தேவதையிடம் வரம் கேட்டேன் 30

3595

அத்தியாயம் 30


Ko
டிவி நியூஸை பார்த்து தந்தை எவ்வாறான மனநிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் அக்ஷய்க்கு எழ உடனே அசோக்கை அலைபேசியில் அழைத்துப் பேசினான்.
 
“என்னை விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்தது என் குடும்பத்தில் ஒருத்தர் என்றதுமே! எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்க தயாராகி விட்டேன். உன் அம்மாவை பற்றி பேசியதால் தான் தாங்க முடியாத மனவேதனைக்கு உள்ளாகி உடல்நிலை மோசமாகியது. என்னை பற்றி கவலை படாதே!” என்று விட நிம்மதி அடைந்தான் அக்ஷய்.  
 
முன்கோபியான அஜித்துக்கே தந்தை மீது இவ்வளவு பாசம் இருக்கும் பொழுது அமைதியான அஜய்க்கு எவ்வளவு இருக்கும் என்று எண்ணி அவனை சந்தேகப்படாமல் சமேலியின் மீதே சந்தேக பார்வையை வைத்திருக்க, இங்கே கதையே வேறு மாதிரி இருந்திருக்கிறது.
 
இப்படி ஒருகோணம் இருக்கும் என்று அறிந்திருந்தால் அல்லது தந்தை அஜித்தை பற்றியாவது கூறி இருந்தால் என்றோ அஜய்யை சந்தேக கண்கொண்டு பார்த்திருப்பான் அக்ஷய்.
 
இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் யார் தடுத்தாலும் நடக்கும். நல்லவேளை தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை. அக்ஷையின் சிந்தனை இவ்வாறிருக்க மதியின் குரல் அவனை நடப்புக்கு கொண்டு வந்தது.
 
“என்ன இருந்தாலும் ஆள் கடத்தல்,மிரட்டல் எல்லாம் கூடாது. மிரட்டித்தான் இப்படி எல்லாம் சொல்ல சொன்னாங்கனு அந்தம்மா சொல்லிட்டா உங்களுக்குத்தான் பிரச்சினை” மதி அஜித்தை பார்த்தவாறு கூற
 
“அக்ஷய் மாதிரி பொறுமையா என்னால டீல் பண்ண முடியாது. எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு அவனுங்கள வெட்டி இருக்கணும். ஒரு வாரம், பத்துநாள் சோறு, தண்ணி இல்லாம அந்த லேடிய அடச்சீ வைக்கணும்னுதான் நினச்சேன். அப்பொறம் தான் நல்லா யோசிச்சு இதுங்கள கம்பி எண்ண வச்சிடலாம்னு முடிவு பண்ணேன். சில விஷயங்களை டீல் பண்ண வேண்டிய விதமே வேற மதி. கருணையே காட்ட கூடாது”
 
அஜித்தின் கூற்றை ஆமோதித்த அக்ஷய் “ஈவு இரக்கம் இல்லாம சிம்ரனை கொலை செஞ்சத சொன்ன பிறகுமா?” அக்ஷய் கூறி முடிக்க முன்
 
கையை தூக்கி கும்பிட்டவள் “ஆள விடுங்க. உங்க இஷ்ட படியே எதுவோ பண்ணுங்க” என்றவள் நகர
 
“மதி சிம்ரனும், மாமாவும் வந்தா சொல்லு எனக்கு அவங்க கூட முக்கியமான விஷயம் பேசணும்”  அக்ஷய் கத்தி சொல்ல, அவனை திரும்பி முறைத்தவள் தனதறைக்குள் நுழைந்தாள்.
 
 “யாரு பா… போன்ல ரொம்ப நேரமா பேசினீங்க போல” அலைபேசியை அனைத்தவாறே வந்தமர்ந்த அசோக்கிடம் கேட்டான் அஜித்.
 
“விரேந்க்கு தான் போன் பண்ணேன் பா… நியூஸ் பார்த்து அவனுக்கு போன் மேல போன் போட்டு துக்கம் விசாரிக்கிற சாக்கா பொண்ணு கல்யாணம் நின்னு போச்சாமேனு கேலி பேசுறாங்களாம். லஜ்ஜோ அண்ணி சும்மாவே ஆடுவாங்க. இப்போ குத்து டான்ஸ் ஆடுறாங்களாம்” என்றவரின் முகத்தில் விரிந்த புன்னகைகை மலர்ந்திருந்தது.
 
“ஏன் பா.. விரேந் அங்கிள் நிலைமையை நினைச்சி கவலை படாம சிரிக்கிறீங்க, காஜல் நிலம என்னவோ தெரியலையே! மதிய வேணா அங்க அனுப்பவா?” அக்ஷய் யோசனையாக கேட்க,
 
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அண்ணி கொஞ்சம் கூட யோசிக்காம பேசிடுவாங்க. எனக்கு விஷம் வச்சி கொல்ல பார்த்த விசயத்த நான் வீட்டை விட்டு வந்த பிறகு விரேந் கிட்ட போன் பண்ணி சொன்னேன். எதுவேனாலும் நடக்கும். காஜலையும், அண்ணியையும் பாத்துக்கணும் சொன்னேன். காஜல் கொஞ்சம் ஷாக்ள இருக்காலாம் நான் ஈவினிங் வந்து அவ கிட்ட பேசுறேன்னு சொன்னேன்.  போனா… அண்ணி என்ன உண்டு இல்லனு பேசுவாங்க அத நினைச்சிதான் சிரிச்சேன்.     
 
   அபேய் அண்ணா, விரேந் ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ். நாங்க மூணு பேரும் சின்ன வயசுல ஒண்ணா தான் சுத்துவோம். காஜல் ரொம்ப நல்ல பொண்ணு. அபேய் பையனுக்கு என் பொண்ண கொடுக்கணும்னு விரேந் சொல்லி கிட்டே இருப்பான். நானும் அஜித்துக்கு காஜலை பேசலாம்னு நினச்சேன், காஜல் அஜய்ய விரும்புறது தெரிஞ்சதும் அவ விருப்பம் தான் முக்கியம்னு சந்தோசமா கல்யாணத்த பேசி முடிச்சோம். விதி அவ வாழ்க்கைல இப்படி எல்லாம் நடந்திருச்சு” அசோக் கவலையாக சொல்ல
 
“என்னது காஜலை தனக்கு கல்யாணம் பேச பார்த்தார்களா? விரேந் அங்கிள் நல்லவர், நல்லா பழக்கமானவர் அவர் குடும்பம் இந்த நகரத்தில் இருந்தும் இவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தும் வீட்டுக்கு வரமாட்டார்கள். காரணம் இந்த பக்கம் இந்த லேடினா அந்த பக்கம் அந்த ஆன்டினு புரியுது” அஜித்தின் மனதில் நொடியில் இவைகள் ஓட அக்ஷய் கூறுவதில் கவனமானான்.
 
“விதி இல்லப்பா சதி. எல்லாம் அஜய் திட்டமிட்டு செஞ்ச சதி” என்ற அக்ஷய் நடந்த அனைத்தையும் கூற
 
“அடப்பாவி சொத்துக்காக காதலிக்கிற மாதிரி கூட ஏமாத்துவானா?” அஜித் கோபமும், ஆச்சரியமும் கலந்த குரலில் கூற,
 
“அவன் அம்மா புத்திதான் அவனுக்கும் இருக்கும்” அசோக் வெறுப்பாக கூறினார்.
 
“காஜலை போய் பார்த்தா அவ சமாதானமடைவா, ஆனா ஆன்டி கேள்வி மேல கேள்வி கேப்பாங்களே! அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? என்ன கேட்டா இப்போதைக்கு நீங்க அங்க போகாதீங்கப்பா” அக்ஷய் நெற்றியை தடவியவாறு கூற அஜித்துக்கும் அதுதான் சரி என்று பட அவனும் அசோக்கை பார்த்து ஆமோதிப்பது போல் தலையசைக்கலானான்.
 
இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மதி அறையிலிருந்து வெளிப்பட்டவாறே “மாமா இவங்க பேசுறத கேட்டு நீங்க போகாம இருக்காதீங்க, போங்க போய் ஆன்டி கேட்டா கல்யாணம் நடக்கும் அதுவும் உங்க மூத்த மகன் கூட நடக்கும்னு சொல்லுங்க” அஜித்தை பார்த்தவாறே கூறினாள்.
 
“என்ன மதி உளறுற” அக்ஷய் மற்றவர்கள் முன்னிலையில் மதியை கடிய முடியாமல் பாத்திருக்க,
 
அவள் சொல்வதை புரிந்து கொண்ட அசோக் “கல்யாண விஷயம் ரெண்டு பேர் சேர்ந்து வாழ போற வாழ்க அத நாம முடிவு பண்ண கூடாதும்மா. அதுக்கு சிறந்த உதாரணமே! நான் தான்”  
 
“அனுபவம் தான் சிறந்த பாடம், என்னை பார்த்து கத்துக்கோங்க” என்று வெளிப்படையாக கூறினாலும் அசோக்கின் கண்களில் மதி கூறியது நடந்து விடாதா? என்ற ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
 
“அது என்னமோ உண்மைதான். ஆனா காதல் என்ற பேர்ல ஒரு அயோக்யனால ஏமாற்றப்பட்ட காஜல் இன்னொருத்தன ஏமாத்தணும்னு நினைக்கல, அவ வாழ்க்கையை பாழாக்கிக்காம இருந்தாவே போதும். போதாததற்கு கேலி பேசியே அவ வாழ்க்கையை அழிக்க ஒரு கூட்டம் நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுறாங்க,  இவரு வேற கல்யாண ஆச இல்லாம தானே சுத்தி கிட்டு இருக்காரு” என்று அஜித்தின் புறம் கையை காட்டியவள்
 
“எந்த பொண்ணுக்கும் வாக்கு கொடுத்திருக்குற மாதிரியும் தெரியல” என்னமோ தனக்கு தெரியும் போல் சொல்லியவள்
 
“ஏன் உங்க ஆசையை நிறைவேற்ற இவர் காஜலை கல்யாணம் பண்ண கூடாது. உங்களுக்காக பண்ண மாட்டாரா? அதெல்லாம் பண்ணுவாரு. நீங்க கேட்டு தான் பாருங்களேன்”
 
“நீங்க கேக்கவே வேணாம். அதான் நான் சபையிலையே போட்டு உடைச்சிட்டேனே! இப்போ எப்படி மறுப்பாரு” எனும் விதமாக நின்றிருந்தாள் மதி.
 
“ஆகா.. மதியழகி… போலீஸ்காரியா இல்ல வக்கீலா? இப்படி பேசுறியே! எனக்கு கூட இது தோணலயே!” மெச்சிக்கொண்டான் அக்ஷய்.
 
“என்னது நான் காஜலை திருமண செய்யணுமா?” அஜித் அதிர்ச்சியாக கேட்க,
 
“ஏன் பண்ண மாட்டீங்களா? அப்பா அப்பான்னு பாசம் காட்டுறீங்க? அவர் ஆசையை நிறைவேற்ற மாட்டீங்களா? இல்ல காஜல் அஜய்ய காதலிச்சா என்கிற ஒரே காரணத்துக்காக அவளை வேணாம்னு சொல்ல போறீங்களா?” மதி ராக்கெட் வேகத்தில் அஜித் மறுப்பு தெரிவிக்க எந்த மாதிரியான காரணங்களை சொல்வான் என்று கணித்து கூற,
 
“சே சே காதலித்ததற்காக ஒரு பெண்ணை ஒதுக்குவதென்றால் விதவைகளுக்கு கூட மறு வாழ்வே அமையாதே! என்னை கேட்டால் அஜய்யை பழிவாங்க காஜலை திருமணம் செய்வதுதான் சரி” என்று சத்தமாக சிரிக்கலானான் அஜித்.  
 
“அடப்பாவி” எனும் விதமாக அவனை பார்த்தனர் மூவரும்.
 
“அதற்காக நான் ஒன்றும் வில்லன் இல்லை. அப்பா ஆசை என்னனு தெரிஞ்சிருச்சே! இப்போ சொல்லுறேன் நான் காஜலை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். அவ சம்மதம் சொல்லணும். சொல்ல வைக்கணும் அது உன் பொறுப்பு மதி. உன்னால முடியுமா?”
 
“இவ்வளவு பேசி என்ன சம்மதிக்க வச்சியே எங்க உன் திறமையை அங்க காட்டு” எனும் விதமாக மதியை பார்க்க, கட்டை விரலை உயர்த்தினாள் மதி.
 
 “அஜித் கல்யாணம் குழந்தைகள் விளையாடுற பொம்மை விளையாட்டல்ல. நானும் சமேலியும் வாழ்ந்த வாழ்க்கையுமல்ல. எனக்காகவோ! விரேந்தருக்காகவோ நீங்க கல்யாணம் பண்ணுறது எனக்கு சுத்தமா இஷ்டமில்லை” அசோக் தெளிவாக கூற
 
“அப்பா நா யாரையாச்சும் கல்யாணம் பண்ணிதான் ஆகணும். அது நீங்க ஆசைப்பட்ட காஜலா இருக்கட்டுமே! காஜலை நான் அஜய் கட்டிக்க போற பொண்ணா! ஏன் விரேந்தர் அங்கிள் பொண்ணா! கூட பார்த்ததில்லை. அதுவும் நல்லதுக்குதான். கல்யாணம் நடக்கட்டும். அவ மனசும் மாறும் கண்டிப்பா நான் அவ கூட சந்தோசமான ஒரு வாழ்க்கையை வாழ்வேன். இட்ஸ் மை ப்ரோமிஸ் பா” அசோக்கின் கையை பிடித்தவாறு கூற
 
அஜித் எமோஷனலாக பேச மாட்டான். அவனின் இந்த வார்த்தைகளே மனதில் இருந்து ஒலித்தது என்று புரிய, அவனின் முழு சம்மதம் கிடைத்ததும் அசோக் அவனை அணைத்துக்கொள்ள, அக்ஷையும் அஜித்தை அணைத்துக்கொண்டான்.
 
மதியோ காஜலை சம்மதிக்க வைப்பது எப்படி என்று யோசிக்கலானாள்.
 
தான் போட்ட இரண்டு திட்டமும் நடை பெறாத கோபத்தில் அலைபேசியை அனைத்து விட்டு மூக்கு முட்ட குடித்து விட்டு தனது ஆசைநாயகின் வீட்டில் விழுந்து கிடந்தான் உதித்.
 
“யோவ் எந்திரியா. உன் போட்டோ டிவில வருது. என்ன கருமத்தை பண்ணிட்டு இங்க வந்து படுத்து கிடக்குற? போலீஸ் வந்து என்னையும் அள்ளிக்கிட்டு போக போறாங்க. முதல்ல இடத்தை காலி பண்ணு” அந்த பெண் கத்திக் கொண்டிருக்க, குடித்த சரக்கின் வெறி அடங்கியது.
 
“ஏன் டி கத்துற”
 
“டிவிய பாரு”
 
அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவன் சமேலியும், அஜய்யும் கைதான விஷயத்தை பார்த்து சத்தமாக சிரிக்கலானான்.
 
“யோவ் பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு. முதல்ல இடத்தை காலி பண்ணு” எங்கே தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அந்த பெண் உதித்தை துரத்துவதில்லையே குறியாக இருக்க,
 
அந்த பெண்ணின் கழுத்தை நெரித்தவன் “காசு கொடுக்கும் பொழுது ஈனு இளிச்சி கிட்டு வாங்குறல்ல, போலீஸ் கேஸ் என்றதும் துரத்துரியா? அவனுகளும் இப்படித்தான் ஆடுனானுங்க. சொத்து கைக்கி வரட்டும் அம்மாவையும், பையனையும் போட்டு தள்ளலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க, போதாததுக்கு என்னையும் சிக்க வைக்க பாக்குறாங்களா? மாட்ட மாட்டேன் டி” பிடியை இறுக்கியவாறே பேச அந்த பெண் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தாள்.
 
அவள் மயங்கினாளா? இறந்து விட்டாளா? கீழே சரிந்தவளை திரும்பியும் பாராமல் தனது துணியை அணிந்துகொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான் உதித்.
 
நகரத்தை விட்டு செல்வதுதான் தனக்கு பாதுகாப்பு என்று கருதிய உதித் பஸ்ஸிலையோ, ட்ரைனிலையோ சென்றால் போலீசில் மட்டோவோம் என்று லாரியில் லிப்ட் கேட்டு செல்லலாம் என்று ஒரு லாரியை நிறுத்தி ஏறி இருக்க, அரைமணித்தியாலத்தில் லாரியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, ராஜவேலுவால் அடிவங்கலானான்.
 
என்ன நடக்கிறது என்று உணரும் பொழுதே போலீஸ் வந்து கைதும் செய்ய, “உண்மையை உள்ள படி சொல்லல, ஜெய்ல களி தின்கிறதுக்கு பதிலா உசுர விட்டுடுவ” என்று சிம்ரனின் குரலில் ராஜவேலு மிரட்ட உயிர் பயத்தில் செய்த அனைத்தையும் ஒப்பிக்கலானான் உதித்.
 
அஜய் மட்டும்தான் வாக்குமூலம் கொடுக்காமல் மறுத்து வருவதாக கமிஷ்னர் அஜித்துக்கு அலைபேசி மூலம் தெரிவித்திருக்க, அக்ஷய் தான் சென்று அஜய்யை சந்தித்து பேசுவதாக சொல்ல தனியாக செல்லாதே இன்னாரை கூட்டிட்டு போ என்று சொன்னான் அஜித். சரி என்ற அக்ஷையும் உடனே கிளம்பி இருந்தான்.
 
அக்ஷையை கண்டு அஜய் கதை சொல்ல ஆரம்பிக்க கையை நீட்டி தடுத்தவன் “உன் வேஷம் கலஞ்சி பல நாள் ஆச்சு அஜய். போட்டிருக்கும் முகமூடியை கழட்டி வை. உன் வாயாலேயே உண்மைகளை கக்க வைக்க வேண்டும் என்று தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
 
சிம்ரனின் ஆவியை பற்றி சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்று கூறியவன், மதிக்கு எந்த மனநோயும் இல்லை என்று கூற
 
 
“நானே மகாநடிகன். ஹாஹாஹா அப்போ என் கிட்டயே நடிச்சிருக்க, சிம்ரனின் ஆவி சொல்லலைனா கண்டு பிடிச்சிருக்க மாட்ட இல்ல” 
 
 
“பூஜைக்கு வந்த அன்னைக்குதான் உங்க அம்மா தான் மெயின் வில்லினு புரிஞ்சி கிட்டேன். நான் போக வேண்டிய ரூட்டே தனினு நினைக்கிறப்போ அஜித்தை காணோம். என்னமா கத சொல்லுற. அவன் சொத்தை ஆட்டைய போட நினைச்சது மட்டுமில்லாம என் பேர்ல இருக்குற சொத்தை எழுதி வாங்க டாகியுமென்ட் ரெடி பண்ணி இருக்க, சிம்ரன்தான் சொன்னா. உன் ஆபீஸ்ல இருந்து எல்லாம் எடுத்தாச்சு, இன்னும் என்ன உன் ஆபீஸ்னு. அதான் நீ என் அப்பாக்கு மகனே இல்லனு ஆகிருச்சே” 
 
“ஆமா நான் உன் அப்பனுக்கு பொறக்கல” அஜய் ஆவேசமாக கத்த, அவன் கத்தலில் தான் சாம்ராட் வம்சா வழியில் வரவில்லையே எனற கோபம், ஆத்திரம், ஆதங்கம் அடங்கி இருப்பதை உணர்ந்தான் அக்ஷய்.     
 
“உன் மேல அவர் எவ்வளவு பாசம் வச்சிருந்தாரு உண்மை தெரிஞ்சாலும் உன் தப்பு ஒன்னும் இல்லனு சொத்துல பங்கு கண்டிப்பா கொடுத்திருப்பாரு. எல்லாம் கேப்பார் பேச்சு கேட்டு அவரையே கொல்ல பாத்தியே உன்ன என்ன பண்ணலாம்? அது மட்டுமா பண்ண காஜலை சொத்துக்காக காதலிக்கிறதா ஏமாத்தி இருக்க”
 
“அவ பேசின ரெண்டாவது நாளே அவ யாரு, என்னனு கண்டு பிடிச்சேன். இவ்வளவு சொத்தோட ஒரு பொண்ணு கல்யாணம் பண்ண கசக்குமா? அவ ஒரு மட சாம்பிராணி. நான் என்ன சொன்னாலும் நம்புவா. அவ்வளவு லவ் என் மேல. இதெல்லாம் உன் சதின்னு சொன்னா கூட நம்பிடுவா. நான் வெளிய வரத்தான் போறேன். அவளை கல்யாணம் பண்ணி அவ சொத்தை அடையத்தான் போறேன்”
 
“அப்போ அவளை உண்மையா காதலிக்கல”
 
“காதலாவது மண்ணாவது. அவளும் அவ மூஞ்சியும். பேசியே கொல்லுறா”
 
“இத அவ கேட்டா ரொம்ப வருத்தப்படுவா” என்ற அக்ஷய் மர்மமாக புன்னகைத்தவன் “இத்தனை பண்ணியும் எதுவுமே பண்ணலைன்னு போலீஸ் கிட்ட உண்மைய சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கிறியாமே! உன்ன என்ன பண்ணுறதுனு சிம்ரன் கிட்ட கேட்டா கொன்னுடவானு கேக்குறா? சரினு சொல்லவா?”
 
“என்ன பூச்சாண்டி காட்டுறியா?” அஜய் சிரிக்க,
 
“அப்படியும் சொல்லலாமே! சிம்ரன் உன் சாவுக்கு காரணமான உதித் வாக்குமூலம் கொடுத்துட்டான். இவன் மாட்டேன் என்குறான் நீயே கவனி” என்று விட்டு காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்து கைகளை கோர்த்து தாடையில் வைத்துக் கொண்டான்.
 
“பேரு உனக்கு வேல எனக்கா?” என்ற ராஜவேலு சிம்ரனை பார்த்து புன்னகைக்க அவள் அஜய்யை உக்கிரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
அஜய்யின் கன்னத்தில் “பளார்” அறைய கன்னத்தில் கையை வைத்தவன் சுற்றும்முற்றும் பார்க்க அக்ஷய் அசையாது அமர்ந்திருக்கவும் போலீஸ் கைது செய்த பின் தான் அணிந்திருந்த அனைத்தையும் கழட்டி வைக்கும் பொழுது மந்திரித்த தாயத்தையும் கழட்டி வைத்தது நியாபகம் வர தன்னை அறைந்தது சிம்ரனின் ஆவிதான் என்றும் அதனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்றும் யோசிக்க,
 
“என்ன அஜய் சார் போலீஸ் கிட்ட உண்மைய சொல்லுறேன்னு இப்போ சொல்லிட்டு தாயத்தை கட்டிக்கலாம்னு எண்ணமா?” அவன் மனதை படித்தது போல் ராஜவேலு சிம்ரனின் குரலில் கூற அதிர்ச்சியடைந்தான் அஜய்.
 
 
“நீ உண்மைய சொல்லுற,  தண்டனையை அனுபவிக்கிற, அத விட்டுட்டு வெளிய வரணும்னு நினைச்ச, வந்த அடுத்த செக்கேனே லாரில அடிபட்டு செத்துடுவ” என்று சத்தமாக சிரிக்க,
 
“ஓகே அஜய். ஆவி இல்லனா என்ன, அசோக் சாம்ராட்டின் மகன் என்ற டைட்டில் போய் சாதாரண குடிமகனாகிட்ட, உன்ன தூக்கி கொலை பண்ணுறது எனக்கு ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்ல. பண்ண தப்ப ஓத்துக்கிட்டு வெளிய வந்து உசுரோட வாழு” என்று விட்டு அக்ஷய் வெளியேற, அஜய் பேசிய அனைத்தையும் கேட்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்ட காஜல் மதியோடு காரிலிருந்து இறங்கி வந்தாள்.
 
“ரொம்ப தேங்க்ஸ் அக்ஷய். டிவி நியூஸ் பார்த்ததும் மூளை நம்ப சொன்னாலும் மனசு நம்ப மறுத்தது. என்ன இங்க கூட்டிகிட்டு வந்து உண்மைய புரியவச்சி என் கண்ண தொறந்துட்டீங்க” காஜல் சிந்திய புன்னகையில் இனி தான் திடமாக இருப்பேன் என்ற அர்த்தம் பொதிந்திருக்க,
 
“ஆக்சுவலி நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்ல அஜித்துக்கு. உன் பேரன்ட்ஸ் உன்ன நினைச்சி ரொம்ப மனவேதனைல இருக்கிறதா அப்பா கிட்ட பேசி இருக்கிறாங்க, அஜித்தான் அஜய்ய பார்க்க போறப்போ உன்னையும் கூட்டிட்டு போக சொன்னான். உன்ன கண்டா பாசாங்கு வார்த்தைகளைத்தான் பேசுவான். அதான் காரிலையே மதி கூட இருக்க சொல்லி அவன் பேசுறத கேக்க வச்சேன். அவன் உண்மையான முகம் தெரிஞ்சிருச்சே! அது போதும்”
 
அஜித் தனக்காக எதற்கு இதை செய்ய வேண்டும் என்று யோசிக்க தவறியவள் “ஆமா உள்ள ஆவினு என்னென்னமோ பேசினீங்க?” காஜல் புரியாது கேக்க
 
“அதுவா… அது சும்மா சயன்ஸ் வச்சி விளையாட்டு காட்டினோம். வேற ஒன்னும் இல்ல” மதி அக்ஷய்க்கு உண்மையை சொல்ல வேண்டாம் எனும் விதமாக தலையசைத்து சைகை செய்ய,
 
“ஓஹ்… நிஜமாலுமே பயந்துட்டேன்” காஜலின் முகபாவம் சொன்னது உண்மையை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவளிடத்தில் இல்லை என்று.

தொடரும்