விக்னேஷ் கார்த்திக், ப்ரதீபா, மேலாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் சிலரும் வாயிலில் காத்திருக்க, வந்து நின்ற வோல்க்ஸ்வேகனில் இருந்து இறங்கினாள் நீலாயதாட்சி.
இறங்கும் போதே வாசல் பக்கம் இல்லாமல் அதற்கு எதிர்ப்புறமாக இறங்கி நின்றவள் நிதானமாக அந்த அலுவலக வளாகத்தை ஒரு முறை கண்களால் வலம் வந்தாள். அலுவலகத்தின் முன்னே இருந்த க்ருஷ்ணன் ராதை சிலையும் அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நீரூற்றும் எனப் பார்த்து ரசித்தவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருக்க, சற்று தள்ளி வாயிலில் மூன்று படிகளுக்கு மேலான இடத்தில் நின்றிருந்தவனுக்கு அவளது கண்ணாடியை ஏற்றி நெற்றிக்கு மேல் விட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது.
அவள் கண்கள் கண்ணாடிக் கவசத்தைக் கழற்றியிருக்கும் நேரம் அவள் கண்களைக் காணும் வாய்ப்பு இல்லையே என அவன் நினைத்த வேளையில் கண்ணாடியை மீண்டும் அதனிடத்தில் பொருத்தி விட்டு அலுவலகத்தை நோக்கித் திரும்பி இருந்தாள்.
சந்தன நிறச் சட்டை, ஆண்களின் சட்டை போல் காலருடன்…இடையில் ப்ரௌன் நிறக் கால்சராய்…அதே ப்ரௌன் நிறத்தில் கோட் அவளது இடது கையில் மடித்துத் தொங்க விடப்பட்டிருந்தது.
கோட் பேன்ட் சகிதம் வந்தவள் வெம்மை தாளாமல் கழற்றி இருப்பாள் எனத் தோன்றியது அவனுக்கு…
சில அடிகள் நடந்து வந்து படிகளில் ஏறியவளைப் பூங்கொத்துடன் எதிர்கொண்டவன் “வெல்கம் டூ அவர் கம்பனி மிஸஸ் சுப்ரமணியன்” எனவும் நன்றி கூறியவளின் கண்ணசைவில் அவளுடன் வந்த மற்ற பெண் அந்தப் பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.
கையால் கூட வாங்கி மற்றவளிடம் கொடுக்க முடியாதா என அவனுக்குள் ஒரு கோபம் மூண்டாலும் நிலைமையை நினைத்தும் ‘பாஸ்! என்ன நடந்தாலும் அன்னிக்கு மாதிரிக் கோபப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துடாதீங்க…கொஞ்சம் அடக்கி வாசிங்க’ என்று ப்ரதீபா செய்திருந்த எச்சரிக்கை நினைவில் இருந்ததாலும் முயன்று தன்னை அடக்கிக் கொண்டான்.
முக்கியமானவர்களை அறிமுகப் படுத்தி முடித்ததும் ஒரு தலையசைவுடன் நீலாயதாட்சி மெல்ல நடக்க ஆரம்பிக்க வேக நடையுடன் அவளுக்கு முன்னதாக வழிகாட்டிச் செல்ல ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்று காரிடரின் இடது பக்கம் திரும்ப அந்தப் பகுதியில் இடது புறத்தில் அவளுக்கான அறை அமைக்கப்பட்டு இருந்தது…கதவில் நீலாயதாட்சி சுப்ரமணியன் என்ற பெயர்ப் பலகையுடன்…
அந்தப் பலகையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவள் அறைக்குள் நுழைய அவள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் என நினைத்தவன் உடன் வந்த பெண்ணிடம்,
“ஒரு நிமிஷம்!” என்றான்.
அந்தப் பெண்ணை அவன் சந்திப்பின் போது வீடியோவில் பார்த்திருக்கிறான் என்றாலும் அவள் யார், பெயர் என்ன போன்ற விவரங்கள் தெரியாததால்
“நீங்க?” என இழுக்க,
“அயம் தட்சணா! செகரட்டரி டூ நீலா மேம்” என அவனுக்காகக் கைநீட்ட அவனும் அவள் கைபற்றிக் குலுக்கினான்.
“ஓகே மிஸ் தட்சணா! உங்க மேடம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனப்புறம் சொல்லுங்க. ஐ’ல் கம் அண்ட் மீட் ஹெர்.”
“ஓகே மிஸ்டர் விக்னேஷ்”
ஆனால் அப்படிச் சந்திக்கும் வாய்ப்பை அந்த நீலாயதாட்சி அவனுக்குத் தரவே இல்லை.
மனதுக்குள் அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் ஆவல் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் தன்னை மறந்து அதில் மூழ்கிப் போனான்.
பார்த்துக் கொண்டிருந்த வேலையை மூடி வைத்து விட்டு, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவனுக்கு அப்போதுதான் தான் சொல்லி விட்டு வந்தது நினைவு வந்தது. நேரத்தைப் பார்த்தவன் ஒன்றரை மணி நேரம் கடந்திருந்ததைக் கண்டு முகம் சுருக்க அந்த நேரம் கதவைத் தட்டி விட்டு ப்ரதீபா உள்ளே வந்தாள்.
“ஓ! தெரியலையே பாஸ்…ஆனா நான் இவ்வளவு நேரம் அவங்க ரூம்ல இருந்துட்டுதான் வந்தேன். வந்ததும் அந்த தட்சணா என்னை வரச் சொல்லிட்டாங்க”
நெற்றி சுருங்க யோசித்தவனுக்கு அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்த்திருப்பாளோ எனத் தோன்றியது…ஆனால் அது எப்படி முடியும்? ஒரே அலுவலகத்தில் ஒரே தொழிலைப் பார்க்கும் பங்குதாரர்கள் ஒருவரை ஒருவர் பாராமல் எத்தனை நாட்கள் தவிர்த்து விட முடியும்?
ஒருவேளை தன் மனதின் ஆவல் கண்களின் வழி கசிந்து விட்டதோ… அதை அவள் கண்டுபிடித்து விட்டாளோ… என்னவோ அவனுக்கு அவனை அவள் அவமானப்படுத்தி விட்டது போல் தோன்ற மனதுள் கோபம் கனன்றது.
அவன் முகம் பார்த்தே அதைப் புரிந்து கொண்ட ப்ரதீபா “டெலிபரேட்டா ( வேணும்னே) செய்திருக்க மாட்டாங்க பாஸ்…நைஸ் லேடிதான்…இவ்வளவு நேரம் கம்பனி குறித்த விவரங்களைத்தான் கேட்டுட்டு இருந்தாங்க…டீயை எடுத்துக்கோங்க பாஸ்… ஆறுது”
அவன் எடுத்துக் கொள்ளவும் “ஓகே பாஸ்! என்னை மறுபடி வரச் சொல்லி இருக்காங்க…நான் போகணும்…உங்களுக்கு இன்னிக்கு எங்கேஜ்மென்ட்ஸ் எதுவும் இல்லைல்ல…நான் அங்க இருக்கிறது உங்களுக்குப் ப்ரச்சனை இல்லைல்ல பாஸ்”
இந்த அம்மாள் வருகிறாள் என்பதற்காக மற்ற வேலைகளை ஒத்திப் போட்ட தன் மடத்தனத்தை நினைத்து யோசனையுடனே ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தான் அவன்.
மீண்டும் தன் கணினியில் கவனம் செலுத்த ஆரம்பிக்க அவனால் மனதை ஒருமிக்க முடியவில்லை.
எழுந்து சென்று ஜன்னலின் அருகே நின்றான். காலநிலை நன்றாகவே இருந்ததால் ஏசி போட்டிருக்கவில்லை அவன். ஜன்னல்கள் விரியத் திறந்திருக்க ஜன்னலின் அருகிலேயே இருந்த பெரிய தூங்குமூஞ்சி மரம் சோம்பலாய் அவனைப் பார்த்து விழித்தது.
மரத்தின் மீது பறவைகள் இரண்டு காதல் மொழி பேசிக் கொண்டிருக்க பல ஆண்டுகள் முன் மறைந்து விட்ட மனைவியின் நினைவில் முகம் கனிந்தது அவனுக்கு…
அவளுக்குப் பறவைகள் என்றால் கொள்ளை இஷ்டம். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்காவது குயில் கூவினால் அதைத் தேடத் தொடங்கி விடுவாள்… ரசனை நிறைந்த மனம் அவளுக்கு… ‘நான் எதிரில் இருக்க வேறு எதையோ தேடுகிறாயா’ என்பது போல் அவன் முறைத்தால் ‘என்ன கார்த்திக்’ என்று சிணுங்குவாள்…அந்த அழகு… அப்பப்பா…
அவன் எண்ணங்களைத் தடை செய்வது போல் இன்டெர்காம் கிணுகிணுத்தது.
நடந்து மேஜையின் அருகே சென்றவன் ரிசீவரைக் காதுக்குக் கொடுத்தான்.
அரை வினாடி இடைவெளி விட்டவள் “நாம இனி அடுத்தடுத்து நிறையப் பேசிப் பழக வேண்டியதிருக்கும். சோ இந்த மிஸஸ் சுப்ரமணியன், மேடம் இது மாதிரி ஃபார்மாலிடீஸ் எல்லாம் விட்டுட்டு லெட் அஸ் கால் ஈச் அதர் பை அவர் ஃபர்ஸ்ட் நேம்ஸ்… (நாம ஒருத்தரை ஒருத்தர் பேர் சொல்லிக் கூப்பிட்டுக்கலாம்) நான் உங்களை மிஸ்டர் விக்னேஷ்னு கூப்பிடுறேன்…நீங்க என்னை மிஸஸ் நீலான்னு கூப்பிடலாம்.இஸ் இட் ஒகே ஃபார் யூ? (உங்களுக்கு சம்மதமா?)”
இவர்களுக்கிடையில் எப்படிக் கூப்பிடுவது, எப்போது சந்திப்பது, என்ன பேசுவது என எல்லாவற்றையும் இவள்தான் முடிவு செய்வாள் போல் என எண்ணியவன் அமைதியாக இருக்க “என்ன சொல்றீங்க மிஸ்டர் விக்னேஷ்… ஐயம் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆன்சர் ஹியர்”
“ஃப்ரீ ஆனதும்தானே…இதோ நான் ஃப்ரீ ஆனதும் கால் செய்துட்டேன். ஆனா இடைப்பட்ட நேரம் நீங்க எனக்காக வெயிட் பண்ணிகிட்டு இருப்பீங்கன்னு எனக்கு ஜோசியமா தெரியும் மிஸ்டர் விக்னேஷ்”
“இதுக்கு ஜோசியம் தெரியணும்னு அவசியம் இல்லை மிஸஸ் நீலா… அடிப்படை நாகரீகம் தெரிஞ்சாப் போதும்”
சட்டென வார்த்தையை விட்டு விட்டவன் அடுத்த கணமே தொலைபேசியின் அந்தப்புறம் உஷ்ணத்தை உணர்ந்தான்.
இரு பக்கமும் அமைதி நிலவ மேலும் வாக்குவாதத்தை வளர்க்க விரும்பாமல்,
“நான் இப்போக் கிளம்புறேன்… மேலதிக விவரங்கள் ப்ரதீபா உங்களுக்கு அப்டேட் செய்வாங்க”
“ம்ம்ம்…ஓகே”
வைத்து விட்டாள். பதிலுக்கு பதில் கொடுத்து விட்டாலும் அவசரப்பட்டுப் பேசி விட்டோமோ…இதனால் என்ன அனர்த்தம் விளையப் போகிறதோ என நினைத்தவன் இந்த சட்டென உணர்ச்சி வசப்படும் குணத்தைத் தான் எப்போதுதான் மாற்றிக் கொள்ளப் போகிறோமோ என நினைத்தவாறு பின்னந்தலையை அழுத்தமாகக் கோதி விட்டுக் கொண்டான்.
………………………………………………………………………………………………………….
நீலாயதாட்சியின் அறையில்,
“உங்க பாஸ் ரொம்பக் கோபக்காரரோ ப்ரதீபா?”
“அப்பிடி மொத்தமாச் சொல்லிட முடியாது மேடம்…ஆனாக் கோபம் வரும்தான்”
“ஓ…அவர் ஃபேமிலி எல்லாம் எங்க இருக்காங்க?”
“ஃபேமிலின்னா யாரைக் கேக்குறீங்க மேடம்?”
“அதான் அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்க, அப்புறம் மனைவி குழந்தைகள்னு…”
“அவங்கப்பா இப்போ உயிரோட இல்ல மேம்…அம்மா மட்டும் எங்கயோ ஆந்திராப் பக்கம் இருக்காங்க…எங்க என்னன்னு விவரங்கள்லாம் எனக்குத் தெரியாது…அப்புறம் ஆறு வருஷம் முன்னால அவர் மனைவி இறந்து போய்ட்டாங்க…அவங்க இறந்த பின்னாலதான் இந்தக் கம்பனில வந்து சேர்ந்தார். அதுல இருந்து தனியாதான் இருக்கார்.கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்ல…இங்க சென்னைல ஒரு மாமா இருக்கார்…அவர் பொண்ணுன்னு அப்பப்போ ஒருத்தவங்க இங்க வருவாங்க அவரைப் பார்க்க…ஆனா பாஸ் அவங்களை ரொம்ப என்கரேஜ் பண்ண மாட்டார்… வந்தா என்ன விஷயம்னு கேட்டு உடனே அனுப்பிடுவார்”
“அவர் வைஃப் எப்பிடி இறந்தாங்களாம்?”
“அது எனக்குத் தெரியாது மேம்…பாஸ்கு அவர் வைஃப் மேல ரொம்பப் பிரியம்…அவங்களைப் பத்திப் பேசினாலே ஒருமாதிரி ஆயிடுவார்… அதுனால நானும் எதுவும் கேட்டது இல்ல”
“ஓ அதுனாலதான் வேற கல்யாணம் எதுவும் பண்ணிக்கலையா?”
“ஆமா மேம்”
அந்த உரையாடல் அத்துடன் முடிந்தது.
………………………………………………………………………………………………………….
நீலாயதாட்சி ஜெர்மனியில் இருந்து வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டன. ஆனால் கார்த்திக்கும் அவளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது போல் சூழ்நிலைகள் ஏற்படவேயில்லை…அல்லது அவள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை… இன்னும் சரியாகச் சொல்வதானால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளை அவள் தவிர்த்து விட்டாள்.
ஆனால் அலுவலக இன்டெர்காமிலோ அலைபேசியிலோ அழைத்துத் தேவையான எல்லா விவரங்களையும் கலந்தாலோசிக்கத்தான் செய்தாள்.
எல்லா விஷயங்களும் வழமை போலவே நடைபெற்றன. அவன் காலை அலுவலகம் வந்தால் அவள் மதியம் வந்தாள். அவன் பொன்னேரியில் இயங்கும் தொழிற்சாலைக்கு மதியம் சென்றால் அவள் காலையிலேயே சென்று விட்டு வந்து விடுவாள்.
இடையில் அவன் தொழிற்சாலைக்குச் சென்றிருந்த போது நீலாயதாட்சியின் வருகையின் போது ஒரு தொழிலாளி புகை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அவனை எச்சரிக்கை செய்து இனியொரு முறை இப்படி நடந்தால் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்று அவள் உறுதியாகச் சொல்லி விட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டவன் அந்தத் தொழிலாளியை அழைத்து விசாரித்தான்.
“எப்பவும் இல்லைங்க எஜமான்… நூல் ஆலைல வேலை செய்யறது ரொம்ப அசதியா இருந்துச்சு…தூக்கமாவும் வந்துச்சு…அதுனால நல்லாத் தள்ளி உக்காந்துதான் பீடி குடிச்சுகிட்டு இருந்தேன்…ஆனா பார்த்துப்பிட்டுத் திட்டிட்டாங்க”
“நீ செய்தது தப்புதானே வாசு…பஞ்சும் நூலும் இருக்கிற இடத்துல பீடிக்கு என்ன வேலை…ஒரு பொறி காத்துல பறந்து வந்தாலும் எவ்வளவு சேதம் ஆகிடும்”
“தப்புதாங்கையா…இனி இப்பிடி நடக்காது”
அன்றிலிருந்து உள்ளே வரும் தொழிலாளர்களை சோதனை செய்து தீப்பெட்டியோ பீடிக்கட்டோ சிகரெட்டோ அவர்கள் கையில் இருந்தால் வெளியே கொடுத்து விட்டுத்தான் உள்ளே வர வேண்டும் என்று கட்டளையிட்டான் அவன்.
அன்று நீலாவிடம் பேசுகையில் அதை அவன் சாதாரணமாகத் தெரிவிக்க ‘ஓகே’ என்றோ ‘குட்’ என்றோ கொஞ்சம் அதிகமாக என்றால் ‘வெரிகுட்’ என்றோ அவள் சொல்வாள் என அவன் பார்த்திருக்க “இது முதல்லயே செய்திருக்க வேண்டியது…எப்பவுமே வருமுன் காப்பது நலம்” என அவள் பதிலிறுக்க அவன் முகம் கன்றிப் போனது நல்லவேளையாக இன்டெர்காம் என்பதால் அவளுக்குத் தெரியவில்லை.
“முன்னே எல்லாம் ஃபாலோ செய்து கொண்டிருந்த விஷயம்தான் மிஸஸ் நீலா…பின்னர் தொழிலாளர்கள் அவங்களாவே பொறுப்பாக நடந்து கொண்டதில் இந்த சோதனைக்கெனத் தனியாக நேரம் செலவழிக்கத் தேவையில்லைன்னு நிறுத்தி வச்சிருந்தோம்…நீங்க வார்ன் செய்த பையன் வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுது…அதுதான் அவனுக்குத் தெரியல… இப்ப மறுபடி செக்கிங் போட்டிருக்கேன்…இது பழகினதும் அகைன் ஸ்டாப் பண்ணிக்கலாம்”
அவர்கள் அடுத்த விஷயத்தை விவாதிக்க ஆரம்பித்தாலும் அவள் குரலில் இருந்த கடுமையே அவன் எண்ணத்தில் மையம் கொண்டிருந்தது.
இவள் இயல்பே இதுதானா…ஆனால் ப்ரதீபா வேறு மாதிரி சொல்கிறாளே… அவளிடம் நன்றாக இனிமையாகப் பேசுவதாக சொல்கிறாளே…பின் அவனிடம் மட்டும் ஏன் இந்தக் கடுமை…அவனுக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
மேலும் ஏன் நேரில் சந்திக்க மறுக்கிறாள் என்ற கேள்விக்கு முந்தைய நாள்தான் பதில் கிடைத்திருந்தது.
முந்தைய நாள் தீபா அவன் அறைக்கு வந்தாள். முதல் இரண்டு நாட்கள் அலுவலக வழமைகள் அறிந்து கொள்ளும் வரை தீபாவை உடன் வைத்துக் கொண்ட நீலாயதாட்சி அதன் பின் ‘ஹியர் ஆஃப்டர் யு கேரி ஆன் யுவர் ரொட்டீன்’ என்று அவளை அனுப்பி விட்டாள்.
நல்லவேளையாக அந்த இரு நாட்களும் அவனுக்கும் அதிக வேலைகளோ அப்பாயின்ட்மென்ட்டுகளோ இல்லை. இருந்திருந்தால் அவன் எரிச்சல் பட்டிருப்பான்… தேவையில்லாத ப்ரச்சனைகள் வந்திருக்கும்.
அவர்களுக்குள் நடந்த உரையாடலை அப்படியே அவனிடம் ஒலிபரப்பியவள்
“இன்னொரு விஷயம் பாஸ்”
“என்ன?”
“அவங்களைப் பத்தி ஒரு உண்மை பாஸ்”
நெற்றியை சுருக்கியவன் “என்ன உண்மை?” என
“அவங்களுக்கு ஆம்பளைங்கன்னாலே பிடிக்காதாம் பாஸ்”
“ஓ…………………..!”
அவன் ‘ஓ’ பெரிதாக இருக்கவும் அவள் வியப்பாகப் பார்த்தாள்.
“என்ன பாஸ் இவ்வளவு பெரிய ஓ போடுறீங்க?”
“இல்ல தீபா! மிஸஸ் நீலா எங்கிட்ட நடந்துகிற முறை பார்த்து நான் இந்த மாதிரி ஏதாவது இருக்கும்னு கெஸ் செய்திருந்தேன். சரி… ஏன் அவங்களுக்கு ஆண்கள்னா பிடிக்காதாம்…அண்ட் இதெல்லாம் உனக்கு யார் சொன்னா? அந்த தட்சணாவா?”
“தட்சணாவா? அது வாயிலயிருந்து இம்மி பேராது பாஸ்… பயங்கர சின்சியர் சிகாமணி…மேடம் மேடம்னு அவங்க கால்ல விழாத குறை…இதெல்லாம் இன்னொரு பொண்ணு நந்தினின்னு இருக்குல்ல அதுகிட்டப் போட்டு வாங்கித் தெரிஞ்சுகிட்டேன்”
ப்ரதீபா எப்போதுமே அவனது போட்டித் தொழிலதிபர்களையோ அல்லது அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட வாடிக்கையாளர்களையோ ஏதாவது கூட்டத்தில் சந்திக்கும் போது அவர்களது செயலாளர்களிடம் இதைப் போல் நைச்சியமாகப் பேசித் தகவல்களை அறிந்து வருவாள்.
மற்றவர்களின் பலவீனத்தைத் தெரிந்து வைத்திருப்பதும் வெற்றிக்குத் தேவையான விஷயம்தான் என்பதால் அவனும் தடுத்தது இல்லை, எனவே நீலாயதாட்சியின் ஆண்களின் மீதான் வெறுப்பின் காரணத்தைக் கேட்கத் தயாரானவன் ப்ரதீபா சொன்ன சில விஷயங்களில் அதிர்ந்து போய் நின்றான்.
ஆட்டம் போடு கூட்டம் போடு ஆடிபோகும் உன் ஆணவம் அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்
என்னை பார்த்து எந்த ஆணும் இந்த நாளும் எந்த நாளும் என்னை பார்த்து எந்த ஆணும் வணங்கி வந்து நின்று வந்தனங்கள் தந்து செல்லணும்
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய் மன்னவா ஓ மன்னவா வா வா