அத்தியாயம் 15

“கார்த்தி!  நீ ஊருக்குக் கிளம்பலையா?”

“ம்ம்ம்…கிளம்பணும்”

“பொருட்கள்லாம் பேக் பண்ணச் சொல்லட்டா?”

“இல்ல வேணாம்…நானே சொல்றேன் எப்பக் கிளம்புறேன்னு”

அவனை ஒரு நிமிடம் உற்று நோக்கியவர்

“சரி சாப்பிட்டுட்டு என் ரூம்க்கு வா…உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்”

கார்த்திக்குக்கு ஏதோ உறுத்தினாலும் ‘சரி என்னதான் சொல்கிறார்கள் கேட்போமே’ என்ற எண்ணத்தில் உணவு முடிந்ததும் அன்னையின் அறைக்குச் சென்றான்.

“வா! உட்கார் கார்த்திக்”

அமைதியாக அவன் அமர,

“இன்னிக்கு நரசைய்யா உன்னை அந்த மல்லையா பேத்தியோட பார்த்ததாச் சொன்னான்”

ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்தது அவனுக்கு…எப்படித் தவறு செய்தான்… எப்போதும் யாராவது இருக்கிறார்களா எனக் கண்காணித்துக் கொண்டே இருப்பான்…இன்று…

தாரிணியும்தான் இத்தனை அழகாக இருந்தால் அவன் என்ன செய்வான்… அவள் பிஞ்சு முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம், காலம், இடம், சுற்றுப்புறம் என அனைத்தும் மறந்துதான் போய் விடுகிறது அவனுக்கு… அதைப் போல் தன்னை மறந்து நின்றிருந்த நேரம் நரசைய்யா பார்த்து விட்டான் போல என எண்ணிக் கொண்டவனுக்குக் காதலியின் நினைவில் முகம் கனிந்தது.

அதையும் மனதில் குறித்துக் கொண்ட வசுந்தரா “க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தார்.

“ம்ம்ம்…என்ன கேட்டீங்க?”

“நீ அந்த மல்லையா பேத்தியோட பேசிகிட்டு இருக்கிறதை நரசைய்யா பார்த்துட்டு வந்து சொன்னான்னு சொன்னேன்”

ஒருவேளை தாங்கள் பேசிக் கொண்டிருந்ததைத்தான் பார்த்தானோ என நினைத்தவன் “பேசிகிட்டு இருந்தா என்ன தப்பு?அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்கு…மேல ஏன் படிக்கலைன்னு கேட்டுட்டு இருந்தேன்” என்றான்.

“ஓ! அவ்வளவுதானா…வேற ஒன்னும் இல்லையா…”

“வேற ஒன்னும்னா…நீங்க நினைக்கிற மாதிரித் தப்பால்லாம் எதுவும் இல்ல”

“ஓ…அப்ப சரி! நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ”

அடுத்த நாளே மிகக் கவனமாக யாரும் அறியாமல் தாரிணியைச் சந்தித்தான் கார்த்திக்.

“தரும்மா! நம்ம விஷயம் எங்கம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்”

அவள் முகத்தில் கலக்கமும் அதிர்ச்சியும் நிறைந்து அது விழி வழி நீராக வெளிப்படத் தொடங்கியதைக் கண்டவன் அவளைக் கைபற்றி இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“ஏய்! சீ… என்ன இது…அம்மாவுக்குத் தெரிஞ்சுருச்சுன்னு சொன்னேன்… உடனே அழுகையா…”

“அப்போ என்னை மறந்துடுவீங்களா கார்த்திக்?”

உயிரை உருக்கும் குரலில் கேட்டவளைப் பற்றியிருந்த கைகளால் ஒரு உலுக்கு உலுக்கினான்.

“லூசுப் பொண்ணே! மறக்கிறதுக்காடி இத்தனை நாள் லவ் பண்ணினேன்? அம்மாவுக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி இருக்கு… அதுனால டிலே பண்ணாம உங்க தாத்தாகிட்டச் சொல்லிக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணணும்னு சொல்ல வந்தேன்”

ஸ்விட்ச் போட்டது போல் அவள் முகம் மலர்ந்தது.

“நிஜமாவா? கனவு ஏதும் காண்றேனா…”

“என் மேல அத்தனை அவநம்பிக்கையா கண்ணம்மா”

“சே சே! அதெல்லாம் இல்லைங்க…நீங்க பெரிய இடத்துப் பிள்ள…நான் அன்னாடம்காய்ச்சி…இதெல்லாம் நடக்குமான்னு எந்த நேரமும் மனசுக்குள்ள ஒரு உறுத்தல்”

“ஒரு உறுத்தலும் தேவையில்ல…நான் இன்னிக்கு ராத்திரி வந்து உங்க தாத்தாவை பார்த்துப் பேசிடறேன்…இப்பக் கிளம்புறேன்”

அவன் கிளம்புகிறேன் எனச் சொல்லவும் அவள் முகம் காலை நேர ஆம்பலாய்க் கூம்பியது.

தலை கவிழ்ந்தவளின் நாடி பற்றி நிமிர்த்தியவன் அவள் கண்களுக்குள் பார்த்தான்.

“அந்த நரசைய்யாதான் நம்மைப் பத்தி அம்மாகிட்டப் போட்டுக் கொடுத்திருக்கான்… அவன் நகர முடியாதபடி அவனுக்கு வேலை கொடுத்திட்டு உன்னைப் பார்க்க நைசா வந்துட்டேன். ஆனா சொல்ல முடியாது…மூக்கில வேர்த்து என் பின்னால தேடிகிட்டு வந்தாலும் வந்திருவான்… அதுனாலதான் சீக்கிரம் கிளம்புறேன்னு சொல்றேன். எல்லாம் நம்ம இந்த மாதிரிப் பிரிஞ்சு போகாம ஒன்னா இருக்க ஏற்பாடு பண்ணத்தானே”

அவன் சொன்னது கேட்டு அவள் முகம் மலர்ந்தது.

“சரி கார்த்திக்! நீங்க கிளம்புங்க” என்றவள் அவன் கிளம்பியதும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு “எனக்கு உங்களை விட்டா யாரும் இல்ல கார்த்திக்… என்னைக் கைவிட்டுறாதீங்க” எனவும் அவள் கையை மென்மையாய் அழுத்திக் ‘கவலைப் படாதே’ என்ற சேதியைக் கை வழிக் கடத்தியவன் அவ்விடம் விட்டகன்றான்.

விழிகளில் நீருடன் அவனைப் பார்த்திருந்தவளும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.

சொன்னது போலவே யாருக்கும் தெரியாமல் அன்றிரவு மல்லையாவை வந்து சந்தித்தான்.

இந்நேரத்தில் யார் கதவைத் தட்டுவது என ஜாக்கிரதையாக வந்து கதவைத் திறந்த மல்லையா கார்த்திக்கைப் பார்த்ததும் திகைத்துப் போனார்.

“சின்ன பாபு! ஏமயிந்தி…இந்த ஆலசியங்கா எந்துக்கு ஒச்சாரு?” ( சின்னையா! என்னாச்சு? ஏன் இவ்வளவு லேட்டா வந்துருக்கீங்க?) அவருக்குப் பதற்றத்தில் தெலுங்கே சட்டென வரும்.

படபடவென அவர் பேசவும் “ஒரு முக்கியமான விஷயம் பேசணும் தாத்தா!” என்றபடி அவன் உள்ளே வரவும் படுக்கையறைக் கதவின் பின்னிருந்து தாரிணியும் எட்டிப் பார்த்தாள்.

நாற்காலியை நகர்த்தி அவன் அமரும் வண்ணம் போட்ட மல்லையாவின் முகத்தில் ஏகக் குழப்பம்.

நாற்காலியில் அமர்ந்து முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டவன் “நேரா விஷயத்துக்கு வந்துடறேன் தாத்தா! எனக்குத் தாரிணியை ரொம்பப் பிடிச்சிருக்குது… அவளைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன். உங்க பதில் என்ன?”

நடுநிசியில் வந்து பெண் கேட்டவனை வினோதமாகப் பார்த்தவர் “சின்ன பாபு… எனக்கு ஒன்னும் புரியலையே… அப்படியே இருந்தாலும் இந்த விஷயத்தை நாளை காலை பொறுமையா வந்து பேசாம இதென்ன அவசரம்?”

“அவசரம்தான் தாத்தா!” என்றவன் அவரிடம் தாங்கள் காதலிக்கும் விவரத்தையும் அது தன் அன்னையின் காதுகளை எட்டி விட்ட விவரத்தையும் சுருக்கமாகச் சொல்லி விட்டு, “என் ரூம்ல நான் படுத்திருக்கிறது மாதிரி செட் பண்ணிட்டு இங்க கிளம்பி வந்தேன். இப்ப சொல்லுங்க… தாரிணியை எனக்குக் கொடுப்பீங்களா?”

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் “சின்ன பாபு! உங்க குணத்துக்கும் அறிவுக்கும் அழகுக்கும் எத்தனையோ கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுங்க நான் நீன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க…நாங்க உங்க கால் தூசிக்கு கூட இணையாக மாட்டோம்…அது மட்டுமில்லாம பார்க்க வர்றதுக்கே இத்தனை ப்ரச்சனை…இதுல கல்யாணமெல்லாம்…”

“தாத்தா! உங்களுக்கே தெரியும் எங்கம்மாவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்… இப்ப பணம் வந்துட்டனால குணம் மாறிட்டாங்க…ஆனா நான் அப்படி இல்ல… எனக்கும் தாரிணிக்கும் கல்யாணம் ஆகிட்டா அப்புறம் யாருக்கும் பயப்படத் தேவையில்ல”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பக்கம் திரும்பித் தன் பேத்தியின் முகத்தைப் பார்த்தவர் அவர் சொல்லப் போகும் பதிலுக்காக அவள் தவிப்புடன் காத்திருப்பது கண்டு அவள் மனமும் புரிபட ஒரு முடிவுக்கு வந்தவர் கார்த்திக்கிடம் திரும்பினார்.

“என் பெரிய பேத்தி வாழ்க்கைதான் ஒன்னுமில்லாமப் போச்சு…என் சின்னப் பேத்தியாவது அவ மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணி சௌக்கியமா இருக்கட்டும். உங்க அம்மாவைச் சமாளிக்க முடியும்னா எனக்குப் ப்ரச்சனை இல்ல சின்ன பாபு”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் தாத்தா! கல்யாணம் முடிச்சு ரெஜிஸ்டர் பண்ணிட்டோம்னா அப்புறம் யாரைப் பத்தியும் கவலை இல்ல”

சில நிமிடங்கள் யோசித்தவர் “இல்ல பாபு ஒரு ப்ரச்சனை இருக்கு” என்றார்.

“என்ன ப்ரச்சனை தாத்தா?”

“ரெஜிஸ்டர் பண்ணணும்னா பதினெட்டு வயசு முடிஞ்சுருக்கணும்ல… தாரிணிக்கு இன்னும் பதினெட்டு முடியல”

மளமளவென எல்லாவற்றையும் மனதுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தவன் மலைத்துப் போனான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அதற்குள் படுக்கையறையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து நின்ற தாரிணி லேசான முகச் சிவப்புடன் “பதினெட்டு முடிய இன்னும் பதினெட்டு நாள்தான் இருக்கு தாத்தா” என மென்குரலில் மொழிய கார்த்திக் தன் கலக்கமெல்லாம் மறந்து வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தே விட்டான்.

அவன் சிரிக்கவும் முகம் முழுவதும் சிவந்து விட உள்ளே ஓடி விட்டாள் தாரிணி.

மல்லையாவின் பக்கம் திரும்பியவன் “அப்புறமென்ன தாத்தா…முதல்ல கல்யாணத்தைக் கோவில்ல வச்சு சிம்பிளா முடிச்சுறலாம்…அப்புறம் ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்… ஆனா இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது. பதினெட்டு வயசு முடிஞ்சு நாம கல்யாணம் முடிக்கிற மாதிரிதான் காட்டிக்கணும்… பதினெட்டு நாள் கழிச்சுக் காதும் காதும் வச்ச மாதிரி ரெஜிஸ்டர் பண்ணிடலாம்”

“இதெல்லாம் சரிபட்டு வருமா சின்னபாபு?”

“எல்லாம் சரியா வரும் தாத்தா…நீங்க இப்பவே நல்ல நாள் பாருங்க”

நாட்காட்டியை எடுத்து வந்து பார்க்க ஆரம்பித்தவர் முகம் மலர “நாளை மறுநாளே நிறைஞ்ச முகூர்த்த நாளாயிருக்கு பாபு”

“சூப்பர்…அப்ப நான் என்ஃப்ரெண்ட்ஸ்கிட்டப் பேசிட்டு உங்களுக்கு ஃபோன்ல தகவல் சொல்றேன்”

அவர் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டவன் எழுந்து தன்னவளைத் தேட அவள் மதிமுகம் படுக்கையறைக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

தலையசைத்து அவன் விடைபெற பேத்தியிடம் வந்த மல்லையா “எங்கிட்ட சொல்லவேயில்லையே தாரும்மா!”

“மன்னிச்சுருங்க தாத்தா! எனக்கு அவரைப் பிடிச்சுருந்தது. ஆனா இது நடக்குமா நடக்காதான்னு தெரியாம எனக்கு உங்ககிட்டச் சொல்லத் தயக்கமா இருந்துச்சு”

பேத்தியின் தலையை ஆதுரத்துடன் வருடியவர் “சரிம்மா! போய்ப் படு! எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று விட்டுத் தானும் படுக்கச் சென்றார்.

சொன்னது போலவே அலைபேசியில் தொடர்பு கொண்டு தன் ஏற்பாட்டு விவரங்களைத் தெரிவித்தான் கார்த்திக். அதன்படி குறிக்கப்பட்ட நாளன்று அதிகாலையில் திருமணத்துக்காகத் தயாராகி மல்லையாவும் தாரிணியும் கோவிலுக்குச் சென்றனர்.

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்ற தன்னவன் அழகில் தாரிணி மயங்கியது போல் அழகே ஓருவெடுத்து வந்தது போல் வந்து நின்ற தன்னவளின் அழகில் சிந்தை மயங்கினாலும் காரியத்திலும் கண்ணாக இருந்தான் கார்த்திக்.

மளமளவென வேலைகள் நடக்கலாயின…புரோகிதர் தெலுங்கில் சொன்னது புரியாவிட்டாலும் கார்த்திக்கைப் பார்த்து அவன் கையசைவிலும் கண்ணசைவிலும் சொல்வதைப் புரிந்து கொண்டு தாரிணியும் சடங்குகளைச் செய்ய அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் சதிபதியாகி இருந்தனர்.

மனையாளின் அழகை விழியால் பருகிக் கொண்டிருந்தவனிடம் வந்த மல்லையா “அடுத்து என்ன செய்யணும் சின்ன பாபு?”

கார்த்திக்கின் அருகில் நின்றிருந்த அவன் நண்பர்களில் ஒருவனான ப்ரபாகரன் “இன்கா ஏன்ட்டி தாத்தையா சின்ன பாபு அன்டாரு… கார்த்திக் அனி பேரு செப்பி பிலுவண்டி”( இன்னும் என்ன தாத்தா சின்ன பாபுன்னு கூப்பிடுறீங்க…பேரு சொல்லிக் கூப்பிடுங்க)

“ம்ஹூம்…நாக்கு எப்புடுனு சின்னபாபு…அந்தே!” (எனக்கு எப்பவும் சின்னபாபு…அவ்வளவுதான்)

அவர் சொன்னதைக் கேட்டவன் சிரித்துக் கொண்டே “இன்னும் என்ன தாத்தா…மாலையும் கழுத்துமா எங்க அம்மா முன்னால போய் நிக்க வேண்டியதுதான்”

அவன் சொன்னதைக் கேட்டவர் முகத்திலும், சற்று தள்ளி நின்றிருந்தாலும் இவர்கள் உரையாடலில் ஒரு காதைப் பதித்திருந்த தாரிணியின் முகத்திலும் சட்டென ஒருவித பயத்துடன் கூடிய அவஸ்தை தொற்றிக் கொண்டதைக் கார்த்திக் கவனித்தான்.

“ஒன்னும் பயமில்ல தாத்தா…எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

மற்ற நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்ப கார்த்திக், தாரிணி, மல்லையா, குழந்தை நால்வரும் காரில் அந்த அரண்மனை முன்பு வந்து இறங்கினர்.

வாயிலில் நின்றிருந்த நரசைய்யா படுக்கையறையில் முழுவதும் போர்த்திப் படுத்திருக்கிறார் என்று தான் நினைத்த சின்ன எஜமானர் கல்யாணக் கோலத்தில் வந்து நின்றதைக் கண்டு அதிர்ந்தாலும் சேதி சொல்ல வசுந்தராவிடம் ஓடினான்.

சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்து “அம்மா மிம்மனு மாத்ரமே பிலுசினாரு சின்னையா” ( அம்மா உங்களை மட்டும் கூப்பிடுறாங்க சின்னையா)

“அலா ஆயித்தே நேனு இக்கட லேனு…இலா வெல்லிப் போத்தானு அனி செப்பு (அப்பிடின்னா நான் உள்ள வரலை இப்படியே கிளம்புறேன்னு அம்மாகிட்டச் சொல்லு)”

அவன் மறுபடி உள்ளே ஓடி சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.

“அந்தரு ரம்மன்னி செப்பாரு சின்னையா” (எல்லாரையும் வரச் சொன்னாங்க சின்னையா)

வெற்றிப் பெருமிதத்துடன் மனையாளைப் பார்த்தவன் அவள் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு அரண்மனையினுள் நுழைந்தான்.

அரசாங்க அலுவல்கள் பார்க்கவென இருந்த தர்பார் அறையில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த பெரிய நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தாலும் வசுந்தராவின் முகத்தில் ஏமாற்றமும் ஆத்திரமும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.

தம்பதியின் இணைந்திருந்த கைகளை அசூயையுடன் பார்த்தவரின் கண்களைக் கூடச் சந்திக்க பயந்த தாரிணி தலை குனிந்தவாறே தன் கையைக் கணவனின் பிடியிலிருந்து உருவிக் கொள்ள முயன்றாள்.ஆனால் அவன் பிடி உடும்புப் பிடியாக அல்லவா இருந்தது.

“க்கும்” என்று தொண்டையைச் செருமிக் கொண்டவர் “இதுதான் நீ சொன்ன ஒன்னுமில்லையா கார்த்திக்?”

அன்னை கேட்ட போது மனதாரப் பொய்யுரைத்தோமே எனக் கொஞ்சம் குற்ற உணர்வாக இருந்தாலும் All is fair in love and war (போரிலும் காதலிலும் எதுவுமே தவறில்லை) இல்லையா என நினைத்துக் கொண்டவன் “நான் இவளைக் காதலிச்சேன்தான் அம்மா. கல்யாணம் செஞ்சிக்கவும் நினைச்சேன். ஆனா என் விருப்பத்தைச் சொன்னா நீங்க கண்டிப்பா சம்மதிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு வேற வழி தெரியல. அதுனாலதான் பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு”

“நாங்க ரெண்டு பேரும் மேஜர்…எங்க சம்மதத்தை தவிர யார் சம்மதமும் இங்க முக்கியம் இல்ல”

அவன் மேஜர் எனவும் படக்கெனப் பக்கம் திரும்பி தாரிணி அவனைப் பார்க்க ‘சும்மா இரு’ என்பது போல் அவன் கைகளில் அழுத்தம் கூட்டினான்.

அவன் வார்த்தைகளைக் கேட்ட வசுந்தராவின் கோபம் இப்போது மல்லையாவின் மீது திரும்பியது.

“உனக்கு இத்தனை நாளா வேலையும் சம்பளமும் கொடுத்து தங்க இடமும் கொடுத்து உன்னைக் காப்பாத்தினதுக்கு நீ காட்டுற விஸ்வாசம் இதுதானா மல்லையா? உன் பேத்தியைக் காட்டி என் பையனை வளைச்சுட்டேல்ல”

தோளில் படுத்திருந்த குழந்தை அசைய, அதைத் தட்டிக் கொடுத்தவர் “அம்மா…” என்று விட்டு அடுத்து வார்த்தை வராமல் தடுமாற “நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் தாத்தா” என அவரைத் தேற்றியவன் தாயைக் கூர்மையாகப் பார்த்தான்.

“அப்பா உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ இதே வார்த்தையைதான் பாட்டி உங்க அப்பாவைப் பார்த்துக் கேட்டாங்களாம்மா?”

வசுந்தராவின் முகம் வெளிறியது.

“சாதாரண குடும்பத்துல இருந்து வந்த உங்களை இளைய ராணியாக்கிட்ட அவங்களோட பெருந்தன்மை இப்ப உங்களுக்கு ஏன் இல்லம்மா?”

அவன் கேட்ட கேள்வியில் இருந்த நியாயத்தால் வசுந்தராவின் தலை கவிழ்ந்தது மட்டுமல்லாமல் குரலும் இறங்கியது.

“உனக்கும் உத்ராவுக்கும்னு பேசி வச்சிருந்தோம்ல கார்த்திக்…”

“நீங்க பேசினீங்கம்மா…நான் என்னிக்காவது சம்மதம் சொல்லி இருக்கேனா? நீங்களும் உத்ராவும் உங்க மனசில ஆசையை வளர்த்துகிட்டா நான் என்ன செய்ய முடியும். எனக்கு உத்ரா மேல வராத காதல் உணர்வுகள் தாரிணி மேலதான் வந்துச்சு.இனிமே இவதான் எனக்கு எல்லாம்”

பிடித்திருந்த அவள் கைபற்றித் தன்னருகே இழுத்துக் கொண்டவன் அவள் தோளில் கையிட்டுத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

“அப்ப என் முடிவையும் கேட்டுக்கோ! நான் என் அண்ணனுக்கு வாக்குக் கொடுத்துருக்கேன். எப்ப என் வாக்கு உனக்கு முக்கியமில்லைன்னு தோனுச்சோ நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. இனிமே இந்த அரண்மனைல உனக்கு இடமுமில்ல…என்னிக்காவது அவளை விட்டுட்டு வர்றதா இருந்தா இந்த அரண்மனைக் கதவு உனக்காகத் திறக்கும்”

“இந்த அரண்மனைல தங்க எனக்கும் இஷ்டம் இல்ல…என் பொண்டாட்டிக்கு இல்லாத இடம் எனக்கு மட்டும் தேவையில்ல…ஆனா நான் சென்னைல ஏதாவது ஏற்பாடு செய்து கிளம்புற வரை தாத்தா வீட்ல தங்கிக்கிறேன்… அதுக்கும் நீங்க மாட்டேன்னு சொன்னா…”

“தங்கிக்கோ…ஆனா என் கண்ணுல படாதே! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு…இவங்களை எல்லாம் பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு…இன்னும் உத்ராவையும் எங்கண்ணனையும் வேற நான் சமாளிச்சாகணும்”

பதில் எதுவும் சொல்லாமல் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டான் கார்த்திக்.

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே

 ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே 
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே  
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு