செவ்வானில் ஒரு முழு நிலவு 5

6864

நிலவு 5
ஈகைச்செல்வனுக்கு வேதநாயகின் நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. அந்த நியாபகங்கள் நல்ல விதமாகவே இருக்க, அவரும் மருதநாயகத்துக்கு உடந்தையா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.
 
இல்லையென்றால்? மருதநாயகத்தையும் அவர் பெற்ற புத்திரர்களையும் மன்னித்து விட்டு விடுவாயா? என்று மனம் கேட்க கண்டிப்பாக இல்லை என்றது அவன்
மனம். அப்படியாயின் வேதநாயகியிடம் உண்மையை சொல்ல போகிறாயா? சொன்னால் கணவனை அவர் தண்டிப்பாரா? மன்னிப்பாரா? மீண்டும் மனம் கேள்வி எழுப்ப, கண்டிப்பாக பெண்களின் மனம் கணவனின் பக்கம் தான் சாயும். வேதநாயகியும் மருதநாயகத்தின் பக்கம்தான் நிற்பார் என்ற முடிவுக்கு வந்தான் ஈகைச்செல்வன்.
 
ஆதலால் தன்னை பற்றிய கடுகளவான உண்மையை கூட வேதநாயகிக்கு சொல்லப் போவதில்லையென்ற முடிவுக்கு வந்த ஈகைச்செல்வன் தான் வந்த வேலை நிறைவேறும்வரை அவரின் ஆதரவு அவனுக்கு தேவை. ஆதலால் பார்வையால் கூட பார்கவியை தீண்டாமல் கண்ணியம் காத்தவன் வேதநாயகியின் பார்வையில் உயர்ந்து நின்று, அவர் நல்லவர் என்று அறிந்தமையால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவர் மனதிலும் இடம் பிடித்தான்.
 
தனக்கு சொந்தமாக வேண்டிய இருநூறு ஏக்கர் நிலத்தையும் வாங்கி சொந்தம் கொண்டாடிக்கொண்டு, தன் வீட்டிலையே! அமர்ந்திருப்பவனை காண வண்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு வந்தாலும் மருதநாயகத்துக்கு வேதாநாயகியின் முன் ஈகைச்செல்வனை ஒன்றும் செய்து விட முடியாது என்று அறிந்திருந்தமையால் அடக்கி வாசிப்பதென்றும், அவனை வெளியே அழைத்து சென்று ஏன்… அந்த இருநூறு ஏக்கர் நிலத்துக்கே அழைத்து சென்று நிலத்தை எழுதி வாங்கி, அங்கையே தீர்த்துக்கட்டி, புதைத்து விடுவது என்ற முடிவோடு வீட்டுக்கு வர முதலில் கண்டது நான்கு வண்டிகளையும் அதன் நடுவே நிறுத்தி இருந்த கருப்பு நிற கிராண்ட் செரோகி ஜீப்பையும் தான்.
 
அத்தோடு ஒரே மாதிரியான உடையணிந்து வண்டியை சுற்றி நின்ற பயில்வான்கள் போன்ற மெய்க்காப்பாளர்களையும். போதாததற்கு அவர்களை சுற்றி நிற்கும் வேட்டை நாய்களும் கண்ணில் பட கண்களை இடுக்கி, கூர்மையாக்கி யோசனையாக பார்த்தவாறு எல்லா வண்டிகளுக்கும்
பின்னால் தன் வண்டியை நிறுத்தி நடந்து வீட்டின் அருகில் செல்ல வேட்டை நாய்கள் இவர்களை கண்டு குறைக்க ஆரம்பித்திருந்தன.
 
இருநூறு ஏக்கர் நிலம் பறிபோன கோபம், அதை வாங்கியவனின் மேலிருந்த வெறுப்பு, எரிச்சல் எல்லாம் சேர்ந்து புதிதாய் நாய்கள் வேறு தன் வீட்டுக்குலையே! தன்னை போக விடாமல் தடுக்க  ஒன்றும் புரியாமல் புதல்வர்களை ஏறிட அவர்களும் வேட்டை நாய்களின் கழுத்துப்பட்டியை பாதுகாவலர்கள் கையில் பிடித்திருக்கும் தைரியத்தில் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சைகை செய்ய, ஈகையின் மெய்காப்பாளன் ஒருவன் இவர்களை நிறுத்தி கேள்வி கேட்க கடுப்பானார் மருதநாயகம்
 
“யார் டா நீங்க? நான் இந்த வீட்டின் சொந்தக்காரன் என்னையே உள்ள போக விடமாட்டீங்களா? உங்கள என்ன பண்ணுறேன் பாருங்க?” தோளில் இருந்த துண்டை உதறியவாறு கத்த விக்னேஸ்வரனும், தங்கதுரையும் ஆறடியில், நூறு கிலோ எடையில் இருந்த எட்டு மெய்காப்பாளர்களையும் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனார்கள்.
 
நாய்களின் சத்தத்தில் வேண்டாத விருந்தாளி வீட்டுக்கு வந்து விட்டதை உணர்ந்து ஈகை வாசலுக்கு வர, கூடவே தயாளன் வந்தான். அவர்களின் பின்னால் வேதநாயகியும் வந்தார். அந்த சத்தத்துக்கு பார்கவி எட்டிக்கூட பார்க்காதது ஈகை கருத்தில் பதித்துக்கொண்டான். ஏற்கனவே கோபத்தில் இருந்த மருதநாயகம் எகிற மருதநாயகத்தை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் ஈகை.
 
என்பது வயதில் தலை முடி முற்றாக நரைத்திருந்தாலும், மீசைக்கு கருப்பு சாயமிட்டு பெரிய மீசை வைத்து, தாடியை மழித்து வெள்ளை வேட்டி சட்டையில் தோளில் ஒரு துண்டோடு கம்பீரமாக இருந்தார் மருதநாயகம். கண்களில் திமிரும், ஆணவமும் “என்னை மிஞ்ச எவனாலும் முடியாது” என்று சாவல் விடுவது போன்ற பார்வையை வீசினார்.
 
அவரும் ஈகையைத்தான் கண்களை இடுக்கி அளவிட்டுக்கொண்டிருந்தார். “பார்க்க வடநாட்டுக்காரன் போல இருக்கிறானே! இவன் எதுக்கு நம்ம நிலத்தை வாங்கி இருக்கான். அவன் அணிந்திருக்கும் உடையின் விலை அவருக்கு தெரியாவிடினும் அதன் நேர்த்தி இவன் சாதாரணமானவன் இல்லை என்று கூற, அவன் வண்டியும், பாதுகாப்பு வளையமும் அவனின் பின் புலத்தை அவருக்கு எடுத்துக் கூற போதுமானதாக இருந்தது.
 
 
யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவரை தடுத்துக்கொண்டிருந்த மெய்காப்பாளனின் கன்னத்தில் தீப்பொறி பறக்கும் அளவுக்கு அடித்தான் ஈகைச்செல்வன்.
 
 
வேதநாயகி கூட அவனின் இச்செயலை கண்டு கண்டிக்க “இவங்க எல்லாம் என் அண்ணன்  ஏற்பாடு பண்ணி இருக்கும் பாடிகார்ட்ஸ். என்ன பாதுகாக்குறதா பக்கத்துல யாரு வந்தாலும் அடிச்சிடுறாங்க. எத்துனை பேர் கை, கால் ஒடஞ்சி போச்சு தெரியுமா?  ஒரு மாசத்துக்கு ஹாஸ்பிடல் பில்லே பல லட்சம் கட்ட வேண்டி இருக்கு. அண்ணனுக்கு சொன்னாலும் புரியாது, கேட்கவும் மாட்டாரு.
 
இப்படித்தான் அமெரிக்கால வச்சி ஒருத்தன் ஏதோ அவசரமா போகப் போய் என் மேல மோதிட்டான் அவனுக்கு என்ன அவசரமோ! அடுத்த நாள் பொணமாத்தான் மிதந்தான். அவன் குடும்பம் மொத்தமும் என்ன ஆனாங்கண்ணே தெரியல” ஈகைச்செல்வன் உண்மையில் கொஞ்சம் பொய் கலந்து சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே தயாளன் சமூகவலைத்தளத்தில் ஒளிபரப்பான செய்தியென்று ஒரு சில புகைப்படங்களை மருதநாயகத்துக்கும், அவரின் புதல்வர்களுக்கும்
காட்டினான்.
 
 
“ஐயாவை அடிச்சிருந்தா என்னவாகி இருக்கும். வயசானவரில்ல. ஏடாகூடமாக ஏதாவது ஆகி இருந்தா? இப்ப கூட பாருங்க ஏலத்துல இருநூறு ஏக்கர்  நிலத்த வாங்கி இருக்கான். உங்க குடும்ப நிலம் உங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதெல்லாம் அவனுக்கு புரியாது. பணம், பணம், பணம் எப்படி அத சம்பாதிக்கிறதுனு மட்டும் தான் யோசிக்கிறான்” ஈகைச்செல்வன் மூச்சு விடாமல் பேச அடி வாங்கியவனோ! கற்சிலை போல் நின்றிருந்தான்.
 
“உன் நிலம் என்று சொல்லும் எனக்கு சொந்தமான நிலத்தை வாங்கி விட்டேன். அதை நீ மீள பெற என்னவெல்லாம் செய்வாய் என்று எனக்கு தெரியுமடா! என் மீது கை வைக்க உன்னால் முடியுமா? வைத்துத்தான் பாரேன். உன் கையென்ன தலையே! இருக்காது” என்பது போல் மறை முக மிரட்டல் தான் விடுத்தான் ஈகைச்செல்வன்.
 
அடிவாங்கியவனோ! ஆறடிக்கு மேல் இருக்க, ஈகையை ஒரே அடியில் வீழ்த்த கூடிய பலசாலியாக இருந்தான். ஈகை அடித்தும் சிலை போல் முகத்தில் எந்த ஒரு ரிஎக்சனையும் காட்டாது இருக்கவும், தங்கதுரையும், விக்னேஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள அண்ணன் தம்பியின் பார்வை பரிமாற்றத்தின் பீதியை கண்டு உள்ளுக்குள் கேலியாக சிரிக்கலானான் தயாளன்.
 
“கடவுளே!… இல்லாத அண்ணானுக்கு என்னமா பில்டப்பு கொடுக்கிறான். என்னமா அஃட்டு கொடுக்கிறான். கண்ணுல கொஞ்சம் பயம் இல்ல. பொய் சொல்லுறோம் என்கிற பதட்டமில்ல. பேசாம இவன் சினிமால நடிக்க போய் இருந்திருக்கலாம்” மனதில் நினைத்தாலும் பி.ஏ. என்ற பாத்திரத்தில் பொருந்தி கணகர்ச்சிதமாக தன் வேலையை செய்து கொண்டிருந்தான் தயாளன்.
 
ஈகைச்செல்வனின் பேச்சையும் தயாளன் காட்டிய புகைப்படங்களையும் கண்டு கொஞ்சம் மிரண்டுத்தான் போனார் மருதநாயகம். உடனே சுதாரித்தவர்
 
“அட விடுங்க தம்பி முதல்ல உள்ள வாங்க… உள்ள வந்து பேசலாம்” ஈகையை இழுக்காத குறையாக உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர்த்த தங்கதுரையும், விக்னேஸ்வரனும் தந்தையை கேள்வியாக ஏறிட்டனர்.
 
தந்தை வந்த வேகத்துக்கு வீட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் வேட்டை துப்பாக்கிக்கு வேலை வந்து விட்டது. வீட்டுக்கு சென்ற உடன் அதை எடுத்து ஈகையை சுட்டுக் கொன்று விடுவார் என்று எண்ணி இருக்க, காற்று போன பலூன் போல அமர்ந்திருக்கிறார் மருதநாயக பண்ணையார். என்னவாகிற்று இவருக்கு? என்ன யோசிக்கிறார்? இவன் சொன்ன கதையை நம்பி பயந்து விட்டாரா? என்ற எண்ணமே அவர்கள் மனதில்.
 
ஆனால் சாணக்கியத்தனமாக கணக்கு போடும் மருதநாயகம் வேறு கணக்கு போட்டார் அது ஈகைசெல்வனின் பணம். அவனின் பாதுகாப்பு வளையமும். இருநூறு ஏக்கரை வாங்க அவனுக்கிருக்கும் செல்வச்செழிப்பும் தான் அவர் கண்ணில் நின்றது.
 
அவனின் பாதுகாப்பு வளையத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. எதிரியை எட்ட இன்று தாக்குவதை விட தோளில் கை போட்டு கூடவே இருந்து குழிபறிக்கலாம். இல்லை உறவாக்கலாம். அதுக்கு அவன் தங்களோட இனமாக இருக்க வேண்டுமே என்ற யோசனையில் 
 
“தம்பிக்கு எந்த ஊரு? உங்க தாத்தா பேரென்ன?” மருதநாயகம் சுற்றி வளைத்து என்ன தெரிந்து கொள்ள முற்படுகிறார் என்று புரிந்துக் கொண்ட தயாளன் ஈகையை பார்க்க,
 
வேதநாயகியும் ஈகையின் அருகிலையே அமர்ந்து கொண்டு “அட ஆமா நான் கூட கேக்கணும்னு நினச்சேன் அதுக்குள்ள…” மருதநாயகத்தை  ஒரு பார்வை பார்த்தவர் கண்ட நேரத்தில் வீட்டுக்கு வந்து என்னை பேச விடாது பண்ணி விட்டீங்கனுன்னு குறை சொல்வது போல் இருந்தது. மருதநாயகம் முறைக்கவும்  “அதான் நாய் குறைச்சு…” என்று சமாளித்தவர் “சரி நீ சொல்லுப்பா” என்று அவனையே பார்த்திருந்தார்.
 
“இவங்க நாய்னு மருதநாயகத்தை தானே சொன்னாங்க” தயாளன் ஈகையின் காதில் முணுமுணுக்க,
 
“அடங்குடா” இழுத்து வைத்த புன்னகையில் அமர்ந்திருந்தான் ஈகை.
 
வேதநாயகி வீட்டிலையே அடைந்து கிடப்பவர் பேச்சு துணைக்கு யார் கிடைத்தாலும், வளவளன்னு பேச ஆரம்பித்து குடும்ப கதை மொத்தத்தையும் கொட்டி விடுவார். வந்தவரையும் நலம் விசாரிக்கிறேன் என்று கேள்விக்கேட்டு குடைந்து ஜாதகம் வரை அலசி ஆராய்ந்தும் விடுவார்.
 
அவரின் இந்த குணம் மருதநாயகத்துக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணும். “வந்தவனை குடைத்தெடுக்கிறாய் சரி. எங்க கதையெல்லாம் ஓட்டைவாய் போல எதுக்கு உளறிக் கொட்டுகிறாய்” என்று திட்டவும் செய்வார்
 
அதற்கு வேதநாயகி “அது எப்படிங்க நாங்க ஒரு தகவல் சொன்னாத்தானே! அவங்க ரெண்டு தகவல் சொல்வாங்க. அப்போதானே! பேச்சு நீளும்” என்று வெகுளியாக சிரிப்பார்.
 
“இவளை திருத்த முடியாது” என்று முணுமுணுப்பவர் அவர் பேசும் பொழுது அருகிலையே இருந்து தொண்டையை கனைத்து பேச்சை திசை திரும்புவார்.
 
அவர் இல்லாத நேரங்களில் வேதநாயகியை கட்டுப்படுத்துவது காதம்பரி ஒருத்தியே! “அத்த” என்று அவள் ஒரு சத்தம் எழுப்பினால் போதும் இவர் கப்சிப்.
 
வேதநாயகி அங்கிருந்தால் தன் திட்டத்தில் மண்ணை அள்ளி போட்டு விடக் கூடும் என்று நன்கு அறிந்த மருதநாயகம் “யாராச்சும் ஒரு செம்பு தண்ணி கொண்டு வாங்கப்பா… வெயில்ல வந்ததுல நாக்கெல்லாம் வறண்டிருச்சு” மெதுவாகத்தான் கூறினார்
 
கடமை தவறாத மனைவியாய் எழுந்து கொண்ட வேதநாயகி “நான் ஒருத்தி… இருங்க எடுத்துட்டு வரேன். டேய் உங்களுக்கும் ஏதாவது வேணுமா?” தன் இரு மகன்களிடமும் கேட்க.
 
ஒருவன் காபி என்றும், மற்றவன் மோர் என்றும் அவருக்கு வேலையை இழுத்து வைத்து இந்த பக்கம் வர விடாது செய்ய உனக்கு பா?” என்று ஈகையை கேட்க
 
“எனக்கு ஒன்னும் வேணாம் பாட்டி” புன்னகைத்தான் ஈகை.
 
“சரி” என்று தலையசைத்தவாறு உள்ளே சென்றார் வேதநாயகி. உள்ளே சென்றவர் தண்ணீரை யாராவது கையில் கொடுத்து விட்டு காபி, மோர் என்று மகன்களை கவனிக்கும் பணியில் பிசியாகி விடுவார். அதன் பின் அங்கே நடக்கும் சமையலில் குறைநிறைகளை கவனிப்பதில் ஈகையை மறந்தும் விடுவார். அதை நன்கு அறிந்து வைத்திருந்த மருதநாயகம் அவரை அங்கிருந்து அனுப்பி இருந்தார்.
 
வேதநாயகியின் தலை மறையும் வரை காத்திருந்த மருதநாயகம் “நீ சொல்லுப்பா” என்று ஈகையை ஏறிட்டார்.
 
“பாட்டி…” என்று ஈகை கேட்டாலும் வேதநாயகியை உள்ளே அனுப்பத்தான் மருதநாயகம் தண்ணீர் கேட்டது என்று ஈகையால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கும் வேதநாயகின் முன் தன் குடும்பத்தை பற்றி பொய் சொல்ல ஏனோ மனம் முரண்டியது.
 
“பாட்டி… அதுக்குள்ள சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சிட்டானா” தனக்குள் முணுமுணுத்தவர் “அவ இப்போதைக்கு வர மாட்டா. நீ சொல்லுப்பா” இழுத்து வைத்த புன்னகையில் அமர்ந்திருக்க, ஈகை ஏற்கனவே! எழுதி வைத்ததை படிப்பது போல் ஒப்பிக்கலானான்.
 
“அம்மா வழித்தாத்தா கொல்கத்தாவை சேர்ந்தவங்க, அப்பா வழித்தாத்தா தமிழ்நாடுதாங்க எங்கன்னு சரியா தெரியல ஆனா பிராமனார்னு தெரியும். அம்மா, அப்பா லவ் மேரேஜ். கல்யாணம் பண்ணி அமெரிக்கால செட்டில் ஆகிட்டாங்க. அங்கதான் பிசினஸ் எல்லாம். நானும் அண்ணாவும் மட்டும்தான். எனக்குதான் சென்னைல பிஸ்னஸ் ஆரம்பிக்கனும்னு ஆச அண்ணா வேணாம்னு சொல்லியும் வந்துட்டேன்”
 
தன்னுடைய குடும்பத்தை பற்றி விபரங்கள் அனைத்தையும் வேண்டுமென்றே மாற்றி கூறினான் ஈகை. அவனுக்கும் வேண்டியது மருதநாயகம் என்ன எதிர்பாக்கிறாரோ அது இருக்கக் கூடாது என்பதிலையே! இருந்தது.
 
தயாளன் கூட சொன்னான் “ஜாதி வெறி பிடித்தவராயிர்றே! ஒரே ஜாதின்னு தெரிஞ்சா பேத்தியை உனக்கு கட்டி வைப்பாறு அப்பொறம் அவளை வச்சி சொத்தை எழுதி வாங்கலாமேன்னு!”
 
தாடையை தடவி யோசித்த ஈகை “சந்தோசமா சொத்தை கொடுத்ததா இருக்க கூடாது, சொத்துக்காக பொண்ண கல்யாணம் பண்ணினதாகவும் இருக்கக் கூடாது. பேத்திய நினைச்சி இரத்த கண்ணீர்தான் வடிக்கணும். என் சொத்த நான் வேற வழில எடுத்துகிறேன்”  என்று விட்டான். 
 
ஏற்கனவே வக்கீல் விசாரித்து கூறியவைதான். இருந்தாலும் ஈகையின் வாயால் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளவே மீண்டும் கேட்டார். ஈகையின் பணத்தை தவிர அவன் சொன்னவைகள் அனைத்தும் அவருக்கு சாதகமாக இல்லை. அவன் பார்க்கும் தொழில் என்னவென்றும், குடும்பத்தொழில், சொத்துக்கள் பற்றி விசாரித்தவர் இருநூறு ஏக்கர் நிலத்தில் என்ன செய்ய போவதாக விசாரிக்க,
 
“விவசாயம்” என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொண்டான் ஈகைச்செல்வன்.
 
கம்பியூட்டரில் கை வைத்தவன் விவசாயம் செய்வதா? ஏளனப் பார்வையொன்றை வீசினாலும், இழுத்து வைத்த புன்னகையோடு இரண்டு மகன்களுக்கும் கண்களால் சைகை செய்தவர் காரியால அறைக்கு போகும் படி கூறி விட்டு ஈகையின் புறம் திரும்பி
 
“தம்பி எங்க தங்கி இருக்கீங்க?”
 
“ஹோட்டல்லதான். இங்க ஒரு வீடு வாங்கணும். உங்களுக்கு தெரிஞ்ச வீடு இருந்தா சொல்லுங்க… நீங்க சொன்னா கண்டிப்பா நல்ல இடமா தான் இருக்கும்” ஈகைசெல்வன் பணிவாக கேட்டுக்கொண்டான்.  
 
 
புலி பதுங்கிவது பாய்வதற்கு என்று அறியாமல் மீசையை முறுக்கிய மருதநாயம் “நீங்க இங்கயே தங்கிக்கோங்க” கண்களில் வேங்கையின் பார்வையோடு சொன்னார்.
 
“இல்லங்க ஐயா… அது சரிவராது. நான் மட்டுமல்ல என் பி.ஏ, அடியாளுங்க அவங்க தங்க, சாப்பிட, குளிக்க அப்பப்பா அதெல்லாம் உங்களாக பண்ண முடியாது” தலையை ஆட்டி சவால் விடுவதை போல் சொல்ல அது மருதநாயத்தை உசுப்பிவிட்டிருந்தது.
 
“இந்த பெரிய வீட்டுல உங்க பத்து பேருக்கு தங்க இடமில்லையா? என்ன தம்பி இது” என்றவாறு வீட்டை கண்களால் சுற்றிப் பார்க்க
 
“ஐயா நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க. வீடு பெருசா இருக்குற மாதிரி இங்க உள்ளவங்க மனசும் பெருசாத்தான் இருக்கு. நான் காசு கொடுத்தாலும் நீங்க வாங்க மாட்டீங்க அதில்ல பிரச்சினை எங்களால உங்க சுதந்திரம் பறிபோயிடும், நிம்மதி கெட்டுடும்”
 
ஈகைச்செல்வனுக்கு தெரியும் இனம், ஜாதியை பற்றி பேசி திருமணம் பேசுவார். இல்லையென்றால் நிலத்தை கைப்பற்ற வேறு சிந்திப்பார் அதற்கு அவன் அவர் கண்முன் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அவனை சம்மதிக்க வைக்க அப்போ பணம் கொடுங்கன்னு ஒரு வார்த்தை சொல்லத்தான் போகிறார். யார் சொத்தை யார் அனுபவிப்பது. அதனாலயே பணத்தை கொடுத்தாலும் வாங்கப்போவதில்லை என்ற வார்த்தையை சேர்த்து சொன்னான்.
 
மருதநாயகத்தின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. ஈகையிடமிருந்து நிலத்தை பெற வேண்டும். அவனை தன் கண்பார்வையின் வட்டத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். அப்படியாயின் அவனை இங்கயே தங்க சொல்ல வேண்டும். அவன் தங்குவதும் மறுத்தால் பணம் கேட்கலாம். ஹோட்டலுக்கு கொடுப்பதை இங்கே கொடுத்து விட போகிறான் கொழுத்த பணம் கொள்ளை லாபம். நொடியில் கணக்கு போட்டவரை கணித்தவன் அவரின் கணக்கை தவிடு பொடியாக்கி இருக்க, அவனை வெளியே தங்க வைத்து தன் கண்பார்வையிலிருந்து வெளியேற்ற விரும்பவில்லை மருதநாயகம்.
 
பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தவர் “தம்பி இந்த வீடு மூணு மாடி. மூணாம் மாடி மொட்டை மாடியோடு சேர்ந்து இருந்தாலும் உங்க பத்து பேருக்கும் தங்க இடம் போதும். நீங்க மூணாம் மாடில தங்கிக்கோங்க யார் தொந்தரவும் இருக்காது. எல்லா வசதியும் இருக்கு. விருந்தாளியா இருக்க போறீங்க, தங்குறதுக்கு, சாப்பிடறதுக்கு எல்லாம் கணக்கு பார்க்க முடியுமா?  சொந்த தாத்தா வீட்டுல இருக்கிறதா நினைங்க”
 
உன் வீடு போல் இருந்துகொள் அதே சமயம் நீ விருந்தாளி என்பதையும் மறந்து விடாதே! என்பதையும் சேர்த்தே நியாபகப்படுத்தி உன் லிமிட்டில் நீ இருந்துக்கொள்ள வேண்டும் என்றே மறைமுகமாக கூற அதையெல்லாம் கண்டு கொள்பவனா ஈகை?
 
“சொந்த தாத்தா வீடுதான். அத நீங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கணுமா என்ன?” ஈகைச்செல்வன் உள்குத்தோடு பேச
 
மருதநாயகத்தின் ஆறாம் அறிவில் பொறி தட்ட, ஏதோ சரியில்லையே! என்று உள்மனம் கூற நிதானமாக “என்ன சொல்லுறீங்க தம்பி” ஒருநொடி திகைத்த முகபாவத்தை கொடுத்து ஈகையை புரியாது பார்த்து வைத்தார்.
 
“வந்த உடனே அதோ அங்க புகைப்படத்துல இருக்கிறவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன். வேதநாயகி அம்மா தான் சொன்னாங்க அவர்தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரர் உனக்கு தாத்தான்னு. அத தான் ஐயா சொன்னேன்” சத்தியாநாதனின் புகைப்படத்தை காட்டி சொல்லியவன் சிரிக்க
 
“இவளுக்கு வேற வேல இல்ல வார்ரவன் போறவன் கிட்ட எல்லாம் வீடு யாருடையதுனு சொல்லிக்கிட்டு” மருதநாயகம் முணுமுணுத்தார்.
 
வேதநாயகி சத்தியநாதன் தான் இந்த வீட்டின் சொந்தக்காரன் என்றதில் கடுப்பான மருதநாயகம் ஈகையை பற்றின ஆழ்மன ஆராய்ச்சி பார்வையை கைவிட்டார். இல்லையேல் அவனின் இரட்டை அர்த்த பேச்சுக்களை அலசி ஆராய்ந்து யோசிக்க ஆரம்பித்து அவனை அடையாளம் கண்டுகொள்ள கூட வாய்ப்பிருந்திருக்கும்.
 
“ஐயா ஏதாவது சொன்னீங்களா ஐயா?” ஈகை வேண்டுமென்றே கேட்க இல்லை என்று தலையசைத்தவர் எழுந்து வேலையாட்களை அழைத்து ஈகைக்கு மாடி அறைகளை காட்டும் படி கூற வெளியே இருந்த மெய்ப்பாதுகாவலன் ஜெய்யை அழைத்தவன் இருவரை அவர்களோடு அனுப்புமாறு கட்டளையிட்டான்.
 
“தப்பா எடுத்துக்காதீங்க ஐயா அண்ணனின் கட்டளை என்னால் மீர முடியாது. மீறினா இவங்க அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிடுவாங்க. குடும்பத்துல வீண் பிரச்சினை” பணிவிலும் பணிவு அப்படியொருபணிவோடு சொல்ல தயாளன் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.
 
 
அவ்விருவரும் சென்று பரிசோதித்து விட்டு வந்த பின்னரே பாதுகாவலர்கள் படை சூழ ஈகைச்செல்வன் தயாளனோடு மாடி ஏறிச்சென்றான்.
 
  செல்லும் அவனையே குரூரமாக பாத்திருந்த மருதநாயகம் “கூட இருந்தே குழி பறிக்கிறதெல்லாம் எனக்கு கை வந்த கலை டா… பொடிப்பய நீ. நேத்து மொளச்சி வந்திருக்க, உன்னயெல்லாம் சமாளிக்கிறது எனக்கு..” தலைமுடியை பித்து எறிவது போல் செய்தவர் “நீ இங்க இருந்து போகும் பொழுது உன் சொத்தையெல்லாம் எழுதி வாங்கி, உன்ன அன்னக்காவடியாக்கித்தான் வீட்டை விட்டு துரத்துவேன்” மீசையை முறுக்கி விட்டுக்கொண்டவர் காரியாலய அறையை நோக்கி நடந்தார்.
 
அவர் அனுபவிப்பதே! ஈகையின் சொத்து இதில் அவர் அவனின் சொத்தை எழுதி வாங்க போகிறாராம். யார் சொத்தை யார் எழுதி வாங்க போகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம்