செவ்வானில் ஒரு முழு நிலவு 20

6355

நிலவு 20
மெல்லிய புன்னகையோடு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பார்கவி போட்டுக் கொடுத்த காபியை ருசி பார்த்துக்கொண்டிருந்தான் ஈகை. மனதுக்குள் ஒருவித இதம் பரவலானது. சின்ன வயதில் அன்னை கூட அவனை அதட்டியதில்லை. “ராஜா, தங்கம்” என்று செல்லம் கொஞ்சியே! காரியம் சாதித்துக்கொள்வாள் அவன் அன்னை. கோபமோ! அன்போ! தயாளன் கூட பொறுமையாக எடுத்துக் கூறுவான். யாரும் இப்படி அதட்டியதில்லை. இப்படி ஒரு உரிமை அவன் உணர்ந்ததே! இல்லை. என்னை கவனிக்கவும், கேள்வி கேட்கவும் ஒருத்தி என் வாழ்க்கையில் வந்து விட்டாள். அவளின் குயில் போன்ற குரலுக்கு மனம் இசைந்து என்றால் கண்களால் அவனை கட்டிப் போட்டிருந்தாள். அவள் பேசும் பாஷையும், தலையை ஆட்டி ஆட்டி  பேசும் போது ஆடும் அவள் ஜிமிக்கியும் குண்டுக் கன்னங்களும் கொள்ளை அழகு.   
 
முதலிரவில் “யார் அந்த ஐஷு” என்று கேட்டதிலிருந்து அவன் எல்லா செய்கைகளையும்  அதட்டிக்கொண்டே! இருக்கிறாள். நேரத்துக்கு சாப்பிடவில்லையா? அதுக்கு ஒரு முறைப்பு, தூங்கவில்லையா? அதுக்கு ஒரு வசைமழை. அதிக நேரம் போன் பேசினாலும் பிடுங்கி அனைத்து விடுகிறாள். 
 
“இங்க என்ன பண்ணுறேல்? உங்கள எங்கெல்லாம் தேடுறது?”   
 
“ஐயோ கொல்லுறாளே!” புடவையில் அழகோவியமாக தன்னை தேடி வந்து நின்ற மனைவியை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவன். அவள் கையிலிருந்த காபி கப்பை மறந்தும் வாங்கவில்லை. 
 
“என்ன காணோம்னா நீ என்ன தேடுறியான்னு பார்த்தேன்”
 
உண்மையும் அதுதான். இந்த ஒரு வாரமாக அவளை விட்டு இவன் பிரியவே! இல்லை. முதலில் செய்தது சைவ சமையல் செய்ய ஒரு ஆளை ஏற்பாடு செய்வதைத்தான். பார்கவி அவனை கடிந்துக்கொள்ள “அந்த நேரத்த எனக்காக கொடுத்துட்டேன். என் கூட இருந்துடு. ப்ளீஸ்” அவனை அதிகம் கெஞ்ச வைக்காமல் சரி என்றாள்.
 
 
அறையை விட்டு இருவரும் ஒன்றாகவே! வெளியே வந்தனர். ஒன்றாகவே! அமர்ந்து சாப்பிட்டு விட்டு ஒன்றாகவே! கிளம்பி வெளியே செல்ல, அவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ஊர் கண்ணே! பட்டு விடும் என்று வேதநாயகி த்ரிஷ்ட்டி வேறு கழிக்க மருதநாயகம் முறைத்துக்கொண்டு நின்றார். 
 
பொக்கிஷத்தை பூதம் காப்பது போல் ஈகை பார்கவியை விட்டு நகராது இருப்பது எரிச்சலைக் கொடுத்தது. பார்கவியோடு பேச வேண்டும் என்று அழைத்தால் ஈகையும் கூடவே வந்து நிற்கிறான்.
 
மருதநாயகம் தன் காரியத்தில் குறியாக இருப்பார் என்று ஈகைக்கு நன்றாகவே! தெரியும். அதனால்தான் பார்கவியை தனியே! விடாது அவள் கோலம் போடும் போதும் கூடவே இருந்து கதை பேசலானான். காதலனாக இதை செய்ய முடியாது. கணவன் மனைவிக்கு நடுவில் வேறு யாரும் நுழைய முடியாது. அதனால்தான் ஹரிஹரன் பார்கவியை கடத்த திட்டம் போட்டதை தனதாக்கிக் கொண்டான்.
 
கல்யாணம் ஆனதிலிருந்து பார்கவியின் முகத்தில் புதிதாக குடிகொண்டிருக்கும் வெட்கமும், தேஜஸும், சந்தோஷமும் மருதநாயகத்தின் கண்ணை உருத்திக் கொண்டிருக்க அவளிடம் பேச சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தால் ஈகை அவள் பின்னாலையே! அலைந்துக் கொண்டிருக்கிறான்.
 
 
“புதிதாக கல்யாணமானவர்கள் அந்த மயக்கத்தில் தான் இருப்பார்கள். இதை இப்படியே! விட்டுவிடக் கூடாது. ஆகாசத்தில் பறந்துக் கொண்டிருப்பவளை பூமிக்கு கொண்டு வர வேண்டும்” கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர் பார்கவியுடன் பேச முடியாமல் போக பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமையை இழந்து காலை உணவை உண்டு முடித்த உடன் மருதநாயகம் பார்கவியிடம் “உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று கூற யாரும் அறியாமல் பார்கவியின் கையை தன் கைக்குள் பொத்திக்கொண்டு உணவருந்திக்கொண்டிருந்த ஈகைக்கு அவள் உடல் நடுங்குவது நன்றாகவே! புரிந்தது.
 
அனைவரினதும் முன்னிலையில் அழைத்தால் பார்கவியால் மறுக்கவும் முடியாது. ஈகையும் ஒன்றும் சொல்ல மாட்டான் என்ற எண்ணம் அவருக்கு. தான்தான் இந்த வீட்டின் தலைமகன் என்ற தலைக்கணம். தன்னை யார் எதிர்ப்பார்கள் என்ற இறுமாப்பு வேறு. 
 
அவள் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “சொல்லுங்க மிஸ்டர் மருதநாயகம் என்ன பேசணும்?” அதிகாரமாக ஈகையின் குரல் ஒலிக்க இதை மருதநாயகம் சற்றும் எதிர்பார்க்காத முகபாவத்தைக் கொடுக்க அவர் பெத்த புத்திரர்கள் பற்களை கடிக்கலாயினர்.
 
உடல் நடுங்கிக் கொண்டிருந்த பார்கவிக்கு கணவன் தன்னை அணைத்துக்கொண்டது ஆறுதலாகவே! இருக்க, வீட்டிலுள்ள அத்தனை பெரியவர்களின் முன்னிலையிலும் அவன் தோளின் மேல் கை போட்டிருப்பது கூட கவனத்தில் இல்லை. 
 
உமையாளோ! என்றும் போல் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் ஆச்சரியக்குறி. புரியாத புதிர். மாதேஷ் இருந்திருந்தால் அவனிடம் சந்தேகம் கேட்டிருப்பாள் அவனும் இல்லாததால் அவள் இந்த வீட்டில் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். அதை சரியாக செய்யலானாள்.
 
“என்னபா ஈகா…. கல்யாணத்துக்கு முன்னதான் அப்படி கூப்பிட்ட இப்ப அவர் உனக்கு தாத்தா. தாத்தாவ மரியாதை இல்லாம பேசுற?” வேதநாயகி கடிய
 
“பின்ன என்ன பாட்டி. பார்கவிக்கு கல்யாணம் ஆகிருச்சு. அவகிட்ட தனியா பேசணும்னா என்ன அர்த்தம்? நடந்த இந்த கல்யாணத்த பத்தியும், நான் அவளை நல்லா வச்சிருக்கேனானும் தானே! கேக்க போறாரு அது எனக்கு அசிங்கம் இல்லையா?” நியாயத்தை நீங்களே சொல்லுங்க என்று வேதநாயகியிடம் கேட்டாலும் “என்ன பேசுறதா இருந்தாலும் நானும் கூட இருப்பேன்” எனும் விதமாக நின்றிருந்தான் ஈகை.
 
“அதானே! உங்க மானம் மரியாதையை காப்பாத்த நம்ம பேத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டவன் ஈகா. அவனைப்போய் சந்தேகப்பட்டுக்கிட்டு” மருதநாயகம் ஒரு நல்ல தாத்தாவாக கல்யாணமான தன் பேத்தியிடம் இதைத்தானே! கேப்பார் என்று வேதநாயகியும் ஈகைக்கு ஒத்தூதினார்.
 
“அப்போ என்ன பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேள்னு சொன்னேள்” பார்கவி கணவனின் புறம் சாய்ந்து கூறியவளாக அவனை முறைக்க
 
 
“பாட்டி பார்கவிய பிடிச்சதாலையும்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதையும் சொல்லுங்க” மனைவியை பார்த்து கண்ணடித்தவன் சத்தமாகவே சொல்ல
 
 
“அட ராமா என்னங்க நீங்க” அத்தனை பேர் முன்னிலையிலும் அவன் வாய் பொத்த முடியாமல் அவன் கையை கிள்ளி அதற்கும் முறைத்தாள் அவன் மனையாள்.
 
 
“கொஞ்சம் இரு டா… நடுல பேசினா பேசுறத மறந்துடுவேன்….. ஆ… சின்னங் சிறுசுங்க இப்போதான் கல்யாணம் ஆகிருச்சு. எங்கயாச்சும் அனுப்பி வைக்க வேணாம். அது எங்கப்பா போவாங்க கல்யாணம் ஆனா கையோட தேனிலவோ! வெண்ணிலாவோ! இங்கிலீசுல என்னமோ சொல்லுவாங்களே!” ஈகையிடம் கேக்க
 
“ஹனிமூன் பாட்டி” பார்கவி ஆவென்று அவனை பார்த்திருக்க கண்சிமிட்டி குறும்பாக சிரித்தவன் “என்ன போலாமா?” என்று ரகசியமாக வேறு கேட்டு அவள் முகம் சிவக்க வைத்தான்.
 
 
“ஆ.. அங்கதான் அனுப்பி வைங்க. கல்யாணம் எப்படி நடந்ததுன்னு ஊரு, உலகத்துக்கே! தெரியும். அதுங்க அப்படி இப்படினு முறுக்கிக்கிட்டாலும் நாமதான் எடுத்து சொல்லி புரிய வச்சி ஒன்னு சேர்த்து வைக்கணும். இந்த மாதிரி தனியா வெளியூர் அனுப்பி வச்சா ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிப்பாங்க. அத விட்டுட்டு கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகல சந்தோசமா இருந்தியான்னு கேள்வி கேட்டு, சந்தேகப்பட்டுக்கிட்டு” கணவனை வசைபாட
 
 
“இவ ஒருத்தி. என்ன நடக்குது. ஏது நடக்குதுன்னு ஒன்னும் தெரியல. இதுங்களுக்கு தேனிலவுதான் ஒரு கேடு” வேதநாயகியை மனதால் வசை பாடிய மருதநாயகம் தன் புத்திரர்களுடன் கிளம்பி ஆலைகளில் நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட சென்றார்.
 
ஈகையின் அணைப்பில் பார்கவியின் உடல் நடுக்கம் காணாமல் போய் இருக்க “ஒரு கப் காபி தாயேன். உன் கையாள சாப்பிடணும் போல இருக்கு” என்றவன் அவள் காபியை கொண்டு வந்து கொடுத்த உடன் இன்னொரு கப் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைத்து அறைக்குள் வந்திருக்க, அவனை தேடி வந்திருந்தாள் பார்கவி.
 
ஈகை அவளை மருதநாயகத்திடமிருந்து பாதுகாக்க அவளை விட்டு நகராது இருந்தாலும், அவனின் பட்டு ரோஜா என்ற உரிமையால் அவளை நெருங்கி நிற்கவே! அவன் மனம் விரும்புவதை நன்கு உணர்ந்தான். அவளும் அதை உணர்கிறாளா என்று அறிந்துக்கொள்ள ஆசைப்பட்டான். யார் கையிலும் காபியை கொடுத்து விடாமல் அவளே! எடுத்து வந்தது அவன் மனதுக்கு ஜிலென்ற சாரல் வீச ஆரம்பிக்க அவளை அருகில் அமர்த்திக் கொண்டான்.
 
“ஆமா நீ மடிசார் எல்லாம் கட்ட மாட்டியா? மாமி. கல்யாணத்துக்கு பிறகு உங்க ஆத்துல பொம்மனாட்டிக மடிசார் தானே! கட்டுவாங்க” சின்ன சிரிப்பினூடே அவளை வம்பிழுக்கலானான் ஈகை
 
திருதிருவென முழித்தவள் என்ன சொல்வதென்று யோசிக்கலானாள். அவள் அன்னை விசாலாட்சி மடிசார் அணிவதுதான். காலேஜ் செல்லும் வரை பாவாடை தாவணி அணிந்தவள் காலேஜ் செல்ல ஆரம்பித்ததிலிருந்து புடவைதான். மடிசார் கட்ட தெரியாது என்று சொன்னால் சிரிப்பானோ! பாவமாக அவனை பார்த்து வைக்க,
 
சத்தமாக சிரித்தவன் “கட்ட தெரியாதா? கல்யாணத்துக்கு பிறகு கட்டணுமே! கத்துக்கலையா? நா வேணா கட்டி விடட்டுமா?” கடைசி வாக்கியத்தை ரகசியமாக அவள் காது மடல் உரச சொல்ல அவன் கூறிய ரகசிய அர்த்தத்தினால் வெக்கம் பிடுங்கித்தின்ன மேனி சிலிர்த்தவள் அவனை தள்ளி விட்டு எழப்போக கையிலிருந்த அவள் காபி கப் தவறுதலாக அவள் கையிலும் புடவையிலும் கொட்டியது.
 
“ஹே…. பாரு” பதறி துடித்தான் ஈகை.
 
“ஸ்…ஆ..” சூடு தாங்காமல் பார்கவி தடுமாறி காபி காப்போடு அவள் உள்ளே செல்ல அவள் பின்னாலையே! வந்தவன் “பட்டு கைய காட்டுடி” 
 
கையை அவனுக்கு காட்டாது போக்கு காட்டியவள் ஈகையின் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.
 
ஈகை என்றுமே சுடச்சுட காபி அருந்த மாட்டான். மிதமான சூட்டில் தான் எடுத்து வந்திருந்தாள் பார்கவி. அவன் காதுமடல் உரச பேசிய பேச்சுக்களால் வெக்கம் பிடுங்கித்தின்ன தப்புவது எப்படி என்று நினைத்தவளுக்கு காபி கொட்டவும் ஈகையின் பதட்டம் கண்டு அதை பயன் படுத்தி அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க பின்னால் வருவான் என்று எதிர்பார்த்தாலும் கண்கள் கலங்கி நிற்பான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
 
அனிச்சையாக அவள் கையை அவன் புறம் நீண்டிருக்க கண்களோ! கணவனைத்தான் ஆசையாக பாத்திருந்தன. ஈகை அவளை இழுக்காத குறையாக அழைத்து சென்று வாஷ் பேசினில் கையை கழுவிப் பார்க்க கை சாதாரணமாகத்தான் இருந்தது. கன்றிச் சிவந்த எந்த அடையாளமும்  காணப்படாததால் திருப்பித் திருப்பி பார்த்தவன். அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி ஆயில்மெண்ட் தடவ பார்கவி கணவனை காதல் சொட்ட சொட்ட பார்த்திருந்தாள்.
 
கையை கழுவும் பொழுதும் சரி ஆயில்மெண்ட் தடவும் போதும் சரி “எரியுதா? எரியுதா?” என்று பல தடவை கேட்டு விட்டான். இதில் ஆயில்மெண்ட் தடவும் பொது வாயால் ஊதி ஊதி வேறு பூசி பார்கவியை இம்சிக்கலானான்.
 
கையை இழுத்துக்கொண்டவள் “நேக்கு ஒன்னும் இல்ல” என்று கூற
 
“என்ன இல்ல “காபி கொட்டிருச்சு. புடவைல்லை வேற கொட்டிருச்சு கால்ல வேற பட்டிருக்கும். எங்க கால காட்டு” என்று பிடிவாதம் பிடிக்க, ஐயோ என்றானது பார்கவிக்கு.
 
கொஞ்சம் காபி கொட்டுப்பட்டதற்கே! துடிக்கும் ஈகை அவளை வலிக்க செய்வான் என்று யோசித்தும் பாத்திருக்க மாட்டான்.
 
“காபி சூடே இல்ல” திக்கித்திணறி ஒரு வாறு சொல்ல
 
“என்ன?” புரியாது கேட்டான் ஈகை.
 
“காபி சூடே இல்ல. நான்தான்  அங்க இருந்து எந்திருச்சு வர்றதுக்காக பொய்யா கத்தினேன்” என்றவள் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ,
 
அவள் முகபாவங்களில் சிரிப்பு எட்டிப் பார்க்க அவளை இழுத்து அணைத்தவன் “ஒரு செக்கன் பதறிட்டேன் பட்டு. இனிமேல் இப்படிப் பண்ணதேல் சரியா?” அவளை போலவே! மிரட்ட பார்கவியின் முகத்திலும் புன்னகை தொற்றிக் கொண்டது.
 
“அதென்ன எப்போ பார்த்தாலும், பட்டு பட்டுனு கூப்டிரீங்க” முகத்தை சுருக்கிக் கேக்க
 
“அதுவா? அத சொன்னா எனக்கு நீ என்ன தருவ?” நல்ல கணவனாய் பேரம் பேசினான்.
 
“நாலு அடி வேணா தரேன்”
 
கோபமாக எழுந்துக்க கொள்ள போனவளை  மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டவன் “மாமி உனக்கு இப்போ எல்லாம் கோபம் ரொம்ப வருது டி” என்று உதடுகளால் கன்னங்களை கடிக்க
 
“விடுங்க என்ன? நேக்குதான் இன்னைக்கி காலேஜ் லீவு உங்களுக்கு வெளிய வேல ஒன்னும் இல்லையா?” குரலில் அதட்டல் இருந்தாலும் அவனிடமிருந்து விலகாமலையே! கேக்க
 
“இல்ல பட்டு. அப்படியே! வெளிய போகத்தேவை ஏற்பட்டாலும் உன்னையும் கூட்டிகிட்டுதான் போவேன்”
 
“நான் எதுக்கு நீங்க வேல செய்யுற அழகா ரசிஞ்சுண்டு பார்த்துண்டு இருக்கவா?”
 
“ஏன் ஆத்துக்காரர் சைட் அடிக்க மாட்டியா? என்ன”
 
“நல்லா அடிப்பேனே!” அவன் புறம் முகம் பார்க்கும் விதமாக அமர்ந்தவள் “ஆமா உங்க வீட்டுல உங்க அண்ணன், மன்னி பாப்பா மட்டும் தானா?”
 
பார்கவி திடிரென்று தன் குடும்பத்தை பற்றி கேப்பாளென்று ஈகை நினைக்கவில்லை. அவளிடம் பொய் கூறவும் பிடிக்கவில்லை. அதே சமயம் தயாளன்தான் தனது அண்ணன் என்ற உண்மையை இப்பொழுது கூறவும் விரும்பவில்லை.
 
தயாளனும் அதையே! தான் வலியுறுத்திக் கூறி இருந்தான். “ஈகா ரோஜாக்கு நாம யாருனு தெரியாது. உண்மைய சொல்ல இது சரியான நேரமும் கிடையாது. நம்ம அடையாளம் யாருக்கும் தெரியாமல் இருப்பதுதான் நம்ம பிளஸ்சே! புரிஞ்சுதா?” ஈகைக்கும் அது நன்கு புரிந்துதான் இருந்தது. விசாலாட்சி கிடைக்கும்வரை பாருவை முழுவதுமாக நம்ப தயாளன் தயாராக இல்லை.
 
“என்ன யோசிக்கிறீங்க?”
 
“கண்டிப்பா நாம ஒருநாள் அவங்கள மீட் பண்ணலாம். அப்போ யார் யார் இருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம். சரியா. ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லணும்” தன் பட்டு ரோஜாவை ஏமாற்ற மனம் இல்லாமல் உண்மையை கூற முடிவெடுத்தான் ஈகை.
 
“என்ன சொல்ல போறீங்க? தம் அடிக்கிறீங்களா? தண்ணி அடிக்கிறீங்களா?” சாதாரணமாகத்தான் கேட்டாள்
 
“அடிப்பாவி இதெல்லாம் வேற தெரியுமா உனக்கு”
 
“சினிமால பாத்திருக்கேன். ஆத்துக்காரர் புதிரோடு ஆரம்பிச்சாவே! இந்த மாதிரி வில்லங்கமாகத்தான் இருக்கும்” கண்களை உருட்டினாள் பார்கவி.
 
“வில்லங்கம்தான். வில்லங்கம்தான். ஆனாது தண்ணி தம்ம விட வில்லங்கமானது”
 
“அப்படியென்ன… ” என்று இழுத்தவள் அவனை சந்தேகமாக பார்த்து தலையை உலுக்கி “இருக்காது, இருக்காது” என்று தனக்குள் முனுக
 
அவள் என்ன நினைத்தாள் என்று ஈகைக்கு புரிந்து போக செல்லமாக அவள் காதை திருகியவன் “எதுவானாலும் வாயத் தொறந்து கேளு. ஆனா நான் பொண்ணுங்க விசயத்துல ராமர்மா… நீ மட்டும்தான். நான் சொல்ல வந்தது வேற”
 
தலையை தட்டி யோசித்தவள் “வேறென்ன? கஞ்சா? அபின்? இந்த மாதிரி….” என்று இழுக்க
 
அவள் நெற்றியை உள்ளங்கையால் அடித்தவன் “நல்ல விதமா யோசிக்கவே! மாட்டியா? நானே! சொல்லுறேன் இரு. இல்லனா உன் கற்பனை குதிரையை பறக்க விட்டுடுவ. தம்மு எப்போவாச்சும். ரொம்ப டென்ஷனா இருக்கும் போது. தண்ணி பார்ட்டி பண்ணும் போது. ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்கும் போது. ரொம்ப துக்கமா இருக்கும் போதுனு நோ ஷெடுவள். தண்ணி அடிக்கும் போது சிக்கன், பிஷ், மட்டன் இதான் சைட் டிஷ்” ஹோட்டலில் ஆடர் கொடுப்பது போல் கடகடவென ஒப்பிக்க
 
“என்னது?” அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள் பார்கவி.
 
“வாய கொஞ்சம் க்ளோஸ் பண்ணுமா. பிரேக் இல்லாத கொசு நுழைஞ்சிட போகுது”
 
“என்ன கிண்டல் பண்ணுறீங்களா? எதுக்கு என்ன ஏமாத்துனீங்க? எதுக்கு நீங்க சைவம்னு பொய் சொன்னீங்க” கணவனை ஏகத்துக்கும் முறைக்க
 
“எல்லாம் உன்ன கவர் பண்ணத்தான். நீ சைவம்னு தெரிஞ்சதும் நானும் சைவமாகிட்டேன். கோட் ப்ரோமிஸ் இங்க வந்ததிலிருந்து அசைவத்தை தொடவே! இல்ல” அவளை இழுத்து அணைத்தவன் “உன்ன தவிர” என்று சேர்த்து சொல்ல
 
“ச்சி ச்சி விடுங்க விடுங்க. என்ன தொடஙதீங்க” பார்கவி திமிர
 
“ரொம்ப பண்ணாத டி. இங்க வந்து ஒரு மாசத்துக்கு மேலாகப்போகுது. உனக்காகத்தான் நிறுத்தினேன். தண்ணி கூட அடிக்கல” சோகமாக சொல்ல கொஞ்சம் மனமிறங்கினாள்.
 
“சரி விடுங்க. நான் கீழ போறேன்”
 
“கோபம் இல்லனு சொல்லு விடுறேன்” அவள் கையை விடாது பிடித்திருக்க
 
“இல்ல விடுங்க. ஆனா சாப்பிடக் கூடாது. தண்ணி அடிக்க கூடாது. தம்மு பேக்கட்ட பார்த்தேன் அடிப்பேன்” என்று மிரட்ட, தலையை ஆட்டு வித்து எல்லாவற்ருக்கும் ஒத்துக்கொண்டான்.
 
அலைபேசி அடிக்கவே! அதை எடுத்துப் பார்த்தவன் தயாளன் அழைக்கவும் அவள் கையை விடுவிக்க சிட்டாக பறந்திருந்தாள் பார்கவி.
 
அவள் மனம் நிறைந்திருந்தது. தன்னிடம் ஒளிவு மறைவில்லாது எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்ளும் கணவன். தனக்கு ஒன்றென்றால் பதறி துடிக்கிறான். வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்.
 
அவன் உன்னை உண்மையாக நேசிக்கிறான். அதனால் உனக்கு ஒன்றென்றால் அவன் மனம் பதறுகிறது. உன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றான். நீ அவனை உண்மையாக நேசிக்கிறாயா? அவனுக்கு உண்மையாக இருக்கிறாயா? அவள் மனம் கேள்வி எழுப்ப, அவள் கால்கள் தள்ளாடவே! இறங்கிக் கொண்டிருந்த படியிலையே! தொப்பென்று அமர்ந்து விட்டாள் பார்கவி.
 
ஈகையும் தயாளனும் சேகரனின் காரியாலய அறையில் அமர்ந்திருந்தனர். ஈகைக்கு வந்த அழைப்பில் தயாளன் கூறியதாவது சேகரன் உன்னை சந்திக்க விரும்புவதாகவும் முடியுமென்றால் காரியாலயத்துக்குக்கு வருமாறும் கேட்டுக் கொண்டதாகவும் இருக்க,
 
“தான்தான் தமிழ்ச்செல்வன் என்று அறிந்துகொண்டு விட்டானா?” என்றுதான் முதலில் கேட்டான் ஈகை.
 
“இல்ல. இல்ல. அந்த நம்பருக்கு கால் வரல. இந்த நம்பருக்குத்தான் வந்தது”
 
தமிழ்ச்செல்வன் என்ற பெயருக்கு ஒரு சிம் மற்றும் ஈகைக்கென்று ஒரு சிம் இருக்க குளறு படிகள் நடக்கக் கூடாதென்று அந்த மொபைல் சைலன்ட் மூடில்தான் இருக்கும். அதற்கு கால் வந்தாலும் தமிழ்ச்செல்வன் அமெரிக்காவில் இருப்பதால் அங்குள்ள நேரம் சூழ்நிலையை காரணம் காட்டி பதில் சொல்லாது ஈகைக்கு பொருத்தமான நேரத்தில் மாத்திரம் அலைபேசி தொடர்பை ஏற்படுத்திக்கொள்வான். சேகரன் அடிக்கடி தமிழ்ச்செல்வனோடு பேசுவதாக ஈகையயோடு பேசுவதுண்டு அதனால்தான் ஈகை தெளிவாகக் கேட்டான்.
 
அதன்பின் இருவரும் கிளம்பி சேகரனின் காரியாலயம் செல்ல ஈகை பார்கவியையும் அழைத்து வருவான் என்ற எதிர்பார்க்காத முகபாவத்தைக் கொடுத்த சேகரனின் வரவேற்பு மற்றும் உபசரிப்பு எல்லாம் பலமாகத்தான் இருந்தது. பொதுவான பேச்சுக்களே! அங்கே இடம்பெற மருதநாயகத்தின் பேத்தியின் முன்னிலையில் எவ்வாறு பேசுவதென்று சங்கடப்படுவதை உணர்ந்த ஈகை பார்கவியை வெளியே உள்ள இருக்கையில் அமரும்படி கூறி சேகரன் தங்களை வரழைத்த விஷயத்தை பேசும்வரை பொறுமையாக காத்திருக்கலானான்.
 
 
சேகரனும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நேரடியாகவே! தன்னுடைய தொழிலில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதை ஈடுகட்ட பணம் தேவை படுவதாகவும் மருதநாயகத்தின் ஆலைகளில் தனக்கிருக்கும் பங்குளை பற்றிக் கூறி  அவற்றை விற்பதற்காக முடிவு செய்துள்ளதாகவும் கூறினான்.
 
 
தயாளனின் முகம் அப்பட்டமான மகிழ்ச்சியை காட்டியதென்றால் ஈகை யோசனையாகவே! “ஏன் என்னிடம் விற்க நினைக்கிறீர்கள்? மருதகாயகத்திடமே! விற்றிருக்க முடியும். அல்லது இன்னொரு பங்குதாரர் இருக்கிறாரே! அவரிடம் விற்றிருக்க முடியும் அல்லது வேறு யாரோ வேணா இருக்கலாம். ஏன் நான்” என்று கேள்விகளை அடுக்க
 
“இந்த கேள்விகள் இப்போ ரொம்ப முக்கியம். நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது. இதுதான் சான்ஸனு  சட்டுபுட்டுனு காரியத்தில் இறங்காம பேசிகிட்டு இருக்கான்” தயாளன் தம்பியை முறைத்தான் என்றால்
 
“இவன் லேசுப்பட்டவன் இல்ல” சேகரனின் மூளை எச்சரிக்க
 
“எனக்கு இந்த தொழில் தெரியாது. விருப்பம் இல்ல” இந்த மாதிரியான பதில்கள் எதுவும் இல்லாமல் சரியாக பேசுபவனை ஒரு நொடி வியந்துதான் பார்த்தான் சேகரன்.
 
“மருதநாயகத்துக்கு விக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்ல. நான் எதிர்பார்த்த அளவு காசு கொடுக்க மாட்டாரு. இப்போ இருக்குற சூழ்நிலைக்கு எனக்கு காசு ரொம்ப முக்கியம். மத்த பங்குதாரருக்கு வித்தா அவர் ஆலைகளை கைப்பற்றிக்கொள்வார். வெளிய விக்கிறத விட நீங்க மருதநாயகத்தோட வீட்டு மாப்பிள நீங்க வாங்கினா குடும்பத்துல பிரச்சினையும் வராது இல்லையா?” இன்முகமாகவே! சேகரன் சொல்ல கேலிப்புன்னகை ஈகையின் முகத்தில் நொடியில் தோன்றி மறைந்தது.
 
சேகரன் சொன்ன எல்லாம் சரியென்று மனதுக்கு பட்டாலும் கடைசி வாக்கியத்தை சொல்லும் பொழுது சேகரன் அறியாமலே! கண்களில் ஒரு குரூரத்தைக் கண்டான் ஈகை.
 
“இதை வாங்குறதே! பிரச்சினை பண்ணத்தான்” என்று மனதில் நினைத்தவன் “சொந்தக்காரங்களா வேற போய்ட்டிங்க, பிஸினஸ்ல சும்மா உதவவும் முடியாது. அதனால நான் வாங்கிக்கிறேன்” வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதுபோல் ஈகை பேச அவனை சந்தேகப்பட சேகரனால் முடியவில்லை.
 
“சந்தோசம். அப்போ நாளைக்கே! பத்திர பதிவை வைத்துக்கொள்ளலாமா?”
 
“தாராளமா?” என்றவன் வணக்கம் வைத்து வெளியே! வர வெளியே அமர்ந்திருந்த பார்கவியைக் காணவில்லை.