செவ்வானில் ஒரு முழு நிலவு 7

6496

நிலவு 7
பார்கவி அறையிலையே முடங்கிக் கிடந்தாள். இரவு உணவு உண்ணவும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இரவில் அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை. அதனாலே யாரும் அவளை தேடவும் இல்லை.
 
தன்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று நினைத்து சந்தோசம் கொள்வதற்கு பதிலாக, மெளனமாக கண்ணீர் வடிக்கலானாள் பார்கவி.
 
இதுவே அவள் வீடாக இருந்திருந்தால்? அவள் இவ்வாறு முடங்கித்தான் கிடப்பாளா? அவள் அன்னையும் தந்தையும் அவளை அவ்வாறு இருக்கத்தான் விடுவார்களா? கொஞ்சம் முகம் சுனாங்கினாலும் என்ன என்னனு கேட்டே முன்னாடியும், பின்னாடியும் நடப்பார்கள்.
 
அவளுக்கு மாதாந்த ருது வரும் பொழுது வயிற்று வலியால் அவதியுறுவாள். விசாலாட்சி மறந்தாலும் சுப்பிரமணிய சாஸ்திரிகள் அந்த வாரம் முழுக்க அவள் உணவில் கவனம் செலுத்தி அதற்கு ஏத்தது போல் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்து விடுவார். அவ்வளவு பாசம் அவள் மேல். இங்கு வந்த பின் மனபாரமும். மனவேதனையையும் விட வயிற்று வலியெல்லாம் பார்கவிக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஏனோ இன்று பெற்றோரின் நியாபகம் அதிகமாக வந்து கண்களில் நீர் நிறைந்து வழிந்துகொண்டே இருந்தது.
 
 தந்தையைத்தான் இழந்துவிட்டாள். அன்னையின் உயிரை காப்பாற்ற எதுவேனாலும் செய்ய தயாராத்தான் இருந்தாள். அதற்காக மானத்தை விற்கணுமா?
 
மருதநாயகம் அவளிடம் சொன்ன விஷயமும் சொன்ன விதமும், இப்பொழுது நினைத்தாலும் உடல் கூசி நடுங்கியது.  
 
“முடியும் உன்னால் மட்டும் தான் முடியும். எனக்கு என் நிலம் வேணும். உனக்கு உன் அம்மாவின் உயிர். அதுக்கு வந்திருப்பவனை ஏமாற்ற வேண்டும்”
 
“ஏமாற்ற வேண்டுமா?” மனதில் கேள்வி எழுந்தாலும் அவளின் கூர்விழிகளால் ஏறிட்டு மருதநாயகத்தை கேட்க,
 
“என்ன புரியலையா? அவன் உன்ன நம்பனும். முழுசா நம்பனும். அவன் நம்பிக்கையை உன்னால பெற முடியுமா?” நக்கல் கலந்த குரலில் அவர் சொல்லிச் சிரித்தார்.
 
சிறு பெண்ணான பார்கவிக்கு அவர் சொல்ல வருவது புரியவில்லை. “இவர் என்ன சொல்கிறார். வந்திருப்பவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி சொத்தை எழுதி வாங்க வேண்டுமா? யாரான அப்படி சொத்தை எழுதி கொடுப்பாளோ?  என்ன உளறல் இது” எல்லாம் மனத்துக்குள்தான் நினைத்தாள். 
 
“அப்பா நீங்க இப்படி இலை மறை காயா பேசினா எப்படி? பாப்பாக்கு புரியும்படி பட்டுனு சொல்லுங்க” விக்னேஸ்வரன்தான் தேன்குலைத்த குரலில் பேசினான்.
 
பார்கவிக்கு ஆச்சரியம் தாளவில்லை. “என்னை பாப்பான்னா கூப்பிட்டார்?  இருக்காதே! என்னை கண்டாலே எரிந்து விழுபவர் இன்று எதற்கு பாசமாக பேசுகிறார்? என்னமோ சரியில்லைன்னு நேக்கு தோணறதே” உள்மனம் கூற மருதநாயகத்தை ஏறிட்டாள்.
 
“எல்லாம் சொன்னா புரிஞ்சிப்பா. அவ அம்மா உசுரு முக்கியமில்ல” சொன்னது தங்கதுரை.
 
“இவர்களின் பேச்சு ஒண்ணும் சரியில்லையே” பார்கவியின் மனம் அடிக்க ஆரம்பிக்க, மருதநாயகம் பேச ஆரம்பித்தார்.
 
 “இந்த காலேஜ் போற பசங்க வீட்டுக்கு தெரியாம பண்ணுவாங்களே! அதாம்மா… காதல்.  காதல் கீதல்னு அதுதான் நீ பண்ணனும். அத பண்ணி அவனை உன் கைக்குள்ள கொண்டுவரனும். உன் பின்னாடியே சுத்த விடணும். அவனை உன் நினைப்புல, மயக்கத்துல வச்சிருக்கணும். உன்னால முடியும் தானே! கொஞ்சம் அப்படி இப்படினு தாராளமா நடந்துக்க, அதுக்கு காசு வேணாலும் வாங்கிக்க. அவனுக்கு கல்யாணம் கூட ஆகல. பய டக்குனு உன் அழகுல கவுந்துடுவான்”
 
குரல் பிசிறு தட்டவே இல்லை. தனது பேத்தியின் வயதில் இருக்கும் சிறு பெண்ணிடம் பேசுகிறோம் என்று அந்த பெரிய மனிதனுக்கு கூச்சமும் இல்லை. நாதியில்லாதவள் தானே! அவரே! கதி என்று இருப்பவள் தானே! என்ற அகம்பாவம் அவரை திமிராக பேச வைத்திருந்தது.
 
அவர் பேசப் பேச அதிர்ச்சியடைந்தவள். தன்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்ற கோபமும் மேலோங்க, அவர் கடைசியில் சொன்னதில் பார்கவிக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எங்கே அவர் மீது வாந்தி எடுத்து விடுவாளோ! என்று அஞ்சி வாயை ஒரு கையால் பொத்திக்கொண்டவள் மறுகையை வயிற்றின் மீது வைத்து அழுத்தலானாள்.
 
இதுவே சமவயதுடையவர்கள் யாராவது பேசி இருந்தாள் கன்னம் பழுத்திருக்கும். அவரின் வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக நிற்க, அவர் நிறுத்துவதாக இல்லை. ஏன் அவரின் செல்லப் பேத்தி ஹரிணியை இந்த காரியத்தை செய்ய சொல்ல வேண்டியதுதானே! பார்கவியால் நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. அதே சமயம் கண்களின் ஓரம் முணுக்கென்று கண்ணீரும் எட்டிப்பார்த்திருந்தது.
 
“என்னால் முடியாது. இப்படி ஒரு காரியத்தை கண்டிப்பாக செய்ய மாட்டேன். என்ன பெத்தவங்க என்ன அப்படி  வளர்க்கலை, நான் ஒழுக்கம் கெட்டவளும் இல்ல” அவரை நேர்பார்வை பார்த்தே தன் மறுப்பை தெரிவிக்க, மருதநாயகம் மீசையை முறுக்கலானார்.
 
“என்ன எதிர்த்து பேசுறியா?” விக்னேஸ்வரன் கையை ஓங்க மிரண்டு போனாள் பார்கவி.
 
“விக்னேஸ்வரா உன் கோபத்தை கட்டுப்படுத்துடா… எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேங்குறியே” காதை குடைந்தவாறு கூலாக சொன்ன மருதநாயகம் “இங்க பாரு பார்கவி உனக்கு ரெண்டு நாள்தான் டைம் நல்லா யோசிச்சு உன் முடிவ சொல்லு. சரினு சொன்னா நீ இந்த வீட்டுல இருக்கலாம் உன் அம்மாக்கு வைத்தியமும் பார்க்கலாம். இல்லையா பெட்டிபடுக்கைய கட்டி உன் அம்மாகூட கிளம்பிடு” என்ற மருதநாயகம் துண்டை உதறியவாறு அவ்விடத்திலிருந்து நடையை கட்ட பார்கவி அவர் அமர்ந்த இடத்தில் தொப்பென்று அமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழலானாள்.
 
“நாய்க்கு நக்கவே சோறு இல்ல. இதுல அத பண்ண மாட்டேன். இத பண்ண மாட்டேன்னு சொல்லிக்கிட்டு. நாம சொல்லுறத பண்ணிதான் ஆகணும்” தங்கதுரை ஏளனமாக விக்னேஷ்வரனிடம் சொல்லியவாறு மருதநாயகத்தின் பின்னால் நடக்கலானான்.
 
நன்றாகவே இருட்ட ஆரம்பிக்க, ஈகையின் வேட்டை நாய்களை தோட்டத்தில் அவிழ்த்து விட்டார்கள் போலும் அதில் ஒன்று வந்து பார்கவியின் அருகில் நின்று உறும அந்த சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் அவள் இடுப்பின் அளவை விட கொஞ்சம் உயரம் குறைவான அந்த கருப்பு நிற நாயை கண்டு வெலவெலத்து போனாள்.
 
“டோமி சிட் டவுன்” யாரோ சொல்ல நாக்கை தொங்க போட்டவாறு அவள் காலடியிலையே அமர்ந்து விட்டது டோமி. பார்கவிக்கு எழுந்து நடந்தால் எங்கே டோமி அவள் கால் சதையை கவ்வி விடுமோ என்று அச்சம் தோன்ற அங்கேயே அமர்ந்து விட்டாள்.
 
“இருட்டுல உக்காந்து நட்சத்திரங்களை கவுண்ட் பண்ணுறீங்களா?” கேலியோ! கிண்டலோ! இல்லாமல் சாதாரணமாக கேட்டது அந்த குரல்.
 
தோட்டத்தின் மத்தியில் தான் பார்கவி அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கு எரியவில்லை. அதனால் அவளோடு பேசுபவன் யார் என்று அவளுக்கு சட்டென்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அவளை தெரிந்திருக்கிறது. அவள் இருக்கும் மனநிலையில் குரலுக்கு சொந்தக்காரனை அடையாளம் காண முடியவில்லை.
 
அவள் பதில் பேசாது அமைதியாக இருக்கவும். கையிலிருந்த அலைபேசியின் டாச் லைட்டை உயிர்பித்த ஈகைச்செல்வன் “சாரி மூன் லைட் கூட இல்ல. என் முகம் கூட தெரியல. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு போறேன்” என்று கையிலிருந்த மின்குமிழை பொறுத்தலானான்.
 
அவனை அங்கு, அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவள் அதிர்ச்சிக்குள்ளாக, மொழியற்று திகைத்து நின்று விட்டாள். அவன் மின்குமிழை பொருத்துவதிலையே தெரிகிறது. அவன் எதற்காக வந்திருப்பான் என்று. நாய் உருமவும் இருட்டில் அவள் அமர்ந்திருப்பதை கண்டு பேசி இருப்பான். விதியும் அவனை இழுத்து வந்து அவள் முன்னால் நிறுத்துவத்தை எண்ணிப்பார்த்தவள் அவனுக்கு பதில் சொல்லாது எழுந்துக்கொள்ள மின் விளக்கும் எரிந்தது.
 
அந்த விளக்கொளி பட்டு அவன் நிறத்துக்கு பூரண சந்திரன் போல் பிரகாசமாக ஜொலித்தான் ஈகைச்செல்வன்.  ஈகையின் புன்னகை முகம் பார்கவியின் கண்களில் விழ “இவனும் யாருக்கோ மகனாக, சகோதரனாக, இருப்பவன்தானே! இவனை காதலித்து ஏமாற்ற சொல்கிறார்கள். அதுவும் சொத்துக்காக. கள்ளமில்லாமல் புன்னைக்கிறான். நல்லவனாக தெரிகிறான். இவனுக்கு ஏற்கனவே! கல்யாணம் ஆகியிருக்கப்படாதா?”  
 
“என்னங்க அப்படி என்ன என் முகத்துல இருக்குனு ஆராய்ச்சி பண்ணுறீங்க?” தாடையை தடவியவாறு ஈகை கேட்ட கேள்வியில்
 
“அவன் முகத்தையே இத்தன நாழி பாத்துண்டிருந்தேன்னு என்னெப் பத்தி என்ன நெனைப்பானோ?” தன்னையே கடிந்துக்கொண்டவள் தலையசைத்து ஒன்றுமில்லை என்று டோமியை பார்க்க
 
“அது ஒன்னும் பண்ணாது குட்டிதான்” என்று கண்சிமிட்ட
 
அங்கே அவனருகில் இன்னும் சிறுது நேரம் இருக்க தூண்டும் மனதை அடக்கியவள், டோமியை விட்டு மெதுவாக நகர்ந்து வீட்டுக்குள் ஓடாத குறையாக சென்றிருந்தாள்.
 
“போடி போ. நீ இங்க உக்காந்திருக்குறத பார்த்துட்டுதான் வந்தேன். நீ எங்க போனாலும் உன் முன்னாடி வந்து நிப்பேன்” கருவிக்கொண்டான் ஈகை.
 
அறைக்கு வந்தவள் அதன் பின் வெளியே வரவே இல்லை. ஈகையின் கண்கள் பார்கவியை தேடி அலைய ஹரிணி வீட்டுக்குள் வரும் புதியவனைக் கண்டு “வாவ்” என்று வழி மறித்தாள்.
 
“என்ன சிஸ்டர்” என்றான் ஈகை.
 
அவர்களின் உறவுமுறையை நன்கு அறிந்து வைத்திருந்தவனால் பார்கவிதான் அவனின் ஒரேகுறியாகிப்போக, எட்டியே நில் என்று அவளுக்கு புரியவைக்கவும், என்னிடம் ஒதுங்கி நில் என்று சொல்வதாகவும் இலகுவாக அவ்வாறு அழைத்திருந்தான் ஈகை.
 
“வாட்? சிஸ்டர்? எனக்கு ஏற்கனவே ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க” கடுப்பாகி சொன்னாள் ஹரிணி. 
 
“இருந்துட்டு போகட்டும். என்னையும் அந்த லிஸ்டுல சேர்த்துக்க” ஈகையும் அசாட்டாக சொல்ல
 
அவனை முறைத்த ஹரிணி “ரொம்ப திமிரு புடிச்சவனாக தெரிகிறான்” என்று முணுமுணுத்தாள்.
 
ஹரிணி ஈகைசெல்வனிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட தங்கதுரை பதறியடித்துக்கொண்டு வந்து “ஹரிணி இங்க என்ன பண்ணுற?” என்று அதட்ட ஈகையின் முகத்தில் புன்னகையோடு சுவாரஸ்யம் கூடியது. 
 
“அட இந்தாளு பொண்ணு கூட பேசினா இந்தாளுக்கு எரியுதே! அப்போ இன்னும் பெற்றோலை ஊத்த வேண்டியதுதான்” உள்ளுக்குள் நகைத்தவன் ஹரிணியிடம் பேச்சை வளர்க்கலானான். அவள் என்ன படிக்கிறாள், எந்த காலேஜ், யார் கூட காலேஜ் போறா, போன்ற கேள்விகளோடு அவளின் பொழுதுபோக்கு என்று பார்கவியிடம் கேக்க எண்ணி இருந்த எல்லா கேள்விகளையும் அவளிடம் கேக்கலானான்.
 
தங்கதுரை பல்லைக் கடித்தவாறு இருவரையும் முறைத்துக்கொண்டிருக்க, இரவு உணவு உண்ணும் நேரமானதால் ஒவ்வொருவராக அந்த இடத்துக்கு வர, நடுவாசலில் நின்றிருப்பவனை சிலர் ஆராய்ச்சி பார்வையும், சிலர் சுவாரசியமாகவும் பார்த்தவாறே வந்தனர்.
 
மாதேஷிடமும், ஹரிஹரனிடமும் தானே அறிமுகப்படுத்திக்கொள்ள, மாதேஷ் யோசனையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் தாத்தாவை அறிந்தவரையில் யாரையாவது வீட்டில் தங்க வைத்தால் காரணமில்லாமல் தங்க வைக்க மாட்டார். ஹரிஹரன் ஈகையின் தோல் நிறத்தை பார்த்து முணுமுத்தவாறே அறிமுகமாகிக்கொண்டு ஒதுங்கிக்கொண்டான்.
 
“என்ன ஈகா அங்கேயே நிக்குற சாப்பிட வா” வேதநாயகி உரிமையோடு அழைக்க வீட்டு உறுப்பினர் அதிசயமாக ஈகையை பார்த்தனர்.
 
“ஓஹ் ஷுவர்” என்றவன் அவர்களோடு நடக்க அவனை இழுத்து நிறுத்தியது ஒரு கை.
 
“நீங்க போங்க இதோ வரோம்” என்றவன் “என்ன?” என்று தயாளனை முறைக்க,
 
“டேய்.. எப்போல இருந்துடா பொண்ணுங்க கூட கடல போட ஆரம்பிச்ச? வந்த வேலைய விட்டுட்டு வேண்டாத வேலையெல்லாம் பாக்குற? அந்த பார்கவி பொண்ண கண்ணுலயே காணோம். இந்த பொண்ணுகிட்ட பேசிகிட்டு இருக்க” தயாளன் பொரிய ஆரம்பிக்க
 
“டைம் பாஸ் டா” குறும்பாக சிரித்தவன் சாப்பாட்டு மேசையில் சென்று அமர தயாளனும் கூடவே அமர்ந்தான்.
 
“என் கிட்ட எவ்வளவு கேள்வி கேட்டிங்க நீங்க யாரு? உங்க பேரென்ன? எங்க சொந்தமா? ஒண்ணுமே சொல்லலையே?” கழுத்தை வளைத்து குறும்பாக சிரித்துக் ஸ்டைலாக கேட்டாள் ஹரிணி.
 
அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரை பற்றியும் அறிந்த பின்னரே! அந்த  வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தான் ஈகை. ஹரிணியின் செயல் அவளின் குணத்துக்கு மாறாக விசித்திரமாக இருப்பதாக தோன்ற,
 
“யப்பா உலக மஹா நடிப்பு டா இது” தயாளன் ஈகையின் காதில் முணுமுணுக்க, சிரிப்பை கட்டுப்படுத்த பெரும் பாடுபடலானான் ஈகை.
 
ஹரிஹரனுக்கும் அதே கேள்விதான். எங்கே பார்கவி இவன் அழகில் மயங்கி விடுவாளோ என்ற அச்சம் அவனுக்கு. யாரிவன் என்று தெரிந்தே ஆகா வேண்டி இருக்க “ஆமா சார் யாருன்னு சொல்லவே இல்லையே” அந்த சார் இல் நீ எங்களுக்கு அந்நியன் டா என்று சொல்லாமல் சொன்னான் ஹரிஹரன்.
 
மகளின் செய்கையை பல்லைக் கடித்து பாத்திருந்த தங்கதுரை மகனும் கேட்க கடுப்பானவர் “சாப்பிடும் நேரத்தில் என்ன பேச்சு” என்று அதட்ட மருதநாயகம் விக்னேஸ்வரனோடு வந்தமர அந்த இடம் அமைதிக்குள்ளானது.
 
இரவு உணவென்று சாதாரண உணவல்ல அங்கே விருந்தே கடைபரப்பி இருக்க, “யார் வீட்டு சொத்தை யார் திண்றழிக்கிறது” கடுப்பாகி முணுமுத்தான் ஈகை.
 
“இதெல்லாம் அங்கிட்டு வைங்க தம்பிங்க ரெண்டும் சுத்த சைவம்” வேதநாயகி சிக்கன் குருமாவையும், இறால் வருவலையும் அப்புறப்படுத்த அவற்றை ஏக்கப்பார்வை பார்த்த தயாளன்
 
“சொன்னதும் சொன்னான். இவன் மட்டும் சைவம்னு சொல்லி இருக்க வேணாம். அதென்ன என்னையும் கூட்டு சேர்க்கிறான்” ஈகையை முறைத்தான்.
 
ஈகைக்கு அவனை கவனிக்க நேரமில்லை அவனுக்கு பார்கவி எங்கே என்று தெரிந்தாக வேண்டி இருக்க “ஆமா பாட்டி உங்க பேத்தி எங்க?” சாதாரணமாக கேட்பது போல் கேட்க
 
“நான்தான் இங்க உக்காந்திருக்கிறேனே” அதே ஸ்டைலிஷ் புன்னகையை வீசினாள் ஹரிணி.
 
 “பேசாம நீ இந்த பொண்ணையே! ம்ம்.. வந்த வேல சீக்கிரம் முடிஞ்சிடும். அவளே! உன்மேல ரொம்ப ஆர்வமா இருக்கா” தயாளன் ஈகையின் காதில் குனிந்து கூற
 
“போடா டேய்ன்னு போய்கிட்டே இருப்பா… இவளுக்கெல்லாம் வலிக்கவே வலிக்காது. நீ கொஞ்சம் மூடு” அண்ணனை அடக்கியவன் ஹரிணியின் புறம் திரும்பி
 
“நீங்க இல்ல சிஸ்டர்” அந்த சிஸ்டரில் அழுத்தத்தை கூட்டி சொன்னவன் “மத்தியானம் பாத்தேனே! பாட்டி அறிமுகப்படுத்தி வச்சாங்களே! பேரு கூட” யாரும் சந்தேகப்படாதவாறு வேதநாயகியையும் உள்ளே இழுத்து மறந்தவன் போல் நெற்றியை தடவ அங்கிருந்த ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு கதை சொல்லானது.
 
விக்னேஸ்வரன், தங்கதுரை, மருதநாயகம் மூவரும் மனதுக்குள் குஷியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “அட நாம அடியெடுத்து வைக்க முன்பாகவே அறிமுகப்படலமெல்லாம் நடந்திருக்கு. காரியம் சீக்கிரம் கைகூடும் போல இருக்கே” என்று பார்வைகளை பரிமாறிக்கொள்ள
 
“இவன் எதுக்கு பார்கவிய கேக்குறான்” என்று ஹரிஹரன் முறைக்க
 
“வந்த உடனே அவ வேலைய காட்டிட்டாளா” என்று ஹரிணி முறைக்க
 
“புதியவனுக்கும் பாரகவிக்கும் நடுவில் என்ன ஓடுது” என்று சந்தேகமாக பார்த்தாள் காதாம்பரி.
 
அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தது உமையாள் மாத்திரம் தான். 
 
“அவ பேரு பார்கவி பா” விகல்பம் இல்லாமல் வேதநாயகி பதில் சொல்ல
 
“பார்கவிய எதுக்கு கேக்குறீங்க” அவனை சந்தேகமாக ஏறிட்டது மாதேஷ் ஒருவனே!
 
“பாட்டி அவங்க சைவம்னு சொன்னாங்க அதான். தனியா சாப்பிடாம எங்க கூட அமர்ந்து சாப்புடுவாங்கல்ல” சாதாரணமாக சொல்வது போல் சொல்ல மாதேஷின் முகம் யோசனைக்குள்ளாக
 
“இங்க எல்லாரும் அசைவம் சாப்புடுறாங்க, இத்தனை நாளா அவங்க தனியா சாப்பிட்டாங்கனு பாட்டிதான் சொன்னாங்க அதான் தம்பி அப்படி சொல்லுறாரு” தயாளன் பாய்ந்து கூற
 
“இந்த பாட்டிக்கு வேற வேல இல்ல வரவன் போறவன்கிட்ட எல்லாம் எல்லா கதையையும் சொல்லிக்கிட்டு” ஹரிஹரன் முணுமுணுக்க,
 
“நான் சொன்னேனா பா? சொல்லி இருப்பேன், சொல்லி இருப்பேன், வயசாகிட்டதால மறந்துட்டேன்” வேதநாயகி ஈகையிடம் கேட்க ஈகை வேதநாயகி சொன்னதாக மேலும் கீழுமாக  வேகமாக தலையசைத்தான்.  
 
“என் பொண்டாட்டி ஓட்டைவாயினு அவள பல தடவ திட்டி இருக்கேன். ஆனாலும் இப்போ அவ பண்ணி இருக்குற காரியம் எனக்கு இருநூறு ஏக்கர் சொத்தை மீட்டு தர போகுது” மருதநாயகம் தங்கதுரையிடம் கூறி சிரிக்க
 
“ஆமா பார்கவிதான் ஏன் அவங்க மட்டும் சாப்பிட வரல” பார்கவியை  சுற்றியே பேச்சு இருந்தாலும் ஏதோ சாதாரணமாக கேட்பது போல் உணவை பரிமாறிக்கொண்டான் ஈகை. 
 
“பெரிய இவ வாங்க, போங்கனுக்கிட்டு” ஹரிணி கடுப்பாக
 
“அவ வரமாட்டா” பட்டென்று சொன்னான் ஹரிஹரன்
 
“உனக்கு போட்டியா இங்க ஒருத்தன் இருக்கான்னு நினச்சேன். இன்னொருத்தனும் இருக்கான் போலயே! தம்பி. என்னடா பண்ண போற?” தயாளன் சோகமா குரலில் ஈகையின் காதில் கூற அண்ணனை முறைத்தான் ஈகை.
 
“அத ஏன் பா கேக்குற, அவ வளர்ந்த விதம் அப்படி எங்க கூட ஒட்ட முடியாம தள்ளியே! இருக்கா” கவலையான குரலில் வேதநாயகி சொல்ல
 
“ஏன் பாட்டி அதுக்காக அப்படியே! இருக்க விட்டுடுவீங்களா? வற்புறுத்தி உக்கார வைக்க வேணாமா?” ஈகை சாதாரணமாக சொல்ல
 
“அவ திமிரு புடிச்சவ, கொழுப்பெடுத்த அலையிறா, நாம சொன்னா எங்க கேக்க போறா” காதம்பரி வார்த்தையை விட
 
“இவங்கதான் மெய்ன் வில்லியா இருப்பாங்க போல நோட் பண்ணிக்க டா தம்பி” தயாளன் ஈகையின் காதில் முணுமுணுமுக்க”
 
“கொஞ்ச நேரம் பேசாம இரேண்டா” அண்ணனை கடிந்தான் ஈகை.
 
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல தம்பி. அசைவத்தை பார்த்தா வாந்தி வருதுன்னு சொல்லுவா அதான் எங்க கூட சாப்பிட வர மாட்டா” சொன்னது மருதநாயகம்
 
காதாம்பரியின் முகம் பேயறைந்தது போல் வெளுத்துப்போனது. இதுநாள்வரை அவள் யாரை எது சொன்னாலும் மருதநாயகம் பதில் சொன்னதில்லை. இன்று ஒரு அந்நியனின் முன்னிலையில் அவளை அவமானப் படுத்தும் விதமாக பேசியது அவளின் கோபத்தை தூண்டியதோடு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கூடியது.
 
மற்றவர்களுக்கும் தான். காதாம்பரி வார்த்தைகளால் பார்கவியை எவ்வளவோ! திட்டி இருக்கிறாள் கண்டும் காணாது இருந்தவர் இன்று ஈகையிடம் அவளை பற்றி நல்ல விதமாக சொல்கிறார் என்றால்? என்ன காரணம் என்றே அவர்களின் மனமும் ஆராயலானது.
 
வேதநாயகிக்கு சந்தோசம் தாளவில்லை. தனது ஒரே மகள் வேற்று சாதி ஒருவரை திருமணம் செய்து ஊரை விட்டு காணாமல் போனது மருதநாயத்துக்கு வந்த பெருத்த அவமானம் என்றும் அவளை கொன்றால் தான் தீரும் என்றும் அலைந்து கொண்டிருந்தவர் பேத்தியை அழைத்துக்கொண்டு வரவும் சந்தோசம் அடைந்தாலும் பேத்தியின் மீது அன்போ அக்கறையோ காட்டாதது மனதை வாட்டியது. இன்று அவரின் வார்த்தை அந்த கவலையை துடைத்தெறிய போதுமானதாக இருந்தது.
 
“சரி சரி சாப்பிடுங்க இப்படியே பேசிகிட்டு இருக்கிறீங்க” வேதநாயகி அதட்ட  அனைவரும் அவரவர் தட்டில் பரிமாறி இருந்ததை உண்ண ஆரம்பித்திருந்தனர்.
 
 ஈகை உண்ண போக அவனை தடுத்து ஒரு கவளத்தை உண்ட தயாளன் தொண்டை அடைக்க இரும ஈகையின் உணவில் விஷம் வைத்ததாக எண்ணிய ஈகையின் மெய்ப்பாதுகாவலர்கள்  மருதநாயகத்தின் குடும்பத்தையே சுற்றி வளைத்து அனைவரினதும் தலையில் ஆளுக்கொரு துப்பாக்கியை வைத்திருந்தனர்.