மறைந்த ஏ,டி,ஜி,பி சத்யதேவை இரு தரம் மாறன் சந்தித்துள்ளான். ரொம்பவும் நேர்மையான மனிதர். அவரை பார்த்துதான் தானும் போலீஸாக வேண்டும் என்று தீர்மானித்தான் என்று கூறினால் மிகையில்லை.
அவர் மரணம் கூட இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. யார் கொலை செய்தான்? எதற்காக? அவர் மறைந்து ஒரு வருடமாகியும் போலீஸாரால் இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
குற்றவாளிகளை கூட தன்மையாக நடத்துபவருக்கு, யார் எதிரியாக இருக்கக் கூடும்? இன்றுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
அவர் குடும்பத்தை பற்றி மாறனுக்கு எதுவும் தெரியாது. அவர் வளர்ப்பு மகள் தப்பானவளாக இருக்க மாட்டாள் என்று மாறனின் மனம் கூவினாலும், அவனுள் விறைப்பாக நிற்கும் காவலன் அவளை சந்தேக வட்டத்திலிருந்து அகற்ற விடாமல் பிடிவாதம் பிடிக்கலானான்.
“ஓஹ்…. ஏ,டி,ஜி,பி சத்யதேவ் பொண்ணா… அவர் கேஸ ஏ.சி.பி அன்வர் இல்ல பாக்குறாரு. ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” கேள்வி என்னவோ யாதவிடம் இருக்க, பார்வையை அலர்விழி மீது வைத்தவாறே கேட்டான் மாறன்.
“பாம்புக்கு பால் வார்த்திருப்பாரோ” என்றிருந்தது அவன் பார்வை. சந்தேகம் என்று வந்தால் எல்லா கோணங்களிலும் விசாரிக்க வேண்டுமல்லவா. அலர்விழி என்ற கோணம் இதுநாள் வரையில் அன்வரின் கண்களில் படாமலிருந்தது ஏன்?” என்ற கேள்வியும் அவனுள் எழுந்திருந்தது.
“ஆமா… ஏ.சி.பி அன்வர் தான் பாக்குறாரு” என்ற யாதவ் மேற்கொண்டு அதை பற்றி பேசாமல் தன்னுடைய அடையாள அட்டை மற்றும் அலர்விழியின் அடையாள அட்டையையும் மாறனிடம் கொடுத்தவன் தான் எங்கு வேலை பார்க்கின்றேன் என்றும் கூறி அலர்விழியை அழைத்து செல்லலாமா என்று கேட்டான்.
மாறன் பார்த்த பார்வையை அலர்விழி புரிந்து கொண்டிருந்தமையால் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஏ,டி,ஜி,பி சத்யதேவ் பேர சொன்னீங்க என்குறதுக்காக விசாரிக்காம இருக்க முடியுமா?” கொஞ்சமே கொஞ்சம் நக்கல் கலந்த குரலில் கூறியவன் “காலைல இருந்து எங்க இருந்தீங்க?” என்று கேட்டவாறே மாதவன் நீட்டிய கோப்பை புரட்டலானான்.
அது யாதவின் சி.டி.ஆர் கோப்பு. அலர்விழி பேசிய ஒரே எண். அதுவும் தினமும் ஐந்தாறு தடவை என்றிருக்க, மாதவனுக்கு கண்ணசைவில் சொன்ன வேலையில் இதுவும் ஒன்று.
“ஆபீஸ்ல” என்ற யாதவ் காரியாலயம் எங்கே அமைந்துள்ளது என்பதையும் கூற,
சரி பார்த்தவாறே மாறன் “இந்த ஒரு போன் நம்பரா? இல்ல வேறு இருக்கா?” என்று கேட்டான்.
அலர்விழி யாதவிடம் மட்டும்தான் பேசியிருக்கின்றாள். அதனால் அவள் மீது சந்தேம் கொண்ட மாறன் யாதவ் பல எண்களுக்கு அழைத்திருந்தமையாலும் யாதவ் மீதும் சந்தேகம் கொண்டு, அவன் பேசிய எண்கள் யார் யாருக்கு சொந்தமானது? அந்த எண்கள் எங்கெங்கே பயணம் செய்துள்ளன என்பதையும் பார்க்குமாறு மாதவனிடம் கூறியிருந்தான். காவலனாக அவன் சரியாகத்தான் விசாரித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் சந்தேகத்தை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமல்லவா?
“யாதவ்” இல்லையென்று கூறும் பொழுதே மாலின் சீசீடிவி காட்ச்சிகளை பெறச் சென்ற ஏட்டு ஏகாம்பரம் வந்து சேர்ந்தார்.
அலர்விழியின் மீது பார்வையை செலுத்தி விட்டே சீசீடிவி காட்ச்சிகளை பார்வையிடலானான் மாறன்.
அந்தப் பார்வை “உன் கதை முடிந்தது” என்று கூறுவது போல்தான் அலர்விழிக்குத் தோன்றியது.
இவளும் அவனை இமைக்காமல் பார்த்தாள். அவள் பார்வை அவன் இதயம்வரை ஊடுருவி “என்னை சந்தேகப்பட்டாயே” என்று குத்துவது போல் இருந்தது. யாரும் அறியாமல் நெஞ்சை நீவி விட்டவனின் கண்கள் கணினியின் மேல் நின்றது.
அதில் முகக்கவசம் அணிந்த இருவர் வாகனங்களை நிறுத்தும் தளத்தில் ஒரு வண்டிக்கு அருகில் குழந்தையோடு நின்றவாறு கத்தியை ஆட்டி பணப்பையை தூக்கிப் போடுமாறு மிரட்டிக் கொண்டிருக்க, அலர்விழி எதுவோ கூறிக் கொண்டிருந்தாள்.
அதற்கு அவர்கள் என்ன கூறினார்களோ அலர்விழி தலையசைத்திருக்க, ஒருவன் குழந்தையை பிடித்திருக்க, மற்றவன் அலர்விழியை நெருங்கலானான்.
அவளை நெருங்கியவன் அவளை பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள, குழந்தையை பிடித்திருந்தவன் குழந்தையை தள்ளியவாறே அலர்விழியிடம் வந்து குழந்தையை விட்டு அவளை பிடித்துக் கொண்டான்.
அவள் என்ன கூறினாளோ, குழந்தை கவீஷ் அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுத்தது காட்ச்சிகளாக பதிவாகியிருந்தது.
குழந்தையை கடத்த அலர்விழி திட்டம் தீட்டியிருந்தால், குழந்தையின் தலை மறைந்ததும் தன் சகாக்களோடு சகஜமாக உரையாடியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அவளுக்கு மயக்க மருந்து கொடுக்க முயற்சிற்பதும், அவள் திமிறுவதும், சந்தர்ப்பம் கிடைத்த உடன் ஒருவனுடைய முக்கியமான இடத்தில் எட்டி உதைத்ததும், அவன் வலி தாங்க முடியாமல் தரையில் உருளுவதும் நன்றாகவே தெரிந்தது.
தன் பின்னால் நின்றிருந்தவனை லாவகமா பிடித்து தூக்கி தரையில் அடித்தவள், அவள் கழுத்தில் கால் வைத்திருக்க, மாறனை அறியாமளையே அலர்விழியை மெச்சுதலாக பார்த்தான்.
அவன் பார்வைக்கு அமைதியைத்தான் பரிசாக கொடுத்தாள்.
“திமிர்” வாய்குல்லையே முனகியவன் கண்களை கணினியில் மேயவிட, அவள் காலை தட்டி விட்டு பணப்பையோடு ஓட முயன்றவனை தடுக்க முயன்றாள் இவள்.
அதை பார்த்து கீழே துடித்துக் கொண்டிருந்தவன் வலியோடு எழுந்து அவளுக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்க முயன்றான்.
அவள் தடுக்க, அவள் பிடித்திருந்தவன் எதை பார்த்தானோ, யாரை பார்த்தானோ தெரியவில்லை, இருவரும் அவளை தள்ளி விட்டு பணப்பையை தூக்கிக் கொண்டு ஓட, அந்த மாலின் காவலாளி விசில் அடித்தவாறு அவர்கள் பின்னால் ஓடுவதும், கவீஷ் அவளை ஓடி வந்து கட்டிக் கொள்வதும் தெளிவாக தெரிந்தது.
குழந்தையை கடத்த திட்டமிட்டவர்கள் எதற்காக சீசீடிவி காட்ச்சியில் பதியுமாறு அலர்விழியை சந்தித்திருக்க வேண்டும். தான் குற்றமற்றவள் என்று நிரூபிக்க நாடகமாடுகிறாளோ என்றுதான் ஆரம்பத்தில் மாறனுக்குத் தோன்றியது. பதிவான காட்ச்சியை பார்த்ததில் அந்த எண்ணம் மாறியிருந்தது.
சீசீடிவியை பார்வையிட்டவன் அலர்விழியிடம் அதை பற்றி விசாரிக்கலானான்.
“ரெண்டு பேர் இருந்தாங்கன்னு ரெண்டு பேர் தான் செய்யிறாங்கன்னு முடிவெடுக்க முடியுமா? சார். பார்க்கிங் லோட் எங்குறதால யார் யார் எங்க இருக்குறாங்கன்னே தெரியல. பணத்த கொண்டு போன பைய தூக்கி போடச் சொன்னான். பணப்பையையும் எடுத்துக்கிட்டு குழந்தையையும் தராம போயிட்டான்னா, குழந்தையை அனுப்பு பணத்த தூக்கிப் போடுறேன்னு சொன்னேன். அதுக்கு அவனுங்க இல்ல, ஒரே நேரத்துல கைமாத்திக்கலாம்னு சொன்னானுங்க.
நான் கவீஷ பிடிக்க ஒரு கைய நீட்டினா, ஒருத்தன் என்ன மடக்கி பிடிச்சிகிட்டான். கைல பை இருந்ததால சட்டென்று ஒன்னும் பண்ண முடியல. கவீஷ் வேற மத்தவன் கைல இருந்தானே. யோசிக்காம ஒன்னும் பண்ண முடியாது. பணத்தையும் எடுத்துக்கிட்டு என்ன மயக்கமாகி திரும்ப குழந்தையை கடத்த பாக்குறானுங்கனு தோணிருச்சு அவன் கவீஷ விட்டதும் ஓட சொன்னேன். அவன் அடம்பிடிக்காம ஓடினத்துல, என்னால அவனுங்கள அடிக்க முடிஞ்சது. சிக்குரிட்டிய பார்த்ததும் ஓடிட்டானுங்க” சீசீடிவியின் காட்ச்சிகளுக்கு குரல் கொடுத்தாள் அலர்.
“நான் அப்போவே சொன்னேன். கேட்டீங்களா? என்ன சந்தேகப்பட்டிட்டீங்களே” என்றெல்லாம் அவள் அழுது கரையாமல். அவனிடம் கோபமும் கொள்ளாமல், அவனை மரியாதை பன்மையில் விளித்து வாய் மட்டும் பேசாமல் கண்களாலையும் நடந்ததை விவரித்த விதம் மாறனின் மனதை கொள்ளையடித்திருந்தது. வாய் மீது கையை வைத்து இதழோரம் தவழ்ந்த புன்னகையை மறைத்தவாறு அவளை பார்த்திருந்தான். அவன் மனதில் சாரலடித்துக் கொண்டிருந்ததை அவனே அறியான்.
ஆக மொத்தத்தில் குழந்தை கவீஷ் கதை கூறவில்லை. அவள் பொய்யாக அடித்தது போலும் தெரியவில்லை. சண்டை கலை பயின்றிருக்கின்றாள் போலும் அவள் கூறியதும் பொய்யில்லை. ஆனாலும் மாறனின் சந்தேகம் தீரவில்லை. அது ஏன் என்றும் அவனுக்குப் புரியவில்லை. எதுவோ சரியில்லை என்று அவன் ஆழ்மனம் உறுத்தியது. அதற்கு அந்த கடத்தல்காரர்களை பிடித்து விசாரித்தால் தான் உண்டு அதுவரை அலர்விழியை இங்கே அமர்த்தி வைக்கவும் முடியாதே.
அவளிடம் சரணடைய தோன்றாமல் “என்ன குங்பூவா? கராத்தையா?” கிண்டலாக கேட்பது போல் சமாதானக் கொடியை மெதுவாக ஏற்றினான்.
அலர்விழி அவனை கிண்டலாகப் பார்த்து நக்கலாக பேசியிருந்தால், அவன் மனம் சமன்பட்டிருக்குமோ! என்னவோ! அவள் புன்னகைக்கக் கூட இல்லை. எதுவுமே கூறாமல் அமைதியாக தலையசைத்து எழுந்து நின்றாள்.
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் “திரும்ப கமலேஷ் வீட்டுக்கு போக மாட்டல்ல. எங்க தங்க போற? போன பிறகு இன்போர்ம் பண்ணு” “நீ இவளுக்கு நெருக்கமா? உன்னை விட நான் நெருங்குறேன் பார்” என்று அவன் மனம் அவனை தூண்டிவிட்டிருக்க, வேண்டுமென்றே தான் ஒருமையில் பேசினான். அதுவும் யாதவ்வை பார்த்தவாறு.
ஆனால் அலர்விழி “எதுக்கு?” என்று விழிகளை உயர்த்தி கேட்டிருந்தாள்.
“அந்த கிட்னபர்ஸை பிடித்த பிறகு சாட்ச்சி சொல்லத்தான்” அவள் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தான்.
ஆனால் அவன் மனமோ. குழந்தையை கடத்த நினைத்தவர்கள் எதற்காக அலர்விழியிடம் பணத்தை கொடுத்தனுப்புமாறு கூறினார்கள்? அவள் கூறியது போல் கடத்தல்காரர்கள் பரிட்சயமானவர்களாக இருப்பார்களோ? யாருக்கு? கமலேஷ் மற்றும் சுமதிக்கா? அல்லது அலர்விழிக்கா?
பணத்தை கொண்டு வந்தவளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளை கடத்த நினைத்தார்களோ? லேப்புக்கு போன கட்ச்சிப்பின் டீடைல் ரிப்போர்ட் வந்தால் தான் அது என்னவென்றே கூற முடியும். அதற்குள் அது மயக்க மருந்து என்று எப்படி சொல்வது? இதுவும் இவள் திட்டமாக இருக்குமோ? மாறனின் மனதுக்குள் விடை காணா கேள்விகள் வளம் வந்து கொண்டிருக்க,
அதை அறியாத அலர்விழி “சரி: என்று தலையசைத்து விட்டு யாதவ்வோடு பேசியவாறே கிளம்பிச் செல்ல, அவளை வெறிக்கலானான் மாறன்.
அவர்களின் தலை மறைந்ததும் அன்வரை அழைத்தான்.
அன்வர் மாறனுக்கு சீனியர்தான். சமீபத்தில் டி.ஐ.ஜியாக பதவியேற்று சென்னைக்கு மாற்றலாகி சென்ற விஸ்வநாதனை சந்திக்க சென்ற பொழுது சந்தித்திருக்கின்றான். அவரே அன்வருக்கு மாறனை அறிமுகப்படுத்தி இருக்கின்றார். அதுவும் எப்படி? “அன்வர் இவன் கையும் உன்ன போல படு சுத்தம் ஏதாவது ஹெல்ப் வேணும்னா பையன தயங்காம கேளு” என்று.
தன்னை பையன் என்றதில் மாறன் கடுப்பானாலும் மூவறிலும் அவன் தான் வயதிலும் சின்னவன். பதவி, அனுபவமும், என்கவுண்டர் எண்ணிக்கையும் கம்மி என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பது மாறனுக்கு புரிந்ததால் முகத்தை விறைப்பாக வைத்திருந்தான்.
அடிக்கடி சந்திக்க முடியாவிட்டாலும், முக்கியமான வழக்குகளில் ஆலோசனை கேட்கவும், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் இருவரும் அலைபேசி அழைப்பு விடுத்துக்கொள்வது வழமைதான். அந்த உரிமையில்தான் மாறன் அன்வரை அழைத்திருந்தான்.
அன்வர் நலம் விசாரிக்க, மாறன் நேரடியாக விசயத்துக்கு வந்தான்.
இவ்வாறு கூறுபவனிடம் தன் சந்தேகத்தை எவ்வாறு கூறுவதாம்? “இல்ல… அந்த பொண்ணு இங்க ஒரு கேஸ்ல இன்வோலாகியிருக்கா அதான்…” அலர்விழி குற்றவாளி போல் மாறன் சித்தரிக்க,
“அந்த பொண்ணா…. நான் விசாரிச்ச வரையில, எந்த கிரிமினல் ரெகார்டும் இல்ல. ஒரு பையன லவ் பண்ணிக்கிட்டு இருந்தா, கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ண இருந்தா, அந்த நேரம்தான் ஏ,டி,ஜி,பி சத்யதேவ் இறந்தாரு. என்ன பண்ணா? ” தான் விசாரித்த தகவல்களை கூறியவாறே ஏதும் விட்டு விட்டேனோ என்று யோசிக்கலானான் அன்வர்.
“என்னது லவ்வா? கல்யாணமா?” வாய்விட்டே கேட்டவனின் இதயத்தில் பூகம்பம் வெடித்திருக்க, நெஞ்சமே சுர்ரென்று வலிப்பது போல் இருந்தது.
“என்ன மாறன்?” அன்வர் புரியாமல் கேட்கும் நொடி மாறனின் கண்களுக்கு அலர்விழியின் தோற்றம் வந்து “இல்லையே கல்யாணம் ஆகளையே” என்றதும் இதயத்தில் இதம் பரவி மிதக்கலானது.
“எனிதிங் சீரியஸ்? அந்த பொண்ண பத்தி மேல விசாரிக்கணுமா?”
அலர்விழியை அன்வர் சந்தேகப்பட்டதும் மாறனால் பொறுக்க முடியவில்லை. “இல்ல ஒரு சைட் மிஸ்ஸிங் கேஸ் இந்த பொண்ணையும் கிட்னப் பண்ண பார்த்திருக்கானுங்க” சட்டென்று சந்தேகப்பட்டவளுக்காக வக்காலத்து வாங்கியிருந்தான்.
“அது என் கேஸ் மாறன்” மூக்கை நுழைக்காதே என்றான் அன்வர் சற்று கடுப்போடு.
“என்கிட்ட உதவின்னு வருவீங்கல்ல” இவனும் குரலில் சற்று கடுமையை கூட்டினான்.
” என்ன உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கப் போறதால முடிக்காத கேஸயெல்லாம் நோண்டுறியா? என்னால கொலைகாரனை கண்டு பிடிக்க முடியலைன்னா, நானே கமி ஷ் னர் கிட்ட சொல்லி கேஸ உன்கிட்ட கொடுக்க சொல்லுறேன்” என்ற அன்வர் அலைபேசியை அனைத்திருந்தான்.
கோபத்தை அடக்கியவாறே ஏட்டு ஏகாம்பரத்தை அழைத்தவன் கடத்தல்காரர்கள் எந்த வண்டியில் சென்றார்கள்? எந்த பாதையில் சென்றார்கள்? என்ற சீசீடிவி காட்ச்சிகள் எங்கே எனக் கேட்டு கடுகடுத்தான்.
ஒருவாறு கடத்தல்காரர்களை பிடித்திருந்தான். காலேஜ் படிக்கும் மாணவர்கள் என்றதும் கனன்ற கோபத்தை அடக்கியவாறே விசாரித்ததில் யாரோ அவர்களை மிரட்டி அலர்விழியை கடத்துமாறு கூறியதாக கூறலாயினர்.
“அப்போ எதுக்கு குழந்தையை கடத்தி பணம் கேட்ட?” இருவரையும் சரமாரியாக அடித்தவாறே “யாரோ மிரட்டியதாக சொன்னியே, எதுக்கு மிரட்டினான்?”
இருவரிடமும் மாறி, மாறி ஒரே கேள்வியை கேட்டு துளைத்தெடுத்த மாறனுக்குள் “தானே கடத்தாமல் இவர்களை மிரட்டி அலர்விழியை கடத்தச் சொன்னவன் நிச்சயமாக அவளுக்கு தெரிந்தவனாகத்தான் இருக்க வேண்டும்” எனத் தோன்றியது.
“ஆமா… அந்த யாதவ்வை தவிர அவள் யாரிடமும் போன்ல கூட பேசலைனா, யாராக இருக்கும்? கூட இருந்த கமலேஷ் மற்றும் சுமதிக்கே போன் நம்பரை கொடுக்காம இருந்திருக்கா, அந்த மாதிரி தெரிஞ்சவங்களாகத்தான் இருக்கும். யாரை சந்தேகப்படுவது? ஒன்னும் புரியல” மாறன் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்க, அடி தாங்காமல் அவர்கள் இருவரும் வாய் திறந்தனர்.
“யாருன்னு தெரியல சார். நான் என் காதலியோடு இருந்தத வீடியோவா எடுத்து மிரட்டுறான்” ஒருவன் கூற,
“நான் இவன் பிரெண்டு சார்… இவனுக்கு ஹெல்ப் பண்ண…” அழுதவாறே மற்றவன் கூற,
“நீ வீடியோ எடுத்தியா? இல்ல அவன் எடுத்தானா?” இவனை நம்பி ஒரு பெண் வந்திருக்கின்றாள். இவன் அவளை ஏமாற்ற நினைத்தானா என்ற சந்தேகத்தில் தான் கேட்டான் மாறன்.
“ஐயோ… இல்ல சார் நான் அப்படியொண்ணும் பண்ணல சார்… நீதுவுக்கும் தெரியும் சார்” அச்சத்தில் உளறினான் காதலன்.
“ஒரு பொண்ண காப்பாத்த, இன்னொரு பொண்ண காவு கொடுக்கப் பாத்திருக்குறீங்க. இதுல குழந்தையை வேற கடத்தி பணம் பரிச்சிருக்குறீங்க. அதுவும் பத்து லட்சம். பணத்த என்ன பண்ணினீங்க? இப்போ உன் லவ்வரும் இந்த கேஸுக்குள்ள வந்துட்டா” என்றவன் மாதவனுக்கு கண்ணசைக்க, நீது என்கிற நித்யாவை அலைபேசியில் அழைத்து காவல்நிலையம் வருமாறு கூறலானான் மாதவன்.
“நித்யா அப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு சார். அதான் இப்படித் திட்டம் போட்டோம். அஞ்சு லட்சம் இவனுக்கு கொடுத்தேன். கொஞ்சம் செலவாகிருச்சு. எஞ்சியது வீட்டுல…” காதலன் வாக்குமூலம் கொடுக்க, நண்பனும் தலையசைக்கலானான்.
தன் தந்தையோடு வந்த நித்யா இவர்கள் யாரென்றே தெரியாது என்றாள். மாறன் எதிர்பார்த்த பதில்தான். குற்றவாளி கூண்டில் இருந்த இருவரும் அதை சற்றும் எதிர்பாராது அழுது கரையலாயினர்.
அவர்களின் அழுகையும், கதறலும் இதுதான் அவர்களின் முதல் குற்றம் என்று மாறனுக்கு புரிந்தாலும், சட்டம் தன் கடமையை செய்து தானே ஆக வேண்டும் என்று அமைதி காத்தான்.
“இங்க பாருங்க சார். அதான் என் பொண்ணு இவனுங்க யாரென்றே தெரியாதுன்னு சொல்லிட்டாளே. நாங்க கிளம்புறோம்” என்றான் நித்யாவின் தந்தை நந்தகுமார்.
நித்யாவை அழைக்குமாறு கூறும் பொழுதே அவளை பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தமையால் நந்தகுமார் ஆளும் கட்ச்சி எம்,எல்,ஏ யின் மைத்துனன் என்று அறிந்து கொண்ட மாறன் நித்யாவின் பதில் அவள் தந்தையின் மிரட்டலால் வந்ததென்றும் அறிந்துதான் இருந்தான்.
தன்னுடைய மகள் காதலிப்பதே தந்தையான நந்தகுமாருக்கு அதிர்ச்சியென்றால், காதலனோடு அவள் வீடியோ வேறு இருக்கிறது என்றதும் கொதித்தான். வீட்டில் வைத்து அவளை அடித்து, அறிவுரை கூறித்தான் வந்திருக்க வேண்டும். கன்னம் சற்று வீங்கி சிவந்திருந்ததோடு, விசும்பியவாறு இருந்தவள் கூண்டில் இருந்து கதறியவர்களை திரும்பியும் பார்க்கத்தான் இல்லை.
“அவன புடிச்சு உங்க பொண்ணு வீடியோவ எம்.எல்.ஏ சார் கிட்டயே ஒப்படைக்கிறேன்” நக்கலாக கூறிய மாறன் கூண்டில் இருப்பவர்களைத்தான் முறைத்தான்.
நந்தகுமார் மாறனை முறைத்து விட்டு நித்யாவை வசைபாடியவாறு கிளம்பிச் சென்றான்.
“ஒருத்தன் மிரட்டுறான்னு நீ இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண பார்த்த, இவளுக்கு தைரியம் இல்ல அப்பா சொன்னதை கேட்டுட்டு போய்ட்டா. எம். எல்.ஏ வேற சும்மா இருக்க மாட்டாரு. அந்தாளுகிட்ட இருந்து உங்கள வேற காப்பாத்தணுமா? மிரட்டினாப்போவே வந்து கம்பளைண்ட் கொடுத்திருந்தா, வீணா நீங்க ரெண்டு பேரும் உள்ள போகாம இருந்திருக்கலாம்”
மாறனுக்கு அவர்களை பார்த்து இரக்கம் சுரந்தாலும், கோபம் கனன்றது. காவல்நிலையம் வந்தால் தன் காதலிக்கு இலக்கு ஏற்படும் என்று எண்ணி இவர்கள் இன்னொரு பெண்ணுக்கு அநியாயம் இளைக்க நினைத்திருக்கிறார்கள். காதலியே கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள். முட்டாள்கள்.
பாவம், பாசம் எல்லாம் இங்கே செல்லாது அவன் வேலையை அவன் பார்த்துத்தான் ஆக வேண்டும்.
அலர்விழியின் அலைபேசிக்கு அழைத்தால் அது அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வரவே யாதவ்வை அழைத்த மாறன் அலர்விழியை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் வருமாறு கூறியிருக்க, யாதவ் மாத்திரம் வந்து சேர்ந்தான்.
“அவ லண்டன் போய் இருக்கா சார். வர ரெண்டு மாசமாகும்”
“போன் நம்பர்?”
“அவளே போன் பண்ணாதான் உண்டு. அதுவும் லேண்ட் லைன் நம்பர்” என்ற யாதவ்வை முறைத்த மாறனின் பார்வையோ “நீ கூறுவதை நான் நம்ப மாட்டேன்” என்றிருந்தது.
யாதவ் மாறனை பொருட்படுத்தாமல், “என்ன விஷயம் என்று சொல்லுங்க சார்” எனக் கேட்டான்.
“சாட்ச்சி சொல்லத்தான்” என்ற மாறனின் மனதுக்குள் ஆயிரம் பிரளயம் உருண்டோடினாலும் அமைதியாக “அவ போன் பண்ணா என்ன காண்டாக் பண்ண சொல்லுங்க” என்று மாத்திரம் கூறி யாதவ்வை அனுப்பி வைத்தான்.
அலர்விழி அவனை தொடர்பு கொள்ளவுமில்லை. சாட்ச்சி கூற வரவுமில்லை. யாதவ்வை அழைத்தால் அவன் அலைபேசி எண்ணும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அலர்விழி சாட்ச்சி கூறாததால், கடத்தல்காரர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே கிடைத்தது.
அக்கணம் “நல்லது” என்று எண்ணிய மாறனின் மனம் அலர்விழிக்கு என்ன ஆனது என்று சிந்திக்கத்தான் செய்தது. ஆனால் அவளை தேடவோ, அவன் மனதை உணரவோ முடியாதபடி ஒரு கொலை வழக்கில் மூழ்கிவிட்டான்.
அலர்விழி காணாமல் போனதில் ” அலர்விழியை கடத்தச் சொல்லி மிரட்டியது யாதவ்வாக இருக்குமோ? பணம் வேண்டும் என்பதால் குழந்தையை கடத்தி இவர்கள் மாட்டிக் கொண்டிருப்பார்களோ? ஒருவேளை யாதவ் அலர்விழியை தன் கட்டுப்பாட்டில் வைக்க எண்ணி அவளை திட்டம் போட்டு கடத்தி, அவளை காப்பாற்றுவது போல் காப்பாற்றி அவள் மனதில் நுழைய நினைக்கிறானா? அதனால்தான் கமலேஷ் மற்றும் சுமத்தியிடம் கூட அவள் அலைபேசி எண்ணை கொடுக்கவில்லையோ? கொடுத்து விடாதபடி அவள் மனதை மாற்றி விட்டானா? அப்படி என்ன கூறி இருப்பான்? அப்படி செய்ய நினைக்கிறவன் அலர்விழியை எதற்காக கமலேஷ் வீட்டில் தங்க வைத்தான்? ஒருவேளை இருவரும் சேர்ந்து திட்டம் போட்டிருப்பார்களோ? கண்களுக்கு தெரிவது ஒன்றாக இருக்க, அவர்களின் திட்டம் வேறு ஏதாவதாக இருக்குமோ? அதனால் தான் இருவரும் காணாமல் போய் விட்டார்களோ? ” என்றெல்லாம் மனதுக்குள் வந்து போனதில் முன்பை விட அவள் மீது சந்தேகம் கொண்டவன், ஏ.டி.ஜி.பி சத்யதேவின் வழக்கு ஞாபகத்தில் வரவும் “நிச்சயமாக அவர் மரணத்திற்கு இவள் காரணமாக இருப்பாள்” என்றது அவன் மனம்.
அதனால் அலர்விழியை பற்றி முழுதாக விசாரிக்கலானான்.
அவனுக்கு கிடைத்த தகவல்கள் உவப்பானதாக இல்லை. அவள் காதலன் வேறு விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டான். அவன் ஆயுள் காப்பீடு பணம் இவளுக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஒருவேளை அவனை இவள்தான் கொன்றிருப்பாளோ? அதுவும் யாதவ்வோடு சேர்ந்து? ஏதேதோ எண்ணங்கள் வந்து மாறனின் மனதில் அலைபாய்ந்து அலர்விழியை கொஞ்சமேனும் நம்பக் கூடாது என்றதில் உறுதியானது.
தந்தையை பற்றி மாறன் தாத்தா தர்மதுரையிடம் கூறியதை கேட்ட லதா தனக்கு நடந்ததை கூறி பூபதியை பற்றி விசாரிக்கக் கூடாது என்று சண்டையிடலானாள்.
தன் குடும்பப் பிரச்சினையே தீராமல் இருக்க, அலர்விழியையும் மறந்தான். அவளை பற்றி மேலும் விசாரிக்க வேண்டும் என்பதையும் மறந்தான்.
இதோ அடுத்த வழக்கில் அவளே அவன் முன் அமர்ந்திருக்கின்றாள்.
மீண்டும் அவளை பார்த்ததில் “சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவள் என்று திரும்பி வந்தாள்?” என்றதையும் தாண்டி “இவள் இருக்கும் இடத்தில் பிரச்சினை நடக்கிறதா? அல்லது பிரச்சினை நடக்கும் இடத்திற்கு இவள் வந்து சேர்க்கின்றாளா? அல்லது பிரச்சினையே இவள்தானா?” என்று அவளை பார்த்திருந்தான் மாறன்.
தன்னை வரச் சொன்னவன் அமைதியாக யோசிப்பதை பார்த்த அலர்விழி அவனை தன்புறம் திருப்ப, கைப்பையை கீழே விட்டாள்.
அதில் அவள் புறம் திரும்பிய மாறன் “ஆமா லண்டன்ல இருந்து எப்போ வந்த?” எனக் கேட்டான்.
“லண்டனா? நான் இந்தியாவ தாண்டி எங்கயும் போனதே இல்ல” என்றாள் இவள்.
யாதவ் கூறியது பொய்தான் என்று மாறன் எண்ணியது சரிதான்.
ஆனால் இவள் இப்பொழுது எதற்காக என்னிடம் உண்மையை கூறுகிறாள்? என்னை வைத்து காய் நகர்த்த திட்டம் போடுகிறாளா? அவளை சந்தேகமாக பார்த்தான் மாறன்.
அலர்விழியை சுற்றி நடப்பவைகளை அவள் கையை மீறுவதை அவளாலையே தடுக்க முடியாது. பின்னப்படும் வலைகளை அவளே அறியாத பொழுது,
பாவம் மாறன் அவளை புரிந்துக்கொள்ள முடியாமலும், அவனுள் இருக்கும் காதலை உணர முடியாமலும், திணறுவதும், தவிப்பதும் தவிர்க்க முடியாததுதான்.