செவ்வானில் ஒரு முழு நிலவு 1

10127

அத்தியாயம் 1

கள்ளக்குறிச்சியின் பெயர் போன அந்த பண்ணை வீட்டில் அதிகாலை வேளையிலையே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி. கோலம் போடுவது அவள் அன்றாடம் செய்யும் வேலைதான் ஆனால் பார்க்கும் இடம் தான் மாறிப்போய் இருந்தது. அதை பற்றி சிந்திக்க தோன்றாமல் வீட்டார் எழுந்துகொள்ளும் பொழுது அனைவருக்கும் காபி போட்டு வைக்க வேண்டும் என்ற சிந்தனையிலையே கோலத்தை போட்டு முடித்தவள் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
 
 
“இன்னைக்கும் அதிகாலையிலையே எந்திருச்சு கோலம் போட்டிட்டியாமா? இந்த வேலையெல்லாம் பண்ண தான் இந்த வீட்டு வேலைகாரங்க இருக்காங்க. உன்ன இந்த வேலையெல்லாம் பார்க்க வேணாம்னா கேக்க மாட்டீங்கிரியே” வேதநாயகி ஆதங்கமாக சொல்லியவாறே தனதறையிலிருந்து வெளிப்பட
 
வளமை போல் அவருக்கு எந்த பதிலையும் சொல்ல தோன்றாமல் புன்னகை மட்டும் செய்தவள் சமமயலறைக்குள் புகுந்துகொள்ள, பூஜையறைக்கு சென்றார் வேதநாயகி.
 
“ஈஸ்வரா இந்த குழந்தை மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்? சொந்த வீட்டில் அந்நியன் போல், சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என்பவளை என்ன செய்வது? நீதான் அவளுக்கு அருள் புரிந்து நல்ல வழிய காட்டணும்” வழக்கம் போல் பார்க்கவிக்காக முதலில் வேண்டிக் கொண்டவர் கடவுளை வணங்கி விட்டு வெளியே வர அவருக்கான காபி கப்போடு நின்றிருந்தாள் பார்கவி.
 
அதை பெற்றுக்கொண்டவர் அவளையும் தன் அருகில் அமர்த்திக்கொள்ள, அமைதியாகவே அவர் அருகில் அமர்ந்து தன் காபியை அருந்தலானாள்.
 
 மருதநாயகம் இந்த ஊரின் மதிப்புக்குரிய பண்ணையார். ஊரில் ஏக்கர் கணக்கில் வயல் வரப்புகளையும், கரும்புத் தோட்டங்களையும் மட்டுமல்லாது, மூன்று அரிசி ஆலைகளையும், ஐந்து கரும்பு ஆலைகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இன்னும் பல தொழில்களையும் பார்ப்பவர். ஊரில் எந்த பிரச்சினை என்று வந்தாலும் முன் நிற்பவர். அழைக்காமலையே மூக்கை நுழைபவர். ஜாதி வெறி பிடித்த மனிதர். தனது ஜாதிக்கு ஒன்றென்றால் இந்த வயதிலும் அருவாளை கையில் எடுத்து எத்தனை பேரின் உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்.
 
மருதநாயகம் தயாராகி வெளியே வரவே அவருக்கு காபியை கொடுக்க எழுந்து சென்றாள் பார்கவி. அவர்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. யாருக்கு என்ன பிடிக்கும் என்பதை வந்த இந்த இரண்டு மாதங்களுக்குள் புரிந்து நடந்து கொள்பவள்தான் பார்கவி.
 
மருதநாயகத்தின் மனைவி வேதநாயகி. அன்பான குடுபத்தலைவி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து விட்டவர். அதற்காக பிறந்த வீட்டு பாசம் இல்லாமல் போய் விடுமா? ஒரே அண்ணனின் இறப்பும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களால் நிலை குலைந்தவர், கணவன் சொல்லியபடியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் கடந்த பின்தான். தன்னை மீட்டுக்கொண்டு தன்னை சுற்றியும், குடும்பத்திலும் என்ன நடக்கிறது என்ற கேள்வியே அவருள் உருவானது. அது பார்கவியின் வரவால் ஆரம்பமானது.  
 
 
மருதநாயகம் – வேதநாயகி அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்தவன் தங்கதுரை, அவன் மனைவி காதம்பரி, அவர்களுக்கு ஒரு மகன் ஹரிஹரன்,  ஒரு மகள் ஹரிணி. இரண்டாவது மகன் விக்னேஸ்வரன், அவன் மனைவி உமையாள், அவர்களுக்கு ஒரு மகன் மாதேஷ்.
 
 ஒரே மகள் வேற்று சாதி ஒருவரை திருமணம் செய்து வீட்டை விட்டு சென்று விட்டாள் என்றும் இத்தனை வருடங்களாக தேடியதில் அவர்கள் இறந்து விட்டதாகவும், அவளுடைய மகள் தான் பார்கவி இத்தனை வருடங்கள் கடந்த பின்தான் அவளை தேடி கண்டு பிடித்து அழைத்து வந்திருப்பதாகவும், பெற்ற மகளை கொன்றிருப்பேன் பேத்தியை ஒன்றும் பண்ண முடியவில்லை பாசம் கண்ணை மறைத்து விட்டது என்று மருதநாயகம் எல்லோரிடமும் சொல்லி வைத்திருக்கிறார்.
 
 
பார்கவி பெயருக்கு ஏற்றது போல் எந்த ஒரு செயலையும் நிதானமாக, திறமையாக, கவனமாக செய்பவள். அவள் போடும் கோலங்களின் நேர்த்தியே அதை பறைசாற்றும். பார்க்க சாந்தமான புன்னகையோடு அமைதியே உருவானவள். அதிகம் பேசாதவள். தேவையான இடத்தில் தேவையின் போது பேசும் புத்திசாலியும் கூட. அவளின் அங்க அடையாளமாக வலது பின் கழுத்தில் கட்டைவிரல் ரேகை போல் ஒரு மச்சம் காவி நிறத்தில் இருக்க அவளின் நீண்ட கூந்தலால் அது மறைந்தே காணப்படும்.
 
 
வேதநாயகிக்கு ஜானகியின் மகள் பார்கவி என்ற ஒன்றே அவள் மீது கண்மூடித்தனமான பாசம் வைக்க போதுமானதாக இருந்தது.
 
பார்கவி ஒரு பிராமண பெண்ணாக வளர்ந்ததும், அந்த கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதும் கூட அவருக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. அவள் அவர்களோடு ஒன்றாமல் தனித்து விலகி இருப்பதுதான் வேதனையளித்தது. சொன்னாலும் கேட்காமல் அத்தனை வேலையையும் பார்பவளை கடியவும் முடியாமல் அவள் போக்கில் விட்டு விட்டார். 
 
பார்கவி பிறந்து வளர்ந்தது பிராமண குடும்பத்தில் அதனால் இவர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். வேதநாயகின் அன்பால் குடும்பத்தை அனுசரித்தவள் காதம்பரியிடம் சிக்கிக் கொண்டு அல்லல் படுவதும் உண்டு.
 
 
காதம்பரியை சொத்துக்காகவும், உமையாளை சொந்தம் விட்டுப் போகக்கூடாதென்றும் மருமகளாக்கி இருந்தார் மருதநாயகம். குடும்பத்தில் எல்லா முடிவையும் அவரே எடுப்பார். அவர் வைப்பதே சட்டம்.
 
 
அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நேரத்தில்  திருமணம் நடந்திருக்க, முதலில் கருவுற்றது உமையாள் என்பதால் அவளை குடும்பமே கொண்டாட, அதே போல் அவளும் ஆண் குழந்தையை தலைவாரிசாக பெற்றெடுக்க அவள் மேல் அமில மழையாய் பொழியலானாள் காதம்பரி.
 
 
தன்னுடைய சொத்து, சுகங்களினாலையே காதம்பரி மாமனாரை தவிர யாரையும் மதிக்கமாட்டாள் . அதற்காக வேதநாயகியை கண்டபடி பேசுபவளல்ல. யாரை எங்கே? எப்படி வைக்க வேண்டும் என்று மருதநாயகத்துக்கே புத்திமதி சொல்பவள். கல்யாணமாகி வந்து ஒரு மாதத்திலையே வீட்டு சாவிக்கொத்தை கைப்பற்றினாள்.
 
 
உமையாள் கொஞ்சம் பார்கவியிடம் கருணை காட்டினாலும், காதாம்பரியின் முன்னால் எதுவும் பேச தயங்குவதால், பார்கவிக்கு அந்த வீட்டின் வேலைக்காரியின் நிலைமைதான்.
 
 
மருதநாயகத்து காபியை கொடுத்தவள் காலை உணவை தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். அந்த வயதானவர்களோடு மட்டும்தான் அவள் சகவாசம். மற்றவர்களுக்கு சேவகம் செய்ய அவள் முனைவதில்லை. யாராவது அவளிடம் கேட்டால் கூட வேலையாட்களை அனுப்பி விடுவாள்.
 
காதாம்பரி ஏவினாலும் அவ்வாறே! திட்டு வாங்கினாலும் அவர்களின் பக்கம் தலை வைத்தும் நிற்க கொஞ்சம் கூட பார்கவிக்கு இஷ்டமில்லை. வீட்டின் மற்ற உறுப்பினர்கள் விழித்தாள் அவர்களுக்கு சேவகம் செய்வது வேலையாட்கள் பார்த்துக்கொள்வார்கள்.
 
உமையாள் போலவே மாதேஷும் அவளை ஆதரிக்க தாத்தாவிடம் பேசி, அப்பா, பெரியப்பாவிடம் போராடி அவளை கல்லூரியில் சேர்த்திருந்தான்.
 
 
இங்கு வரும் போது கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தவள் தான் பார்கவி. தந்தையின் திடீர் மரணம், அன்னையின் உடல்நலக் குறைவு, புது உறவுகளின் திடீர் வருகை என நிலைக்குலைந்தவள் எதையும் சிந்திக்கும் நிலையில்லாமல் இருக்க, படிப்பை பற்றி எங்கே சிந்திப்பாள்.
 
அன்னையின் மருத்துவ செலவை தாத்தா மருதநாயகம் பொறுப்பேற்று தாதியொருவரை நியமித்து சென்னையில் மருத்துவம் பார்க்க, நிம்மதியாக இங்கு மருதநாயகத்தோடு வந்தவள்தான்.  அதன்பின் அன்னையை சென்று பார்க்கவும் இல்லை. பார்க்க வேண்டும் கேட்கவும் இல்லை.
 
அன்னையை பார்க்க வேண்டும், அவளோடு இருக்க வேண்டும், அவளுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவள் மனதில் ஆசைகள் இருந்தாலும், அவளுடைய தற்போதைய சூழ்நிலை அவள் இங்கே இருந்தே! ஆகா வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை.
 
வேதநாயகி, உமையாள், மாதேஷ் தவிர அந்த வீட்டில் பார்கவியை உயிருள்ள ஜீவனாக மதிப்பவர்கள் யாரும் இலர். வேலையாட்களுக்கு அவள் மேல் அனுதாபம் இருந்தாலும் அவளோடு வாய் திறந்து பேசவே அஞ்சினர்.
 
 
வேதநாயகியும், உமையாலும் கணவனுக்கு அடிபணிபவர்கள் ஆதலால் பார்கவி விஷயத்தில் மாதேஷ் மட்டும் தான் பேச முடியும். பல நேரம் “இவர் எதுக்கு பேசியே பிரச்சினையை உண்டுபண்ணுறார்” என்றே பார்கவிக்கு எண்ணத் தோன்றும்.
 
 
அந்த வீட்டில் அவள் வேலை செய்தே ஆகா வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அசைவத்தை முகர்ந்து கூட பார்காதவள் தான் சாப்பிட சுத்தமான சைவத்தை சமைத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்க மற்றவர்களுக்கும் சேர்த்தே சமைக்கலானாள். காலேஜுக்கு அதையே கொண்டு செல்பவள். சில வேலைதான் காலேஜில் சாப்பிடுவாள்.  அசைவம் மட்டும் அந்த வீட்டு சமையல்காரி பொன்னம்மா பார்த்துக்கொள்கிறாள்.
 
 
அதன் பின் காலேஜ் கிளம்பி செல்பவள் மாலை வீடு வந்தால் இரவு உணவுக்கு ஏதாவது செய்து கொண்டு தனதறையில் தஞ்சமைடைவாள். வேதநாயகி, உமையாள் உடன் கூட அதிக பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள தயங்கினாள். அவர்கள் வந்து பேசினால் நின்று பதில் சொன்னாள். அவள் வந்த நோக்கம் நிறைவேறிய பின் அவள் இங்கிருந்து சென்று விட வேண்டும் அல்லவா. அப்படி செல்லும் பொழுது பாசம் என்ற போர்வையில் சிக்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை.
 
 
சமவயதில் இருக்கும் ஹரிணி பார்கவியைக் கண்டாலே முகம் திரும்புவதும், குத்தல் பேச்சுக்களும் பேச அவளிடம் மாத்திரமன்றி ஒட்டு மொத்த குடும்பத்தாரிடமிருந்துமே ஒதுங்கி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்க பழகிக் கொண்டாள்.
 
ஆனால் ஹரிஹரனின் பார்வை உரிமையாக அவள் மீது படியும் போது உள்ளுக்குள் குளிரெடுத்து நடுங்குவாள். அவன் தோற்றமும், பெரிய மீசையும், கழுத்தில் பெரிய சங்கிலியும், நடை உடை பாவனை யாவும் சினிமா வில்லனை போல் எண்ண தோன்றும்.
 
 
பெற்றோருக்கு அவளை தவிர குழந்தைகள் இல்லை. அதற்காக ஆண்களோடு பழகாதவளும் அல்ல. அக்கம், பக்கம் அனைவரிடமும் பாசமாக பழகியவள் தான். ஹரிகரனின் ஊடுருவும் பார்வை உடையையும் தாண்டி உடலை கூறுபோடுவது போல் தோன்ற அவள் மனதில் சொல்ல முடியாத அச்சம் பரவும்.
 
பார்கவி வந்த அன்றே அவன் பார்வையின் மாற்றத்தை நன்கு உணர்ந்து கொண்டவள் எக்காரணத்தைக் கொண்டும் ஹரிஹரன் அவளை நெருங்காமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் எத்தனை நாள் தான் அவள் அவளை பாதுகாப்பள்.
 
மாடியிலிருந்து இறங்கிய ஹரிஹரனின் கண்கள் பார்கவியைத்தான் தேடியது. “ஒரே வீட்டில் இருக்கிறோம் என்று தான் சொல்லிக்கொள்ள வேண்டும். பார்க்க கூட முடியவில்லை இந்த மாமிய. அத்த பொண்ணுன்னு உரிமை இருந்து என்ன பிரயோஜனம்? கண்ணுல கூட சிக்காம கண்ணாமூச்சி ஆடுறா. இருக்கு டி உனக்கு. எங்க போயிட போற? ஒருநாள் இல்ல ஒருநாள் வசமா மாட்ட போற அப்போ அமுக்குறேன் கோழி அமுக்குற மாறி” கருவியவன் சாப்பாட்டறையை நோக்கி நடந்தான்.
 
ஹரிஹரன் தந்தையோடு கரும்பு ஆலைகளை கவனிக்க செல்வதாலும், பார்கவி மாதேஷோடு காலேஜ் சென்று வருவதால் ஹரிஹரனால் பார்கவியை நெருங்க முடியவில்லை. ஹரிணி இவர்களோடு வராமல் தனியாக  காரில் சென்று வருகிறாள்.
 
தினமும் மூன்று வேலையும் அசைவம் பரிமாறப்படுவதைக் காரணம் காட்டி அவர்களோடு சாப்பாட்டு மேசையில் அமர்ந்து உண்பதை மறுத்தவள் சமயலறையிலையே உண்ண பழகிக் கொண்டாள். அவள் நிலையை உணர்ந்துக் கொண்ட வேதநாயகியும் அவளை அவள் போக்கிலையே விட்டுவிட்டார். அது ஹரிஹரனை தவிர்க்க அவளுக்கு பெரிதும் உதவியது. இல்லையாயினும் காதம்பரியும், ஹரிணியும் அவளை விட்டுவிடுவார்களா என்ன?
 
“அம்மா அந்த தயிர் சத்தம் இன்னும் எத்தனை நாளைக்கு இங்க தங்குவா?” உணவை அள்ளி வாயில் வைத்த படி அன்னையிடம் முணுமுணுத்தாள் ஹரிணி
 
“அமைதியா சாப்பிடு ஹரிணி. பாட்டி காதுல விழுந்தா வீண் பிரச்சினை” காதம்பரி மகளை அதட்ட
 
“அவ வீட்டு வேலைகளை செய்யுறேன் என்ற சாக்குல பாட்டி மனசுல இடம் புடிச்சிட்டா. வீட்டு பொறுப்பையும் கொஞ்சம் கொஞ்சமா கைப்பற்றிக்கொண்டுதான் இருக்கிறா. உனக்குத்தான் புரிய மாட்டேங்குது. நாளைக்கு மாதேஷ் அண்ணனை கல்யாணம் பண்ணிகிட்டான்னு வை. அவ ராஜ்ஜியம்தான் இந்த வீட்டுல செல்லும். உன் நிலைமை கவலைக்கிடம்தான். அம்மாஞ்சி மாதிரி இருக்காளேன்னு நினைக்காதே! எப்போ அந்நியன் அவதாரம் எடுப்பாளோ தெரியாது. பாத்து சூதானமா நடந்துக்க” அன்னைக்கே புத்திமதி சொல்லி தான் காதம்பரியின் வாரிசு என நிரூபித்தாள் ஹரிணி.
 
காதம்பரிக்கும் அதே எண்ணம்தான். மாதேஷ் பார்கவியின் மீது செலுத்தும் அதீத அன்பு தான் அவள் பார்கவியை வெறுக்க போதுமானதாக இருந்தது. தன் மகனை பார்க்க அவன் கண்களும் பார்கவியின் பக்கம் இருப்பதை புரிந்து கொண்டவள் பார்கவியை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாமா? என்று நொடியில் தோன்ற “சி சி இவ எனக்கு மருமகளா? இவள இந்த வீட்டை விட்டே துரத்த வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தாள்.  
 
அந்த வீட்டின் இளவரசியாக வலம்வர வேண்டியவளுக்கு மாடியில் வேதநாயகி அறையொதுக்க அந்த விசாலமான அறை ஹரிஹரனின் அறையை ஒட்டி இருப்பதினாலையே மறுத்தவள் வேதநாயகியின் அறையோடு இருந்த சிறிய அறையை பல காரணங்கள் கூறி பெற்றுக் கொண்டாள். இவ்வாறுதான் இந்த வீட்டில் அவள் நாட்கள் நகர்கின்றன.
 
 
வண்டியில் ஏறி அமர்ந்த உடனே “அப்பா… இந்த பார்கவி பொண்ண எதுக்கு கூட்டி கிட்டு வந்தீங்க? என்ன சொல்லி கூட்டிக்கிட்டு வந்தீங்க?” விக்னேஸ்வரன் கடுப்பாக கேட்க
 
“என்னடா உன் பிரச்சினை?”  மருதநாயகம் அமைதியாக பின் இருக்கையில் இருக்க வண்டியை ஒட்டியவாறு தங்கத்துறைதான் தம்பியை கேட்டான்
 
“பூர்வீக சொத்து ஜானகி பேர்ல இருக்கு அவ செத்து போய்ட்டா… அவ பொண்ணு பார்கவி வந்தா அத மீட்டுடலாம்னு தானே கூட்டிட்டு வந்தீங்க?”
 
“ஏன் டா… ” பொறுமையை இழந்தார் மருதநாயகம்
 
 
“அவன் சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு? ஓடிப்போன நாயி… அவ பேர சொல்ல கூட எனக்கு பிடிக்காது. சொத்தை காப்பாத்தணும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நீங்க சொன்னதை ஒத்துக்கிட்டு அந்த பொண்ண கூட்டிகிட்டு வந்தேன்” தங்கதுரையும் ஒத்தூத.
 
இந்த விஷயத்தில் மட்டும் அண்ணன் தம்பி இருவரும் ஒன்று கூடி விடுவார்கள்.
 
 
“ஏன் டா… என் மச்சான் அந்த இருநூறு ஏக்கர் நிலைத்த அடமானம் வச்சு ஊருக்கு நல்லது செய்வாருன்னு நான் என்ன கனவா டா கண்டேன்? அத வேற ஜானகி பேர்ல எழுதி வச்சி இருக்குறாரு. அவர் செத்த பிறகு வட்டி குட்டிமேல குட்டிபோட்டு கடன் கொடுத்தவன் கேஸ் போட, அரசாங்கம் தலையிட்டு ஒன்னும் பண்ண முடியாத படி ஆகிருச்சு. இத்துணை வருஷமா கோட்டு, கேஸுன்னு அலைஞ்சி கிட்டுதானே இருக்கோம். என்னமோ தெரியாத மாதிரியே பேசுறீங்க”  மருதநாயம் ஆதங்கப்பட
 
“அந்த இடம் இப்போ பல கோடி ரூபாக்கு போகுமேப்பா…  அந்தாளு வேற விக்க மாட்டேங்குறானே!” விக்னேஸ்வரன் கோபப்பட
 
“இவன் ஒருத்தன்…. அவன் நெனச்சாலும் விக்க முடியாது. கோட்டு தீர்ப்பு வழங்கணும். அந்த நேரத்துல ஜானகி வாரிசு இருந்தா ஈஸியா வாதாடி கேஸ ஜெய்க்கலாம்னு வக்கீல் சொன்னதாலதானே பார்கவி கூட்டிட்டு வந்தேன்” தான் திட்டம் போட்டுத்தான் செய்கிறேன் என்ற இறுமாப்பில் பேசினார் மருதநாயகம்
 
“பொறுத்ததும் பொறுத்தோம் இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம்” என்றான் தங்கதுரை. 
 
“சொத்து மட்டும் கைக்கு வரட்டும் அப்பொறம் அந்த ஓடுகாலி பெத்தமகள ஓடவிடுறேன்” விக்னேஸ்வரன் சொடக்கிட்டு சொல்ல
 
“கோபத்தை கட்டுப்படுத்துடா… உன் அம்மா காதுல விழுந்தா மனசு கஷ்டப்படுவா? ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணவ வாரிசு நமக்கு வேணாம் அவள அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிடுறேன்” மருதநாயகம் யோசனையாக சொல்ல தங்கதுரையும் தந்தையை யோசனையாகப் பார்த்தான். 
 
“சே… அவ வந்து ரெண்டு மாசமாகப் போகுது இன்னும் ஒன்னும் ஆகல. வக்கீல் வேற கொஞ்சம் டைம் கொடுங்க டைம் கொடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறானே ஒழிய வேல நடக்குறது போல தெரியல. இதுல தண்டத்துக்கு அவளுக்கு காலேஜ் பீஸ் வேற கட்டணும். மாதேஷ் வேற அத்த பொண்ணுனு ரொம்ப உரிமையா நடத்துகிறான் இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ! அவ மூஞ்சியும், பாஷையும்”  விக்னேஸ்வரன் மீண்டும் எகிற
 
“அவ இங்க இருக்கிறவரை யாருக்கும் சந்தேகம் வராதபடி எல்லாம் பண்ணனும் டா… புரிஞ்சதா?” தங்கதுரை தம்பியின் தோளில் கை வைத்தவன் “ஆனாலும் அப்பா மாதேஷுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்குறீங்க”
 
அவனை முறைத்த மருதநாயகம் “அவன் மனசுல எந்த விகல்பமும் இல்ல. நீங்களா பேசி உண்டு பண்ணிடாதீங்க, உன் மவன் பார்வைதான் சரியில்ல அவனை கொஞ்சம் அடக்கி வை” என்றவர் வண்டியை விட்டு இறங்கி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அரிசி ஆலைக்கு நடந்தார்.    
 
மருதநாயகத்தை பழிவாங்கவென்று துடித்துக் கொண்டிருக்கும் ஈகைச்செல்வன் இவ்வாறு சொந்த வீட்டிலையே! நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவளைத்தான் மருதநாயகத்தின் ஒரே மகளின் பேத்தியை வதைத்தால் அவர் வீழ்வார் என்று பழிவாங்க கிளம்பி வந்து கொண்டிருக்கிறான்.