அத்தியாயம் : 33.1

கார்த்தி முடிந்தவரை மருமளைச் சமாதனப்படுத்தி விட்டுச் சென்றிருந்தான். கணவன் மனைவி பிரச்சனை என்று இருவருமே ஓரேபோல் அவனிடம் உண்மையை மறைத்து விட்டனர்.

கணவன் அன்று உன் முகத்தில் முழிக்கமாட்டேன் என்று சென்றவன்தான் திரும்பி எட்டிப் பார்க்கவே இல்லை. 

அப்படி இப்படி என்று ஒருவாரம் கடந்து இருந்தது கணவனின் முகம் கண்டு. கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலைந்திருந்தாள். ‘எல்லாம் தன்னால் தானோ?’ என்ற எண்ணத்தில் இரவு உறக்கத்தைத் தொலைத்திருந்தாள்.

எங்கு தங்குகிறான், உண்டானா உறங்கினானா? எதுவும் தெரியாமல் தடுமாறினாள். அவளது மாமன் இருந்திருந்தாலாவது அதட்டி வர வைத்திருப்பான்.

தந்தையிடம் நிச்சயம் சொல்லாமல் இருக்க மாட்டான். வேலை அதிகம் அது இது என்று ஏதேனும் காரணம் சொல்லித் தந்தையைச் சமாளித்திருக்கக் கூடும். தந்தைக்குதான் வேலை என்று வந்துவிட்டால் குடும்பம் இரண்டாம் பட்சம்தானே! அதில் மண்டையை ஆட்டியிருப்பார் என்று கோபமாக நினைத்தாள். 

அதனால்தானே அன்னையும் கேள்வியின்றி, “உனக்கு மட்டும்னு செய்யவேண்டாம்” என்று இந்த நான்கு நாட்களாகச் சமைத்துத் தருகிறார். என்ன அவளுக்குத்தான் இருந்த அழுத்தத்தில் உணவு இறங்கவில்லை.

அலைபேசியில் அழைக்கலாம்தான். ஆனால் அலுவல்கள் தவிர்த்து  அலைபேசியில் அவர்களுக்குள் சுமூகமான உரையாடல்கள் நடந்ததில்லை. அதில் இருமுறை எண்ணை அழுத்துவதும், அழிப்பதுமாக இருந்து முயற்ச்சியைக் கை விட்டாள். என்னவென்று அழைப்பது வீட்டுக்கு வா! என்றா? அவளால் அது முடியும்போல் தோன்றவில்லை.

அதையும் தாண்டி அலைபேசியில் இந்த விசயத்தைப் பற்றிப் பேசவும் அவள் விரும்பவில்லை. 

அவனும்தான் இதோ ஒரு வாரமாக இருக்கிறேனா செத்தேனா என்றுகூட கேட்கவில்லையே? நினைத்ததும் தன்னை மீறிய உணர்வில் கண்கள் கலங்கி விட, மாமனுக்கு அழைத்துப் பேசிவிட்டு வைத்தாள்.

அதேநேரம், முருகானந்தம் தன் எதிரில் அமர்ந்திருந்த நாலு பேரை வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்.

“என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க எல்லாம். நீங்க பண்ண வேலையால இன்னைக்கு என் பையன தொலைச்சிட்டு நிக்கறேன்.

அவளை லூசாக்கி காரியத்தை முடிங்கன்னா. இன்னைக்கு என்னை லூசு மாதிரித் தெருத் தெருவா அலைய விட்ருக்கீங்க”

முருகானந்தம் கத்திய கத்தில் நால்வரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

“யோவ் நிறுத்துய்யா! எல்லாம் உன்னால வந்தது. காலேஜ்ல போராட்டம் பண்ணப்பவே பின்னாடி அவதான் தூண்டுதலா இருக்கா போட்ருவோம்னு சொன்னேன். என் பொண்டாட்டி இப்பதான் செத்துருக்கா சந்தேகம் வந்திரும் அது இதுன்னு தள்ளிப்போட்ட… இன்னைக்கு எங்க வந்து நிக்குது பார்த்தியா?” கொதித்தார் கல்வி அமைச்சர் சுயம்பு லிங்கம்.

“நீதிக் கதைகள் பதிப்பகம் வரை நோண்டிட்டான் அந்த வெற்றி” கோவத்தில் சுயம்பு லிங்கம் மதுக்கோப்பையைச் சுவற்றில் தூக்கி எறிய அது ‘சில்’ என்ற சத்தத்துடன் உடைந்துச் சிதறியது.

“இவனுங்களுக்கென்ன சர்வீஸ் முடியிறவரை பதவில இருந்துட்டு ஜாலியா போய்டுவானுங்க” என்றார் மீண்டும். 

“நாங்களும் உங்கள நம்பிதான அய்யா ரிஸ்க் எடுத்திருக்கோம்” என்றார் அந்த நால்வரில் ஒருவர்.

“ஆமா! பெருசா ரஸ்க்கு சாப்பிட்டிங்க… ரஸ்க்கு” 

வேட்டியை மடித்து, அசிங்கமான செய்கையுடன் சுயம்பு லிங்கம் அவர்களை நெருங்க பயந்து பின்வாங்கினர்.

“நாலுபேர் சேர்ந்து சொன்ன வேலையை சரியா முடிக்கத் துப்பில்ல. ரிஸ்க் எடுத்தேன் ரஸ்க் எடுத்தேன்னு…” என்று காய்ந்தவர் கோவத்தில் அங்கும் இங்குமாக நடந்தார்.

“லைஃப்ரரில கால எடுத்து வச்சப்பவே அவ கதையை முடிச்சிருப்பேன் அப்பவும் என் பையன் உயிரு, ம***ன்னுட்ட.. எல்லாம் நாசமா போன உன் புள்ளப் பாசத்தால வந்தது” என்று திரும்பவும் முருகானந்தத்திடம் எகிறிக்கொண்டு வரவும், அவரும் பதிலுக்கு எகிறினார்.

“இன்னைக்கு அவனாலதான் வெளில நடமாடிட்டு இருக்கோம். அவன் மட்டும் லைஃப்ரரிய இடிச்சித் தள்ளலைன்னா அன்னைக்கே அந்த போலீஸ்காரி சந்தி சிரிக்க வச்சிருப்பா” என்றார் முருகானந்தமும் கோவத்தில்.

“இடிச்சிக் கிழிச்சான். பத்துகோடி ரூபா சரக்கு மண்ணுக்குள்ள போச்சிய்யா…” என்ற சுயம்புலிங்கம்,

 “உனக்கு உன் புள்ள தான வேணும்? அந்த போலீஸ்காரியத் தூக்குனா ஆட்டோமெட்டிக்கா உன் புள்ள வீடு வந்து சேர்வான்! இனி என்ன புடுங்கனுமோ அதை நானே புடுங்கிக்கறேன்” என்றவர் கோபத்தோடு அந்த ஈசிஆர் பங்களாவை விட்டு வெளியேறினார்.

இங்கே, அம்முவால் யாரிடமும் முகங்கொடுத்துப் பேசமுடியவில்லை. தாயைக் கண்டால் பரிதவிப்பும் தந்தையைக் கண்டால், மறைக்கும் குற்ற உணர்ச்சியும் தலைத் தூக்கியது.

தந்தையிடம் மறைப்பது வேறு நாளுக்கு நாள் தவிப்பை உண்டாக்க, வீட்டுக்குள்ளயே அகதியைப் போல் உணர்ந்தாள்.

புகுந்த இடம், பிறந்த இடம் வேறு இல்லை என்ற பாட்டில் வருவதைப்போல், ஒன்றாக அமைந்ததில் எவ்வளவு மகிழ்ந்தாளோ அதே அளவு இன்று வெறுத்தாள்.

தாய்வீடு வேறு எங்காவது அமைந்திருந்தால் இந்த அவதி இருந்திருக்காதே! ஆறுதலுக்கு போவதற்கு ஒரு போக்கிடமும் கிடைத்திருக்கும்.

பதினைந்து நாட்கள் கடந்து கடைசி முயற்சியாக மீண்டும் கணவனைத் தேடிச் சென்றாள். “சார் இல்ல மேடம்” என்ற பதிலே கிடைக்க சோர்வுடன் திரும்பி விட்டாள்.

அன்றிருந்த பதற்றநிலையில் ஓடிச்சென்று உண்மையை உறுத்திப் படுத்திக் கொண்டாளேத் தவிர அவனை மீறி மீண்டும் இந்த வழக்கில் செயல்படவும் முடியாது. செயல்பட விடவும் இல்லை அவன்.

இறுதியில், ‘செய்வதைச் சொல்லிவிட்டுச் செய்யேன்’ என்ற நிலைக்கு வந்திருந்தாள் அவள்.

தங்கைக்கு நேர்ந்ததைக்கூட அறிந்து கொள்ள முடியாத இந்தக் காக்கிச் சட்டையால் என்ன பயனென்று மனம் வெறுத்துப்போக,

இந்த வழக்கை விடுத்து மற்றதில் கவனம் செலுத்தவும் அவளால் முடியவில்லை.

அழுத்தம் அதிகமாக அதிகமாக நேராகத் தந்தையின் முன் இராஜினாமா கடிதத்துடன் நின்றுவிட்டாள்.

“சாரி சார்! ஐ கேன் நாட் ஹேண்டில் திஸ் ஜாப் பிரஷர்” என்று கையிலிருந்த கடிதத்தை நீட்ட, வாங்கிப் பார்த்தச் செழியன், மகளை முறைத்துவிட்டு கையெழுத்திட்டு நீட்டினான்.

அதில் ராஜினாமா என்பதை அடித்துவிட்டு, ஒரு மாத மருத்துவ விடுமுறை என்று எழுதிக் கையெழுத்திடப் பற்றிருந்தது.

கடிதத்தைப் பற்றிக்கொண்டு அவள் நிற்கவும், “யூ மே கோ நவ்” என்று உறுமினான்.

வெளியில் வந்ததும் அவள் முகத்தில் இளநகை அரும்பியது. வீட்டுக்கு வந்துவிட்டாள்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்தவள் முடியாமல் போக வெளியில் வந்திருந்தாள்.

அவள் எதிர்பார்த்ததுபோல் அங்குதான் நிலவை வெறித்தபடி அவளது கணவன் நின்றிருந்தான். யாரும் அறியா புன்முறுவல் இதழில் தோன்றி மறைந்தது. இதற்காகத்தானே தந்தையிடம் இராஜினாமா நாடகம் ஆடியது.

பதினைந்து நாட்களுக்குப் பின் பார்க்கிறாள். அவளையும் மீறிக் கண்கள் கலங்கிவிட அவன் காணும்முன் ஒருமுறை முற்றும் முழுதாக விழிகளால் சிறைப் பிடித்தாள். எல்லாம் தன்னிச்சைச் செயலாக நடந்திருந்தது.

காக்கி உடையைக் கூட களையாமல்தான் வந்திருந்தான். இரவுப் பணியையும் விட்டு வைப்பதில்லை போலும். ‘உன்னைப் போல்தானே அவனும் தூங்காமல் அலைவான்’ மனசாட்சியின் பதிலில் குற்ற உணர்ச்சித் தாக்கியது. 

அன்று மட்டும் கொஞ்சம் அவசரப் பட்டிருக்காவிட்டால் அவனே தெளிந்து விலகி இருப்பான். அப்படியா உன்னை மீறி உன் மீது பாய்ந்துவிடுவான்? வெகுநாள் கழித்துக் கணவனைக் கண்டதில், அவளது மனசாட்சியே மாறி மாறிக் கொட்டுவைக்க முகம் வதங்கினாள்.

திரும்பவில்லை அவன். நிலவை வெறித்தபடி அவன் நின்றிருந்த தோற்றமே கோவத்தில் இருக்கிறான் என்று புரிந்தது.

அவனுக்கும் அவள் வந்து நிற்பது திரும்பிப் பாராமலே புரிந்தது. இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான். செழியன் அழைத்து அவளது இராஜினாமா கடிதம் பற்றிச் சொன்னபோது அவ்வளவு கோபம் வந்தது.

அவள் இந்த முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தேனே இன்று அவள்முன் ஒரு குற்றவாளியாக நிற்கிறான். 

‘எதிலும் அவசரம். அவளை விட்டு எங்கு ஓடிவிடுவேன்? ஒரு மாதத்திற்கும் மேல் அவள் முகம் காணாமல் இருக்கமாட்டேன் என்று கல்லூரியில் படிக்கும்போதே அறிந்தவள் தானே? அவள் நடத்தியது நாடகம் என்பதை அறியாமல் கடிந்து கொண்டிருந்தான். 

எல்லாம் அவள் முகம் பார்க்கும் வரையில்தான்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திரும்ப, உள்ளத்தில் பலமாய் அறை வாங்கினான். தேய்ந்த நிலவென நின்றுகொண்டிருந்தாள் அவனது மனையாள். 

கண்களைச் சுற்றிப் படர்ந்தக் கருவளையமும், சோர்ந்த விழிகளும், தூங்காமல் அவள் சிந்தித்துக் கிடந்த இரவுகளை அவனிடம் கொண்டுச் சேர்த்தன. 

செழியன் அழைத்து அவள் நிலையைச் சொன்னபோதுகூட இவ்வளவு வதங்கியிருப்பாள் என்று எண்ணவில்லை அவன்.

இரவெல்லாம் எங்கு அலைந்து திரிந்தாலும் அவள் மூச்சுக்காற்று சுழலும் இடத்தில் நின்றால்தான் நிம்மதி என்று எத்தனையோ நாட்கள் ஓடி வந்திருக்கிறான். அது நடுநிசியாக இருந்தாலும் சரி மனைவியின் மூச்சுக் காற்றில் சில நிமிடங்களாவது சுவாசித்தால் போதுமென்று வீடு திரும்பியிருக்கிறான்.

ஆனால் அன்றையநாள் அவனைக் குற்ற உணர்ச்சியில் தள்ளி இருந்தது. நிமிடநேரம் என்றாலும் தடுமாறிவிட்டானே!. அதில்தான் அவள் முகம் காண அஞ்சி ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தான். கூடவே அவள் எப்படி என்னைத் தப்பாக நினைக்கலாம் என்ற கோபமும்.

இந்த வழக்கில்வேறு அவன் கைகள் கட்டப்பட்டிருக்கிறது.

அன்று இரவு போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அவள் சென்று திரும்பியதுமே, அலைபேசியில் அழைத்து அவள் வந்து சென்ற விசயத்தை அவனும் அறிந்துதான் இருந்தான். அதில் அவள் கேள்விகளுக்குப் பயந்து முற்றிலுமாக அவளைத் தவிர்த்து விட்டவன், இந்த வழக்கை முடித்தே தீரவேண்டும் என்ற வெறியில் இராப்பகல் பாராமல் ஓடியதில் சுத்தமாக மனையாளை மறந்திருந்தான்.

ஆனால் மனைவியின் தோற்றம் அவன் கோபத்தை எல்லாம் பஞ்சாய் பறக்க வைத்திருக்க, தன்னையே விழி எடுக்காமல் பார்த்திருந்தவளிடம், ‘வா’ என்று தலையசைத்தான்.

கணவன் அழைத்ததும் சொட்டு நீர் விழியைவிட்டு இறங்க, ஆட்காட்டிவிரலால் அவனறியாமல் சுண்டி விட்டு நடந்தவள் அவனருகில் சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்.

எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவதென்று யோசனையுடன் அவள் தலை குனிந்து நின்றிருக்க, அவனும் மீண்டும் நிலவை வெறித்திருந்தான். இருவருக்குமே எங்கே தொட்டாலும் அது சண்டையில் முடியுமோ என்றிருந்தது.

“என்கிட்ட எதுவும் கேட்காத அம்மு! ப்ளீஸ்.. பதில் சொல்ற நிலைமைல நான் இல்ல” நிலவிலிருந்து பார்வையைத் திருப்பாமலே சொல்ல, அதிர்ந்து அவன் முகம் கண்டாள்.

கேட்கும் முன்பே மொத்தமாய் முடித்துவிட்டான். அவன் ஓடி ஒளியும்போதே ஓரளவுக்கு இது அவள் எதிர்பார்த்தப் பதில்தான். இருந்தும் வலித்தது. எதைக் கேட்க எதை விடுக்க அவர்களுக்குள் கேட்கவும் தெரிந்துகொள்ளவும் நிறைய இருக்கிறது. ஆனால் எதற்குமே தீர்வுதான் கிடைக்கவில்லை.

இதற்கும்மேல் ஒற்றை வார்த்தையை அவனிடமிருந்து வாங்க முடியாது.சிறிதுநேரம் மொட்டைமாடித் திண்டைப் பற்றிக் கொண்டு தன்னை நிலைப் படுத்தினாள். அவனும் திரும்பவில்லை.

“அன்.. அன்னைக்கு நா…ன் வேணும்னு செய்யல. சாரி!” என்றவள் அங்கிருந்து அகல, அவள் கைகள் அவனிடம் சிக்குண்டது.

“வேற எதுவும் கேட்கிறதுக்கில்லையா?” என்றான் அவள் விழிப்பார்த்து. வெகுநாள் கழித்துக் கண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மனதில்லாமல்.

“இனி கேட்க என்ன இருக்கு” என்றாள், எங்கோ பார்த்துக் கொண்டு. ஆனால் அவனிடமிருந்த கைகளை விலக்கிக்கொள்ள வில்லை அவள்.

அவனும் விடவில்லை. நிமிடங்கள் மௌனத்தில் கரைய,

“என்னாலதானே இப்படி நைட் டீயூட்டி பார்த்துட்டு சுத்தறீங்க” என்றாள் நிமிராமல்.

மெல்லியப் புன்னகை அரும்பியது. பதில் சொல்லவில்லை அவன். காணாத நாட்களுக்கும் சேர்த்துவைத்து மனையாளை இரசித்திருந்தான்.

“அன்னைக்கு நீங்க ஜீப்… போனப்போ.. அது தெரியாம” என்று திணறியவள், “உங்களையும் நான் தப்பா நினைக்கல” என்று ஒருவழியாகச் சொல்லி முடித்தாள்.

அவன் புன்னகை விரிந்தது. வீட்டுக்கு வாங்க என்று மறைமுகமாகச் சொல்கிறாள். 

அதுவரை அலைபாய்ந்திருந்த மனது நிலைகொண்டது.

“தூக்கம் வரலையா?” 

தனக்கு மிக நெருக்கமாகக் கேட்ட குரலில் நிமிர்ந்தாள். மூச்சு விடும் தூரத்தில் நின்றான். 

அவ்வளவு நெருக்கத்தில் அவனை எதிர்பாராதவள் தடுமாறினாள். என்றுமில்லாத மென்மையுடன் ஒலித்த அவன்குரல் வேறு அசைத்துப் பார்த்தது. 

 “இல்ல” என்று அவன் விழிபாராது சொன்னவள் அறைக்குள் செல்ல எத்தனிக்க விடவில்லை அவன்.

கன்னங்கள் சோபை இழந்துக் கிடக்க, கலைந்துக் கிடந்த கூந்தலைக் கற்றையாக முடிந்திருந்தாள். அதில் சிலது அவள் முன்னெற்றியில் விளையாடியது. 

அதில் முத்தாட எழுந்த ஆவலை அடக்கி அவளிடம் மேலும் நெருங்கினான்.

படபடத்த நெஞ்சை அடக்கி கேள்வியுடன் ஏறிட்டாள். மென்மையிலும் மென்மையாகப் பற்றி இருந்தன அவனது விரல்கள். 

வேண்டுமென்றால் பிரித்துக்கொள்ளலாம்தான். உண்மையில் அவளுக்கும் அந்த மென்தீன்றல் தேவையாய் இருந்தது. மீண்டும் அவன் காயப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டாள்.

அதை உணர்ந்தாற்போல் பற்றியிருந்த விரல்களை மெல்ல விடுவித்தவன், அவனை இம்சித்த கூந்தலை பட்டும் படாமல் அவள் காதோரம் ஒதுக்கினான். 

அவள் நாடிப்பற்றி, “இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கடா! ப்ளீஸ்… எனக்காக” என்றான்.

சிவந்திருந்த அவன் விழிகளும், கண்ணைச் சுற்றிய கருவளையமும் அவனும் அவளது பிரிவில் தூங்கவில்லை என்பதை பறைசாற்ற, “ரெஸ்ட் எடுங்க” என்றவள் அறைக்குள் சென்று விட்டாள்.

“தூக்கம் வரலைன்னா எப்பவும் போல மிருதுரூம்ல போய்ப் படு” என்ற வெற்றியின் குரல் அவள் பின்னால் ஒலித்தது.

‘இங்க இல்லைன்னாலும் நான் எங்க படுக்கிறேன்? என்ன பண்றேன்? எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்’ சின்னதாய் கோபம் எட்டிப்பார்க்கத் தவறவில்லை.

ஆனால் அவன் இங்கிருக்கும்போது கீழே செல்ல விரும்பவில்லை அவள். அவன் சென்றதிலிருந்து இந்த அறைக்குள் படுக்கவில்லை அவள். ஒன்று மிருது அறைக்குச் சென்றாள். இல்லை மொட்டை மாடியில் நடை பயின்றாள். இன்று அவன் அருகிலிருக்கிறான் என்ற நினைவே போதுமாயிருந்தது. 

இன்னும் எதுவும் அவர்களுக்குள் சரியாகவில்லை. ஆனால் பிணக்குளைத் தாண்டி அவ்வப்போது காதலும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லையே!.

கார்த்தியின் அறைக்குத் திரும்பியவன் மயிலா அங்கு இல்லாததைக் கண்டான். வரும்போதே கையோடு துக்கி வந்திருந்தான். அவள்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

எதற்கும் உறுதிப்படுத்திக்கொள்ள அவளது அறைவாசிலில் நின்று குரல் கொடுத்தான். ஏனோ இந்த சூமுகமான மனநிலையே போதுமென்றிருக்க அவர்களது அறைக்குள் செல்ல விரும்பவில்லை அவன்.

“மயிலா” என்று அவன் கூப்பிட்ட அடுத்த நிமிடமே உள்ளிருந்து “வெற்றி” என்று கத்தியது மயிலா. கணவன் இல்லாத தூங்காப் பொழுதுகளை அவனின் ஞாபகமாய் மயிலாவோடுதான் கழித்திருந்தாள் அவன் மனைவி.

‘இங்கதான் இருக்காளா’ வெற்றி திருப்தியுடன் திரும்ப, இவன் குரல் கேட்காததில் “வெற்றி… வெற்றி” என்று கத்தியது மயிலா.

“என்னை விட்டு வந்துட்டல்ல. நீ போ வேணாம் மயிலா” என்றான் வேண்டுமென்றே.

“வெற்றி நோ…” என்றது மயிலா உள்ளிருந்தே.

கூடவே “அம்முகுட்டி…அம்முகுட்டி” என்று கீச்சிட்டது.

முழுதாக வார்த்தை வரவில்லை என்றாலும் தன்னைத் தூக்கி வந்தது யார் எனக் காட்டிக் கொடுத்தது.

சற்றுமுன் தன்னவளின் அருகாமையில் திளைத்திருந்தவனுக்கு மயிலாவுடன் சண்டை பிடிப்பது தன்னவளை நினைவுப் படுத்த, 

“ஐ ஹேட் யூ” என்றவன் அறைக்குள் செல்லத் திரும்பினான்.

 “ஐ லவ் யூ வெற்றி” என்றது மயிலா.

“ஏய் வாயை உடைப்பேன்” மெல்லிய குரலில் தன்னவளின் மிரட்டல் காதில் விழ இதழ்களில் புன்னகை அரும்பியது.

“குட் நைட் பேபீஸ்” இருவருக்குமாய் சேர்த்து சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பியவன்,வெகுநாட்களுக்குப் பின் நிம்மதியாய் கண் அயர்ந்தான்.