அம்மு வீடு திரும்பியபோது நன்றாக விடிந்திருக்க, இன்னமும் வெற்றியின் ஜீப் வந்திருக்கவில்லை. ஒரு பெருமூச்சுடன் தங்கையின் அறையை அடைய அது வெறுமையாகக் கிடந்தது.
“என்னடி ஆச்சி, எதும் பிரச்சனையா? உன் முகமே வாடிக்கிடக்கு. நைட்டே வெற்றி தம்பியும் கிளம்பினாப்புல இருந்துச்சி, நீயும் யூனிஃபார்ம் மாட்டிட்டுக் கிளம்பிட்ட?”
அடுக்கடுக்காய் கேள்விக் கேட்டபடியே மகளுக்குப் பிடித்த விதத்தில் காப்பி கலந்து அவள்முன் நீட்ட, தாயின் முகம் கண்டவளின் கண்கள் மீண்டும் கரித்துக் கொண்டு வந்தது.
மிருத்து அவரது செல்ல மகள். அவளுக்கு ஒன்றென்றால் அன்னை துடித்துப் போவாள். அதில் முயன்று தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.
ஒருவேளை விடுதியில் அந்த பழக்கத்தைப் பழகி இருந்தால்?
“செமஸ்டர் டைம்ல போய் தங்கி படிச்சிருக்கா ஏன் கேட்கிற?” என்றதும் ஆயாசாமாக வர, “ஏன் அந்தம்மாக்கு வீட்ல படிச்சா ஆகாதோ? யார் என்னன்னே தெரியாம அலோவ் பண்ணுவீங்களா நீங்க?” கோபத்தில் படபடத்தவளை விநோதமாகப் பார்த்த திவ்யபாரதி,
“ஏன்டி, நீயும் ஹாஸ்ட்டல்ல தங்கிதான படிச்ச?அதெல்லாம் அப்பா அப்பப்போ போய் பார்த்திட்டுதான் வருவார்.எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து போற பசங்கதான். நல்ல பிள்ளைங்க. நம்ம வீட்லயும் ஒன்னா வந்து தங்கியிருந்து படிக்கும்ங்க. ஏன் எதும் பிரச்சனையா?” என்றதும் வாயை மூடிக்கொண்டாள்.
இதற்குமேல் வாயைவிட்டால் தாய் பதற்றப்படக் கூடும். “அப்படில்லாம் இல்லம்மா. இப்போதான செமஸ்டர் முடிஞ்சிது அதான் கேட்டேன்” என்று எதுவோ சொல்லிச் சமாளிக்க,
“அது என்னன்னு தெரியலடி. கொஞ்சம் முன்னாடி வெற்றி தம்பி வந்துச்சி. இவ ஹாஸ்டல் போகணும்னதும் தம்பிதான், அவசரமா குளிச்சிக் கிளம்பி, வேலையிருக்கு, விட்டுட்டு நான் அப்படியே கிளம்பிக்கிறேன்னு, இரண்டுபேரும் கிளம்பிட்டாங்க.” என்றதும் இது கணவனின் வேலை என்று அவளுக்குப் புரிந்து போயிற்று.
இரவு அலறியதை இவள் சொல்லி இருக்கவேண்டும். அதில்தான் திரும்பவும் அனுப்பிவிட்டான்.
எதை மறைக்க இப்படிப் போராடுகிறான்? அதற்கும்மேல் முடியாது மாடிக்குக் கிளம்பிவிட்டாள்.
இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்லை அவள் கணவன். அவள் கண்ணில் படாமேலே சுற்ற பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், அவன் அலுவலகம் சென்றாள்.
“சார் கொஞ்சம் பிஸியாக இருக்கிறாராம். இப்போ பார்க்க நேரம் இல்லையாம்” முகத்திலடித்தார் போல் உதவிக்காவலரிடம் சொல்லி அனுப்பினான். எதுவும் பேசாமல் திரும்பி விட்டாள்.
இப்படியே மேலும் இரண்டு நாட்களைக் கடத்தி இருந்தான்.
இறுதியில், ‘செய்வதைச் சொல்லிவிட்டுச் செய்யேன்’ என்ற நிலைக்கு வந்திருந்தாள் அவள்.
தங்கைக்கு என்னவாயிற்றோ என்ற பரிதவிப்பில், மாமனும் அருகில் இல்லாமல், தாயின் முகத்தையும் பார்க்க முடியாமல், தந்தையின் முகத்தைப் பார்க்கவும் அஞ்சி நடுங்கினாள்.
கணவன் இவ்வளவு தூரம் தன்னிடம் மறைக்கிறான் என்றால் எதுவோ நடந்திருக்கிறது. அது என்னவென்று உறுதியாகத் தெரியாமல் யாரிடம் என்று சொல்ல?
கணவனை மீறித் தங்கையிடம் செல்லவும் அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. அப்படியேச் சென்றாலும் நிச்சயம் பின்னாடியே வந்து கணவனும் நிற்பான். மனம் கசந்துக் கிடந்தது. கூடவே தங்கையின் மீது கோபமும் ஆற்றாமையும். இன்று வந்த மாமன் அவ்வளவு முக்கியம் என்றால் நான் அவளுக்கு யார்?
ஒருவழியாக நான்கு நாட்கள் கழித்து அதிகாலையில் வந்திருந்தான். சப்தமின்றி கார்த்தியின் அறைக்குள் புகுந்துகொள்ள, பின்னாடியே வந்து நின்றவளை அவன் எதிர்பார்க்கவில்லை.
தூங்கிக்கொண்டிருப்பாள் என்று நினைத்திருக்க, அவள் தூங்கினால் தானே எழுவதற்கு.
வெற்றியிடம் தயக்கம். தொடமாட்டேனென்று அவ்வளவு நம்பிக்கையாய் பேசிவிட்டு அன்று ஒருநொடியில் தடுமாறியது மனதை அழுத்தியது. அதில்தான் அவள் முகம் காணத் தயங்கி ஓடி ஒளிந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் தங்கையைத் தவிர, அது எதுவும் அவள் நினைவில் இல்லை. “மிருது விசயம் அப்பாக்கு தெரியுமா?” என்றாள் நேரடியாக அவன் விழி பார்த்து.
விசயம் தெரிந்தது முதல் அப்பாவிடம் தெரிவிப்பதா வேண்டாமா என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தவள் கணவனிடம் சொல்லாமல் தெரிவிக்கவும் விரும்பவில்லை.
மறுத்துத் தலையாட்டினான்.
“அப்பாக்கு தெரியாம எப்படி?” வார்த்தைகள் சிக்க அடுத்துப் பேச அவளுக்கு நா எழவில்லை.
“நீ எதுக்கு இரண்டுநாள் முன்ன போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குப் போன?” அவன் கேள்வியாய் ஏறிட,
மெல்ல நிமிர்ந்து, “சிவப்பு நிற ஃபெர்ராரியை ஒரு கருப்பு நிற வெஸ்பா ஃபாலோ பண்ணிப் போனதைத் தெரிஞ்சிக்கப் போனேன்” என்றாள் அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே.
அவன் விழிகள் அதிர்ச்சியை உள்வாங்கியதைக் கண்டாள்.
நொடியில் தன்னை இயல்பாக்கி, “ரூல்ஸ் மீறி இருக்க” என்றதும் கோபம் பொத்துக்கொண்டு வர, “நானா எதையும் கிண்டி கிளறல.. தானாக் கிடைச்சதையும் விடல. மோர் ஒவர் அவ என் தங்கச்சி! என்னைக் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்றீங்களா?” என்றாள் ஆற்றாமையாக.
மிருது உளறியதை வைத்து எதையோ கண்டுக் கொண்டாள் என்று புரிந்தது. அவன் அவ்வளவு தூரம் கஷ்டப் பட்டதெல்லாம் நொடியில் வீண் என்று ஆனது.
“இது எவ்ளோ சிக்கலான விசயம்னு உங்களுக்குப் புரியுதா? எப்படி நான் அப்பாட்ட மறைக்க…” என்றவள் கேட்கவும், துருவனை எதோ சொல்லி அதட்டும் தந்தையின் குரல் வெளியில் கேட்க,
வெளியில் செழியனின் தலையை அவனும் கண்டிருந்தான். அதில் அவளை எப்படி அடக்குவது என்று தெரியாமல் அவன் அணைத்திருக்க, ஏற்கனவே தங்கையின் நிலை என்னவென்று புரியாமலும் கணவனின் பாராமுகத்தாலும் உடைந்திருந்தவள், உதறிக்கொண்டு மடங்கி அமர்ந்து அழுதாள்.
இயலாமையும், தவிப்புமாகக் கணவனை ஏறிட, உண்மையாகவே அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் தவித்தான் அவன். அவனே எதிர்பாராமல்தான் அதைச் செய்திருந்தான். நான்கு நாட்களாக மனைவியைப் பார்க்காத தவிப்பில்தான் இன்று அவன் வந்ததே!
இதற்காகத்தானே அவளைப் பாராமலே சுற்றிக் கொண்டிருந்தது. மேலும் மேலும் அவனைக் குற்றம் செய்ய வைக்கிறாள். அதில் அவளை நெருங்கவும் அவன் தயங்க…
“நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போய் உட்கார்ந்துக்கிட்டிங்க. நான் அம்மா முகம் பார்க்கவா இல்ல அப்பா முகம் பார்க்கவா? எதுவும் தெரியாம நான் என்னன்னு நினைக்க?
என் முகம் பார்க்காமக் கூட திருப்பி அனுப்பறீங்க… நான் என்ன அவ்ளோ வேண்டாதவளா போய்ட்டனா வெற்றி?
அன்னைக்கு எவ்வளவு துடிச்சிருப்பேன்னு யோசிச்சிங்களா?
இதுக்கா அவ்ளோ அவசரம் அவசரமா என்னை மிரட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” வெடித்துச் சிதறினாள்.
மனதில் அழுத்தி வைத்ததையெல்லாம் சேர்த்துவைத்து அவள் கேள்வியாக்க, பூனைக்குட்டி கடைசியில் வெளியில் வந்தே விட்டது.
மடங்கி அமர்ந்து அவள் அழவும் அதுவரைச் செய்வதறியாது பார்த்திருந்தவன், மற்றதை விடுத்து மிரட்டி என்ற வார்த்தையிலயே உறைந்து நின்றுவிட்டான்.
“என்ன சொன்ன? மிரட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?
உளறாதடி! என்றான் புரியாதப் பார்வையுடன்.
“அந்த ஃபைலைக் காட்டி நீங்க மிரட்டலைன்னா இந்த ஜென்மத்தில நம்ம கல்யாணமே நடந்திருக்காது” என்றவள் முட்டியில் முகம் புதைக்க, அவனுக்கு ஒன்றும் புரியாமல் ஆயாசமாக வந்தது.
“பைத்தியமாடி நீ? நான் எப்போ, எந்த ஃபைலைக் காட்டி மிரட்டினேன்.”
“ஏன் எதுவும் தெரியாதது போல…” என்றவள், “ப்ச்.. இப்போ அது முக்கியமில்ல…” என்றாள் அழுகையோடுகூட.
அவள் கைப்பிடித்து திருப்பியவன், “எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுடி. புரியல!” என்றான்.
“என்ன புரியல? என்னை மிரட்டி, எங்க அப்பாகிட்ட என்ன சொன்னீங்களோ, அவர்கிட்டயும் அக்ரீமெண்ட் அது இதுன்னு” என்றவள் முடிக்கும் முன், “நிஜமாவே நீ உங்கப்பனுக்குதான் பிறந்தியாடி! இல்ல ஹாஸ்பிட்டல்ல மாத்திட்டாங்களா?” என்றிருந்தான் வந்த கோவத்தில்.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! புருஷன்னும் பார்க்க மாட்டேன் மனுஷன்னும் பார்க்க மாட்டேன். அப்புறம் எதுக்கு அன்னைக்கு திவ்ய பாரதி மர்டர் கேஸ் ஃபைலைத் தூக்கிட்டு வீடுவரைத் தேடி வந்தீங்களாம்” என்றவளின் அழுகை நின்றிருக்க கோவத்தில் முகம் சிவந்திருந்தது.
அவள் முகம் பிடித்துத் திருப்பியவன்,
“சாரி! ஐயம் ஹோல்டிங் மை டங்க்! பின்ன என்னடி உன் அப்பாவை யாராச்சும் மிரட்ட முடியுமா? இல்ல மிரட்டினாலும் பயந்துக்குற மனுஷனா அவர்! என் விசயத்துல மட்டும் ஏன்டி முட்டாளாவே யோசிக்கிற?” என்றான் மெல்லியப் புன்னகையுடன். அப்போதும் அவளின் உண்மை கோபம் புரிந்திருக்கவில்லை.
“அன்னைக்கு அம்மாவோட ஃபைலை கையில அலட்சியமா தூக்கிப்போட்டு பிடிச்சி மிரட்டல? இதைக் கேட்ட அப்புறமும் சம்மதிக்காமயா போய்டுவன்னு நீங்க அந்த ஃபைலைக் காட்டி என்கிட்ட கேட்கல? கடைசியா அந்த ஃபைல் மேல என் கையைப் புடிச்சி மாறிடமாட்டியேன்னு கேட்டு சத்தியம் வாங்கல… கடைசியா முதலிரவு அறையிலக் கூட” என்றவள் உடைந்து அழ…
அவனுக்கு ஒவ்வொன்றாக நினைவில் வந்தது.
திடிரென அவள், “எனக்குச் சம்மதம்” என மூஞ்சைத் திருப்பிக்கொண்டு திருமணத்துக்கு சம்மதித்தது நினைவில் வந்தது. கூடவே அந்த கோப்பு தன் மேஜைக்கு வந்த காரணமும் அந்தக் கோப்பின் சாராம்சமும்.
‘அப்போ அவங்க அம்மாவைக் காரணமா வச்சிதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாளா?’ நிமிடத்தில் அவன் முகம் சுருங்கியது.
“இதை அன்னைக்கே நீ கேட்டிருக்கலாமே?” என்றான் சிவந்துவிட்ட விழிகளுடன்.
“அன்னைக்கு அதை உங்க வாயால கேட்கிற சக்தி எனக்கில்ல” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
“ஓ, இன்னைக்கு மட்டும் எப்படி வந்திச்சி” என்றான் கேலியும் ஆத்திரமுமாக.
“அதைவிடத்தான் பெரிய இடியா என் தங்கச்சி இறக்கி இருக்காளே!” என்றவளில் வெகுநேரம் திரும்பி நின்று தன்னைச் சமாளிக்க முயற்சி செய்தான்.
கடைசியில் முதலிரவு அறையில் அவள் நடந்துகொண்டது நினைவில் வர, அதற்கும் மேல் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
கையைப் பிடித்து ஓரேத் தூக்காகத் தூக்கி, சுவற்றோடு சாய்த்தவன், “அன்னைக்கு அதனாலதான் திடிர் துச்சாதனன் அவதாரம் எடுத்தியா? நிச்சயமா இவ்ளோ கேவலமா என்னை நினைச்சிருப்பன்னு எதிர்பார்க்கல.
இனிமேல் உன் மூஞ்சில முழிச்சா என்னை என்னன்னு கேளு!” என்றவன் தளர்ந்த நடையுடன் வெளியேற, நின்று திரும்பி,
“அடப் பைத்தியமே! உனக்காக நானே எழுதி மயிலா பாடின பாட்டைத்தானே அன்னைக்கு என் ஃபோன்ல கேட்ட! அப்போ அது என்ன ஃபைல்னுகூட நான் பார்க்கல டி” என்றான்.
“இதுவரை ப்ரோப்போஸே பண்ணாத நான், என் மனசத்தான்டி அதில் சொல்லி இருந்தேன்”
“உண்மையாவே, மயிலா பாடினதைக் கேட்டு நீ சம்மதிக்கலையா? அன்னைக்கு ஏற்கனவே பார்த்திட்டியான்னு கேட்டேன்? நீயும் பார்த்துட்டேன்னு சொன்னியே! மறந்துட்டியா?” என்றான் தன் கடைசி நம்பிக்கையாக.
“கடைசி வரை என்னை நம்பவே மாட்டல்ல! உன் நம்பிக்கைக்கு நன்றி” என்றவன் வெளியேறப் போக…
“சும்மா நம்பு நம்புன்னா நம்பிக்கை எங்கிருந்து வரும்? நீங்க முதல்ல என்னை நம்புனீங்களா வெற்றி?” குரல் உடையக் கண்ணீருடன் கணவனை ஏறிட்டாள்.
“நம்பி என்கிட்ட எதையாச்சும் உண்மை பேசி இருக்கீங்களா? நான் மட்டும் நம்பனும்னா எப்படி… நிஜம்மா எனக்குப் புரியல வெற்றி? என்றவள் குலுங்கி அழ, அவனின் காயப்பட்ட மனது கல்லடிப் பட்டது.
அழுகையினூடே வீறுகொண்டு நிமிர்ந்தாள்.
“எதை வச்சி உங்கள நம்பச் சொல்றீங்க?
அன்னைக்கு என் நம்பிக்கையை உடைக்கும் போது அது தெரியலையா?
உங்க ஃப்ரண்டோட வேலைக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேவலப்படுத்தினவரை எதை வச்சி நம்பறது?
இப்போ என் தங்க…” என்றதும் “ஷட் அப் அம்மு” என்றவன் எரிமலையாக உறுமினான்.
“இதுக்கும் மேல ஒரு வார்த்தைப் பேசின என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டுவ…
“உன்னைத் தொடுறத் தகுதிய நான் இழந்து பத்து நிமிஷமாச்சு” என்று விலகி நடக்க, நொடிநேரம் நின்று கண்களை இறுக மூடித் திறந்தான்.
திரும்பி, “நம்மளோடது காதல் கல்யாணம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா உங்கப்பா அம்மா விருப்பத்தைக் கேட்ட நான் உன்னை சரியா புரிஞ்சிக்கலையோன்னு தோணுது.
நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல. அப்படியே இருந்தாலும் சொல்லவும் மாட்டேன். ஆமா எனக்கும் உன்மேல நம்பிக்கை இல்ல.
உங்கம்மா ஃபைல் வச்சி மிரட்டித்தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். உங்க வீட்டுக்கு அன்னைக்கு வந்ததும் உங்கப்பாவை மிரட்டத்தான்” என்றவன் திரும்பி வெளியில் காலடி எடுத்து வைக்கவும், “நான் உள்ள வரலாமா?” என்று அனுமதிக்கேட்டு உள்ளே வந்தான் செழியன்.
இருவரும் அதிர்ந்து நிற்க, “சாரி! எதோ புருஷன் பொண்டாட்டி சண்டைன்னுதான் உங்க குரல் கேட்டும், பேசாமக் கீழ போய்ட்டேன். ஆனா நான் திரும்பி மேல வந்தபோது, கடைசியா என் பொண்டாட்டி பெயர் அடிபட்டதால எனக்கும் சிலது பேசணும்” என்றவன் குறிப்பாக அம்முவைப் பார்த்தான்.
“அவன் ஏன் உங்கம்மாவைப் பார்க்க வந்தான்னு உனக்குத் தெரியணும் அதானே…” என்றதும் வெற்றி ஏதோ சொல்ல வர, செழியனின் ஒரு பார்வையில் அடங்கினான்.
“உங்க அம்மாவுக்கு ஆபத்து வந்தது உண்மைதான். ஆனா அது யாரால வந்துச்சின்னு தெரிஞ்சிக்கனுமா?” என்றதும் “மா..மா” என்றான் வெற்றி, அழுத்தமாக.
“ப்ளீஸ்… அவ ஏற்கனவே நொந்து போய் இருக்கா” என்ற வெற்றியின் குரல் தேய்ந்து ஒலிக்க, முறைத்தான் செழியன்.
“இவ்ளோநாள் உனக்கு மாமான்னு கூப்பிட வரலல்ல. இன்னைக்கு உன் பொண்டாட்டியச் சொல்லவும்தான் நான் மாமான்னு கண்ணுக்குத் தெரியறேனா?”
இதுவரை செழியனை அவன் மாமா என்றழைத்ததே இல்லை. அவன் பதவி முன்னால் வந்து தடுத்துக் கொண்டிருந்தது.
மருமகனை முறைத்தச் செழியன், “இப்படியே தலைல தூக்கி வச்சிக்கோ” என்று வெளியேறப்போக..
“ஆமா, நான் தூக்கி வச்சிப்பேன். கை வலிச்சா சொல்றேன். நீங்க வந்து புடிச்சிக்கோங்க” என்றான் அசால்ட்டாக. தங்களுக்குள் எவ்வளவு கோப தாபம் இருந்தாலும் அது அவள் தந்தையாகவே இருந்தாலும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை அவன்.
“கை வலிச்சா இதோ உன் பின்னால நிக்கிறானே இவன்கிட்டக் குடு! மருமக போன் பண்ணினதும் அறுவடையைப் பாதில விட்டுட்டு ஓடி வந்திருக்கான்ல…” என்ற செழியன் ஊரிலிருந்து அப்போதுதான் வந்திருந்த கார்த்தியை முறைத்துவிட்டு, எப்படியும் போங்க என்று வெளியேறினான்.
“மாமா…” என்று அழுகையுடன் ஓடி கார்த்தியின் இடுப்பை இறுக்கிக் கொண்ட மனையாளை பார்த்துக்கொண்டே வெளியேறினான் வெற்றி.