செவ்வானில் ஒரு முழு நிலவு 3

6771

நிலவு 3
கரும்பு ஆலையில் மருதநாயகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பதட்டமாக வந்த விக்னேஸ்வரன்
 
“அப்பா அந்த வக்கீலு என்னென்னமோ சொல்லுறான் பா…”
 
“என்ன சொல்லுறான்” புத்தகத்தை மூடியவர் மூக்கு கண்ணாடியின் வழியாக மகனை ஏறிட்டு கேட்க
 
“நம்ம நிலத்த சென்னைல ஏலம் போட்டாச்சாம். அத யாரோ வாங்கிட்டாங்களாம்”
 
“என்னடா உளறுற?” என்பது வயதிலும் கர்ஜித்தவர் அமர்ந்தவாறே முறைக்க
 
“நீங்களே பேசுங்க” அலைபேசியை தந்தையிடம் கொடுத்த விக்னேஸ்வரன் அண்ணனை அழைக்க வேகமாக வெளியேறினான்.
 
“என்ன வக்கீல் என்ன பிரச்சினை?”
 
“ஐயா உங்க நிலத்தை ஏலம் விட சொல்லி கோட் தீர்ப்பு சொல்லுச்சு. அந்த கடிதம் எனக்கு கிடைக்க கொஞ்சம் லேட் ஆனதால விஷயம் தெரியாமளையே போயிருச்சு” என்று இழுக்க…
 
“என்ன சொல்லுற… தெளிவா சொல்லு”
 
அலைபேசி வழியாக அவரின் கர்ஜனை குரல் கேட்க வக்கீல் ஒரு கணம் நடுநடுங்கிப்போனார்.
 
அந்த நிலத்தை மீண்டும் பெற அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று அவருக்கு நன்கு தெரியும். நிலத்துக்கு சொந்தக்காரன் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதால் உயிரோடு இருப்பதும் அவர் அறிந்ததுதான். இல்லையாயின் அவனிடம் கையெழுத்து வாங்கி, கேஸை வாபஸ் பெற்று அவனை கொன்று அந்த இடத்திலையே புதைத்தும் இருப்பார்கள்.
 
 
மகளின் வளைகாப்புக்கு ஊர் சென்றிருந்தவருக்கு கடிதம் கிடைக்க முடியாமல் பண்ணியது ஈகைச்செல்வன் என்றறியாமல், வந்த கடிதம் தன் கவனத்துக்கு வரவில்லையென்று எண்ணி தன் தவறை மறைத்து உயிர் பயத்தில் காலதாமதமாக கிடைத்ததாக கூறினார். 
 
“அது எப்படியா… லேட் ஆகும்” மருதநாயகம் கத்த ஆரம்பிக்க
 
“என்னோட ஆபிஸ் அட்ரசை தேடி கண்டு பிடிக்க முடியலையாம்” சிறுபிள்ளைத்தனமாக காரணம் சொல்லலானார் வக்கீல்.
 
“உன்ன நான் அப்பொறம் கவனிச்சிக்கிறேன். என் நிலத்த எவன் வாங்குனானு கண்டுபிடிச்சு சொல்லு” என்றவர் அலைபேசியை கோபத்தில் விசிறியடித்து விட்டு என்ன செய்வதென்று நெற்றியை தடவியவாறு யோசிக்கலானார்.
 
அவருக்கு அந்த நிலம் வேண்டும். எத்தனை வருட காத்திருப்பு? யாரோ ஒருவன் அதை வாங்கி விட்டால் அதை அப்படியே! விட்டுவிட முடியுமா? இருநூறு ஏக்கர் நிலம். அதை யாரோ ஒருவன் அனுபவிப்பதா?
 
யாரவன்? உடனே அவனை தேடிக் கண்டு பிடித்து கண்டம்துண்டமாக வெட்டி கூறுபோட்டு, நிலத்தை மீளப்பெற வேண்டும் என்று ஆவேசம் தோன்ற, தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு நிலத்தை வாங்கியவனை தேடி புறப்பட்டார். அவனோ! இவரை காண, இவருடன் நேருக்கு நேராக நின்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிப்பார்க்க, ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
 
மதிய  பொழுதாயினும் கிராமத்து பசுமையில் காற்று சிலுசிலுவென வீச வண்டியின் பின்னாடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வன் ஏசியை அனைக்குமாறு சொல்லியவாறே கண்ணாடியை இறக்கி விட்டவன் இயற்கை காற்றை ஆழ்ந்து சுவாசித்து மூச்சை இழுத்து விட்டான்.
 
ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த தயாளன் பின்னாடி திரும்பிப் பார்க்க
 
“என்ன ப்ரோ… ஏதாவது சொல்லனுமா?” தயாளனின் முகபாவனையை ஒருநொடியிலையே! படித்து விடுவான் ஈகை. 
 
ஒன்றுமில்லையென்று தயாளன் தலையசைத்தாலும் அவன் மனதில் அச்சம் கவ்விக் கொண்டிருந்தது.
 
இருவது வருடங்கள் கடந்த பின் நேருக்கு நேராக சந்திக்க போகிறோம், அடையாளம் கண்டுகொள்வார்களா?  ஈகை பத்து வயது சிறுவன் என்றாலும் அவன் நிறமே போதுமே அவனை காட்டிக்கொடுக்க, தயாளனின் மனம் அல்லாட,
 
 
மூளையோ! டேய் முட்டாளே!  ஈகைத்தான் செத்துட்டதா நினைக்குறானுங்களே! அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். பயப்படாதே! உன்னை கண்டுகொள்வார்கள்.  உனக்கு பதினைந்து வயது உன் முகம் இவனுங்களுக்கு நன்கு நினைவு இருக்கும். உன்னை துண்டு துண்டாக வெட்டி, செதில் ,செதிலாக செதுக்கி, புதைப்பார்களோ! எரிப்பார்களோ! கடலில் வீசுவார்களோ! என்ன செய்ய போகிறாய்?
 
தயாளனின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, எச்சில் கூட்டி விழுங்கியவன் “அதுக்குதான் தாடி வைக்க சொன்னானா? கூடவே கண்ணாடி வேறு? அதுல என் கண்ணுதான் பெருசா தெரியுது” நெஞ்சில் கைவைத்து தன்னை ஆசுவாசப்படுத்தலானான் தயாளன்.
 
காயத்திரியிடம் வாக்கு கொடுத்தது போலவே இரண்டு நாட்களில் வீடு சென்ற ஈகை நீண்ட நேரம் ஐசுவோடு தான் செலவளித்தான். அவள் கேட்டவைகளை மொத்தமாகவே வாங்கி சென்றிருக்க, சித்தப்பனை செல்லம் கொஞ்சலானாள் அவள்.
 
தம்பி மட்டும்தான் மிஸ்ஸிங் என்று குறை வேறு, அதற்கு அண்ணனை ஈகை முறைக்க, தாடையை தடவியவாறே தயாளன் முகட்டை பார்க்கலானான்.
 
“அங்க எலி அம்மணமா ஓடுதா?” ஈகை கோபமாக கத்த
 
“அச்சச்சோ சித்துக்கு கோபமா? சரி அடுத்த தடவ வரும் பொழுது தம்பி பாப்பா வாங்கிட்டு வாங்க” உடனே ஈகையின் தாடையை பிடித்து ஆட்டியவாறு மழலையில் செல்லம் கொஞ்சி சமாதானம் வேறு செய்தாள் ஐசு. அது அண்ணன், தம்பி இருவர் முகத்திலும் புன்னகையை தோற்றுவித்திருந்தது.
 
ஈகையின் கோபமெல்லாம் ஐசுவை பயமுறுத்தாது. அதற்கு அஞ்சி நடுங்கத்தான் ஒருத்தி காத்துக்கொண்டிருக்கிறாளே!
 
ஐசு தூங்கிய பின் தான் பூவிழியிடம் நலம் விசாரித்தான். அவள் கையால் உணவுண்டவன் மடியில் படுத்துக்கொண்டு தான் மருதநாயகத்தை பழிவாங்க முதல் படியை எடுத்து வைக்க போவதாக கூற, கண்களில் கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்தாள் பூவிழி.
 
 
தான் என்ன காரியம் செய்ய போகிறோம் என்று ஈகை பூவிழியிடம் கூறவில்லை. மாறாக தயாளனை ஏறிட்டு ஈகை எது செய்தாலும் உறுதுணையாக இருக்கும் படி ஏவினாள் அந்த அன்னை.
 
ஒரு பெண்ணாக ஈகை செய்ய போகும் காரியத்தை அறிந்தால் அவளால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமா? 
 
ஆனால் காயத்திரி அவ்வாறு கண்மூடித்தனமாக ஆசிர்வதிக்கவில்லை. தயாளனை திருமணம் செய்யும் பொழுதே தயாளன் ஈகையை பற்றியும், அவன் வாழ்வில் நடந்ததை பற்றியும் கூறி, “அவனுக்கு பிறகுதான் நீ, எந்த சூழ் நிலையிலும் அவனை விட்டு விலக மாட்டேன். அப்படி ஒரு எண்ணம் உன் மனதில் தோன்றவும் கூடாது. அவன் எது செய்தாலும் நான் அவன் கூடவே தான் இருப்பேன்”
 
அது வார்த்தையால, சத்தியவாக்கு. இன்றுவரை காயத்திரி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். நகமும் சதையும் போல, ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை போல ஒன்றாகவேதான் இருப்பார்கள். ஈகையை விட்டு தயாளன் இருந்ததே இல்லை.
 
ஈகை, தயாளனின் உறவுக்குள் அவள் நுழையாமல் ஈகையோடு புது உறவை ஏற்படுத்திக்கொண்டாள். அதுதான் ராகியை கட்டி தம்பி என்ற அந்தஸ்தை கொடுத்து அன்பாக பேசி அவனை குடும்பத்தில் இணைக்கலானாள். சிலசமயம் மிரட்டுவாள். பல சமயம் அவன் சொல்லுக்கு கட்டுப்படுவாள்.
 
ஈகை அன்பானவன், குடும்பத்தை நேசிப்பவன், ஆதலால் அவனோடு உறவு சீராகவே இருக்க ஈகையிடம் நேரடியாகவே கேட்டாள் காயத்திரி “என்ன செய்ய திட்டமிட்டிருக்குற ஈகை?” 
 
ஒரு நொடி அவளை நேர் பார்வை பார்த்தவன் தான் செய்யப்போகும் காரியத்தை ஒப்பிக்க, அதிர்ச்சியாக கணவனை பார்த்தாள் காயத்திரி.
 
தயாளனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வைத்தே! அவன் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டவள், முகம் தெரியாத அந்த பெண்ணுக்காக மனத்தால் வேண்டிக்கொண்டாள்.
 
ஈகை. அச்சப்படாமல், வெட்கப்படாமல் தான் செய்யப்போகும் இழிவான செயலை அக்காவாக மதிக்கும் தன்னிடமே இவ்வளவு தைரியமாக நேர்கொண்ட பார்வையோடு சொல்கிறான் என்றால்? அவன் மனதில் இருக்கும் பகையும், பழிவாங்க துடிக்கும் வெறியும், இந்த செயலை செய்வதில் அவனுக்கு இருக்கும் உறுதியும் காயத்திரியால் நன்கு உணர முடிந்தது. இதில் அவள் ‘பெண் பாவம் பொல்லாதது’ என்று வசனம் பேசி அட்வைஸ் மழை பொழிந்தால் அவள் தான் இங்கே கோமாளி. மெளனமாக சில நொடிகள் இருந்தவள்
 
“நீ எதை செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். அப்பாவியான யாரும் பாதிக்கப்படாம பாத்துக்க” என்றவள் கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சோடு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.  
 
 
அந்த பார்வையில் ஈகை எந்த தப்பும் செய்து விடக் கூடாதே! என்றிருக்க, தயாளன் மனைவியை சமாதானப்படுத்தவோ! அதை பற்றி பேசவோ! கொஞ்சம் கூட நினைக்கவில்லை. காரணம் மருதநாயகத்தை பழிவாங்க ஈகைச்செல்வனுக்கு தயாளன் உதவுவது அவன் குடும்பத்தை அழித்ததுக்காக மட்டுமல்ல, அந்த விபத்தில் வண்டி ஒட்டிய தன் தந்தையும், கூட சென்ற ஒரே தம்பியும் பலியானதால்தான். அது அவன் மனசாட்ச்சி நன்கு அறிந்த உண்மை. ஆனாலும் பார்த்த நொடியிலிருந்து தந்தையின் வண்டியை ஓட்டுபவரின் மகன் என்று நினைக்காமல் தயாளனை வாய் நிறைய “அண்ணா” என்று அழைத்த ஈகைச்செல்வனின் மீது பாசம் வைத்தான் தயாளன்.
 
சத்யநாதனின் பதினாறாவது நாள் காரியம் முடிந்து ஊர் திரும்பும் பொழுது முத்துராஜ், மாலதி ஈகைச்செல்வன் மூவரும் ஒரு வண்டியில் வர, அடுத்து வண்டியில் தயாளன் குடும்பத்தோடு ஈகைச்செல்வனின் தாய்வழி தந்தை செல்வம் வந்தார்.
 
நகரத்தை நெருங்கும் பொழுது வண்டியை நிறுத்தியவர்கள் உணவுண்டு விட்டு வண்டியில் ஏற ஈகைசெல்வன் தயாளனோடு இருக்க ஆசைப்பட்டு அந்த வண்டியில் ஏறிக்கொண்டான்.
 
 முத்துராஜும் நெடும்தூரம் வண்டி ஓட்டிய அசதியும் அப்பாவின் மரணத்தால் ஏற்பட்ட கவலையும் ஒன்றாக தாக்க செல்வத்தை வண்டியெடுக்குமாறு கூற அந்த நவீன வண்டியை ஓட்ட அவருக்கு புரியவில்லை.
 
ஓட்டுநர் மணி முத்துராஜ் வந்த வண்டியியை தான் ஓட்ட, செல்வம் மணி ஓட்டிக்கொண்டு வந்த வண்டியை ஓட்ட மணியின் இரண்டாவது மகன் தந்தையோடு வந்தமர்ந்தான்.
 
இவர்கள் சிறிது தூரம் சென்றிருக்கவில்லை பெரிய ஒரு மணல்லாரி வந்து முத்துராஜின் வண்டியை தூக்கியடிக்க வண்டி உருண்டதுதான் செல்வத்தின் கண்களிலும் முன்னாடி அமர்ந்திருந்த ஈகைசெல்வனின் கண்களிலும் பட்டது. தயாளன் அதிர்ச்சியாக எட்டிப்பார்க்க அதிர்ச்சியில் செல்வம் வண்டியை நிறுத்தி இருந்தார்.
 
முத்துராஜின் வண்டி உருண்டு பள்ளத்தில் விழ, மண்லாரி வேகமெடுத்து மாயமாக மறைந்து போனது. அதிர்ச்சியிலிருந்து செல்வத்தை உலுக்கியது பதினைந்தே வயதான தயாளன்தான்.
 
  சம்பவம் நடந்தது மதியம் என்பதால் சாலையில் கூட்டமும் கூட, போலீஸும் வர விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்ற முயற்சிக்க, முத்துராஜும், மாலதியும், மணியின் மகனும் சம்பவம் நடந்த இடத்திலையே உயிர்நீத்திருக்க, மணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
 
அவர்கள் அனைவரும் அம்பியூலன்சில் ஏற்றப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்ல விபத்துக்குள்ளான வண்டியிலினுள் மணியின் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்து இயக்கி காதில் வைத்த தயாளன் பேச முன்பாக
 
“மணி நான் சொல்லுறத நல்லா கேட்டுக்க சொத்துக்காக முத்துராஜ் ஐயாவ மருதநாயகம் ஐயா குடும்பத்தோடு கொல்ல பாக்குறாங்க ஐயாவை பத்திரமா கூட்டிக்கிட்டு ஊர் போய் விசயத்த சொல்லு” என்று அலைபேசி துண்டிக்கப்பட பதினைந்து வயதான தயாளனுக்கு அதை கிரகித்து புரிந்துகொள்ளத்தான் நேரமெடுத்திருந்தது.
 
யார் அழைத்தார்கள்? சொல்வது உண்மையா? பொய்யா? என்ற ஆராய்ச்சியெல்லாம் அனாவசியம் அலைபேசியில் சொன்னது நடந்தேறி விட்டிருந்தது.
 
பதட்டமாக செல்வத்திடம் கூற பதறியவர் என்ன செய்வது போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாமா என தான் அறிந்ததை கூற அந்த வயதிலும் புத்திசாலியான தயாளன்
 
“ஆதாரம் இல்லையே தாத்தா… வாங்க முதலில் ஆஸ்பிடல் போலாம்” என்றவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்ல ஈகைச்செல்வன் மற்றும் தயாளனின் அன்னை பூவிழி அழுதவாறு இருந்தாள்.
 
 
பல மணிநேரம் கடந்தும் அழுதவாறே இருக்கும் அன்னைக்கு பருக டீயும், ஈகைக்கு சாப்பாடும் வாங்க வெளியே சென்ற தயாளன் மருதநாயகம் தன் மகன்களோடு வருவதைக் கண்டு கொலைவெறியில் டீ கிளாஸை உடைத்து குத்தலாமா என யோசிக்க,
 
“அவன் குடும்பத்துல எவனும் உயிரோடு இருக்கக் கூடாது. எவனாச்சும் இருக்கானு பாரு” மருதநாயகம் சொல்ல
 
“அவன் பையன் உயிரோட இருந்தா என்ன பண்ணுறது?” தங்கதுரை யோசனையாக கேட்க ஈகையை பற்றி என்றதும் நிதானத்துக்கு வந்து அவர்களின் பேச்சில் கவனமானான் தயாளன்.
 
“கிழவனால வளர்க்க முடியாதுனு கோட்ல கேஸ் போட்டு நம்ம கூட கூட்டிகிட்டு வந்து மட சாம்பிராணியாக்கிட வேண்டியதுதான். வேலைக்காரங்களோடு இன்னொரு வேலைக்காரன்” மருதநாயகம் சத்தமாக சிரிக்க
 
“அம்மா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க” தங்கதுரை சொல்ல
 
“அவ என்னடா சொல்லுறது. திருட்டு பட்டம் கட்டினா… ஒரு வயசுக்கு மேல பொம்பள புள்ள கைய புடிச்சி இளுத்தான்னு சொன்னா அவளே கால ஒடச்சி மூலைல உக்கார வச்சிடுவா” மீசையை முறுக்கியவாறு பெருமையாக பேச தயாளனின் இரத்தம் கொதித்தது.
 
“முதல்ல உள்ள போய் பார்க்கலாம்” விக்னேஸ்வரன் எரிச்சலோடு சொன்னான்.
 
கதறிய வேதநாயகியை விட்டு வந்ததே விபத்தில் சிக்கியவர்கள்  குற்றுயிரும் கொலையுயிருமாக இருந்தால் கொன்று விடுவதற்காகவேதான்.
 
அவர்கள் பேசியது காதில் விழவே ஈகைச்செல்வனையும் விட்டு விட மாட்டார்கள் என்று புரிய அவர்கள் தீவிரசிகிச்சை பிரிவின் பக்கம் செல்ல முத்துராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு ஓடிவந்த தயாளன் செல்வம் தாத்தாவிடம் விஷயத்தை கூறி ஈகையையும் அன்னையையும் இழுத்து சென்று ஈகையின் உயிருக்கு ஆபத்து என்று அன்னைக்கு புரியும் படி கூறியவன் மருத்துமனையில் ஒரு அறையில் பூட்டி வைத்தான். ஈகையையும் அன்னையையும் அவர்களின் கண்களில் படாமல் மறைத்தவன்
 
அவர்கள் வரும் போது தம்பியின் உடலைக் கட்டிக்கொண்டு “சின்னையா… அண்ணா… னு வாய் நிறைய கூப்பிட்டீங்களே! இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு ஆக்சிடன்டுல செத்துட்டீங்களே!” என கதற
 
 
ஈகையின் எதிர்காலத்தை நினைத்து கோபத்தை கட்டுப்படுத்திய செல்வமும் வெள்ளைத்துணி முழுக்க ரத்தக்கரையோடு சுற்றப்பட்டிருந்த சிறுவனின் உடல் தான் பேரன் என்று கதற மருதநாயகமும் மகன்களும் உள்ளுக்குள் குஷியானாலும் சோகமான முகத்தை வைத்துக்கொண்டு நாடகமாட செல்வமும் தயாளனும் முத்துராஜையோ, ஈகையென்று சொன்ன தயாளனின் தம்பியின் உடலையோ தொடக்கூட விடாமல் பார்த்துக் கொண்டனர்.
 
 
உயிருக்கு போராடிய மணியும் இறந்து விட, இறந்தவர்களின் இறுதிக் காரியங்களை செல்வமும், தயாளனும் முன் நின்று செய்யலாயினர்.
 
 
மருதநாயம் பேச்சுக்கு செல்வமிடம் வந்து சொத்தை பற்றி பேச பல்லைக் கடித்த செல்வம்
 
 
“வயசான எனக்கு அத பத்தி என்ன தெரியும்? எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்கப்பா… என்றவர் அவர்கள் கண்களில் படாதவாறு ஈகையை வளர்க்க சென்னையை விட்டு வேறு மாநிலமே சென்று விட்டார். கூடவே தயாளன், பூவிழியையும் அழைத்து சென்றவர் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு இருவரையும் படிக்க வைத்தார்.

 
பெற்றோர் இறந்தது விபத்தில் என்று எண்ணி இருந்த ஈகைசெல்வன் அன்னையை தேடி அழுது அடம்பிடிக்கவும் செல்வம் வேறு வழியில்லாது உண்மையை அவனிடம் கூறலானார்.
 
அந்த பத்து வயது சிறுவனின் மனதில் அது நஞ்சாகத்தான் விழுந்து, விதைந்து வேர் விட்டது.  மருதநாயகத்தை அழிப்பதே அவனின் ஒரே குறிக்கோளாகிப்போக தயாளன் அவனுக்கு உறுதுணையானான்.
 
ஈகைக்கு செல்வம் நடந்தது விபத்து அல்ல உன் பெற்றோரை கொன்று விட்டார்கள் என்று கூறியதும், கதறி துடித்த பூவிழி தயாளனிடம் “அவனுகள வெட்டியிட்டு வா” என்றவாறு மயங்கி சரிய, அவ்வளவு நாளும் மனஇறுக்கத்தில் இருந்தவளுக்கு ஏதாவது நடந்து விடுமோ! என்று அஞ்சினர் அனைவரும்.
 
தயாளனின் தந்தை மணி பூவிழிக்கு அத்தை மகன் தான். வீட்டார் சம்மதத்தோடு ஆசையாசையாக திருமணம் செய்த மண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. சிங்கக்குட்டி போல் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்க தன் வாழ்க்கை யார் கண்ணோ பட்டது போல் ஒரே நாளில் காதல் கணவனையும் இழந்து, சின்ன மகனையும் இழந்து தேற்ற யாருமின்றி ஒடுங்கிப்போனாள் பூவிழி.
 
புலம்பியவாறே! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவள் வீடு வந்ததும் செல்வத்திடம் முதல் கேட்ட கேள்வியே! இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்காதா? என்றுதான். 
 
“கிடைக்கும். கண்டிப்பாக கிடைக்கும்” தயாளன் அன்னையின் கையை பிடித்தவாறு சொல்ல
 
“அவனுங்க இரத்த கண்ணீர் வடிக்கணும் டா… விட்டுடாத”
 
அவள் அருகில் வந்த ஈகைசெல்வன் “அம்மா உங்க இந்த மகன் அதை கண்டிப்பாக செய்து முடிப்பான்” என்று வாக்கு கொடுக்க, அதன் பின் அவள் என்றுமே! அதை பற்றி பேசவில்லை.
 
தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை கைப்பற்ற வேண்டும், மருதநாயகத்தை குடும்பத்தோடு நடுத்தெருவில் நிறுத்த வேண்டும் என்பதுதான் ஈகைச்செல்வனின் ஒரே குறிக்கோளாகி இருந்தது.
 
அதற்கு அவனுக்கு தேவையப்பட்டதெல்லாம் பணம், பணம், பணம். அதை சம்பாதிக்க வெறிகொண்டு படித்தான்.
 
 அவன் தொழில்  ஆரம்பிக்கும் பொழுது அன்னையின்  நகைகளை  செல்வம் தாத்தா அவன் கையில் கொடுத்து “உன் அப்பா தொழிலை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த பாவிங்க கிட்ட இருந்த நகைகளை மட்டும் காப்பாற்றி இத்தனை வருசமா பத்திரப்படுத்தி வச்சிருந்தேன்” என்று கண்கள் கலங்கி நிற்க  
 
“இது போதும் தாத்தா அம்மா, அப்பா ஆசிர்வாதம் பண்ணா மாதிரி இருக்கு” என்றவன் முதல் படி, முதல் அடி எடுத்து வைத்தான் மருதநாயகத்தை வீழ்த்த.
 
அதுதான் பணம் சம்பாதிப்பது. அவர் தொழிலில் கைவைத்து, அவர் அறியாமல் அவருடைய பங்குகளை வாங்க ஆரம்பித்தான்.
 
பொருளாதாரரீதியாக அவரை வீழ்த்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ தூர இருந்தே செய்தவன் ஒரேயடியாக மனதளவில் பெரிய அடி கொடுக்க முடிவு செய்து அவரின் ஒரே மகளின் செல்ல பேத்தியின் வாழ்வில் குறிக்கிடுவதென்று முடிவெடுத்து  பார்கவியை நேரில் சந்திக்க பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
 
தயாளனின் அச்சமோ எதிரியை நேராக நின்று எதிர் கொள்வதிலில்லை. மாறாக ஈகை அந்த வீட்டுக்குள்ளேயே! செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில் இருந்தது. 
 
சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க வேண்டுமா? என்று ஈகையை கேட்டால் அது என் குகை சிங்கத்தை தந்திரமாக வெளியேற்றி நரி அல்லவா குடியேறி விட்டது என்பான்.