அவன் மேலும் நெருங்க, மற்றொருக்கையால் அவன் பிடறிமுடிப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தவள் அதேவேகத்தில் அவன் தாடியையும் பிய்த்து எறிந்தாள்.

“இப்போ கிஸ் பண்ணுங்க எஸ் பி சார்” என்றவள் புன்னகையுடன் தானே அவன் இதழ்களைப் பற்றிக்கொள்ள பெண்ணவளின் வேகத்தில் அயர்ந்து நின்றான் காளையவன்.

“அதான் உன் பையன் கிடைச்சிட்டான்ல கூப்பிட்டுக் கிளம்பு முருகா ஜி!

லிங்கா ஜி நீங்க என்ன சின்ன புள்ளகிட்ட போய் கோதாவுல இறங்கிக்கிட்டு…” என்று வெளியில் ஒரு கலவரமே நடக்க,

உள்ளே சத்தமின்றி இதழ் யுத்தத்தை தொடர்ந்திருந்தவனின் கண்கள் குறும்புடன் சிரித்தது.

“எப்படி டி கண்டுப்பிடிச்ச?” பெண்ணவளின் இடுப்பை வளைத்துப் பிடித்தபடி அவன் கேட்கவும், “பச்சைப்புள்ளை மாதிரி பொண்டாட்டியோட பர்த்டேவ போன் பாஸ்வேர்டா வைக்கக்கூடாது எஸ் பி சார்” என்றவள் அவன் தாடியை மீண்டுமாய் ஒட்டினாள்.

“சார் வாட்சப்பே அவ்ளோ யூஸ் பண்றதில்ல போல. அப்பாவோட மட்டும் ஒரே ஒரு ஆடியோ சாட். அதுவும் துருவன் குலைக்கிற ஆடியோ அப்பா அனுப்பி இருந்தாங்க. அது போதாதா? ஜவுளிக்கடைல துருவன் எப்படி குலைச்சான்னு புரிஞ்சிருச்சி” என்றாள் சிரிப்புடன்.  

“நான் ஜவுளிக்கடைல உங்களைப் பார்த்ததை சொல்லும்போதுகூட அப்பா பெருசா ரியாக்ட் பண்ணல. ஷீலாவையும் அப்பாதான் உங்களுக்குப் பழக்கி விட்ருக்கணும்னு புரிஞ்சிது.

இந்த விக்டரை அரெஸ்ட் பண்ணப்பவும் அப்பாகிட்ட மட்டும்தான் சொன்னேன். ஸ்டேஷன் வெடிச்சிது” என்றவள், “கூட்டுக் களவாணிங்களா…” என்று அவன் தாடையில் குத்தினாள்.

“ஜான்சி ராணி! உன்னை யாரு பப்ளிகேஷன் உள்ள எல்லாம் போய் சாகசம் பண்ணச் சொன்னது” என்று முறைத்தான். 

“வீட்ல லீவு போட்டுட்டு உட்கார்ந்து கும்மிப்பாட்டு பாடுவேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நானா பொறுப்பு?” என்று உதட்டைச் சுழிக்க,

“அதுக்குன்னு உயிரைப் பணயம் வச்சி உள்ளக் குதிப்பியா?” இலேசான பதற்றத்துடன் கேட்டவனின் கைகள் அவளை இன்னும் இறுக்கி வளைத்தது.

“நேரா உள்ள நுழையற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல எஸ் பி சார். உங்க விசயத்துலதான் இலேசா சறுக்கிட்டேன் அதுக்குன்னு…” என்றவள் அவன் சட்டையைப் பிடித்து தனக்கு நெருக்கமாய் இழுத்தவள், “பணயம் வச்சது என் உயிரை இல்ல உங்க உயிரை” என்றாள் கண்சிமிட்டி.

அவன் புரியாது முழிக்க, “நம்ம மயிலா கழுத்துலதான் பட்டன் சைஸ் கேமராவக் கட்டி உள்ள பறக்க விட்டேன். உள்ள அறை அறையா சுத்தி அங்க நடக்குற எல்லாத்தையும் படம் புடிச்சிட்டு வந்துட்டா.

அன்னைக்கு அவ முகத்தைப் பார்க்கணுமே பேயறைஞ்சா மாதிரி!” என்று வாய்ப்பொத்திச் சிரித்தாள்.

மயிலாவும் அந்த நினைலிலிருந்து இன்னும் வெளிவராமல்தான் சுத்திக் கொண்டிருந்தது.

கழுத்தில் கேமாரவுடன் பறக்க விடப்பட்ட மயிலா அங்கும்மிங்கும் ஓடி வழி தெரியாது தவிக்க, கிளிதானென்று ஒருவரும் பெரிதாக எடுக்கவில்லை. புத்தகத்துக்கு கொக்கைன் ஏற்றும் வேலை ஒரு பக்கம் நடக்க, அனைத்தும் அதன் கேமராவில் பதிவாகியது.

அடுத்த அறைக்குள் நுழைந்த மயிலா அதிர, ‘போலீஸ்காரன் வீட்டுக்கு வாக்கப்பட்டதுக்கு என்ன என்ன கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. 

அடக் கருமம் புடிச்சவனே நான் என்ன ஃப்ளு ஃபிலிமா எடுக்கறேன். அய்யோ கண்ணு கூசுதே… எடுத்துப் போட வேண்டியதப் போடுறா” என்று தெறித்து வெளியில் ஓடி வந்தது மயிலா. அந்த நினைவில் எழிலரசி வாய்விட்டுச் சிரிக்க, 

கணவனின் கேள்வியான பார்வையில், சிரிப்புடன் கரம் கொண்டு அவன் விழிகளை மூடியவள், “அதெல்லாம் நான் எதையும் பார்க்கல எஸ் பி சார். அப்படியே அப்பாக்கிட்ட குடுத்துட்டேன்” என்றவள் அவனில் தன்னை மறைத்துக்கொள்ள, வெடித்துச் சிரிக்கப்போனவனின் வாயைப் பாய்ந்து பொத்தினாள்.

“எங்க இருக்கோம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஆஃபீஸர்?” என்றாள் அவன் இடைவளைத்தக் கையையும் பார்வையையும் முறைத்து…

“எதாச்சும் பயந்து கத்துடி! அப்பதானே விசாரிக்கிறேன்னு நம்புவானுங்க” என்றவனும் சிரிக்க, “இப்போ கத்தினா வேறா மாதிரிதான் சத்தம் வரும் பரவால்லயா…” என்றாள் கண்சிமிட்டி.

“இராட்சசி நேரங்காலம் இல்லாம படுத்துறடி…” என்றவனும், 

“உன் தங்கச்சிய வேற பார்க்கணும்டி. ஷியாம் வேற வெளிய தனியா இருக்கான்” என்று பதற்றப் பட, 

“மிருது கூட, டிஜிபியோட தனிப்படை மும்பை போய் இறங்கியாச்சு” என்றவளில், “கேடி, என் போன்ல இருந்த ஜி பி எஸ் ட்ராக்கர் ஆப் டவுன்லோட் பண்ணினியா? என்றதும் “ஆமாம்” என்று தலையசைத்தாள்.

“ஒருநாள் அஞ்சி நிமிஷம் போனை மறந்து வச்சிட்டுப் போனதுக்கு என்னென்ன கேடி வேலை எல்லாம் பார்த்து வச்சிருக்க” என்றவனின் புன்னகை விரிய,

“என்னை பேருக்கு உப்புக்குச் சப்பானியா தொள தொளன்னு புடிச்சிருந்த இரண்டுபேரும்கூட உங்க ஆளுங்க தான ஆஃபீசர்.

குண்டூஸ் அது இதுன்னு பொண்டாட்டிய ஜாகிங் வரவச்சு கடத்தல்காரனுக்கு வழிபண்ணிக் குடுத்த முதல் புருஷன் நீங்கதான்” என்றாள் இடுப்பில் கை வைத்து முறைத்து.

“நான் என்னடி பண்ணட்டும் அவனுங்க உன்னையத்தான் கடத்தனும்னு நான் ப்ளான் போட்டா, இடையில உன் தங்கச்சி வாலண்டியரா வம்புல வந்து சிக்கி  இருக்கா. பாவம் சோம சுந்தரம் அய்யா ஹாஸ்பிட்டல்ல இருக்கார்” என்றவன்,

“உங்க அப்பா கிட்ட நெருங்கி இருப்பார் வா வெளில போவோம்” என்று இழுத்துக்கொண்டு வெளியில் வர,

“பார்த்து பார்த்துப் போட்ட திட்டத்தைப் பாழாக்கினவன சும்மா விடச்சொல்றியா பகவான்” என்று இன்னமும் அடங்காமல் எகிறிக் கொண்டிருந்தார் சுயம்புலிங்கம்.

“வீடியோ ஆதாரம் எங்க இருக்குன்னு கேட்டியா? என்ற சுயம்பு லிங்கத்தைப் பார்த்து, “ஓ நல்லா கேட்டனே” என்ற வெற்றி நக்கலாய் இழுக்க, 

“வீடியோ ஆதாரம் மட்டுமில்ல. தேஜஸ்வினி கைப்பட எழுதின தற்கொலைக் கடிதமும் என் கிட்டதான் இருக்கு” என்று உள்ளே தன் படையுடன் நுழைந்தான் டிஜிபி செழியன். 

அந்த வணிக வளாகம் முழுவதையும் சுற்றி வளைத்திருந்தது செழியனின் தனிப்படை.

தற்கொலைக் கடிதம் என்றதிலேயே அதிர்ந்து எழுந்திருந்தார் முருகானந்தம்.

இதை முற்றிலும் எதிர்பார்க்காத பகவான் தாஸ் பேடி, “போலீஸ் வர வரைக்கும் என்னடா பண்ணிட்டு இருந்தீங்க? என்று குரல் கொடுக்க, தடித்தாண்டவராயன்கள் அத்தனை பேரையும் வளைத்திருந்தது போலீஸ். சங்கரும் மோனியும் கூட இருவரை வளைத்துப் பிடித்திருக்க, அதிர்ந்தான் பகவான் தாஸ்.

“உன் பொண்ணு என் கஸ்டடில மறந்துட்டியா டிஜிபி!” என்றவன் “விக்டர்… அவளை பின்வாசல் வழியா இழுத்துட்டு வா நாம போகலாம்” என்று தான் மட்டும் தப்பிக்கப் பார்க்க, 

“அவ புருஷன் சம்மதமில்லாம அவ நிழலைக்கூட நீ தொட முடியாது பகவான் தாஸ்” என்று சிரித்தான் டிஜிபி செழியன்.

அதிர்ந்து, “விக்டர்…” என்று குரல் கொடுத்தவன் பின்னால் திரும்ப, “சாரி பாஸ்!” நான் நினைச்சதாலதான் என் பொண்டாட்டி இங்க இருக்கா. நீங்க நினைச்சதால இல்ல” என்ற வெற்றி பகவான் தாஸின் கையில் விலங்கிட்டு முடித்திருந்தான்.

அதுவரை நடப்பதை நம்ப முடியாமல் பார்த்திருந்த சுயம்புலிங்கம் உன் சின்னப் பொண்ணை மறந்துட்டியா டிஜிபி? காலம் முழுக்க அவ திரும்பியே கிடைக்க மாட்டா. மரியாதையா அவனை விடு! என்று கத்த, செழியன் முகம் மகளின் நினைவில் இலேசாக வாடியது. 

அதில் அம்முவும் வெற்றியும் பதற,

“அது… அந்த பயம் இருக்கணும். மரியாதையா பகவான ரீலீஸ் பண்ணிட்டு அந்த வீடியோ ஆதாரத்தைக் குடுத்துட்டு உன் பொண்ணை மீட்டுக்கோ” என்றார் மிதப்பாக.

“ரொம்ப நாளா தேடப்படும் குற்றவாளி பகவான் தாஸ். அவனை விட முடியாது. அவனை விட்டா என் பொண்ணு போல நிறைய பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போகும். அதற்கு எக்காரணம் கொண்டும் நான் சம்மதிக்க மாட்டேன்” என்று மறுத்த செழியன்,

“வேணும்னா வீடியோ ஆதாரத்தை தந்திடுறேன்” எனவும், “அந்த தற்கொலைக் கடிதமும்” என்று முந்திக் கொண்டார் முருகானந்தம்.

“இரண்டுமே தந்திடறேன்” என்றதும் தாங்கள் வரை தப்பித்தால் போதும் என்று இருவரும் தலையாட்ட, 

“எனக்காக ஒன்னு மட்டும் செஞ்சா போதும். உங்களால கல்குவாரில விழுந்து இறந்து போன அந்த மூணு பொண்ணுங்க கிட்ட மட்டும், பூப்போட்டு,  நீங்க இரண்டுபேரும் மனசார மன்னிப்புக் கேட்டகணும். 

இல்லனா நான் செய்யப்போற பாவத்துக்கு அவங்க ஆத்மா என்னை மன்னிக்காது. கல்குவாரில என் பொண்ணையும் ஒப்படைச்சிருங்க” என்ற உருக்கமாகப் பேசியச் செழியன் பகவான் தாஸை மட்டும் கைது செய்து அழைத்துக் கொண்டுச் சென்றான்.

மறுநாள் அனைவரின் வீட்டிலும் பரபரப்பாக அவசரச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

//அமைச்சர் முருகானந்தம் மற்றும் கல்வி அமைச்சர் சுயம்பு லிங்கம் சொந்தக் கல்குவாரி குட்டையில் விழுந்து தற்கொலை//

//தேஜஸ்வினி வழக்கில் திடீர் திருப்பம்// 

கொலையா தற்கொலையா என்று தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட தேஜஸ்வினி வழக்கில் முக்கியத் திருப்பமாக அவரது தற்கொலை கடிதம் கைப்பற்றப் பட்டிருக்கிறது.

அதில் கல்லூரியை தன் பெயருக்கு மாற்றித்தரச்சொல்லி வற்புறுத்தியாக அமைச்சர் முருகானந்தத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவரது மகனே தந்தைக்கு எதிராக சாட்சியமும் அளித்திருக்கிறார்.

கல்வி அமைச்சர் சுயம்பு லிங்கத்திற்கும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் முக்கியத் தொடர்பு இருப்பதாக, அவரது மருமகனின் அந்தரங்க வீடியோ ஆதாரங்கள் மற்றும் போதைப்பொருள் தடவப்பட்ட புத்தகங்கள் தயாரிப்பு வீடியோக்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

இது தொடர்பாக திரு எஸ் பி வெற்றி தமிழ்ச்செல்வன் விசாரிக்கச் சென்றபோது கைது நடவடிக்கைக்குப் பயந்து கல்குவாரி குட்டையில் விழுந்து இருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இருவரும் நல்ல போதையில் வேறு இருந்துள்ளனர்.

காவலர்களும், திரு எஸ் பி தமிழ்ச் செல்வன் அவர்களும் உடனே தண்ணீரில் குதித்தும், அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் இறுதியில் பிணங்களாகவே மீட்டெடுத்தனர். 

(அதற்கான வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப் பட…)

“ஏன்டா, மாமனும், மருமகனும் சேர்ந்து ஆதாரத்தைத் தரேன்னு பொய் சொல்லி வரவச்சி,  ஆளுக்கொருத்தனை தண்ணில புடிச்சித் தள்ளினதுமில்லாம, 

தண்ணிலக் குதிச்சி கற்றோடு குழலாட ஆட ன்னு பாட்டுப் பாடிட்டு மீடியா முன்னாடி என்னமா நாடகமாடுறீங்கடா. 

டேய் மகனே! நிஜமா அவங்களைத் தேடின?” என்றான் கார்த்தி கேலியாக. 

“நிஜமாதான் தேடினேன் தகப்பா! எங்கயாச்சும் தலை தெரிஞ்சா திருப்பி முக்கனுமில்ல” என்று சிரித்தவனை பக்கவாட்டிலிருந்து முறைத்துக் கொண்டிருந்தாள் அவனது மனையாள்.

‘ரொம்ப சூடா இருக்காளே! மலையேறுவாளா? ம்கூம்… இன்னைக்கும் நீ பட்டினிதான் வெற்றி’ மனையாளின் பார்வை சொன்ன செய்தியில் சோகத்துடன் மீண்டும் தொலைகாட்சியின் பக்கம் திரும்பிக் கொண்டான்.

“இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, வெகுநாட்களாக காவல் துறையால் தேடப்பட்டு வந்த போதை மருந்துக் கடத்தல் தலைவன் பகவான் தாஸ் பேடி கைது செய்யப்பட்டுள்ளான்.

இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்தே பல கல்லூரி மாணவர்களிடம் இந்த ஈனச் செயலை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களின் முக்கிய டார்கெட்டாக கல்லூரி பெண்களே இருந்துள்ளனர். 

இந்த வழக்கின் மூலம் தமிழ்நாட்டில் அவ்வப்போது கல்லூரி பெண்கள் காணாமல் போன விவகாரத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘கருமுட்டை கருப்புச் சந்தை’’

இப்படி போதைக்கும் அடிமையாகும் பெண்களைக் கடத்தி, மாதாமாதம் வெளியாகும் அவர்களது கருமுட்டையைத் திருடி பல IVF சென்டர்களுக்கு சட்ட விரோதமாக விற்று வந்த பயங்கரம். 

‘பகவான் உமன்ஸ் ஹெல்த் கேர் அண்ட் ஃபெர்டிலிட்டி’ என்ற பெயரில் மும்பையில் பெரிய மல்டி ஃப்ளக்ஸ் மருத்துவமனையையே நடத்தி வந்துள்ளான் இந்த பகாவான் தாஸ் பேடி. 

இந்த மருத்துவமனையில்தான் ஒரு தளம் முழுவதையும் இப்படிப் பட்ட பெண்களை அடைத்து பராமரித்து வந்துள்ளான்.

இங்கு பல வெளிநாட்டினரும் தங்கி இருந்து குழந்தை வரம் பெற்றுச் செல்வதால் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த விசயம் காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் உலகிற்கு தெரிய வந்துள்ளது.

இந்தியர்கள் அழகு. அதிலும் தென் இந்தியர்கள் மிக அழகு. தென் இந்தியப் பெண்கள் முக்கியமாகத் தமிழ்நாட்டுப் பெண்களின் கருமுட்டைகளை அதிக விலைக் கொடுத்து வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர் வெளிநாட்டினர்.

தற்பொழுது பகவான் பெர்டிலிட்டி செண்டர் நிரந்தரமாக மூடப்பட்டு, அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்ட மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மருத்துவ மனையின் ஒரு தளத்தில் அடைக்கப்பட்டிருந்த பெண்களும் மீட்கப்பட்டனர்.

இந்த உண்மையை வெளிக்கொண்டு வர, அனஸ்தீஸ்யா தனக்கு அலர்ஜி என்று மறுத்து, தன்னையே இந்த வலிமிகுந்த கருமுட்டைப் பரிசோதனையில் ஆட்படுத்தி ஆதாரங்களைத் திரட்டி வந்த மருத்துவ மாணவியான மிருத்யூஸ்ரீக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டிலிருந்து அவ்வப்போது காணாமல் போகும் கல்லூரி மாணவிகளைக் கண்டறிய பெற்ற மகளையே பணயம் வைத்து இந்த உண்மையெல்லாம் வெளிக்கொணர்ந்த டிஜிபி செழியன் அவர்களுக்கும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

கார்த்தி தொலைக்காட்சியை அணைத்து விட்டான்.

மிருத்யூஸ்ரீ தமக்கையின் மடியில் தளர்வாகப் படுத்திருக்க அம்முவின் விரல் அவள் தலையைக் கோதி கொடுத்துக் கொண்டிருந்தது.

தங்கை செய்த செயலில் அவளது அனைத்துக் கோபமும் பறந்தோடியிருந்தது.

இன்று அதிகாலை அதிரடிப் படையுடன் விமான நிலையத்தில் தளர்வுடன் இறங்கிய தங்கையை முதல் ஆளாக ஓடி அவள்தான் ஆரத் தழுவி இருந்தாள். 

விழிநீர்த் துளிர்க்க, “ஏன்டி இப்படி பண்ணின, மாமா சொன்னா போல ஆபத்துன்னவும் சிக்னல் குடுத்துருக்கலாம்ல. மாமா எல்லாம் தெளிவா சொல்லிதானே அனுப்பினாங்க.” என்று கடிந்து கொண்ட தமக்கையை அணைத்துக் கொண்டவளின் விழிகளிலும் கண்ணீர்தான்.

“என்ன மன்னிச்சிட்டியாக்கா?” ஏக்கமாக ஏறிட்டத் தங்கையை முதுகை வருடி ஆறுதல் அளித்தவள், “அதுக்காக இப்படி பண்ணுவியா பைத்தியமே! உனக்கு எதாச்சும் ஆகி இருந்தா…?” அந்த நினைவு தந்த பதற்றத்தில் அவள் கேள்வியுடன் நிறுத்த,

“உன் தங்கச்சி பயந்தவதான் கா. ஆனா கோழை இல்ல” என்று மெதுவாய் இதழ் பிரிக்க அவள் கன்னத்தில் முத்தமிட்டு வாரி அணைத்துக் கொண்டவள் அருகில் நின்றிருந்தக் கணவனை முறைக்கவும் தவறவில்லை.

அன்று தேஜஸ்வினியின் வீட்டிலிருந்து மிருது கிளம்பும் போதே, அவள் உடையில், கழுத்துச் செயினில் என்று அங்கங்கே சிறிய ரக கேமராக்களை பொருத்திதான் அனுப்பி வைத்திருந்தான் வெற்றி. 

ஆபத்து என்றால் அவளது கையைக் குலுக்கினாளே தனிப்படைக்கு அலாரம் அடிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிவைஸ் ஒன்றையும் அவளது மணிக்கட்டில் வெளியில் தெரியாதவாறு பொருத்தியே அனுப்பி இருந்தான்.

ஆனால் மிருத்யூதான் அங்கிருக்கும் பெண்கள் பயந்து வாயே திறக்காததில், அங்கு என்னதான் நடக்கிறது என்பதைக் கண்டறிய கடைசி கட்டம் வரை அறிந்து கொள்வது என்று முடிவெடுத்து தனிப்படைக்கு எச்சரிக்கை விடுக்காமல் விட்டிருந்தாள். அவளுக்கும் கருமுட்டை வெளியாகும் நாள் என்பதால் அது சாத்தியமாயிற்று.

அப்போதிருந்து கணவனை முறைத்துக் கொண்டிருக்கிறாள் எழிலரசி. முதலில் சாதாரணமாக நினைத்துத் தான் அவள் இயல்பாக இருந்தது. 

ஆனால் மீட்கப்பட்ட பெண்களின் வாயிலிருந்து அந்த மருத்துவமனையின் கோடூரங்களையும், சில பெண்கள் விருப்பமின்றியே காலம் முழுக்க வாடகைத் தாயாக்கப் படுவதையும் கண்டவளால் அதை சாதாரணமாகக் கடந்து வர முடியவில்லை.

இப்படி ஒரு ஆபத்தான வேலையில் தங்கையை இறக்கியவனை எப்படி மன்னிப்பது? இதில் தந்தையும் கூட்டு வேறு. கணவனிடமிருந்து பார்வை தந்தைக்கு மாற, 

“இங்கப்பாரு அம்முக்குட்டி இதுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல. எல்லாம் உன் புருஷன் தான். 

ஏர்போர்ட்ல உன்னை சிக்க வச்சதுங்கூட எனக்குத் தெரியாது. இந்த பயதான் உன்னை இந்த மிஷனுக்குள்ள இழுத்துட்டு வந்துட்டான். 

கைல அடிபட்டு கிடந்தானே அன்னைக்குதான் என்கிட்ட எல்லா உண்மையும் சொன்னான்.

ஒரு டிஜிபி அவர் பொண்ணையே நம்பி பணயம் வைக்கலைன்னா ஊரான் பொண்ன எப்படி இதுல இறக்கிறது அப்படி இப்படின்னு பேசி என்னையும் சம்மதிக்க வச்சிட்டான்” என்று வெற்றியை கோர்த்து விட்டு அவன் ஜகா வாங்க முயற்சிக்க, மகளுடன், கார்த்தியும் சேர்ந்து இருவரையும் முறைத்தான். 

“தகப்பா இப்போதானே எல்லாத்தையும் சொல்லி கால்ல விழுந்து உங்களை மலை இறக்கினேன். மீண்டும் மீண்டுமா… வேணாம் நான் அழுதுருவேன்” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன வெற்றி, உண்மை தெரிந்து கோவித்துக் கொண்ட கார்த்தியை சமாதனப் படுத்த பெரும்பாடு பட்டிருந்தான்.

செழியனுக்கு மகளின் கோவத்தில் வெற்றியை எப்படியாவது விளக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம். அதில்,

“பகவான் தாஸோட கவனத்தை உன்மேல திருப்பறதுதான் எங்க நோக்கம். அவனுங்க பார்வையில நீ படணும்னுதான், ஏர்போர்ட், ஹாஸ்பிட்டல்னு உன்னை, வெற்றி மாறு வேஷத்துல சுத்தி சுத்தி வந்தான். 

ஒன்னு வெற்றிதான் விக்டர்னு அவனுங்க கண்டுபிடிச்சிட்டா அவன் பொண்டாட்டின்னு உன்னைக் கடத்துவானுங்கன்னு நினைச்சோம். இல்ல விக்டராவே இருந்தாலும் அவனுங்க சரக்க டபுள் கிராஸ் பண்றாபோல நாடகமாடி உன்னைக் கடத்த வைக்கிறதுதான் எங்க ப்ளான். 

நீ தைரியசாலி எதையும் சமாளிச்சிடுவ. அதுவும் உன் பக்கத்துல வெற்றி இருக்கும்போது எதும் நடந்திடாதுன்னுதான் இந்த முடிவெடுத்தோம். அதுக்காகத்தான் வெற்றி அவசரம் அவசரமா உன்னைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.

ஆனா இதுல மிருது சிக்கினது எதிர்பார்க்காத ஒன்னு. அதுவும் அதையும் என் கிட்ட சொல்லாம அவன் ஒத்தை ஆளாதான் சமாளிச்சான். 

ஒருபக்கம் நீ, ஒரு பக்கம் உன் தங்கச்சி, ஒரு பக்கம் பகவான் தாஸ், மினிஸ்டர்ஸ்னு எவ்ளோ அழுத்தம். அத்தனையும் ஒத்தை ஆளா சமாளிச்சவனை மன்னிக்கக் கூடாதா?” மருமகனுக்காக மகளிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தான் செழியன்.

திவ்யபாரதிக்கும் செழியன் மீது கோபமே. திருமணம் முடியாத பெண். இப்படி ஒரு வலி நிறைந்த சோதனையில், தாயாய் அவள் உள்ளம் பதறத்தான் செய்தது. ஆனால் செழியன் எப்படியோ மனைவியை சமாளித்திருந்தான்.

அதுவும் தன்மேல் கொண்ட பழிவெறிதான்,  தன் பெண்ணின் இந்த நிலைக்கு காரணம் என்றதில் இன்னுமே கழிவிரக்கத்தில் மூழ்கியவளை செழியன்தான் மீட்டுக் கொண்டு வந்திருந்தான்.

மிருத்யூ மடியிலிருந்துக் கொண்டு தமக்கையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவள், “மாமா பாவம்கா. நான் பண்ணதுக்கு மாமா என்ன பண்ணுவார் பாவம்” என்று கெஞ்ச, 

“மாமா பாவம்…அம்முக்குட்டி” என்றது மயிலாவும்.

அதில் அம்மு இலேசாகச் சிரித்துவிட, “எல்லாரும் குடும்பத்தோட ஒரு வெகேஷன் போவமா?” என்றான் கார்த்தி. மருமகளை அவன் சமாதானப்படுத்தும் வழியே தனிதானே!

எதற்கும் தலைசாய்க்காதவள், மாமனின் ஆசைக்கு இறங்கிவர, “போலாம் மாமா” என்றதும் “அப்பாடா…” என்று மூச்சு விட்ட வெற்றி,

“ஆமா குடும்பமா இது! புதுசா கல்யாணம் பண்ணவங்க இன்னும் ஹனிமூன் போகலையே. அனுப்பி வைப்போம்ங்கிற எண்ணம் இருக்கா? குடும்பத்தோட வெகேஷன் போறாங்களாம்” என்றவன்‌ முதல் ஆளாய், “ஓய் சின்னக்குட்டி ஓடு கிளம்பு” என்றான் கொழுந்தியாவிடம்.

“ஏன்டா மகனே, இருக்க நிலைமைல ஹனிமூனுக்கு ஆசைப்பட்ட அப்புறம் உனக்கு என்னைக்கும் தனி மூனுதான் யோசிச்சிக்கோ…” என்று எச்சரிக்க, ‘அது என்னவோ உண்மைதான்’ என்று வாய்க்குள் முனுமுனுத்தான் வெற்றி.

“எல்லாரும் போங்க.. என்னால வரவே முடியாது. நிறைய கேஸ் பெண்டிங்ல இருக்கு” என்று தலைகீழாய் நின்ற செழியனை, “நாட்டையே உன் தலைமேல தூக்கி வைக்கலடா. நீ இங்க இல்லாட்டியும் இங்கேதான் இருக்கும் ஓடிடாது” என்று அடக்கி இருந்தான் கார்த்தி.

“இங்கு அங்கு என்று மண்டையை உருட்டி கடைசியில் துருவனையும் மயிலாவையும் விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்பதால் இயற்கை எழில் கொஞ்சும் சொந்த ஊரான மலைகிராமத்திற்கே செல்வதென்று முடிவெடுக்கப் பட்டது.