செவ்வானில் ஒரு முழு நிலவு 16-2

6339

வீட்டில் குறைந்த அளவேயான மின்குமிழ்கள் எரிந்ததனால் சீசீடிவி காட்சிகள் கருப்பு வெள்ளைக் காட்ச்சிகளாக இருந்ததனாலும்,  ஒரிஜினலுக்கும், டுப்ளிகேட்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. பார்கவியை திருமணமும் செய்ய வேண்டும் அதே சமயம் ஹரிஹரனை சிக்க வைக்கவும் வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு எல்லாம் செய்திருந்தனர் ஈகை – தயாளன் – ஜெய் கூட்டணி.   
முதலில் ஹரிஹரனையும் ஊமையனையும் தோட்ட வீட்டில் மடக்கலாம் என்றுதான் எண்ணினர். ஹரிஹரன் பார்கவியை கடத்தி இருந்தால்தான் ஈகையை கடத்தினான் என்றும் உறுதிப்படுத்த முடியும். அவன் குழம்பி இருக்கும் நேரத்தில் யோசிக்க விடாமல் அடிக்க வேண்டும். என்ன நடந்தது என்று குழம்பியே! தன் குடும்பத்தார் மீது சந்தேகம்கொள்ள வேண்டும் என்று பார்கவியை அவன் தூக்கிச் செல்லவதை பல்லைக் கடித்துப் பார்த்திருந்தான் ஈகை.
 
மயக்கத்தில் இருக்கும் அவளை ஏதாவது செய்து விடுவானோ! என்ற அச்சம் வேறு. செல்லும் அவர்களை பின் தொடர்ந்து பார்கவிக்கு ஆபத்தென்றால் காப்பாற்ற ஈகையை கடத்தியவர்களோடு நால்வர் என்று ஜெய் ஏற்பாடு செய்திருந்தான்.
 
“கோவிலுக்குள் வைத்து ஏதும் செய்து விட மாட்டான்” தயாளன்தான் ஈகையை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் அங்கு சென்று சேரும்வரை அவன் உயிர் அவன் வசமில்லை.
 
சீசீடிவி கண்ணை விட்டு மறைந்ததும். ஈகையே! நடந்து கோவிலுக்கு செல்ல ஹரிஹரன் அங்கே! மயங்கி இருப்பதையும் அவன் கையில் இருந்த கைக்குட்டையும் என்ன நடந்திருக்கும் என்று ஈகைக்கு புரிய வைத்தது. “வேலையே! இல்லமா பண்ணிட்டான்” என்றவாறு பார்கவியை பார்க்க அவளோ மயக்கத்தில் இருந்தாள்.
 
“சாரி டி. நீ யாருன்னு தெரியாம உன்ன போய் கஷ்டப்படுத்த பார்த்தேனே!” மனதால் அவளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டவன்
 
ஹரிஹரனை தோட்டத்து வீட்டில் கொண்டு சென்று படுக்க வைத்து அவனைக் கடத்த வந்தவர்களுக்கு காசும் கொடுத்து கோவிலை பூட்டி சாவியை பின்பக்க தோட்டத்தில் எங்கே வைக்க வேண்டுமென்று சொல்லி இருந்தானோ அங்கே வைத்து விட்டு இரவோடு இரவாக கிளம்பிச்சென்று விடுமாறு உத்தரவிட்டான்.
 
எல்லாம் செய்து முடிக்கும் பொழுது காலை ஐந்து மணியையும் தாண்டி இருக்க, பார்கவியின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டவன் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தான்.
 
எப்பொழுது கண்ணயர்ந்தான் என்று அவனுக்கே! தெரியாது. வேதநாயகி எழுப்பவும் உண்மையிலயே! அவர் மூட்டு வலியோடு மாடி ஏறி வந்து விட்டார் என்றுதான் கடிந்துக்கொண்டான். அதன் பின்தான் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு எல்லாம் நியாபகத்தில் வர ஒன்றும் அறியாதவன் போல் வேதநாயகியை கேள்வி கேட்டான்.
 
பார்கவி ஏதோ சொல்ல விளைவது போல் இருக்க அவள் கையை பற்றி தடுத்தான் ஈகை. யாரோ அறைக்குள் வந்து கடத்தியதாக நடந்ததை பார்கவி கூறி இருந்தால் ஊர் மக்கள் மத்தியில் அறைக்குள் வந்தவன் ஒண்ணுமே! பண்ணலயா? என்ற கேள்வியோடு வீணான வதந்திகள் பரவியிருக்கக் கூடும். அவன் நினைத்திருந்தால் ஹரிஹரனை தோட்ட வீட்டில் விட்டு விட்டு, பார்கவியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றிருக்கலாம், ஆனால் பார்கவி அவனோடு இருப்பதுதான் அவளுக்கு பாதுகாப்பு. அவள் யாரோ ஒருத்தியென்றால் ஈகை அதைத்தான் செய்திருப்பான்.
 
நேற்று காலை பார்கவி குனிந்து கோலம் போடும் பொழுது அவளையே பாத்திருந்த ஈகையின் சிந்தனையெல்லாம் “என்ன நடக்க போகிறது என்று தெரியாம இப்படி இருக்கிறாளே! நான் மட்டும் ஊருக்கு போய் இருந்தால் இவள் நிலைமை என்னவாக இருந்திருக்கும்” என்றிருந்தது. 
 
கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் முன்னாடி இருந்த கூந்தலை தூக்கி பின்னாடி போட்டாள். அவளது அந்த சிறு செயல்தான் ஈகை அவளை திருமணம் செய்ய முடிவு பண்ணினான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
 
அப்படி அவள் கூந்தலை தூக்கிப் போடும் பொழுது ஈகையின் கண்ணில் அவளது பின் கழுத்தில் அந்த கட்டை விரல் சைசில் இருக்கும் காவிநிற மச்சம் பட்டுத் தொலைத்ததுதான் காரணம் என்று தயாளனிடம் கூட இன்னும் கூறவில்லை.
 
அவன் எவ்வாறு உணர்ந்தான் என்று ஈகைக்கே! தெரியவில்லை. சந்தோசமிகுதியால் பார்கவியை கட்டித்தழுவி இருப்பானோ! அந்த நேரத்தில் அவன் அலைபேசி அடித்து அவனை தடுத்து நிறுத்தி இருந்தது. சுற்றுப்புற சூழல் கண்ணில்பட  தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “பட்டு ரோஜா… நீ உயிரோட இருக்குறது தெரியாமல் போயிருச்சே டி” என்று சந்தோசமாக புன்னகைத்தான்.
 
அவள் யாரென்று அறிந்துகொண்ட பின் அவளை அப்படியே விட்டுவிட முடியவில்லை. மருதநாயகத்தின் பேத்தி என்று நினைத்து அவரை பழிவாங்க இவளை காயப்படுத்த கிளம்பி வந்தவனுக்கு அவள் மேல் காதலா? ஈர்ப்பா? ஏதோ ஒன்று அவள்பால் அவனை இழுக்க அவள் சம்மதம் கூட கேக்காமல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை திருமணம் செய்ய விழைந்தான்.
 
வேதநாயகி கோவிலை பற்றி கதைகதையாக சொல்லும் பொழுது பொறுமையாக கேட்டிருந்தவன் பார்கவியிடம் சம்மதம் கேக்குமாறு கூறி இருக்க, அவள் என் பேத்தி நான் சொன்னால் மறுக்க மாட்டாள் என்று வேதநாயகி கூற
 
“அவள்தான் உங்க பேத்தியே! இல்லையே!” என்ற அவன் மனம் அவள் மறுத்துவிடக் கூடாதே! என்று வாசலில் மாட்டி இருந்த சாத்தியநாதனின் புகைப்படத்திடம் மனதால் வேண்டிக்கொண்டிருந்தான்.
 
பார்கவியை மணமகள் அலங்காரத்தில் பார்த்த பின்தான் அவன் மனதில் நிம்மதி பரவ ஆரம்பித்தது. “பட்டு ரோஜா நீ என்கிட்ட வந்துட்டா உன்ன என் கைக்குள்ளயே! வச்சி பத்துக்குவேன் டி” தனக்குள் கூறிக்கொண்டவன் சந்தோசமாக அவளோடு கோவிலுக்கு புறப்பட்டு சென்றான்.
 
பார்கவி மட்டும் அவனிடம் வந்து திருமணத்தை நிறுத்துமாறு கூறி இருந்தால் ஒரு வேலை உண்மையை கூறி இருப்பானோ! அல்லது காரணம் கேட்டு குடைந்திருப்பானோ! அவன் சந்தோச மனநிலையில் இருக்க இவள் நெருப்பில் அமர்ந்திருந்தாள்.
 
அவளை பழிவாங்க கிளம்பி வந்தவனே! அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க எண்ணுகின்றான். அவனை விட்டு விலகியே! இருக்க வேண்டும் என்று எண்ணுபவளோ! அவன்பால் ஈர்க்கப்படுகின்றாள். 
 
திருமணம் முடிந்த கையேடு வீட்டில் ஒரு க்ளோபரம் காத்திருக்கிறது. ஹரிஹரன் வந்து கதை சொல்ல போகிறான் அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தியாக வேண்டும். திட்டம் போட்டபடியே! எல்லாம் ஒழுங்காக நடந்துகொண்டிருக்க, பார்கவி மருதநாயகத்தின் பேத்தி என்பதை வைத்தேதான் காய் நகர்த்த வேண்டும். யாரை ஏமாற்ற, யாரை வீழ்த்த பார்கவியை கொண்டு வந்தாரோ! அதே! பார்கவியை வைத்து தான் வெற்றிக்கொடியை நிலைநாட்டை வேண்டும் என்று நினைத்தான் ஈகைச்செல்வன்.
 
இந்த ஊரை பொறுத்த மட்டில் மருதநாயகம் வைப்பதுதான் சட்டம் என்றிருக்க, அது அவ்வாறில்லை என்று அவர் மூக்கை உடைக்கவும் வேண்டும் அதே! சமயம் அவர் அதை பற்றி எந்த கேள்வியும் கேட்டுவிடவும் கூடாது என்பதற்காக வேண்டி தயாளனை தாலி எடுத்துக்கொடுக்கச் சொல்லி அவர் மூக்கை உடைத்தவன் வீட்டுக்கு வந்த உடனே! “எதற்காக கடத்தி உங்க பேத்தியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க” என்று அவரை கேட்டு ஷாக் கொடுத்து அவர் வாய்க்கு பூட்டும் போட்டு விட்டான்.
 
மருதநாயகம் இதை செய்யவில்லை என்று சொல்ல அவருக்கு காரணங்களும், ஆதாரமும் இருக்கலாம். ஆனால் பார்கவி என் பேத்தி இல்லை என்று அவர் சொல்ல மாட்டார் என்று ஈகைக்கு நன்றாகவே! தெரியும். அதனால் ஹரிஹரனை சிக்க வைத்தான்.
 
ஹரிஹரனுக்கு பாதகமாகத்தான் அனைத்தும் அமைந்து விட்டது. முன் இரவே சாப்பாட்டில் அனைவருக்கும் தூக்க மாத்திரையை கலந்திருக்க, வடிவு பார்கவிக்கு மட்டும் தூக்க மாத்திரையை கலந்தேன் என்று ஒப்புக்கொண்டது கூட வீட்டில் இருந்த அனைவரின் சாப்பாட்டிலும் கலந்து விட்டாள் என்றுதான் அனைவரும் நினைத்து விட்டார்கள்.
 
ஊமையன் கோவிலுக்கு வந்தால்? கல்யாணத்தை நிறுத்த ஹரிஹரனை தேடிச்சென்றால் என்ன செய்வது என்று தயாளன் கேட்க, அவனை கண்காணிக்க ஒருவனை நியமித்ததில் அவனுக்கு சாமி கும்பிடுவதில் நம்பிக்கை இல்லையென்றும் முந்தைய நாள்லே! சரக்கு வாங்கி வைத்து குடித்து விட்டு படுத்திருப்பதாகவும் எழுந்துகொள்ள மதியம் தாண்டும் அதற்குள் ஹரிஹரனை ஒருவழி பண்ணிடலாம் என்று கூறி இருந்தான் ஜெய். ஆனால் ஈகையறியாதது ஜெய் ஊமையனை நேற்றிரவே! தூக்கி இருந்தான். இனி அவன் எங்கு தேடியும் கிடைக்க மாட்டான்.
 
 
மருதநாயகத்தை அறிந்திருந்தவரையில் வறட்டு கௌரவம் பார்ப்பவர். உங்க மானம் மரியாதையை காப்பாத்தத்தான் உங்க பேத்தியின் கழுத்தில் தாலி கட்டினேன். இல்லையென்றால் இந்த திருமணம் நடந்திருக்காது என்று ஈகைச்சொன்ன ஒரு வார்த்தை அவர் மீசையை முறுக்கிவிட போதுமானதாக இருந்தது.
 
ஈகை பகையாளி, பார்கவி வேற்றுஜாதி பெண் என்பதெல்லாம் மறந்து. அவர் மானத்தை காத்தவர்கள். ஹரிஹரன்தான் வில்லன்போல அவர் கண்களுக்கு தோன்ற அவனை அறைந்திருந்தார்.
 
ஈகை போலீஸுக்கு போவேன் என்பது கூட காதாம்பரி பேசியதால்தான் என்றுதான் அவர் மனதுக்கு பட்டது. ஈகையின் பேச்சுத்திறமை அவ்வாறு இருந்தது.
 
ஒருவாறு ஹரிஹரனை வீட்டை விட்டு துரத்தியாச்சு. இதனால் காதம்பரி ஈகை மீதுதானே! கோபம்கொள்வாள் கூடாதே! அந்த கோபம் மருதநாயகத்தின் மீதும் அவர் பெற்ற புத்திரர்கள் மீதும்தானே! காட்ட வேண்டும் என்ற ஈகை காதம்பரியின் அறைக்கு வெளியே உள்ள ஜன்னல் புறத்தில் அவள் காதில் விழுமாறு தயாளனோடு பேசலானான். 
 
“எனக்கென்னமோ இது ஹரிஹரன் பண்ணதா தெரியல”
 
“வீடியோ புட்டேஜுல ஹரிஹரன் தானே! தம்பி இருக்காரு”
 
“எனக்கென்னமோ! மருதநாயகம்தான் ஆள்வச்சி இத பண்ணி ஹரிஹரன் மேல பலி போடுறாரோன்னு தோணுது”
 
“என்ன தம்பி சொல்லுறீங்க” தயாளன் புரியாதது போல் கேக்க
 
“பின்ன என்ன? எனக்கும் பார்கவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல ஹரிஹரனுக்கு என்ன லாபம்? மருதநாயகத்துக்குத்தான் லாபம்”
 
“இருக்கும். இருக்கும். ஆனா சொந்தபேரன் மேலையே! எதற்கு பலி போடணும்?”
 
“காதம்பரி சித்திதான் சொத்துபத்தோட இருக்குறவங்க, அவங்கள அடக்கக் கூட இருக்கலாம். இல்லனா இதவச்சி ஏதாச்சும் கேம் ஆடி அவங்க பேர்ல இருக்குற சொத்தை எழுதி வாங்க பார்ப்பார்”
 
“இருக்கும்” ஒத்தூதினான் தயாளன்.
 
“ஆனா நீங்கதானே! போலீசுக்கு போவேன்னு சொன்னிங்க”
 
“காதம்பரி சித்தி பேசின பேச்சுக்கு கோபத்துல சொன்னனது. அதுக்காக போலீஸூக்கெல்லாம் நான் போக மாட்டேன். என்ன இருந்தாலும் இந்த வீட்டு பொண்ண கட்டி இருக்கேன். இந்த குடும்ப மானம் எனக்கும் முக்கியம் இல்லையா? காதம்பரி சித்தி கோபத்துல பேசுவாங்க ஆனா ரொம்…ப நல்லவங்க. அவங்கள போய் இப்படி கோனார் பண்ணனும்னு நினைக்கிறாங்க. சந்தர்ப்பம் கிடைச்சதும் ஹரிஹரன் அடிச்சே வீட்டை விட்டு துரத்திட்டாங்க பாத்தியா? இவங்ககிட்ட நாங்களும் உஷாரா இருக்கணும்” என்றான் ஈகை
 
இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த காதம்பரி கொதித்தெழுந்து ஒரு முடிவோடு ஹரிணியையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
 
காதம்பரி வீட்டை விட்டு செல்வாள் என்று ஈகை எதிர்பார்க்கவில்லை. உள்ளே இருந்துகொண்டே கலக்கம் பண்ணுவாள் என்றுதான் எதிர்பார்த்தான். போனவள் கண்டிப்பாக சும்மா இருக்க மாட்டாள். அவளை ஏத்திவிட்டுக்கிட்டே இருக்கணும் அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கலானான்.
 
நடந்த அனைத்தையும் காயத்திரியிடம் ஒருவாறு சொல்லி முடித்தான் ஈகை.