செவ்வானில் ஒரு முழு நிலவு 13-2

5467

நிலவு 13-2
அன்று என்னவோ கோவில் பூஜைகள் முடிந்த உடன் வீட்டுக்கு வந்த மருதநாயகம் இரவு உணவை உண்ட உடனே! உறங்கி விட, ஹரஹரனின் நல்ல நேரம் பத்து மணியளவில் அன்னையோடு பேசி விட்டு தாத்தாவின் அறையை தாண்டும் பொழுது அவர் உறங்குவதைக் கண்டு யோசிக்காமல் உள்ளே நுழைந்து விட்டான்.
 
வேதநாயகி இன்னும் அறைக்கு வந்திருக்கவில்லை. சாவியும் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையிலையே இருக்க அதை கையில் எடுத்து மறைத்து வைத்துக்கொள்ளும் பொழுதே உள்ளே நுழைந்தார் வேதநாயகி.
 
“என்ன ஹரிஹரா?”
 
“தாத்தா தூங்கிட்டாரா? காசு கொடுக்கலாம்னு வந்தேன்” என்றவன் ஒரு கட்டு பணத்தை வேதநாயகியிடம் நீட்டி விட்டு வெளியேறி இருந்தான்.
 
மாலையிலையே கொடுக்க வேண்டிய காசுதான் மறந்து விட்டான். அது சமயத்தில் உதவ, தோளை தட்டியவன் “சபாஷ்” என்று சொல்லிக்கொண்டு தனதறைக்கு சென்று அனைவரும் உறங்கும் வரை காத்திருக்கலானான்.
 
கப்போர்டை திறந்த பின் சாவியை பர்சில் வைக்க மருதநாயகம் மறந்து போனது ஹரிஹரனுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
 
தங்களது அறைக்குள் புகுந்து விட்டால் யாரும் வெளியே வருவதில்லை. மூன்றாம் மாடியில் இருப்பவர்கள் கீழே வருவதில்லை. அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பொறுமையாக காத்திருந்தவன் முன்னிரவு இரண்டு மணியளவில் காரியாலய அறையினுள் புகுந்து கப்போர்டை திறந்து கோவில் கேட் சாவியையும், பார்கவியின் அறை சாவியையும் எடுத்தான்.
 
அந்த பழமையான வீட்டின் ஒவ்வொரு அறைக் கதவும் ஆறடியில் உயர்ந்து காணப்படுவது மாத்திரமன்றி சாவியும் பத்து அங்குலம் நீண்டதாகவும் ஒவ்வொரு சாவியிலும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண் கதவின் கைப்பிடியில் இருக்க, பார்கவியின் அறையின் சாவியை இலகுவாகவே! எடுத்திருந்தான் ஹரிஹரன்.  
 
அதன் பின் பூனை நடைபோட்டு மருதநாயகத்தின் அறையை அடைந்தவன் அவரிடமிருந்து எடுத்த சாவியை வைக்க அங்கே வேதநாயகியை காணவில்லை. இந்த நேரத்தில் எங்கே சென்றிருப்பார் என்று ஹரிஹரன் சிந்திக்க, குளியலறையில் சத்தம் கேட்கவே! நிம்மதி பெருமூச்சு விட்டவன் அறையை விட்டு வெளியேறி தனது அறைக்கு வந்து கையேடு கொண்டு வந்த சாவிகளை பத்திரப்படுத்தினான்.
 
அடுத்து மூன்று நாட்களும் பார்கவியை கடத்தி கோவிலுக்குள் தூக்கி செல்ல வேண்டுமே என்ற டென்சனிலையே! ஹரிஹரனின் நேரம் சென்றது.
 
மாதேஷ் கூட கவனித்து “ஏதாவது பிரச்சினையா” என்று ஹரிஹரனின் தோளை தொட்டு கேட்க சிரித்து மழுப்பினான் ஹரிஹரன்.
 
“ஏதாவதுனா சொல்லுடா. மனச போட்டு குழப்பிக்காத. புரியுதா” மாதேஷ் அகன்றதும் மூச்சை இழுத்து விட்டான் ஹரிஹரன். 
 
விடிந்தால் காவல் தெய்வங்களின் திருமண நாள். இன்றிருவு பார்கவியை கடத்தி கோவிலுக்குள் கொண்டு செல்ல வேண்டும். ஊமையன் பின்னாடி உள்ள தோட்டத்தின் பக்கம் வந்து நிப்பதாக கூறி இருக்க, வடிவு தன் காரியத்தை சரியாக செய்தால் போதும் என்றிருந்தது ஹரிஹரனுக்கு.
 
எட்டு மணியளவில் கோவில் நடை சாற்றியபின் வீட்டுக்கு வந்த மருதநாயகமும் விடிந்த உடனே கோவிலுக்கு செல்ல வேண்டி உள்ளதால் அனைவரையும் சீக்கிரம் தூங்குமாறு சொல்லி விட்டு தூங்கப் செல்ல அனைவரும் அன்று நேரங்காலத்தோடு அறைகளுக்குள் சென்றிருந்தனர்.
 
அன்று தோட்டத்து வீட்டிலையே தங்குவதாக காதம்பரியிடம் கூறிய ஹரிஹரன் பின்னாடி தோட்டம் வழியாக வீட்டுக்கு வந்து தன் அறைக்குள் நுழைந்திருந்தான்.
 
இரவு ஒரு மணியளவில் பின் புறமுள்ள தோட்டத்துப்பக்கம் வந்த ஊமையன் ஹரிஹரனை அழைத்து தான் வந்து விட்டதை கூற, பார்கவியை தூக்கிட்டு வருவதாக கூறினான் ஹரிஹரன்.
 
தனது அறையை பூட்டிக்கொண்டு படிவழியே மெதுவாக இறங்கிய ஹரிஹரன் பார்கவியின் அறையை அடைந்து முதலில் அது திறந்துதான் இருக்கிறதா என்று கைப்பிடியை திருகி பரிசோதித்துக்கொண்டான். அது பூட்டி இருக்கவே! சாவி கொண்டு கதவை மெதுவாக திறந்தவன் பார்கவி புரண்டு படுக்கவும் அதிர்ச்சியடைந்தான்.
 
அவள் அறைக்கதவை பூட்டியவன் அவள் அன்றிரவு சாப்பிடாமல் அப்படியே வைத்திருப்பதைக் கண்டு தன்னை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டான்.
 
என்னதான் வடிவு பார்கவியின் உணவில் சரியாக தூக்க மாத்திரையை கலந்து விடுவாள். அஞ்ச வேண்டாம் என்று ஹரிஹரனிடம் ஊமையன் கூறி இருந்தாலும். “அவள் சாப்பிடவில்லையென்றால் கத்தி கலாட்டா பண்ணுவாள். குடும்பம் மொத்தமும் விழித்து விட்டால் பிரச்சினையாகிவிடும்” என்று முன்னெச்சரிக்கையாக மயக்க மருந்தையும் ஒரு கைக்குட்டையில் தடவி எடுத்து வந்திருந்தான்.
 
தூங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று அவளையே வெறித்துப் பார்த்திருந்தவன்  கைக்குட்டையை அவள் மூக்கின் மீது அழுத்த அதை சுவாசித்து மயங்கினாள் பார்கவி.
 
அவன் ஆசைப்பட்ட சுவர்க்கம் அவன் கண்முன் படுத்துக் கிடக்க, இப்பொழுது நினைத்தாலும் அவனால் அவளை அடைந்திருக்க முடியும். அவன் நோக்கம் அவள் மனைவியாக வேண்டும் என்பதில் இருந்தது.  அவளை கைகளில் ஏந்திக்கொள்ள பார்கவியின் தலையும் கையும் ஒரு பக்கமாக சரிந்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை தூக்கிக்கொண்டு தோட்டத்துப்பக்கம் சென்று ஊமையன் கொண்டு வந்து நிறுத்தி இருந்த மிதிவண்டியில் அவளை அமர்த்தி தன்னோடு சேர்த்து ஒரு கையால் அணைத்தவாறு கோவிலுக்கு வண்டியை செலுத்தினான் ஹரிஹரன். மத்த வண்டிகளை இயக்கினால் அந்த சத்தத்தில் ஊர் விழித்துக்கொள்ளும் என்று இந்த ஏற்பாடு.
 
கோவிலின் அருகே! சென்றதும் கோவிலின் கதவை திறந்த ஹரிஹரன் சாவியை ஊமையனின் கையில் கொடுத்து தானும் பார்கவியும் உள்ளே சென்ற பின் பூட்டி விடுமாறு கூறினான். எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பக்காவா திட்டம் தீட்டி இருந்தான். எங்கும் எதிலும் எந்த பிழையும் நேர வாய்ப்பில்லை.
 
பார்கவியை கையில் ஏந்திக்கொண்டு ஹரிஹரன் கோவிலின் உள்ளே சென்றதும் கதவை பூட்டிய ஊமையன் மிதிவண்டியில் தன் வீடு நோக்கி கிளம்பி இருந்தான்.
 
அன்று அதிகாலையிலையே வீடு பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலையிலையே எழுந்து குளித்து பட்டுப்புடவை அணிந்து தயாராகி வந்திருந்தார் வேதநாயகி.
 
காலை ஆறுமணிக்கெல்லாம் கோவிலில் இருக்க வேண்டும் அதற்காக நாலுமணிக்கே எழுந்து அனைவரையும் எழுப்பி விட்டிருந்தார்.
 
ஒரு பக்கம் பூஜைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க,  ஒவ்வொருவரும் தங்களது அறையில் கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். வேலையாட்கள் பூஜையை முடித்து வருவோருக்கு காலை உணவை தயாரிக்கும் வேலையில் இருந்தனர்.
 
பார்கவி வந்ததிலிருந்து வேதநாயகிக்கு அவள்தான் காபி போட்டு கொடுப்பாள். இன்று அவளும் கோவிலுக்கு செல்ல வேண்டியதால் தயாராகிக் கொண்டிருப்பாள். நேற்று தூங்க செல்லும் பொழுதே அவள் அணிய வேண்டிய பட்டுபுடவையையும், நகைகளையும் கொடுத்து கண்டிப்பாக இவை அனைத்தையும் அணிந்துகொண்டுதான் கோவிலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் வேதநாயகி.
 
“எத்தனை மணிக்கு எந்திரிக்கணும் பாட்டி” என்று பார்கவி கேட்க
 
“நீ வழக்கமா எந்திரிக்கிற டைமுக்கே எந்திரி டி தங்கம். குளிச்சிட்டு மறக்காம இந்த புடவையை கட்டி நகைகளை போட்டுக்கொண்டு வா” கண்கள் மின்ன கூறியவரின் கண்களுக்கு ஜானகியை காணப்போகும் ஆவல் மேலோங்கி இருந்ததை  பார்கவி அறிந்திருக்கவில்லை.
 
அனைவரையும் எழுப்பி விட்ட வேதநாயகி பார்கவியின் அறைக்கதவை தட்டவில்லை. அவள் எழுந்து தயாராகி வந்து விடுவாள் என்று அவளை எதிர்பார்ப்போடு காத்திருந்தவாறு இதர வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
 
காதம்பரி பட்டு சாரி அணிந்து கை, காது, கழுத்து என வைரங்களால் நிரப்பி திருமண வீட்டுக்கு செல்வதுபோல் தயாராகி வர,
 
“என்ன மம்மி இது?” என்று ஹரிணி கிண்டலாக கேக்க
 
“நான் என்ன ஒன்றும் இல்லாதவளா?” என்று மகளுக்கு பதில் சொன்னவள் “என்ன நீ புடவை கட்ட சொன்னா சுடிதார்ல வந்திருக்க”
 
“எனக்கு இதான் கொம்போர்டபலா இருக்கு”
 
“அம்மாவும் பொண்ணும் தயாராகிட்டீங்களா? எங்க ஹரியை காணோம்” என்று பட்டு வேட்டி சட்டையில் தங்கதுரை வர
 
“அவன் நேத்து நைட் வேல இருக்குனு தோட்ட வீட்டுலையே! தங்குறேன்னு சொன்னான். போன் பண்ணேன் எடுக்கவே! இல்ல. இந்நேரம் அவன் கோவிலுக்கு கிளம்பி போய் இருப்பானாய் இருக்கும்”
 
“சரி வாங்க போலாம்” என்னு அவர்கள் வாசலுக்கு வர அவர்களுக்கு முன்னால் உமையாலும் பட்டு சாரியில் தங்க நகையில் தயாராகி நிற்க, மாதேஷும், விக்னேஸ்வரனும் பட்டு வேட்டி சட்டையில் தயாராகி நின்றிருந்தனர்.
 
“கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய எல்லா ஜாமங்களையும் வண்டியில ஏத்தியாச்சா என்றவாறு வந்தார் மருதநாயகம்”
 
“ஏத்திட்டேன் தாத்தா. ஆமா மேல இருக்குறவங்க கோவிலுக்கு வருவாங்களா? மாட்டாங்களா?” மாதேஷ் மருதநாயகத்தை ஏறிட
 
“ஊர் சார்பா அழைப்பு விடுத்துதான் இருக்கேன். அத மதிச்சு வர்றதும், வராததும் அவங்க இஷ்டம்” கடுப்பாகி மொழிய, மாதேஷ் தாத்தாவை யோசனையாக பார்த்தான்.
 
மாடிப்படிகளில் இறங்கி வந்த தயாளன் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராகி இருப்பதைக் கண்டு “ஓஹ்.. இன்னைக்குத்தான் கோவில்ல சிறப்பு பூஜைன்னு சொன்னீங்க இல்ல. ஈகை சார் ஜோகிங் போய் இருக்காரு போல. வந்த உடனே! நாங்க வரோம். நீங்க போங்க” என்றவன் தானும் வெளியேறி இருந்தான்.
 
அறையில் இருந்து வெளியே வந்த வேதநாயகி அனைவரும் தயாராகி தனக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்த்து பார்கவியை காணாது அப்பக்கமாக சென்ற வடிவை அழைத்து பார்கவியை அழைத்து வரும்படி கூற, பார்கவியின் அறைக்குள் நுழைந்த வடிவு சிறிது நேரத்தில் வெளிப்பட்டு பார்கவிக்கு கோவிலுக்கு செல்ல முடியாத நாட்கள் என்பதால் வர முடியவில்லை என்று கூறியதா கூற, அவளை பட்டுப் புடவையில் பார்க்க முடியாத குட்டி கவலை வேதநாயகியின் முகத்தில் தோன்றி மறைந்தது.
 
கோவிலுக்கு செல்ல நேரமாகிறது என்று மருதநாயகம் பரபரக்க, வந்து பார்கவியோடு பேசிக்கொள்ளலாம் என்று கோவிலுக்கு புறப்பட்டு சென்றார் வேதநாயகி.
 
பெரும் ஆரவாரத்தோடு மக்கள் வெள்ளமாக திரண்டு பூஜைக்காக கோவிலுக்கு நாலாப்பக்கத்திலிருந்தும் வந்துகொண்டிருந்தனர். மருதநாயகம் குடும்பத்தோடு செல்ல அர்ச்சகர் கோவிலை திறந்து காத்துக்கொண்டிருந்தார்.
 
அனைவரும் பூஜைக்காக உள்ளே செல்ல கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் ஈகைச்செல்வன் சாய்ந்து அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள் பார்கவி.
 
அதைக்கண்டு மருதநாயகத்தின் மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் திகைத்து நிற்க, ஈகையை காணவில்லை என்று வீடு முழுக்க தேடிக்கொண்டிருந்தான் தயாளன்.