜலும் நீங்களும், நம்ம பரம்பரை வீட்டை பார்த்தது இல்லையே! பூஜை முடியட்டும் நானே உங்க ரெண்டு பேருக்கும் மாளிகையை சுத்தி காட்டுறேன்” நம்ம என்ற வார்த்தையை அழுத்தி கூறியவன் லஜ்ஜோவிடம் பேசினாலும் பார்வை முழுவதும் காஜலின் மீதே இருந்தது.
 
அஜித்தை இரண்டு மூன்று தடவை பாத்திருந்தாலும் அவனோடு பேசியதில்லை. திடிரென்று அவன் தன்னோடு பேசியதும் லஜ்ஜோ குழம்ப,
 
“அம்மாவை எவ்வளவோ சமாதானப் படுத்தி அழைத்து வந்தோம். இவன் பேசியே துரத்தி விடுவான் போல இருக்கே!” என்று காஜல் அஜித்தை முறைத்தாள்.
 
முறைக்கவாவது காஜல் தன்னை கவனித்தாளே என்று உள்ளுக்குள் குஷியான அஜித் லஜ்ஜோவோடு கூடவே நடந்த படி பேச்சை வளர்க்கலானான்.
 
அஜித் காஜலை திருமணம் செய்ய சம்மதம் சொன்னதை விரேந்தை அழைத்து அசோக் உடனே சொல்லி இருக்க, அதனாலயே மனைவியையும், மகளையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தார்.
 
லஜ்ஜோவை அஜித் சரி கட்டுவான் என்று புரிய காஜலை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் விரேந்த.
 
“என்ன லஜ்ஜோ ஆன்டி ரொம்ப கோபமா இருக்கீங்க போல? யார் மேல என்ன கோபம்?” அஜித் தூண்டி விடுவது போல் கேள்வி எழுப்ப
 
அவன் இவ்வாறு கேட்பான் என்று எதிர்பார்காவிட்டாலும் தன் மனக்குறையை தீர்க்க ஒருவன் கிடைத்து விட்டான். அதுவும் தாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்தே ஒருவன் கிடைத்து விடவும், எங்கே இருக்கிறோம் என்றும் பாராமல் மனக்குமுறலை அவனிடம் கொட்டுவது போல் கோபத்தை காட்டலானாள்.
 
“கோபம்தான் உங்க மொத்த குடும்பத்தின் மீதும் கடுங் கோபத்துல இருக்கேன். என் பொண்ண ஏமாத்தி காதலிக்க வச்சி கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி கடைசில அவ கழுத்த அறுத்து இப்படி முண்டமாக்கிட்டீங்களே!”
 
லஜ்ஜோ பேசுவாள் என்று தெரியும். காஜலை இவ்வாறு பேசுவாள் என்று எதிர்பார்க்காத அஜித்துக்கு கோபம் எட்டிப்பார்த்தாலும் அடக்கியவன்
 
“காஜலை எதுக்கு திட்டுறீங்க ஆன்டி. அஜய் ஒரு கேடு கெட்டவன். கேடு கெட்டவனுக்கு பொறந்தவன். அவன் அப்படி செய்வான்னு அப்பாக்கு எப்படி தெரியும்”
 
“எல்லாம் உங்க அப்பாவை சொல்லணும். ஒழுங்கா, ஒழுக்கமா ஒருத்திய கட்டி வாழ்ந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா?” சமயம் பார்த்து குத்திப்பேச
 
அசோக்கை பேசியதில் அஜித்தின் கோப எல்லை தாண்ட பல்லை கடித்தவன் “அப்பாவை பத்தி எதுக்கு பேசுறீங்க ஆன்டி”
 
அவன் வாக்கியத்தை முடிக்கும் முன் “ஆமா நீ வார்த்தைக்கு வார்த்த அப்பான்னு சொல்லுற, அசோக் அண்ணா உன் அப்பாவே இல்லையாமே! நீ அபேய் அண்ணா பையனாமே! அந்த மதி பொண்ணுதான் கவலை படணும் உன்ன கட்டிக்க போறவ எதுக்கு கவலை படணும்” என்று சொல்லி விட, கனன்று கொண்டிருந்தவனுக்கு லஜ்ஜோ என்ன சொல்ல விளைகிறாள் என்று புரிய சிரிப்பு எட்டி பார்த்தது. 
 
லஜ்ஜோ ஏன் அவ்வாறு கூறினாள் என்று அறிந்தும், அறியாதது போல் “ஏன் ஆன்டி அப்படி சொல்லுறீங்க” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,
 
“அசோக் தான் ஒண்ணுக்கு மூணு கல்யாணம் பண்ணி இருக்கான். அவன் பையன் அப்படி பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம். பாவம் அந்த மதி பொண்ணு”
 
“நீங்களே இன்னொரு பொண்ண இப்படி பேசினா? உங்க பொண்ண மத்தவங்க எப்படி பேசுவாங்கனு யோசிக்க வேணாமா?” உள்ளுக்குள் நொந்தவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.
 
“நீ உன் அப்பா மாதிரி ஒரு பொண்ண கட்டி நல்லா வாழுவ”
 
“தாத்தாவும் பாட்டியை மட்டும்தான் கல்யாணம் பண்ணி வாழ்தாரு. அசோக் அப்பா விதி இப்படி ஆகிருச்சு. எங்கப்பா அல்பாயுசுல போய்ட்டாரு அப்போ நானும் போய்டுவேனா?” என்று கேட்க துடித்த நாக்கை இழுத்து நிறுத்தியவன் சிரித்தவாறே “அப்பாடா உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கில்ல அது போதும். அப்போ உங்க பொண்ண எனக்கே கட்டி கொடுங்க” என்றவன் அமைதியாக பிரேக் போட்டது போல் நின்று விட்ட லஜ்ஜோ அதிர்ச்சியாக அஜித்தை பார்த்தாள்.   
 
“இந்த குடும்பத்தில் சகவாசம் வேண்டாம் என்று இருந்தால் இவன் என் பொண்ணையே கேக்குறானா? என்ன திமிர் என்று உள்ளுக்குள் கனன்றாலும்” இன்முகமாகவே “அது சரிப்பட்டு வராது பா… உன் அண்ணனுக்கு பார்த்த பொண்ணு…” என்று இழுத்தவள் “தம்பி கட்டி கிட்டா நல்லாவா இருக்கும். ஊரு உலகம் தப்பா பேசாதா?”
 
“ஐயோ ஆன்டி அண்ணனை லவ் பண்ண பொண்ணுன்னு சொல்ல மறந்துட்டீங்க” என்று எடுத்து கொடுத்தவன் “வெளில மாப்புள பாத்தீங்கன்னா  நாலு எடத்துல விசாரிப்பாங்க, காஜலுக்கு நிச்சயமானது நின்னு போனது எல்லாம் தெரிய வந்தா ஏன்னு கேள்வி வரும். அப்போ அந்த மாப்புள வீட்டுலையும் விசாரிப்பாங்க, துருவித் துருவி வித விதமா கேவி கேப்பாங்க. அப்பொறம் அஜய்யும், காஜலும் காதலிச்ச விவகாரமெல்லாம் என் வாயால நானே சொல்ல வேண்டி இருக்கும்” மறைமுக மிரட்டலை வெளிப்படையாகவே விடுத்தவன்
 
லஜ்ஜோவின் முகம் மாறுவதைக் கண்டு “அவங்க கேக்கும் பொழுது உளறிட்டேனா? என்ன பண்ணுறது ஆன்டி. அட எங்களை விடுங்க விரேந்த அங்கிளை பிடிக்காதவங்க கூட அஜய்ய லவ் பண்ணின பொண்ணுன்னு வர சம்மந்தத்தையெல்லாம் அந்த காலி பசங்க வெட்டி கத பேசியே வர விடாம பண்ணுவாங்க. இதுவே எனக்கு கட்டி வச்சா அந்த பிரச்சினை இருக்காதில்லை. அதுவும் அஜய் என் சொந்த அண்ணன் இல்லையே! எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க?” காஜல் எனக்கு தான். எனும் விதமாக பேசினான் அஜித்.
 
அவன் சொல்பவற்றில் உண்மை இருப்பது போலும் இருக்க, அமைதியானவள் “இத பத்தி அப்பொறம் பேசலாம்பா… பாரு பூஜை தொடங்குது” என்று அவன் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க, லஜ்ஜோவிடம் ஒருதலையசைப்பில் விடைபெற்றவன் அசோக்கோடு சென்றமர்ந்தான். 
 
 பூஜையும் சிறப்பாக நடைபெற்று முடிய அனைவரும் ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினர்.
 
காஜலிடம் எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையில் மதி ஆழ்ந்திருக்க, அவளே வந்து “மதி என்ன நீ ஊருக்கு கிளம்மனும்னு  சொல்லுறதா அக்ஷய் சொல்லிக்கிட்டு இருக்குறாரு. அப்போ உங்க கல்யாணம்”
 
“நம்ம கல்யாணம் வேற திடிரென்று நிச்சயமாச்சு காஜல் கல்யாணத்த ஊருல குலதெய்வ கோவில்ல வைக்கலாம்னு அம்மா ஆசை படுறாங்க. கல்யாணத்த அங்க வச்சிட்டு ரிசப்ஷன் இங்க வைக்கலாம்னு அக்ஷய் மாமாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டாரு”
 
“ஓஹ்.. எங்களையும் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா?”
 
“நீ இல்லாமலையா? பாவம் மாமா அவருக்கு அஜித் பத்தின கவலை தான். அவருக்கும் ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா அவரும் நிம்மதியா இருப்பாரு. நாங்களும் சந்தோசமா ஒண்ணா இருக்கலாம்”
 
“ஆமா மதி. அசோக் மாமா குடும்பத்தை பத்தி அஜய் சொன்னதுதான் எனக்கு அதிகமா தெரியும் அப்படி பார்த்தா அவன் சொன்னதெல்லாம் பொய். அக்ஷையை பத்தி என்னெல்லாம் சொன்னாரு. நினைக்கவே அருவருப்பாக இருக்கு. அக்ஷய் வாழ்க்கைல உன்ன பார்த்ததும் நிம்மதியா இருக்கு. அதே மாதிரி அஜித்தை பத்தி சொன்னதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கணும்” என்றவள் பெருமூச்சு விட
 
அஜய் என்ன சொன்னான் என்று கேட்டு தோண்டித்துருவாமல், அஜித் யார் மகன் என்று காஜலுக்கு தெரியுமா? விரேந்த சொன்னாரா? என்றும் கேட்டுக்கொண்டவள்  “உன் அப்பாவோட ஆசை அஜித்துக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கணும் என்பதுதான்” என்பதை போட்டுடைக்க,
 
“அப்பா ஆசையை கூட நிறைவேற்ற முடியாத படி ஆகிட்டேன் மதி”
 
“உன் அப்பா ஆச மட்டுமில்ல. அசோக் மாமா அசையும் அதுதான். அது தெரிஞ்ச அஜய் உன் சொத்து விவரம் தெரிஞ்ச பின்னாலதான் உன்ன காதலிக்கிறதா நடிச்சி இருக்கான்”
 
ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே என்பது போல் தலையாட்டியவாறே!  மதி கூறும் பொழுதே காஜல் அழ ஆரம்பிக்க “போதும் காஜல் அழுதது. அந்த அயோக்கியனுக்காக இனி உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது”
 
“நான் ஒன்னும் அவனுக்காக அழல” சிறு குழந்தையாக மதியை முறைத்தவள்
 
“அப்பா பாவம் நான் அஜய்ய காதலிக்கிறேன்னு சொன்னப்போ சரின்னு சொன்னாரு. ஒரு வார்த்தையாவது. அவர் ஆசை இதுதான்னு என் கிட்ட சொல்லல. அப்பா என்னைக்குமே எதையுமே என் மேல தினச்சது கிடையாது. எல்லாம் என் இஷ்டப்படிதான் விடுவாரு” கவலையான குரலில் காஜல் பேச
 
 
“எந்நாளும் இப்படியேவா இருக்க போற? யாரையாச்சும் கல்யாணம் பண்ணதானே போற. ஏன் உங்கப்பா ஆசையை நிறைவேற்ற கூடாது” பொறுத்தது போதும் என்று மதி கூற
 
சற்றுமே எதிர்பார்க்காத அதிர்ச்சியான முகபாவத்தை கொடுத்த காஜல் “அஜித் சம்மதிப்பாரா?” என்று உடனே கேட்டு விட்டாள்.
 
அவள் மறுப்பதாக கேட்கிறாளா? அல்லது மறைமுகமாக தன் சம்மதத்தை சொல்கிறாளா? என்று குழம்பிய மதி “அஜித்திடம் ஏற்கனவே பேசியாச்சு. பரிபூர்ண சம்மதம்னு சொல்லிட்டார்” அவர்கள் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையையும் எண்ணி மதி கூற யோசனையில் விழுந்தாள் காஜல்.