அத்தியாயம் 14
முதல் நாள் அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் எடுத்துக் காதில் பொருத்தியவனுக்கு ‘அப்பா’ என்ற இளங்குரலின் அழைப்பைக் கேட்டதும் ஒன்றும் புரியவில்லை…ஆனால் அந்தக் குரல் நெஞ்சை ஏதோ பிசைய “நம்பர் மாத்திப் போட்டுட்டீங்களா தங்கம்?” எனக் கேட்டான்.
“இல்லப்பா நான் உங்க பையன்… நீலாயதாட்சி அவங்க பையன் யதுநந்தன் பேசுறேன்…இங்க அம்மாவுக்கு ஆபத்து… யாரோ முகத்தில் ஸ்ப்ரே அடிச்சு அம்மா மயக்கமாயிட்டாங்க. இப்ப அவங்க கார் வெளில நின்னு கார் கண்ணாடி உடைக்கப் பார்க்குறாங்க” என்றதும் அவன் உடல் இறுகிப் போயிற்று.
மேலே கேள்வி எதுவும் கேட்காமல் “எவ்வளவு சீக்கிரம் வர முடியுதோ வர்றேன்” என்றவன் அலைபேசியில் அந்த விருந்தில் கலந்து கொண்டிருக்கும் தன் நண்பனை அழைத்து விஷயத்தைக் கூறவும் அவனும் உடனே அங்கிருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கார் நிறுத்தத்திற்கு வந்திருந்தான். அனைவரும் சேர்ந்து காரைச் சுற்றி நின்று அதை உடைக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களைச் சூழ்ந்து கொண்டு நையப் புடைக்க ஆரம்பித்தனர்.
சில நிமிடங்களிலேயே விக்னேஷும் வந்து தன் பங்கிற்கும் கொடுத்து அவன் தகவல் சொல்லி வந்திருந்த காவல் துறை அதிகாரிகளிடம் நான்கு பேரையும் ஒப்படைத்திருந்தான்.
ப்ரியநந்தினி காரைத் திறக்க உள்ளே வந்து அமர்ந்தவன் யதுநந்தனைப் பார்த்த மாத்திரத்தில் அவன் குழப்பங்கள் எல்லாம் பகலவனைக் கண்ட பனி போல் விலகின…
குழப்பமிருந்த இடத்தில் இப்போது கோபம் குடிகொண்டாலும் மயங்கிக் கிடந்தவளின் நிலை மனதில் உறைக்க எதையும் காட்டிக் கொள்ளாமல் ப்ரியநந்தினி கூறிய விலாசத்தில் இருந்த மருத்துவரின் மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.
நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி ‘தாரிணி’ என்ற நீலாயதாட்சியின் முகத்தில் பார்வையைப் பதித்திருந்தவன் மனம் அவளை முதன் முதலில் சந்தித்த காலத்துக்கு நழுவிச் சென்றது
விக்னேஷ் கார்த்திக் ருத்ரப்ரதாபன்…தெலங்கானாவில் புகழ் பெற்ற பழங்கால சமஸ்தான இளவல்…வீட்டில், நண்பர்கள் மத்தியில் கார்த்திக்…
அவன் தந்தை ஜெகவீர ருத்ரப்ரதாபன் இளமையில் தமிழ்நாட்டுக்கு வந்த போது வசுந்தராவைச் சந்தித்து ஏழைப் பெண்ணாக இருந்தாலும் பேரழகியான அவளிடம் மனதைப் பறிகொடுத்தவர் வீட்டில் பிடிவாதம் பிடித்து அவளை மணமுடித்துத் தன் இதய ராணியானவளை சமஸ்தானத்துக்கும் ராணியாக்கினார்.
வசுந்தரா நல்ல பெண்ணாக இருந்தாலும் ஏழைப் பெண்ணாக இருந்தவளுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்து ராணி ஆனதும் தலைகால் புரியாமல் போய் விட்டது. ஜெகவீரரும் அவள் இஷ்டத்துக்கு மயங்கி ஆடியதில் சமஸ்தானத்தில் அவள் வைத்ததே சட்டமாகவும் சட்டமே சாசனமாகவும் ஆகிப் போனது.
வசுந்தரா தமிழ்நாட்டில் பரம ஏழையாக இருந்த தன் அண்ணன் மணிவண்ணனுக்கும் தேவையான உதவிகள் செய்து அவரையும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தாள்.
இந்த நிலையில் சமஸ்தானத்துக்கு வாரிசாக விக்னேஷ் கார்த்திக் பிறக்க, அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து மணிவண்ணனுக்கும் மகள் பிறக்க, தன் மகனுக்கும் அண்ணன் மகளான உத்ராவுக்கும் மணமுடிச்சுப் போட மனமுடிச்சுப் போட்டுக் கொண்டாள் வசுந்தரா.
கார்த்திக்கும் உத்ராவுக்கும் இந்த விஷயம் சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டாலும் உத்ராவுக்குக் கார்த்திக்கின் மீது இருந்த அளவு ஈடுபாடு கார்த்திக்குக்கு உத்ராவின் மீது இல்லை.
தன் மாமனைப் போல் உருவமும் குணமும் கொண்டு கொஞ்சம் ஆண்பிள்ளைத் தனமாக வளரும் உத்ராவிடம் அவனுக்கு நட்பு இருந்ததே தவிர அதைத் தாண்டி எந்த உணர்வும் ஏற்படவில்லை.
இத்தனைக்கும் தன் ஐந்தாவது வயதிலேயே அன்னையின் படாடோபங்கள் பிடிக்காமல் அவன் அடம்பிடிக்க, அவனைத் தமிழ்நாட்டில் சென்னையில் புகழ்பெற்ற விடுதியுடன் கூடிய பள்ளியில் ஜெகவீரர் சேர்த்து விட்டிருந்தார்.
அவனது பத்தாவது வயதில் ஜெகவீரர் மஞ்சள் காமாலையால் இறந்து விட பெரும்பாலும் சென்னையே அவன் வாசஸ்தலமாகிப் போனது.
விடுமுறை நேரமெல்லாம் மாமன் வீட்டில்தான் கழிப்பான் கார்த்திக். அப்படி இருந்தும் அவனுக்கு உத்ராவைத் தோழியாகப் பார்க்கத் தோன்றியதே தவிர மனைவியின் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை.
இந்த விஷயத்தை அவன் அவ்வப்போது ஜாடையாக அன்னைக்கும் உத்ராவிற்கும் உணர்த்த முயன்றாலும் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தீவிரமாகத் திருமணம் குறித்துப் பேசும் போது பார்த்துக் கொள்ளலாம் என அவனும் விட்டு விட்டான்.
பிபிஏ படிப்பை முடித்திருந்தவன் இருபது வயதுக் கட்டிளம் காளையாக தங்கள் சமஸ்தானம் திரும்பினான். மேற்கொண்டு படிப்பைத் தொடரும் ஆசை இருந்தாலும் வெகுகாலம் தமிழ்நாட்டிலேயே தங்கி விட்டதால் ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்று வர முடிவு செய்து வந்திருந்தவனுக்குத் தன் வாழ்நாள் முழுமைக்குமான சொந்தத்தைச் சந்திக்கப் போவது தெரியவில்லை.
அன்று காலை விழித்தெழுந்தவன் அரண்மனையை விட்டு வெளியே வந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். தோட்டத்திற்குப் போடும் செருப்பை மாட்டி கொண்டு சிறிது தூரம் உலாவி வரலாம் எனக் கிளம்பினான். சுற்றிலும் இருந்த பசுமை அவனை வியக்கச் செய்தது. அதுவும் முதல் நாள் பெய்திருந்த மழையில் குளித்திருந்த செடிகளும் மரங்களும் கண்ணுக்கு குளிர்விருந்தளித்துக் கொண்டிருந்தன.
நடந்து கொண்டிருந்தவன் கண்களில் மற்றொரு குளிர்விருந்து பட சட்டென நின்றான். சில அடிகள் தொலைவில் அன்ன நடையில் மின்னல் மருங்கசைய வந்து கொண்டிருந்தாள் அந்த ஆரணங்கு.
அப்போதுதான் குளித்து முடித்திருந்த தோற்றம். பாவாடையை நெஞ்சுக்கு மேல் உயர்த்திக் கட்டி முடிந்திருந்தாள். ஆனால் ஏகத்துக்கும் சுருக்கு வைத்துத் தைத்திருந்த பாவாடை முழங்காலைத் தாண்டி நீண்டிருந்ததில் உடல் மொத்தமும் மறைந்திருந்து கால்கள் மட்டுமே சிறிது காண கிடைத்தன.
ஒரு பக்கத் தோளை, ஈரம் பிழிந்து போடப்பட்டிருந்த துணிகள் மறைத்திருந்ததென்றால் இன்னொரு பக்கத் தோளை முன்புறம் அள்ளி போட்டிருந்த கார்கூந்தல் முழுவதும் மூடி இருந்தது.
ஏதோ யோசனையில் தலை குனிந்தவாறே அந்த ஒற்றையடிப் பாதையில் வந்து கொண்டிருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் சில அடிகள் தொலைவில் வந்த போதுதான் அவள் இன்னும் நிமிர்ந்து பார்க்கவில்லை என்பதையும் அப்படியே வந்தால் தன் மீது மோதி விடுவாள் என்பதையும் உணர்ந்தான்.
தன் இருப்பை அவளுக்கு உணர்த்த நினைத்துத் தொண்டையைச் செரும அந்த ஊருக்கு வந்த போதில் இருந்து தனிமையை அனுபவித்துப் பழக்கப் பட்டிருந்தவள்… அங்கு யாரும் இருக்கக் கூடும் என்ற எண்ணம் இல்லாததனாலேயே அசட்டையாக நடந்து வந்து கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
எதிரில் தொட்டு விடும் தூரத்தில் ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தவனைக் கண்டவள் ஒரு கணம் அதிர்ந்து சட்டெனப் பின்வாங்க முயற்சிக்க, முன் வைத்த கால்கள் சட்டெனப் பின் வைக்க ஒத்துழைக்காமல் தடுமாறப் பின்னால் சாயப் போனாள்.
தன்னிச்சையாகத் தன் வலது கை நீட்டி அவள் இடது கை பற்றி அவள் விழுந்து விடாமல் காக்க முயல அவள் ஈரம் காயாத உடலில் அவன் கை வழுக்க இன்னும் பின்னே சென்றாள். கீழுடல் நின்றிருக்க மேலுடல் பின்னோக்கிச் சாய அவள் கருங்கூந்தல் மொத்தமாகப் பின்னுக்குச் சென்று விட, பொன்னிறத் தோள் பளீரிட்டது. அவள் வளைந்த நிலையின் காரணமாக மார்பில் இறுகக் கட்டியிருந்த உடை கொஞ்சம் நெகிழ அத்தனை நேரம் ஆடையில் மறைந்திருந்த அந்த மச்சம் அவன் கண்களுக்குப் புலப்பட்டது.
கருப்பு நிறத்தில் சிறிய பிறை வடிவிலான அந்த மச்சத்தில் வினாடிக்கும் மேலாக அவன் பார்வை பதிய, பாவையவள் சுதாரித்தாள். அவன் பார்வை சென்ற இடம் அவள் நிலையை உணர்த்தி நாணத்தைக் கொடுக்க முகம் குங்கும வண்ணம் கொள்ள சட்டென்று தன்னை நிலைப்படுத்தியவள் கால்களை அழுந்த ஊன்றி நின்று கூந்தலையும் எடுத்து முன்புறம் போட்டாள்.
அவள் சுதாரித்து விட்டதை அறிந்தவனும் கையைச் சட்டென்று விட்டுவிட்டுப் பின்னுக்கு விலகினான். கிடைத்த இடத்தில் அவனை இடித்து விடாமல் நுழைந்தவள் விறுவிறுவென்று சென்று விட்டாள்.
தோள் கண்டார் தோளே கண்டார் என்ற கம்பனின் வரிகளுக்குப் பொருத்தமாக நிகழ்ந்து விட்ட அந்த நிகழ்வு அவன் நெஞ்சில் நீங்காச் சித்திரமாய் இடம் பிடித்தது. அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் மனதில் எண்ணிலடங்காக் கேள்விகள்…
யாரிவள்… இதுவரை இங்கு பார்த்ததில்லையே…இடையில் ஒரே ஒரு முறை வசுந்த்ராவுக்கு உடல்நிலை சரியில்லை எனப் பார்க்க வந்த போது கூட இந்தப் பக்கம் வந்தானே… அப்போது இவளைப் பார்க்கவில்லையே…
இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் அவர்கள் சமஸ்தானத்தைச் சேர்ந்த நீராடும் அல்லிக் குளம் வரும். அந்தக் குளம், இந்தப் பகுதியின் தோட்டம் மற்றும் அங்குள்ள ஒரு சிறிய வீடு… அனைத்தும் தோட்டக்கார மல்லையாவின் பொறுப்பில் இருந்தன. ஒரு வேளை அவருக்கு ஏதேனும் உறவாக இருக்கலாம்.
மகளை கட்டிக் கொடுத்துப் பேத்திகள் இருக்கும் விஷயம் அவ்வப்போது அவர் பேச்சில் அடிபடுவதை அவன் கேட்டிருக்கிறான். பேத்தி என்றால்… என்ன வயதிருக்கும்…
ஆளைப் பார்த்தால் கொழுக் மொழுக் என்றுதான் இருக்கிறாள் என நினைக்கவும் அவனை அறியாமல் முகத்தில் புன்னகை அரும்பியது. அவள் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்தவனுக்கு அதில் குழந்தைத்தனம் அதிகம் இருந்ததாக தோன்றவும் மீண்டும் ஒரு முறை அவள் முகத்தைக் காணும் ஆவல் எழுந்தது.
அருகில்தான் மல்லையாவின் வீடு… சென்று பார்த்து விட்டால் போகிறது. ஆசை கொண்ட மனம் அடங்கவா போகிறது! அவள் சென்ற பாதையில் கால்களை எட்டிப் போட சில நிமிட நடையிலேயே அந்த வீட்டை அடைந்தான்.
சிறிய ஆனால் திருத்தமான அந்த வீட்டின் வாயிலே அங்கு பெண் வசிப்பதைக் காட்டும் விதமாக மங்களகரமான கோலத்துடன் இருந்தது. இதற்கு முன் இந்த வீடு இப்படி இருந்தது இல்லை. சுத்தமாக இருக்கும் அவ்வளவே.
வாசலை நெருங்கிச் சென்றவன் உள்ளிருந்து வந்த நெடிய உருவத்தைக் கண்டதும் அடையாளம் புரிந்து “என்ன தாத்தா சௌக்யமா?” என்றான்.
“எவரதி? கார்த்தித் தம்முடா? மீரு எந்த பெரிகுண்ணாரு நேனு குருடிஞ்சலேக பொய்யனு” ( யாரது? கார்த்தித் தம்பியா? எவ்வளவு பெரிய பையனா ஆயிடீங்க…எனக்கு அடையாளமே தெரியலையே) என்றவர் “ரண்டி! ரண்டி பாபு…கூச்சண்டி” ( வாங்க வாங்க உக்காருங்க) என்றவண்ணம் வீட்டினுள் நுழைந்து கூடத்தில் ஓரத்திலிருந்த நாற்காலியை எடுத்து வந்து நடுவில் போட்டார்.
சிறு வயதில் இருந்தே கார்த்திக்கை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
கார்த்திக் தெலுங்கு பேசுவான் என்றாலும் அதிகம் தமிழ்நாட்டிலேயே வளர்ந்தவன் என்பதால் அவனுக்கு இலகுவாக இருக்கட்டும் என்று தமிழிலேயே தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
“என்ன சாப்பிடுறீங்க சின்ன பாபு…காப்பி கொண்டாரச் சொல்லட்டுமா?”
“கொண்டாரன்னா வேற யாரு இருக்காங்க இங்கே…நீங்க தனியாத்தானே இருந்தீங்க?”
“என் பேத்தி இருக்கா பாபு…இப்பத்தான்…அவ இங்க வந்து மூணு மாசம்தான் ஆகுது…” என்றவர் உள்ளே நோக்கி “அம்மா தாரிணி! சின்ன பாபு வந்துருக்குது… காப்பித் தண்ணி போட்டுக் கொண்டா” எனவும் “சரிங்க தாத்தா” இனிமையும் மழலையுமாய்க் குரல் உள்ளிருந்து கேட்டது.
“தாரிணி சென்னைலயே வளர்ந்தனால தெலுங்கு அத்தனை வராது பாபு…தமிழ்தான்” என்றவர் அவன் எதிரிலேயே ஒரு ஸ்டூலில் அமர்ந்தார்.
சில நிமிடங்கள் பொறுத்து அவன் முன் நீட்டப்பட்ட தட்டில் இருந்த காபியை எடுத்துக் கொள்ளாமல் அதை நீட்டிய வளையல் அணிந்த பொன்னிறக் கரங்களையும் அதைத் தொடர்ந்து அந்தக் கரங்களுக்குச் சொந்தமானவள் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்தான்.
வட்டமான கொஞ்சம் சதைப்பிடிப்பான முகம். பிறை நெற்றி… திருத்தப் படாமலே அழகுற வளைந்திருந்த புருவங்கள்… வண்டு விழிகள்… கொழு கொழு கன்னம்… கூராக இருந்தாலும் அந்தக் கன்னத்தின் நடுவே கொஞ்சம் சிறியதாய்த் தெரிந்த நாசி, சிவந்த, அழகான இதழ்கள், அளவான மோவாய், கூந்தலை விரித்து விட்டு அடியில் முடிச்சிட்டிருந்தாள், பாவாடை தாவணியில் அவன் நினைத்தது போல் சிறு பெண்ணாகத்தான் இருந்தாள்.
அவன் காஃபியை எடுக்காதிருப்பது கண்டு சின்னதாய் அவள் செரும அவனும் தன் உணர்வு பெற்றுக் காஃபியை எடுத்துக் கொண்டான்.
அவள் உள்ளே சென்று மறைய “இதுக்கு முன்னே இவங்களைப் பார்த்தது இல்லையே தாத்தா?”
“சென்னைல ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சுட்டு இருந்தா பாபு… லீவு விட்டா அங்கேயே அவங்க அக்கா வீட்டுக்குப் போயிருவா…”சட்டென நிறுத்தினார்.
அவர் குரலில் மறைந்திருந்த சோகத்தை உணர்ந்தவன் குடித்து முடித்த கப்பைக் கீழே வைத்து விட்டு “என்னாச்சு தாத்தா?” என்று கேட்டான்.
“எங்களுக்குப் பூர்வீகம் தமிழ்நாடுன்னாலும் ரொம்ப நாளா இந்தப் பக்கமே தங்கிட்டோம். என் பொண்ணு ஏதோ சுற்றுலா போனப்போ என் மருமகனைப் பார்த்துக் காதலிச்சுக் கல்யாணமும் நடந்து நல்லபடியாத்தான் இருந்தாங்க”
“ரெண்டு பெண் குழந்தைகள்… மூத்தவ மாலினி, இவ தாரிணி. தாரிணிக்கு எட்டு வயசு மாலினிக்குப் பத்து வயசு இருந்தப்போ ஒரு நாள் வண்டில புருஷனும் பொண்டாட்டியும் கடைக்குப் போய்ட்டுத் திரும்புறப்போ லாரில அடிபட்டு அங்கேயே இறந்துட்டாங்க”
“அதுக்கப்புறம் ரெண்டு பேரையும் இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு யோசிச்சப்போ அவங்க ஸ்கூல் டீச்சர் ரெண்டு பேருக்கும் இலவசமாப் படிப்பு, கவர்மெண்ட் ஹாஸ்டல்ல தங்க இடம்னு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. மாலினி சுமாராப் படிச்சாலும் தாரிணி நல்லாப் படிச்சா…எல்லாத்துலயும் க்ளாஸ் ஃபர்ஸ்ட் அவ”
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க என் பொறுப்புங்கிறனால கொஞ்சம் கொஞ்சமாப் பணம் சேர்த்து வச்சு மாலினி பன்னிரண்டாவது முடிக்கவும் அவ அழகுக்காக அவளை விரும்பிக் கேட்ட சுராஜுக்குக் கல்யாணம் செய்து வச்சேன்”
“அதுக்கப்புறம் தாரிணி ஹாஸ்டல்ல இருந்து படிச்சாலும் லீவுக்கு அக்கா வீட்டுக்குப் போய்டுவா. போன வருஷம்தான் மாலினிக்குக் குழந்தை பிறந்துச்சு அந்த சமயம் தாரிணிக்கும் பன்னிரண்டாவது பரீட்சை முடிஞ்சுட்டனால அக்காவுக்கு உதவியா அங்கேயே குழந்தையை கவனிச்சுக்கிட்டு இருந்தா. ஆனா ஆபரேஷன் பண்ணின இடத்துல சீழ் வச்சனால மாலினி உடல்நலம் கெட்டுப் போச்சு. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா அல்லாடிக் கடைசில போய்ச் சேர்ந்துட்டா”
தோளில் இருந்த துண்டால் வாயைப் பொத்தி கொண்டார். உள்ளேயிருந்தும் கேட்ட விம்மல் சத்தத்தில் அவனுக்கு நெஞ்சைப் பிசைவது போல் இருந்தது.
“மூணு மாசக் குழந்தை கையில… மாலினி புருஷன் தாரிணியைக் கட்டிக் குடுங்க… இல்லைன்னாக் குழந்தையைத் தூக்கிட்டுப் போய் நீங்க வளர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டான். அவன் வேற கல்யாணம் பண்ணிக்கப் போறானாம். அதுக்கு இந்தக் குழந்தை இடைஞ்சலாம்.”
அவர் சொல்லிக் கொண்டே போக மாலினியின் கணவன் மீது கண்மண் தெரியாத ஆத்திரம் பிறந்தது அவனுக்கு. ‘அவன் எப்படித் தாரிணியைப் பெண் கேட்கலாம்…’
மல்லையா தொடர்ந்தார்…”நாங்களே பார்த்துக்கிறோம்பா… நீ கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருன்னு குழந்தையைத் தூக்கிட்டு வந்துட்டோம்”
தாரிணியின் பால் இரக்கம் பிறந்தது அவனுக்கு. ஆனால் அந்த இரக்கத்தை வெளிப்படுத்த அவன் மனதில் தோன்றிய வழிகள் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தன. ஆம்… ஒருவர் மேல் இரக்கமென்றால் பண உதவியோ பொருள் உதவியோ அல்லது வேலை கொடுத்து உதவவோ செய்யலாம். ஆனால் அவளை நெஞ்சோடு அணைத்து ‘உனக்கு நானிருக்கிறேன் கலங்காதே’ என ஆறுதல் படுத்தத் தோன்றவே அவன் கொஞ்சம் குழம்பிப் போனான்.
சில மணி நேரம் முன்தான் முதல் முதலில் பார்த்த பெண்ணை அணைப்பதாவது… ஆறுதல் படுத்துவதாவது…
உள்ளிருந்து விம்மல் சத்தத்துடன் குழந்தையின் அழுகைச் சத்தமும் அதை ஆறுதல் படுத்தும் தாரிணியின் சத்தமும் கேட்க அமைதியாகச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன் தொண்டையைச் செருமி கொண்டான்.
“கவலைப் படாதீங்க தாத்தா… எல்லாம் நல்லதாவே நடக்கும். நான் கொஞ்ச நாள் இங்கேதான் அரண்மனைல இருப்பேன். என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்டக் கேளுங்க”
“சரிங்க சின்ன பாபு எங்களுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா… தேவைப்பட்டாக் கட்டாயம் கேக்குறேன்”
எழுந்தவனுக்குக் கிளம்பும் முன் அவள் முகத்தை ஒரு கணம் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதை உணர்ந்தாளோ அல்லது அவளுக்கும் அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததோ…முகத்தை மட்டும் சமையல் அறையிலிருந்து மெல்ல வெளியே நீட்டினாள். அவளை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்.
மறுநாள் காலை அவன் அதிகம் யோசிக்காமலே அவன் கால்கள் அவனை அல்லிகுளத்தினருகே அழைத்துச் சென்றன. அவனை எதிர்பார்த்து இருந்தவளும் குளத்தில் குளித்து முடித்து அங்கேயே மறைவில் முழுமையாக ஆடையுடுத்தி அவனுக்காகக் காத்திருக்க இதைப் போன்ற சந்திப்புக்கள் தினமும் தொடரலாயின.ஒருவருக்கு மற்றொருவர் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு வளர்ந்து கனிந்து காதலாக மாறியது.
சென்னைக்குக் கிளம்பிச் செல்லும் எண்ணத்தையே மறந்தவனாக தாரிணியைச் சுற்றித் தன் உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.
ஒரு நாள் இருவரும் பற்றிய கைகளுடன் தங்களை மறந்து மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருக்க இதைக் கவனித்த நரசைய்யா…வசுந்தராவின் விஸ்வாச வேலையாள் அவரிடம் சென்று வத்தி வைத்து விட அன்றிரவு உணவு மேஜையிலேயே கார்த்திக்குக்கு மண்டகப்படி ஆரம்பித்தது.
காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்
அன்பே ஆடை கொடு என்னை
அனுதினம் அள்ளிச் சூடி விடு
இதழில் இதழால் கடிதம் எழுது