Advertisement

ஜீவ தீபங்கள் -33(pre final)

அத்தியாயம் -33(1)

வேலையை இராஜினாமா செய்து விட்டு இங்கேயே வந்து விட்டான் வருண். இப்போது பாலனுக்கு பெருமளவு வேலைப் பளு குறைந்து விட்டது.

முதலில் வருணை வாட்டி வதைக்கத்தான் செய்தாள் சௌமியா. பொறுமையாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டான் வருண். நாட்கள் போக போக சௌமியாவும் பழைய விஷயங்கள் பேசுவதை விட்டு விட்டாள்.

சௌமியா அவளது பெற்றோரை பொது இடங்களில் மட்டுமே சந்திக்கிறாள். பிரகதீஸ்வரி அத்தைக்கு அவர்கள் செய்த அநீதியை சுட்டிக் காட்டவும் தவறவில்லை.

“என் பேச்செல்லாம் எடுபட்ருக்குமா?” என அனுசுயா கேட்க இளங்கோவனோ, “சின்ன வயசு வைத்திக்கு, உன் மாமியாரை விட்டுட்டு தனியா அழைச்சிட்டு போக நினைக்கல சுந்தரி, அது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்” எனதான் சொன்னார்.

“ஒரு வேளை எனக்கும் அத்தை நிலை வந்தா என் புருஷனும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கும் இப்படித்தான் சொல்வீங்களா ப்பா?” எனக் கேட்டாள் சௌமியா.

“சேச்ச இந்த நிலைல ஏம்மா இப்படி அபசகுணமா பேசுற?” என கடிந்து கொண்டார் இளங்கோவன்.

“உங்க எண்ணம்லாம் எப்பவுமே மாறப் போறது இல்ல” என சலித்து கொண்டாள். புரிந்து கொள்ளாதவர்களிடம் சக்தி கொடுத்து பேசி என்ன பிரயோஜனம்?

இனியாவை இன்னும் மனதளவில் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறான் சபரி. பொறுத்து பார்த்தவள் ஒரு நாள் பிறந்த வீடு சென்று விட்டாள். காரணத்தை சொல்லாமல் இனி செல்ல மாட்டேன் என அழுது கொண்டே கூறியவளை திட்டி மீண்டும் புகுந்த வீட்டில் விட்டு விட்டார் இளங்கோவன். இதில் மகள் தவறு செய்து விட்டாள் என மாப்பிள்ளையிடம் மன்னிப்பு வேறு.

நெடுமாறனுக்கு மூன்று மகன்கள், திருமணம் முடியவும் அனைவரையும் தனித் தனியாக வைத்து விடுவது என முன்னரே முடிவு செய்து மூத்த மகனையும் சபரியயும் தனியாகத்தான் குடும்பம் செய்ய வைத்திருந்தார். கடைக்குட்டி மகனுடன் அவரும் அவரது மனைவியும் இருக்கின்றனர்.

விஷயம் கேள்விப்பட்ட நெடுமாறன் தன் மகனிடம் என்னவென விசாரிக்க சாதாரண சண்டை என மட்டும் சொன்னான். அவரும் ஏதோ சிறு பிரச்சனை என நினைத்து அமைதியாக இருந்தார்.

மன உளைச்சலுக்கு ஆளான இனியா தன்னில் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இளைத்து போக ஆரம்பித்தாள். அவள் முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அரிதாகி விட்டது.

வார்த்தைகளால் சபரி செய்யும் மனக் கொடுமை யாருக்குமே தெரிய வரவில்லை.

உத்ரா கைபேசியில் ஏதோ பார்த்து யோசனையாக இருக்க, கைபேசியை வாங்கிய ஆதவன், “என்னை கொஞ்சாம இது கூட என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டு அதை தூரமாக வைத்தான்.

“போன மாசம் எப்போ பீரியட்ஸ் ஆச்சுன்னு தெரியலை, மறந்து போச்சு” என சோகமாக சொன்னாள்.

“என்ன… சௌமியா, பிரியா ரெண்டு பேரும் ப்ரெக்னன்ட்ங்கவும் உனக்கும் ஆசை வந்திடுச்சா?”

“ஏன் வரக்கூடாதா?”

“அந்த ஆசை இவ்ளோ சீக்கிரம் வர வேணாம். உனக்கு நாள் தள்ளிப் போகல. உன்னை பத்தி எதுவும் தெரியணும்னா என்கிட்ட கேட்காம எதுக்கு போன்கிட்ட கேட்டுட்டு இருக்க?”

“நிஜமா?”

“அந்த நாட்களை மறக்க முடியுமா?” ராகம் இழுத்தான் ஆதவன்.

“ஆனா ஏன் இப்படி ஆகுது? எதுவும் பிரச்சனை இருக்காதே எனக்கு?”

“சில்லியா இருக்கு நீ கேட்குறது. ரிலாக்ஸா இரு” என அவன் சமாதானமாக சொல்லியும் அவள் ஒரு மாதிரியாகத்தான் இருந்தாள்.

யோசித்தவன், “அம்மா எதுவும் சொன்னாங்களா?” என விசாரித்தான்.

அவள் பதில் சொல்லாமல் இருக்க, “அவங்க சொல்றதுக்காக எல்லாம் உடனே புள்ள பெத்துக்க முடியாது. இந்த மன்த் எண்ட் மாலத்தீவு போறோம். ஜல்ஸா பண்றோம்” என்றான்.

அவள் முகம் சுளிக்க, “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்வாங்க அது உண்மையாடி உத்ரா? நான் அலுத்து போயிட்டேனா?” என பொய்யாக அழுது இல்லாத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டான்.

“எரிச்சல் பண்ணாதீங்க” மாமியார் மீதுள்ள கடுப்பில் கணவனிடம் காய்ந்தாள்.

“நான் எங்க எச்சில் பண்ணினேன்?”

அவள் முறைக்க, “ஓ அப்படி சொல்லலியா நீ?” கேட்டுக் கொண்டே தன்னிடம் இழுத்து வைத்துக்கொண்டு சமாதானம் செய்தான். அவளுக்கு கண்கள் கலங்க, “எப்பவும் திருப்பி பேசிடுவதானே? இதென்ன புதுசா?” என கடிந்தான்.

“மனசு நல்லாருந்தாதான் நல்லது நடக்குமாம்” என சொல்லி தேம்பினாள்.

“அப்போ குழந்தை இல்லாதவங்கலாம் கெட்டவங்களா? அவங்க சொல்றதை சீரியஸா எடுத்து அழுதா அவங்க சொல்ற கருத்தை நீயும் அக்செப்ட் பண்ற மாதிரி ஆகிடும்”

“ஒரு வேளை எனக்கு எதுவும் பிரச்சனைனா?”

“நமக்குள்ள இடைவெளி இல்லாமலே போய்டும்” என சொல்லி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வலிக்காமல் கடித்து விட்டான்.

“என்ன சொல்ல வர்றீங்க?”

“ஆமாம் குழந்தை வந்தா நமக்கு இடையில படுக்க வச்சுப்பதானே?”

“ஏன் உங்களுக்கு ஆசை இல்லையா?”

“இருக்கே நிறைய இருக்கே…” அவளது இடையில் கை கொடுத்து வளைத்த வண்ணம் மயக்கமாக சொன்னான்.

“இந்த ஆசைய கேட்கல, விடுங்க” சிணுங்கினாள்.

அவனும் விலகி இயல்பான குரலில், “இன்னும் கொஞ்ச நாள் என்ஜாய்டா ஆதவான்னு காட் பிளெஸ் பண்ணியிருக்கார் என்னை. அதனால அது போக்குல விடு. இப்போ ரிலாக்ஸா வெளில போயிட்டு வரலாம்” என சொல்ல, அவளும் அவனுடன் கிளம்பி விட்டாள்.

 துர்கா ஏதாவது உத்ராவை சொன்னால் ஆதவன் கேட்கிறான்தான். அதற்கும் உத்ராதான் காரணம் என மருமகளையே குறை சொல்ல அவரிடம் கேட்பதை நிறுத்தி விட்டான். உத்ரா மாமியாருக்கு திருப்பிக் கொடுத்தாலும் ஏன் அம்மாவை பேசுகிறாய் என அவளிடமும் கேட்டுக் கொள்வதில்லை.

கோயில் சென்று விட்டு இரவு உணவுக்காக ஓட்டல் சென்றனர். அங்கு சுதாவை கண்டவன் திரும்ப சென்று விடலாம் என சொல்ல உத்ரா மறுத்து விட்டாள்.

“முன்னாடி நமக்குள்ள இருந்த நிலைமை வேற. இப்போ வேற. எங்கேயாவது பார்த்துக்கிற மாதிரி வரும்தான், நீங்க பேசுறதுன்னா கூட பேசுங்க. எனக்கு பிரச்சனை இல்லை” என கூறி விட்டாள்.

அவர்களை கண்டு விட்டு சுதா முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளது கைபேசி எண்ணை ஆதவன் பிளாக் செய்த பிறகும் அவனுடன் மீண்டும் போய் பேசுவதற்கு அவளது சுயமரியாதை இடம் தரவில்லை.

மேற்படிப்பு பயில எழுதிய தேர்வில் வெற்றி கிட்டவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என முயன்று கொண்டிருக்கிறாள். ஆதவனை விட அனைத்து வகையிலும் உயர்வான ஒருவனை மணந்து கொண்டு ஆதவனை பொறாமை பட வைக்க வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

“என்ன போய் பேசலையா அவகிட்ட?” எனக் கேட்டாள் உத்ரா.

“நான் அவகிட்டேர்ந்து தள்ளி இருக்கிறது கூட அவளுக்கு செய்ற நல்லதுதான். நீ என்ன சாப்பிடுற சொல்லு?” என ஆதவன் கேட்க மெனு பார்த்து சொன்னாள் உத்ரா.

ஆதவன் இப்போதும் ஏதாவது விஷயத்தில் உத்ராவிடம் திடீரென கோவப்படுகிறான்தான். ஆனால் அவன் அமைதியடைந்த பின் தானாக வந்து சமாதானம் செய்வான். உடனே எல்லாம் உத்ரா சமாதானம் ஆவதுமில்லை, கோவத்தில் சத்தமிடுவதும் இல்லை. அவனுடன் பேசாமல் மௌன விரதம் இருப்பாள். அதற்காகவே தன் கோவத்தை அவசரக்கார தனத்தை எல்லாம் குறைக்க முயன்று கொண்டிருக்கிறான்.

சௌமியாவுக்கு மண்டபத்தில் வளைகாப்பு நடந்தது. கட்டளையாக தன் பெற்றோர் மற்றும் இனியா குடும்பம் மட்டும்தான் வர வேண்டும் என கூறியிருந்தாள். அதெப்படி அனைவரையும் அழைத்து வருவேன் என இளங்கோவன் பிடிவாதம் செய்ய அப்படியென்றால் நீங்களும் வரவேண்டாம் என கோவத்தில் சௌமியா கூற வீம்பு கொண்டு அவரும் வரவில்லை.

கரண், நரேஷ் இருவரும் சௌமியாவுக்கு அழைத்து வருத்தப்பட்டனர். “நடந்தது சரிதான்னு மனசாட்சி தொட்டு நீங்களே சொல்லுங்க?” எனக் கேட்டு அவர்கள் வாயை அடைத்து விட்டாள்.

நெடுமாறன் அவர் குடும்பத்தோடு வந்திருந்தார். இனி என் கடைப்பக்கம் உன்னை பார்க்க கூடாது என பாலன் கூறி அனுப்பியதற்கு பின் வெகு காலம் கழித்து இன்றுதான் இனியா அவனை நேரில் பார்க்கிறாள். சபரி உறுமலாக மனைவியை பார்த்துக் கொண்டிருக்க இனியா அசௌகரியமாக அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்காத காரணத்தால் வளைகாப்பை விமரிசையாகவே செய்தான் பாலன்.

மரியாதை நிமித்தமாக நெடுமாறனிடம் பாலன் பேச அவர் தன் மகனையும் பேச்சின் இடையில் இழுத்து விட்டார். வரும் போதே பாலனிடம் நட்போடு இரு என மகனிடம் அறிவுறுத்தியே அழைத்து வந்திருக்க சபரியும் கடமையாக பேசினான். இனியாவுக்கு ஏற்பட்ட அதீத பயத்தின் காரணமாக மயங்கி விழுந்து விட்டாள்.

சற்று நேரம் அங்கே சிறு சல சலப்பு. அவள் கண் விழித்ததும் அறைக்கு சென்று ஓய்வெடுக்க சொல்லி அனுப்பி வைத்தனர். உடன் சபரியும் இருந்தான். மருமகளை காண நெடுமாறனும் அவரது மனைவியும் வர இனியாவை திட்டிக் கொண்டிருந்தான் சபரி. திகைத்துப் போன இருவரும் அங்கே எதுவும் சொல்லாமல் சத்தமில்லாமல் திரும்பி விட்டனர்.

விஷேஷம் முடிந்து வீடு வந்த பின் மகனை தனியே அழைத்து விசாரித்தனர். அவன் விஷயத்தை சொல்லி ஆதங்கம் கொள்ள, “உன்கிட்ட அந்த விஷயத்தை சொல்ற அளவுக்கு இனியாவோட நம்பிக்கையை சம்பாதிச்ச நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு புரியுதா?” என கடிந்து கொண்டார் நெடுமாறன்.

“அவ கல்யாணம் முன்னாடியே சொல்லியிருக்கணும் என்கிட்ட” என கோவமாக சொன்னான் சபரி.

“கல்யாணம் அப்புறமும் சொல்லலைனா உனக்கு தெரிஞ்சிருக்குமா? இல்லைதானே?” எனக் கேட்டார் சபரியின் அம்மா.

“அவளுக்கு சப்போர்ட் பண்றீங்களா?” அம்மாவிடமும் கோவம் கொண்டான்.

“இன்னும் என்ன தப்பு செய்றோம்னு உனக்கு புரியலை. உன் பின்னால திரும்பி பார்த்துகிட்டே கண்ணுக்கு முன்னாடி இருக்க வாழ்க்கைய சிதைச்சுக்கிட்டு இருக்க. பண்ற தப்பு நீ உணரு, அது வரைக்கும் மருமகள எங்களோட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொல்லி விட்ட நெடுமாறன் அத்தோடு நிற்காமல் கையோடு அழைத்தும் சென்று விட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement