அத்தியாயம் 31

ஒரு வாரம் கழித்து

சக்தியும் ஆதித்யனும் அவர்களின் திருமண நாளுக்காக அவர்கள் எப்போதும் சென்று வரும் சிவன் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்திருக்க, ஆடல் வல்லானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைக்கு சிவகாமி ஏற்கனவே சொல்லி இருக்க அதன்படி பூஜைகள் நடந்துக் கொண்டிருந்தது. பூஜை நல்லவிதமாக முடிந்து இறைவனை வணங்கிய இருவரும் கோயிலை சுற்றி வந்து குளக்கரையில் அமர்ந்துக் கொண்டனர்.

எப்போதும் கோவிலுக்கு வந்தால் ஏற்படும் ஒரு அமைதி இருவரையும் வியாபித்து இருக்க, சக்தியோ கடைசி மூன்று ஆண்டுகள் இந்த நாள் வந்தால் யார் கண்ணிலும் படாமல் தன் அறையிலேயே தான் முடங்கி இருந்தது என்ன. இன்று இவன் ஒருவன் அனைத்தையும் தலை கீழாக மாற்றிவிட்டானே என்று பிரமித்திருந்தாள் அவள்.

ஆதித்யன் இந்த ஊருக்கு வந்த மூன்று மாதங்களில் சக்தியை முழுவதுமாக தன் காதலில் கட்டி வைத்திருந்தான். அவளின் செயல்கள் அனைத்தும் அவனுடையதாகி போக, விரும்பியே விழுந்தாள் அவள். பல நேரங்களில் இவனா தன்னை மூன்று ஆண்டுகள் பிரிந்து இருந்தான் என்று யோசிக்கவைத்திருந்தான் அவளை.

இப்போதும் அவள் கையை பிடித்துக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, இவன் என் கணவன் என்ற எண்ணமே அவளை கர்வம் கொள்ள வைத்தது. அன்று போலவே இன்றும் மதியழகி கோவிலுக்கு வந்தவள் எதேச்சையாக இவர்களை பார்க்க ஆதித்யனின் கண்களில் வழிந்த காதலில் தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

எப்படியாவது அவன் மனைவியாக வேண்டும் என்று நினைத்திருந்தவள் தான். ஆனால் இன்று காதலில் குளித்திருந்த அவன் கண்களை கண்டதும், இனி தன் கனவு எப்போதும் நடக்காது என்று உணர்ந்தவளாக தன்னை தேற்றிக் கொண்டு, வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிளைக்கு சம்மதம் சொல்லிவிட முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினாள் அவள்.

அவள் வந்ததையோ, சென்றதையோ எதையும் அறியாத காதலர்கள் இருவரும் தங்கள் உலகில் மூழ்கி இருக்க, நேரம் ஆனதை உணர்ந்து சக்தியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் ஆதித்யன். அங்கு தாமரை, செவ்வி- மதிமாறன் , சுந்தரபாண்டியன்- ரங்கநாயகி, கந்தகுரு என்று அனைவரும் வந்து இவர்களுக்காக காத்திருக்க வெகுநாட்களுக்கு பிறகு பெரியவீடு அன்று முழுமையான சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

ஆதித்யனும் சக்தியும் முதலில் வேதமாணிக்கம் -சிவகாமியின் காலில் விழுந்து எழ, தொடர்ந்து சுந்தரபாண்டியன் ரங்கநாயகியிடமும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். அடுத்து இவர்கள் கந்தகுருவின் காலில் விழப்போக கந்தகுரு அவர்களை தடுத்து தன் மருமகளை அனைத்துக் கொண்டார். அவள் பிறந்த உடன் அவளை அவர் கையில் எய்தியது இந்த நிமிடம் நினைவுக்கு வந்தது அவருக்கு. தன் மருமகள் தன்னிடமே வந்து சேர்ந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி அந்த தாய்மாமனுக்கு.

செவ்வி சக்தியை அணைத்து வாழ்த்தியவள் தன் தோழியின் கன்னத்தில் முத்தமிட்டு அவளுக்கு திருஷ்டி கழிக்க தாமரையும் சக்தியை கட்டிக் கொண்டு இன்னொரு கன்னத்தில் முத்தமிட பார்த்திருந்த ஆதித்யனுக்கு தான் கடுப்பாக ஆனது. அவனை கண்ட மதிமாறன் அவன் நிலை புரிந்தவனாக சத்தமாக சிரித்துவிட ஆதித்யன் திரும்பி அவனை முறைக்கவும் சிரிப்பை அடக்கியவன் அவனை அணைத்து வாழ்த்தினான். ஆதித்யனும் அவனை அணைத்துக் கொள்ள ஆதித்யனின் காலை சுரண்டிய இளமாறன் அவன் காலில் அடிக்கவும் ஆதித்யன் குனிந்து பார்த்தவன் தன் மருமகனை கைகளில் தூக்கிக் கொள்ள அவனோ தன் தந்தை செய்ததை போல ஆதித்யனின் கழுத்தை கட்டிக் கொண்டவன் அவன் முகம் முழுவதும் முத்தமிடுகிறேன் என்று ஈரம் செய்ய ஆதித்யன் அவனின் அன்பில் தன்னை இழந்தவன் தானும் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

இவரால் இவ்வாறு இருக்க சக்தி தன் தோழிகளோடு ஐக்கியம் ஆகி இருந்தாள். தாமரை வழக்கம் போல அவளை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த செவ்வியிடம்

” செவ்வி உனக்கு தெரியுமா. யாரோ ஆதி அண்ணன் மேல ரொம்ப கோபமா இருந்தாங்க. அவர் முகத்தையே பார்க்க மாட்டேன்னு ஒருத்தி சபதம் எடுத்தா. உனக்கு தெரியுமா அது யாருன்னு ” என்று கேட்க

” அப்படியா தாமரை. எனக்கு அப்படி யாரையும் தெரியவே இல்லையே. இங்க எனக்கு தெரிஞ்சி ஒருத்தி என் அண்ணன் பக்கத்துல இருந்தா உலகமே மறந்து கெடக்குறா. நான் அவளை மட்டும்தான் பார்த்தேன் பா ” என்று அவள் தன் பங்குக்கு ஏற்றிவிட

” யாரடி அது “

” சக்தி மட்டும் இல்லவே இல்லடி”

” அதான சக்தி ரொம்ப கோவக்காரி, பார்த்துக்கோ ” என்று இருவரும் விடாமல் அவளை ஓட்டிக் கொண்டிருக்க சக்தியோ பொறுத்து பார்த்தவள்

” என்ன இப்போ என் புருஷனோட தானே உலகம் மறந்து போறேன். பரவாயில்ல. போங்கடி ரெண்டு பெரும் ” என்று வெட்கத்துடன் சொல்லிவிட

” கேட்டியா தாமரை புருஷனாம். உனக்கு தெரியுமா ” என்று செவ்வி அப்போதும் கிண்டல் செய்ய,

” எனக்கு தெரியாதே செவ்வி ” என்று அவள் அப்பாவியாக கூறவும்

” சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ, எல்லாம் தெரியும். இப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு. இதையெல்லாம் பேசக்கூடாது தாமரை ” என்று சக்தி தமரையை திருப்பிக் கொள்ள

இப்போது செவ்வியோ ” ஆமாமா. தாமரை சக்தி சொல்றமாதிரி சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்போ நீ சின்ன பொண்ணு. இதெல்லாம் பேசவேகூடாது. ஒட்டிக்கிறது கட்டிக்கிறதெல்லாம் சக்தி மட்டும் தான் பேசணும் . அவ பெரிய மனுஷி ஆகிட்டா இல்ல ” என்று இருவரையுமே சேர்த்து வாரினாள் அவள்.

அப்போது சிவகாமி சாப்பிட அழைத்தவர் அனைவர்க்கும் தலை வாழை இல்லை வைத்து விருந்து பரிமாற சரியாக அந்த நேரம் வீட்டினுள் நுழைந்தனர். வீரபாண்டியனும், இளவேந்தனும். இளவேந்தன் இவர்கள் சாப்பிட அமர்ந்ததை பார்த்தவன்

” பார்த்திங்களா பெரியப்பா. எல்லாம் நம்மை விட்டுட்டு கொட்டிக்க தயாராகிடுச்சிங்க. உங்க மருமகன் கூட ” என்று சத்தமாகவே சொல்ல

” அப்புறம் வீரா. சென்னையோட சட்டம் ஓழுங்க ஒழுங்குபடுத்தாம இங்க என்ன பண்ற நீ. நீ இல்லாம சென்னையே கண்ணீர் விடாது ” என்று நக்கலாக கேட்டவன்

இளவேந்தனிடம் திரும்பி ” அதெப்படிடா கரெக்ட்டா சாப்பாடு நேரத்துக்கு ஆஜராகி இருக்க. இதுல உன்ன விட்டுட்டு கொட்டிக்கிறாங்களா ” என்று கேட்க

அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் தானே ஒரு இலையை எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டவன் ” பாட்டி. சாப்பாடு போடு. சாப்பிடும்போது பேசினா எங்க அம்மா திட்டும்” என்று கூற அங்கே சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் போனது. சிவகாமி வீரபாண்டியனையும் உட்கார சொன்னவர் அவருக்கும் பரிமாற நெடுநாட்களுக்கு பிறகு பெரிய வீட்டில் ஒரு விருந்து. அத்தனை பேரும் இல்லாவிட்டாலும், இருந்தவர் அனைவரும் மனம் மகிழ்ந்து இருக்க சிவகாமிக்கு சந்தோஷத்தில் கண்கள் கூட கலங்கியது.

இப்படி ஒருநாள் மீண்டும் வராதா என்று ஏங்கி கொண்டிருந்தவர் ஆகிற்றே. உணவு முடித்து மாலை வரை இருந்தவர்கள் அனைவரும் மாலை சிற்றுண்டி முடித்து அவரவர் வீட்டிற்கு கிளம்ப, நாள் முழுவதும் ஓடியாடிக் கொண்டிருந்ததில் களைப்பாக காணப்பட்ட பெரியவர்கள் இருவருக்கும் நேரமே உணவு கொடுத்து அறைக்கு அனுப்பி இருந்தாள் சக்தி.

ஆதித்யன் அறையில் இருக்க, அவனை அழைத்து இரவு உணவை பரிமாறியவள் அவன் அருகில் நின்றிருக்க, அவளையும் அமர்த்தி தன்னுடனே உண்ண வைத்தான் அவன். உண்டு முடித்து அவள் பாத்திரங்களை ஒதுங்க வைத்து பால் காய்ச்சும்வரை அவளுடனே உணவு மேசையில் அமர்ந்திருந்தவன் அவள் பாலை டம்ளரில் ஊற்றும் நேரம் அவள் பின்னல் வந்து நின்றவன் அவளை பின்னிருந்து அணைத்து கழுத்தில் முத்தமிட கூசி சிலிர்த்தவள் கையிலிருந்த பாத்திரத்தை நழுவ விடப்பார்க்க ஆதித்யன் அதை பிடித்து கீழே வைத்தவன் அவளை தன் பக்கம் திருப்பி

“இன்னும் எவ்ளோ நேரம்டி ” என்று அவளை கைகளில் ஏந்திக் கொள்ள பார்க்க, அவனை தடுத்தவள்

” இருங்க . இந்த பாலை எடுத்துட்டு வரேன்.”

” ஹேய். உங்கிட்ட நான் பால் வேணும்னு கேட்டேனா. ரொம்ப பண்றடி ” என்று பொய்யாக முறைக்க

” என்ன பன்றாங்க. இருங்க இதை எடுத்து பிரிட்ஜ்ல யாச்சும் வச்சிட்டு வரேன் ” என்று கூற

அவன் முறைத்துக் கொண்டே நிற்கவும் அந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றியவள் கண்ணை மூடி பாதியை தான் குடித்து மீதியை அவன் முகத்துக்கு நேராக நீட்ட வாங்கி கொண்டவன் அதை வாயில் ஒத்திவைத்து ரசித்து ருசிக்க சக்திக்கு அவனை பார்த்து சிரிப்பு பொங்கியது.

பின்னேஇவன் அழிச்சாட்டியத்தில் சர்க்கரை போடக்கூட  நேரம் இல்லாமல் பாலை அப்படியே ஊற்றி குடித்து விட்டு அவனிடம் நீட்டி இருந்தால் அவள். காதல் மயக்கத்தில் இருந்தவனோ அதை ரசித்து குடிக்க சொல்லவும் வேண்டுமா சக்திக்கு .

அவளின் சிரிப்பில் என்ன என்று கேட்டவனிடம்  ” பால்ல சர்க்கரை போட மறந்துட்டேன்” என்று உரைக்க

” அப்படியா ” என்றவன் அவள் இதழ்களை பார்த்து ” சரி இப்போ போட்டுடலாம் ” என்று அவள் அருகில் நெருங்க பின்னால் நகர்ந்தவள் சமையல் மேடையில் இடித்து நிற்க நிதானமாக அவளை நெருங்கியவன் அவள் கையை எடுத்து தன்னை சுற்றி போட்டுக் கொண்டு அவள் இதழ்களை தனதாக்கிக் கொள்ள ஒரு நீண்ட முத்தம். கற்று கற்பித்து அமைதியான மௌன முத்தம்.  அவள் இதழ்களை மென்று தின்றுவிடுவானோ என்பது போல் அவளை முத்தமிட்டவன் அவள் மூச்சுக்கு திணறவும் அவளை விடுவிக்க அவள் மூச்சு விடும் நேரத்தில் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

அவள் புன்னைகையோடு அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவன் கழுத்தை கட்டி கொள்ள அவளை தன் அறையின் கட்டிலில் விட்டவன் கவிப்படைக்க தொடங்க இவர்களின் ஏகாந்த நேரத்தில் தான் எதற்கு இங்கே என்று நினைத்ததோ நிலவு கூட மேகத்துள் ஒளிந்து கொண்டது.

இங்கு தேடல் முடித்தவனோ தன் உயிரானவளை எப்போதும் போல் கையில் எடுத்துக் கொண்டு, அவள் இதழில் முத்தமிட்டு விலகியவன் ” சந்தோஷமா இருக்கியா நீ ” என்று அவளை பார்த்து கேட்க அவள் பதில் ஏதும் பேசாமல் அவன் நெஞ்சில் படுத்துக்கொள்ள ” பதில் சொல்லுடி ” என்று அவளை இம்சித்தவன் அவள் காதுக்கருகில் மேலும் ஏதோ பேச அவனை அடித்தவள் அவன் வாயை மூட வேறு வழி இல்லாமல் போகவும் அவன் பேச்சை தன் இதழ்களால் தடை செய்ய அவளின் இந்த செய்கையில் வியப்பாக பார்த்தான் ஆதித்யன்.

அவன் பார்வையை உணர்ந்தவள் ” என்னை என்னடா செய்த நீ.” என்று கேட்க, அப்படி ஒரு விரிந்த புன்னகை அவன் முகத்தில்.

நிறைவுற்றது..