செவ்வானில் ஒரு முழு நிலவு 15

6302

நிலவு 15
ஹரிஹரன் கோவிலுக்குள் செல்லும்வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. பார்கவியை மண்டபத்தில் கிடத்தி தானும் அமர்ந்துகொண்டு விடியும்வரை என்ன செய்வதென்று புரியாமல் அலைபேசியை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தவன் குளிர் காற்று வீசவே! தும்மல் வரவும் கால்ச்சட்டை பாக்கட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து மூக்கை மூடி தும்மினான். அவ்வளவுதான் அவனுக்கு நியாபகம் இருந்தது. ஏனெனில் அவசரத்தில் மயக்க மருந்து கலந்த கைக்குட்டையையை சுவாசித்து மயங்கி இருந்தான்.
 
கோவிலில் ஹரிஹரனைக் காணாது காதம்பரி அவனது அலைபேசிக்கு பல தடவை அழைத்துப் பார்த்தும் பதிலில்லாது போகவே அவனுக்கு என்ன ஆச்சோ என்று கோவில் முழுக்க தேடிவிட்டு, தோட்டத்து வீட்டுக்கு ஹரிணியை அழைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாது வந்திருக்க, ஹரிஹரன் தோட்டத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள் இந்நேரம் திருமணம் நடந்தேறி இருக்கும் என்று அறிந்தபடியால் அவனை எழுப்ப,
 
தான் எங்கே இருக்கிறோம் என்று முதலில் குழம்பியவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திட்டம் நியாபகம் வர காதம்பரியைக் கண்டு எதுவும் பேச முடியாமல் மௌனமானான்.
 
“என்னடா? நேத்து நைட் குடிச்சியா? கோவிலுக்கும் வராம தூங்கிட்ட” அதற்கும் அவனிடத்தில் பதிலில்லை.
 
“பூஜை நல்லா படியா முடிஞ்சிருச்சு சரிவா வீட்டுக்கு போலாம்” என்று அவனை வீட்டுக்கு அழைத்து வந்தாள் காதம்பரி.
 
கோவில் கதவை ஊமையன் பூட்டிவிட்டு சென்ற பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பார்கவிக்கு என்ன நடந்திருக்கும் என்ற குழப்பத்திலே! வீடு வந்தவனுக்கு காணக்கிடைத்தது மணக்கோலத்தில் இருந்த ஈகையும், பார்கவியும்.
 
அவன் இரத்தம் கொதிக்காதா? பார்கவியை திருமணம் செய்ய பக்காவா திட்டம் போட்டால் யாரோ நடுவில் புகுந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டு இருக்கிறார்கள். கோபத்தில் ஈகையின் சட்டையை பிடித்தால் அவனோ! தன்னாலதா அவனுக்கும், பார்கவிக்கும் திருமணம் நடந்தது என்று கூறிக்கொண்டு இருக்கின்றான்.
 
அவன் எவ்வாறு தோட்ட வீட்டுக்கு வந்தான்? காலையில் கோவிலுக்கு வந்த ஊமையனுக்கு தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று. “நான் அங்கே இல்லை என்றதும் என்னை தேடி இருக்க மாட்டானா? ஆமாம் அவன் என்ன ஆனான்?”  ஊமையன் திருமணமாகாதவன் ஹரிஹரனை கோவிலில் வைத்து பூட்டிவிட்டு நேராக தன்வீட்டுக்கு சென்றவன் சரக்கடிச்சி மட்டையாகி கிடப்பதை ஹரிஹரனிடம் யார் சொல்வது.
 
 
“இங்கபாருப்பா… அடியாட்களோடு துப்பாக்கி வச்சிருக்கியேனு எனக்கு ஒன்னும் உன்ன கண்டா பயம் இல்ல. என்னமோ! என் பையன்தான் எல்லாம் பண்ணதா சொல்லுற? அவன் தோட்டத்து வீட்டுல தூங்கிகிட்டு இருந்தான் நானும் ஹரிணியும் போய்தான் எழுப்பிக் கூட்டிக்கிட்டு வரோம்” காதம்பரி கோபமாக பேச
 
“ஓஹ்..ஓஹ்.. அப்படியா? சித்தி…” அந்த சித்தியில் அழுத்தத்தை கூட்டி சொன்ன ஈகை காதம்பரி முறைக்கவும் “அதான் உங்க வீட்டு பொண்ண கட்டி இருக்கேனே! உறவு முறையெல்லாம் சரியாதான் இருக்கும்” என்று விட்டு ஜெய்யின் கையிலிருந்த லேப்டப்பை காதம்பரியின் கையில் கொடுக்க அவள் புரியாது முழித்தாள்.
 
“மன்னிச்சிக்கோங்க மிஸ்டர் மருதநாயகம் நீங்கதான் என்ன கடத்தி உங்க பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க என்ற கோபத்துல உங்கள தாலி எடுத்து கொடுக்கும் போது தடுத்து நான் சகோதரனான மதிக்கிற இவரை எடுக்க சொன்னேன்” என்று தயாளனை கைகாட்டிய ஈகை ஹரிணியின் புறம் திரும்பி
 
 
“ஹரிணி நீ படிச்சவ தானே! உங்கண்ணன் நேத்து ராத்திரி ஒரு மணிக்கு பின்பக்க தோட்டத்து வழியாக உள்ள வந்ததையும் அவன் ரூமுக்கு போனதையும், பார்கவிய
தூக்கிட்டு போனதையும் கொஞ்சம் உங்கம்மாக்கு புரியும்படி எடுத்து சொல்லு. மாடில இருந்து என்ன ரெண்டு பேர் தூக்கிட்டு வராங்க. அதுல ஒருத்தன் உன் அண்ணனோடு இருக்கற ஊமையான்னு உன் அப்பாவே சொல்லிட்டாரு. மத்தவன் உன் அண்ணன்தான். அதையும் சொல்லு”
 
ஈகை சொல்ல சொல்ல காதம்பரியோடு சீசீடிவி காட்ச்சிகளை பார்த்த ஹரிணி அண்ணனை முறைத்தாள். பார்கவியை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று அண்ணனிடம் பல தடவை புலம்பி இருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவன் இப்படி ஒரு திட்டத்தை போடுவான் என்று தெரியவில்லை. முட்டாள். செய்வதை சொல்லி இருந்தால் தடுத்திருக்கலாம் இவனால் ஈகை பார்கவி கல்யாணம் பண்ணிகிட்டான்.
வெளிப்படையாக திட்டமுடியாமல் மனதுக்குள் அண்ணனை அர்ச்சித்துக்கொண்டிருந்தாள்.
 
தன் மகன் பார்கவியின் மேல் ஆசைப்பட்டானே! அவன் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டான் என்ற சிந்தனைக் கூட இல்லாமல் “நீ தான் இவங்கள கடத்தி கல்யாணம் பண்ணி வச்சியா?” காதம்பரி சந்தோசமாக மகனை ஏறிட்டுக் கேட்க, ஹரிஹரன் என்ன நடந்தது என்று விளக்கமளிக்க முன் மருதநாயகம் ஹரிஹரனின் கன்னத்தில் அறைந்திருந்தார். 
 
 
அவர் போட்டிருந்த திட்டமெல்லாம் தவிடுபொடியான கோபம் அவருக்கு. அந்த இருநூறு ஏக்கர் நிலத்துக்காக அவர் என்னவெல்லாம் செய்தார். யாரோ! ஒருத்தியை, மாற்று ஜாதிப் பெண்ணென்றும் பாராமல் வீட்டுக்கு அழைத்து வந்து பேத்தி என்று ஊரையே! நம்ப வைத்து குடும்பத்தையும் ஏமாற்றி நாடகமாடிக்கொண்டிருந்தார். ஈகை நிலத்தை வாங்கி விட்ட ஒரே காரணத்துக்காக அவனை வீட்டில் தங்கவைத்து இந்த பெண்ணின் மூலமாக நிலத்தை மீளப்பெற திட்டம் போட்டிருந்தால்? அதையே! கெடுத்து விட்டிருக்கிறான் இவர் பேரன்.
 
தன் திட்டத்தில் மண்ணை போட்டு விட்டானே! என்ற கோபத்தில் ஹரிஹரனின் பார்வை பார்கவியை தொடர்ந்ததை மறந்துதான் போனார் மருதநாயகம். ஈகை சந்தேகப்பட்டு தாலி எடுத்துக்கொடுக்க விடவில்லை என்பது கூட சரி என்று பட ஹரிஹரனை அறைந்திருந்தார்.
 
 
“மாமா. என் பையன் எதுக்கு அடிக்கிறீங்க? உங்க பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சானே! அதுக்காகவா? இல்லனா மட்டும் இவள யாரு கட்டிப்பாங்க? நம்ம ஜாதில யாரும் கட்டிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சிதான் என் பையன் இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கான். அதுவும் மாப்பிள சாதாரணமானவரா? கோடிஸ்வரன் இல்லையா?” ஹரிஹரன் செய்தது சரியெனும் விதமாக காதாம்பரி கிண்டலோடு கோபமாக பேச
 
“ஒரு நிமிஷம். இந்த கோவில், ஊர் கட்டுப்பாடு இதுக்காக எல்லாம் கட்டுப்பட்டு மட்டும் நான் உங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கல. நான் மறுத்திருந்தா இந்த பெரிய மனிசன் கட்டிக்காத்த மானம் போய் இருக்கும். இந்த வீட்டிலையே! இருந்துகிட்டு இந்த வீட்டு பொண்ணுக்கு ஒன்னுனா கைகட்டி பார்த்துகிட்டு இருக்க முடியாது. அதுவும் மருதநாயகத்தோடு பேத்திக்கு அவபெயர் நா…. அது அவருக்கு வந்த அவப்பெயர். அது மட்டுமில்ல எனக்கும் பார்கவிய ரொம்ப பிடிச்சிருக்கு. இல்லனா கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்திருக்காது” பார்கவியை ஒரு பார்வை பார்த்து விட்டு கூற அதை கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. மருதநாயகம் அவளுக்கு கொடுத்த டாஸ்க் மனதில் ஓடிக்கொண்டிருக்க, இங்கே நடப்பது என்னவென்று கூட புரியவில்லை. இதில் ஈகை என்ன பேசுகிறான் என்றா கவனத்தில்கொள்வாள்.
 
எங்கிருந்தோ வந்தவன் பார்கவி தன் பேத்தி என்று நினைத்து தாலி கட்டி அவளை மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான் என்று  ஈகை பேசப்பேச அவன் மேல் மருதநாயகத்துக்கு மரியாதையை வந்தது. அவன் நினைத்திருந்தால் “போங்கடா நீங்களும் உங்க ஊர் கட்டுப்பாடும்” என்று அவமரியாதை செய்திருக்கலாம். அவன் ஆள்பலமும், அவர்களின் கையில் இருக்கும் துப்பாக்கியும் உடனே! பேசி இருக்கும். அவர் மானம் காக்க என்று சொன்ன ஒரு சொல் மருதநாயகத்தை ஈர்த்திருந்தது. அதற்காக ஒன்றும் அவர் அவனிடமிருந்து நிலத்தை மீளப்பெறாமல் விட்டுவிடமாட்டார். 
 
“அதுக்காக என்ன கடத்தி என் கல்யாணத்த நடத்தி வைக்க இவன் யாரு? அதுவும் என் குடும்பம் இல்லாம? என்ன கடத்தி கல்யாணம் பண்ணி வச்சதுக்கே இவன நான் போலீஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்” ஈகை எகிற
 
போலீஸ் என்றதும் காதம்பரி அதிச்சியில் அமைதியாக,
 
இப்பொழுதுதான் மானம் காக்க என்று ஒரு வார்த்தை சொன்னான். அதற்குள் போலீசுக்கு போவேன் என்கின்றான். போலீஸ் வீடு வந்தால் அவர் மானம் காத்தில் பறக்காதா? மற்ற ஜாதிக்காரர்கள் கைகொட்டி சிரிப்பார்கள். இந்த காட்ச்சியெல்லாம் கண்முன் வர “ஏன் டா இப்படி பண்ண? இல்ல நீ இனிமேல் இங்க இருக்கக் கூடாது முதல்ல வீட்டை விட்டு வெளிய போ” மருதநாயகம் கத்தியவாறு ஹரிஹரனை அடித்து அடித்து வீட்டை விட்டு வெளியே! அனுப்பி இருந்தார்.
 
அவன் கெஞ்சலோடு ஏதோ சொல்ல வர அதையெல்லாம் காதில் வாங்கவே! இல்லை. ஈகை போலீசுக்கு சென்றால் ஆதாரத்தோடு ஹரிஹரன் ஜெயிலில் களி தின்ன வேண்டி இருக்கும் என்ற எண்ணம் அவருள் தோன்ற அவனை பேச விடாது துரத்துவதில்லையே! குறியாக இருந்தார்.
 
தந்தை என்ன செய்ய விழைகிறார் என்று புரிந்துக்கொண்ட தங்கதுரையும் மகனை தள்ளி விட காதம்பரி கதறலானாள்.
 
“அத்த நீங்களாவது மாமாகிட்ட சொல்லுங்க அத்த” காதம்பரி வேதநாயகியை கெஞ்ச கணவனின் பேச்சை மீறாத அந்த பத்தினி தெய்வம் அமைதியாக நிற்க, மனம் வெறுத்தாள் காதம்பரி. 
 
ஹரிஹரன் சென்று சிறிது நேரத்திலையே! தன் மகன் இல்லாத வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் என்று ஹரிணியையும் அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டாள் காதம்பரி.
 
ஹரிஹரனை வீட்டை விட்டு அனுப்பினால் போதும் என்று இருந்த ஈகைக்கு காதம்பரியும், ஹரிணியும் வெளியேறியது போனஸ் என்று தாயாளனும் ஈகையும் ஹைப்பை கொடுத்துக்கொண்டனர்.
 
மொட்டைமாடியில் ஒரு பெரிய ஹாலும் இரண்டு சிறிய அறைகளுமே! இருக்க, ஒரு அறையில் ஈகையும் தயாளனும் தங்கிக்கொள்ள மறு அறை சீசீடிவி அறையாக மாற்றி இருக்க மெய்பாதுகாவலர்கள் ஹாலிலையே! தங்கி இருந்தனர்.
 
மணமக்களுக்கு இரண்டாம் மாடியில் ஹரிஹரனின் அறையோடு இருந்த அறையை வேதநாயகி ஏற்பாடு செய்ய ஹரிஹரன் இல்லாததால் அந்த அறையை உபயோகித்துக்கொள்ளவா என்று ஈகை கேட்டிருக்க, மொட்டை மாடியில் அனைவருக்கும் இடம் பத்தாதில்லையா ஹரிணியின் ரூமையும் உபயோகித்துக்கொள்ளுமாறு அவர் கூறி இருந்தார்.
 
“எப்படியோ! இரண்டாம் மாடியையும் அக்கிரமிச்சாச்சு” ஹரிஹரனின் அறையை சுற்றிப்பார்த்தவாறு தயாளன் கூற
 
“ஹாஹாஹா எப்போ சீசீடிவி வச்சோமோ! அப்போவே எல்லாம் நம்ம கண்ட்ரோலுக்கு வந்திருச்சு” ஈகை தயாளனை கட்டிக்கொகொண்டான்.
 
“முதல்ல இந்த ஹரிஹரன் சாமானையெல்லாம் தூக்கி வெளிய போட்டு நம்ம சாமானையெல்லாம் கொண்டு வந்துடனும்” தயாளன் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே!
 
“அவன் திரும்பி வர மாட்டான்னு அவ்வளவு நிச்சயமா?” மாதேஷின் குரல் ஒலிக்க திடுக்கிட்டு திரும்பினார் அண்ணனும் தம்பியும்.
 
அங்கே நின்றிருந்த ஜெய்யைக் கண்டு “நீயா நல்லா மிமிக்கிரி பண்ணுற. அதுக்காக இப்படி பயமுறுத்தக் கூடாது” தயாளன் முறைக்க ஜெய் சிரிக்கலானான்.
 
“ஜெய் சார் உங்களுக்கும் ஒரு ரூம் இருக்கு என்ஜோய்” தயாளன் வார
 
“எனக்கு எதுக்கு தனி ரூமு நான் பசங்க கூடவே! தங்கிக்கிறேன். அந்த ரூமை நம்ம சீசீடிவி ரூமா மாத்திடலாம். லோக் பண்ணி வைக்கக் கூட முடியுமில்ல” ஜெய் கூற
 
“உங்க இஷ்டப்படியே! செய்ங்க” என்றான் தயாளன்.
 
கதவு தட்டும் சத்தத்தில் மூவரும் திரும்ப அங்கே! மாதேஷ் நின்றுகொண்டிருந்தான்.
 
“ஜஸ்ட்டு எஸ்கேப் டா…. ” தயாளனின் மைண்ட் வாய்ஸ் கூவ
 
“அந்த சீசீடிவி காட்ச்சிகளை நான் திரும்ப ஒருக்கா பார்க்கலாமா?”
 
ஈகை ஜெய்க்கு தலையசைத்து அனுமதி வழங்கவும் காட்ச்சிகளை ஓடவிட்டான் ஜெய்.
 
ஹரிஹரன் பின்பக்க தோட்டத்து வழியாக வந்ததிலிருந்து பார்கவியை கொண்டு செல்லும்வரை பார்த்தவன் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்லக்கூடிய நேரத்தைக் கணக்கிட்டு மீண்டும் வந்து ஈகையை கடத்தி இருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு அது ஹரிஹரன்தானா? என்று சரி பார்கலானான். படிக்கட்டில் இருந்த மணிக்கூண்டு தெளிவாக நேரத்தை எடுத்துக்காட்ட இருவரையும் கடத்தினது ஹரிஹரனாகவே! இருந்தாலும் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் அவனுக்கு என்ன லாபம் என்று மாதேஷுக்கு புரியவில்லை. ஹரிஹரனை சந்தித்து பேச வேண்டும் என்று எண்ணியவன் ஈகையின் புறம் திரும்பி
 
“நீங்க எதுக்கு பார்கவி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”
 
“அதான் சொன்னேனே! எனக்கு பார்கவிய  பிடிச்சிருக்கு” ஈகை பட்டென்று பதில் சொன்னாலும் சந்தேகமாக பார்த்தவனின் கண்களில் “பார்த்த உடன் காதல் என்று சொல்ல நீ விடலை பையனும் இல்லை. அந்த காதலால் தான் கல்யாணம் செய்து கொண்டேன் என்று சொல்வது நம்பும்படியாகவும் இல்லை” என்றிருக்க,
 
“பார்கவி இதற்கு முன் எங்க இருந்தா? எந்த காலேஜில் படிச்சா ஏதாவது உனக்கு தெரியுமா? நான் அவளை பாத்திருக்கேன். அவளுக்கு என்ன தெரியாது. அவளை இங்க பார்ப்பேன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கள. முறையா பொண்ணு கேட்கலாம்னு யோசிச்சேன். ரெண்டு முறைப்பையன் இருக்கும் போது கொடுப்பார்களா? மாட்டாங்களா? என்ற குழப்பம் வேறு. உங்க தாத்தா வேற ஜாதி பார்ப்பவர் சோ தானா அமைஞ்ச சந்தர்ப்பத்தை வீணாக்கிக்க தோணல” ஈகை நீண்டதொரு பதிலை சொல்ல
 
ஹரிணியை சிஸ்டர் என்று ஈகை ஒதுக்கி வைத்ததும், பார்கவியின் மீது பார்வையை செலுத்துவதும் இவன் சொல்லும் காரணத்தோடு பொருந்திப்போவது போல்தான் இருக்கிறது என்ற எண்ணத்தோடு ஒரு தலையசைப்பில் வெளியேறி இருந்தான் மாதேஷ்.
 
“டேய் புளுகு மூட்ட, வாயத்தொறந்தா பொய்யா பேசுற. எப்படிடா கண்ண பார்த்துகிட்டு இப்படி நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு உன்னால பேச முடியுது” தயாளன் ஈகையின் தோளில் அடிக்க
 
“நான் பார்கவி ஏற்கனவே! பார்த்திருக்கேன்னு சொன்னது பொய்யில்லை” ஈகை புன்னகைக்க, அவன் புன்னகை ஆயிரம் கதை சொன்னது. 
 
“இது எப்போடா நடந்தது? அவ சென்னை வந்தது போலவும் தெரியல, கொல்கத்தா வந்தது போலவும் தெரியலையே!” தயாளன் ஈகையை சந்தேகமாக பார்க்க அதற்கும் புன்னகையை பதிலாக கொடுத்தவன் அவ்வறையை விட்டு வெளியேறி இருந்தான்.
 
பார்கவி தனதறையில் அமர்ந்திருந்தாள். தந்தை என்று இறந்தாரோ! அன்றிலிருந்து அவள் வாழ்க்கை அவள் கையிலில்லை. அனைத்தும் அவள் கையை மீறித்தான் நடந்துக்கொண்டிருக்கிறது.
 
அன்னையை மருத்துவமனையில் சேர்த்து விட்டு இங்கு வந்தபின் வாரத்துக்கு ஒரு நாள் மருதநாயகம் அவளை அழைத்து அருகில் இருக்கும் தாதியோடு அலைபேசியில் உரையாட வைத்து விடுவார். விசாலாட்சியின் உடல்நலனை பற்றி அவ்வாறுதான் இன்றுவரை அவள் அறிந்துகொள்கிறாள். ஈகை வந்து இந்த ஒரு மாதத்தில் ஒருதடவைதான் மருதநாயகம் அலைபேசி அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
 
அன்னையின் நிலையை பற்றி தெரிந்துக்கொள்ள அவரை அணுகினாலும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விடுகிறார். என்ன செய்வதென்று புரியவில்லை. அவர் சொல்வதுபோல் அந்த நிலப்பத்திரத்தை எடுத்துக் கொடுத்தால்தான் அன்னையை பற்றி கூறுவார் போலும்.
 
கதவை திறந்துகொண்டு மருதநாயகம் உள்ளே வர பார்கவியின் சிந்தனை தடைப்பட்டது. எழுந்து நின்றுகொண்டவள் அமைதியாக அவரை பார்க்க,
 
“கல்யாணமாகிரிச்சு, பதினஞ்சு பவுன்ல தாலிவேற கழுத்துல ஏறிறுச்சு. புருஷனுக்கு துரோகம் பண்ணக்கூடாதுன்னு சென்டிமென்ட்டா நினச்சா, உன் அம்மாவை மறந்திட வேண்டியதுதான்”
 
பார்கவி அவரை அதிர்ச்சியாக பார்க்க,  “என்ன பார்க்குற? கல்யாணத்த தடுத்து நிறுத்த வேண்டியதுதானேனு பாக்குறியா? எனக்கு இந்த ஊர்ல கௌரவம், மானம், மரியாதை ரொம்பவே! இருக்கு. கோவில் விசயத்துல நான் எதுவும் பண்ண முடியாது. ஊர் கட்டுப்பாட்டை மதிச்சிதான் ஆகணும். அந்த வெள்ளையன் கல்யாணத்த நிறுத்துவான்னு நெனச்சேன். அவனுக்கும் உன் மேல ஆச இருக்கு போல. நீ என்ன பண்ணுற அத பயன்படுத்தி என் நிலப்பத்திரத்தை என்கிட்ட கொண்டு வந்து சேர்கிற. இல்லனா உன் அம்மா உசுரு…” என்றவர் வாக்கியத்தை முடிக்காது அறையை விட்டு வெளியேற கதிரையில் தொப்பென்று அமர்ந்து விட்டாள் பார்கவி.
 
மகனை வீட்டை விட்டு அடித்து துரத்தியாச்சு, கட்டின மனைவி மகளோடு போயாச்சு என்ற கவலை சிறிதும் இல்லாது தங்கதுரை தந்தையிடம் “என்னப்பா இப்படி நீங்க போடுற எல்லா திட்டமும் சொதப்புது. இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களாலே! இப்போ என்ன பண்ணுறது”
 
“நான் கூட அவன் கல்யாணத்த நிறுத்துவான்னு நினச்சேன்” விக்னேஸ்வரன் சொல்ல
 
சிறிது நேரம் யோசித்த மருதநாயகம் “கல்யாணம் நடந்தா என்ன டா. கிளி நம்ம பிடிலதானே! இருக்கு. அவ அம்மா நம்ம கிட்ட இருக்கிற வரைக்கும் அவன் கிட்ட எந்த உண்மையையும் சொல்லவும் மாட்டா. நாம சொல்லுறபடிதான் கேப்பா”  நக்கலாக சிரித்தார் மருதநாயகம்.
 
“அப்போ பத்திரத்தை கொண்டுவந்து கொடுத்த பின்னாடி அவளை கொல்ல போறதில்லையா?” விக்னேஸ்வரன் யோசனையாக கேக்க
 
“ஏற்கனவே! ஊருக்குள்ள நம்ம ஜாதி ஆளுங்க வேற ஜாதி ஆளுங்கள கல்யாணம் பண்ணா நான் கொலை பண்ணிடுறதா புரளி இருக்கு”
 
“அது உண்மைதானே!” தங்கதுரை தந்தையை ஏறிட, அந்த பார்வையே! சொன்னது நாமதானே! முன்னேயே நின்று எல்லாம் செய்கின்றோம் என்று.
 
“இதுங்கள உசுரோட விட்டுட்டோம்னு வை. மருதநாயகம் பேத்தியே! நல்லாத்தான் வாழுறானு அந்த புரளியை ஒன்னும் இல்லாம பண்ணிடலாம். இவ என் பேத்தி இல்ல என்கிறது கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாது”
 
“புரியல” அண்ணன் தம்பி இருவரும் ஒரே நேரத்தில் கேட்க
 
“நிலப்பத்திரத்தை கொண்டுவந்து கொடுத்தாலும் அத அவ பெயர்ல மாத்தி அவ இவன ஏமாத்திட்ட மாதிரிதான் நாடகமாடனும்”
 
“பார்கவி பத்திரத்தோடு காணமாம போய்ட்டானா?” விக்னேஸ்வரன் சந்தேகம் கேக்க
 
“அவ அம்மாதான் நம்ம கிட்ட இருக்காளே! எங்க போவா?”
 
“ஆமால்ல”
 
“புருஷன் பொஞ்சாதிக்குள்ள சண்டை வரும். அவ வாயாலையே! என் தாத்தா சொத்து அது அவர் பேர்லதான் இருக்கணும்னு சொல்ல வைக்கணும். அவ அவன் கூட வாழுவாளோ! அவன் இவளை கை விட்டுடுவானோ! என் பேத்தியா கடைசி வரைக்கும் இந்த வீட்டுல ஒரு மூலைல கிடக்கட்டும். அவ அம்மா என் கண்காணிப்புல இருக்கணும்”
 
“எந்த மாதிரி சூழ்நிலையிலும் யோசிச்சு திட்டம் போடுறதுல நீங்க கில்லாடிப்பா…” தங்கதுரை சொல்ல விக்னேஸ்வரனும் ஆமோதித்தான்
 
அதன்பின்தான் பார்கவியின் அறைக்கு வந்து அவளை மிரட்டி விட்டு சென்றார் மருதநாயகம்.
 
பார்கவி எவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே! தெரியாது. நடக்க வேண்டியது அந்தந்த நேரத்தில் நடந்தேற வேண்டும் என்று வேதநாயகி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 
 
பார்கவி, மற்றும் ஈகையின் அறை முதலிரவுக்காக அலங்காரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்க பார்கவியின் அறையினுள் நுழைந்த வேதநாயகி “என்னமா இருட்டுலையே! உக்காந்திருக்க” என்று மின்குமிழை எரிய விட்டு அவளின் சிவந்த முகத்தை பார்த்து துணுக்குற்றவர்
 
“என்னாச்சு பார்கவி” என்று அவளை அணைத்துக்கொள்ள என்றும்போல் ஒன்றுமில்லை என்னு அவருக்கு பதில் சொன்னவள் அழுது முடித்திருந்தபடியால் மௌனமாகவே! இருந்தாள்.
 
“அம்மா, அப்பா நியாபகம் வந்திருச்சா?” அவராகவே! ஒருகாரணம் கண்டுபிடித்துக் கேக்க அதிர்ச்சியாக வேதநாயகியை பார்த்தாள் பார்கவி.
 
“என்னடா.. திடிரென்று கல்யாணம் ஆகிருச்சு. அம்மா, அப்பா நியாபகம் வராதா? ஈகா ரொம்ப நல்லவன் டா.. கண்டிப்பா தப்பானவனா இருக்க மாட்டான். உன்ன நல்லா பார்த்துப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ வீணா கலங்காத, சரியா. அதுவும் இங்கதானே! இருக்க போறீங்க. புரிஞ்சுதா என்ன. போ… போய் குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிடுவா” அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க, தலையாட்டி பொம்மையாக அவளும் அனைத்தையும் செய்யலானாள்.
 
இங்கே ஈகைசெல்வன் முதலிரவு அறையில் பார்கவிக்காக காத்துக்கொண்டிருக்க அவனை அலைபேசியில் அழைத்த காயத்திரி சொல்லாமல் கொள்ளாமல் பார்கவியை திருமணம் செய்ததாகவும், அவளை திருமணத்துக்கு அழைக்கவில்லையென்றும் ஈகையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள்.
 
அவளை சமாதானப்படுத்தி நடந்ததை விவரித்துக்கொண்டிருந்தான் ஈகை.