செவ்வானில் ஒரு முழு நிலவு 11

6011

நிலவு 11
பார்கவியை காலேஜில் சேர்த்த நாள் முதல் நேற்றுவரை மாதேஷ்தான் அவளை காலேஜுக்கு கொண்டு வந்து விடுவதும், வீட்டுக்கு அழைத்து செல்வதும். கடமை தவறாத காவல்காரன் போல் சரியாக நேரத்துக்கு வந்து விடுவான்.
 
இன்று ஈகைச்செல்வன் அழைத்து வந்திருக்க, அழைத்துச் செல்ல மாதேஷ் ஏன் இன்னும் வரவில்லையென்று கேட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தவளை சகமாணவர்கள் வித்தியாசமாக பார்த்தவாறு செல்வது அவளுக்கு ஏதோபோல் தான் இருந்தது.
 
அந்த கல்லூரி கூட பழமை வாய்ந்த கல்லூரி. மருதநாயகத்தின் இனத்தவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரி. மாதேஷை அறிந்தவர்கள் அதிகம். கல்லூரியில் சேர்க்கும் பொழுதே! “இவள் என் அத்தை மகள்” என்ற அடையாளத்தோடு சேர்த்திருக்க, ராகிங் போன்ற தொந்தரவோ! காதல் என்றோ! யாரும் வந்து நிற்கவில்லை. காரணம் மருதநாயகத்தின் பேத்தி என்று அவளிடமிருந்து ஒதுங்கி நின்றவர்கள்தான் அதிகம்.
 
அவளும் நிம்மதியாக படிப்பை தொடர முடிகிறதே! அதுவரைக்கும் போதும் என்று யாருடனும் அதிக பேச்சு வார்த்தையை வைத்துக்கொள்ளாது இருந்து விட்டாள்.
 
அது இன்று தப்போ என்று என்னும் அளவுக்கு மாதேஷ் வர லேட் ஆனதை கூட யாரும் வந்து விசாரிக்கவில்லை. தங்களோடு செல்லலாம் என்று கூட அழைக்கவில்லை. பஸ்ஸில் வீடு போய் சேருவதற்கும் கையில் காசு என்று சுத்தமாக நயா பைசா இல்லை.
 
சாப்பாடு எடுத்து வராவிட்டால் அதை பார்த்துவிட்டு மாதேஷ் கொடுப்பான். அதை தவிர வேதநாயகி மற்றும் உமையாள் கொடுப்பார்கள் அதை அவள் அறையிலுள்ள உண்டியலில் போட்டுவிடுவாள். காரணமில்லாமல் செலவு செய்ய மாட்டாள். சாப்பாடு கொண்டுவராத நாட்களில் உண்டியலிலிருந்து அவள் தேவையான பணத்தை எடுத்து வருவாள். ஆனாலும் மாதேஷ் வற்புறுத்தி கொடுப்பான். அது மீண்டும் உண்டியலுக்கே போகும். இந்த இரண்டு மாதங்களில் அவள் உணவுக்காக செலவளித்தது கூட சொற்பமே! வேற எந்த செலவும் செய்யவில்லை.
 
 
இன்று சாப்பாடும் எடுத்து வந்திருக்க, காசு எடுத்து வரவில்லை. அவசரத்துக்கு பஸ் பாஸாவது வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே! இப்பொழுதுதான் தோன்றியது”
 
 
மாதேஷ் வர மாட்டானா? காலையில் அவன் அனுமதி இல்லாமல் ஈகையின் வண்டியில் எறியதற்கு கோபம் கொண்டிருப்பானோ! அவனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு வந்து இருக்க வேண்டுமோ!” காலம் கடந்த ஞானோதயம் வந்து மண்டைக்குள் வேண்டாத சிந்தனையில் உழன்றவளின் அருகில் வந்து நின்றது ஈகையின் கருப்பு நிற கிராண்ட் செரோகி.
 
அவன் வண்டியை அடையாளம் கண்டு கொண்டவள் இவ்வளவு நேரம் மனதில் இருந்த சஞ்சலம் நீங்க முகம் மலர புன்னகைத்தாள்.
 
அவளின் மலர்ந்த புன்னகையை ரசித்தவாறே வண்டியிலிருந்து இறங்கியவன்
 
“யாரோ பஸ்ஸுல தனியா போக தெரியும்னு காலைலே சொன்னாளே” வண்டியில் சாய்ந்து கூலரை கண்களில் மாட்டியவாறே அவளை போலவே பேசி புன்னகைத்தான் ஈகை.
 
“கையில் காசு இல்லே” என்று எப்படி அவனிடம் கூறுவதென்று முழித்தவள், “உங்களுக்கு எங்க பாஷை கூட தெரியுமா என்ன” கண்களை அகலவிரித்து ஆச்சரியமாக கேட்டாள்.
 
 
அவள் முகபாவனையை ரசித்தவன் பதில் சொல்லாது, தலையசைத்து வண்டியில் ஏறும் படி கூறியவன் அவள் ஏறி அமர்ந்ததும் அன்று காலேஜில் என்னவெல்லாம் நடந்தது என்று விசாரிக்க, அவளும் ஒவ்வொன்றாக கூறலானாள்.
 
ஈகைச்செல்வனின் அருகில் தன்னிலை மறந்து தன்னையே மறந்தாள் பார்கவி. அன்பைக் கொட்டிக் கொடுத்து, கருணையை அள்ளி வீசினால் போதும் எளிதில் யாருடனும் ஒன்றிவிடுபவள் பார்கவி. ஈகையின் அன்பான பேச்சும், அக்கறையான கேள்விகளும் அவளை அவன்பால் ஈர்க்க அவன் கேக்காத கேள்விகளுக்கு கூட பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
 
ஈகையும் மருதநாயகத்தின் செல்லப் பேத்தி பார்கவி என்றெண்ணி அவளை அடைய அன்பொழுக பேச அவளும் நெடுநாள் பேசிப் பழகிய உறவினர் போல் அவனோடு ஒரே நாளில் ஒன்றி விட்டாள்.
 
தங்கதுரை அலைபேசிஅழைப்பை ஏற்படுத்தி பார்கவியை அழைத்து வரமுடியுமா என்று கேட்ட போதே! பார்கவியை மீண்டும் சந்திக்க போகிறோமா? என்று அவன் இதயம் குத்தாட்டம் போட அதை அடக்கி இருந்தான் ஈகை.  அவன் கால்கள் அவளிடம் செல்லும் முன் அவன் மனமும் பறந்து செல்வது போலவும், அவன் ஆத்மா அவளிடம் மிதந்து போவது போலவும் தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவன் வண்டியை நிறுத்தி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே! வண்டியை விட்டு இறங்கினான்.
 
 
அவள் மருதநாயகத்தின் பேத்தியே அல்ல. அவள் அவனை நெருங்கியது அவனுடைய நிலப் பத்திரத்தை கைப்பற்ற மாத்திரம் தான் என்று ஈகை அறியும் பொழுது அவள் மீது மருதநாயகத்தின் பேத்தி என்பதை விட வெறுப்பை கக்குவானோ! 
 
வண்டி நிற்கவும் தன் கூர் விழிகளை உருட்டி என்னவென்று ஏறிட்ட பார்கவியை கண்சிமிட்டி புன்னகைத்த ஈகை “இறங்கி வா” என்று சைகை செய்து வண்டியை பூட்டிவிட்டு இறங்க,
 
பின்னாடி ஜெய்யோடு வந்த தயாளன் “விட்டா இவன் ஒரே நாள்ல புள்ளய கொடுத்து எஸ் ஆகிடுவான் போலயே! எப்படியெல்லாம் லவ் பண்ணனும்னு கோர்ஸ் ஏதாவது படிச்சிட்டு வந்திருப்பானோ! சைக்கிள் கேப்பில எல்லாம் புகுந்து ட்ரைனே ஓட்டுறான்”
 
“பொறாமை?” ஜெய் சத்தமாக முணுமுணுக்க
 
“அவன் காதுல விழுற மாதிரி சொல்லிடாதீங்க ஜெய் சார் காயு கிட்ட கோர்த்து விட்டுடுவான்” நெஞ்சில் கைவைத்தான் தயாளன்.
 
சிலமணித்தியாலங்களுக்கு முன்புதான் ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருந்தாள் காயு பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தி அலைபேசியை அனைத்திருந்தான் தயாளன்.
 
 
அது என்னமோ காயத்திரிக்கு பிற பெண்களை பற்றி பேசினால் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வரும். என்னவோ அவர்கள் தயாளனை கொத்திக்கொண்டு போக தவமிருப்பதுபோல வசைபாட ஆரம்பித்து விடுவாள். இதில் இவன் வேறு யாரையாவது பார்த்து விட்டாளோ! பேசி விட்டாளோ! போதும் அன்றைய நாள் சண்டையிலையே முடிந்து விடும்.
 
 
தயாளனின் பர்த்டே என்று ஆசையாசையாக ஐஸு உண்டாகி இருந்த நேரம் பிரியாணி செய்து எடுத்து வருவதற்காக அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று ஈகையிடம் அலைபேசியில் விசாரிக்க,
 
இன்னைக்கி லன்ச் ஹவர்ல சைட்டில் இருப்பதாக அவனும் கூற “தயாளனிடம் கூறாதே! சப்ரைசாக இருக்கட்டும்” என்று கேட்டுக்கொள்ள “சரி” என்றவன் மறந்தே! போய் விட வந்தாள் காயத்திரி நிறைமாத வயிற்றையும் சுமந்தவாறு.
 
 
கல்லும், மண்ணும் கொட்டிக் கிடக்கும் சைட்டில் கம்புகளும் விழுந்து கிடக்க, மெதுவாக அடியெடுத்தவள் கணவனுக்கு சப்ரைஸ் கொடுக்க எண்ணினால், அவன் அவளுக்கு ஷாக் கொடுத்தான். அங்கே அவன் ஒரு பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் சுழலவிட்டு இழுத்து அணைத்திருந்தான். அவள் கண்முன் நடந்தேறிய காட்ச்சியை கண்டவள் கல்லையும் மண்ணையும்  பொருட் படுத்தாது பெண்சிங்கமாய் புறப்பட்டு அந்த பெண்ணை கணவனிடமிருந்து பிரித்து தள்ளி விட்டவள் அவனை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள்.
 
 
“உனக்காக நான் பிரியாணி கொண்டு வந்தால் நீ எவளையோ கட்டி புடிச்சுகிட்டு நிக்கிறியா” சொல்லி சொல்லி அடிக்க ஈகையாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
 
 
இன்டிரியல் டிசைன் எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்க அந்த பெண் லல்லியை ஈகைத்தான் வர சொல்லி இருந்தான். கால் தடுக்கி விழப் போனவளைத்தான் தயாளன் காப்பாற்றி இருந்தான். அது அங்கிருந்த அனைவரின் கண்களுக்கும் தெரிந்த உண்மை. ஏன் காயத்திரியின் கண்களுக்கும் அது புரிந்தாலும் மூளையும், மனதும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அது அவளின் குணம்.
 
“இவள் வருவது உனக்கு தெரியுமா?” ஈகையை முறைக்க” காதை பிடித்து மன்னிப்பு கேட்கும் விதமாக நின்றான் ஈகை.
 
“இந்த ஜென்மத்துல எந்த பெண்ணுக்கும் உதவின்னு ஒன்னு செய்யவே கூடாது டா சாமி” தயாளன் முணுமுமுணுக்க,
 
அந்த பெண் லல்லி எனும் லலிதா காயுவிடம் நடந்ததை விளக்க போக “நீ வாய மூடு என்று அவளை அதட்ட” மிரண்டு போனாள் அவள்.
 
“நீ அமைதியா இரு லல்லி” என்று தயாளன் சொல்ல
 
உள்குத்தோடு  “உன் பேரென்ன” என்று காயத்திரி லல்லியிடம்  கேட்க அவளும் அப்பாவியாக லலிதா என்று கூற
 
“ஓஹ்… செல்லப்பெயர் வேறு வைத்து அழைக்கிறாயா?” தயாளனின் சட்டையை பிடித்து சைக்கோ போல உலுக்க அவன் மானம் ஜெட் வேகத்தில் பறக்க, அதை பிடி என்று தம்பியை பார்த்தால் அவன் உதடு கடித்து  நகைத்துக்கொண்டு இருந்தான்.
 
 
கோபம், ஆத்திரம் எல்லாம் உச்சத்தில் ஏற, காயத்திரியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு எவ்வாறு அனுப்பி வைப்பது, குழந்தையை சுமக்கும் அவள் உடல்நிலை மற்றும் மனநிலையை டாக்டர் ஏற்கனவே கூறியதுதான் “ஹை ப்ளாட் ப்ரெஷர் இருக்கு. எமோஷனலாகாம பாத்துக்கோங்கன்னு”
 
 
சும்மாவே ஆடுவாள். இல்லாதை இருக்குனு சொல்லி சொல்லியே ஆடுவாள்! “காப்பாத்து” என்று ஈகையைத்தான் பார்வையால் கெஞ்சினான் தயாளன். அவனோ இரக்கம் இல்லாமல் வேடிக்கை பாத்திருந்தான்.
 
 
காயத்திரி சத்தம் போடும் பொழுதே ஈகையின் கண்ணசைவில் அங்கிருந்தவர்களை அகற்றி இருக்க தயாளனின் கவனத்தில் அது இல்லை. லல்லியையும் போகச் சொன்னவன். அவளை ஆசுவாசப்படுத்தி.
 
“எங்க ஆயிரம் ரூபா எடு” என்று தயாளனிடம் கூறியவாறே கையை நீட்டி நிற்க தயாளன் முழிக்க கண்ணால “கொடுடா” என்று சைகை செய்ய காயத்திரி புரியாது பார்த்தாள். 
 
 
“என்ன அக்கா பாக்குற, அந்த லல்லியோட கால தட்டி விட்டதே! நான் தான். இவன சந்தேக படுறனு நான் சொன்னேன். இல்ல லவ்வுன்னு இவன் சொன்னான். நீ இப்போ வருவ வரும் போது இப்பொடி ஒரு சம்பவம் நடந்தா நீ எப்படி ரியேட் பண்ணுவேன்னு பெட்டு வச்சிகிட்டோம். பர்த்டே அதுவுமா நீ கண்டுக்க மாட்ட ஆயிரம் ரூபா அவனுக்குதான்னு நம்பிக்கையா இருந்தான் இப்படி சந்தேகப்பட்டு மண்ணள்ளி போட்டுட்டியே!” வாயை மூடி கதறுவது போல் சொல்ல
 
“அப்பா சாமி காப்பாத்த சொன்னா அடுத்த சண்டைக்கு ரூட்டை போடுறான்” தயாளன் தம்பியை முறைக்க,
 
“சப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாதேன்னு உன் கிட்ட சொன்னேனே!” என்று ஈகையின் முதுகில் நாலு அடியை போட்டவள் “அது சரி உங்க ரெண்டு பேர்ல யாருகிட்ட ரகசியம் சொன்னாலும் அடுத்தவனுக்கு தெரியாம போகாதுனு தெரிஞ்சும் சொன்ன என்ன சொல்லணும்” தலையில் அடித்துக்கொண்டவள். “வீட்டுக்கு வாங்க உங்கள கவனிக்கிற விதத்துல கவனிக்கிறேன். பெட்டு கட்டுறாராம் பெட்டு. பொண்ணுகளை கட்டிபுடிக்கிற மாதிரியா பெட்டு கட்டுவீங்க?” தயாளனின் தலையில் “நங்கு நங்கு” என ரெண்டு கொட்டு வைத்தவள் மறக்காமல் பிரியாணி பாத்திரத்தை அவன் கையில் திணித்து விட்டு திட்டியவாறே கொஞ்சம் தூரம் நடந்தவள் திரும்பி வந்து கான்கிரீட் சின்ன கற்களை பொருக்கி கணவனை குறி பார்த்து அடித்து விட்டே வீடு நோக்கி சென்றாள்.  
 
“கொலைகாரி, கொலைகாரி” தயாளன் துள்ளியவாறு கற்களிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தடுமாற
 
“லல்லி விழுந்திருந்தாலாவது அவளுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டிருக்காது. அவளை காப்பதினைத்துல உனக்குத்தான் சேதாரம்” ஈகை கிண்டலாக சிரிக்க,
 
“தாய்குலத்துக்கு ஒன்னுனா என் நெஞ்சம் பதறுது, கைகள் பரப்பறக்குது. தானாக கால்கள் ஓடிப்போய் உதவுது” தயாளன் வசனம் பேச
 
“இரு இரு. அக்காகிட்ட சொல்லுறேன்” ஈகை சிரிக்க,
 
“அவ குணத்தை மாத்தவே முடியாதா? ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் திட்டுறா, ஒன்னும் இல்லாததுக்கும் திட்டுறா, முடியல” நொந்த குரலில் தயாளன்.
 
“பேசியும் பாத்தாச்சு. கவுன்சிலிங்கும் கொடுத்து பாத்தாச்சு. அவளே! புரிஞ்சிக்கணும்”
 
“காலம்தான் பதில் சொல்லணும்” தயாளன் பெருமூச்சு விட
 
“கவலை படாதே! அதுக்குள்ளே நீ வயசாகிடுவ” ஈகை கிண்டலடிக்க, தயாளன் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
 
இதுபோல் காதலிக்கும் பொழுதும் நடந்த சம்பவங்கள் ஏராளம். கல்யாணம் ஆனா பிறகும் வாங்கிய அடிகள் தாராளம். அனால் அவள் மீதான காதல் மட்டும் குறையவே! இல்லை. நேற்றைய சண்டை நேற்றோடு போக இன்றைக்கு புதிதாக காரணம் தேடிக்கொள்வாள். “அதுவே பழகிருச்சு. கல்யாண வாழ்க்கைல இந்த வீர விளையாட்டெல்லாம் இருக்கனும் தம்பி” வசனம் பேசி ஈகையிடம் இளித்தும் வைப்பான்.
 
நடந்ததை எண்ணி தனியாக சிரிப்பவனை ஜெய் கேள்வியாக ஏறிட “இங்க என்ன லுக்கு அங்க பாருங்க சார்” ஈகை மற்றும் பார்கவியின் புறம் கவனத்தை திருப்பினான்.
 
ஐஸ் கிரீம் வண்டியை கண்டே தனது வண்டியை நிறுத்தி இருந்தான் ஈகை.
 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது ஒண்ணே ஒண்ணுதான் அது ஐஸ்கிரீம். பார்கவிக்கு பிடிக்காமல் போய் விடுமா என்ன? முட்டை சாப்பிட மாட்டேன் அதனால் ஐஸ்கிரீம் வேண்டாம் என்று சொல்வாளோ! பல்பு வாங்க வேண்டி வருமோ” என்ற பார்வையோடு அவளை பார்த்தவன்
 
“ஐஸ் கிரீம் சாப்பிடுவல்ல” தலையை நன்றாக உருட்டவும் தான் ஈகைக்கு நிம்மதியே! வந்தது. “என்ன பிளேவர் வேணுமானாலும் கேட்டு வாங்கிக்க” என்றவன் கைகட்டி நிற்க, பாட்டரஸ்கொட்ச் ஐஸ் கிரீம் இரண்டை வாங்கியவள் அவனுக்கு ஒன்றை கொடுக்க,
 
 “இல்ல நீயே சாப்பிடு”
 
“ம்ம்..” சாப்பிட்டவாறே வற்புறுத்த சின்ன சிரிப்பினூடே வாங்கிக்கொண்டான். ஐஷுவின் பேவரிட் ஐஸ் கிரீமுன் கூட. இவளுக்கும் இதுதான் பிடிக்குமா?” ஐஷுவே ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல் தோன்ற. தலையை உலுக்கிக் கொண்டவன் “இவளிடம் மனதால் நெருங்காதே!” மூளை அலர்ட் செய்ய அண்ணனின் வண்டி நிற்பதை கண்டு ஐஸ் கிரீமை அவனின் வண்டியின் புறம் காட்டி வேண்டுமா? எனக்கேட்டு வெறுப்பேத்தி விட்டு ரசிச்சு ருசிச்சு சாப்பிடலானான்.
 
 
சாப்பிட்டு முடிந்த உடன் பார்கவி போலாம் என்று கூற, இன்னும் வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்று ஈகை கூற மறுத்தவள் வண்டியில் ஏறி இருக்க, அவனும் வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செலுத்தினான்.
 
வண்டியை நிறுத்தியதும் பார்கவி உள்ளே சென்று விட தயாளனின் வண்டியை காணவில்லை. “பின்னாலதானே! வந்தான்” யோசனையாக பார்க்க வண்டி உள்ளே நுழையவும் புன்னகைக்க,
 
வண்டியை விட்டு இறங்கியவன் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ. எங்களுக்கும் வாய் இருக்கு. நாங்களும் ஐஸ் கிரீம் சாப்பிடுவோம். காசும் இருக்கு. வாங்கிட்டோம். அதே ஐஸ் கிரீம். நீ காட்டி காட்டி சாப்பிட்டியே! அதேதான்” ஒரு பை நிறைய ஐஸ் கிரீம் வாங்கி வந்திருந்தான்.
 
“சரியான கொமடி பீஸ்னா நீ”
 
“என்னது கொமடி பீஸா” தயாளன் முறைக்க,
 
“பின்ன ஐஷு பாப்பா வேற இல்ல. யாருக்கு இவ்வளவு வாங்கிட்டு வந்த? தனியா சாப்பிட போறியா? இல்ல துணையா மருதநாயகத்தை கூட்டு சேர்க்க போறியா” ரகசியம் பேச
 
“நான் ஏதோ பண்ணிக்கிறேன். நீ போ” ஐஸ் கிரீமை பார்த்ததும் காயத்திரியின் நியாபகம் அதிகமாக வர அள்ளிக்கொண்டு வந்திருந்தான். ஈகை கிண்டல் செய்யவும் காயத்திரியை பற்றி கூற முடியாமல் கோபமாக சொல்வது போல் சொல்ல
 
அதை புரிந்துக் கொண்டு கண்டுகொள்ளாதவன் போல்
“ஓகே” என்ற ஈகை உள்ளே நடக்க
 
“நாம் யாருக்கு என்ன தவறு செய்தோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது” நெஞ்சில் அடித்துக்கொள்ள மெய்ப்பாதுகாவலர் ஒவ்வொருவராக வந்து பையிலிருந்து ஐஸ் கிரீமை  எடுத்து செல்ல பை மட்டும்தான் எஞ்சியது. “அடேய். அது என்னோடது” என்று கத்தியவாறு அவர்கள் பின்னால் சென்றான் தயாளன்.
 
உள்ளே வந்தவன் எதோ சிந்தனையில்  மாடியேறப்போக “ஈகா இங்க வாப்பா…” வேதநாயகி அழைக்க
 
“ஹாய் பாட்டி” என்றவன் அப்பொழுதுதான் கவனித்தான் பார்கவியும் அவரோடு அமர்ந்திருப்பதை. அவள் கையில் சூடான காபிக் காப் “அட இன்னும் கொஞ்சம் நேரம் இவளோடு டைம் ஸ்பென்ட் பண்ண கிடைக்குதா?” ஆர்வமாகவே! வந்தமர வேலையாள் அழைத்து ஈகைக்கும் குடிக்க சூடாக ஏதாவது எடுத்து வருமாறு கூறினார் வேதநாயகி. 
 
அவர்கள் ஏதாவது முக்கியமாக பேசுவார்கள். அவன் அருகில் இருக்கும் பொழுது தான் அதிகமாக பேசுவதாக உணர்ந்தவாறுதான் வீட்டுக்குள்ளையே வந்தாள் பார்கவி. மருதநாயகம் சொன்னதை செய்யவா? வேண்டாமா? என்று தான் இன்னும் முடிவு கூட எடுக்கவில்லை. அதற்குள் இவனோடு இவ்வளவு நெருங்கிப் பழகுவது தனக்கு நல்லதல்ல. என்றெண்ணியவாறு எழப்போனவள் 
 
இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே!
 
இன்னும் பேச கூட
தொடங்கல என் நெஞ்சமும்
கொஞ்சமும் நிறையல
இப்போ என்ன விட்டு போகாதே
என்ன விட்டு போகாதே இன்னும்
பேச கூட தொடங்கல என்
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
 
திடீரென ஈகை பாட ஆரம்பிக்கவும் அதிர்ச்சியாக அவனை பார்த்தவரு அமர்ந்து விட்டாள் பார்கவி.
 
 
“நல்லா பாடுறியே! ஈகா. மியூசிக் கத்துக்கிட்டியா?” வேதநாயகி கேட்க
 
“அதுக்கெல்லாம் எங்க பாட்டி டைம் இருக்கு. சும்மா அப்போ அப்போ” என்று கண்சிமிட்டி சிரித்தான் ஈகை.
 
“சரி டா… நிலத்தை பாத்தியா எப்படி இருக்கு? உனக்கு பிடிச்சி இருக்கா? உங்கண்ணன் என்ன சொல்லுறாரு?” கேள்விகளை அடுக்க எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டுவித்தான் ஈகை.
 
“விவசாயம் பண்ணுறதுனு சொல்லிட்ட. என்ன பண்ணுறதா இருந்தாலும் ஒரு பூஜையை பண்ணிட்டே வேலைய ஆரம்பிடா” தன்னுடைய சொந்த பேரன்களான ஹரிஹரன், மாதேஷோடு பேசுவதை போலவே ஈகைக்கும் அறிவுரை கூறலானார் வேதநாயகி.
 
“சரி பாட்டி அப்படியே! பண்ணிடலாம். நீங்களே! ஏற்பாடு பண்ணுறீங்களா? உங்க தலைமையிலையே! எல்லாம் நடக்கட்டும்”
 
“பண்ணிடலாமே” அவரும் சந்தோஷமாகவே! புன்னகை செய்தார்.
 
  தயாளன் உள்ளே வரும்வரை ஈகை அவர்களோடு அங்கே அமர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தான். இவர்களை பார்த்தவாறே! வந்தவன் “அட அட அட கிடைக்கிற எல்லா பாலுக்கு இவனால் மட்டும்தான் சிக்ஸர் அடிக்க முடியுது”
 
தயாளனின் புன்னகையை வைத்தே! அவன் என்ன நினைக்கிறான் என்று கணித்த ஈகை “சரி பாட்டி கொஞ்சம் வேல இருக்கு அப்பொறம் வரேன். நீங்க பூஜைக்கு ஏற்பாடு பண்ணுங்க, இதோ இவன் கிட்ட என்னெல்லாம் வேணும்னு சொல்லுங்க” தயாளனை வேதநாயகி பாட்டியிடம் கோர்த்துவிட்டு படியேறி செல்ல அவரின் அறுவையில் மாட்டிக்கொண்டான் தயாளன்.
 
பூஜைக்கு என்ன ஜாமங்கள் தேவை என்பது முதல் பூஜை எவ்வாறு செய்து முடிக்கணும் என்பது வை சொல்லி விட்டே அவனை விடுவித்தார் அவர்.
 
“பூசாரியே! தேவ இல்ல பாட்டி மந்திரத்தையும் நீங்களே! சொல்லுங்க” நொந்தவனாக சொல்ல
 
“அதெல்லாம் நாம சொல்ல கூடாது” என்று அதற்கும் ஒரு பாடம் நடாத்த ஐயோ என்றானது அவனுக்கு.
 
ஈகைக்கு அப்பா, அம்மா யாருமில்லை என்பதனாலும், அவனது குலதெய்வம் என்னவென்று தெரியாது என்று ஈகை கூறி இருந்ததினாலையும் “அதுக்கென்னமப்பா எங்க கோவில்லையே! சிறப்பு பூஜை செய்யலாம். நீ அதெல்லாம் பத்தி யோசிக்காத” என்ற வேதநாயகி கணவனிடமும் ஆலோசிக்காமல் அடுத்த நாள் காலையிலையே! பூஜைக்கான ஏற்பாட்டையும் சிறப்பாக செய்திருந்தார். 
 
ஈகையின் மனதுக்கு பரம திருப்தியாக இருந்தது. நிலத்தின் வேலைகளும் இனிதே ஆரம்பிக்க, இரண்டு வாரங்களாக பார்கவியும் ஏதேதோ காரணங்களால் அவன் வண்டியில் தான் காலேஜுக்கு போய்க்கொண்டிருந்தாள்.