செவ்வானில் ஒரு முழு நிலவு 21

5950

நிலவு 21
உள்ளே சென்ற ஈகையை காணவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்திருப்பது. உள்ளே வரும் பொழுது கண்ணில் பட்ட இந்த கம்பனியின் தோட்டம் வெகுவாக கண்ணைக் கவர்ந்திருக்க அங்கே சென்று கொஞ்சம் நேரம் இருக்கலாமே! என்று பார்கவியின் மனம் உந்த கால்கள் தானாகவே! லிப்ட்டை நோக்கி சென்றிருந்தது.
 
கீழ் தளத்துக்கு வந்தவள் தோட்டத்தில் நடை பயின்றவாறு சுற்றிக்கொண்டிருக்க, சேகரனின் காரியாலயத்துக்கு வந்த ஹரிஹரன் பார்கவியை பார்த்து விட்டான்.
 
அவன் வண்டி உள்ளே நுழையும் பொழுதே! தூரத்தே! தோட்டத்தில் சூரிய ஒளிப்பட்டு மின்னும் சிலையாய் நின்றவள் யார் என்றுதான் அவன் கண்கள் பார்த்தன அது பார்கவி என்றது மர்மப்புன்னகையை உதித்தவன் வண்டியை நிறுத்தி விட்டு அவளருகில் சென்றான்.
 
“என்ன பார்கவி எப்படி இருக்க? கல்யாண வாழ்க்கையெல்லாம் எப்படி போகுது” குரல் மிக மிக சாதாரணமாக ஒலித்தாலும் அவன் நெஞ்சம் எரிந்துக்கொண்டிருந்தது.
 
தான் என்றோ இவளை அனுபவித்திருக்க வேண்டும். வீட்டுக்குள் தானே! இருக்கிறாள் என்று இவளை விட்டு வைத்தது தப்பாய் போய்விட்டது.
 
ஹரிஹரனின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய பார்கவி அவனைக் கண்டு மேலும் அதிர்ந்தாள்.
 
அவளின் அதிர்ச்சியான முகபாவனையும் அதை தொடர்ந்து அவள் காட்டிய முகச்சுளிப்பும் சொல்லியது அவன் வருகையை அவள் விரும்பவில்லை என்று.
 
அதெல்லாம் ஹரிஹரனின் புத்தியில் உரைத்தால் தானே! “கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுதுனு கேட்டேன். இந்நேரம் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி இருக்க வேண்டியது. எவனோ நடுல புகுந்து ஆட்டத்தை கலைச்சிட்டான். உன்ன கூட்டிகிட்டு எங்க வந்திருக்கான் பாரு? நானா இருந்தா ஹனிமூன்கு சுவிஸ்லந்த போய் இருப்பேன்” என்று  இளித்தவனின் பார்வை முழுவதும் பார்கவியின் தேகம் தீண்டிச் செல்ல அருவருத்தவள் அவன் பேச்சு பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு நகரப்போக,
 
அவளை செல்ல விடாது கையை நீட்டி தடுத்தவன் “இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல பார்கவி. அவன் கட்டின தாலிய கழட்டி கொடுத்துட்டு வா. நான் உன்ன ஏத்துக்கிறேன். அவன் உன்ன தொட்டிருந்தாலும் பரவால்ல”
 
அவனை பொறுத்தமட்டில் இதெல்லாம் ஒரு விஷயமே! இல்லை. பிடித்திருந்தால் யார் வேணாலும் யார்கூட வேணாலும் இருக்கலாம் பார்கவியின் திருமணம் கட்டாயத்தின் பெயரில் நடந்திருக்க ஈகையோடு கட்டாயத்தில் தான் இருந்திருப்பாள். தான் எடுத்துச் சொன்னால் புரிந்துக்கொள்வாள் என்ற எண்ணம் அவனுக்கு. தாலிக்கு இருக்கும் மரியாதையையும் பெண்கள் அதை உயிரிலும் மேலாக மதிப்பதையும் அவன் எங்கே சிந்தித்துப் பார்க்கப் போகின்றான்.
 
கட்டிய கணவன் குடிகாரனாக இருந்தாலும், நயாபைசா சம்பாதித்து கொடுக்காவிட்டாலும், வீட்டு வேலைகளையும் செய்து, வெளியே வேலைக்கும் சென்று குழந்தைகளையும் கவனிக்கும் அநேகமான பெண்களுக்கு கணவன்மார்கள் அடி உதைகளை தினமும் பரிசாக கொடுத்தாலும், பொறுமையாகவும் அமைதியாகவும் பல பெண்கள் குடும்பம் நடாத்துவது குடும்பத்துக்கு ஆண் துணை தேவை, குழந்தைகளுக்கு அப்பா தேவை என்பதையும் கருத்தில் கொண்டு கட்டிய தாலிக்கு மதிப்புக்கு கொடுப்பதே! காரணம். பூமாதேவியிலும் மேலாக பொறுமை காப்பதனாலையே! பெண்.
 
கட்டிய கணவனால் குழந்தைகளுக்கோ! தன் கற்புக்கோ! ஆபத்தென்றால்?  எரிமலை குழம்பாக வெடித்து விடுவாள். கணவனுக்கே! அப்படி என்றால் இந்த கயவனை என்ன செய்வாள்?
 
அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த பார்கவிக்கு எங்கிருந்தான் கோபம் வந்ததோ! அவனை “பளார்” என்று அறைந்திருந்தாள்.
 
சேகரனோடு பேசிவிட்டு வெளியே வந்த ஈகை பார்கவியை காணாது பதற “டேய் என்னடா? சின்ன குழந்தை மாதிரி என் பொம்மையை காணோம் யாரோ திருடிட்டு போய்ட்டாங்கனு அழகுற ரெஸ்ட் ரூம் போய் இருப்பா” என்ற தயாளன் அங்கே! இருந்த வரவேற்பாளரிடம் கேட்க பார்கவி கீழே சென்றதாக அப்பெண் கூற ஒருவேளை வண்டிக்கு சென்றிருப்பாளோ! என்று ஜெய்யை அழைத்துக் கேட்க அவன் இல்லை என்றான்.
 
ஈகையின் பதட்டம் அதிகமாக கீழே வந்ததாக கூறியதால் பார்க்குமாறு ஜெய்யிடம் கூறிய தயாளன் ஈகையை அழைத்துக்கொண்டு கீழ்தளம் நோக்கி வந்தான். கீழ்தளம் வந்தவர்களை அழைத்த ஜெய் பார்கவி தோட்டத்தில் இருப்பதையும் ஹரிஹரன் அவளை நோக்கி செல்வதையும் கூற ஈகை தோட்டத்தை நோக்கி வேக எட்டுக்களை வைத்தான்.
 
“ஏய் என்னயாடி அடிச்ச உன்ன…” என்ற ஹரிஹரன் பார்கவியின் கழுத்தை நெரிக்கப்போக அவன் கையை பின்னாடி வளைத்துப்  பிடித்து முருக்கலானான் ஈகை.
 
“என்ன தம்பி இவ்வளவு பட்டும் அடங்க மாட்டியா? என் பட்டு மேலையே! கைவைக்க பாக்கிறியே! ரொம்ப தப்புடா தம்பி.  என் பட்டுவையே! கடத்தி கல்யாணம் பண்ண பார்த்த உன் பிளானையே! நான் எக்சிகியூட் பண்ணி பட்டுவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்ன பாக்குற? என்ன நானே! தான் கடத்தினேன். என்ன கடத்தின எனக்கு உன்ன கடத்த எவ்வளவு நேரமாகும்? ” ஹரிஹரன் அதிர்ச்சியடைய
 
“இன்னொரு தடவ என் பாரு பக்கம் உன் மூச்சு காத்து திரும்பிச்சுனு வை. உன்ன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே! தெரியாது” முறுக்கிய கையை விடாது தள்ளி விட
 
“போடா டேய்… போ.. போய் பொழைக்கிற வழியப்பாரு” தயாளன் ஹரிஹரனின் மண்டையில் தட்டி அனுப்ப அவர்களை முறைத்தவாறே சென்றான் ஹரிஹரன்.
 
“வா பட்டு போலாம்” ஈகை பார்கவியின் தோளின் மேல் கை போடப்போக
 
இரண்டடி பின்னாடி வைத்தவள்  “இன்னும் என்ன எல்லாம் பண்ணி வச்சிருக்குறீங்க?” இடுப்பில் கைவைத்து கணவனை முறைத்தாள்.
 
“நான் என்ன பண்ணேன்” தாடையை தடவி யோசித்தான் ஈகை.
 
“இப்போதானே! சொன்னீங்க உங்கள நீங்களே! கடத்தினீங்கன்னு” கணவனை கேள்வியாக ஏறிட
 
“ஆகா பொண்டாட்டிங்க எல்லாம் ஒரே ரகமாதான்பா இருக்காங்க. ஆயிரம் வசனம் பேசினாலும் கரெக்ட்டா பாயிண்டை புடிச்சிடுறாங்க” வேற யாரு நம்ம தயாளன் மைண்ட் வாயில் தான் அது.
 
“தம்பி நீங்க பேசிட்டு வாங்க நான் வண்டில வெயிட் பண்ணுறேன்” சண்டை தொடரும் என்று தயாளன் நழுவ
 
“ஒன்னாவே போலாம் ப்ரோ” என்ற ஈகை பார்கவியை பார்த்து “என்ன பட்டு யாராச்சும் அவங்களையே! கடத்துவங்களா? அந்த ஹரிப்பயல மிரட்ட சும்மா சொன்னா நீ வேற அதையே!! புடிச்சி தொங்கிகிட்டு. சரி வா போலாம்”
 
“நிஜமாவா?” தன் கணவனின் புத்திசாலித்தனத்தை மெச்சியவளாக புன்னகைத்தாள் அவன் மனையாள்.
 
தயாளன் ஆவென்று ஈகையை பாத்திருக்க “போலாம் ப்ரோ” என்றவன் பார்கவியின் தோளில் கைபோட்டு நடக்க
 
அவன் காதின் அருகில் குனிந்து  “எப்படி டா இப்படி எல்லாம்?” தயாளன் ரகசியமாக கேக்க
 
“அதுக்கெல்லாம் மூளனு ஒன்னு இருக்கணும் ப்ரோ சில பேருக்கு களிமண் இல்ல இருக்கு” சொல்லியவன் கண்சிமிட்டி புன்னகைக்க
 
அவனை முறைத்த தயாளன் “எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு. காயுவை சமாளிக்க ரொம்ப கஷ்டம் டா”
 
“ரொம்ப செலவாகும்” என்று கண்ணடித்தான் ஈகை.
 
“தனியா மாட்டுவல்ல. அப்போ வச்சிக்கிறேன்” கருவினான் தமையன்.
 
சிரித்துப் பேசியவாறு வண்டியில் ஏறிச்செல்லும் இவர்களை வன்மமாக பாத்திருந்தான் ஹரிஹரன். அவனை  ரியர் வீவ் கண்ணாடி வழியாக இரண்டு ஜோடிக் கண்கள் கேலியாக பார்த்து சிரித்தன.  
  
 பார்கவியின் நாட்கள் ஈகையோடு வழக்கத்துக்கு மாறாகத்தான் சென்றது. தந்தையை இழந்து, அன்னையை பிரிந்து சோகமே! குடியிருந்த அவள் கண்களில் அவள் வாழ்க்கையில் ஈகையின் வரவால் சந்தோச சாரல் வீச ஆரம்பித்திருந்தது.
 
மருதநாயகத்தையும் அவர் பெற்ற புத்திரர்களையும் நெருங்கவிடாமல் பார்கவியை ஈகை பாதுகாத்ததால் சந்தோசமாகவும் ஹரிஹரன் இல்லாத வீட்டில் நிம்மதியாகவும், காதாம்பரி இல்லாததால் சுதந்திரமாகவும் வளம் வரலானாள் பார்கவி.
 
அவள் மனம் ஈகையிடம் உண்மையை கூறும்படி வலியுறித்தினாலும், மூளை அவளை தடுத்துக்கொண்டே! தான் இருந்தது.
 
“என்னதான் நீ உண்மையை கூறினாலும், அவர் நிலத்தை பறிக்க வந்தவள் என்று உன்னை அவர் மன்னிக்க மாட்டார். கிடைத்த இந்த சந்தோசத்தை நழுவ விட்டு விடாதே! அவருக்கு உண்மை தெரிய வரும் பொழுது தெரிய வரட்டும். அப்பொழுது நீ இந்த வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தாலும் சரி, அவர் வாழ்க்கையை விட்டு வெளியேற நேர்ந்தாலும் சரி அவரோடு வாழ்ந்த அந்த குறுகிய காலம் போதும் உன் கடைசி காலம்வரை சந்தோசமாக வாழ்வதற்கு” என்று மனதை ஆறுதல் படுத்துவாள்.
 
மருதநாயகம் விசாலாட்சியை பற்றி எந்த தகவலும் கூறுவதில்லை. சதா ஈகை இருப்பதால் இவளாக சென்று எப்படி விசாரிப்பது? விசாரித்தாலும் அந்த நிலப்பத்திரத்தை பற்றித்தான் கேப்பார் என்ற அச்சம் வேறு மனதை வாட்ட என செய்வதென்ற குழம்பித் தவித்தாள்.
 
சேகரன் சொன்னது போல் அடுத்த நாளே பத்திர பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தான். தயாளனுமே! ஆச்சரியமாக “சொன்ன மாதிரியே! சட்டுனு வேலைய முடிச்சிட்டான். ஆமா பத்திரம் யார் பேர்ல பதிவு பண்ண போற?” என்று ஈகையை கேக்க
 
“வேறு யார் பேர்ல எங்கண்ணன் தமிழ்ச்செல்வன் பேர்லதான்” என்று குறும்பாக கண்சிமிட்டி சிரித்தான் ஈகை.
 
சேகரனும் பத்திர பதிவின் போது ஈகை தமிழ்ச்செல்வன் பெயரில் பத்திர பதிவு செய்வதை விசாரிக்க, ஈகை பதில் சொல்லும் முன் காதம்பரி அது ஈகையின் அண்ணன் என்று பதில் கூற உதடு வளைத்து புன்னகை செய்தான் ஈகை.
 
“அதான் பத்திரம் பதிவாகிருச்சே! ஆலைகளை ஆக்கிரமிப்பு செய்யலாமே!” என்று தயாளன் கேட்க
 
“இல்லை. இப்பொழுதே வேண்டாம். முதலில் முத்துராஜின் மகன் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருப்பதாகவும் அவனுக்கு சேர வேண்டிய சொத்துக்களை இருவது வருசமா மருதநாயகம் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனுபவச்சிகிட்டு இருக்கிறதா ஒரு கேஸ் பைல் பண்ணனும்”
 
ஆமாம் முத்துராஜ் தனது மகனுக்கு ஆசையாசையாய் வைத்த பெயர் தமிழ்ச்செல்வன். பெற்றோரை இழந்து மாநிலம் மாறிப்போனவன் தனது அடையாளத்தையும் முற்றாக மாற்றி இருந்தான். செல்வம் தாத்தா மாற்ற சொல்லி
இருந்தார்.
 
“பண்ணா மட்டும் சொத்தெல்லாம் கொடுத்துடுவாங்களா? கொலைப் பண்ணை ட்ரை பண்ணுவாங்க”
 
“ஹாஹாஹா ஊரு முழுக்க ஏன் உலகம் முழுக்க தமிழ்ச்செல்வனை தேடினாலும் வீட்டுக்குள்ள தேட மாட்டங்க”
 
“உன் நிறமே! போதும்டா தம்பி அவனுங்க உன்ன கண்டு பிடிக்க” தயாளனின் இதயத்துடிப்பு எகிறிக் குதிக்க நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தவாறே! சொன்னான்.
 
“அதான் கூடவே! நீ இருக்கியே! போதாததுக்கு ஜெய் இருக்கான். பாத்துக்கலாம் விடு” அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக காய் நகர்த்தினான் ஈகை.
 
சேகரன் பங்குகளை ஈகைக்கு விற்றுவிட்டு செய்தியை அறிந்த மருதநாயகம் தாம்தூம் என்று குத்திக்கலானார். சேகரனை அலைபேசியில் அழைத்து வசைமழை பொழிய
 
“எங்க கிட்ட சொல்லிட்டா நீங்க தமிழ்செல்வனுக்கு உங்க பங்குகளை வித்தீங்க? நாங்க எதுக்கு உங்ககிட்ட சொல்லிட்டு செய்யணும். என் தங்கச்சி கேட்டு நான் இல்லனு இதுவரைக்கும் சொன்னதே! கிடையாது. அவ கேட்டதை செஞ்சேன்” என்று அலைபேசியை அனைத்திருக்க ஹரிஹரனை வீட்டை விட்டு அடித்துத் துரத்தியதால் பழிவாங்க வேண்டுமென்றே!  காதம்பரிதான் ஈகைக்கு பங்குகளை விற்க சொல்லி இருப்பாள் என்று மருதநாயகத்துக்கு நன்றாகவே! புரிந்தது.
 
அலைபேசியில் தந்தை மற்றும் சேகரனின் உரையாடலை செவி சாய்த்த தர்மதுரை கொதித்தெழுந்து சேகரனை சந்திக்க கம்பனிக்கு சென்றால் சிகியூரிட்டிகள் அவனை உள்ளே விடவே! இல்லை. கழுத்தை பிடித்து தள்ளாத குறைதான். கோபம் கணக்க காதாம்பரியை தேடிச்சென்றால் அந்த நவீன ரிமோர்ட் கேட் தர்மதுரைக்காக திறக்கப்படவே! இல்லை. வெளியே! இருந்து காதாம்பரியை வசைபாடி விட்டு கிளம்பி விட்டான் தர்மதுரை.   
 
தன் குடும்பம் பிளவு பட்டு விட்டது. தான் கட்டிக்காத்த மானம் அந்திரத்தில் தொங்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மருதநாயகத்துக்கு இரத்தக்கொதிப்பு அதிகமாகி மயக்கம் போட்டு விழ, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் விக்னேஸ்வரன்.
 
“இந்த வயதில் கொள்ளுபேரன்களோடு விளையாட வேண்டியதுதானே! எதுக்கு தொழில் ஸ்ட்ரெஸ் எல்லாம் தலைல ஏத்திக்கிறீங்க? இந்தாங்க இந்த டேப்ளெட்ஸ் எல்லாம் அந்தந்த நேரத்துல கரெக்ட்டா போடுங்க” மருதநாயகம் இறக்கும் வரை அவரிடம்தான் மருந்து வாங்க வேண்டும் என்று அன்பாகப் பேசி  இன்முகமாக வழியனுப்பி வைத்தார் அந்த மருத்துவர்.  
 
ஒரு புன்முறுவலோடு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த மருதநாயகம் வண்டியில் ஏறிய உடன் “அந்த சிறுக்கி பார்கவி எங்க இருப்பா?” என்று கத்த 
 
“அமைதியா பேசுங்கப்பா? இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து வரோம். இப்போ அவ காலேஜ்ல இருப்பா. எதுக்கு அவளை கேக்குறீங்க?” விக்னேஸ்வரன் யோசனையாக கேக்க
 
“அந்த ஈகை பய என் மச்சினன் நிலத்த வாங்கினதுக்கே! அத அவன்கிட்ட இருந்து ஆட்டைய போட நான் என்னெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவன் எனக்குத் தெரியாமளையே! என் சொத்தை வாங்கி இருக்கான். சேகரன் வித்தானாம் இவன் வாங்கினானாம். நம்ம வீட்டுக்குள்ளேயே! இருந்துகிட்டு நம்ம சோத்தையே! தின்னுகிட்டு என் சொத்தையே! ஆட்டைய போட பாக்குறானா அவன்? இந்த களவாணி சிறுக்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? அவன் கூடவே சுத்திகிட்டு இல்ல இருக்கா? இப்படி ஒரு விஷயம் நடக்க போகுதுனு எனக்கு தகவல சொல்லனுமா இல்லையா சிறுக்கிக்கு குளிர்விட்டு போச்சுடா. அவ அம்மா எக்கேடு கெட்டாலும் பரவால்லன்னு நினைச்சிட்டாலோ என்னமோ! அவளுக்கு இருக்கு இன்னைக்கி” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எகிறினார் மருதநாயகம். 
 
“முதல்ல இந்த மாத்திரையை போடுங்க. அப்பொறம் என்ன வேணாலும் பண்ணுங்க” மாத்திரையையும் தண்ணீர் பாட்டிலையும் தந்தைக்கு கொடுத்த விக்னேஸ்வரன் “வயசுக்கேத்த வேலைய பார்க்கணும்னு சொன்னா எங்க கேக்குறாரு” என்று முணுமுணுத்தான். 
 
காலேஜ் முதல்வரை சந்தித்த மருதநாயகம் தனது பேத்தி பார்கவியை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சகல மரியாதையுடன் அவர்களை தனியறையில் விட்டார் முதல்வர்.
 
வீட்டுக்குள் பார்கவிக்கு அரணாக இருந்த ஈகை காலேஜ் வாசலில் இறக்கி அவள் உள்ளே செல்லும் வரை இருப்பதோடு அவள் வெளியே வரும் நேரத்தைக் கணித்து நேரங்காலத்தோடு அங்கே அவளுக்காக காத்துக்கிடந்து அழைத்துக்கொண்டு வருவான். காலேஜினுள் மருதநாயகம் செல்லமாட்டார். அவர் அதிகாரம் செல்லுபடியாகாது என்று நினைத்துவிட்டான்.
 
ஆனால் வீட்டார் வந்து சந்தித்து பேச அனுமதி இருக்கும் பொழுது அதுவும் மருதநாயகம் போன்ற ஊரில் உள்ள தலைவர் வந்து பேச வேண்டும் எனும் பொழுது முதல்வர் மறுக்க மாட்டார் தனி அறை கொடுப்பார் என்று ஈகை நினைக்கத் தவறினான்.
 
மருதநாயகத்தின் முன்னால் அமர்ந்திருந்த பார்கவியோ வெடவெடவென்று கோழிக் குஞ்சை போல் நடுங்கிக்கொண்டிருக்க மீசையை முறுக்கியவாறு காலுக்குமேல் காலைப் போட்டு ஆட்டிக்கொண்டு அவளை குரூரமாக பார்த்துக்கொண்டிருந்தார் மருதநாயகம்.
 
விக்னேஸ்வரன் யாரும் அப்பக்கம் வருகிறார்களா? இவர்களின் பேச்சை கேட்டுவிடக்கூடாதே! என்று  கவனமாக கதவை சாத்திவிட்டு வெளியே நின்றுக்கொண்டிருந்தான்.
 
“என்ன பணக்கார புருஷன் கிடைச்சதும் ரொம்ப கொழுப்பு கூடி போச்சு போல” வார்த்தையில் அனல் தெறித்தது.
 
அந்தக்குரலில் மிரண்டவள் மொழியற்று திகைத்து மருதநாயத்தை வெறித்துப் பார்த்தாள்.
 
“அம்மா மேல பாசம்னு என்னமா நடிச்ச?அந்த அழுகை அழுத. என் அம்மாவ காப்பாத்துங்க. நான் என்ன வேணாலும் செய்றேன்னு. இதுதான் நீ எனக்கு செய்யுற லட்சணமா? சொல்லு. உங்கம்மாவை உசுரோட பார்க்க ஆச இல்லையா?”
 
“நான் நடிச்சேனா?” விழிகளில் உருண்டு திரண்ட பெரிய கண்ணீர் துளிகள் இப்போ விழாவா என்று சண்டித்தனம் செய்ய அவர் கடைசியாக கேட்டதில் அவைகள் விழுந்தே! விட்டன.
 
ஈகையை அவளுக்கு பிடித்திருக்கிறது. அவன் அவளின் கணவன். அவள் அவனை விரும்புகிறாள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அவளாக ஒன்றும் அவனை திருமணம் செய்துகொள்ளவில்லையே! ஊர் கூடி செய்துவைத்த திருமணம். இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?
 
“முதல்ல நான் என் அம்மாகிட்ட பேசணும்” கண்களை துடைத்துக்கொண்டவள் நேராக நிமிர்ந்து அமர்ந்து மருதநாயகத்தை ஏறிட்டாள்.
 
சதா ஈகை அருகில் இருந்ததால் வந்த தைரியமா? ஈகை தன் கணவன் என்பதால் வந்த தைரியமா? அவளை பேச வைத்திருந்தது.
 
அவளின் இந்த பரிமாணம் மருதநாயகத்துக்கு புதிது. பார்கவி எப்பொழுதும் நேர்பார்வை பார்த்து பேசுபவள் தான். ஆனால் அச்சம் வெளிப்படையாக
தெரியும். இன்று அவள் பேச்சில் தெளிவும். குரலில் எந்த ஒரு கரகரப்பு இல்லை. என் அன்னையிடம் பேசாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்றது அவளது உறுதியான குரல்.
 
அலைபேசியை உயிர்ப்பித்த மருதநாயகம் மறுமுனையில் தொடர்பு இணைக்கும் வரை காத்திருந்தார். அவர் அறியவில்லை. இந்த தொடர்பு விசலாட்சியை ஈகையிடம் கொண்டுவந்து சேர்க்க போகிறது என்று.
 
மருதநாயகம் பார்கவியோடு விசாலாட்சியை மருத்துமனையில் அனுமதித்தாலும் அது ஒன்றும் பெரிய வசதியான மருத்துமனையுமல்ல. என்று ஈகையை காதலித்து ஏமாற்றி நிலப்பத்திரத்தை எடுத்து வருமாறு கூறும் பொழுது பார்கவியின் முகம் மாறியதோ! அன்றே விசாலாட்சியை இடமாற்றம் செய்திருந்தார்.
 
பணத்தை அள்ளி வீசினால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருக்க, அந்த மருத்துவமனையில் விசாலாட்சி அனுமதிக்கப்படத்துக்கான எந்த ரெக்கோடும் இல்லை. சீசீடிவி புட்டேஜும் இல்லை. எல்லாவற்றையும் அழித்து துடைத்தெறிந்தார் மருதநாயகம்.
 
ஈகையிடம் பார்கவி உண்மையை கூறி அவனோடு சென்று விசாலாட்சியை மீட்டெடுத்துடுவாள் என்ற எண்ணமே! அவரை இதெல்லாம் செய்யத் தூண்டி இருந்தது. இப்பொழுது பார்கவி ஈகையின் மனைவியாகி விட்டதால் தான் செய்தது நூறு வீதம் சரி என்ற கோட்பாட்டில் இருந்தார் மருதநாயகம்.
 
ஈகையும் டிடெக்டிவ் வைத்து விசாரித்ததில் விசாலாட்சியின் உடல்நிலை முதல் அந்த மருத்துவமனைக்குத்தான் அவர்கள் சென்றார்கள் என்பதுவரை இருக்க, அங்கே அனுமதிக்கப் படத்துக்கான எந்த ரெக்காடும் இல்லாமல் குழம்பி நின்றான். பார்கவியிடம் கேக்கலாமா? வேண்டாமா? என்று ஒருகணம் யோசித்தவன் கேட்டு அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது ஏன் என்று விட்டுவிட்டான்.
 
இணைப்பு கிடைத்ததும் ஸ்பீக்கர் மூடில் போட்டவர்  “நான் மருதநாயகம் பேசுறேன்” என்றதும் 
 
மறுமுனையில் ஒரு பெண் குரல் அது அந்த நர்ஸின் குரல் இல்லையே! என்று பார்கவி யோசிக்கும் பொழுது “விசாலாட்சி அம்மா அவங்க விரல் அசைச்சாங்க. டாக்டர் வந்து பாத்துட்டு முன்னேற்றம் இருக்குனு சொன்னாங்க”
 
சொன்ன செய்தியில் முகம் மலர்ந்தாள் பார்கவி.
 
“அப்படியாம்மா? நான் சொன்னா நீ கொலை கூட பண்ணுவியா?” பார்கவி அதிர்ச்சியாக மருதநாயகத்தை ஏறிட
 
“என்னங்கய்யா?”
 
“நான் பணம் கொடுத்தா அந்த விசாலட்சிய கொன்னுடுவியான்னு கேட்டேன் மா” திடுக்கிட்டாள் பார்கவி.
 
“அதெல்லாம் சப்ப மேட்டர்யா…. எப்படி கொல்லணும்னு மாட்டு சொல்லுங்க. விபத்தா? தற்கொலையா? இல்ல இயற்கை மரணமா? பேஷா பண்ணிடலாம்”
 
பார்கவியின் உடல் உதற திருப்தியாக பார்த்திருந்த மருதநாயகம் “இப்போ ஒன்னும் பண்ண வேணாம். இங்க அவ பொண்ணு நான் சொன்ன வேலைய ரெண்டு நாள்ல முடிச்சிட்டானா நான் போன் பண்ணுறேன். போன் பண்ணலைனா முடிச்சிடு” என்றவர் அலைபேசியை துண்டித்திருந்தார்.
 
“என்ன பாக்குற? சொன்னது தெளிவா புரிஞ்சதில்ல. ரெண்டு நாள்தான் டைம். அதுக்குள்ளே நிலப்பத்திரம் என் கைக்கு வரணும். இல்லனா உன் அம்மாக்கு பால் ஊத்த வேண்டி இருக்கும்” என்றவர் அவளை திரும்பியும் பாராது அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தார்.
 
பார்கவி முடிவெடுக்கவேண்டிய நேரம் இதுதான். அன்னையின் உயிரை காக்க அவள் உயிரையே! பணயம் வைக்க நேர்ந்தாலும் பரவாயில்லை. நிலப்பத்திரத்தை மருதநாயகத்திடம் எப்படியாவது கொண்டு வந்து சேர்ப்பதென்று முடிவு செய்தவள் கணவனை எண்ணி அழுது கரையலானாள்.