தேஜஸ்வினி இறந்ததிலிருந்து அந்த பங்களா காவல்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கவும், முருகானந்தமும் அங்கு தேடவில்லை.
ஏற்கனவே அங்கு வேலைக்கு இருந்த கணவனும் மனைவியும் அந்த பங்களாவிலேயே தங்கி இருந்து வேலை பார்த்து வந்ததால், வெற்றியின் ஏற்பாட்டில் சத்தமின்றி ஷ்யாம் சுந்தருக்கு சமைத்துக் கொடுத்து நன்றாகவே பார்த்துக் கொண்டனர். முருகானந்தத்திற்கு தெரிவித்தால் அந்த வழக்கில் அவர்களையும் குற்றவாளிகச் சேர்ப்பதாக மிரட்டி வைத்திருந்தான்.
தன் பின்னாலும் சுயம்புலிங்கத்தின் ஆட்கள் சுற்ற அடிக்கடி இங்கு வந்தால் சந்தேகம் வருமென்று வருவதையும் நிறுத்தி இருந்தான்.
“சொல்லு! உன் அக்காவயே ஏன் கொன்ன?”
“….” மௌனம் சாதித்தான் ஷ்யாம்.
“நீ வாயைத் திறக்கலைன்னா திரும்ப ஜெயிலுக்குதான் போவ”
சிறிதும் அசையவில்லை அவன்.
அன்றும் சரி, இன்றும் சரி வாயேத் திறக்கமாட்டேன் என்று இறுகி அமர்ந்திருந்தவனைக் கண்டு வெற்றியின் பொறுமைப் பறந்து கொண்டிருந்தது. அவனது பாணியில் விசாரித்திருந்தால் எப்போதோ வாயைத் திறக்க வைத்திருப்பான். ஆனால்…
கோபம் மேலிட, அலைபேசியை எடுத்து குறிப்பிட்ட எண்ணுக்கு அழுத்த, அது உடனேயே எடுக்கப் பட்டது.
“இதுக்கு மேலயும் இவன் வாயை திறக்கலைன்னா என்னால ஒன்னுமே பண்ண முடியாது. நீயே பேசு” என்றதும் எதிர்முனை அதிர்வது தெரிந்தது.
அதைக் கண்டுகொள்ளாமல், அலைபேசியை ஒலிவாங்கியில் (ஸ்பீக்கரில்) போட்டு ஷ்யாம் சுந்தர் முன் வைத்தவன், கையைக் கட்டிக்கொண்டு அங்கேயே நின்று கொண்டான்.
“ஷிமு…”
உடைந்துக் கண்ணீருடன் ஒலித்தக் குரலில் அதுவரை கல்போல் அமர்ந்திருந்த ஷியாமின் உடல் அதிர்ந்தது.
“ஷிமு… ஐ லவ் யூ… ஷிமு!
ஷிமு இருக்கியா? எதாச்சும் பேசுடா!
ஐ லவ் யூ ஷிமு! நீ எனக்கு வேணும்டா…ப்ளீஸ் ஷிமு!”
எதிர்பக்கம் கதறித் துடித்தக் குரலில் முதல் முறையாக உடைந்து அழுதான் ஷ்யாம் சுந்தர்.
“எனக்கு யாரும் வேண்டாம்! என்னை இப்படியே விடு! ப்ளீஸ்…!” குலுங்கி அழுதவனை வெற்றி தடுக்கவில்லை.
மனதில் இறுக்கி வைத்தது உடைந்தால்தான் வாயைத் திறப்பான் என்று அமைதியாக நின்றிருந்தான்.
சிறிதுநேரம் அழவிட்டவன், வேலை செய்யும் அம்மாவிடம் சொல்லி ஒரு டீ வரவழைத்து அதை ஷ்யாமிடம் கொடுக்க, மறுக்காது வாங்கிக் கொண்டான்.
குடித்து முடிக்க, “இப்போ சொல்லு! அன்னைக்கு என்ன நடந்துச்சி? ஏன் பழியைத் தூக்கி உன் மேல போட்டுக்கிட்ட?”
அப்போது கதவைத் தட்டும் ஒலியில், சந்தேகத்துடனே கதவை இலேசாக மட்டும் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தான், வெற்றி.
முகம் முழுவதும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தாள் மிருத்யூஸ்ரீ.
“இந்நேரத்துல உன்னை யாரு இங்க வரச்சொன்னது? நான்தான் இந்த வழக்கு முடியும்வரை பேசாம நான் சொல்றபடி கேட்டு இருன்னு சொல்லி இருக்கேன்ல!” அதட்டினான்.
ஷ்யாம் சுந்தரை உடைய வைக்க அவள் ஒருத்தியால் மட்டுமே முடியும் என்றுதான் அலைபேசியில் பேச வைத்தது. ஆனால் இப்படி நேரிலேயே வந்து நிற்பாள் என்று அவனும் எண்ணவில்லை.
கோபத்தில் கடிந்து கொண்டவனை, “மாமா ப்ளீஸ், பார்த்துட்டு உடனே போய்டுவேன்” என்ற மிருத்யூவின் கெஞ்சல் பார்வை அடக்கியது.
“பாவம் பயப்படுவியேன்னு உன்கிட்ட அவன் இருக்கிற இடத்தைச் சொன்னது தப்பாப் போச்சி”
முறைத்தாலும், அவள் இருப்பதும் நல்லதுதான் என்று பட “சரி உள்ள வா” என்று அழைத்துக் கொண்டவன், சிறிது நேரம் காதலர்களுக்கு தனிமை அளித்து வெளியில் வந்து விட்டான்.
“ம்மா… எனக்கும் ஒரு ஃப்ளாக் டீ ஸ்ட்ராங்கா”
வேலை செய்யும் அம்மாவிடம் தனக்கும் டீ சொன்னான்.
இன்னும் தேஜஸ்வினி இறந்து கிடந்த சமையலறை எரிவாயு வெடித்ததில் சிதிலமடைந்துக் கிடந்ததால், அவர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட தோட்டத்து வீட்டில் தான் சமைத்துக் கொண்டிருந்தார்.
டீக்காக காத்திருந்த நேரத்தில் வெற்றியின் நினைவலைகள் மிருத்யூவை பூங்காவில் சந்தித்தநாளில் சென்று நின்றது.
முதல் முறையாக சிறைச் செல்லுக்குள் ஷ்யாம் சுந்தரைப் பார்த்ததுமே, வெற்றிக்கு ‘இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
அன்று, கல்லூரியில் மிருதுவிடம் லைசன்ஸ் கேட்டு வம்பிழுத்தபோது, இதே ஷ்யாம், மிருத்துவின் கையைப் பற்றிக்கொண்டு அப்பா கார் அனுப்பி வைப்பார் நீ வா மிரு! என்று இழுத்துக் கொண்டுச் சென்றது நினைவில் வர, கூடவே மிருத்துவின் அன்றைய பதற்றமும்.
‘இவன் யார் ரொம்ப துள்ளுறான் உள்ளே தூக்கி வைப்போமா? என்று கேட்டதும் மிருத்து பதறிக்கொண்டு முன்னால் வந்ததும் நினைவில் வர, மிருத்துவின் நண்பனா இவன்? என்ற யோசனையுடன் புருவத்தைச் சுருக்கினான் வெற்றி.
அப்போது சரியாக அவனது அலைபேசி சிணுங்க, மிருத்யூதான் அழைத்திருந்தாள்.
அன்று சினிமா தியேட்டருக்குப் போய் இறங்கியதும் ‘எனக்கு அழைத்துச் சொல்’ என்று இவன்தான் அலைபேசி எண்ணைத் தந்திருந்தான்.
தமக்கைக்கு அழைக்காமல் தன்னை ஏன் அழைக்கிறாள்? என்ற யோசனையுடனே அம்முவின் முகம் பார்த்தவன், ஏதோ தவறாகப் பட அம்முவிடமிருந்து சற்று விலகி வந்திருந்தான்.
“சொல்லு மிருது” எனவும், அழுகையுடனே, கடகடவென அவள் ஒப்பிக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“பக்கத்தில இருக்க பார்க்குக்கு வா!” என்று சொல்லி விட்டு வைத்தவனுக்கு, ‘ஷியாம் மேல தப்பில்ல மாமா’ என்று அவள் கதறியது மட்டும்தான் புரிந்தது.
எதற்கும் இருக்கட்டும் என்றே இன்ஸ்பெக்டரிடம் எஃப் ஐ ஆர் நான் திரும்பி வந்ததும் போட்டுக் கொள்ளலாம் என்று எச்சரித்து, தனது தனிப்பட்ட வாகனத்தை எடுத்துக்கொண்டு மிருதுவை வரச்சொன்ன பூங்காவை நோக்கிச் சென்றான்.
அங்கு அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குத் தலையைச் சுற்றியது.
“இதை உன் அக்காகிட்டயே சொல்லலாமே மிருது. அவ பார்த்துப்பா” என்று வெற்றி எவ்வளவு சொல்லியும், ஒரேடியாக கேட்க மறுத்துவிட்டாள்.
அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் மசியவில்லை அவள்.
“சரி, அக்கா வேண்டாம் உன் அப்பாட்ட நடந்ததைச் சொல்லுவோம் வா!” என்றவன் அழைக்க, பூங்கா என்றும் பாராமல் அவன் காலிலேயே விழப்போனவளை அதட்டி தடுத்துப் பிடித்துக் கொண்டான். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் கண்ட காட்சியின் வீரியத்தில் நிலை குலைந்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டான்.
“என்னால அப்பா முகத்தை எதிர்கொள்ளவே முடியாது. அப்பாட்ட சொன்னா அம்மாக்கு தெரியும்! என்னால முடியவே முடியாது. ப்ளீஸ் மாமா நீங்களே எதாச்சும் பண்ண முடியாதா…” கேள்வியாய் அவள் கெஞ்ச அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
செழியனின் மற்றொருமுகமும் அவனுக்குத் தெரியும். ஆனால் பிறந்ததிலிருந்து செழியனின் கம்பீரத் தோற்றத்திலேயே பயத்தை வளர்த்துக் கொண்டவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது. அதுவும் அவள் இப்போது இருக்கும் நிலையில்.
மற்றுமில்லாமல் திவ்யபாரதி விசயத்தை செழியனே சின்ன மகளிடம் மறைத்திருக்க, இல்லை உன் தந்தை சட்டத்திற்கு புறம்பாகவும் சில வேலைகளைச் செய்திருக்கிறார் என்று சொல்லி தன் ஆஸ்தான நாயகனின் பிம்பத்தை உடைக்க வெற்றி தயாராக இல்லை.
ஒருவேளை திவ்யபாரதியின் விசயத்தை பெரிய மகளிடம் தெரிய வைத்ததைப் போல் இவளிடமும் சொல்லி இருந்தால் இப்படி ஒரு நேரத்தில் தந்தையைத் தேடி இருப்பாளா இருக்கும்.
செழியன் கல்லூரியில் விட்டுவிடுவதாகச் சொன்னால்கூட முக்கால் வாசிநாள் தெறித்து ஓடுவாள். அது என்னவோ தந்தையை மிகவும் பிடிக்கும். ஆனால் காக்கி உடையில் தந்தையைக் காணும்போது இயல்பாகவே அவளுக்குள் ஒரு பயம் வந்து அமர்ந்து விடும்.
காக்கிச்சட்டைக்குப் பயந்தே மருத்துவத்தை தேர்ந்தெடுத்தவளுக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் யாரை நாடுவதென்று தெரியவில்லை.
அக்காவின் கண்டிப்பான பாசத்தின் மீதிருந்த பயமும், இயல்பாகவே தந்தையின் தோற்றத்தில் இருந்த பயமும் குறுக்கே வர, அதேநேரத்தில் அதே உடையுடன் ஒருத்தன் தன்னிடம் வம்பிழுத்து இயல்பாகப் பேசி, அதே நேரத்தில் அக்கறையுடன் வாடகை வாகனமும் (கால் டாக்ஸியும்) வரவழைத்து என்று வெற்றி அவள் மனதில் முற்றிலும் அந்த உடைக்கு மாறாக தோழமையுடன் பதிந்து போனான்.
அந்நேரத்தில் ஆபத்பாந்தவனாக வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரிய உடனேயே அழைத்துவிட்டாள்.
வெற்றிக்கும் தன்னை அழைத்ததின் காரணம் புரிந்தே இருந்தது.
உண்மையில் என்ன மாதிரியான பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்று எதுவுமே தெரியாமல் அவனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அவளது தாய் திவ்யபாரதி பக்கம் இருந்த நியாயம் இவளிடம் இருக்கிறதா? அப்படி இல்லாத பட்சத்தில் செழியனும் மகளுக்கு எதிராகத்தான் நிற்பான் என்பது உறுதி.
“கொஞ்ச நாளாவே யாரோ அடிக்கடி என்னை பின் தொடருறா மாதிரி உணர்ந்திருக்கேன் மாமா! ஆனா அப்போ எனக்கு எதுவும் பெரிசா தெரியல. இப்போ என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல.” என்றவள் கூறவும், செழியனை நினைத்து மிகுந்த யோசனையானான் வெற்றி.
வெளியில் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இத்தனை வருடத்திற்கு பின் தன் மனைவியைக் கொல்ல முயல்வது யார்? என்று உடைந்துதான் இருந்தான் செழியன்.
அதை விசாரித்துத் தெரிந்து கொள்ளத்தான் வெற்றியும் அன்று செழியனைத் தேடி வீட்டிற்கே சென்றது.
தான் என்கவுண்டர் செய்த இருவரில் ஒருவனின் பையில்
திவ்யபாரதியின் தற்போதைய புகைப்படத்துடன், அதன் பின்னால் செழியனின் வீட்டு முகவரியும் குறிப்பிடப் பட்டிருப்பதைக் கண்டு செழியனிடம் வீட்டிற்கே சென்று விசாரிக்க, அவனுக்கும் கூலிப்படையை ஏவியது யார் என்று தெரிந்திருக்கவில்லை.
திவ்யபாரதியின் கோப்புகளின் படி, அதைப்பற்றி தெரிந்தவர் இன்னும் யார் இருக்கிறார்கள் என்று இருவரும் அலசி ஆராய்ந்தனர். யார்மீதும் சந்தேகம் எழவில்லை.
ஏனெனில் அந்த வழக்கு நடந்தபோது சுயம்பு லிங்கம் கஞ்சா கேஸில் சிறைச்சாலையில் இருக்க, அப்படி ஒரு உறவு அந்த எம் எல் ஏவுக்கு இருப்பதே வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தது.
இந்த இருபத்தைந்து வருடத்தில்தான் சுயம்பு லிங்கம் அசூர வளர்ச்சி அடைந்து இன்று அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கிறான்.
அன்று இருந்த சூழலில் வெற்றிக்கும் திவ்யபாரதியைக் கொல்ல வந்தது யார் என உறுதியாகத் தெரியாததில், மிருத்து தன்னை யாரோ தொடர்வதுபோல் இருக்கிறது என்று சொல்லவும் உண்மையில் கவலை கொண்டான்.
ஏற்கனவே தன்னை நம்பி தன் ஒரு பெண்ணையே பணயம் வைத்திருக்கும் செழியனிடம் போய் உன் இரண்டாவது மகளும் ஆபத்தில் இருக்கிறாள் என்று சொல்லும் திடம் அவனுக்கில்லை.
ஒருவேளை இது, இன்னும் ஓரிரு வருடத்தில் ஓய்வுபெறப் போகும் செழியனின் பெயருக்கு கலங்கத்தை உண்டாக்கும் முயற்சியா?
அதற்காகத்தான் மிருத்துவை இந்த வழக்கில் இழுத்து விட்டனரா? உண்மையில் ஷ்யாம் நல்லவனா? இப்படி பல கேள்விகள் அவன் மண்டைக்குள் ஓடியது.
ஒருவேளை, ஷ்யாம் நல்லவனாக இல்லாத பட்சத்தில் மிருத்து நினைப்பது போலவே அம்மு எப்படி நடந்துகொள்வாள் என்றே கணிக்கவும் முடியாது.
மிருத்துவைப் பார்த்தான். முகம் வெளுத்துப் போய் இருந்தது. உடல் நடுக்கம் அப்பட்டமாய் தெரிய வெகுவாக பயந்திருந்தாள்.
தன்னிடம் அன்று அந்த வாய் அடித்தவளா என்றிருந்தது வெற்றிக்கு.
அவள் கண்ட காட்சி அப்படி. உயிரை உருக்கும் காட்சியை அல்லவா நேரில் கண்டிருக்கிறாள். ஒரு முடிவுடன் நிமிர்ந்தான்.
எதுவாக இருந்தாலும் தனித்துப் பார்த்துக்கொள்வது என்று முடிவெடுத்தவன், மிருத்யூவை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
“ஷ்யாமை காதலிக்கிறியா மிருத்து?”
அழுத்தமாக வந்த கேள்வியில் தன் மாமனின் முகம் பாராமல் ஆம் என்றும் இல்லை என்றும் தலை அசைத்தவள், “அக்கா ஷ்யாம அடிச்சிட்டா என்னால தாங்க முடியாது மாமா” என்றும் சேர்த்தேச் சொன்னாள்.
அவள் சொன்ன விதத்திலயே அவள் மனது புரிந்தது. இருந்தும் ஷ்யாம் உண்மையில் நல்லவனா கெட்டவனா என்று அறியும்முன் கொழுந்தியா அவனுடன் பேசுவதை விரும்பாத வெற்றி, தான் சொல்லும் வரை ஷ்யாமைத் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என்று தடைவிதித்தான். அவள் புது அலைபேசி வாங்கியதும் ஷ்யாமை தொடர்பு கொள்ள முயற்சிக்க, மிரட்டிவிட்டிருந்தான்.
அப்படி தடை விதித்தவன்தான், இறுகி இருந்த ஷ்யாம் சுந்தரை உடைத்துக்கொண்டு வெளியில் வர வைக்க அவள் ஒருத்தியால் மட்டுமே முடியும் என்று தோன்றவும் வேறு வழியின்றி இன்று பேசவும் வைத்திருந்தான்.
தன் யோசனையுடனே டீயை அருந்தி முடித்திருந்தான் வெற்றி.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்ல, கண்ணீருடனே ஷ்யாம் சுந்தரின் முகம் முழுக்கவும் முத்தம் பதித்துக் கொண்டிருந்தாள் மிருத்யூஸ்ரீ.
‘அப்பா ஆக முன்னாடியே பெரியப்பா ஆகிடுவேன் போலயே! அம்மு நீ வேஸ்ட்டு டி’ தனக்குள்ளாகவே புன்னகைத்தவன், குரலை சற்றேச் செரும இருவரும் பதறி விலகினர்.
அவள் உச்சந்தலையில் மெதுவே ஆட்டி விட்டவன், “இப்பவாவது அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு இரண்டு பேரும் சொல்றீங்களா?” என்றான் தன் காரியத்தில் கண்ணாக.
கொஞ்சம் தெளிந்திருந்த ஷ்யாம் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து வெற்றியிடம் கொடுத்தான்.
அதைப் படித்து படித்து அழுதிருப்பான் போலும் மிகவும் கசங்கிய நிலையில் இருந்தது.
யோசனையுடனே அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படித்த வெற்றிக்கே முகம் ஒருமாதிரி ஆகிவிட, “இதை எப்பவோ குடுத்திருந்தா இந்த கேஸே முடிஞ்சிருக்குமே!” என்றான் கோபமாக.
“எனக்கு நேற்றுதான் கிடைச்சிது” என்று முதல் முறையாக வாயைத் திறந்தான் ஷ்யாம்!
“அம்மா இறந்த அப்புறம் பாதிநாள் தேஜூ அக்காவ தேடி நான் இங்க வந்துருவேன். அப்படி வரும்போது அக்கா எதும் வெளில போக வேண்டிய வேலை இருந்தா எனக்கு நோட்ஸ் மாதிரி எழுதி அந்த ஊஞ்சலுக்கு அடியில சொருகிட்டுப் போவா.” என்ற ஷ்யாம் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“என்னை நீங்க இங்க கொண்டு வந்து அடைச்சி வச்சதும்தான் ஏதோ தோணவும் அந்த ஊஞ்சலுக்கு அடியில பார்த்தேன். அக்கா இந்தக் கடிதத்தை எனக்காக அங்க வச்சிருந்தா” என்றவன் ஒரு கட்டத்தில் உடைந்து அழ அவனை தோள் தாங்கிக் கொண்டாள் மிருத்யூ.
“நீ தான் இந்தக் குற்றத்தை பண்ணலையே. அப்புறம் ஏன் நீ பண்ணினதா அன்னைக்கு ஒத்துக்கிட்ட? உங்க அப்பாவ காப்பாத்தவா?” என்றதும், “அந்த மிருகத்தை என் அப்பான்னு சொல்லாதீங்க சார்! என் அம்மாவையே கொன்னவன் அவன்.” என்றான் கோபமாக.
அவன் முன்னால் நீதிக் கதைகள் புத்தகம் ஒன்றை வைத்தவன், “இத மிருத்யூக்கு குடுத்தது நீ தானே? நீ ஆரம்பிச்ச பப்ளிகேஷன் தானே இது? எனவும்,