செவ்வானில் ஒரு முழு நிலவு 9

6178

நிலவு 9
இரவில் சரியாக தூங்காதலால் இன்று சற்று நேரம் கடந்தே கண்விழித்திருந்தாள் பார்கவி. வேதநாயகிப் பாட்டி எழுந்திருப்பாரே அவருக்கு காபி கொடுக்கணும் என்ற டென்ஷனில் அரக்கப்பரக்க குளித்து விட்டு அறையை விட்டு வெளியே வர அவரோ அந்த புதியவனோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
 
“வாம்மா பார்கவி. ஈகா எனக்கும் உனக்கும் சேர்த்தே காபி போட்டு இருக்கான். வந்து காபி சாப்பிடு அப்பொறம் கோலம் போடலாம்”
 
“நேக்கும் சேர்த்து காபி போட்டாரா? அவர் போட்ட காபிய நான் குடிக்கணுமோ?” பார்கவியின் மனதில் கேள்விகள் முளைத்துக்கொண்டே இருக்க,
 
“ஓஹ்… நீங்கதான் டெய்லி கோலம் போடுவீங்களா? எனக்கு கோலமெல்லாம் போடத்தெரியாது. காபி மட்டும்தான் போடத்தெரியும். பாட்டி உங்கள காணோமே! காபி குடிக்கணும் என்ன பண்ணுறதுனு உக்காந்து உங்க ரூம் கதவையே பாத்துட்டு இருந்தாங்க, அதான் நீங்களும் இப்போ வந்துடுவீங்கன்னு உங்களுக்கும் சேர்த்தேன் போட்டேன். குடிங்க, குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” அவள் மறுத்து விடாதபடி நீண்டதொரு விளக்கத்தைக் கூறி அவள் கையில் காபி கப்பை திணித்தான் ஈகை.  
 
பார்கவியின் இரண்டு கைகளையும் உரிமையாக பிடித்து காபிக்காப்பை திணித்து விட்டு ஈகை தனது இடத்தில் அமர்ந்து காபியை அருந்தலானான். ஆனால் பார்கவிக்குத்தான் இதயம் பந்தய குதிரையின் வேகமெடுத்தது. அவன் தொட்ட இடம் குறுகுறுக்க, என்னமோ இன்னும் அவன் அவள் கையை பிடித்திருப்பது போன்ற மாயை அவளுள். அசையாது நின்று விட்டாள்.
 
“உக்காரு பார்கவி” வேதநாயகியின் குரல்தான் அவளை நடப்புக்கு கொண்டுவந்தது.
 
எதுவுமே! நடவாதது போல் பேசிக்கொண்டே போகிறவனை ஒரு பார்வை பார்த்தவள் “நீங்க மட்டும் நான் நேத்து போட்ட ஜூசை குடிச்சிட்டு ஒண்ணுமே சொல்லலே. நான் மட்டும் சொல்லணுமா என்ன? சொல்ல மாட்டேன் போங்கோ!” என்றவள் அமர்ந்தவாறு காபியை ருசி பார்கலானாள். அவள் படபடப்பும் மெல்லமெல்ல தனிய ஆரம்பித்திருந்தது.
 
தூங்கி எழுந்தவளுக்கு மருதநாயகம் பேசியவைகள் நியாபகத்துக்கு வரவில்லை. நேரம் சென்று எழுந்ததில் அன்றாடம் செய்யும் வேலைகள் செய்ய நேரமாவதே கண்ணில் நிற்க அரக்க பறக்க ஓடி வந்தால் ஈகைச்செல்வன் வேதநாயகியோடு அமர்ந்திருக்கவும், அதுவும் தனக்காக காபி போட்டான் என்றதும் அவளின் வாய் பூட்டு கழன்றிருந்தது.
 
“அட பேச மாட்டான்னு நினச்சா பேசிட்டாளே! நல்லா அழகாத்தான் பேசுறா மாமி. இவள பேச வைக்க ரொம்ப பேச வேண்டி இருக்கு” ஈகையால் காலையிலையே குளித்து புடவையில் அன்று மலர்ந்த மலர் போல் இருப்பவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. அவளையே பார்த்தவாறு காபியை அருந்தலானான்
 
“பார்கவி கோலமெல்லாம் ரொம்ப அழகா போடுவா, தெரியுமா?”
 
“இப்படி பார்த்துகிட்டே இருந்தா பாட்டி உன் காத திருகி வெளியே போடான்னு சொன்னாலும் சொல்லுவாங்க ஈகா கண்ட்ரோல்” கண்களை வேதநாயகியின் புறம் சிரமப்பட்டு திரும்பியவன்   “நேத்து வரும் பொழுதே பார்த்தேன் பாட்டி வாசல்ல அழகான பெரிய கோலம் இருந்தத” ஈகைச்செல்வன் மெச்சுதலான பார்வையோடு சொல்ல
 
ஈகைச்செல்வன் கோலம் மிதிப்படாமல் நின்ற தோற்றம் பார்கவியின் கண்களுக்குள் வந்து போக சட்டென்று சிரித்து விட்டாள்.
 
“எதுக்கு சிறிக்குறீங்கன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பெனில்ல” காதல் அம்பை கண்களால் விட்டவன் அதை கண்டு கொள்ளாமல் இவள் சிரிக்கிலாளே! என்று உள்ளுக்குள் கனன்றாலும் பொறுமையாக பேசினான் ஈகை.
 
“ஏன் பா ஈகா இவ உன்ன விட ரொம்ப சின்ன பொண்ணு இல்ல. வாங்க, போங்கன்னு வா, போனே கூப்டு”
 
“வித் யுவர் பெர்மிஷன் பார்கவி” பார்கவி  தலையசைக்கவும்.
 
“எதுக்குன்னு சொல்லிட்டு சிரி”
 
அவள் எவ்வாறு சொல்வாள். அவனை அவள் மொட்டைமாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்ததை. தானே தன்னை காட்டிக்கொடுத்தது போலாகாதா? ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் பார்கவி.
 
“என்ன கேட்டாலும் அமைதியா இருப்பா. இல்லனா இப்படி ஒண்ணுமில்லன்னு சொல்லி சமாளிப்பா” வேதநாயகி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே மருதநாயகம் தன் அறையிலிருந்து வெளிப்பட அவரைக் கண்டு பார்கவிக்கு அவர் பேசியது அனைத்தும் கண்முன் வர கோலம் போட போவதாக எழுந்து சென்றாள். ஈகைச்செல்வன் அவளுக்காக போட்ட காபி கப்பை மறக்காமல் கையேடு எடுத்துக்கொண்டுதான் சென்றாள்.
 
வழக்கமாக அவருக்கு காபி அவள் தான் போடுவாள். வேலையாள் போட்டாலும் மரியாதையாக அவள்தான் கொண்டுவந்து கொடுப்பாள். நேற்றைய நிகழ்வின் பின் அவரோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள அவள் விரும்ப வில்லை.
 
“என்ன இவ உங்களுக்கு காபி தராம போறா” வேதநாயகி சொல்ல ஈகைசெல்வன் புரியாது பார்த்தான்.
 
“வீட்டுல எல்லோருக்கும் பார்கவிதான் காபி போடுவா. பொன்னம்மா போட்டாலும் அவ தாத்தாக்கு அவ கையாலையே தான் கொண்டு வந்து கொடுப்பா. இன்னைக்கி என்னாச்சுன்னு தெரியல..” வேதநாயகி வளமை போல விலாவரியாக விளக்க போக
 
“ஏதோ நினைப்புல போய் இருப்பா, ஏன் அவ காபி கொடுக்காம நான் குடிக்க மாட்டேன்னு இந்த வீட்டுல ஏதும் சட்டம் இருக்கா?” மனைவியை கடிய முடியாமல் கேலிபோல் சொன்னவர் “எனக்கு இன்னொரு பேத்தி இருக்காளே! அவ என்னைக்காவது காபி கொடுத்திருக்காளா? காபி என்ன தண்ணீர் கிளாஸாவது கொடுத்திருக்காளா?” ஹரிணியை மருதநாயகம் குறை சொல்ல வேதநாயகி வாய்பிளந்து பார்த்தார்.
 
ஹரிணி என்றாலே! மருதநாயகத்துக்கு என்றுமே செல்லம்தான். அப்படி இருக்க அவளை ஒரு வார்த்தை சொல்லாதவர் இன்று முதல் தடவை புதிதாக குறை கூறவும் ஆச்சரியம் தாழமுடியவில்லை.
 
ஈகைச்செல்வனும் அதை கவனித்தான். பார்கவியை உயர்த்தி பேசுவதும் ஹரிணியை தாழ்த்திப் பேசுவதும், வேதநாயகியின் ரியாக்சனும். எதுவோ தப்பாக இருக்கிறது என்று ஈகையின் மூளை விழித்துக் கொண்டது. ஆனால் அது என்னவென்று அவனால் ஊகிக்கதான் முடியவில்லை.
 
மருதநாயகம் பேசியவற்றை கேட்டுக்கொண்டு தர்மதுரையும், காதம்பரியும் தங்களது அறையிலிருந்து வெளியே வர தனது மகளை பற்றி தந்தை பேசியது தர்மதுரைக்கு பிடித்தமாக இல்லா விடினும், பார்கவியை புகழ்ந்து பேசியதை வைத்து ஈகையின் மனதில் ஹரிணியை பற்றிய எந்த எண்ணமும் வரக்கூடாது என்றும் பார்கவியை பற்றிய எண்ணங்கள் வர வேண்டும் என்றும் தான் தந்தை அவ்வாறு பேசினார் என்று புரிந்துபோக அமைதியானான்.
 
ஆனால் காதம்பரி அவ்வாறு அமைதியாக இருப்பவள் இல்லையே! “என்ன மாமா? ஓடிப்போன உங்க மகள் வயித்துல பொறந்தவள விட என் வயித்துல பொறந்தவ எந்த விதத்துல கொறஞ்சி போய்ட்டா? இந்த வீட்டுல எத்தனை வேலைகாரங்க  இருக்காங்க? என் மக உங்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்காததுதான் பிரச்சினையா? என் மக பணத்துலயே பொறந்து வளந்தவ. உங்க மக வயித்து பேத்தி மாதிரி ஒன்னும் அன்னக்காவடி இல்ல. வேல செஞ்சிதான் சாப்பிடணும் எங்குற நிலமை என் பரம்பரைக்கே இல்ல” காதம்பரி எரிமலை குழம்பாக வெடிக்க, ஈகைச்செல்வனின் முன்னிலையில் மருதநாயகத்துக்கு பெருத்த அவமானமாக போனது.
 
தான் இந்த வீட்டின் தலைமகன். தன் பேச்சுக்கு மறு பேச்சு யாரும் பேச மாட்டார்கள். ஒரு அந்நியனின் முன்னால் தன்னுடைய மரியாதையும், குடும்ப மானத்தையும் கெடும்படியாக யாரும் நடந்துகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அந்த நம்பிக்கையில் மருதநாயகம் பேசி இருக்க, அவரின் நம்பிக்கையை குழைத்து, இன்று ஒரு அந்நியனின் முன்னால் காதம்பரி பேசியது அதிகப்படிதான். அது மாத்திரமன்றி இந்த சொத்தெல்லாம் உங்க மச்சினனுக்கு சொந்தமானது. நீங்க வெறும் காடியன்தான் என்று மறைமுகமாக மருதநாயகம் பெற்ற மகளை அன்னக்காவடி என்று கூறி அவரை குத்திக் காண்பித்தும் விட்டாள்.  
 
காலையிலையே அவள் கத்தியதும் வேலையாட்கள் கூட என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்க, வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பார்கவி மட்டும் எட்டிக்கூட பார்கவில்லை. இவை அனைத்தும் ஈகையின் கண்களிலிருந்து தப்பவில்லை. அவன் காபி கப்பை விடாது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் விதமாக அருந்திக்கொண்டிருந்தான். காதை மட்டும் காதம்பரியின் வார்த்தைகளிடம் விட்டுவிட்டான்.
 
மருதநாயகம் முறைத்த முறைப்பில் வேலையாட்கள் சத்தமில்லாமல் இடத்தை காலி செய்ய, காதம்பரியின் சத்தத்தில் உமையாலும், விக்னேஸ்வரனும் கூட தங்களது அறையிலிருந்து வெளியே வந்திருந்தனர்.
 
வழமைக்கு மாறாக மூன்றாம் மாடியில் குடிவந்தவர்கள் காலையிலையே எழுந்து அப்படி என்னதான் செய்கிறார்களோ! அந்த சத்தத்தில் இரண்டாம் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஹரிணி, ஹரிஹரன், மாதேஷும் எழுந்திருக்க அவர்களும் காதம்பரியின் பேச்சை கேட்டவாறுதான் மாடிப்படிகளிலிருந்து கீழே வந்தனர்.
 
“ஆகா இந்த மாமிய வச்சி இன்னைக்கி புதுசா சண்டை உருவாக்கிருச்சு போல இருக்கே!” ஹரிஹரனின் மைண்ட் வாய்ஸ் ஏகத்துக்கும் கூவ
 
“சே இந்த மம்மிக்கு அறிவே இல்ல அவ கூட என்ன கம்பைர் பண்ணி பேசி கிட்டு இருக்காங்க” ஹரிணி திட்டியவாறே வர
 
“விடிஞ்சா அந்திபட்டா ஏதாவதொரு பஞ்சாயத்து வீட்டுல இருக்கு. பார்கவிக்கு விடிவுகாலமே! இல்லையா? இன்னைக்கி என்னனு தெரியலையே!” அன்னையிடம் செய்கையால் என்னவென்று மாதேஷ் கேக்க உமையாளோ தெரியாது எனும் விதமாக தலையசைத்தாள்.
 
தங்கதுரை மனைவியை அமைதியாக இருக்கும்படி கூற காதம்பரி அடங்குவதாக தெரியவில்லை. “என்ன நீங்க அமைதியாக இருக்கிறீங்க? ஊருக்கு ஒரு நியாயம்? வீட்டுக்கு ஒரு நியாயமா? ஊருல யாராவது ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணா உங்க அப்பா வெட்டி வீசுவாரு. அவரு பொண்ணே பண்ணதும் மன்னிச்சு விட்டுட்டாரா? அதான் அவ மகளை கூட்டிட்டு வந்து நிரூபிச்சிட்டாரே! இன்னும் என்ன” காதம்பரி விடுவதாக இல்லை. நெடுநாள் பாத்திருந்த நாள் இன்றுதான் போலும் பேசியே பார்கவியை வீட்டை விட்டு வெளியேற்றினால் போதும். மாதேஷ் அவளை திருமணம் செய்யவும் மாட்டான். தன் மகனும் அடங்கி இருப்பான் என்ற எண்ணம் நொடியில் உருவாக,
 
“யாரு கண்டா என்ன திட்டத்தோட அவ இந்த வீட்டுக்கு அடி எடுத்து வச்சிருக்கானு. வயசு பசங்க ரெண்டு பேர் இருக்கானுகளே! நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டா யாரு பதில் சொல்லுறது?”
 
காதம்பரி பேசிக்கொண்டே போக மருதநாயம் தங்கதுரைக்கு கண்ணசைக்க தன் பலம் கொண்ட மட்டும் காதம்பரியை “பளார்” என்று அறைந்திருந்தான் தங்கதுரை.
 
“நானும் போனா போகுதுனு பாத்துக்கொண்டு இருக்கிறேன். ஓவரா பேசிக்கிட்டே போற, அப்பா என்ன தப்பா பேசிட்டாருனு எகிறுற? மரியாதை இல்லாம பேசுற. போ உள்ள” கர்ஜித்தவர் வெளியே செல்ல கணவன் அடித்ததில் அதிர்ச்சியடைந்தாள் காதம்பரி.
 
அவள் குரல்தான் இந்த வீட்டில் ஓங்கி ஒலிக்கும். யாருமே எதிர்த்து பேச மாட்டார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் தன் குடும்பம் என்று காதம்பரி பிரித்துத்தான் பார்ப்பாள். அவள் எது செய்தாலும், என்ன பேசினாலும் தங்கதுரை அவள் பக்கம்தான் நிப்பான். மருதநாயகத்தை அவள் பலதடவை இவ்வாறு கேள்வி கேட்டு இருக்கிறாள். அவளை பொறுத்தவரையில் இது சாதாரணம். அதற்கு போய் அடித்து விட்டதாக கோபம் கொண்டாலும் என்ன செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்தவளாக கருவிக்கொண்டாள்.
 
ஈகைசெல்வன் வந்ததற்கு பின்னால் எல்லாமே! தலைகீழாக நடப்பதாக அங்கே இருந்த அனைவருக்கும் தோன்ற அவனைத்தான் பார்த்தனர். அவனோ! பொறுமையாக குடித்த காபி கப்பை மேசையில் வைத்து விட்டு நிமிர தயாளன் வந்து, மூன்றாம் மாடியில் சீசீடிவி பொருத்தி விட்டதாகவும், வீட்டை சுற்றியும், தோட்டத்திலும், பொருத்தி விட்டதாகவும், இரண்டாம், மற்றும் கீழ் மடியில் மாத்திரம் பொறுத்த வேண்டி உள்ளகாக கூற, தன்னிடம் ஒரு வார்த்தையேனும் கேளாமல் இவன் பாட்டுக்கு தன் சொந்த வீடுபோல் முடிவெடுத்து செய்வதை எரிச்சலாக பார்த்த மருதநாயம் என்னவென்று விசாரிக்க, தன் பாதுகாப்பை கருதி வீட்டிலும், வீட்டை சுற்றியும் சீசீடிகள் பொருத்தி இருப்பதாகவும். இன்னும் கொஞ்சம் பொறுத்த வேண்டி இருப்பதாகவும் கூறினான் ஈகை.  
 
“நானும் மாதேஷ் கிட்ட சொல்லிக்கிட்டுதான் இருந்தேன். நீயாச்சும் பண்ணிட்டியே நல்லது” வேதநாயகி சொல்ல மருதகாயகம் பல்கலைக் கடித்தார்.
 
கணவன் கோப முகம் கண்டு “இல்லங்க பின்னாடி வேலியை கழட்டிகிட்டு திருட்டு பயலுங்க மரத்துல காய்ச்சதெல்லாம் கழவாண்டிகிட்டு போறானுக, மாதேஷ் கிட்ட சொன்னேன் அவன்தான் கேமரா………” என்று இழுக்க
 
“ஆமா தாத்தா நல்லதுதான்” மாதேஷும் சொல்ல நடந்த க்ளோபரத்தில் சீசீடிவியை பற்றி சிந்திக்கும் மனநிலையில் இல்லாததால் சாப்பிடாமலே கிளம்பி கரும்பு ஆலைக்கு சென்று விட்டார் மனிசன்.
 
யாரும் காலை உணவுக்காக மேசைக்கு வரவில்லை. ஈகையும் தயாளனும் வந்து சாப்பிட அமர வேதநாயகி பார்கவியை அழைத்து அவர்களுக்கு பரிமாறும்படி கூற மறுக்க முடியாமல் வந்தவள் அவர்களுக்கு இடியாப்பம் மற்றும் பாயாவை வைக்க,
 
“நீயும் எங்களோடு உக்காந்து சாப்பிட்டேன் பார்கவி” அவள் வைத்ததை போதும் என்று தடுத்தவாறு ஈகை கூற
 
புன்னகை முகமாக கேட்பவனிடம் என்னவென்று சொல்வது? “இந்த வீட்டுக்கும் நேக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோன்னோ! நேக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லேன்னு சொல்றதா? அதனால்தான் இங்கே என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் நான் ஒதுங்கிண்டு போறேன்னு சொல்றதா? என்னிடம் இருந்து விலகி நில் என்று கூறுவதா? இல்லையென்றால் செய்யக்கூடாத தவறை நான் செய்துவிடக் கூடும். உனக்கு பெரும் தவறிழைத்தவள் என்று என்னை ஆளாக்கி விடாதே!என்று கூறுவதா? தொண்டையில் சிக்கிய முள்ளாய் பல விடைகள் பார்கவியின் என்ன ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், அவள் வாயில் வந்தது என்னமோ
 
“இல்ல நீங்க சாப்பிடுங்கோ?” வீட்டில் இன்னும் யாரும் சாப்பிடவில்லை. அவள் மட்டும் எவ்வாறு சாப்பிடுவது? அதனாலயே தயங்கியவாறு மறுத்தாலும். நேற்று இரவு சாப்பிடாத அவள் வயிறு சத்தம் எழுப்பி அவளை காட்டிக் கொடுக்க ஈகை சத்தமாக சிரித்து விட்டான் என்றால் அவனை முறைத்த தயாளன்
 
“என்னமா தங்கச்சி நீ. பசிச்சா சாப்பிடாம இப்படி பட்டினி இருக்கணுமா? முதல்ல உக்காரு” அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்தவன் அவள் தோள் தொட்டு ஈகையின் அருகிலையே அமர்த்தி அவனே தட்டும் வைத்து பறி மாற பார்கவியின் கண்களில் நீர் நிறைந்தது.
 
அவள் தந்தைக்கு பிறகு அன்பாக தயாளன்தான் அவளுக்காக உணவு பரிமாறி இருக்கிறான். தங்கை என்று பாசமாக வேறு அழைத்தான். எங்கிருந்தோ வந்தவர்கள் இவர்கள் ஒருவன் காபி போட்டு கொடுக்கிறான். ஒருவன் உணவு பரிமாறுகிறான். இவர்களுக்கு துரோகம் இழைக்க சொல்கிறார்கள். எவ்வாறு செய்வது? அவர்கள் கவனிக்காத விதத்தில் கண்ணீரை சுண்டி விட்டவள் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க,
 
“இத ட்ரை பண்ணு நல்லா இருக்கு” ஈகை அவள் தட்டில் வைப்பதை எல்லாம் சாப்பிடலானாள் பார்கவி.
 
பசியோடு இருக்கிறாளே! என்று பார்கவியின் மீது இரக்கப்பட்டாலும், பார்கவியின் மனநிலையையே! சூழ்நிலையையோ! அறியாமல் ஈகைக்கு உதவத்தான் தயாளன் பார்கவியை அவன் அருகில் அமர்த்தி உணவு பரிமாறினான். பாவம் அவள் அதை கவனிக்கவில்லை.
 
முதல் சந்திப்பிளையே! ஈகையை பற்றிய நல்லெண்ணம் மனதில் தோன்றி இருக்க, அவன் அருகில் அமர்ந்ததையோ! அவன் பரிமாறினதையோ! சாதாரணமாகவே! எடுத்துக்கொண்டாள். ஏனோ! அவனை அந்நியமாக பார்க்க அவள் மனம் நினைக்கவில்லை. சாதாரணமாக பேச்சுக்கொடுத்தவாறு அவளை அறிய முற்பட்டான் ஈகை. 
 
அங்கே வந்த ஹரிஹரன் அவள் ஈகையோடு அமர்ந்து உணவுண்பத்தைக் கண்டு கொதித்தான். அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு பார்கவியின் சாப்பாட்டு தட்டை பறக்க விட வேண்டும் என்று தோன்றினாலும் துப்பாக்கியோடு நின்றிருக்கும் ஜெய்யை கண்டு கோபத்தைக் அடக்கிக் கொண்டவன் வேண்டுமென்றே பார்கவியின் அருகில் உள்ள கதிரையில் அவளை உரசியும் உரசாதவாறும் அமர்ந்து தனக்கான உணவை பரிமாறிக்கொள்ள முகம் மாறினாள் பார்கவி.
 
“என்னடா தம்பி இவன் போக்கு சரியில்லையே!” தயாளன் ஈகையின் காதைக் கடிக்க
 
“ம்ம்” என்றவன் அமைதியாக சாப்பிட தயாளனுக்குத்தான் கோபம் அடங்கவில்லை.
 
“பார்கவிமா அந்த கிரேவியை கொஞ்சம் எடுத்து கொடுமா?” தயாளன் கேட்க அவள் கைக்கு எட்டாததால் அவள் எழுந்து செல்ல தயாளன் ஹரிஹரனின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள பார்கவியின் தட்டை ஈகையின் மறுபுறத்தில் வைத்திருப்பதைக் கண்டு தயாளனை நன்றியோடு பார்த்தவள் அங்கே அமர்ந்து உண்ணலானாள்.
 
“கோவிச்சுக்காதீங்க தம்பி, அங்க உக்காந்தா எதுவும் எட்ட மாட்டேங்குது. அந்த புள்ளையும் சாப்பிடவா? பரிமாறவ? பாவமில்லை” இளித்தவாறு கூற பற்களை நறநறவென்று கடித்தான் ஹரிஹரன்.
 
சாம்பார் தீர்த்து விட்டது என்று கவனித்து வேலையாள் ஒருவர் சுடச்சுட சாம்பார் எடுத்து வர ஹரிஹரனின் அருகில் வந்ததும் அந்த வேலையானின் காலை இடறி விட்டு சாம்பாரை அவன் மேல் ஊற்றி விட்டான் தயாளன்.
 
சூடுதாங்கமால் அவன் கத்தியவாறு எழுந்து சென்று வாஷ்பேஸினில் கழுவ “எப்படி?” என்று ஈகையை பார்த்து கண்ணடித்தான்.
 
“அவன் உரசினத்துக்கே! சாம்பாரை கொட்டின. நான் பண்ண போறதுக்கு என்ன பண்ண போற?” சாதாரண குரலில் கேட்டு விட்டு அமைதியாக உண்ண அவனை அதிர்ச்சியாக பார்த்தான் தயாளன்.
 
உண்மைதான் ஹரிஹரனுக்கு ஒரு நியாயம் ஈகைக்கு ஒரு நியாயமா? இல்லை. ஈகை அப்படியா? காலேஜ் போகும் போது எத்தனை பெண்கள் அவன் பின்னால் அலைந்திருப்பார்கள் எந்த பெண்ணிடமாவது நின்று பேசி இருப்பானா? அவன் வாயில் மருதநாயத்தின் பேர் தவிர வேறு பெயர் வந்திருக்குமா? பெண்களோடு சிரித்து பேச வேண்டிய வயதில் பணத்தின் பின்னால் அலைந்தான். ஈகையோடு இவனை ஒப்புநோக்குவதா? நொடியில் சமாதானமடைந்தவன் 
 
 “நீயும் அவனும் ஒண்ணா? இவன் கொழுப்பெடுத்து
அலைகிறான். டோமி, ஜிம்மி, ரோகி இருக்கிற எல்லா நாய்களையும் விட்டு இவன ஓட விட்டு துரத்தி கடிக்க விடணும்” தயாளன் கோபமான முபாவனையில் சொல்ல 
 
“செஞ்சிடலாம்” ஒற்றை வார்த்தையில் ஈகை முடிக்க
 
“டேய் அப்படி ஏதும் பண்ணி தொலைச்சிடாத டா. நா எதோ கோபத்துல சொல்லிட்டேன்” தயாளன் தடுமாற கண்சிமிட்டி சிரித்தான் ஈகை.
 
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பார்கவிக்கு புரியவில்லை. எதோ முக்கியமான விஷயம் போலும் என்று அவள் அமைதியாக சாப்பிட அவளை பார்த்தவாறே வந்தமர்ந்தான் மாதேஷ்.
 
“அடுத்த வில்லன் வந்துட்டான் டா. இவன் என்ன பண்ண போறானோ!” தயாளன் ஈகையின் புறம் திரும்பி கூற
 
வந்தவன் இவர்களிடம் சற்று தள்ளியே இருந்து உணவை பரிமாறிக்கொள்ள ஈகை அவனை ஆராய்ச்சியாக பார்த்தான்.
 
வேதநாயகியின் சாயலில் இருந்தான். குணமும் அவர் போல்தான் போலும். ஆனால் மருதநாயகத்தை போல் எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் சந்தேகமாக பார்ப்பவன்.
 
“பார்கவி காலேஜ் போக டைம் ஆச்சுல்ல சீக்கிரம் போய் ரெடியாகு. உன்ன விட்டுட்டு நானும்  என் வேல விஷயமா போகணும்” சொல்லி முடிக்கும் பொழுது ஈகையைத்தான் பார்த்தான் மாதேஷ். அவன் பார்வையில் என்ன இருந்தது என்று ஈகையால் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
பார்கவியும் சரியென்று தலையை ஆட்டியவாறு உண்டு முடித்து
எழுந்து செல்ல
 
“நீ என்ன பண்ணுறியோ எது பண்ணுறியோ எனக்கு தெரியாது. அந்த பொண்ண நீதான் காலேஜ்ல கொண்டு போய் விடணும்” தயாளன் உத்தரவாக சொல்ல
 
“ஆமாம் அவ என் முறைப்பொண்ணு பாரு. நான் கூப்பிட்ட உடனே! அவள் வந்து வண்டியில் உக்காந்திட்டுதான் மறுவேலை பார்ப்பா” தயாளனை நன்றாக முறைக்கலானான் ஈகை.
 
“அட நீ சொன்னாலும் சொல்லலைனாலும் அவ உனக்கு முறைப்பொண்ணுதாண்டா மாப்புள” தயாளன் கூற
 
“அட ஆமா” என்றான் ஈகை.