Advertisement

Epilogue

 
 
களத்துக்குள்ளே காலை வைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டு மாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலே பார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
நாட்டியக் குதிரைபோல – ஏலங்கிடி லேலோ
நாலு காலில் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
குள்ள மாடும் புள்ளி மாடும் – ஏலங்கிடி லேலோ
குதிச்சுக் குதிச்சு மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
பால் கொடுக்கிற பசுவுங் கூட – ஏலங்கிடி லேலோ
பையப்பைய மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
பல்லுப் போடாத காளைக் கன்றும் – ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக் கன்றும் -ஏலங்கிடி லேலோ
 
பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
எல்லா மாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ
 
கால்படவும் கதிருபூரா – ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா – ஏலங்கிடி லேலோ
 
நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லா இருக்கு பார்க்கப்பார்க்க – ஏலங்கிடி லேலோ
 
வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் – ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா – ஏலங்கிடி லேலோ
 
ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு – ஏலங்கிடி லேலோ
 
அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் – ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ
 
வண்டி வண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ
 
அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ
 
புழுங்கல் நெல்லுக் குத்தித்தானும் – ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ
 
வெள்ள செவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ
 
கும்பல் கும்பலா நெல்லுத்தானும் – ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா – ஏலங்கிடி லேலோ
 
கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ
 
கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் – ஏலங்கிடி லேலோ
 
சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ
 
வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ
 
“தினமும் ஒரு பாடல் எப்படித்தான் பாடுறாங்களோ!” என்ற சிந்தனையிலையே தனது வயல்களில் நடக்கும் அறுவடையை கவனித்தவாறு நடந்து வந்தான் ஈகை.
 
காலை வேளையில் சூரியன் தனது கதிர்களை குளிர்ச்சியாக பரப்பி இருந்தான் போலும் காற்றும் சிலுசிலுவென வீச வெள்ளை வேட்டிச் சட்டையில் நடந்து வரும் ஈகையை பார்த்து பெண்கள் பாட ஆரம்பித்திருக்க, முதலில் திகைத்தவன் அதுதான் ஊர் வழக்கம் என்று புரிய ஒரு புன்னகையோடு கடந்து அடுத்து இந்த நிலத்தில் என்ன பயிரிடலாம் என்று இளைஞ்சர்களிடம் பேசலானான்.
 
நம்நாட்டில் அரிசி பிரதான உணவாக இருந்தாலும் மற்ற பயிர்களை போலல்லாது பூமியிலுள்ள மொத்த ஊட்ட சத்தியையும் நெற்பயிர்கள் உறிஞ்சி எடுப்பதால் அந்த நிலம் காலப்போக்கில் சரியாக நாம் எதிர்பார்க்கும் விளைச்சலைக் கொடுக்காது. இதனால் அதிகமான செயற்கை உரத்தை பயன்படுத்த நேரிடுவதை அறிந்த ஈகை அதை தவிர்க்க, அறுவடை செய்த பின் அந்த நிலத்தில் வேறு பயிர்களை, அதாவது அந்த பயிரை அறுவடை செய்த பின் அதன் வேர், தண்டு இல்லை என அனைத்தும் மக்கி நிலத்துக்கு ஊட்ட சக்தாக மாறும் பயிர்களை தேர்வு செய்து மாறி மாறி பயிரிடும் யோசனையை கொண்டு வந்து கரிம வேளாண்மை மட்டும் கையாண்டு வருகிறான்.
 
ஊரில் பயன் படுத்தி வீசக்கூடிய காய்கறிகளின் எஞ்சிய பகுதிகளை தினமும் சேகரித்து உரமாக்கும் செயல் முறை வேறு ஒரு இடத்தில் நடைபெற ஊரில் உள்ளவர்கள் வீட்டில் நட்டுவிக்கும், மிளகாய் செடி, கத்திரிக்காய் செடி, பூச்செடிகள் அனைத்துக்கும் இந்த உரத்தையே வாங்கிக் செல்லும் பழக்கத்தை இந்த பத்து ஆண்டுகளில் வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.
 
சந்தையிலும் கரிம காய்கறிகளுக்கு போட்டி நிகழ்வதால் லாபம் அதிகம் ஈட்டித் தந்ததது. ஆனாலும் இயற்கை முறையை கையாள்வதால் பூச்சிகளிடமிருந்தும் சில பிராணிகளிடமிருந்தும் காய்கறிகளை பாதுகாப்பதுதான் மிகவும் சிரமமான வேலையாக கருதினான் ஈகை. அதனாலயே! வேலியாக வாசனை செடிகள், மருந்துக் கொடிகள் என்று நட்டுவித்து அவைகளை துரத்தலானான்.
 
அவனது கரும்புத்தோட்டங்களும் அவ்வாறே! நன்கு முற்றிய கரும்புகளை தேர்வு செய்து அறுவடை செய்வான். சரியான நேரத்தில் பாக்கட் கன்றுகளை நீக்கி நன்கு வளரும் கன்றுக்கு இடம் கொடுப்பான். கரும்பு அறைவடைக்கு பதினாறு தொடக்கம், பதினெட்டுட்டு மாதங்கள் தேவை படுவதால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பயிரிடப்பட்ட வேண்டும் அடுத்து ஆறு மாதம் அந்த நிலத்தில் கனிம காய் கறிகளை பயிர் செய்யலாம் என்ற முடிவோடு வேலைப் பார்த்தான்.
 
விவசாயத்தின் மகிமையை உணர்ந்துகொண்டவன் பிறர் பசி போக்கவே! தனது தாத்தா சத்யநாதனை போல் ஆசையாகவும், ஆர்வமாகவும் உழைக்கலானான். விவசாயத்தை உயிர்ப்பிக்கும் நல்ல மனிதனாக ஊரே அவனை வணங்க இந்த பத்து வருடத்தில் விவசாயத்தில் அவன் அடைந்த வெற்றிகள் பல.
 
தென்னை மரத்தின் பயன்கள்தான் பல பல. நார் கொண்டு கயிறு மற்றும் கைவினை பொருட்கள், சணல், சாக்கு பைகள், பாய்கள் என எல்லா விதமான பொருட்களையும் தயாரிக்கலானான். பிளாஸ்டிக் பாவினையை தவிர்த்து இது போன்ற இயற்கை பொருட்களை பாவிக்கவும் ஊக்குவித்தான்.
 
அந்த ஊரின் காலநிலைக்கேற்றவாறு பூக்களையும் நட்டு வித்து பூக்களின் சந்தையையும் கைப்பற்றியதுமில்லாது, ஊரில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்திருந்தான்.
 
ஊரில் மற்ற ஜாதிக்காரர்களிடமும் பேசி கலப்பு திருமணம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பற்றிப் பேச சிலர் ஒத்துக்கொண்டாலும், சிலர் இன்னும் ஜாதி, ஜாதி என கூச்சலிட்டுக்கொண்டுதான் இருந்தனர்.
 
“ஆணவக்கொலைகள் செய்து மருதநாயம் ஜெயிலில் இருப்பது போன்று ஜெயிலுக்கு போக போறீங்களா” என்று ஈகை ஒரு சத்தம் போட்டதும்தான் அடங்கினர்.
 
எல்லைக் கோவிலின் வாயிலை திறந்து வைக்க வேண்டும் என்பதுதான் அவன் ஆசை ஆனால் எல்லோரும் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் அது என்று முடியுமோ! அன்றுதான் உணமையான சுதந்திரம் இந்த நாட்டுக்கு கிடைக்கும் என்று எண்ணினான்.
 
காலையில் விவசாயத்தை பார்க்க சென்றால் மத்திய சாப்பாட்டுக்கு வீட்டு வந்து விடுவான் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவதில் இருக்கும் சுகத்தை இழக்க அவன் விரும்பவில்லை.
 
இன்றும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க அவன் பட்டு ரோஜாவின் சத்தம்தான் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
 
“இன்னைக்கு என்ன பிரச்சினை?” இந்த இரண்டு வருடங்களாக வீட்டுக்கு வரும் பொழுது இந்த கேள்வியை கேட்காமல் ஈகை வீட்டுக்கு நுழைந்ததே! இல்லை.
 
“வந்துட்டேளா? முதல்ல வந்து சாப்பிடுங்க” நல்ல மனைவியாக சாப்பாட்டறையை நோக்கி நடக்க
 
“இரு பட்டு. என்ன பண்ணாங்க இன்னைக்கி. ஈழான், இளா… எங்க இருக்கீங்க ?” என்று தன் மூத்த மகன் ஈழானையும், தன் ஒரே மகள் இளவழகியையும் அழைக்க கதவுக்கு பின்னால் மறைந்து நின்றிருந்தவர்கள் உடம்பு பூரா மைதாவைக் கொட்டிக்கொண்டு போதாததற்கு தண்ணீரிரையும் உடம்பு பூராவும் கொட்டி பசையாகி தந்தையின் முன் வந்து நின்றனர்.
 
ஈகைக்கு அவர்களை பார்க்க சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. பார்கவி கோபமாக இருப்பதினாலையே முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு நடந்ததை விசாரிக்கலானான்.
 
“அண்ணன் தான் பா என் தலைல மைதாவ கொட்டினான்” ஆறு வயதான இளா புகார் வாசிக்க
 
“இல்லப்பா… இவதான் முதல்ல என் தலைல கொட்டினா” எட்டு வயதான ஈழான் கூற
 
“எப்படி இளா தான் சமயல் கட்டுக்குள்ள போய் பெஞ்சு வச்சு ஏறி மேல இருக்குற அவ்வளவு பெரிய மைதா மாவு டப்பாவை எடுத்தாளா?” ஈகை கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு ஈகை விசாரிக்க
 
“அது மேல இல்லப்பா… கீழ கபோர்ட்ல இருந்தது நான் பார்த்தேன்” முந்திக்கொண்டு கூறினான் அண்ணன்.
 
“நீ எப்போ பார்த்த?” சின்ன சிரிப்பினூடு தந்தை கேக்க
 
“நேத்து பால் விளையாடும் போது பால் கிச்சனுக்குள்ள போச்சா அப்போ பொன்னியம்மா {வேலை செய்யும் பெண்மணி} எடுக்குறது பார்த்தேன்” ஈழான் தந்தையிடம் மாட்டிக் கொண்டதை அறியாமல் கதை சொல்ல
 
“அப்போ உனக்குத்தான் எங்க இருக்குனு தெரிஞ்சிருக்கு நீதான் போய் எடுத்து இளா மேல கொட்டி இருக்க”
 
மகன் முழிக்கவும் “மைதாவை கொட்டி விளையாடினீங்க யாரு தண்ணி ஊத்துனதுனு கேளுங்க” கோபம் குறையாம நின்றிருந்தாள் பார்கவி.
 
“அது நான் தான் பா..” என்றாள் இளா சிரித்தவாறு.
 
“சரி வாங்க முதல்ல குளிச்சிட்டு வருவோம். பின்னாடி இருக்குற ஸ்விம்மிங் பூல் போவோமா?” என்று ஈகை கேக்க குட்டீஸ் இருவரும் துள்ளிக் குத்திக்கலாயினர்.
 
கணவனை முறைத்த பார்கவி “நீங்க இப்படியே செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்குங்க, ஸ்கூல் லீவ் விட்டதும் விட்டாங்க என் நிம்மதி போச்சு” புலம்பியவாறே சுத்தம் செய்ய உள்ளே செல்ல குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஈகை பின் பக்கமுள்ள கருங் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட அந்த காலத்து நீச்சல் குளத்துக்கு சென்றான்.
 
தாத்தா சத்தியநாதன் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தது போல் தன் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க தன் தந்தை இல்லையே! என்ற கவலை இந்த நீச்சல் குளத்தில் நீராடும் பொழுது வருவதுதான். இன்றும் அதே! எண்ணம் மனதில் எழ அதை புறம் தள்ளியவன் குழந்தைகளோடு ஐக்கியமாகி இளாவுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கலானான். ஈழான் ஓரளவு காலை, கையை அடித்து நீந்துவதால் அவனை அவன் போக்கில் விட்டு விட்டவன் அவன் மேல் ஒரு கண்ணை மட்டும் வைத்திருந்தான்.
 
 
சமயலறையையும், வீட்டையும் வேலையாள் உதவியோடு சுத்தம் செய்த பார்கவி இவர்கள் குளித்து விட்டு வந்ததும் உணவு பரிமாறி தானும் அமர்ந்துகொள்ள
 
“பாட்டி எப்போ வருவாங்க?” இளா கேக்க
 
“உனக்கு ஸ்கூல் ஆரம்பிச்சதும்தான் வருவாங்க போல. அதுவரைக்கும் உங்க ரெண்டு பேரையும் நான் கட்டின்னு மேய்க்கணும்”
 
“வீடே அமைதியா இருக்கு அஞ்சாறு புள்ள பெத்துக்கலாம்னு சொன்ன ரெண்டுக்கே நாக்கு தள்ளுதா பட்டு” மனைவியின் பக்கம் சாய்ந்து ஈகை கேலி செய்ய
 
கணவனை முறைத்தவள் “பேசாம சாப்பிடுங்க நா ஏதாச்சும் சொல்லிட போறேன். நீங்கதான் அம்மாவை அங்கேயும் இங்கயும் அனுப்பி வைக்கிறேள். இதுங்கள நான் தனியா சமாளிக்கணும்” என்று குறைபட
 
“அவங்க காசிக்குதானே! போய் இருக்காங்க. இப்படியெல்லாம் பேச கூடாது தப்பு தப்பு கன்னத்துல போட்டுக்க”
 
“ஈஸ்வரா மன்னிச்சிக்க பா..” எச்சில் கையாலையே கன்னத்தில் போட்டுக்கொண்டவள் ஈகை சிரிக்கவும் அவனை முறைத்தவாறே கழுவுவதற்காக எழுந்து சென்றாள்.
 
விசாலாட்சி இருந்தால் அவர் சொல்லும் கதைகளைக் கேட்டு ரெண்டும் சமத்தாக அவரிடம் ஒட்டிக்கொண்டு வால் பிடித்து திரிவார்கள். அவர் இல்லையென்றால் வீடு ரெண்டு படும். அவர் இருந்தால் பார்கவியும் கணவனோடு விவசாயத்தை பார்க்கவென்று கிளம்பி விடுவாள்.
 
காயுவின் பெற்றோரோடு காசிக்கு சென்றவர்தான் காலநிலை சீரற்றதால் வர முடியாமல் இன்னும் ஒருவாரம் கழித்து வருவதாக கூறி இருந்தார்.
 
“அதுக்கென்ன அத்த இன்னும் ஏதாவது பூஜைகள் செய்ய வேண்டியிருந்த பண்ணிட்டு” வாங்க என்று ஈகை சொல்லி இருக்க, பார்கவிதான் முறைத்துக்கொண்டு இருக்கிறாள்.  
 
விசாலாட்சிக்கும் காயுவின் அன்னை கமலாதேவிக்கும் முதலில் முட்டிக்கொண்டது இப்பொழுதுதான் இருவரும் ராசியாகி விட்டார்கள்.
 
தயாளனும் காயுவும் கம்பனி பொறுப்புக்களை பார்ப்பதனால் காயுவின் தந்தையும் தனக்கும் ஏதாவது வேலை தருமாறும், வீட்டில் சும்மா இருப்பதனால் பொழுது போக மாட்டேங்குது என்று அவர்களோடு கம்பனிக்கு கிளம்பிச்செல்ல ஐஷு பாடசாலை சென்று வரும்வரை கமலா மட்டும்தான் வீட்டில்.
 
ஈகை குடும்பம் வந்தால் ஈகை குழந்தைகளையும் விசாலட்சியையும் இவரிடம் விட்டு விட்டு பார்கவியை அழைத்துக்கொண்டு கம்பனிக்கு சென்று விடுவான்.
 
கமலாவுக்கு தமிழ் தெரியாது, விசாலாட்சிக்கு பெங்காலி தெரியாது. சினேகமாக புன்னகைத்து இருவரும் தங்களது வேலையில் ஈடுபடுவார்கள். ஈகை குடும்பம் வந்தால் காயு சைவ உணவுகளை மட்டும்தான் சமைப்பாள்.
 
அன்றும் சமைத்து வைத்து விட்டுத்தான் சென்றிருந்தாள். ஐஷு மீன் வேண்டும் என்று கூற கமலா நன்றாக மீனை வறுத்து சோற்றில் பிசைந்து ஐஷுக்கு ஊட்ட ஈழான் வந்து வாய் திறக்கவும் அவனுக்கும் ஊட்டலானாள் கமலா.
 
இதை கண்ட விசாலாட்சி குழந்தையை இழுத்து வாயிலிருந்ததை துப்ப வைத்து கமலாவை திட்ட புரியாது முழித்தாள் கமலா. ஐஷுதான் குரும்புத் தலை தூக்க, விசாலட்சி கூறியவைகளை மாற்றி மொழி பெயர்த்தாள். 
 
ஈழான் தன் பேரன் என்றும் அவனுக்கு ஊட்டும் உரிமை தனக்கு மட்டும்தான் உள்ளது என்று விசாலட்சி கூறியதா ஐஷு கூற, கமலாவுக்கு கோபம் பன் மடங்காகியது.
 
“பார்கவி உனக்கு மகள் என்றால் ஈகை எனக்கு மகன் இவன் எனக்கும் பேரன்தான் நான் ஊட்டுவேன்” என்று கமலா விசாலட்சியோடு சண்டைக்கு நிற்க கமலா பேசும் பாஷை விசாலட்சிக்கு புரியவில்லை. விசாலட்சி பேசும் பாஷை கமலாவுக்கு புரியவில்லை. நடுவில் ஐஷு தன் வேலையை நன்றாக பார்த்துக்கொண்டு இருவரையும் ஏற்றி விட்டுக்கொண்டே இருந்தாள்.
 
இவர்கள் முகத்தை தூக்கிக் கொண்டு கத்திக்கொண்டிருந்தார்களே தவிர காயுவிடமோ! பார்கவியிடமோ! முறையிடவில்லை. அதனால் இங்கு வரும் பொழுதெல்லாம் சண்டை தொடரும்.
 
இப்படியே சென்ற சண்டைக்கு முற்றும் போடும் நாளும் வந்தது அது கமலா வழுக்கி விழ போக, விசாலாட்சி தாங்கிப் பிடித்திருந்தார். இல்லையென்றால் இடுப்பு எலும்பு நொறுங்கி இருக்கும். அதன்பின் தான் காயுவிடம் தங்களது சண்டையை சொல்ல, என்ன நடந்தது என்று விசாரித்ததில் உடனே! புரிந்துக் கொண்ட காயு இது தன் மகளின் கைகாரியம் என்று புரிய வீட்டில் அனைவரிடமும் கூறி ஐஷுவுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் என்று கேட்க, தன் சிந்துவை செல்லம் கொஞ்சி அதிலிருந்து எஸ்கேப் ஆகி இருந்தாள் அவள்.
 
அன்றிலிருந்து பாஷை தெரியாவிடினும் கமலாவும், விசாலாட்சியும் நல்ல தோழிகளாகி ஒன்றாகவே சுற்றலாகினர்.
 
கல்கத்தாவிலுள்ள கம்பனியின் முழுப் பொறுப்பையும் பாயலிடம் ஒப்படைத்திருக்க, தயாளன் மற்றும் ஈகை சென்று மாறிமாறி பார்த்துவிட்டு வருகின்றனர். அப்படி செல்லும் பொழுது காயுவின் பெற்றோரும் சென்று வீட்டில் இரண்டுநாள் தங்கிவிட்டு வருவார்கள்.  
 
ஊரே தைபூசைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஈகையின் ஊரில் தைப்பூசத் திருநாள் விஷேஷமாகவும், வித்தியாசமாகவும் மூன்றுநாள் கொண்டாடப்படும்.
 
அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
 
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.
 
தைப்பூசத்தன்று முருகன் வள்ளித் தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ஈகையின் மொத்த குடும்பமும் தேர் திருவிழாவைக்கான அங்குதான் கூடி இருந்தனர்.
 
பார்கவி வேதநாயகிக்காக பால்குடம் எடுக்க வேண்டி இருந்தாள் அதுவும் தன் மகனை கொண்டு.  ஈகையோ! பூச்சட்டி ஏந்த வேண்டியிருந்தான்.
 
கோவிலிலிருந்து சற்று தொலைவில் பால்குடம் கட்டும் இடம் இருக்க, ஊர் மக்கள் மொத்தமும் அங்குதான் கூடி இருந்தனர்.
 
ஈகை மஞ்சள் வேஷ்டியில் மேற்சட்டையில்லாது சூரியனின் ஒளி பட்டு சிவந்துபோய் இருக்க, அவனருகில் அதே போல் ஆடையில் வந்து நின்றான் தயாளன். அவனை ஈகை கேள்வியாய் ஏறிட
 
“எங்கே போனாலும் உன் கூட நானும் வருவேன் தம்பி. பூக்குழிக்கு மட்டும் உன்ன தனியா அனுப்புவேனா என்ன” என்று வசனம் பேச ஈகையின் முகத்தில் புன்னகை.
 
அவன் கையில் அக்கினிச் சட்டியின் கீழ் வேப்பிலை வைத்து ஐயர் கொடுக்க, தயாளனும் பெற்றுக்கொண்டு இருவரின் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர். மாதேஷ் கையிலிருந்த எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஈகையின் கையிலிருந்த அக்கினி சட்டிக்குள் ஊற்றிக்கொண்டே வரலானான். 
 
 
குழந்தைகள் முதல் வரிசையில் பாற்குடம் ஏந்தி வர அதை விழாதவாறு அவர்களின் அன்னைகள் உதவி செய்ய பார்கவியும் ஈழனோடு அக்கூட்டத்தில் இருந்தாள்.
 
கட்டை விரல் தடிமனில் வேல் குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோரும் அக்கூட்டத்தில் இருந்தனர். கோவிலை வந்தடைவோருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
ஈகை இதுதான் முதல் தடவையாக பூக்குழியில் இறங்குகிறான் அதுவும் வேதநாயகிக்காக வேண்டிக்கொண்டு. ஆண் பெண் பேதம் பாராமல் பூக்குழியில் இறங்கிக் கொண்டிருந்தனர்.
 
பார்கவிதான் பயந்து வேண்டாம் என்று கணவனை தடுத்துப் பார்த்தாள் “வேண்டுதல் பாரு சாமி குத்தமாயிடும்” என்று அவளை சமாதானப்ப படுத்தி அந்த அனல் பறக்கும் நீண்ட தூரம் நெருப்புகங்குகள் பரப்பி கிடந்த பூக்குழியில் இறங்கி நடந்து கோவிலுக்குள் நுழைந்திருந்தான். அவனோடு சேர்ந்தே நடந்தான் தயாளன். உண்மையிலயே அவனுக்கு பூப்போட்ட பாதையில் நடந்து போன உணர்வைத்தான் கொடுத்திருந்தது.
 
 
மாதேஷுக்கும் மஞ்சுவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
 
உமையாள்தான்  விக்னேஸ்வரனை பார்க்க வேண்டும் என்று வேதநாயகி அறியாமல் மாதேஷை நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
 
மருதநாயகத்தின் வாக்குமூலத்தின் ஒரு காப்பியை ஈகை வக்கீலிடம் சேர்ப்பிக்க வைத்திருக்க அதை பற்றி தயாளனோடு பேசிக்கொண்டிருந்ததை மாதேஷ் கேட்டு விட என்ன எது என்று விசாதித்தவன் அதை பாத்திருந்ததால் மனம் நொந்தவன் வேதநாயகியின் பேச்சுக்கு மறு பேச்சின்றி அமைதியாகவே இருக்க, அன்னையின் நச்சரிப்பு தாங்க முடியாமல் ஈகையிடம் சென்று அந்த வாக்கு மூலத்தின் நகலை கொண்டு வந்து உமையாளுக்கு போட்டுக் காட்டி மருதநாயகம் பேசியவற்றுக்கு விக்னேஸ்வரன் எந்த மறுப்பும் தெரிவிக்காத உண்மையை எடுத்துக் கூறி
 
“யாராவது பணக்கார பெண் அவரை விரும்பி இருந்திருந்தால் அல்லது வேறு பெண்கள் மீது அவருக்கு நாட்டம் இருந்திருந்தால் உன்னை என்றோ! கொன்றிருப்பார்கள். இப்போதாவது புரிந்துக்கொன்று விலகி இரு” என்று அன்னைக்கி புத்திகூற முற்றாக உடைந்து போனாள் உமையாள்.
 
வேதநாயகியும், ஜானவியும்தான் உமையாள் தேற்றலானார்கள். அவர்கள் எனக்கு கணவனும் பிள்ளைகளும், நானே! வேண்டாம் என்று இருக்கிறேன் விட்டுடு
உமை” என்று வேதநாயகி கூற
 
“சிங்கம் மாதிரி ஆம்பிள பையனைத்தானே! அண்ணி பெத்து இருக்கிறீங்க அவனும் வளந்துட்டான் வேறென்ன வேணும். விட்டுடுங்க” என்று ஜானவி பேச
 
கணவனே! தெய்வம் என்று அப்பாவியாக தான் வாழ்ந்து விட்ட மடத்தனத்தை உணர்ந்த உமையாலும் அதன் பின் விக்னேஸ்வரன் பற்றி பேசவே இல்லை. மாதேஷ் மஞ்சுவுக்கு குழந்தைகள் பிறந்த பின் அந்தக் குழந்தைகள்தான் அவள் உலகம் என்றாகிப் போனது.
 
மருதநாயம் ஐந்து வருடங்கள்தான் சிறையில் இருந்தார். சிறையிலையே! அவர் உயிர் பிரிந்திருக்க, வேதநாயகியோ! மாதேஷோ அவர் உடலை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருக்க, ஈகை தான் இறுதி சடங்கை செய்வித்திருந்தான்.
 
தயாளன் கூட ஈகையிடம் சொல்லிப் பார்த்தான் “நம்ம குடும்பத்துக்கு செஞ்சதுக்கு அநாத பொணமா  போகட்டும் டா ஈகா” என்று 
 
சொத்துக்களை மீளப்பெற்ற பின் மருதநாயகத்தை துடி துடிக்க கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன் தான் ஈகை. போலீஸ் இடையில் குறிக்கிட்டதால் அவன் திட்டம் எல்லாம் மாறிப்போனது. அது மட்டுமல்லாது சத்யநாதனை கொன்றதும் மருதநாயம் என்ற உண்மையும் ஈகைக்கு தெரியவந்தது. இல்லையென்றால் அந்த உண்மை அவன் அறியாமளையே! போய் இருக்கும்.
 
இந்த பத்து வருடத்தில் அவன் செல்லுமிடமெல்லாம் அவன் கேட்பது சத்தியநாதன் எவ்வாறு வாழ்ந்தார் என்பது மட்டுமே! அது அவனை மாற்றி இருக்க, அடுத்த பிறவியிலாவது மருதநாயகம் நல்லபிறவி எடுக்கட்டும் என்றுதான் ஈமைக்கிரிகைகளை செய்வித்திருந்தான்.
 
விக்னேஸ்வரனும், தங்கதுரையும் இன்னும் சிறையில்தான் இருக்கின்றனர்.
 
ஹரிஹரனை வெளியில் எடுக்க முடியாமல் போக, ஜெயில்லில் போய் பார்த்து விட்டு வந்த பின்  மகனின் நிலையைக்கண்டு கவலையில் காதம்பரி தற்கொலை செய்துகொண்டாள். உள்ளே அவனை அடி உதை என்று கைதிகளே! பந்தாடி இருந்தனர்.
 
இங்கு உள்ள எல்லா சொத்துக்களையும் விற்று விற்று ஹரிணியோடு சேகரன் அமேரிக்கா சென்றதாக கேள்வி, அதன்பின் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை.
 
வேதநாயகிக்கு முதுமையின் காரணமாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டாட்களையே! அவரால் நியாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஈகையை கண்டால் சத்தியநாதன் என்று நினைத்து அண்ணா என்று அழைத்தவாறு அவனுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து விடுவார்.
 
அவரை மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொடுப்பது என்று ஈகை அனைத்தையும் செய்ய, அவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கலானார் வேதநாயகி. அவனும் வாரம்தோறும் வந்து அவரை பார்த்துவிட்டு செல்வான். பார்கவியையும் அண்ணி என்றே அழைத்தார். அவளிடமும் அவ்வளவு பாசம் ஊட்டி விடுவதும், தலை வாரி விடுவதும் என்று அன்பை பொழிய,
 
ஜானவியே! ஈகையிடம் “அம்மாவை ஊருக்கு கூட்டிகிட்டு போ ஈகை. திருவிழா வேற வருது நாமளும் ஊருக்கு வந்து தங்குறோம் அப்போ வரும் போது கூட்டிகிட்டு வந்துடுறோம்” என்று விட சந்தோசமாக ஈகை வேதநாயகியை ஊருக்கு அழைத்து வந்திருந்தான்.
 
ஈழானை பார்த்த மாத்திரத்தில் முத்துராஜ் என்றும் இளாவை ஜானகி என்று அழைக்க ஆரம்பித்தவர் அவர்களிடமும் பாசமாக நடந்துகொள்ள புதுப் பாட்டியிடம் குழந்தைகளும் ஒட்டிக்கொண்டனர்.
 
திருவிழாவும் சிறப்பாக முடிய அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
 
என்னதான் காசு பணம் என்று பூமியில் பொருள் தேடி அலைஞ்சாலும் கடைசியில் பூமியில் ஆறடி நிலம் மட்டும்தான் நமக்கு சொந்தமாக்கி விடும். அதுவும் நம் உடலை உரமாக்கிக்கிக்கொள்ளும். எதுவும் நிரந்தரமில்லை.
 
ஒருவருக்கொருவர் அன்புகாட்டி உதவி செய்து, பிறர் நலம் நாடுவதில் நம்மையும், மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது.
 
“எல்லாரும் தூங்க போய்ட்டாங்களா?” அறைக்கதவை சாத்தி தாழ்பாளிடும் மனைவியிடம் கேட்டான் ஈகை.
 
“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போக சொல்லுங்க. நீங்க சொன்னா கேப்பாங்க” என்றவாறு அவனருகில் படுத்துக்கொண்டாள் பார்கவி.
 
“ஆமா ஆமா நான் சொல்லுறத எல்லாரும் கேக்குறாங்க இந்த ஊரே கேக்குது உன்ன தவிர”
 
“இப்போ என்ன நான் கேக்கலையாம்?” கணவனின் முகம் பார்த்து நிக்க
 
“அதான் இன்னொரு குழந்தை…” ஈகை சொல்லி முடிக்கும் அவன் தோளில் ரெண்டு அடி போட்டவள்
 
“அசிங்கமா பேசதேல். இந்த வயசுல உங்களுக்கு இப்படி ஒரு ஆச? அடிவாங்காம தூங்குங்க”
 
“பட்டு நீ ரொம்ப ஓவரா பண்ணுற இப்போ எனக்கென்ன வயசாகிரிச்சு? இப்போ நா என்ன அசிங்ககமா பேசிட்டேன்” என்று அவளிடம் வம்பு பண்ண ஆரம்பித்திருந்தான்.
 
இரண்டு வயதில் அவளை கையில் இந்திய பொழுதே அவ்வளவு பிடித்திருக்க, தன்
பட்டு ரோஜா உயிரோடு இருக்கிறாள் அவளை விடக் கூடாது என்றுதான் திருமணமும் செய்துகொண்டான்.
 
அவர்களுக்கு இடையிலான பந்தம் எத்தகையது என்று அவர்களுக்கே தெரியாவிடினும் ஈகைக்கு பாரு எவ்வளவு முக்கியமானவள்
அவன் அவளை எவ்வளவு நேசிக்கிறான். அது காதல் என்றால் அதன் ஆழம் என்ன என்று நன்றாகவே! உணர்ந்துதான் இருந்தான். பார்கவியும் இத்தனை வருட வாழ்க்கையில் அவ்வாறே உணர்ந்துகொண்டாள்.
 
ஆனால் இருவருமே! அதை வாய் மொழியாக இதுவரை கூறிக்கொண்டதில்லை. மாறாக சிறு சிறு சைகைகளாலும் உணர்த்திக் கொண்டு இருந்தனர். அதுவே அவர்களின் உறவுக்கு தனி அழகை சேர்ந்திருந்தது.
 
                                                                   நன்றி


            

Advertisement