செவ்வானில் ஒரு முழு நிலவு 14

6151

நிலவு 14
கோவிலினுள் பூஜைக்காக மருதநாயகத்தின் குடும்பத்தோடு ஊர் மக்கள் மொத்தமாக கூடி உள்ளேவர அவர்களின் கண்ணில் விழுந்தது கோவில் மண்டபத்தில் கண்மூடி அமர்ந்திருந்த ஈகைச்செல்வனும் அவன் மடியில் படுத்திருந்த பார்கவியும்தான்.
 
“கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் இப்படியொரு அசம்பாவிதம் நடந்து விட்டதே! ஈஸ்வரா…” அர்ச்சகர் ஈசனை அழைக்க,
 
ஈகைச்செல்வனை மருதநாயகம் தான் வீட்டில் தங்க வைத்தார் என்பது முதல் அலசி மருதநாயகத்தின் பேத்தியே! இவ்வாறான ஒரு காரியத்தை செய்து விட்டதாக ஊர் மக்கள் புறணி பேச ஆரம்பித்துவிட்டிருந்தனர். 
 
“ஏன் பா… இவங்க ரெண்டு பேரும் எதுக்கு இங்க வந்து தூங்கிகிட்டு இருக்காங்க?” மாதேஷின் முதுகை பிரண்டிய உமையாள் அப்பாவியாக கேக்க
 
“காத்தோட்டமா இருக்குன்னு இங்க வந்து தூங்கி இருப்பங்கமா..” என்று அன்னைக்கு பதில் சொன்ன மாதேஷ் அமைதியாக நின்றிருந்தான்.
 
கோவில் மண்டபத்தில் தூணில் சாய்ந்து ஈகை அசந்து தூங்கிக் கொண்டிருக்க பார்கவி அவன் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருப்பது எதோ தப்பாக படவே! “கொஞ்சம் எல்லாரும் அமைதியாக இருங்க” வேதநாயகி அதட்டி விட்டு ஈகையின் அருகில் வந்து அவனை எழுப்பலானார். அவன் எழுந்த பாடில்லை.
 
அவன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப, கண் விழித்தவன் “என்ன பாட்டி மாடி ஏறி என் ரூமுக்கே வந்திருக்குறீங்க சொன்னா நானே! வருவேனே!” என்று எழுந்துகொள்ள போக மொத்த ஊர் மக்களையும் கண்டு திகைத்து தான் எங்கே இருக்கிறோம் என்று கண்ணை கசக்கி பார்த்தவன் பார்கவி தன் மடியில் ஏன் படுத்து கிடக்கிறாள்? என்று வேதநாயகியையே! கேட்க அவரோடு சேர்ந்து அங்கே நின்ற அனைவரும் அவனை குழப்பமாக பார்த்தனர்.
 
பார்கவியை எழுப்பியதும் அவளும் அதே! போல் பேச குழம்பித்தான் போனார் வேதநாயகி.
 
“என்ன நடந்தது? நான் எவ்வாறு இங்கே வந்தேன்?” என்று ஈகை கேட்ட கேள்வியிலும் பார்கவியின் திகைத்த பார்வையிலும் அவர்கள் எந்த தப்பும் செய்யவில்லை. கோவில் கதவும் பூட்டி இருக்க, அவர்களை யாரோ கடத்திக் கொண்டுவந்து இங்கே வைத்திருக்கிறார்கள் என்று ஊர்மக்கள் திரும்ப பேச ஆரம்பித்திருந்தனர். ஆதற்கு எதுவாக ஈகை அவர்களுக்கு செய்த சிறுசிறு உதவியும் முன்னிருந்தது.
 
ஈகையின் புகழ் பாடுவதை பொறுக்க முடியாமல் “பூஜைக்கு நேரமாகிறது. இவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு போய் ரெடியாகி வர சொல்லு” மருதநாயகம் முறைத்தவாறே சொல்ல
 
“நானும் கூட போறேன். அடுத்து நடக்க வேண்டியதை சொல்லி புரிய வைக்க வேண்டாமா?” என்ற வேதநாயகி அவர்களோடு வீடு நோக்கி புறப்பட்டார்.
 
“என்ன மம்மி நடக்குது இங்க? ஈகை எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் அவனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆக்கலாம்னு பாத்தா இவ அவனை வளைச்சி போட்டுக்கிட்டாளே! இவதான் கோவில் விசயத்த சொல்லி இங்க கூட்டிட்டு வந்திருப்பான்னு தோணுது” ஹரிணி ஈகை தன் கையை விட்டு சென்ற ஆதங்கத்தில் பேச

 
“எனக்கென்னமோ அப்படி தோணல. இவளுக்கு கண்டிப்பா கோவில் விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்ல. இவனுக்கும் தெரிந்திருக்காது. ரெண்டு பேரும் தூக்கத்துல இருந்து முழிக்கிற மாதிரிதான் முழிச்சாங்க. உங்கப்பா வேற நம்ம பொண்ண ஈகை கிட்ட இருந்து விலகியே! நிக்க சொல்லுன்னு சொன்னாரு. நடக்குற எல்லாத்தையும் பார்த்தா. உன் தாத்தா தான் ரெண்டு பேருக்கும் மயக்க மருந்தை கொடுத்து இங்க கொண்டு வந்து போட்டிருக்கணும். கோவில் சாவி வேற அவர் கைல தானே! இருக்கு அவர்தான் பண்ணி இருக்கணும்” நடந்ததை கண்ணால் பார்த்தது போல் காதம்பரி பேசினாள்.
 
“ஜாதி, ஜாதின்னு துள்ளுவாரு. இவ மட்டும் இவன கல்யாணம் பண்ணலாமா?” ஹரிணி எகிற
 
“நாம பொம்பளைங்கனு எங்ககிட்ட ஒண்ணுமே! சொல்லுறதில்ல. இவளுக்கு கல்யாணம் நடந்து இங்க இருந்து போனா போதும். ஆனா சொத்துபத்தோட மாப்புள கிடைச்சதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு” காதம்பரி வெறுமையான குரலில் கூற இந்த கல்யாணத்தால் வீட்டை விட்டு போகப்போவது பார்கவி அல்ல காதாம்பரி என்று அப்பொழுது அவளுக்கு புரியவில்லை.
 
அன்னையை முறைத்தவள் “நீ என்ன பண்ணுறியோ! ஏது பண்ணுறியோ! எனக்கு தெரியாது. இந்த கல்யாணம் நடக்கக் கூடாது”
 
“அடியேய் அடங்குடி. அவன் தோல் கலர பாத்து மயங்காத. உங்கண்ணன் வந்து கல்யாணத்த நிறுத்துவானானோனு என் மனசு கெடந்து தவிக்குது. ஆமா ஹரி எங்க காணவே இல்ல” ஹரிஹரனை தேடலானாள் காதம்பரி. 
 
வேதநாயகியோடும் பார்கவியோடும் வரும் ஈகையை கண்டு “எங்க போய் இருந்தீங்க தம்பி? உங்கள காணோம்னு வீடு முழுக்க தேடிகிட்டு இருக்கோம். கோவிலுக்கு போக நேரமாகுதில்ல” தயாளன் கேக்க
 
“அங்க இருந்துதான் வரோம்” ஈகை சொல்ல
 
“இவன் பாதுகாப்புக்கு இத்தனை பேர் இருக்கீங்க ஆனா அவன் கோவிலுக்கு எப்படி போனான்னு உங்க யாருக்கும் தெரியல” தயாளனை திட்டியவாறே “பார்கவி நீ போய் நான் கொடுத்த புடவையையும் நகைகளையும் போட்டுட்டு வா” என்று அவளை அனுப்பியவர் “ஈகை கொஞ்சம் நில்லு பா உன் கூட பேசணும்” என்று ஊர் எல்லையிலுள்ள கோவிலை பத்தி கூறியவர் “நீயும் பார்கவியும் அங்க எப்படி போனீங்க?” என்று விசாரிக்க,
 
“தெரியலையே! பாட்டி. தயண்ணா சீசீடிவியை செக் பண்ணு”
 
“நீங்க ரெண்டு பேரும் முழிச்ச முழியிலையே! தெரிஞ்சு போச்சு. உங்க ரெண்டு பேருக்கும் என்ன நடந்ததுன்னு தெரியாதுன்னு. இப்போ அது இல்ல பிரச்சினை. உனக்கும் பார்கவிக்கும் ஊர் ஒன்னு கூடி கல்யாணம் செஞ்சு வைப்பாங்க”
 
“என்ன சொல்லுறீங்க?” அதிர்ச்சியான முகபாவத்தை கொடுத்த ஈகை யோசனைக்குள்ளானான்.
 
இதற்கு முன் நடந்த சம்பவங்களை கூறியவர் “ஊர் வழக்கத்தை மாத்த முடியாது பா. என் பேத்தியை கல்யாணம் பண்ணுறதுல உனக்கு…” ஊர் கட்டுப்பாட்டை மீறவும் முடியாது. அதே சமயம் ஈகை பார்கவியை திருமணம் செய்ய மறுத்து விடுவானோ! என்று அவர் மனம் பதைபதைக்கலானது. 
 
“என்ன பாட்டி…. உங்க பேத்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு சம்மதமானு முதல்ல கேளுங்க” தன் சம்மதத்தை தெரிவித்த ஈகையை மனம் குளிர வேதநாயகி பார்த்தாரென்றால், “அவசர படுரியோ!” என்ற பார்வையை வீசினான் தயாளன்.
 
“அவ என் பேத்தி பா… நான் சொன்னா பார்கவி மறுக்க மாட்டா” வேதநாயகி சிரிக்க
 
“நான் ரெடியாகிட்டு வரேன். நீங்க உங்க பேத்திய கேளுங்க” என்று தயாளனோடு ஈகை மாடியேறி சென்று விட வேதநாயகி பார்கவியின் அறையினுள் நுழைந்தார்.
 
 
பார்கவி புடவையை அணிந்து தலையை பின்னிக்கொண்டிருந்தாள். அவள் எண்ணமெல்லாம் நேற்றிரவு நடந்த நிகழ்வில் சென்று நின்றது. நேற்று அவள் தந்தையின் பிறந்தநாள். அன்று வீட்டில்
விசேஷமாக சமைக்க சொல்லி அன்னையை வற்புறுத்தி, கோவிலுக்கு சென்று பெற்றோருக்காக வேண்டிக்கொள்வாள். அவர் இந்த உலகத்தில் இல்லை என்று நினைக்கும் பொழுதே! தொண்டையடைக்க ஒருவாய் சோறு கூட இறங்கவில்லை.
 
வேலைசெய்யும் பெண்மணி வடிவு வந்து இரவு உணவை வைத்து விட்டு போக “பிறகு சாப்பிடுகிறேன்” என்று கூறி இருந்தாலும் சாப்பிடும் எண்ணம் இல்லமலையே! கட்டிலில் புரண்டவளுக்கு பெற்றவர்களின் சிந்தனை மேலோங்க தூக்கம் தூர ஓடி இருந்தது.
 
மனதின் ஓட்டத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டிருக்கவில்லை. தன்னை யாரோ உற்று பார்த்திருப்பது போல் எண்ணம் தோன்ற கண்களை திறந்தவளுக்கு யாரோ தனதறையில் இருப்பதைக் கண்டு அச்சத்தில் மேலண்ணம் ஒட்டிக்கொள்ள கத்த கூட வாய்வரவில்லை. அவள் யோசிப்பதற்குள் ஏதோ துணியை கொண்டு தன் வாயையும் மூக்கையும் சேர்த்து பொத்த அதன்பின் மயங்கியவள் கோவிலில்தான் கண்விழித்தாள்.
 
வேதநாயகி என்ன நடந்தது என்று கேட்ட பொழுது சொல்லப்போனவளை கையை அழுத்தி சொல்லாது தடுத்தது ஈகைத்தான். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்ற குழப்பத்திலையே! வீடு வந்த பார்கவி தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நிற்க,
 
“என்னம்மா தயாராகிட்டியா?” என்றவாறே உள்ளே வந்தார் வேதநாயகி
 
“ஆச்சு பாட்டி”
 
“என்ன ஆச்சு? இன்னும் நகைகூட போடல” என்று கையேடு கொண்டு வந்திருந்த இன்னும் சில நகைகளை கொடுத்து அவளை அவரே! அலங்காரம் செய்யலானார். வீட்டில்
வேலை செய்யும் பெண் கதவைத்தட்டி கொடுத்து விட்டுப்போன மல்லிகை சரத்தை கண்டு
 
“எதுக்கு பாட்டி இவ்வளவு?” என்று பார்கவி கண்களை அகல விரிக்க,
 
“கல்யாண பொண்ணு தலை நிறைய பூ வைக்க வேணாமா?” என்று கூற அதிர்ந்தாள் பார்கவி.
 
அவளின் அதிர்ச்சியான முகத்தை கண்ணாடியினூடாக பார்த்தவர் ஈகைக்கு சொன்ன அதே! ஊர்கோவிலின் கதையை சொல்ல
 
அப்போ தன்னை கடத்தினது ஈகையா? என்று ஒரு நொடி எண்ணியவள். “இல்லை. அந்த உருவம் ஈகை இல்லை” என்று மனம் கூறவே!
 
“அவர்… அவர் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரா?” திக்கித்திணறி ஒருவாறு கேட்டு முடிக்க
 
“நல்ல பிள்ளைங்க. அவன் என்னடான்னா உன் சம்மதத்தை கேக்க சொல்லுறான். நீ என்னடான்னா அவன் சம்மதத்தை கேக்க சொல்லுற” வேதநாயகி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே! மருதநாயகம் அழைத்து பூஜை ஆரம்பித்து விட்டதாக கூறி சீக்கிரம் வருமாறு சத்தம் போட
 
“வரேன், வரேன்” என்று பேசியவாறு வேதநாயகி அறையை விட்டு வெளியேற, கண்ணாடியில் தன்னையே! பாத்திருந்த பார்கவியின் மனதுக்குள் சொல்ல முடியாத அச்சம் பரவலானது.
 
ஈகைச்செல்வனை காதலித்து ஏமாற்றி நிலப்பத்திரத்தை அவனிடமிருந்து பெறுமாறு மருதநாயகம் கூறி இருக்க, “அவனையே! திருமணம் செய்ய வேண்டுமா? இல்லை. அவனிடம் பேசி இந்த திருமணத்தை மறுக்குமாறு கூற வேண்டும்” மனதோடு போராடியவள் இறுதி முடிவுக்கு வர
 
“அப்போ உனக்கு அவனை திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவனை ஏமாற்றி விட்டு அவனோடு வாழ முடியாமல் போய் விடும் என்றுதான் உன் அச்சமா?” மனம் கேள்வி எழுப்ப அவளிடம் பதிலில்லை.
 
அறையை விட்டு வெளியே வந்தவள் ஈகையை தேடி மாடிக்கு செல்லலாம் என்று படிகளில் ஏறப்போக தயாளனோடு பேசி சிரித்தவாறு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் ஈகைச்செல்வன்.
 
பட்டு வேட்டி சட்டையில் அவன் நிறமும் துணியின் நிறமும் ஒரே மாதிரி ஜொலிக்க மெய்மறந்து அவனை ரசிக்கலானாள்.
 
தன்னையே! பார்த்திருக்கும் தேவதை பெண் யாரோ! என்று ஒரு கணம் திகைத்தவன் பார்கவியின் அலங்காரத்தில் “வாவ்” என்று கூற
 
“நீ நடத்து” என்று தயாளன் அவனின் தோளை தட்டி விட்டு செல்ல, பார்கவியும் தன்னை மீட்டுக்கொண்டிருந்தாள்.  
 
“இப்படி இவனை கண்டாலே! ஆவென்று பாத்துண்டு நிக்க வேண்டியது” தன்னையே! திட்டிக்கொண்டவள் அவனிடம் திருமணத்தை நிறுத்துமாறு எப்படி கூறுவதென்று யோசிக்க,
 
“நேரமாச்சுப்பா வாங்க போலாம்” என்று வேதநாயகி வரவே அவளால் ஈகையிடம் பேச முடியாமல் போனது.
 
அனைவரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல அங்கே பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜையில் கலந்து கொண்டவர்கள் இறுதியில் தெய்வங்களின் திருமணத்தையும் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர்.
 
அதன்பின் ஊர் மக்கள் கூடி ஈகைச்செல்வன் மற்றும் பார்கவியின் திருமணத்தை நடாத்திவைக்க ஆயத்தமானார்கள்.
 
கோவில் மணடபத்தில்தான் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மணமகனாக ஈகை அமர்ந்து மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, பார்கவி அழைத்து வரப்பட்டு அவன் அருகில் அமர்த்தப்பட அவளை திரும்பிப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான் ஈகை. அவன் என்ன நினைக்கிறான். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவன் முகத்தை பார்த்து கணிக்க முடியவில்லை. 
 
இருள் சூழ்ந்த மேகம் போல் மனதில் கவ்வியிருந்த அச்சத்தால் பார்கவியின் உடல் நடுங்கிக் கொண்டிருக்க, அவன் புன்னகைக்கு பதில் புன்னகைத்தான் சிந்த முடியவில்லை. அங்கிருந்து எழும்பி எங்கையாவது ஓடி விட முடியுமானால் நல்லது என்று அவள் மனம் ஓலமிட அதை செய்ய முடியாமல் கால்கள் வேரூண்டிப் போய் அங்கேயே! அமர்ந்திருந்தாள்.
 
அவள் மனம் முழுக்க, சொத்து பத்திரத்தை எடுத்துக்கொடுக்கவில்லையானால் அன்னையின் நிலை என்ன ஆவது? கட்டிய கணவனுக்கு துரோகம் இளைக்க முடியுமா? எடுத்துக் கொடுத்ததை ஈகை அறிந்த பின் தன் நிலை என்ன? எல்லாம் மாறிமாறி மனதில் அலைக்கழிக்க அங்கே என்ன நடக்கிறது என்று கூட அவள் கவனத்தில் இல்லை.
 
வேதநாயகி தட்டில் வைத்திருந்த தாலியை கவனித்த விக்னேஸ்வரன் தந்தையின் காதில் முணுமுக்க “என்ன நாயகி குடும்பத்த தாலிய கொண்டு வந்திருக்க” என்று பல்லைக் கடிக்க
 
“என்ன பேசுறீங்க? என் பேத்திக்கு எங்க குடும்ப தாலிய கட்டாம வேறு யார் குடும்பத் தாலிய கட்ட சொல்லுறீங்க?” கணவனை முறைக்கலானார் வேதநாயகி.
 
“இல்ல நாயகி தாலி மாப்புள வீட்டுலதான்! வாங்கணும்” என்று இழுக்க
 
“இந்த நேரத்துல எந்த கடை திறந்திருக்கு தாலி வாங்க? இது எங்க அண்ணி கழுத்துல இருந்த தாலிங்க. அண்ணன் பேரன் உயிரோட இருந்தா அவனுக்கு என் பேத்தியை கட்டி கொடுத்திருப்பேன். அந்த கொடுப்பன எனக்கில்லாம போச்சு. அதான் அந்த தாலி என் பேத்தி கழுத்துல ஏறணும்னு எடுத்துட்டு வந்தேன்” என்றார் வெள்ளந்தியாக
 
“பதினஞ்சு பவுன் தாலி டி” எவளோ ஒருத்திக்கு குடும்ப நகை போகுதே! என்ற ஆதங்கம் அவர் குரலில்
 
“அதுக்கு என்ன இப்போ” என்று வேதநாயகி முறைக்க
 
“இல்ல. இப்போ இருக்குற பசங்க சிம்பிள் என்று சின்னதா தான் போடுறாங்க” வாயில் வந்ததை கூற
 
“தாலி தானேங்க போட்டுக்குவா. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. பேசி பேசி தாலி கட்டுறத பார்க்க விடாம பண்ணிடுவீங்க போல” புலம்பியவாறே பார்கவியின் அருகில் சென்று நின்று கொண்டார் வேதநாயகி.
 
பார்கவிக்கு தான் நெருப்பின் மீதே! அமர்ந்திருப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்க, அந்த காலை பொழுதிலும் வேர்த்து வழியலானாள். பார்த்திருக்கும் அனைவருக்கும் ஓமக்குண்டானதின் புகையினால் வந்த வியர்வை என்று எண்ணத்தோன்றினாலும் அவளின் இதயத்தின் ஓசை அவளை மீறி ஈகைக்கு கேட்டு விடுமோ என்று அஞ்சியே! அவளை மேலும் ஆட்டம் காண வைத்தது.
 
தயாளன் காயத்திரிக்கு வீடியோ கால் அழைப்பு விடுத்து மறுமுனையில் உள்ளவர்களுக்கு இங்கு நடப்பதை மாத்திரம் பார்க்கும்படி வைத்தவன் ஜெய்யிடம் அலைபேசியை கொடுத்து விட்டு ஈகையின் அருகில் சென்று நின்றுகொள்ள அவன் யாருக்கு அழைப்பு விடுத்திருப்பான் என்று மண்டையை குடையலானார் மருதநாயகம். சிறிது நேரத்தில் அது தமிழ்செல்வனுக்கு சென்ற அழைப்பாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டார்.
 
அந்த ஊரில் எல்லா கல்யாணத்தையும் நடாத்தி வைப்பவர் மருதநாயகம். அவர்தான் தாலியை எடுத்துக் கொடுப்பார். அவர் முன்னாள் வர அவரை தடுத்து நிறுத்திய ஈகை தயாளனுக்கு கண்ணைக் காட்ட தயாளன் தாலியை எடுத்துக்கொடுக்க, கெட்டிமேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பார்கவியின் கழுத்தில் அந்த கனமான பொன்தாலியை பூட்டி இருந்தான் ஈகை.
 
ஈகை ஊர் மக்களின் முன்னால் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உள்ளம் கொதித்த மருதநாயகம் அங்கே வைத்து ஒன்றும் பேச முடியாமல் மௌனம் காக்க, தங்கதுரையும், விக்னேஸ்வரனும் கோபம் கணக்க நின்றிருந்தனர்.
 
ஈகை தாலி கட்டி முடித்த அடித்து நொடி மருதநாயகம் இரு மகன்களோடு அம்பாசிடரில் ஏறி புறப்பட்டு செல்ல,
 
“விவஸ்த கெட்ட மனிசன். இப்படியா போவாங்க. மேளதாளத்தோடு வீட்டு மாப்பிளையை அழைச்சிட்டு போக வேணாம்” கணவனை வசை பாடிய வேதநாயகி மாதேஷிடம் கூறி ஏற்பாடு செய்திருந்தார்.
 
வீடுவந்து மருதநாயகம் குறுக்கும் நெடுக்குமாக நடக்க “அப்பா பொறுத்தது போதும் இப்போவே ரெண்டு பேரையும் வீட்டை விட்டு அனுப்பிடுங்க” விக்னேஸ்வரன் எகிற
 
“அனுப்பிட்டு கைய நக்க சொல்லுறியா? இவ்வளவு நாள் காத்திருந்தது நிலத்துக்காக” கையை தொடையில் குத்தி கோபத்தை கட்டுப்படுத்தலானார்.
 
ஊரே பார்க்க மேளதாளத்தோடு ஈகையும், பார்கவியும் நடந்தே! வீடு வந்து சேர்ந்திருந்தனர். அவர்களை ஆலம் சுற்றி உள்ளே அழைத்து வந்து அமர வைக்க கழுத்திலிருந்த மாலையை கழற்றி எறிந்திருந்தான் ஈகைச்செல்வன்.
 
வேதநாயகி, பார்கவி முதற்கொண்டு அனைவரும் அதிர்ச்சியடைய “சொல்லுங்க மிஸ்டர் மருதநாயகம் ஏன் இப்படி பண்ணீங்க” தெனாவட்டாக சோபாவில் அமர்ந்து ஈகை கேட்க புரியாது முழித்தார் மருதநாயகம்
 
 
ஊரே மதிக்கும் தன்னை தாலியை எடுத்துக் கொடுக்க விடாமல் அவனிடம் கைகட்டி வேலை செய்யும் பி.ஏவை தாலியை எடுத்துக்கொடுக்க சொன்ன கோபத்தில் இருந்தவர் ஈகை வந்தால் திட்ட வேண்டும் என்று நினைத்திருக்க, இவன் என்ன கேக்குறான் என்று அவருக்கு புரியவில்லை.
 
“ஜெய்” என்று சத்தமாக அழைத்தவன் ஜெய் கொடுத்த லேப்டப்பை ஆன் செய்ய அதில் யாரோ இருவர் மாடியிலிருந்து எதையோ சுமந்து செல்வது போல் காட்ச்சிகள் ஒளிபரப்பாக அனைவரும் என்னவென்று புரியாமல் பாத்திருந்தனர்.
 
“என்ன புரியலையா?” என்னதான் கடத்திட்டு போறாங்க” ஈகை சொல்ல
 
“என்ன சொல்லுற ஈகை?” வேதநாயகி பதட்டமாக கேட்க
 
“அது மட்டுமில்ல. இத பாருங்க” என்று பார்கவியின் அறைக்கதவின் குறுக்கே இருந்த சீசீடிவியில் ஒருவன் அவள் அறையினுள் புகுந்து அவளை சுமந்து வெளியே செல்வது தெளிவாக இருந்தது.
 
ஹாலின் இருளும் ஹரிஹரன் அணிந்திருந்த குல்லா தொப்பியும் அது ஹரிஹரன் என்று அடையாளம் காண முடியவில்லை.
 
“ஈகையை சுமந்துட்டு போறவன் ஒருத்தன்  ஊமையன் மாதிரி இருக்கான் இல்ல” தர்மதுரை சந்தேகமாக கூற 
 
“அப்போ உங்க ரெண்டு பேரையும் கடத்திட்டு போய் யாரோ வேணுமென்னே! கோவில்ல வச்சாங்கன்னு சொல்லுறீங்களா?” மாதேஷ் கேக்க 
 
“ஆமா.. பாட்டி கோவில் விஷயங்களை சொன்னதும்தான் இத தெரிஞ்ச யாரோ இப்படி பண்ணி இருப்பாங்கன்னு சந்தேகம் வந்தது. வீட்டாளுங்கள தவிர யாரும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லை. கதவுகள் பூட்டி இருக்கு, வெளியே இருந்து வந்தாலும் யாரோ கதவை திறந்து விட்டிருக்கணும். என் சந்தேகம் மிஸ்டர் மருதநாயகம் மேலதான் இருக்கு” ஈகை ஆணித்தரமாக சொல்ல 
 
“சரி. உங்கள கடத்தும் பொழுது உங்க பாடிகாட்ஸ் என்ன பண்ணாங்க?” மாதேஷ் குறுக்கு விசாரணை செய்ய
 
“எல்லாருக்கும் சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு. வேலையாட்களை விசாரிங்க. பிகோஸ்  நைட் டியூட்டி பார்த்த பாடிகாட்ஸ் தூங்கிட்டாங்க. இப்படி நடந்ததே! இல்ல. சின்ன சத்தத்துக்கே மோப்பம் பிடிக்கிற எல்லா நாய்களும் தூங்கிட்டதா ஜெய் சொல்லுறாரு” தன் பக்க கருத்துக்களை ஈகை அடுக்க மெளனமாக செவி சாய்த்துக்கொண்டிருந்தார் மருதநாயகம்.
 
“தயா ஈகை இல்லனு உங்களுக்கு எப்போ தெரியும்” ஜெய் கேக்க
 
“கோவிலுக்கு போக அவர எழுப்பலாம்னு போனேன் அவர காணோம். என்ன இவரு காலையிலையே! ஜோகிங் போய்ட்டாருனு நினச்சேன்”
 
“மேடம் காணோம்னு எப்போ தெரியும்” என்று பார்கவியை ஏறிட
 
“அவதான் வீட்டுல இருந்தாலே! வடிவுதான்…” வேதநாயகி திடுக்கிட ஈகையின் கண்ணசைவில் வடிவு வீட்டாரின் கண்முன் நின்றாள்.
 
“சொல்லு வடிவு நீ பார்கவி ரூமுக்கு போனப்போ பார்கவி அவ ரூம்ல இருந்தாளா? கோவிலுக்கு வர முடியாதுனு சொன்னாளா?” வேதநாயகி அதட்டிய அதட்டில்
 
வேதநாயகியின் காலில் விழுந்த வடிவு “என்ன மன்னிச்சிடுங்க அம்மா நான் தான் சாப்பாட்டுல தூக்க மாத்திரையை கலந்தேன்” என்று ஒப்பாரி வைக்கலானாள்.
 
“யாரு சொல்லி இப்படி செஞ்ச?”
 
“சின்னையாதான் இப்படி செய்ய சொன்னாரு”
 
அனைவரும் மாதேஷை பார்க்க “இவரு இல்லங்க மத்தவருங்க”
 
“ஹரிஹரனா? எங்க அவன்? ஆமா கதம்பரியும் ஹரிணியும் எங்க? கல்யாணத்துலையும் காணல” வேதநாயகி யோசனைக்குள்ளாக ஹரிஹரணோடு உள்ளே நுழைந்தனர் அம்மாவும், மகளும்.
 
மணக்கோலத்தில் இருந்த பார்கவியைக் கண்டு அதிச்சியடைந்தவன் மாப்பிள்ளையாக நின்றிருந்த ஈகையைக் கண்டு அவன் சட்டையை பிடித்திருக்க, ஹரிஹரனின் நெத்திப் பொட்டில் துப்பாக்கியை வைத்த ஜெய் “ஒதுங்கி நில்” என்று சைகை செய்ய
 
“சொல்லு எதுக்கு எங்களை கடத்தி கொண்டு போய் கோவில்ல நைட்டு முழுக்க வச்சி ஊரே திரண்டு வந்து பார்க்குமாறு செஞ்சி எங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்ச” ஈகை கேட்ட கேள்வியில் குழம்பிப் போனான் ஹரிஹரன்.