செவ்வானில் ஒரு முழு நிலவு 4

6899

நிலவு 4

ஊரின் எல்லையிலரிருந்தே ஆரம்பித்திருந்தது பண்ணையாரின் வீட்டின் மதில் சுவர். பளீர் வெள்ளை நிறத்தில் கோட்டை மதில் சுவர் போல் அவ்வளவு உயரமாக கட்டப்பட்டு, இடையிடையே! மின் குமிழ்களும் பொருத்தப்பட்டிருந்தன.
 
 
பாதையின் மறு பக்கம் தான் ஊர் மக்களின் வீடுகளும், கோவிலும், மரங்களும், மிருகங்களும் கண்ணுக்கு காட்ச்சியளித்தன.
 
 
வளைந்து வளைந்து சென்ற பாதையில் வளையாமல் சென்றது பண்ணையாரின் வீட்டு மதில் சுவர். ஆங்கிலேயரின் காலத்தில் கட்டப்பட்டதாம். அந்த சுவருக்கு இணையாக உயரமான பெரிய இரும்பு கேட் பளபளவென கருப்பு பெயிண்ட்டில் அதை இழுத்து திறந்து மூடவே இருவர் இருந்தனர். அன்று இருந்தது போலவே இன்றும் இருப்பதை ஈகையின் பார்வைக்கு கிடைத்தது.
 
ஈகைச்செல்வனின் வண்டியோடு இன்னும் நான்கு வண்டிகள் வரிசைகட்டி நிற்க காவலாளியும் குழம்பிப் போனான்.
 
அவனுடைய ஐயா மருதநாயகம் தான் இந்த ஊரிலையே பெரிய மனிதர். “அவரே பழைய அம்பாசிடர் காரில் தான் இன்னும் போய் வந்து கொண்டிருக்கிறார். விக்னேஸ்வரன் ஐயாவுக்கு ஒரு கார் இருக்கு அதை மாதேஷ் சின்னையா எடுத்து செல்வாரு. தங்கத்துறை ஐயாவின் காரில் ஹரிணி அம்மா காலேஜ் போய் வருவாங்க. அதை தவிர மாதேஷ் ஐயா மற்றும் ஹரிஹரன் ஐயா இரண்டு பேருக்கும் இரண்டு பைக்குகள். மொத்தம் அந்த வீட்டில் இவ்வளவுதான் வண்டிகள்.
 
இவனோ! பெரிய பாரின் வண்டியில் வந்திருக்கிறான் அதுவும் மொத்தமாக ஐந்து வண்டிகள். ஐயாவுக்கு சொந்தமா? உறவா? இதற்கு முதல் பார்த்து இல்லையே! உள்ளே விடலாமா வேண்டாமா?” மனதோடும் மூளையோடும் அவன் பட்டிமன்றம் நடாத்த ஈகையின் குரல் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.
 
“கேட்ட திற வேதநாயகி பாட்டியை பார்க்கணும்”
ஈகைச்செல்வனின் அதிகாரமான குரலில் தலையை சொரிந்த ஒருவன் அடுத்தவனை ஏறிட
 
வண்டியில் தெனாவட்டாக அமர்ந்திருக்கும் ஈகையின் தோற்றமே அவனை அசைத்திருக்க “அம்மா பேர உரிமையா சொல்லுறாங்க.. ஒருவேளை சொந்தக்காரங்களா இருக்கும். எதுக்கு வம்பு கேட்ட திற” தங்களுக்குள் பேசி முடிவு பண்ணியவர்கள் ஈகைக்கு கேட்டை திறந்து விட்டனர்.
 
ஊரின் பாதியையே! வளைத்து சுற்றி கட்டப்பட்டிருந்தது மதில் சுவர். கேட்டிலிருந்து ஆரம்பிக்கிறது தோட்டம்.  கேட் திறந்ததும் வண்டி உள்ளே நுழைய ஈகையின் குழந்தை பருவமும் அவன் கண் முன் விரிந்தது.
 
 
கேட்டுக்கும், வீட்டுக்கும் இடையே நீண்ட தார் பாதை தோட்டத்தை சுற்றி சுற்றி தான் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. பாதையின் இருபக்கமும் கூட சிறிய புதர் போன்ற வித விதமான பூச்செடிகள் வரிசையாக நாட்டப்பட்டு அலங்காரமாய் அமைக்கப்பட்டிருக்க இடையிடையே அலங்கார விளக்குகளைத் தாங்கிய மின்கம்பங்கள் தங்க கூண்டில் கிளிபோல காணப்பட்டன. மழை வந்தால் கூட பிரகாசமாக எரியும். தோட்டமோ அத்தனை கலையம்சத்தையும் உள்வாங்கி நேர்த்தியாக பராமரிக்கப்படுவது கண்களுக்கு விருந்தானது.
 
வண்டி வீட்டை நோக்கி செல்லும் வரை ஈகையின் கண்கள் தோட்டத்தில்தான் நிலைகுத்தியிருந்தது. அதிகம் கிராமத்துக்கு வந்திராவிட்டாலும் அவன் மனதில் பசுமையாய் அந்த நினைவுகள் நிலைத்திருக்க, வேலைப்பாடுகளோடு கூடிய சிமெந்து பெஞ்சுகள் அங்கங்கே இருப்பதைக் காணும்  பொழுது அன்னை சோறூட்டிய நியாபகம் மனதில் வந்து போனது.
 
தோட்டத்தில் எந்த பெரிய உயர்ந்த மரங்களும் இல்லை. எல்லாம் குட்டாயாக வளர்க்கப்படும், தென்னை, மா பலா என வித விதமான மரங்கள் காட்ச்சி தர, பூத்து குலுங்கும் மல்லிகை, முல்லை கொடிகளும் அங்கங்கே படர்ந்து கண்ணுக்கு விருந்தாகின.
 
தோட்டத்தை சுற்றி சுற்றியே வீட்டுக்கு வந்து சேர்ந்தவனுக்கு பின்பக்கமாக இருந்த நீச்சல் குளம் நியாபகம் வர அந்தப்பக்கம் வண்டியை விட சொன்னான்.
 
வீட்டின் பின் புறம் வண்டி நகர அங்கும் ஒரு பெரிய தோட்டம். உயர்ந்து வளர்ந்த மரங்கள் கண்ணுக்கு தென்பட்டன. எதுவும் மாறவில்லை. எதையும் மாற்றி அமைத்திருக்கவில்லை. அதுவே ஈகைக்கு நிம்மதி அளித்திருந்தது.
 
 
வீட்டுக்கு திரும்பும் பாதைக்கு செல்லாமல் வண்டி பின்பக்கமாக செல்ல பழைய காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட நீச்சல்குளம் கண்ணில் பட  தாத்தா சத்தியநாதன் நீச்சல் கற்றுக்கொடுத்தது, தந்தையுடன் நீராடியது கண்ணில் வந்து பெற்றோரின் நியாபகத்தில் கண்கள் லேசாக கலங்க அவன் அணிந்திருந்த கூலரால் அது தயாளனுக்குக்கு கூட தெரியவில்லை.  
 
 
ஆனாலும் ஈகையின் நிலைகுத்திய பார்வையை புரிந்துக்கொண்டு தயாளன் அவனை ஆறுதல் படுத்த மீண்டும் வீடு நோக்கி வண்டியை செலுத்த உத்தரவிட்டான். தோட்டத்தின் அழகான வளைவுகளை ரசித்தபடி வந்தவன் தோட்டம் முடிவு பெறவும் வீட்டின் முன் வண்டிகள் நிறுத்துமிடத்தில் வண்டிகளை நிறுத்த சொல்லி கீழே இறங்கி கூலரை கழட்டியவன், அவனுடைய வீட்டை அண்ணாந்து பார்த்தான்.
 
அவன் மனை அது இன்று யாரோ வசிக்கும் அரண்மனை. குடிசையானாலும் ஏழைக்கு அவன் வீடுதான் அரண்மனை. தனக்கு சொந்தமான இவ்வளவு பெரிய வீடு ஈகைக்கு அரண்மனைதான். அவன் இளவரசன்தான். ஆனால் என்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியாமல் துடிக்கும் இளவரசன்.
 
மனதை கல்லாக்கியவன் வீட்டினுள் செல்ல அடியெடுத்து வைக்க அந்த அழகிய பெரிய கோலம் அவன் கண்ணில் பட்டது. கோலத்தை மிதித்து விடாமல் காலை தூக்கி நின்றவனை மொட்டைமாடியிலிருந்து கண்டாள் பார்கவி.
 
போர்மல் உடையில் ஒரு காலை தூக்கி நின்றவனின் முகம் தெரியவில்லை. ஆனாலும் கோலத்தை மிதித்து விடாமல் அவன் தன் உடலை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்து காலை பின் வைத்து “உப்…” என்று காற்றை வாயால் ஊதியவன் கோலத்தை மிதிக்காத நிம்மதியில் புன்னகைத்து விட்டு முடியை கோதி விட்டான்.
 
மொட்டைமாடியில் வத்தலை காய போட்டவள் தோட்டத்தை பார்க்க வரிசையாக வண்டிகள் வந்து நிற்கவும் யாரா இருக்கும் என்று பார்த்திருந்தவள் ஈகை கோலத்தை மிதிக்காமல் தடுமாறி நின்றதை காண சிரிப்பாக இருக்க அவனை கூர்ந்து கவனிக்க அவன் புன்னகைத்து தலை கோதிய விதம் மனதைகொள்ளை கொண்டது.
 
ஈகையை ரசித்து பார்த்திருந்தவளின் மனமோ “யார்னே தெரியாத ஒருத்தன இப்படி ரசிச்சு பாத்துண்டுருக்கியே? அவன் மட்டும் தலைய தூக்கி மேலே பாத்தா ஒன்ன நன்னாவா நெனைப்பான்” என்று கேள்வி எழுப்ப தலையில் குட்டிக்கொண்டவள் கிழே சென்றாள்.
 
வாசலில் வலதுபுறத்தில் மாடிக்கு செல்லும் படிக்கட்டும், அறைகளும் நடுவில் சமையலறையும், சாப்பாட்டறையும். இடது புறத்தில் பெரிய வரவேற்பரையும், பூஜையறையும் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பண்ணை வீடு.
 
ஈகையோடு வந்தவர்களை வெளியே இருக்குமாறு கையால் சைகை செய்தவன் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க ஈகைச்செல்வன் முதலில் கண்டது ஆறடியில் சத்யநாதனின் புகைப்படம் வாசலில் பெரிதாக மாட்டப்பட்டு பெரிய ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்ததை. புகைப்படத்தில் சத்தியநாதன் புன்னகைத்துக்கொண்டு மீசையை முறுக்கி விட்டவாறு இருந்தார்.
 
சத்யநாதனின் புகைப்படுத்தின் அருகில் சென்ற ஈகையும், தயாளனும் வணங்கி நிற்க பூஜையறையிலிருந்து வெளியே வந்தார் வேதநாயகி.
 
“தாத்தா இந்த இருவது வருஷமா ஊருக்கு வரமுடியாம, என் சொந்த வீட்டுக்கு வர முடியாம, அப்பா, அம்மாவ கொன்னவன் எங்க வீட்டுலையே இருக்குறது தெரிஞ்சும் ஒன்னும் பண்ண முடியாம இருந்துட்டேன். நான் பண்ண போற எல்லாத்துக்கும் நீங்கதான் எனக்கு வழி காட்டணும். உறுதுணையா நிக்கணும்” அவரை வணங்கியவாறு மனதால் வேண்டிக்கொண்டிருந்தான் ஈகை.
 
“யாருப்பா… நீங்க” கீதையை கையில் வைத்திருந்த வேதநாயகி மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறு ஈகையையும், தயாளனையும் மாறி மாறி ஏறிட 
 
“வணக்கம் பாட்டி…” என்றவன் அவரின் காலில் விழுந்து வணங்க அவரும் ஆசிர்வாதம் செய்தவாறு “யாரிவன்” என்ற பார்வையோடு யோசனையில் ஆழ்ந்தார்.
 
அந்த வீட்டுக்குள் இவ்வாறு சட்டென்று யாரும் உள்ளே வந்து விட முடியாது. அதுவும் மருதநாயகத்தின் அனுமதி இல்லாமல். அவர் இல்லாத நேரத்தில் இவன் வந்திருக்கிறான் என்றால்? மாதேஷுக்கு தெரிந்தவனா என்ற பார்வையைத்தான் வீசினார் வேதநாயகி.
 
தயாளனும் வணக்கம் வைக்க ஈகை தன் பெயரை கூறியவன் “இங்க ஒரு நிலம் வாங்கி இருக்கேன் பாட்டி… விசாரிச்சதுல அது உங்க நிலம்னு சொன்னாங்க. என்ன பிரச்சினைல நிலம் ஏலத்துக்கு வந்ததோ! உங்க ஆசிர்வாதம் இல்லாம அந்த நிலத்துல கைவைக்க எனக்கு இஷ்டமில்லை. அதான்…” என்று இழுக்க
 
வேதநாயகிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் வாய்நிறைய அன்பாக பாட்டி என்று அழைப்பவனிடம் என்னவென்று கேட்க
 
“முதல்ல உக்காருப்பா… நீ சொல்லுறது புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுறியா” அவரும் சோபாவில் அமர்ந்தவாறே ஈகைகை பார்த்து அமரும் படி செய்கை செய்தார்.
 
வீட்டுக்கு வந்தவன் எதையோ கூறுகிறான் என்னவென்று புரியாவிடினும் தனது பாசமிகு அண்ணனின் புகைபடத்தின் முன் அவன் வணங்கி நின்ற விதம் அவர் மனதை கவர, அந்த செயலால் அவனை பிடித்தும் போக, வீட்டுக்கு வந்தவனை உபசரிக்கும் அவர் குணம் அவர்களை உபாசிர்க்க உந்தியது.
 
ஈகையும் தயாளனும் அமர்ந்துகொள்ள முன்பாகவே பார்கவி மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தவள் அவர்களை கண்டும் காணாதது போல் சமயலறையினுள் செல்லலானாள்.
 
 இது அவள் வழக்கமாக செய்வதுதான். வீட்டாராக இருந்தாலும் சரி, வெளியாளாக இருந்தாலு சரி யார் அமர்ந்து மருதநாயகத்தோடு பேசிக்கொண்டிருந்தாலும் அவள் பாட்டுக்கு தலையை குனிந்தவாறு சென்று விடுவதுதான். இன்று அமர்ந்திருப்பது வேதநாயகி ஆச்சே!
 
 
“பார்கவி இங்க வாம்மா…” என்று அழைத்த வேதநாயகி “இது என் மக வயித்து பேத்தி. பேரு பார்கவி” என்று அறிமுகப்படுத்த ஈகைச்செல்வன் அவளை பார்த்து புன்னகைத்தவாறே வணக்கம் வைத்து விட்டு வேதநாயகியின் புறம் திரும்பிக்கொண்டான்.
 
 
ஏதோ அவருடைய நல்ல குணத்துக்கு தன்னுடைய பேத்தியை அறிமுகப் படுத்தினாங்க அதற்காக வணக்கம் வைத்தேன் கூடவே புன்னகை செய்தேன் என்றிருந்தது அவன் செயல். கொஞ்சமாலும் அங்கே ஒரு வயதுப் பெண் இருக்கிறாள் என்ற பார்வை அவனிடம் இல்லை. வேதநாயகியும் அதை கவனித்து கொண்டுதான் இருந்தார்.
 
 
வேதநாயகி தன்னை அழைத்து ஈகைக்கு அறிமுகப்படுத்தி வைப்பார் என்று எதிர்பார்க்காத பார்கவி சற்று அதிர்ச்சியடைய, அவன் அவளை கண்டு கொள்ளாததில் யோசனைக்குள்ளானாள்.
 
 மாடிப்படிகளில் இறங்கி வரும் பொழுதே ஈகை பார்கவியை பார்த்து விட்டான். சேலைதான் அணிந்திருந்தாள். அதிலும் அந்த லெவெண்டர் நிறம் அவளுக்கு கண கச்சிதமாக பொருந்தும் என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதற்க்கு மேட்ச்சிங்காக கோல்டு நிறத்தில் பிளவுஸ். போட்டோவில் இருந்தது போலவே முடியை பின்பக்கமாக ஒதுக்கி ஒரு கிளிப்பில் அடக்கி விரித்து விட்டிருந்தாள். கொஞ்சம் மல்லிகை அவள் தலையில் குடியிருந்தது கூந்தலோடு சேர்ந்து தோளின் இரு பக்கமும் விழுந்து அவள் படிகளில் இறங்கவும் பொழுது நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன. கூடவே அவள் காதில் அணிந்திருந்த குடை ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியதுதான் கண்கொள்ளா காட்ச்சி. நெத்தியில் இருந்த சிறிய வட்ட போட்டு அவளுடைய சின்ன நெத்தியில் அழகாக வீற்றிருக்க, உதடுகள் சாயமில்லாமல் சிவந்திருந்தன.
 
அந்த ஒரு நொடிப்பார்வையிலையே போட்டோவில் இருந்தவளுக்கு, நேரில் இருப்பவளும் ஆயிரம் வித்தியாசங்களை சொல்லி விடுவான் ஈகை. தூரத்தில் பார்த்தே அவ்வளவு கவனித்தவன் கிட்ட நிற்பவளை கள்ளப்பார்வை பார்க்க மாட்டானா என்ன?
 
“என்ன இவன் இந்த பொண்ண லவ் பண்ணுறேன்.. பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு ஆர்வமா பார்க்கக் கூட மாட்டேங்குறான். இப்படி கண்டுக்காம இருந்தா அவ எப்படி இவன திரும்பி பார்ப்பா” தயாளனின் மனமோ தாறுமாறாக சிந்திக்க
 
 
“பார்கவி தம்பீங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டுவாம்மா…”  வேதநாயகி சொல்ல
 
ஈகைக்கு வணக்கம் வைத்த பார்கவியும் அவனை பார்வையால் அளவிட்டாள்.
 
 
நீலநிறத்தில் போர்மல் ஷார்ட்  மற்றும் அதே நிறத்தில் டெனிம் அணிந்திருந்தவனின் தோல் நிறம் தூக்கலாக இருக்க, “என்ன கலரு? இவா வயித்துல இருக்கும் பொழுது இவாளோட அம்மா பால் மட்டும்தான் சாப்பிட்டு இருப்பா போல” என்றுதான் எண்ணத் தோன்றியது பார்கவிக்கு.
 
மொட்டை மாடியிலிருந்து பார்த்த பொழுது புன்னகை செய்த முகத்தை இவ்வளவு அருகில் பார்க்க நேரிடும் என்று பார்கவி நினைத்தும் பார்க்கவில்லை. அவன் வைத்த வணக்கமும், சிந்திய புன்னகையில், பார்த்த அந்த ஒரு நொடிபார்வையிலும் என்ன இருந்தது? அவன் புறம் அவளை ஈர்த்து இருந்தது.
 
பார்கவி தன்னை அழகி என்று என்றுமே! நினைத்ததில்லை. ஈகை அவளை பார்க்காதற்கு காரணம் அவள் அழகி இல்லை என்று அர்த்தம் இல்லை. அவனின் கண்ணியம் தான் என்று நினைத்து விட்டாள் பார்கவி. அது அவளை ஈர்க்க அவனையே! பாத்திருந்தாள் அவள்.
 
“என்னமா?” பார்கவியை அசையாது நிற்கவே! வேதநாயகி திரும்பி பார்க்க  
 
“ஆ…” என்றவள் மண்டையை ஆட்டியவாறு சமையலறையின் பக்கம் செல்ல
 
“இல்ல வேணாங்க நான் சுத்த சைவம். எங்கயும் எதுவும் சாப்பிட மாட்டேன்” ஈகை பட்டென்று சொன்னாலும் அவன் பார்வை வேதநாயகியை விட்டு விலகவில்லை. பார்கவி கண்களை விரித்து அவனை பார்த்தாள்.
 
“அடப்பாவி வாரத்துக்கு ஒருநாள் அசைவம் சாப்பிடுறவனாயிருந்தா கூட நீ சொன்னதுக்கு மன்னிச்சுடுவேன். நீ தினமும் கொட்டிக்கிட்டு சுத்த சைவம்னு சொல்லுறியே” தயாளன் ஈகையின் காதில் சொல்ல
 
“அடங்குடா வந்த வேலைய பார்க்க விடு” அண்ணனை முறைக்கவும் முடியாமல், திட்டவும் முடியாமல் பல்லைக்கடித்தான் ஈகை. 
 
“பார்கவி சுத்த சைவம்பா… அவ கையாள சாப்பிட நீங்க பயப்பட வேணாம்” என்ற வேதநாயகி தயாளன் முணுமுணுக்கவும் என்னவென்று விசாரிக்க
 
“இல்ல… இவனும் சைவம்தான். பெரியவங்க நீங்க சொல்லுறீங்கல்ல… அதனால சாப்பிட சொல்லுறான்” என்று ஈகை சொல்ல பார்கவி புன்னகைத்தவாறே சமயலறையினுள் நுழைந்தாள்.
 
  “அடப்பாவி. நா எப்போடா சைவம் ஆனேன்” தயாளன் ஈகையை முறைக்க அவன் பக்கம் ஈகை திரும்பினால்தானே! 
 
“போடி… உன்ன மடக்க என்னெல்லாம் பண்ணணுமோ பண்ணுறேண்டி…” ஈகையின் மனம் செல்லும் அவளை பார்த்து கூவியது.
 
 “மண்டு மண்டு இப்படியா ஆ…..ன்னு அவரையே பாத்துண்டு நிப்ப? அவர் மட்டும் திரும்பி ஒன்ன பாத்திருந்தார்னு வை என்ன நினைப்பார்?”
 
“மானம் போய் இருக்கும்” அவள் மனசாட்ச்சி எடுத்துரைக்க,
 
“உண்மையிலேயே அவர் தீமான நெறம்” கண்ணை விரித்தவள் “பொண்ணுகளுக்குத்தான் வெண்ணெய்ல கொழைத்த நெறம்னு சொல்லுவா, ஆம்பளை பசங்களுக்கும் இந்த மாதிரி நெறம் இருக்குறத இப்போத்தான் முதல் தடவயா பாக்குறேன்” தனக்குள் முணுமுத்தவள் பேஷன் பழத்தை நறுக்கலானாள்.
 
“நிறம் மட்டுமா? முக அழகும் வசீகரமாத்தான் இருக்கு. குணமும் நல்ல விதமா தான் இருக்கு போல, கண்ணியமானவராதான் தெரியுறாரு” ஈகையை பற்றி சிந்த்தித்தவாறே பழத்தை ஜூஸ் போடலானாள்.
 
“இப்போ நீ எதுக்கு யார்னே! தெரியாத ஒருத்தர பத்தி இவ்வளவு யோசிக்கிற? இது உன் குணம் இல்லையே!” பார்கவியின் மனம் அவளை வசைபாட தலையை உலுக்கிக் கொண்டவள் ஜூஸை கிளாசில் ஊற்றினாள்.
 
வேதநாயகி “ஆமா இந்த தம்பி யாரு?”
 
“இது என் பி.ஏ பாட்டி…”
 
“அப்படினா….”
 
“நான் பாக்குற எல்லா வேலைக்கும் உதவியா இருக்குறவரு”
 
“ஓஹ்… எடுபிடியா…” கண்ணாடியை சரி செய்து தயாளனை பார்த்த வேதநாயகி “ஆனாலும் வெள்ளைகார தொர மாதிரி துணி போட்டிருக்கான்”
 
வேதநாயகி சொல்லி முடிக்கவும் தயாளனின் முகம் அஷ்டகோணலாக மாறியது. ஈகையால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தயாளன் ஈகையை முறைக்க
 
“பாட்டி.. இவரு  எனக்கு அண்ணன் மாதிரி…” என்று தயாளனின் தோளில் தட்ட தலையசைத்து ஏற்றுக்கொண்டார் வேதநாயகி.
 
பார்கவி இரண்டு குவளைகளில் பேஷன் பழம் ஜூஸ் கொண்டுவந்து கொடுக்க அந்த வெயிலுக்கு இதமாக தொண்டையில் இறங்க தயாளன் நன்றி தெரிவிக்க. ஈகைச்செல்வன் ஒன்றுமே கூறாமல் பருகி விட்டு குவளையை வைக்க பார்கவின் மனமோ
 
 
“என்ன இவர் ஒன்னும் சொல்லல ஜூஸ் நன்னா இல்லையோ! சக்கர அளவாதானே  போட்டேன். புளிப்பு குறையணும்னு உப்பு கூட போட்டேன்!”
 
 
பார்கவி ஈகைச்செல்வனையே திரும்பி திரும்பி பார்த்தவாறு குவளையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல  தயாளன் அவளை வித்தியாசமாக பார்த்தான்.
 
விருந்தோம்பலை முடித்த வேதநாயகி என்ன, ஏது என நிலத்தை பற்றி விசாரிக்கலானார்.
 
இருநூறு ஏக்கர் நிலம் ஏலத்துக்கு வந்ததாகவும், அதை அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் தமிழ்ச்செல்வன் தன் பெயரில் வாங்கி விட்டதாகவும் கூறியவன். நிலத்தை பார்க்க இங்கு வந்த பின் தான் நிலம் பிரச்சினையில் இருந்ததே தெரியும் என்றும், உங்க ஆசிர்வாதம் இல்லாமல் அந்த நிலத்தில் வேலை பார்க்க தனக்கு இஷ்டமில்லையென்றும் தெளிவாக கூறினான் ஈகைச்செல்வன்.
 
“ஜானகியோட நிலம் பா.. அது. அவளும் உயிரோட இல்ல. அத அவ பேர்ல எழுதி வச்ச எங்கண்ணனும் உயிரோட இல்ல. பல வருஷமா பிரச்சினையிலையே இருந்தது. உன் கைக்கு நிலம் வரணும்னு கடவுள் முடிவு பண்ணிட்டார் போல அத நாம ஒன்னும் பண்ண முடியாது. நீ வேலைய ஆரம்பி என் ஆசிர்வாதம், எங்கண்ணா ஆசிர்வாதம் எல்லாம் உன் கூடவே இருக்கும்” என்று இன்முகமாகவே சொல்ல ஈகைச்செல்வன் மனம் குளிர்ந்தான்.
 
பலவருடங்களாக எந்த நிலத்தை பெற பொறுமை காத்தேனோ! அந்த நிலத்தை வாங்கியவன் தன் வீட்டினுள் அமர்ந்திருப்பதை அறிந்த மருதநாயம் கோபம் கணக்க இரு மகன்களோடு வீடு நோக்கி புறப்பட்டார்.