தேவதையிடம் வரம் கேட்டேன் 28

3563

அத்தியாயம் 28


இங்கே அசோக்கின் வீட்டில் ராஜவேலு ஒருவாறு அஜித்தை தேடி கண்டு பிடித்திருக்க, தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் அஜித்.
 
அந்த அறை இருட்டில் இருக்க மின்குமிழை எரிய விடவும் யாரோ வருகிறார்கள் என்று அஜித் தலையை உயர்த்திப் பார்க்க யாரையும் காணவில்லை. மின் குமிழ் எவ்வாறு எரிந்தது? ஒருவேளை இதற்கான சுவிட்ச் ஒன்று வீட்டின் உள்ளேயும் இருக்கும் தவறுதலாக போட்டிருப்பார்கள் என்று நினைத்தான்.
 
அவன் அருகில் வந்து அவனை சுற்றி சுற்றி பார்த்த ராஜவேலு இவனோடு எப்படி பேசுவது, என்று யோசிக்க, சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்ணில் அஜித்தின் முன்னால் இருந்த தூசி படிந்த வண்டி தென்பட்டது.
 
அஜித்தின் கவனத்தை தன் புறம் ஈர்க்க காற்றை சுழல விட அதிர்ச்சசியாக பாத்திருந்தான் அஜித். தூசி படிந்த கண்ணாடியில் ஆங்கிலத்தில் “ஆர் யு ஓகே” என்று எழுதிக் கேட்டான் ராஜவேலு.
 
என்ன நடக்கிறது? தலையில் அடி பட்டதில் மூளை குழம்பி விட்டதா? தலையை உலுக்கிக் கொள்ள, “பயந்துடாத, உனக்கு உதவி செய்ய அக்ஷய்த்தான் என்னை அனுப்பி இருக்கிறான். நான் மதியோட தந்தை. இப்போ ஆவியாக அழைக்கிறேன்” என்று மீண்டும் எழுத 
 
அக்ஷையின் பெயரை பார்த்ததும் சுதாரித்தவன் கட்டுகளை அவிழ்க்க சொல்ல நொடியில் கால் கட்டுகளும் கை கட்டும் அவிழ்த்தாலும் கையின் கட்டில் ஒரு நுனியை அவிழ்க்க வேண்டாம் என்று ஒரு கையில் மாத்திரம் கயிறு இருக்கட்டும் என்று எழுதிய ராஜவேலு அதை பிடித்து இழுத்து எந்த திசையில் சென்றால் சமேலியின் கண்ணில் சிக்காமல் வெளியேறலாம் என்று தன்னால் கூற முடியும் என்றும் எழுத,
 
“இத்தனை வருடங்களாக தந்தையை ஏமாற்றியவளை சும்மா விட்டு செல்வதா? ஏமாற்றியதோடு விட்டாளா? விஷம் கொடுத்து கொல்ல பார்த்தாளே அவளை விடுவதா?” என்று அஜித் ஆவேசம்கொள்ள ராஜவேலுவுக்கும் சமேலியை சும்மா விட தோன்றவில்லை.
 
“அவளை பய முறுத்தவா?” என்று கேட்க
 
 “முடியுமா?”
 
“இப்போ பாருங்க என் ஆட்டத்தை” என்ற ராஜவேலு சமேலியா தேடி செல்ல, அங்கே கிடந்த பழைய துணியை கொண்டு வண்டியின் கண்ணாடியில் எழுதியவைகளை அழிக்கலானான் அஜித்.
 
 
அக்ஷையின் திட்டப்படி வண்டியும் அங்கேயே இருக்கட்டும் அது அஜித்துக்கு தேவை படும் என்று சாவியை வண்டியிலையே வைத்து, சமேலியிடம் கூட அசோக்கை காணவில்லை என்று கூறமால்தான் மதியை அழைத்து செல்ல வந்ததாகத்தான் அக்ஷய் சமேலியின் முகம் நோக்காமல் கூறி மதியை அழைத்து சென்றிருக்க, டிவியின் முன் அமர்ந்து பழைய சினிமா ஒன்றை பார்த்தவாறு பழங்களை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள் சமேலி.
 
அவள் அருகில் வந்து நின்ற ராஜவேலு அசோக் அடித்த கன்னம் கொஞ்சமாக சிவந்திருப்பதை கண்டு “என்ன சம்மந்தி கொசுவை அடிக்கிற மாதிரி அடிச்சி இருக்கிறார், இவளையெல்லாம் அடிக்கிற அடில கடைவாய் பல்லு கழண்டு தெறிக்கணுமா இல்லையா? சம்மந்திக்கு கோபப்படவே தெரியல” என்றவாறு சமேலியை சுற்றி சுற்றி வந்தவன்
 
“பொம்பளைனா முடிய நீளமா வளர்க்கணும். இவ என்ன குட்டையா வெட்டி வச்சி இருக்கா? இப்போ நா எத புடிச்சி இழுக்கிறது? இது சரி பட்டு வராது” தனக்குள் பேசியவன் சமேலியின் தலையில் அடிக்க திடிக்கிட்டவள் சுற்றும்முற்றும் பார்க்க அங்கே யாரையும் காணாமல் பிரம்மையோ என்றெண்ணி டீவியில் கவனம் செலுத்த அவள் மடியில் இருந்த பழத் தட்டு நகர்ந்து அருகில் இருந்த மேசையின் மேல் சென்று அமரவும் கத்தி விட்டாள். 
 
தட்டில் இருந்த கத்தி மேலெழுந்து அவளை துரத்த உயிர் பயத்தில் வீட்டுக்குள்ளேயே ஓடலானாள் சமேலி.
 
இந்திராவின் ஆவிதான் தன்னை பழிவாங்க வந்திருப்பதாக நினைத்த சமேலி இந்திராவின் பெயரை கூறி மன்னிப்பு கேட்டவாறு ஓடிக்கொண்டே இருக்க,
 
“உயிர் பயத்த காட்டினாதான் மன்னிப்பு கேக்குறா? இந்த சம்மந்தியம்மா எதுக்கு இவள சும்மா விட்டு வச்சாங்கண்ணே புரியல. இவளையெல்லாம் அப்போவே நாலு தட்டு தட்டி இருந்தா அடங்கி இருப்பா”
 
ஓடிக்கொண்டிருந்த சமேலி அலைபேசி கண்ணில் பட அஜய்யை அழைக்கலாம் என்று எண்ணி அலைபேசியை கையில் எடுக்க, அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட ராஜவேலு  சமேலியை அந்திரத்தில் தலைகீழாக தொங்க விட்டு அலைபேசியை கீழே விழ வைத்து உடைத்திருந்தான்.
 
 
சட்டென்று மேலே தூக்கப்பட்டு தலை கீழாக தொங்கிய அதிர்ச்சியில் கைபேசி கீழே விழுந்து பல கீறல்களை பெற்று உயிர்நீத்திருந்தது.
 
தொங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் “ஐயோ என் புதிய போன்” என்று சமேலி கத்த
 
“பாருடா..  மேடம் எங்க இருக்காங்க, எந்த நிலமைல இருக்காங்க போன பத்தி கவலை படுறாங்க” ராஜவேலு நக்கலடித்தவாறே அவளையும் கைவிட கீழே விழுந்த வேகத்தில் இடுப்பில் அடிபட வலியில் துடிக்கலானாள்.
 
“என்ன பண்ணாலும் கத்துறா பயப்பட மாட்டேங்குறாளே! இவள வேற மாதிரிதான் பயமுறுத்தணும்” என்று ராஜவேலு சலங்கை ஒலியை எழுப்பினான்.
 
ஒரு பெண் நடந்து வந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது அந்த சத்தம். அது சமேலியின் முகத்தில் மரண பீதியை ஏற்படுத்துவதை கண்டு சத்தமாக சிரிக்கலானான் ராஜவேலு. அந்த சத்தம் கூட ஒரு பெண்ணின் சத்தம் போல் இருக்க, நடுநடுங்கிப்போனாள்.
 
கருப்பாய் ஒரு உருவம் தோட்டத்து பக்கமிருக்கும் கதவின் அருகே இருந்து நடந்து வருவதை கண்டு கத்தியவாறே மயங்கி சரிந்தாள் சமேலி.
 
“பேய் பேய்னு சொன்னா பயப்பாடாதுங்க, பாத்தாதான் பயப்படுத்துங்க. உப்ப்… எத்தனை பேர பய முறுத்தி இருப்பேன். என் பொண்டாட்டிய பயமுறுத்துறத விட திருப்தியா இருக்கு” ராஜவேலு குஷியாகி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அஜித்.
 
“அய்யய்யோ இந்தம்மாவ பார்த்ததுல இவரை மறந்துட்டேனே”
 
கையில் ஒரு பையோடு வந்தவன் சமேலி கீழே விழுந்து இருப்பதை கண்டு அவளை தூக்க முயற்சி செய்ய, அவன் என்ன செய்ய போகிறான் எனும் விதமாக பாத்திருந்த ராஜவேலு அவனை தடுத்து அக்ஷையின் ஹோட்டலுக்கு செல்லுமாறு வாசலில் இருந்த அலங்கார நிலைக்காண்டியின் மீது சாப்பாட்டு மேசையில் இருந்த சாஸ் பாட்டில் பறந்து வந்து எழுதிக் கொண்டிருந்தது.
 
எழுத்துக்கள் வழிந்து அழியாது அழகாக நிலையாக கண்ணாடியில் இருப்பதை கைகட்டி பொறுமையாக பாத்திருந்த அஜித் “போறேன். அதுக்கு முன்னால இந்த லேடிய ஒரு வழி பண்ண வேணாமா?” குரூரமாக கூற
 
“என்ன பண்ண போறீங்க? அதான் பயமுறுத்தி, அந்தம்மா மயங்கியும் விழுந்திருச்சே” ராஜவேலு புரியாது எழுதிக் கேட்டான்.
 
“அஜய்க்கு அம்மான்னா உயிர். அம்மாவை காணாம்னா பையன் துடிப்பானே! தேடுவானே! கதறுவானே! கொஞ்சமாச்சும் பதறட்டும். இவங்கள அடச்சீ வச்சி, அவனை மடக்க முடியுமான்னு யோசிக்கணும்” அஜித் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ராஜவேலு அஜித்தை வாசல்புரம் திருப்ப, அந்த பெரிய கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள் காஜல்.
 
 
   சமேலிக்கும் மதிக்கும் பகல் உணவு எடுத்துக்கொண்டு வருவதாக காஜல் கூறி இருக்க, அவள் வரும் வரை பசி பொறுக்காமல் தான் சமேலி பழங்களை சாப்பிட ஆரம்பித்திருந்தாள். இது தெரியாமல்தான் ராஜவேலு பயமுறுத்தி அவள் மயங்கி சரிய அஜித் அவளை கடத்த திட்டம் போட்டுக்கொண்டிருக்க, சாப்பாடு கூடையோடு வரும் காஜலையும் சேர்த்து கடத்த முடிவு செய்த அஜித் அஜய் அவன் தலையில் அடித்த இரும்பு தடி அங்கே இருப்பதைக் கண்டு அதை கையில் எடுத்தான்.
 
அஜித்தின் திட்டத்தை புரிந்துகொண்ட ராஜவேலு தடியையை பிடித்திழுத்தவாறே “அந்த பொண்ணு நல்ல பொண்ணு அவளை விட்டுடு, இல்லனா நா உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்” என்று எழுதி இருக்க,
 
“ஓகே கூல். இப்போ அவ உள்ள வந்துடுவா? நாம இப்போ எப்படி வெளிய போறது? இந்த லேடிய வேற கொண்டு போகணும். அவளை தூக்குறதுதான் ஒரே வழி” அஜித் தடியை விடாத கூறினான்.
 
அஜித்தை சமையல் கட்டு பக்கம் தள்ளிய ராஜவேலு சமேலியை நொடியில் தூக்கி அவன் கையில் வைக்க,
 
“வண்டி முன்னாடி இருக்கு” என்ற அஜித் ஒரு அடி கூட நகராமல் அங்கேயே நிற்க,
 
மதி வந்த வண்டி வீட்டின் பக்கவாட்டில் தான் நிறுத்தி இருக்கிறாள். சாவி வண்டியில் இருக்கு. போ…” என்று அஜித்தை தள்ளத்தாக் குறையாக சொல்ல சமேலியை தூக்கியவன் பின் பக்கமாக வெளியேற, சிதறி கிடந்த பொருட்களை நொடியில் ஒழுங்கு படுத்தலானான் ராஜவேலு.
 
வாசல் காதவு திறந்தே இருக்க, காஜல் உள்ளே நுழைந்த நொடியில்தான் கண்ணாடியில் எழுதப்பட்டிடுந்த அனைத்தும் மாயமாய் மறைந்திருந்தது.
 
“கதவையும், கேட்டையும் தொறந்து வைச்சிட்டு அத்த என்ன பண்ணுறாங்க? தனியா வேற இருக்காங்க, கவனமாக இருக்க வேணாமா?” தனக்குள் பேசியவள் குரல் கொடுக்க ஆரம்பிக்க,  மாடியில் சத்தம் எழுப்பினான் ராஜவேலு.
 
“ஓஹ்… மாடில இருக்காங்களா?” என்றவாறு கையில் இருந்த கூடையை அங்கையே வைத்தவள் மாடிப்படிகளில் ஏற தனியாக இருக்கும் காஜலுக்கு துணையாக இருப்பதா? அஜித்தோடு செல்வதா? அல்லது அஜித் பண்ண போகும் காரியத்தை பற்றி மதி அக்ஷையிடம் போய் கூறுவதா? என்று குழப்பத்தில் ஆழ்ந்தான் ராஜவேலு.
 
மாடிக்கு சென்ற காஜல் சமேலி அங்கு இல்லை என்றதும் வீட்டை ஒரு அலசு அலசி விட்டு அஜய்க்கு போன் பண்ணுவாள். அவன் வருவான் கூடவே மதியும், அக்ஷையும் வந்தாலும் வருவார்கள். இந்த அஜித் இந்த பொம்பளைய கடத்திட்டு எங்கயாச்சும் போய்ட்டானா! அப்பொறம் அவனை தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். அவனை பின் தொடருறதுதான் சரி. இல்லனா மதி என்ன லெப்ட் அண்ட் ரைட் வாங்கிடுவா” நொடியில் முடிவு செய்த ராஜவேலு அஜித்தின் பின்னால் சென்றிருந்தான்.
 
சமேலியை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற அஜித் மதி வந்த வண்டியை பார்க்க, இதிலே சென்றால் சமேலியை கடத்திக்கொண்டு போவதை தானே காட்டிக்கொடுத்தது போல் ஆகும் என்று நன்கு புரிய என்ன செய்வது என்று யோசித்தவன் மற்ற வண்டிகளின் சாவிகளும் இல்லை. சமேலியை தூக்கிக் கொண்டிருக்க முடியாததால் அவளை பின் புறம் கிடத்த, வேறொரு வண்டியை மூடியிருந்த போர்வை பறந்து வந்து சமேலியை மூடியது.  “நல்ல யோசனை” என்றவன் தன் பேகையும் அதன் மீது வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்ய போக அது தானாக உருண்டு கேட்டுக்கு வெளியே வந்து நின்றதும் ராஜவேலுவின் கைகாரியம் என புரிய “தேங்க்ஸ்” என்றவன் வண்டியை கிளப்பி இருந்தான்.
 
வீட்டை அலசிய காஜல் சமேலியை காணாது அழுதவாறே அஜய்க்கு போன் பண்ண அடித்துபிடித்து வந்து சேர்ந்தான் அஜய். கூடவே அக்ஷையும் மதியும்.
 
தான் வரும் பொழுது கேட்டும், வாசல் கதவும் திறந்துதான் இருந்ததாக காஜல் கூற, வீட்டில் எந்த களோபரமும் நடந்ததற்கான அறிகுறியும் இல்லை.
 
இவர்கள் முன்னிலையில் அஜித்தை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு சென்று பார்க்கவும் முடியாமல் அஜய் தவிக்க, மதி வந்த வண்டி இல்லை என்பதை உள்ளே வரும் பொழுதே கண்டு கொண்ட  அக்ஷய் அஜித் தான் சமேலியை கடத்தி இருப்பான் என்று ஊகித்தான்.
 
அஜய்யின் முன்னிலையில் மதியிடம் ராஜவேலு வந்தாரா? ஏதாவது தகவல் தெரியுமா என்று கேட்கவும் முடியாமல் மதியின் முகத்தை முகத்தை பார்க்க, அதை புரிந்து கொண்ட மதியும் “இல்லை” எனும் விதமாக தலையசைத்தாள்.
 
    “நான் வர லேட் ஆகிருச்சு, அதனால் தான் அத்தைக்கு இப்படி ஆகிருச்சு” என்று காஜல் புலம்ப
 
“அப்பாவை காணோம்னு சொன்னா பதறுவாங்கனு சொல்லாம மதிய கூட்டிகிட்டு வரும் வழிலதான் சொன்னேன். உண்மையை சொல்லி அவங்களையும் என் கூடவே கூட்டிட்டு வந்திருக்கணும். என் தப்புதான்” என்று அக்ஷய் சொல்ல,
 
“அப்பா பத்தி ஏதும் தகவல் கிடைச்சது?” என்று நிதானமாகவே கேட்டான் அஜய்.
 
அவன் பெற்ற அன்னையை காணவில்லை. அவன் நிதானம் அக்ஷய்க்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருந்தது.
 
“இல்லை” என்றவன் வெளியே சென்று பாஸ்கரை அழைத்து “ஒருவேளை அஜித் அங்கு வந்தாலும் வருவான். வந்தால் எங்கும் சென்று விடாத படி அவனை அங்கையே பிடித்து வைக்கும் படி கூறி அலைப்பேசியை அனைத்தவன் அஜய்யிடம் வந்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்றான்.
 
“எனக்கென்னமோ! அஜித்தான் அப்பாவையும் அம்மாவையும் கடத்தி இருப்பான்னு தோணுது” அஜய் சொல்ல .
 
“என்ன சொல்லுற?” அக்ஷய் நெற்றியை தடவியவாறே கேட்டான்.
 
“அஜித் எங்க சகோதரனே இல்லை. அது உனக்கு தெரியுமா? அன்னைக்கி நீ அப்பாவை கூட்டிட்டு போன பிறகு இங்க என்ன நடந்தது தெரியுமா?”
 
“இப்போ என்ன கத சொல்ல போறானோ என்று மதி பார்க்க அஜய் அஜித் அபேயின் மகன் என்றும், அவனுக்கு குடும்ப சொத்துக்கள் எதுவும் இல்லை. அசோக்காக பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு என்று புதிதாக ஒரு கதையை அக்ஷய்க்கு கூறினான்.
 
அசோக் உடல்நிலை சீரற்ற நிலையில். அஜித்தை சமேலியிடம் விட்டு வந்ததற்காக புலம்பிக்கொண்டிருக்க, அக்ஷய் அவன் என்ன சின்ன பையனா? என்று கேட்க, அவன் என் அண்ணன் மகன். அவனை ஏதாவது செய்து விடுவாள் என்று மாத்திரம் தான் கூறி இருந்தார் அசோக்.
 
“அன்னைக்கி நைட் அப்பா ஏன் அப்படி பேசினார்னு அம்மா கிட்ட போய் கேட்டேன். அப்பா வேற ஒரு பொண்ண விரும்பியதாகவும். அதான் உன் அம்மா. அவங்க விட்டுட்டு போனதுல மனசோடஞ்சி இருந்தவருக்கு வீட்டுல வேற கல்யாணம் பண்ணி வச்சதாகவும், பெரியம்மா வேற ஒருத்தங்களை விரும்பியதால் அவங்களுக்கு மணவிலக்கு கொடுக்க காத்துட்டு இருந்த நேரத்துலதான் அம்மா கூட தொடர்பு ஏற்பட்டுச்சாம்.
 
என்ன காரணம் காட்டி நடந்ததெல்லாம் உனக்கு தெரியுமே! அஜித்தோட அப்பா சரியில்லையாம். குடிச்சிட்டு வண்டியோட்டி தன்னோட குடும்பத்தையே ஆக்சிடன்டுல கொண்டுட்டாராம். தப்பினது அஜித் மட்டும் தானாம். அதனால் பாட்டி எல்லா சொத்தையும் அப்பா பேர்ல எழுதி குடும்பத்துல மூத்த வாரிசுக்கு பாதி சொத்துக்கு மேல கொடுக்க சொல்லிச்சாம்.
 
எனக்கென்னமோ அஜித் அப்பாவை கடத்தி சொத்தை எழுதி வாங்க பாக்குறான்னு தோணுது. அப்பா எழுதி கொடுக்க மாட்டாருன்னு. அம்மாவையும் சேர்த்து கடத்தி இருப்பான்னு தோணுது”
 
அஜய் சொல்லும் கதையை முற்றிலும் நம்பியவளாக காஜல் வாய் திறந்து பாத்திருக்க,
 
“இவன் சினிமா எடுத்தா நல்லா ஓடும்” என்று எண்ணினாள் மதி.
 
தந்தை சமேலி அஜித்தை ஏதாவது செய்து விடுவாள் என்று பயந்தற்கும், அஜய் சொல்லும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அசோக் பயப்படுகிறார் என்றால் அஜித்தின் பெயரில் ஏகப்பட்ட சொத்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான் அக்ஷய்.
 
 
“அப்போ நீ சொல்லுற மாதிரி, அன்னைக்கி ராத்திரி நீயும் உங்கம்மாவும் பேசுறத கேட்ட அஜித் அப்பாவை கடத்த திட்டம் போட்டிருக்கிறான். சந்தர்ப்பம் பார்த்து கடத்தினவன். வீட்டுக்கு வந்து உங்கம்மாவையும் கடத்தி இருக்கான். இல்லையா? நம்ம வீட்டுலதான் சீசீடிவி இருக்குமே வா பார்க்கலாம்” என் வீட்டில் சீசீடிவ் இல்லை என்று திட்டினியே இப்போ இருக்கு உனக்கு என்று அக்ஷய் அஜய்யை பார்க்க,
 
அஜித் தப்பி செல்லும் பொழுது அன்னையை கடத்தி இருந்தால் அனைத்தும் சீசீடிவியில் பதிவாகி இருக்கும் என்று கருதியவன் அதை பார்வையிட சென்றான்.
 
ஆனால் அக்ஷய் வந்து மதியை அழைத்து சென்ற பிறகு நடந்த எதுவுமே சீசீடிவியில் பதிவாகி இருக்கவில்லை என்பதுதான் அஜய்யை புருவம் சுருக்க வைத்தது.
 
அஜித் கட்டுக்களை கழற்றிக்கொண்டு சீசீடிவியை ஆப் பண்ணி இருந்தால் கூட அவன் ஏதாவது ஒரு கேமராவில் தெரிந்திருப்பான். அவன்தான் எங்குமே இல்லை. இது எப்படி சாத்தியம் என்று மண்டையை குடைய, யாரோ சீசீடிவியை ஆப் பண்ணி இருக்கிறார்கள் என்று அக்ஷய் அஜய்க்கு காட்டினான்.
 
வீட்டில் இருந்தது சமேலி மட்டும் தான். அவள்தான் ஆப் பண்ணி இருக்க வேண்டும். “ஆனால் ஏன்” என்ற கேள்வி எழ தான் அசோக்கை கொல்ல அக்ஷையின் வீட்டுக்கு சென்ற நேரம் பார்த்து உதித் அன்னையை சந்திக்க, வந்திருக்க வேண்டும். அவன் வந்ததால்தான் அன்னை சீசீடிவியை ஆப் பண்ணி வைத்தாளோ என்ற சந்தேகம் எழும்ப, அவன் கண்ணில் கீறல் விழுந்து அணைந்து போன அன்னையின் அலைபேசி தென் பட அவன் மூளை அவனுக்கு வேறு விதமான சிந்தனைகளையும் கொடுத்தது.
 
அது உதித் அன்னையையும், அஜித்தையும் கடத்தி தன்னை மிரட்டி பணம் பறிக்க என்ன கூடும் என்று சொல்லியது.