காதலின் தீபம் ஒன்று..!! – 11
எழுத்து: சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”

ரயில் பெட்டி வாயிலில் கம்பியை பிடித்துக் கொண்டு வெளியே வெறித்து பின்னால் நகர்ந்து செல்லும் மரங்களை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் யாழினி..

அவள் எதிரில் வந்து நின்ற நான்கு விடலைகள் வார்த்தையால் அவளை மெல்ல சீண்ட தொடங்க முதலில் அவர்கள் பக்கம் திரும்புவதை தவிர்த்து வெளியே வேறு பக்கம் தான் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.. மெல்ல அவர்கள் அவளைப் பற்றி கீழ்த்தரமாக பேச தொடங்கினார்கள்..

“டேய்.. அப்படியே சந்துல மேட்டுல பள்ளத்துல வளைந்து நெளிஞ்சு போறதை பாத்தா எவ்ளோ அழகா இருக்குதுல்லடா.. அந்த வளைவுல அப்படியே..”

ஒருவன் சொல்ல “டேய் சொல்லாதடா.. எனக்கு இப்பவே உடம்புக்குள்ள என்ன என்னவோ பண்ணுது.. நினைச்சாலே சிலுக்குதுடா.. சும்மா ஜில்லுனு இருக்குது.. நெனச்சதுக்கே இப்படி இருக்குன்னா நிஜமாவே.”

அவன் யாழினியை ஒரு மார்க்கமாய் பார்த்து இளித்துக் கொண்டே சொல்ல அவளுக்கு அந்த பேச்சும் கிண்டலும் உடம்பில் ஊசியாய் குத்தியது..

அதை தாங்க முடியாமல் “சீ..!!” என்று அவர்கள் பக்கம் ஒரு அருவருப்பான பார்வையை வீச “டேய் நான் ட்ரெய்னை சொன்னேன்டா.. நீ என்னடா நெனச்ச?” என்று முதலாமவன் கேட்க “நானும் ட்ரெயினை தான் டா சொல்றேன்..” என்றான் அந்த இன்னொருவன்..

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மறுபடியும் பெட்டிக்குள் வந்து அமர திரும்பினாள் யாழினி.. சரியாக அதே நேரம் அவள் அருகில் வந்தாள் காவியா..

“எங்கடி போற?”

“எனக்கு கால் வலிக்குது.. உள்ள போய் உட்காருறேன்..” என்றாள்..

“நிஜமாவே கால் தான் வலிக்குதா உனக்கு?”

எதிரே நின்று கொண்டு இருந்த அந்த  தறி கெட்ட இளைஞர்களை பார்வையால் எரித்தபடியே காவ்யி கேட்க யாழினி ‘”ப்ச்.. எந்த வம்பும் வேணாம்டி.. வா போலாம்.. ஏதாவது பிரச்சனையாக போகுது..” என்று அவள் கையை பிடித்து இழுத்து உள்ளே வர முயல அவளோ யாழினியின் கையைப் பிடித்து தன் பக்கத்திலேயே நிறுத்து கொண்டு “நான் இங்கே தான் இருக்க போறேன்.. யாரு என்ன பண்றாங்கன்னு நான் பார்க்கிறேன்..”

அவள் பிடிவாதமாய் அங்கேயே இருக்க எதிரில் இருந்த அந்த நால்வரில் இன்னொருவன் “நான் கூட நாலு பேருக்கு ஒன்னு போதுமான்னு நினைச்சேன்.. பரவால்ல.. ரெண்டு சூப்பரா கிடைச்சிருச்சு டா.. நாலு பேரும் ஷேர் பண்ணி சாப்டுக்கலாம் ரசகுல்லாவை..”

“ஏய் காவி.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்கடி.. என்னால இங்க நிக்க முடியல.. நான் கிளம்புறேன்.. போ..” என்று பெட்டிக்கு உள் பக்கமாக திரும்பி நடக்க தொடங்கியவளின் இடையை லேசாக தன் கையை வைத்து வருட போனான் அங்கிருந்த நால்வரில் ஒருவன்..

அவன் அவள் இடையை தீண்ட போகும் வேளையில் அவன் கை ஒரு வலுவான கைக்குள் மாட்டி இருந்தது.. தன் கையை அந்த கையில் இருந்து விடுவிப்பதற்காக அவன் யோசிப்பதற்குள்ளாகவே அவன் முகத்தில் இடியாய் ஒரு அடி விழுந்திருந்தது..

எதிரில் எரிக்கும் கண்களோடு நின்று அவனை முறைத்துக் கொண்டு இருந்தான் மகிழன்..

“என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணு மேல கைய வைக்க போவே? கை இருந்தா தானே வெப்ப..?” என்று அவன் கையை முறிக்க எங்கேயோ அது உடைந்தது போலவே அவனுக்கு சத்தம் கேட்டது..

அதை பார்த்த மற்ற மூவரும் அந்த இடத்தை விட்டு உள் பாதை வழியாக அடுத்த பெட்டிக்குள் தலை தெறிக்க ஓடி இருந்தார்கள்..

“சார் சார் விட்டுருங்க சார்.. ஏதோ தெரியாம பண்ணிட்டோம்..”

“தெரியாம பண்ணியா? இன்னொரு முறை ஏதாவது பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கணும்னு நெனைச்சா கூட கொன்னுடுவேன்டா உன்னை.. மரியாதையா ஓடிடு..”

அவன் கையை மகிழன் விட்டதுதான் அங்கிருந்து தப்பித்து தெறித்து ஓடினான் அவன்..

பெண்கள் இருவரின் பக்கம் திரும்பிய மகிழன் “கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு? ஏய் யாழி.. அவனுங்க அவ்வளவு கேவலமா பேசிகிட்டு இருக்காங்க.. சப்புனு அப்படியே வாய் மேலே ஒன்னு விடாம சங்கடமா நெளிஞ்சுகிட்டு நின்னுட்டு இருக்க.. இன்னொருத்தி அவங்களோட வம்பு இழுத்துகிட்டு இருக்கே.. உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? இதுல இன்னும் ஹைலைட் இந்த மேடமை தொட வேற வரான்.. அது கூட தெரியாம அப்படியே ஏதோ கேட்வாக் பண்ணிக்கிட்டு ஆடி அசைஞ்சு போய்கிட்டு இருக்கா..”

அவன் சரமாரியாய் திட்ட யாழினியோ பயந்த விழிகளோடு “எனக்கு தெரியல.. நான் அவங்களை அவாய்ட் பண்ணலாம்னு தான் உள்ளே வந்து உட்கார பார்த்தேன்..”

“ஓஹோ.. ஆமா.. எதுக்கு அவங்களை அவாய்ட் பண்ணனும்? உன்னை பாத்து தப்பு தப்பா பேசுறாங்க.. அவங்களை எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாதா உன்னால.. அப்படியே நெளிஞ்சுகிட்டு நின்னுட்டு இருக்க.. இதோ காவ்யா.. எவ்வளவு தைரியமா இங்கயே நின்னு அவங்களோட சண்டை போட ரெடியா இருந்தா? நீ என்னடான்னா அசிங்கமா அந்த பொறுக்கி பசங்க பேசுறாங்கன்ன உடனே பயந்துகிட்டு திரும்பி உள்ளே வந்து உட்கார வர.. போதாக் குறைக்கு டிராவல் பண்றப்போ இப்படி ஒரு டிரஸ் போட்டுட்டு வந்து இருக்கே..”

அவன் அப்படி சொன்னதும் கொஞ்சம் அதிர்வுடன் தன் உடைக்கு என்ன குறை என்று எண்ணி குனிந்து தன்னை தானே பார்த்துக் கொண்டாள்..

அவள் ஆரஞ்சு நிற பாவாடையும் அதே நிற ரவிக்கையும் அதன் மேலே நாகப்பழ நிற தாவணியும் உடுத்தி இருந்தாள்.. அழகாய் தேவதை போல் தான் இருந்தாள் எனினும் வண்டியில் பயணம் செய்யும்போது அந்த உடை காற்றில் அவள் உடலோடு சில நேரம் ஒட்டியும் சில நேரம் விலகியும் அவள் வளைவு நெளிவுகளை பலரின் கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருக்க அந்த நான்கு விடலைகள் அவளை கேலி செய்யவும் அது காரணமாகிவிட்டது..

காவியா எப்போதும் போல ஒரு ஷார்ட் குர்தியும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருக்க அந்த இளைஞர்களை அவள் தைரியமாய் எதிர்கொள்ளவும் அவளிடம் வம்பு வளர்க்காமல் அடக்கி வாசித்தவர்கள் யாழினியை சீண்டுவதிலேயே குறியாய் இருந்தனர்.

இதை கவனித்த மகிழன் “இங்க பாரு யாழி.. நீ இப்படி ட்ரஸ் பண்றதை நான் தப்புன்னு சொல்லலை.. நீட்டா தான் இருக்கு இந்த டிரஸ்.. ஆனா இந்த மாதிரி வண்டியில டிராவல் பண்ணும் போது நீ என்னதான் கேர்ஃபுல்லா இருந்தாலும் சில சமயம் இப்படி எல்லாம் நடக்கும்.. அதனால டிராவல் பண்ணும் போது கொஞ்சம் சுடிதார் இல்லனா ஜீன்ஸ் குர்த்தி இந்த மாதிரி டிரஸ் போட்டுக்கோ..  இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்க.. சுத்தி உன்னை யார் எப்படி பார்க்கிறாங்கன்னு கூட தெரியாம அப்படி என்ன உனக்கு இங்க வந்து வேடிக்கை வேண்டி கெடக்கு..? அப்படியே ஏதாவது பிரச்சனை வந்ததுன்னா அதை தைரியமாக ஃபேஸ் பண்ணு.. காவியாவை பார்.. எவ்ளோ அழகா தைரியமா அவங்களையெல்லாம் ஃபேஸ் பண்றான்னு.. முதல் நாள் ட்ரெயின்ல காலேஜுக்கு வந்தப்பவும் இப்படித்தான்.. ரெண்டு பேரும் போய் வம்புல சிக்கிக்கிட்டீங்க.. காவியாவது கொஞ்சம் தைரியமா ஃபைட் பண்றா உனக்கு அந்த தைரியமும் வரமாட்டேங்குது.. அவளை மாதிரி நீயும் தைரியமா இருக்கணும்.. பொண்ணுங்க அந்த மாதிரி தைரியமா இருந்தாதான் எனக்கு பிடிக்கும்.. எப்ப பொண்ணுங்க ரொம்ப பயப்படுறாங்களோ, அப்பதான் ஆம்பளைங்களுக்கு தப்பு பண்ண அவங்க நிறைய வாய்ப்பு கொடுக்குறாங்கன்னு அர்த்தம்.. நியாயமான எந்த விஷயம் பண்ணும் போதும் எதுக்கும் பயப்பட வேண்டாம்.. எதிர்த்து கேள்வி கேட்கிறது தப்பே கிடையாது.. அதனால ஏதாவது பிரச்சனை வந்தா அதை சமாளிக்கிறதுக்கும் பொண்ணுங்களுக்கு தெரிஞ்சி இருக்கணும்.. எவனாவது தேவையில்லாம வம்பு பண்ணா அவனை அடிச்சு நொறுக்குறதுக்கும் பொண்ணுங்களுக்கு தெரியணும்.. அப்பதான் பொண்ணுங்களால் தனியா தலை நிமிர்ந்து வாழ முடியும்.. இப்படியே நீ பயந்து பயந்து செத்துகிட்டு இருந்தா எல்லாரும் உன்னை ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க..”

காவியா மகிழனை பார்த்து “போதும் ஆர்யா.. அவ சின்ன வயசுல இருந்து அப்படித்தான்.. நானும் எவ்வளவோ முறை சொல்லிட்டேன்.. அவ மாறவே மாட்டேங்குறா.. இனிமேலும் மாற மாட்டா.. வீட்லயும் சரி.. வெளிலயும் சரி.. யாரையும் எதிர்த்து பேசாம அப்படியே பயந்து பயந்து அவங்க சொல்றதெல்லாம் கேட்டு கேட்டு அவ ஆசைகளை எல்லாம் உள்ளுக்குள்ள போட்டு பொதைச்சுக்குவா.. எனக்கு தெரிஞ்சு அவ ஓப்பனா எனக்கு வேணும்னு சொல்லி நடத்திக்கிட்ட ஒரே விஷயம் இந்த மியூசிக் காலேஜில் சேர்ந்தது மட்டும்தான்..”

“இப்பவும் ஒன்னும் லேட்டாகலை யாழி.. முயற்சி பண்ணா இப்ப கூட நீயும் காவியா மாதிரி தைரியமான பொண்ணா மாறிடலாம்..”

யாழினி உள்ளுக்குள் “அதான் என்னை உனக்கு பிடிக்கலையா மகிழ்.. அதனாலதான் தைரியமா இருக்குற காவியாவை உனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கா? ஆனா இதுதான் என் குணம்.. என்னால என்னை மாத்திக்க முடியாது டா..” வலியோடு உள்ளுக்குள் நினைத்தவள் அமைதியாக போய் தன் இருக்கையில் அமர்ந்து விட்டாள்..

“என்ன காவி இவ..? நான் இவளோட நல்லதுக்கு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நான் எதோ தப்பா சொன்ன மாதிரி சைலன்ட்டா மூஞ்சியை திருப்பிக்கிட்டு போய் உட்கார்ந்தா என்ன அர்த்தம்..?”

மகிழன் கேட்க காவியா “அவ அப்படித்தான் ஆரியா.. அவ உன் மேல கோவத்துல எல்லாம் போயிருக்க மாட்டா… அவளுக்கு நம்ம இப்படி இருக்கோமேனு கவலையும் இருக்கு.. அதே சமயம் அதை மாத்திக்கிணுங்கிற எண்ணமும் தைரியமும் அவளுக்கு வர மாட்டேங்குது.. பார்க்கலாம்.. ஒருவேளை லைஃப்ல ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல அவ இதையெல்லாம் கத்துக்குவாளோ என்னவோ.. ஆனா இப்போதைக்கு அவ மாறுவான்னு எனக்கு தோணல.. ஏன்னா இந்த மாதிரி அவளுக்கு நான் நிறைய லெக்ச்சர் கொடுத்து இருக்கேன்.. ஒரு துளி மாற்றம் கூட கிடையாது அவகிட்ட..”

“சரி வா..”

இருவரும் தங்கள் இருக்கைக்கு மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டார்கள்..

மகிழன் யாழினியை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே இருக்க அவளோ அவன் முறைப்பை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தும் வேறு பக்கம் பார்வையை திருப்பியும் அமர்ந்து கொண்டிருந்தாள்..

அப்போது ஒரு வயதான பாட்டி அந்த பெட்டிக்குள் சுண்டல் விற்றுக் கொண்டு வந்தார்.. அதைப் பார்த்தவுடன் கண்கள் விரிய ஒரு நொடிதான் பார்த்தாள் யாழினி.. அதன் பிறகு அப்படியே முகம் சுருக்கி அமைதியாக அமர்ந்து விட்டாள்..

காவியா “ஏய் யாழி.. உனக்கு பட்டாணி சுண்டல் ரொம்ப பிடிக்கும் தானே? வா வாங்கி சாப்பிடலாம்..” என்க அவளை யாழினி ஒரு பார்வை பார்க்க அந்த பார்வையின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டவள் “உன்னைத் திருத்தவே முடியாதுடி.. நீ சாப்பிடலைன்னா போ நான் வாங்கி சாப்பிட போறேன்..” என்று சொல்லி தனக்கும் ஆரியனுக்கும் இரண்டு பொட்டலங்கள் நிறைய சுண்டல் வாங்கிக் கொண்டாள்..

ஆரியன் காவியாவிடம் “ஏன் காவி..? இப்பதானே யாழினிக்கு பட்டாணி சுண்டல் பிடிக்கும்னு சொன்ன..? அவளுக்கு ஏன் வாங்கல..?”

“அதா..? அது என்னன்னா இந்த யாழினியோட அப்பா இருக்காரே.. அவரு ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்.. இந்த மாதிரி எல்லாம் கண்ட இடத்துல வாங்கி சாப்பிட கூடாதுன்னு சொல்லுவாரு.. அதனால அவளும் எங்கேயும் வாங்கி சாப்பிட மாட்டா.. அப்படியே சாப்பிட்டாலும் அதை சொல்லிட்டு அவ காது வெந்து போற அளவுக்கு அவர்கிட்ட வாங்கி கட்டிப்பா.. அன்னிக்கு நம்ம மூணு பேரும் காபி பிஸ்கட் அதெல்லாம் சாப்பிட்டோம் இல்ல..? அதை கூட அவங்க அப்பா கிட்ட சொல்லி அவங்க அப்பா ஈயத்தை காட்சி காதுல ஊத்துற மாதிரி அப்படி போட்டு அவளை காய்ச்சி எடுத்துட்டாரு ஃபோன்லயே..”

“இது ஒரு சின்ன விஷயம்.. இதை கூட அவ இஷ்டத்துக்கு சாப்பிட மாட்டாளா..?”

ஆரியன் அவளை அதிசயமாய் பார்த்து கேட்க “அவ அப்படித்தான்.. மாறவே மாட்டா.. இப்ப கூட இவ சுண்டல் சாப்பிட்டா இவங்க அப்பாவுக்கு தெரியவா போகுது? ஆனா மேடம் சாப்பிட மாட்டாங்க.. அப்படியே வாங்கி சாப்பிட்டாலும் நேரா போய் அவங்க அப்பா கிட்ட சொல்லி திட்டு வாங்குனா தான் அவரோட அன்பு மகளுக்கு தூக்கமே வரும்.. என்ன யாழி? நான் சொன்னது கரெக்ட் தானே?”

அவனும் இவள் என்ன மாதிரி பிறவி என்பது போல் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்..

“ஏண்டி..  நான் சின்ன வயசுல இருந்து அப்படித்தான் வளர்ந்துட்டேன்.. அதுக்கு என்ன செய்ய..? என்னால மாத்திக்க முடியாது.. எங்க அப்பா கிட்ட இருந்து என்னால எதையும் மறைக்கவும் முடியாது.. எதுவா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லி திட்டு வாங்கிக்குவேன்” என்றவள் மனதிற்குள் “நான் அவர்கிட்ட மறைக்கிற ஒரே விஷயம் என் மகிழ்க்கான என்னோட காதலை பத்தி மட்டும் தான்..” என்று நினைத்துக் கொண்டாள்..

மகிழன் “யாழி.. நான் இப்போ உனக்கு  சுண்டல் வாங்கி தர போறேன்.. நீ சாப்பிடறே.. சாப்பிட்டுட்டு உங்க அப்பா கிட்ட சொல்லாம இருக்க.. சரியா..? இது ஒரு சின்ன விஷயம் யாழி.. இதை போய் உங்க அப்பா கிட்ட சொல்லணும்னு அவசியமே கிடையாது.. இதை வாங்கி சாப்பிடற முடிவை கூட நீ சுயமா எடுக்க கூடாதா? என்ன லைப் லீட் பண்ணிட்டு இருக்க நீ.. இந்த மாதிரி ஒரு சின்ன சுதந்திரம் கூட உனக்கு கெடையாதா? இப்ப நான் வாங்கி கொடுக்கிறேன்.. நீ சாப்பிடு” என்று சொல்லி அவளுக்கு ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி கொடுத்து உண்ண சொன்னான்..

மகிழன் சொல்லி யாழினி கேட்காமல் இருப்பதா? வாய்ப்பே இல்லையே.. பொட்டலத்தை பிரித்து அவனைப் பார்த்தபடி அதிலிருந்த சுண்டலை சாப்பிட்டு முடித்தாள்..

“ம்ம்.. குட்..” என்றவன் “இப்போ இங்க சுண்டல் சாப்பிட்டதை அப்படியே மறந்து போயிடணும்.. ஓகேவா?” என்றதும் சற்று தயக்கத்துடனேவே “ஓகே” என்றாள் தலையை ஆட்டி..

இப்படியே பெரும்பாலும் யாழினி அமைதியாகவே இருக்க காவியா வாய் மூடாமல் ஆரியனோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்க ரயில் வேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது..

ஆனால் சென்னையில்……

நள்ளிரவில் நான் கண் விழிக்க…
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க…
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்…

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக…
காணும் கோலங்கள் யாவும் நீயாக…
வாசலில் மன்னா உன் தேர் வர…
ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா…
வருவாயோ வாராயோ…
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்…
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்…
காலை நான் பாடும் காதல் பூபாளம்…
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்…
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்…
ஆலயம் நீயல்லவா

தொடரும்..