Advertisement

9..

மற்றவரிடம்

மௌனம் கொள்ளும்

நான்..

உன்னிடம் மட்டும்

வாய் ஓயாமல்

காதல் பேசித் தீர்த்தேன்..

என் மௌனத்தை

அறிந்தவர்கள் கூட

என் மனதை

புரிந்து கொள்ள முயற்சி செய்ய..

என் காதல் மொழிகள்

அத்தனையும் அறிந்தவள் நீ

என்னை நிராகரித்து

சென்றது ஏனோ..

அமுதேவ் காதல் இன்னும் மாறாது இருப்பதை அறிந்ததும்.. அவனை மணக்க சம்மதிப்பதாக பானுஸ்ரீக்கு தெரியப்படுத்தினாள் விஷல்யா.

எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிச் சென்றவள்.. அதுவரை கொண்ட முடிவில் மாற்றம் கொண்டதற்கான காரணத்தை வினவினார் பானுஸ்ரீ.

நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் கூறி முடித்தவள்.. “இது இப்படித் தான் நடக்கும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு, அதனால தான் நீங்க அம்முவைப் பத்தி என்கிட்ட பேச வந்தீங்க அப்படித்தானே ஆன்ட்டி!“ என்று வினவினாள் விஷல்யா.

“என் பையனோட போட்டோவை பார்த்தப்ப உன் முகத்துல வந்த உணர்வை கவனிச்சேன், அதுல ஒருவித தவிப்பும் கோபமும் இருந்ததே தவிர வெறுப்பு இல்ல..  அதனால தான் உன்னை பார்த்து என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுனேன். நீ சொன்னத வச்சு பார்க்கும்போது என் பையனுக்கும் அவன் பாட்டி சொல்லிக் கொடுத்த விஷயங்களையும் மீறி உன்னை   பிடிச்சிருக்குன்னு புரிஞ்சது. அதனால தான் உங்க கல்யாணத்த பத்தி பேசுனேன்!” என்றார் பானுஸ்ரீ.

“நீங்க சொல்றது சரிதான் ஆன்ட்டி. அம்முவை காதலிக்கும் போது.. அவனை இம்ப்ரஸ் பண்ணனும்னு நான் எதுவுமே பண்ணல.. இப்போ எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி தான் அப்பவும் இருந்தேன். கடைசியா பிரியும் போது கூட விலகிப் போகணுங்கிற முடிவுல நான் தான் உறுதியா இருந்தேனே தவிர.. அவன் என்னை கன்வின்ஸ் பண்ண தான் ட்ரை பண்ணுனான். அந்த நேரத்திலேயே அவனுடைய எண்ணம் தப்புன்னு புரியவைச்சிருக்கணும். அதை விட்டுட்டு கோபமா பேசி விலகி வந்தது என்னோட தப்பு.” என்றாள் விஷல்யா.

“என் பையன் பேசின விதம் சரி இல்லையே அதுக்கு கோபப்படுறது தானே நியாயம். அந்த இடத்துல தன்மானமுள்ள எந்த பொண்ணா இருந்தாலும் அதைத் தான் செஞ்சிருப்பா, இதுல  உன் தப்பு  எதுவும் இல்ல  “ என்று விஷல்யாவைத் தாங்கிப் பேசியவர்.. சிலநொடி தாமதித்து… “ நடந்து முடிஞ்சதை பத்தி பேசி இப்போ ஒன்னும் ஆகப்போறது இல்ல, இனி நடக்கப் போறதப் பத்தி பேசுவோம். என்ன தான் என் பையனுக்கு உன் மேல மாறாத காதல் இருந்தாலும் இன்னும் அவன் மனசுல  என் அத்தை போதிச்ச போதனைகள் இருக்கத்தான் செய்யுது. அவன் அகராதியில பொண்ணுங்களுக்கு   அர்த்தமும் அடையாளமும் வேற..  அவன் பார்வையில   பெண்ணா இருக்கத் தகுதியே இல்லாத நான் தான் அவனுக்கான பொண்ணத் தேர்ந்தெடுத்து இருக்கேன்னு  தெரிஞ்சா,  என் மேல இருக்கிற வெறுப்புல உன்னைக் கூட வேணாம்னு சொல்லிடுவான், அது மட்டும் இல்ல அவன் மனசுல இன்னும் நீ பேசின வார்த்தை உறுத்தலா இருந்துட்டு தான் இருக்கு, அதனால அவனை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை.   என்  பையனை சரிகட்டி உன் வீட்டுக்கு பொண்ணுப்  பார்க்க கூட்டிட்டு வரது என்னோட   பொறுப்பு, அவனை  கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. “ என்றார் பானுஸ்ரீ.

“ அம்முவை  கரெக்ட்  பண்ண என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஆன்ட்டி, சோ நீங்க கவலைய விடுங்க. பொண்ணு பார்க்க மட்டும் கூட்டிட்டு வாங்க..  அவன் வாயாலேயே கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைக்கிறேன் பாருங்க… “ என்று முன்பே திட்டம்  தீட்டி வைத்த தீர்மானத்துடன் கூறினாள் விஷல்யா.

விஷல்யாவுடன்    அமுதேவ் திருமணம் நடக்க தன் கணவரின் துணையை நாடினார் பானுஸ்ரீ.

“என்னது தேவ் கிட்ட கல்யாணத்தை பத்தி நான் பேசணுமா!, என்ன விளையாடுறியா?. எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன்னு, நீதான சவால் விட்ட.. இப்போ எதுக்கு தேவையில்லாம உன் சாவலுக்குள்ள என்னை இழுக்கிற.. “ என்று மனைவியின் வார்த்தைக்கு மறுப்பு கூறிக் கொண்டிருந்தார் வாசுதேவ்.

“தேவ்வுக்கு விஷல்யா கூட கல்யாணம் நடந்தா அவன் சந்தோசமா இருப்பான்,  அவனுக்காக   நான் பொண்ணு பார்த்திருக்கேன்னு  தெரிஞ்சா..  என்ன நடக்கும்னு உங்களுக்கேத் தெரியும் அதனால தான் உங்களைப் பேசச் சொல்றேன்.  ” என்றார் பானுஸ்ரீ.

“ இந்தக்  கல்யாணம்  நடந்தா  அவன்  சந்தோசமா இருப்பான்னு  எப்படி நீ உறுதியா சொல்ற?, அந்த பொண்ணு வேணாம்னு முடிவு எடுத்ததால தான, அவனே அவளை விட்டுப் பிரிஞ்சிருக்கான். வேணாம்னு விலகிப் போக நினைக்கிறவங்கள வலுக்கட்டாயமா சேர்த்து வைக்க நினைக்கிறது ரொம்ப தப்பு பானுமா.. “ என்று மனைவியின் எண்ணம் தவறு என்று புரியவைக்க முயன்றார் வாசுதேவ்.

“வேணான்னு விலகிப் போன உங்களை கட்டாயப்படுத்தி தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நாம சந்தோஷமா இல்லையா?, உங்களுக்கு என் கூட வாழுறது   ரொம்ப கஷ்டமா இருக்கோ?” என்று வெடுக்கென்று வினவினார் பானுஸ்ரீ.

“ஆமான்னு சொன்னா என்ன செய்வ.!” என்று கிண்டலுடன் வாசுதேவ் வினவிட… “ வரவர உங்களுக்கு கிண்டல் ரொம்ப அதிகமாயிடுச்சு.. என்னவோ போனா போகுதுன்னு என்னைப் பொறுத்திட்டு வாழுற மாதிரி ஓவரா ஸீன் போடுறீங்க!., “ என்று பானுஸ்ரீ இடையில் கைவைத்து முறைக்க…

“ கோபமா இருக்கும் போது.. இப்படி இடுப்புல கை வைச்சு முறைக்கிற என் பொண்டாட்டியோட அழகை ரசிக்க எனக்கு இத விட்டா வேற வழி தெரியலையே!,” என்று குறும்புடன் கூறினார் வாசுதேவ்.

“  அழகை ரசிக்கிறேன்னு இப்படி  வெறுப்பேத்தி    பார்த்துட்டே இருங்க… ஒருநாள் இல்ல ஒருநாள் நீங்க கிண்டலுக்கு சொல்லுறத உண்மைன்னு நினைச்சு உங்களை உண்டு இல்லைன்னு பண்ண போறேன் பாருங்க.. “ என்று மிரட்டல் விடுத்தார் பானுஸ்ரீ.

“ இதுக்கு மேல  உண்டு இல்லன்னு பண்ண என்ன இருக்கு, அதான் ஏற்கனவே  பூம் பூம் மாடு மாதிரி.. நீ சொல்றதுக்கு எல்லாம் உண்டு இல்லைன்னு தலையாட்ட வச்சுட்டயே!. சரி சரி மறுபடியும் முறைக்காத.  எனக்கு  விருப்பம் இல்லனாலும் உனக்காக தேவ் கிட்ட பேசுறேன். “என்று அதையும் கிண்டல் செய்து மனைவியின் விருப்பத்தை ஏற்று செயல்பட சம்மதம் தெரிவித்தார் வாசுதேவ்.

“அதென்ன விருப்பமில்லனாலும்.. ஏன் விஷல்யாவுக்கு என்ன குறை.. ?”  என்று  வினவினார் பானுஸ்ரீ.

“ குறை இருக்குன்னு நான் சொல்லல நம்ம பையன் அப்படி பீல் பண்றான். பெத்த அம்மா உன்னையே இத்தனை வருஷமா ஒதுக்கி வச்சிருக்கான்.  உன்னோட ஜெராக்ஸ் காப்பி மாதிரி இருக்கிற விஷல்யாவை மட்டும் ஏத்துக்குவா போறான்!” என்றார் வாசுதேவ்.

“என்னை ஒதுக்கி வைச்சிருக்கிறது இருக்கட்டும், தேவ் விஷல்யாவை இன்னும் காதலிச்சுட்டு தான் இருக்கான் “ என்று விஷல்யாவிடம் பேசி வந்த விவரங்களை சுருக்கமாக கூறி முடித்தவர்.. “ இப்போ சொல்லுங்க தேவ் என்னோட  ஜெராக்ஸ் காப்பியான விஷல்யாவை ஏத்துக்குவான மாட்டானா?” என்றார் பானுஸ்ரீ.

“ காதலிச்ச பொண்ணு முன்னப்பின்ன இருந்தாலும் அவளை கைவிடக் கூடாதுன்னு, என் பையனும் என்னை மாதிரியே யோசிக்கிறான்!” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு கர்வத்துடன் வாசுதேவ் கூறிட..  “ என்ன உங்கள மாதிரியா!, சாருக்கு நம்ம கல்யாணம் எப்படி நடந்ததுன்னு அடிக்கடி மறந்திடுது போல.. “ என்று குற்றம் சுமத்தும் குரலில் வினவினார் பானுஸ்ரீ.

“உன்னை மாதிரின்னு சொல்ல வந்து.. வாய் தவறி என்னை மாதிரின்னு சொல்லிட்டேன்… “ என்று மழுப்பலாக சிரித்தபடி மன்னிப்பு வேண்டினார் வாசுதேவ்.

“ போதும் போதும் அசடு வழிஞ்சது..  எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் செய்ங்க வாசு. ப்ளீஸ்“ என்று அதுவரை கொண்டிருந்த குத்தல் பேச்சை கைவிட்டு கெஞ்சலுடன் உதவி வேண்டினார் பானுஸ்ரீ.

“நீ கோபமா கேட்டாலே உனக்காக எதையும் செய்வேன் இப்படி கெஞ்சிக் கேட்கும்போது செய்யாம இருப்பேனா. கண்டிப்பா தேவ் கிட்ட பேசுறேன்” என்று மனைவியின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார் வாசுதேவ்.

“தேங்க்ஸ் வாசு.. “ என்றவர் கணவன் கைவிரல் கோர்த்துக்கொள்ள.. “  இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் பானு.. நீ ஒரு விஷயம்  யோசிச்சா அது சரியா தான் இருக்கும்.  அதுவும் நம்மப்  பையன் விஷயத்துல நீ தப்பான  முடிவு எடுக்க  வாய்ப்பே இல்ல“ என்று   அதுவரை கிண்டல் செய்து கொண்டிருந்த மனைவியின்  குணத்தை உயர்த்திப் பேசினார் வாசுதேவ்.

அமுதேவ்வை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன் என்று மனைவியிடம் சம்மதித்து வந்தவர்,  மகனை சந்திக்க அவன் இல்லத்தில் அதாவது வாசுதேவ் அன்னையின் பாரம்பரிய  இல்லத்தில்  காத்திருந்தார்.

 அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அமுதேவ். தனக்காக காத்திருக்கும் தந்தையின் முன் வந்து அமர்ந்தான். அவன் முகத்தில்   இருந்த  சோர்வின் காரணம் அறிந்தவர்.. “ என்ன தேவ் கண்ணா.. முகம்  வாடிப் போய் இருக்கு!,   ஏதாவது பிரச்சனையா?” என்று ஒன்றும் அறியாதவர் போல விசாரிக்க..

“  பிரச்சனை ஒன்னும் இல்ல..  என்ன விஷயமா வந்தீங்க?” என்று தந்தை   திடீர் வருகையின் காரணத்தை  வினவினான் அமுதேவ்.

“  நல்ல இருக்கு டா?.. நீ கேட்குறது. நீ என் பையன் டா..  உன்னைப் பார்க்க நான் வரக்கூடாதா? “   என்றார் வாசுதேவ்.

“ தாராளமா வரலாம்.. உங்க  பாஸ்ஸி  பிரச்சனை பண்ணாத வரைக்கும் எனக்கு  ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று அலட்சியமாய்  தோளைக்     குலுக்கிக்  கொண்டான் அமுதேவ்.

“  அவ உன் அம்மா தேவ்.. இப்படி மரியாதை இல்லம பேசாத.. “ என்று மகனை  வாசுதேவ் கண்டிக்க.. “ ஓ.. இதை ஞாபகப் படுத்தத்தான் இப்போ  வந்தீங்களா?” என்று குதர்க்கமாய் வினவினான் அமுதேவ்.

“  அப்பா அம்மான்னு நாங்க  இருக்கிறதையே நீ  மறந்திருக்கலாம், ஆனா நாங்க உன்னை மறக்கவும் இல்ல.. எங்கக் கடமைய செய்யத் தவறுறதும் இல்ல.   உனக்கு ஒரு பொண்ணு  பார்த்திருக்கோம்.  நாளக்கழிச்சு பொண்ணு பார்க்கப் போகணும் அதை சொல்லிட்டு போகத் தான்  வந்தேன்” என்றார் வாசுதேவ்.

“ உங்க ஃவைப் தானே  பொண்ணு பார்த்தது..  யாரைக் கேட்டுப்   பார்த்தாங்க..  அங்களுக்கு யாரு அந்த ரைட்ஸ் கொடுத்தா?, என் கல்யாண விசயத்துல  தலையிடாதீங்கன்னு  ஏற்கனவே அவங்கக் கிட்ட சொல்லிருக்கேன், அதையும் மீறி இப்படி  பண்ணுனா என்ன அர்த்தம்?, என்ன  மகன்னு உரிமைக் கொண்டாடப் பார்க்கிறாங்களா?, ஏன்   அவங்களுக்கு  நீங்க ஒருத்தர் அடிமையா இருக்கிறது பத்தலையா? என்னையும் அடக்கி அடிமையாக்க பார்க்கிறாங்களா?   “ என்று அமுதேவ் கோபமாய் பேசிக்கொண்டே செல்ல..

 “ வாய்யை மூடுடா..     நானும் பார்த்துட்டே இருக்கேன்..  ரொம்ப ஓவராப் பேசுற. அவளைப் பத்தி உனக்கு என்னத் தெரியும்?, எதுவும் தெரியாம வாய்க்கு வந்த  படி பேசிட்டே போற, ஒருத் தரப்பு நியாயத்தை மட்டும்  கேட்டுட்டு   முடிவுக்கு வரது முட்டாள் தனம். அந்த முட்டாள்த் தனத்தை தான் நீ  செஞ்சுட்டு இருக்க.. உன் பாட்டி சொன்னத மட்டுமே  வைச்சுட்டு உன் அம்மாவை குற்றவாளியா முடிவு பண்ணி  அவளுக்கு தண்டனை குடுத்துட்டு இருக்க… இது சரியில்ல. உனக்குப் பிடிக்குதோ இல்லையோ… நாளக் கழிச்சு பொண்ணுப் பார்க்கப் போறோம், நீயும் எங்கக் கூட வர. அங்க வந்து உன் முடிவைச் சொல்லு” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு  மகனின் முடிவைக் கூட அறியாது அங்கிருந்து   கிளம்பினார் வாசுதேவ்.

முதல் முறை தந்தையின் அதிகாரக் குரலை கேட்டவன்.. முதலில் சூழ்நிலை மறந்து அதிர்ச்சியுடன் அமைதி கொண்டு பின் சுதாரித்து.. ‘ இது நீங்களா பேசல… உங்க ஃவைப் ட்ரைனிங்   உங்களைப் இப்படி பேச வைக்குது…  பொண்ணு தான பார்க்க வரணும்.. வரேன். அங்க வந்து  உங்களோட  இந்தப்  பேச்சுக்கு பதில் தரேன்.. ‘ என்று உள்ளுக்குள் உறுதி  கொண்டான் அமுதேவ்.

Advertisement