செவ்வானில் ஒரு முழு நிலவு 2

7728

அத்தியாயம் 2

சிங்காரச் சென்னை வெப்பநிலையை எத்தனை டிகிரியில் சூரியன் வாரி வழங்கிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது எனும் விதமாக தனது காரியால அறையில் ஏசிக் குளிரில் அமர்ந்திருந்தான் ஈகைச்செல்வன்.
 
ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த காரியாலயலயத்தில் மூன்றாம் மாடியில் பாதி அறையை தனதாக்கிக் கொண்டிருந்தான். அதில் காரியாலய அறையோடு சிறிய சாப்பாட்டறை, குளியலறை, படுக்கையறை என எல்லா வசதிகளும் இருக்க, வெளியே இருந்து பார்ப்பவருக்கு சாதாரண அறையாக தெரிந்தது.
 
இன்று ஏசிக் குளிரில் குளுகுளுவென கோட்சூட்டில் இருப்பவன் இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தான், எவ்வளவு உழைத்தான், என்பதெல்லாம் அவனை பார்ப்பவர்களுக்கு புரியாது. பார்க்க வடநாட்டு நிறத்தில் இருப்பவன், பரம்பரை பணக்காரனாகத்தான் இருப்பான் என்று எண்ணுவார்கள். அவன் தோற்றம் அவனுக்கு ப்ளஸ்ஸாக தொழிலில் முன்னேற்றம் தான்.
 
வீட்டை விட்டு வெளியே வந்தால் புன்னகைக்கவே மறந்து விடுபவன், கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் தனது லட்ச்சியத்தை அடையவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அது மருதநாயகத்தை அழித்தொழிப்பது.
 
அவனுக்கு இருந்த ஒரே சொந்தம் தாய்வழித் தாத்தா செல்வம். அவர் இல்லையென்றால் அவன் நிலமை என்னவாக இருந்திருக்கும் என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
 
பத்து வயதுவரை ஆங்கில மொழியில் கல்வி கற்றவன் தாத்தாவுக்கு வசதி பத்தாததால் தமிழ் மொழியில் அரசாங்க பாடசாலையில் சேர்க்கப்பட்டான். அழுது கரையாமல் கிடைத்ததை பற்றிப் பிடித்தவன் வெறிகொண்டு படிக்கலானான். சிறு வயதில்லையே சரளமாக ஆங்கிலம் பேச முடிந்தமையால் எங்கு சென்றாலும் அவனுக்கு வெற்றிதான்.
 
தாத்தா ஒரு அரச ஊழியர் என்பதால் அவரால் முடியுமான எல்லா லோனையும் போட்டு ஈகைச்செல்வனை மேற்படிப்பு படிக்க வைக்க, படித்துக் கொண்டே வேலை பார்த்தவன் இன்று இந்த நிலமைக்கு உயர்ந்திருக்கின்றான்.
 
ஆனால் அவனின் உண்மையான வெற்றியே மருதநாயகத்தை வெற்றி கொள்வது அதை பார்க்கத்தான் தாத்தா செல்வம் உயிரோடு இல்லை. அந்த கவலை அவன் மனதின் ஓரம் மெல்லிய முள்ளாய் குத்திக் கொண்டே இருக்கும்.
 
அவர் இல்லாத வீட்டில் தங்க பிடிக்காமல் அதிகம் காரியாலயத்திலையே தங்கி விடுபவன், புதிதாக சென்னையில் கட்டிய இந்த காரியாலயத்தில் மினி வீட்டையும் சேர்த்து தனக்காக கட்டிக் கொண்டான்.
 
கோப்பில் கையெழுத்து இட்டுக்கொண்டிருந்தவனை கலைத்தது கதவு தட்டும் ஓசை “கமிங்” என்றவன் தலையை தூக்காமலையே நான் விசாரிக்க சொன்னது என்னாச்சு” என்று கேட்க
 
உள்ளே வந்தது அவனது பி.ஏ. தயாளன் அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாது தனது அலைபேசியை அவன் புறம் நீட்டி “ஐசு லைன்ல இருக்கா” என்று சொல்ல
 
பட்டென்று தலையை உயர்த்தியவன் அலைபேசியை பறிக்காத குறையாக வாங்கி கம்பீரமான குரலில் “ஹலோ” சொல்ல
 
அந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்ட உடன் மறுமுனையில் இருந்து முத்தங்கள் அலைபேசி வழியாக பரிசாக ஈகைக்கு வழங்கப்பட்டது. 
 
இவ்வளவு நேரமும் விறைப்பாக இருந்தவன் அந்த சத்தத்தில் உடலும், மனமும் இளகி, முகமும் புன்னகையை தத்தெடுத்துக்கொள்ள “ஐ லவ் யு பேபி” என்றான் அன்பாக.
 
பல பெண்கள் ஈகையின் பின்னால் சுற்ற அனைவரையும் தனது கருட பார்வையால் ஓரம் கட்டியவன் ஐசுவின் பின்னால் குழந்தையாக மாறி ஓடிக்கொண்டு இருக்கிறான். அவன் முத்தமிடும் பொழுது மீசை குத்துவதாக சிணுங்கலோடு அவள் சொன்னதற்காக வேண்டியே மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து வளம் வரும் ஆணழகன் ஈகை.
 
“சித்து உன் கூட நா கா. இனி பேச மாட்டேன். நீ தான் என்ன பார்க்க வர மாட்டியே!” மழலையில் மிரட்டலானாள் மூன்றே வயதான ஐசு என்கிற ஐஸ்வர்யா.
 
“சித்துக்கு வேல டா.. அதான் வர முடியல. கண்டிப்பா வீகென்ட் வரேன். என்ன வாங்கிட்டு வரணும்” அண்ணன் மகளை தாஜா செய்யலானான் ஈகை.
 
“சாக்லேட். நெறைய வாங்கிட்டு வா. நீ வாங்கிட்டு வந்ததெல்லாம் தீர்ந்து போச்சு” அதை சொல்லும் பொழுது இரண்டு கையையும் விரித்து காட்ட முடியாமல் ஒரு கையை கண்டிப்பாகா விரித்திருப்பாள் என்று ஈகையின் கண்களுக்குள் காட்ச்சி தோன்ற மீண்டும் புன்னகை மலர்ந்தது. ஈகையின் புன்னகையை ரசித்து பார்த்திருந்தான் தயாளன்.
 
 “அப்பா வாங்கிட்டு வர்ரதில்ல” மழலையின் கோபக்குரல். அவள் கோபம் ஈகையை தாக்க தயாளனை நன்றாக முறைகலனானான். ஈகை  முறைப்பதிலையே தயாளனுக்கு புரிந்தது தனது செல்ல மகள் தன்னை பற்றித்தான் சித்தப்பனிடம் பற்றவைக்கிறாள் என்று.
 
காரியாலயத்தில் தயாளன் ஈகாவின் பி.ஏ. அப்படித்தான் வெளியே உள்ளவர்களுக்குத் தெரியும், தயாளன் ஈகாவின் கூடபொறக்காத அண்ணன் என்று அறிந்த ஜீவன்கள் இரண்டு பேர் அது தயாளனின் அன்னையும், மனைவி காயத்திரியும் மாத்திரமே!
 
“அம்மா சாக்லட் சாப்பிட விட மாட்டேங்குறாங்க. நீ வந்தா அம்மாவை திட்டு” அலைபேசியில் இரகசியம் பேசினாள் அந்த சின்ன சிட்டு. ஈகைக்கு அந்த குரலுக்கு உலகத்தையே அவள் காலடியில் வைக்க தோன்றியது. 
 
“பாட்டி இருக்காங்கல்ல… இருமி கிட்டே இருக்காங்க, மருந்து சாப்பிடவும் மாட்டேங்குறாங்க” வீட்டில் நடப்பவற்றை குறையில்லாது கூறலானாள் ஐசு.
 
“அம்மாக்கு உடம்பு முடியலையா?” ஈகை தயாளனை ஏறிட
 
“ஆஹா.. நா சொல்லலைனு என்ன உண்டு இல்லனு ஒரு வழி பண்ணிடுவானே!” தயாளனின் மனம் கூவ அலைபேசியில் உரையாடி முடிக்கும் படி சைகை செய்தவன் அமைதியாக அமர்ந்திருக்க ஈகை அவனை முறைத்தவாறே ஐசு உடன் உரையாடலானான். 
 
 “சித்து நீ டூ பேட். தம்பி பாபா வேணும்னு அம்மா கிட்ட கேட்டா அப்பா கிட்ட கேக்க சொல்லுறாங்க. அப்பா கிட்ட கேட்டா சித்து கிட்ட கேளுன்னு சொல்லுறாங்க. உன் கிட்ட கேட்டு எவ்வளவு நாளாச்சு இன்னும் கொண்டு வந்து தரல. எப்போ கொண்டு வந்து தர” 
 
தயாளன் – காயத்திரி இருவருமே காதலித்து திருமணம் செய்தவர்கள் தான். இருவருக்கும் விருப்பம் இருந்ததைக் கண்டு கொண்ட ஈகைத்தான் இருவருக்கும் இடையில் தூது சென்றான் என்றால் கூட மிகையில்லை. அவன் மனதில் ரணமாய் பகை எரிந்துக் கொண்டிருந்தாலும், தனது குடும்பம் என்று வரும் பொழுது மட்டும் நொடியில் இளகி விடுபவன் ஈகை.
 
மருதநாயகத்தை பழிவாங்குகிறேன் என்று எங்கே ஈகை தன் வாழ்க்கையை பற்றி சிந்திக்காமல் இருந்து விடுவானோ என்ற அச்சம் தயாளனுக்கு இருந்து கொண்டே இருக்க, குழந்தை ஒருநாள் கேட்டதை சித்தப்பனிடம் கேட்குமாறு கூறி இருக்க, அவளும் தந்தையின் சொல் தட்டாது கேட்டு வைத்தாள்.
 
மனைவியே இல்லை. குழந்தைக்கு நான் எங்கே போவேன், குழந்தையிடம் விளக்கவா முடியும்? சரி என்று அந்த நேரத்தில் சமாதானப்படுத்தி விட்டு வந்திருக்க, அந்த கேள்விக்கு காரணகர்த்தாவே அண்ணன் தான் என்றதும் தயாளனை முறைக்கலானான்.
 
“இப்போ எதுக்கு முறைக்கிறான்னு தெரியலையே!” தயாளனின் மனம் மீண்டும் ஓலமிட, முகமோ என்றும் போல் அப்பாவிக் குழந்தையை தத்தெடுத்திருந்தது. 
 
“யார் கிட்ட பேசி கிட்டு இருக்க ஐசு” குளித்து விட்டு தலையை துவட்டியவாறு வந்த கயாத்திரி வினவ அலைபேசியை கொடுத்து விட்டு ஓடி விட்டாள் ஐஸ்வர்யா. 
 
கணவனின் என்னை பார்த்ததும் இந்த நேரத்தில் அவள் யாரோடு பேசிக்கொண்டிருக்கக் கூடும் என்று ஊகித்தவள் “என்ன சார் வீட்டுக்கெல்லாம் வர வழி தெரியலையா? மறந்து போச்சா? இல்ல விருந்து வச்சி கூப்பிட்டாதான் வருவீங்களோ” எடுத்த எடுப்பிழையை கோபத்தை வெளிப்படுத்தினாள் காயத்திரி.
 
சத்தமாக சிரித்த ஈகை “ஐசுக்கு எங்க இருந்து இவ்வளவு கோபம் வந்திருக்கும்னு அடிக்கடி யோசிப்பேன். இப்பொழுதுதான் தெரிகிறது பெங்காலி பொண்ணோட கோபம்னு” காயத்திரியின் கோபமான பேச்சையெல்லாம் கண்டு கொள்ளாமல் கிண்டலாகவே பதில் சொன்னான் ஈகை.
 
“ஆஹா கார பஜ்ஜி லைன்க்கு வந்துட்டாளா? அப்போ இவன் கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவான்”  தயாளன் புன்னகைத்துக்கொள்ள
 
“எதோ வேல இருக்குன்னுதான் ஆபீஸ்லயே! தங்கிக்க சொன்னே. அதுக்காக மாசக் கணக்கா தங்கிக்கிறதுக்கு நான் அனுமதி தரள. ரெண்டு நாள் தான் டைம் பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரணும். இல்லனா….. நாங்க ஆபீஸ்க்கு வந்து தங்கிடுவோம்” மிரட்டலானாள் காயத்திரி.
 
“யாக்கோ… நா ஊரை விட்டே போலாம்னு இருக்கேன். உன் புருஷனையும் கடத்திக் கொண்டு போக போறேன். அத பத்தி உன் கூட பேசணும். வீட்டுக்கு வரேன்” என்றவன் அலைபேசியை அனைத்து விட்டு “எப்படி காயுவ சமாளிக்கிற? மிரட்டியே காரியம் சாதிக்கிறா”
 
“உன் அக்காவாச்சே! உன்ன மாதிரிதான் இருப்பா” தயாளன் சத்தமாகவே சொல்ல 
 
“ஆஹா மத்தாலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி எங்குறது மாதிரி இவங்க கிட்ட பேசி வம்ப விலை கொடுத்து வாங்கிடாத ஈகை” மனம் கூவ தயாளன் சொன்னது காதில் விழாதவாறு “நான் கேட்ட டீடைல்ஸ் எங்க” என்று நேராக நிமிர்ந்து அமர்ந்தான்.
 
“எல்லா டீடைலும் இந்த பைல்ல இருக்கு” என்று ஒரு கோப்பை கொடுக்க, அதில்  தகவலோடு புகைப்படத்தில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
 
மருதநாயகத்தின் குடுப்பத்தார் அனைவரை பற்றியும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பவன் ஈகை. புதிதாய் வந்த பார்கவியை பற்றி அறிந்ததும். அவன் மனதில் புதிதாக ஒரு திட்டம் உருவாக தயாளனிடம் விசாரிக்க சொல்லி இருந்தான். அவனும் திரட்டிய தகவலை கொண்டு வந்து கொடுத்திருந்தான்.
 
அவள் புகைப்படத்தையே கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்திருந்தவன் அவளை பற்றிய விவரங்களை படித்து விட்டு
 
“அந்த கிழவனை எப்படி பழிவாங்குவதென்று யோசிச்சுகிட்டு இருந்தேன். வருடக்கணக்கில் பிரிஞ்சிருந்த ஒரே பேத்தி வயித்த நிறச்சி திருப்பி அனுப்பினா அந்த கிழவன் ஹார்ட் அட்டாக்கில் மேல போய்டுவான்ல” ஈகைசெல்வன் பற்களை கடித்தவாறே சொல்ல
 
 
“பார்க்க சரியா சாப்பிடாம ஒல்லிக்குச்சியாத்தான் இருக்கா” புகைப்படத்தை எட்டி நின்று பார்த்த தயாளன் “வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பினா அந்தாளு எதுக்கு ஹார்ட் அட்டாக்  வந்து சாக போறான் மனம் குளிர மாட்டானா?” ஈகை சொல்ல விளைவதை புரிந்து கொள்ளாமல் தயாளன் பேச அவனை முறைத்த ஈகை
 
 
“இவனெல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி எப்படித்தான் குழந்தையை பெத்தானோ!” முணுமுணுத்தவன் “அண்ணா முதல்ல உக்காரு” தயாளனை தள்ளாத குறையாக நகர்த்தினான்.
 
 
“சரிடா… ஈகா… இத்துண வருஷமா அந்தாள ஒன்னும் பண்ண முடியல இப்போ தான் நம்ம கைல பணம் இருக்கே! ஏதாச்சும் பண்ணலாம்ல, இல்லனா நாம பண்ணுறதுக்குள்ள அந்தாளு மண்டைய போட்டுட போறான்” சீரியஸ்ஸாக சொல்ல
 
 
“வில்லனுக்கெல்லாம் ஹீரோ கையாலதான் டா… சாவு” என்ற ஈகை அண்ணனை முறைத்தான்.
 
 
“எங்கயோ இடிக்குது. அந்தாளு ஒரு ஜாதி வெறி பிடிச்ச மிருகம், ஊருக்கு நல்லது செய்யிறேன்னு ஜாதி வெறிய ஊட்டி வளத்துக்கிட்டு இருக்கான், அவன் எப்படி ஓடிப்போன பொண்ணோட மகளை கூட்டிக்கிட்டு வந்தான்” ஈகைசெல்வன் மருதநாயகத்தை அறிந்தவரையில் சொல்ல
 
“பாசம் தம்பி… பா..சம்.. வயசான காலத்துல மகளை பார்க்கணும்னு நினைச்சி இருப்பாரு, மக செத்து போயிட்டதால பேத்தியை கையோட கூட்டிட்டு வந்திருப்பார்” 
 
“இருக்கும், இருக்கும்… பேத்தி மேல எவ்வளவு பாசம்னு பார்க்கலாம்” என்றவனின் பார்வை மீண்டும் பார்கவியின் புகைப்படத்தின் மீது படிந்தது.
 
முத்துப்பற்கள் தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தவளின் புன்னகை ஈகைச்செல்வனின் மனதை கொஞ்சமேனும் அசைக்கவில்லை. மாறாக அவளை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
 
பழிவாங்க வேண்டும் என்ற வெறியில் துடித்துக் கொண்டிருந்த ஈகைசெல்வனின் கண்களை கோபம் மறைக்க, மருதநாயகம் பார்கவியை  எதற்காக அழைத்து வந்திருப்பார் என்பதை சிந்திக்காத தவறினான்.
 
“என் குடும்பத்தையே அழிச்சவனுக்கு மரண அடி மனசுல விழணும்” என்றவன் தான் செய்யப்போகும் காரியத்தை விலாவரியாக அண்ணனுக்கு சொல்ல தயாளனின் முகத்தில் ஈயாடவில்லை.
 
மருதநாயகத்தை வீழ்த்த, அழிக்க, பழிவாங்க, நியாயம், தர்மம் எல்லாம் பார்க்கக் மாட்டேன். பார்க்கக் கூடாது என்பது அண்ணன், தம்பி இருவரும் என்றோ பேசி எடுத்த முடிவுதான்.
 
மருதநாயகம் செய்யாத எதையும் தாங்கள் செய்யவில்லை. செய்ததைத்தான் திருப்பி செய்கிறோம். அதனால் இது தவறே! இல்லை. உனக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா டா? என்ற பார்வைதான் இருவரிடமும்.
 
 
“இப்படியே பார்த்துக் கொண்டிருந்தா எப்படி? சட்டுபுட்டுனு காரியத்துல இறங்க வேணாமா?”
 
“இவளை மடக்க முதல்ல நான் நம்ம ஊருக்கு போகணும்”
 
“அவ காலேஜுக்கு அந்த விக்னேஸ்வரன் பையன் மாதேஷோடுதான் போறா, வாரா. இதுல நீ அவளை மீட் பண்ணி, லவ் பண்ணி கல்யாணம் பண்ணியோ! பண்ணாமலையோ! ஏமாத்தணும்னா ஒன்னு ஸ்டூடண்ட்டா போகணும் இல்ல காலேஜ் ப்ரோபசரா போகணும். முப்பது வயசான உன்ன ஸ்டுடண்ட்டுனா யாரும் நம்ப மாட்டாங்க, ப்ரொபஸரா போக நீ முதல்ல படிக்க வேண்டி இருக்கும். என்ன செய்யவும் இன்னும் நாலு மாசம்தான் தம்பி இருக்கு ரொம்ப…. கஷ்டம்” என்று விட்டு சத்தமாக சிரிக்க
 
அவன் புறம் தண்ணீர் கிளாஸை நகர்த்தியவன் “சிரிச்சி முடிச்சிட்டினா இத குடி இப்போ நான் சொல்ல போறத கேட்டு உனக்கு தேவைப்படும்” என்றவன் “நான் அந்த வீட்டுக்குள்ளேயே போகப்போறேன்” கண்களை கூர்மையாக்கி அண்ணனை பார்த்தான்.
 
“என்னடா தம்பி சொல்லுற?” அதிர்ச்சியாக ஈகையை பார்த்தான் தயாளன்.
 
அண்ணனை அமைதியாக பார்த்திருந்தவன் “இருநூறு ஏக்கர் என் தாத்தா நிலம் ஏலத்துக்கு வரப்போவதாக செய்தி. அத வாங்கப் போறேன். அப்படியே அந்த வீட்டுக்குள்ள போகப் போறேன்”
 
“நிலத்தை வாங்குறதுக்கும் வீட்டுக்குள்ள போறதுக்கும் என்ன சம்பந்தம்? அந்த நிலத்துக்காக  அவனுங்க அல்லாடுறது உனக்கு நல்லாவே தெரியுமே அத வாங்கினா உன்ன கொன்னுடுவாங்கடா… வீட்டுக்குள்ள எப்படி விடுவாங்க?”
 
இப்பொழுது சத்தமாக சிரிப்பது ஈகைசெலவனின் முறையானது.
 
“நான் போட்ட கணக்கு சரியென்றா முதல்ல அந்த இடம் என் கைக்கு வரணும். நிலம் ஏலத்துக்கு வரும் விஷயம் இவனுங்களுக்கு இன்னும் தெரியல்னு நினைக்கிறேன், தெரியும் போது அவனுங்க முகத்தை பார்க்க ஆசை. அதுவும் நிலம் இவனுங்களுக்கு கிடைக்கலன்னு தெரிஞ்சா அவனுங்க முகம் எப்படி இருக்கும்”
 
“இதெல்லாம் ஒன்னும் வேணாம் தம்பி… பேசாம ஆள வச்சி அவனுங்கள தூக்கிடலாம்”
 
“பொட்டுனு போட்டு பட்டுனு உசுரு போனா… நிம்மதியா போய் சேர்ந்துடுவாங்களே! வலிக்கனும், நல்லா வலிக்கனும் எனக்கு வலிச்சத விட வலிக்கனும்” ஈகைசெலவன் கத்திய கத்தில் தயாளன் எழுந்து அவனை அமைதி படுத்த ஏற்கனவே சிவந்திருந்தவன் கோபத்தில் மேலும் சிவந்தான்.  
 
 
 வேதநாயகியின் அண்ணன் சத்தியநாதன்தான் ஈகைச்செல்வனின் தந்தை வழித் தாத்தா. அவர்தான் இந்த ஊரின் பெரிய பண்ணையார். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நிலங்களை வாங்கிய குடும்பம் என்று பெயர் பெற்றவர்கள். பெரிய விவசாய குடும்பமும் கூட.
 
ஊருக்குள் பாதி சொத்துக்குக்கும் மேல் வைத்திருந்த சத்தியநாதன் தானமாக கொடுத்தே சொத்தை பாதியாக்கி இருந்தார்.
 
சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மருதநாயகம் சத்யநாதனின் ஒரே தங்கையை திருமணம் செய்துகொள்ள வேதநாயகியை பெண் கேட்க, தங்கள் உறவுமுறையில் இருந்த கொஞ்சம் படித்த பையன் என்ற ஒரே காரணத்துக்காக சத்யநாதனின் தந்தை வேதநாயகியை மருதநாயகத்துக்கு திருமணம் செய்து வைத்தார்.
 
முத்துராஜ் கிடைத்த உடன் சத்யநாதனின் மனைவி இறந்துவிட வேறு திருமணமும் செய்து கொள்ளாதவர், ஊருக்காகவே வாழ்ந்தார்.
 
மருதநாயகத்துக்கு சாத்தியநாதனின் சொத்துக்களின் மேல் எப்பொழுதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க  “முத்துராஜை சென்னையில் காலேஜ் படிக்க வைக்கலாம் அவன் தானே இந்த சொத்தெல்லாம் கட்டி காக்க வேண்டும்” என்ற எண்ணத்தை தந்தை, மகன் இருவர் மனதிலும் ஏற்படுத்தி முத்துராஜை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
 
அவர் எண்ணமெல்லாம் முத்துராஜ் வயசுக் கோளாறில் காதலில் விழுவான் அதுவும் வேறு சாதி பெண்ணை காதலித்தால் அதையே காரணம் காட்டி அவனை குடும்பத்தை விட்டே ஒதுக்கி  வைக்கலாம் அதன்பின் சத்யநாதனை தீர்த்துக்கட்டிவிட்டு சொத்தை ஆளலாம் என்று கணக்குப் போட்டார்.   
 
மருதநாயகம் நினைத்ததை போல் இல்லாமல் முத்துராஜ் காலேஜ் படிப்பை நல்ல முறையாக முடிக்க, சாத்தியநாதனின் தூரத்து உறவு முறை பெண்ணான மாலதியை முத்துராஜுக்கு திருமணம் பேசப்பட்டது.
 
மாலதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரே பெண், முத்துராஜை போல் அண்ணையில்லாதவள். பார்க்க தேவதை போல் சிவந்த நிறத்தில் இருந்தவளை முத்துராஜின் குடும்பத்தார் அனைவருக்கும் பிடித்துப்போக உடனே கல்யாணம் நடந்தது.
 
முத்துராஜின் ஆசைப்படி சென்னையில் தொழில்  தொடங்க வேண்டும் என்று திருமணம் ஆனா கையேடு சென்னைக்கு குடிவர தொழிலும் ஆரம்பித்தான்.
 
அன்னையின் நிறத்தைக் கொண்டு பிறந்தான் ஈகை. ஈகைசெல்வன் பிறந்த பின் அவன் படிப்பு என்று அங்கேயே இருந்து விட ஊரில் என்ன நடக்கிறது என்று அறியாமல் இருந்தான் ஈகையின் தந்தை முத்துராஜ்.
 
சத்தியநாதன் உயிரோடு இருக்கும்வரை ஊரிலுள்ள சொத்துக்களை பற்றி திரும்பியும் பார்க்காத முத்துராஜ் ஈகையின் பத்தாவது வயதில் தந்தை இறந்த பின் சொத்துக்களை பற்றி விசாரிக்க விழித்துக் கொண்டார் மருதநாயகம்.
 
தந்தையின் பதினாறாவது நாள் காரியம் முடிந்து சென்னை திரும்பும் போதுதான் கோரவிபத்தில் சிக்கி முத்துராஜ் குடும்பத்தோடு இறந்து விட்டதாக ஊருக்கு செய்தி கிடைத்தது.
 
அந்த விபத்தில் ஈகைசெல்வன் எவ்வாறு உயிர் பிழைத்தான்? இத்தனை நாட்களாக எங்கு இருந்தான்? தன் பெற்றோரின் மரணத்துக்கு  மருதநாயகம் தான் காரணம் என்று அவனுக்கு எப்படி தெரியும்?  தயாளன் யார்? அடுத்த பதிவில் சந்திக்கலாம்