செவ்வானில் ஒரு முழு நிலவு 6

6784

நிலவு 6
“அண்ணா அப்பா என்ன யோசிக்கிறாருன்னே! ஒன்னும் புரிய மாட்டேங்குது. அவனை போட்டுத்தள்ளி நிலத்த எழுதி வாங்க வேணாமா? அவன் கத சொல்லுறான் இவரு கேட்டு கிட்டு நிக்குறாரு” ஈகைசெல்வன் சொல்லும் பொழுது அரண்ட விக்னேஸ்வரன் மருதநாயகத்தின் வாரிசாக உருமாறி கோபம் தெறிக்கும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.
 
“கொஞ்சம் பொறுமையா இருடா அப்பா அனுபவசாலி என்ன பண்ணாலும் யோசிச்சு பிளான் பண்ணி செய்யுறவரு. அவர் வரட்டும் என்ன சொல்லுறாருனு கேப்போம்” தம்பியை போல் கோபப்படாமல் தந்தையை அறிந்தவனாக பொறுமைகாத்தான் தங்கதுரை.
 
காரியால அறையில் விக்னேஸ்வரனும் தங்கதுரையும் யோசனையில் ஆழ்ந்திருக்கும் பொழுது உள்ளே நுழைந்தார் மருதநாயகம்.
 
“என்னப்பா முடிவு பண்ணி இருக்கீங்க? எவனோ ஒரு பொடிப்பய நாலு தடியன்களை கூட வச்சிக்கிட்டு சும்மா மிரட்டினா பயந்திட்டீங்களா? அவனை நானே என் கையாள போடுறேன்” விக்னேஸ்வரன் எகிற
 
“முட்டாள், முட்டாள் உன் மகனுக்கு இருக்கும் தெளிவு கூட உனக்கில்ல. எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாத்தையும் பண்ண முடியாது.  அவனை பத்தி வக்கீல் சொன்னதெல்லாம் வச்சி பாத்தா பெரிய கோடீஸ்வரன். ஏகப்பட்ட சொத்து, உலகம் பூரா தொழில் இருக்கு. இவன் இறங்கி வேல பாக்குரான்னா இவன் அண்ணன்தான் மூளையா செயல் படுறான். அவன் நம்ம ஜாதியா இருந்தா.. ஹரிணிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து அவன் சொத்தையும் நம்ம சொத்தாக்கிக்கலாம்னு பார்த்தேன். நம்ம ஆளுங்க இல்ல என்றதும் வேற யோசிச்சேன்”
 
“அப்பா இவன் எப்பயும் இப்படித்தான் கோபப்பட்டு எக்குத்தப்பா யோசிப்பான். நீங்க சொல்லுங்கப்பா என்ன செய்யலாம்” தங்கதுரை சைக்கிள் கேப்பில் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கவென நல்லபிள்ளையாய் பேச அண்ணனை முறைத்தான் தம்பி.
 
“விக்னேஸ்வரா போய் பார்கவிய
நான் வரசொன்னேனு கூட்டிகிட்டு தோட்டத்துப் பக்கம் வா…”
 
“அந்த ….. எதுக்கு ..”
 
“சொல்லுறத செய்டா… இன்னைக்கு உங்கப்பன் பத்தி உனக்கு புரியும்” தோளில் இருந்த துண்டை உதறிக்கொண்டு தங்கதுரையோடு தோட்டத்தினுக்குள் நடந்தவர் தோட்டத்தின் மத்தியில் போடப்பட்ட இரும்பு கதிரையில் அமர்ந்துகொள்ள தங்கதுரையும் ஒரு கதிரையில் அமர்ந்தான்.
 
“அப்பா பார்கவி ஜானகியோட பொண்ணுன்னு சொல்லி இங்க கூட்டிகிட்டு வந்ததே அந்த நிலத்த அவ பேர்ல மாத்தி அப்பொறம் உங்க  பேர்ல மாத்தி எழுதிக்கொள்ளத்தானே!  இனி அவ இங்க இருக்க வேண்டியதில்லல. அவ இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் ரெண்டு பசங்கள்ல எவனாச்சும் அவ பின்னாடி அலைவானோனு மனசு பக்கு பக்குனு அடிக்குது”
 
“பார்கவி நல்ல பொண்ணு அவ அம்மாக்காகத்தான் நாங்க சொல்லுறபடி கேட்டா ஆனா இப்போ நான் சொல்லுறத கேப்பாளான்னு தெரியல. பேசித்தான் பார்க்கணும்”
 
“அவளை வச்சி எதோ பண்ண போறீங்கன்னு புரியுது தம்பி கிட்ட கூட அவ யாரு என்னனு சொல்லல இப்போ உண்மைய சொன்னா அவன் கொதிக்க மாட்டானா?”
 
“அவன் கோபம்தான் அவனுக்கு பிரச்சினையே அதான் நான் அவன் கிட்ட சொல்லல. கோபத்துல உங்க அம்மா முன்னாடி அந்த பொண்ண ஏதாவது சொல்லிட்டா உங்கம்மா கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. இந்த சொத்தெல்லாம் அவ அண்ணனுடையது. அவ இருக்குற வரைக்கும்தான் நம்மால அனுபவிக்க முடியும். அவளுக்கு சின்ன சந்தேகம் வந்தாலும் எல்லாத்தையும் ஆனாதைங்களுக்கு எழுதி வச்சிடுவா”
 
“அம்மா மேல அன்பா இருக்கிறதா நினச்சேன். சொத்துக்காகத்தானா?” தங்கதுரை வாய்விட்டே கேட்க
 
“பொம்பளைங்க புருஷன் பின்னாடி தான் நிக்கணும். உங்கம்மா மேல பொண்டாட்டி என்கிற பாசம் இருக்கு. இல்லைனு சொல்லல. இருந்தாலும் அவ சத்தியநாதன் தங்கச்சி அவளை நம்ப முடியாது”
 
“ம்ம்.. விக்னேஸ்வரன் வரான்” தங்கதுரை சொல்ல மருதநாயகம் தலையை திரும்பிப் பார்க்க, விக்னேஸ்வரன் வந்து கொண்டிருக்க அவன் பின்னால் பார்கவி வந்து கொண்டிருந்தாள்.
 
சேலையில் அழகாக
இருந்தாள். கூந்தலை முன்னாடி போட்டிருந்தவளின் முகத்தில் கொஞ்சமேனும் புன்னகையில்லை. மாறாக யோசனை ரேகைகள் அவள் முகத்தில் குடியிருந்தது. மருதநாயகம் அமர்ந்திருந்த விதமும், தோற்றமும் அவர் பேசப்போகும் விஷயம் அவளை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்போவது உறுதி என்பதில் ஐயமில்லை என்றே அவளுக்கு தோன்றியது.
 
இரண்டு மாதங்களுக்கு முன் அவள் வாழ்க்கை தடம் மாறிப்போன நாளும் அவள் கண்முன் விரிந்தது. அவள் அன்னை விசாலாட்சி, தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள்.
 
அந்த ஊரில் நடக்கும் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற நல்ல காரியங்கள் முதல்  ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்று நாட்களுக்கு ஈமக் கிரியைகள் அப்புறம் வருடந்தோறும் அவர் இறந்த திதியில் திவசம், அமாவாசை தர்ப்பணம் இன்னும் பிற காரியங்களையும் சுப்பிரமணிய சாஸ்திரிகள்தான் நடாத்தி வைப்பார்.
 
 
சாஸ்திரிகளே! வண்டியில் அழைத்து சென்று பார்கவியை காலேஜ் பஸ்ஸில் ஏற்றி வழியனுப்பி வைக்க இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காலேஜுக்கு பஸ்ஸில் சென்று மாலையில் வீடு வந்தால் அன்னையுடன் சங்கமம்.
 
விடுமுறை நாட்களித்தான் அக்கம் பக்கத்தில் இருக்கும், குழந்தைகளோடு விளையாடுவதும், பெரியவர்களோடு கதையடிப்பதும். இப்படியே நாட்கள் செல்ல பார்கவிக்கு நல்ல வரன் வந்திருப்பதாக விசாலாட்சியிடம் கூறிவிட்டு, அன்று பார்கவியை தானே! காலேஜில் இறக்கி விட்டு வண்டியில் சென்றவர் இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் இறந்து கிடப்பதைத்தான் பார்கவி இறுதியாக கண்டாள்.
 
காலேஜில் அமர்ந்திருந்தவளை உடனே அழைத்து தந்தைக்கு ஆக்சிடண்ட் என்றதும் மனம் பதைபதைக்க மருத்துவமனைக்கு சென்றால், அன்னையும் அதே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
 
 
தந்தைக்கு நடந்த விபத்தை கேள்விப்பட்டவளின் மூளை மரத்துப்போய் அன்னைக்கு தகவல் சொல்லக் கூட தோன்றாமல்தான் வந்திருந்தாள், வண்டியில் சென்று கொண்டிருந்தவர் மாரடைப்பால் வண்டி ஒட்டியவாறே இறந்து இருக்கிறார். வண்டி பேலன்ஸ் தவறியதில் எதிரே வந்த வண்டியில் மோதி இருக்க, எதிரே வந்த வண்டிக்காரனின் மேல்தான் தவறென்று கூட்டம் கூடி அங்கே ஒரு க்ளோபரம் உருவாகி இருந்தது. தகவல் அவளுக்கு முன் வீட்டுக்கு சென்றிருந்தததை பார்கவி அறிந்திருக்கவில்லை.
 
அழுதவாறே அன்னையை மருத்துவமனையில் சேர்ந்திருந்த பக்கத்து வீட்டு மாமியிடம் விசாரிக்க, “உங்க அப்பாக்கு இப்படி ஆகிருச்சுனு கேள்விப்பட்டு மயங்கி விழும் போது தலைய எதுலையோ இடுச்சி கிட்டா. ரொம்ப இரத்தம் போய் இருக்கு”
 
அப்படியாயின் அன்னையிடமிருந்து பதில் வராததால்தான் காலேஜுக்கு அழைத்து தனக்கு தெரிவித்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது பார்கவிக்கு.
 
எதோ சின்ன காயம் என்று வந்தவளுக்கு தந்தையின் உயிரற்ற உடலையும் அன்னையின் நிலையையும் கண்டு அவளை கவனிப்பதா! தந்தையின் காரியங்களை செய்வதா! என்ற குழப்பம்.
 
ஆனால் எங்கிருந்தோ வந்து மருதநாயகம் தான் பார்கவியின் தாத்தா என்று கூறி அனைத்து காரியங்களையும் முன்னின்று நடாத்தா கண்சிமிட்டும் சிலையாகத்தான் பாத்திருந்தாள் பார்கவி.
 
விசாலட்சிக்கு மயக்கம் தெளியவே இல்லை. அதிர்ச்சியில் மூளை பாதித்திருக்கு, கண்விழித்தால்தான் என்னவென்று கூற முடியும்” என்று டாக்டர் கூற தந்தையையும் இழந்து ஒரே நாளில் அன்னையின் நிலையையும் கண்டு வாழ்க்கையே சூனியமாகிப் போக வாய் விட்டு அழலானாள் பார்கவி.
 
அவள் தலையை தடவியது ஒரு கரம். அது மருதநாயகத்தின் கை. “அழாதே! உன் அம்மாவை எப்படியாவது காப்பாத்திடலாம்” என்று நம்பிக்கை வார்த்தைகள் கூற. அவர் யார் என்று அறியா விடினும் அந்த நேரத்தில் அவரை விட்டால் அவளுக்கு துணை என்று யாருமில்லை என்று புரிய அவர் கையை இறுக பற்றிக்கொண்டாள்.
 
வெற்றிப் புன்னகையை தங்கதுரையை பார்த்து மருதநாயகம் வீச மருதநாயகம் தனது திட்டத்தை தெளிவாக விளக்கி இருந்தாலும் பார்கவியை தங்கள் வீட்டுக்கு, தங்களோடு அழைத்து செல்வது பிடிக்காமல் முகத்தை சுளித்தான் தங்கதுரை.
 
மூன்று நாட்கள் கடந்த பின்னர் விசாலாட்சி கண் விழித்ததும், மருதநாயகத்தையும், பார்கவியையும் அழைத்த மருத்துவர் “அதிர்ச்சியில் விழுந்தவங்க தலை வேற மோதினத்துல….. அவங்களுக்கு பேரலைஸ் அட்டேக் வந்திருக்கு. முறையான மருத்துவம் பார்த்தா மூணே மாசத்துல குணப்படுத்திடலாம்” என்று நம்பிக்கையூட்ட
 
“அப்போ நாங்க சென்னைக்கே கூட்டிட்டு போறோம் டாக்டர்” மருதநாயகம் சொல்ல
 
“உங்க விருப்பம். அதற்கான ஏற்பாட்டை பண்ணி கொடுக்க சொல்லுறேன்” என்று மருத்துவர் கூற
 
பார்கவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்த மருதநாயகம் விசாலட்சியின் இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள எண்ணினார்.
 
உண்மையில் அவர் வக்கீலை பார்க்க சென்று விட்டு வரும் பயணம்தான் அவரையும் பார்கவியையும் சந்திக்க வைத்திருந்தது.
 
சுப்பிரமணிய சாஸ்திரிகள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி விழுந்து கிடக்க, தங்கதுரையை அழைத்துக்கொண்டு அவ்வழியாகத்தான் மருதநாயகம் வண்டியில் வந்துகொண்டிருந்தார்.
 
கூட்டம் கூடி இருக்க வண்டியை நிறுத்தி என்னவென்று பார்க்க சொல்லி தங்கதுரையை ஏவ “எவனோ குடிச்சிட்டு வண்டி ஓட்டி விழுந்து இருப்பான். அவனையெல்லாம் பார்க்கணுமா? நாம போலாம்பா” என்று கூறினாலும் வண்டிகள் வரிசைக் கட்டி நின்றதில் அவர்களின் வண்டி ஒரு அடி கூட முன்னே செல்ல முடியவில்லை.
 
வண்டியில் அமர்ந்திருப்பதை விட இறங்கி இருக்கலாம் என்று வண்டியை விட்டு இறங்க, அம்பியிலன்சும் அவ்விடத்தை அடைய, சுப்பிரமணிய சாஸ்திரிகள் அதில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட, வண்டிகள் ஒவ்வொன்றாக நகர நகர சுப்பிரமணிய சாஸ்திரிகளின் பை கீழே விழுந்திருந்தது மருதநாயகத்தின் கண்ணில் பட்டது. 
 
அவருடைய ஏழ்மையான பையை கண்டு ஒன்றும் மருதநாயகம் அந்த பையை எடுக்க நெருங்கவில்லை. அந்த பையிலிருந்து வெளியே விழுந்திருந்த பார்கவியின் புகைப்படத்தைக் கண்டே அந்த பையை எடுக்க நெருங்கினார்.
 
அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. பார்க்க ஜானகியின் சாயலில் ஒரு பெண். ஜானகியையும், அவளது கணவனையும், மகளையும் தனது கையால்தான் வெட்டி சாய்த்தார். ஜானகியின் மகள் வளர்ந்து பெரியவளாகி  இருந்தால் இவளை போல் இருப்பாள். அல்லது  இருவரும் அக்கா, தங்கை என்று கூட கூறலாம் அவ்வளவு ஒற்றுமை.
 
 “அந்த நிலத்துக்கு சொந்தக்காரியான ஜானகி அம்மாக்கு வாரிசு இருந்தாலாவது வாதாடி கேஸ ஜெயிக்கலாம்” அந்த நொடியில் வக்கீல் சொன்னது அவர் மண்டையில் ரீங்காரமிட, வண்டியை மருத்துவமைக்கு செலுத்த சொன்னார்.
 
அங்கே நடப்பதை அமைதியாக வேடிக்கை பாத்திருந்தவர் பார்கவி தனது பேத்தி என்று கூறி சாஸ்திரிகளின் காரியங்களையும் செய்து முடித்தவர். இதோ இப்பொழுது தனது காரியத்தில் கண்ணாக பார்கவியை பேச அழைத்திருந்தார்.
 
“உன் பேர் என்னமா?”
 
“பார்கவி”
 
“இங்க பாரு பார்கவி. உங்க அம்மாக்கு மருத்துவம் பார்க்க நிறைய செலவாகும். தனியாக எப்படி பண்ண போற?”
 
அழுது தீர்த்து கண்களில் கண்ணீர் கூட இல்லை. பெற்றவர்களை தவிர சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அந்த ஊரிலும் அவளுக்கு யாருமில்லை. அவளுடைய சொந்தபந்தங்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட அவளுக்கு தெரியாது. யாரிடம் போய் உதவி கேட்பாள். தான் இருக்கிறேன் என்று தைரியம் சொன்னவறே! இப்படி கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாள்? அதிச்சியாகவும், குழப்பமாகவும் மருதநாயகத்தையே பாத்திருந்தாள் பார்கவி.
 
“என்னால் செலவு செய்ய முடியும். அதுக்கு கைமாறாக உன்னால் ஒரு காரியம் ஆகணும்” பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்தார் அந்த பெரிய மனிசன்.  
 
“எதுவானாலும் பண்ணுறேன்” உடனே பதில் வந்தது பார்கவியிடமிருந்து. அவள் அன்னைக்காக உயிரையே கொடுப்பாள். இவர் உயிரை கேட்டால் கூட கொடுக்க தயாராகத்தான் பதில் சொல்லி இருந்தாள்.
 
அவரின் வயதும் தோற்றமும் அவர் தப்பாக எதுவும் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை வேறு வந்திருக்க, கூடவே இருந்து அனைத்தையும் செய்கிறார். மனிதாபிமானமிக்கவர் என்ற நல்லப்பிராயம் வேறு அவள் மனதில் அந்த இரண்டு நாட்களில் உருவாக்கி இருக்க, தயங்காமல் அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்திருந்தது.
 
அதைத்தான் மருதநாயகமும் எதிர்பார்த்தார். அவர் பேச்சுக்கு மறுபேச்சின்றி பார்கவி ஒத்துக்கொள்ள வேண்டும். அவர் நினைத்தது போல் சரி என்று விட்டாள். அவளிடம் எதை எவ்வாறு கூற வேண்டும் என்பதை மட்டும் மனதில் ஓட்டிப் பார்த்தவர்.
 
ஜானகி யார் என்பதையும், அவள் பெயரில் இருக்கும் சொத்து விவரத்தையும் சொன்னவர். “நீ அவளை போலவே இருப்பதால் ஜானகியின் மகள்தான் என்று அனைவரையும் நம்ப வைத்து சொத்தை மீள பெற்றுக்கொள்வேன்” என்று கூற பார்கவிக்கு அவர் திட்டத்தில் தப்பாக ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
 
அதே பொய்யைத்தான் தன் மனைவி மக்களிடமும்  கூறப்போவதாகவும், அவர்களிடமும் நீ நடிக்க வேண்டியதாக இருக்கும். அப்பொழுதுதான் யாருக்கும் சந்தேகம் வராது என்று தங்கதுரை தனது மூத்த மகன் என்று அறிமுகப்படுத்தியும் வைத்தார்.
 
“குடும்பத்தாரிடமும் பொய் சொல்ல வேண்டுமா? நடிக்க வேண்டுமா?” என்று பார்கவியின் மனம் கேள்வி எழுப்பினாலும் அவர் கூறிய காரணங்கள் நியாயமாக தோன்ற அவரோடு செல்ல ஒத்துக்கொண்டாள். அதை தவிர அவளுக்கு வேறு வழிகளும் கிடையாதே!
 
அதன் பின் விசாலாட்சி ஒரு தாதியின் உதவியோடு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பார்கவி மருதநாயகத்தோடு ஊருக்கு சென்றாள்.
 
சென்ற காரியம் கைகூடவில்லை. அந்த வெண்ணையில் குழைத்த நிறமுடையவன் இவர்களின் நிலத்தை வாங்கி விட்டான். இந்த செய்தி பார்கவியின் காதிலும் விழுந்ததுதான்.
 
வீட்டில் வேலை செய்யும் ஒருவரின் காதில் ஒரு விஷயம் விழுந்தால் போதுமே! மற்றவரிடம் அதை சொல்லாமல் நிம்மதி பிறக்காது. கூடிக் கூடி ரகசியம் பேசுவார்கள். மருதநாயகத்தின் குணத்தையும், அந்த நிலத்தையும் பற்றி அறிந்திருந்தவர்களுக்கு, ஆச்சரியம் மேலோங்க அவல் கிடைத்தது போல் மென்று விழுங்கலாயினர். சமயலறையில் நுழைந்த பார்கவியின் காதில் நிலம் ஈகையால் வாங்கப்பட்ட செய்தி விழ மருதநாயகத்தின் இதயத்தை விட கனத்து அடிக்க ஆரம்பித்திருந்தது.
 
இப்பொழுது இவர் எதற்காக தன்னை பேச அழைக்கிறார். ஒருவேளை இனிமேல் அன்னைக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறி விடுவாரோ! தன்னையும் வீட்டை விட்டு போகும் படி சொல்லத்தான் அழைத்தாரோ நெஞ்சம் முழுவதும் பதைபதைக்க மருதநாயகத்தின் முன்னாள் வந்து நின்றாள் பார்கவி.
 
  மருதநாயகம் சிறிது நேரம் மௌனம் காக்க, தங்கதுரை யோசனைக்குள்ளாக விக்னேஸ்வரன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
 
ஆனால் பார்கவி மருதநாயகத்தை இந்த ரெண்டு மாதங்களில் அறிந்து கொண்டதை வைத்து என்ன பேச வேண்டும் என்று அவர் மதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டாள்.
 
தொண்டையை கணைத்துக் கொண்ட மருதநாயகம் “பார்கவி உன் அம்மாவ ஆஸ்பிடல்ல சேர்த்து, உன்ன இங்க அழைத்து வந்தது அந்த இருநூறு ஏக்கர் நிலத்த மீளப்பெற என்று உனக்கு தெரியுமல்லவா?”
 
பார்கவி தலையை பலமாக ஆட்டி வைத்தாள்.  
 
“அது இன்னைக்கு என் கைய விட்டு போயிருச்சு” என்றவாறு கழு
யோசிக்கிறாருன்னேதிலிருந்த துண்டை வாய் மீது பொத்தியவரின் உடல் குலுங்க அவர் அழுகிறார் என்று புரிய பார்கவிக்கு ஒன்றும் புரியவில்லை.
 
அவள் இங்கு வந்த பின் சில நேரம் வேதநாயகி கணக்கு வழக்கு பார்க்க சொல்லி அவளிடம் கொடுத்திருக்கிறார். வீட்டில் பால் கணக்கிலிருந்து, மரக்கறி, கீரைக்காரிக்கு கொடுக்க வேண்டியது முதல் அவள் கைப்படத்தான் எழுதுவது. அவர்களின் வசதியை பார்கவிக்கு நன்கு தெரியும். அப்படி இருக்க, இருநூறு ஏக்கர் எல்லாம் இவர்களுக்கு சாதாரணம் என்று நினைத்திருந்தாள்.
 
அப்படி இல்லை எங்கள் சொத்து கடுகளவென்றாலும் யாருக்கும் கொடுக்க மாட்டோம். என்பது போல் திறமையாக நடிக்கலானார் மருதநாயகம்.
 
தந்தை தன் மகள் என்றதும் உயிரோடு விட்டுவிட்டாரா? இவளை கூட விட்டு வைத்திருப்பது அந்த நிலத்துக்காக உள்ளுக்குள் கொதித்தவன் “என்னது ஜானகி இன்னும் உயிரோடுதான் இருக்கிறாளா?” வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அப்பொழுதே! ஜானகியை வெட்டி வீசும் கோபத்தில் இருந்தான் விக்னேஸ்வரன்.
 
“என் அம்மா பெயர் விசாலட்சி” பார்கவி மிரண்டவாறு சொல்ல
 
“இவள் என்ன சொல்கிறாள்?” ஒருகணம் மருதநாயகத்தை நோக்கியாவன் “இவளுடைய அம்மா ஜானகி இல்லையா?” தந்தை சொன்னதை கிரகித்த விக்னேஸ்வரன் அண்ணனை ஏறிட
 
“இல்லை” எனும் விதமாக தலையசைத்தான் தங்கதுரை.
 
“அப்பா பலே கில்லாடிதான். அப்போ இவ நடிக்க வந்தவளா? இது தெரியாம இவள திட்டித்தீர்த்துக்கிட்டு இருந்தோமே! என்ன சொன்னாலும் அமைதியா இருந்தா அப்பா சொல்லுறது போல நல்ல பொண்ணுதான்” பார்கவிக்கு நற்சான்றிதழை உடனே! வழங்கியும் விட்டான்.
 
“அது பரம்பரைச் சொத்து. அதை வேற ஒருவனுக்கு போனால் என் மச்சான்
சத்யநாதனின் ஆத்மா நிம்மதியடையாது. என் கட்டையும் வேகாது” மருதநாயகத்தின் உடல் குலுங்குவது நிற்கவில்லை.
 
பார்கவியை இங்கு அழைத்து வந்த பின்னால் அவளோடு தேவைக்கு அதிகமாக அவர் பேசியதே இல்லை. தாத்தா, பேத்தி என்று செல்லம் கொஞ்ச வேண்டும் என்று பார்கவி எதிர் பார்க்கவில்லை. சொந்த பிள்ளைகளும், மருமகளும், பேத்தியும் திட்டும் பொழுது அவர் மௌனம் காத்தது பார்கவிக்கு ரொம்பவே வலித்திருந்தது.
 
ஒரு வார்த்தை இந்த பெரிய மனிசன் கூறி இருந்தால் அவர்களோ இவள் பக்கம் திரும்பி இருப்பார்களா? அவர்கள் திட்டுவதை வேடிக்கை பார்த்து விட்டு, “சரி சரி” போங்க என்று அனைவரையும் பொதுவாக சொல்லி விடுவார்.
 
அவரை நம்பித்தானே இவள் இந்த வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு ஒன்றென்றால் அவரல்லவா கேட்டிருக்க வேண்டும். அவர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், ஓடிச்சென்று அவர் கையை பிடித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி இருப்பாளோ! என்னவோ! மருதநாயகம் அவளோடு நடந்துகொண்ட முறையால் எட்டியே நின்று அவரை வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
“அசையிறாளான்னு பாரு அசமஞ்சகம்” தங்கதுரை முணுமுணுக்க,
 
“இது சரிப்பட்டு வராது போல” விக்னேஸ்வரன் தந்தையின் காதில் மெதுவாக கூற
 
கண்களை துடைப்பது போல் பார்கவியை பார்த்தவர் “சொத்து போச்சு. நீ வந்த வேலையும் நடக்கல, இனி நீ இங்க இருந்து என்ன பிரயோஜனம். உன் அம்மா இருக்குற இடத்துக்கு போ. உன் அம்மாவ டிஸ்டராஜ் பண்ணுவாங்க நீயே பார்த்துக்க” உன் அன்னைக்காக இனி ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டேன் மறைமுகமாக கூற, ஆடித்தான் போனாள் பார்கவி.
 
அவர்கள் இருந்ததோ வாடகை வீட்டில். தந்தை இறந்ததோடு, அன்னையும் மருத்துமனை சேர்த்திருக்க, மருதநாயகத்தோடு கிளம்பி வந்தவள் திடிரென்று போ என்றால் எங்கே போவது? அதுவும் உடல் நலமற்ற அன்னையை அழைத்துக்கொண்டு எங்கே போவாள்? அவளின் சொந்தபந்தங்கள் எங்கே இருக்கிறார்களோ! தெரியவில்லை. இத்தனை வருடங்களாக பெற்றோர்கள் அவர்களை பற்றி கூறியதும் இல்லை. போனாலும் ஏற்றுக்கொள்வார்களோ! தெரியாது. அன்னைக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்வாள்? அவள் படிப்பு முடிய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. முடிந்தாலும் உடனே வேலை கிடைக்குமா? வாடகைக்கு வீடுதான் கிடைக்குமா? வேலைக்கு சென்று கொண்டு அன்னையையும் கவனித்துக்கொள்ளத்தான் முடியுமா? பார்கவிக்கு தலையே சுற்றியது.
 
 “நிலத்தை மீள பெற வழியே இல்லையா?” அந்த நிலம் கிடைத்தால் மட்டும்தான் இவர் தனக்கு உதவுவார் என்று புரிய தானாகவே அவள் வாயிலிருந்து வார்த்தைகளை கோர்த்து கேட்டு விட்டாள் பார்கவி.
 
“அப்படி வா வழிக்கு” உள்ளுக்குள் குஷியானவர் “முடியும் உன்னால் மட்டும் தான் முடியும்” என்று அவர் கூறியதை கேட்டு பெண்ணான அவள் கூசித்தான் போனாள்.