Advertisement

7…

“ இட்ஸ் ஓகே மேம், முன்னாடியெல்லாம் நடந்ததை நினைக்கும் போது கோபம் தான் வந்தது, ஆனா இப்போ அப்படி இல்ல, சிலநேரம் என்னையும் மீறி உங்கப் பையனோட பேச்சை நினைச்சு என்னகுள்ள சிரிச்சுக்குவேன் ” என்று மெல்லிய புன்னகையுடன் கூறினாள் விஷல்யா.

“ ஃஇப் யூ டோன்ட் மைன்ட் நான் ஒன்னு கேட்கலாமா?, “ என்று பானுஸ்ரீ அனுமதி கேட்க… “ கேளுங்க ..” என்று ஒருவரியில் சம்மதம் கூறினாள் விஷல்யா.

“என் பையன் கடைசியா அடுக்கின லிஸ்ட்ல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல, ஆனா டிரஸ் விஷயத்துல அவன் சொன்னது எனக்கும் சரின்னு தான் படுது!, சொன்ன விதம் தப்பா இருந்திருக்கலாம், சொல்ல நினைச்ச விஷயம் சரிதானே! ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லுவாங்க, ஒருத்தரோட உடைய வைச்சு தான் அவங்களுக்கான மரியாதை தீர்மானிக்கப்படுது, “ என்று பானுஸ்ரீ சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் இடையில் நுழைந்த விஷல்யா…

“ நீங்களும் உங்கப் பையன் மாதிரியே சேலை சுடிதார் மட்டும் தான் மரியாதைக்குரிய உடைன்னு சொல்ல வரீங்களா?. அப்போ அடுத்தவங்க வெளித் தோற்றத்தை வைச்சு மட்டும் தான் மரியாதை தரணுமா வேணாமான்னு தீர்மானிக்கிறீங்க.. குணத்தை தூக்கி குப்பையில போட்டுடுவீங்க.. அப்படித்தானே!. “ என்றாள் விஷல்யா.

“ என் பையன் மேல இருக்கிற கோபத்துல இப்பக்கூட நான் சொல்ல வர விஷயத்தை நீ தப்பா புரிஞ்சுக்கிற… அதிநாகரீகம்ங்கிற பேருல ஆடைக் குறைப்பு செஞ்சு அநாகரீகமா டிரஸ் பண்ணுறது தான் தப்புன்னு சொல்ல வரேன். தேவ் கூட இந்த விஷயத்தை தான் உனக்கு புரியவைக்க நினைச்சிருப்பான், இப்போ கூட நீ ஜீன்ஸ் டாப்ல தான் வந்திருக்க இதை நான் தப்புன்னு சொல்லலையே.. அன்னைக்கு நீ போட்டிருந்த லைட் க்ளோத் அண்ட் ஸ்லீவ் லெஸ் டாப் ஒருவேளை நீ வழக்கமா போடுற உடைய விட கொஞ்சம் அதிகப்படியா இருந்திருக்கலாம் ” என்று தன் வார்த்தைக்கும் மகனின் செயலுக்கும் விளக்கம் கொடுத்தார் பானுஸ்ரீ.

“நான் கூட உங்களை வேற மாதிரி நினைச்சேன். ஆனா நீங்களும் நார்மல் மம்மி சென்டிமென்ட்ல மாட்டிக்கிட்டீங்களே மேம்!” என்று போலியான அனுதாபத்துடன் இதழ் சுழித்துக்கொண்டு கூறினாள் விஷல்யா.

“ நீ என்ன சொல்ல வர? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்று விஷல்யா மனதில் உள்ளதை பேசிட முழு அனுமதி வழங்கினார் பானுஸ்ரீ.

 “ நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல மேம்.. “ என்றவள்.. தனது தொலைபேசியில் எதையோ தேடியபடி.. “அன்னைக்கு நான் என்ன டிரஸ் போட்டிருந்தேன் அது அதிகப்படியா இருந்ததா!…. இல்லையா!…., இப்படி எதுவுமே தெரியாம.. அம்மா பாசத்துல உங்கப் பையனுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நடந்த தவறுக்கான மொத்தப் பழியையும் என் பக்கம் திருப்பி விடுறீங்களே அதைச் சொன்னேன். இது உங்கத் தப்பு இல்ல, பாதிப்பை கொடுத்தவங்கள விட்டுட்டு பாதிக்கப்பட்டவங்கள விமர்சிக்கிறதும், மட்டம் தட்டிப் பேசுறதும் காலம் காலமா நம்ம கலாச்சாரத்துல ஊறிப் போன விஷயம் தானே..” என்றவள் தேடிய புகைப்படம் கிடைத்திட… அதை எதிரில் இருந்தவருக்கு திருப்பிக் காட்டி, “ இதோ இந்தப் போட்டோல நான் போட்டிருக்கிற டிரஸ் தான் அன்னைக்கு உங்கப் பையனை பார்க்கப் போனப்ப போட்டிருந்தேன். இந்த டிரஸ்ல எது வல்கரா இருக்கு?” என்று வினவினாள் விஷல்யா.

ஒருநொடி புகைப்படத்தைக் கூர்ந்து கவனித்தவர், “ இதுல அதிகப்படின்னு சொல்லனும்னா ஸ்லீவ் லெஸ் தான்.. இப்போ நிறைய பேர் இப்படி டிரஸ் பண்ணுறதால அது கூட வல்கரா தெரியல!,” என்று மனதில் தோன்றிய உண்மையை மறைக்காமல் கூறினார் பானுஸ்ரீ.

“அரைகுறை ஆடை தான் பெண் சுதந்திரம்னு நினைக்கிற ஆள் நான் இல்ல மேம். கண்ணியமான உடை தான் நம்மக் கலாச்சாரம்னு சொல்லி வளர்க்கப்படாவ.. அதனால என் உடை எப்பவும் கண்ணியமாதான் இருக்கும்.. “ என்று கர்வத்துடன் தன் உடை குறித்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் விஷல்யா.

 “சாரி மா நான் தான் உண்மை என்னன்னு தெரிஞ்சிக்காம என்னெனவோ உளறிட்டேன்.. என் பையன் அவன் அப்பாவை விட பிற்போக்குத் தனமா வளர்ந்திருகான்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு.. “ என்று மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார் பானுஸ்ரீ.

“இதை பிற்போக்குத் தனம்னு சொல்லுறத விட ஆணாதிக்கம்னு சொன்னா சரியா இருக்கும்.” என்றாள் விஷல்யா.

“ நீ சொல்லுறதும் சரிதான்.. தவறான போதனையில தூண்டப்பட்ட ஆணாதிக்கம்!” என்று விஷல்யா வார்த்தையை ஆமோதித்து… “ நீ பக்குவமான பொண்ணு அதுனால தான் வயசுக்கு உண்டான உணர்வுகளுக்கு முன்னுரிமை தராம.. இரண்டு பேரோட எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சு முடிவு எடுத்திருக்க.. “ என்றவர்.. ஒருநொடி தயங்கி.. “ இப்போ உன் முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கா?” என்று விஷல்யா மனம் அறிய விரும்பி கேள்வி எழுப்பினார் பானுஸ்ரீ.

“உங்கப் பையனை நான் வேணாம்னு சொன்னதுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சா, அவருக்கு பொண்ணுப் பார்க்கிற விசயத்துல நீங்க கவனமா இருப்பீங்கன்னு தான் இதுவரைக்கும் யார்கிட்டையும் சொல்லாத விஷயத்தை உங்கக் கிட்ட ஷேர் பண்ணிருக்கேனே தவிர என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. அன்னைக்கு எந்த மனநிலையில இப்படி ஒரு முடிவு எடுத்தேனோ, அதே மனநிலையில தான் இப்பவும் இருக்கேன். “ என்று தெளிவும் தீர்மானமுமாக தன் முடிவை அறிவித்தாள் விஷல்யா.

 “ என் பையன் ஆணாதிக்க குணம் இருக்கிறவன் தான்… ஆனா இது அவனோட இயல்பான குணம் இல்ல விஷல்யா. “ என்று மகனுக்கு பரிந்து பேசினார் பானுஸ்ரீ.

 “ பார்த்தீங்களா மறுபடியும் மம்மி செண்டிமென்ட்ல லாக்காகிட்டீங்க?. பொண்ணுங்கன்னா இப்படித் தான் இருக்கனும், ஆம்பளைங்க பொண்ணுங்கள அடக்கி வைக்கணும்.. அது தான் ஆண்மைக்கு அழகுன்னு அவனுக்கு அவனே ஒரு வரையறை வகுத்து வைச்சுட்டு தப்புத் தப்பா நடந்துட்டு இருக்கான். ஒருவேளை அன்னைக்கு என் டிரஸ் அதிகப்படியாவே இருந்திருந்தாலும் ஒருத்தன் வந்து என்கிட்ட தப்பா பேசினான்னு தெரிஞ்சதும், ஒருப் பொண்ணு அரைகுறை உடையில இருந்தாலும் அவளை கண்ணியமான முறையில அணுகுறது தான் ஆண்மைத் தவறேல்ன்னு அந்தப் பொறுக்கிக்கு புரிய வைச்சிருக்கணும். அதை விட்டுட்டு அந்தப் பொறுக்கிக்கு சப்போர்ட் பண்ணி என்னை அவமானப் படுத்தினான். ஆணாதிக்கம் அவனோட இயல்பான குணம் இல்லேன்னா. அப்போ இந்தத் திமிருதான் அவனோட இயல்பான குணம்னு சொல்லவரீங்களா?” என்று கிண்டலுடன் வினவினாள் விஷல்யா.

 “என் பையன் இப்படி இருக்கிறதுக்கான காரணத்தை சொல்லுறேன், அதுக்கு பிறகு உன் முடிவை சொல்லு, நீ என்ன முடிவெடுத்தாலும் அது எனக்கு சம்மதம் தான்… நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். ” என்று இணக்கமான குரலில் கூறினார் பானுஸ்ரீ.

 “ அவங்கப் பாட்டியோட வளர்ப்பு அது தானே அந்தக் காரணம் .. ” என்று அவர் சொல்ல வரும் காரணம் அதுவாக மட்டுமே இருக்க கூடும் என்ற உறுதியுடன் வினவினாள் விஷல்யா.

 இல்லை என்பது போல தலையசைத்து, நீண்ட நெடு மூச்சை வெளியேற்றி, “அதுல என் தப்பும் இருக்கு.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு பிடிவாதமா நானே என் பையன வளர்த்திருந்தா.. இந்த நிலைமை வந்திருக்காது. சின்ன வயசுல என் கைக்குள்ள வளர்ந்த வரைக்கும் அவன் இப்படி இல்ல. தேவ்வுக்கு எட்டு வயசு இருக்கும் போது இரண்டாவது குழந்தை என் வயித்துல இருந்தது, தன் கூட விளையாட இன்னொரு தம்பி பாப்பா வரப் போகுதுன்னு தெரிஞ்சதும் தேவ்வுக்கு தலை கால் புரியல… நேரத்துக்கு மருந்து கொடுக்கிறது சாப்பாடு கொடுக்கிறது இப்படி எனக்கான எல்லா வேலையும் அவன் தான் செய்வான். நீ எதுக்கு கண்ணா இதெல்லாம் செய்யுற விடுன்னு சொன்னாக் கூட கேட்க மாட்டான், என் அம்மாவுக்கும் என் தங்கச்சிப் பாப்பாவுக்கும் தானே செய்யுறேன்னு சொல்லி இரண்டு மடங்கு சந்தோசத்தோட என்னை ரொம்ப நல்லாவே கவனிச்சுக்குவான். அது ஐஞ்சாவது மாசம்.. கார்மெண்ட்ஸ் பிசினஸ் ஓரளவுக்கு பிக்அப்பாகி எக்ஸ்போர்ட் ஆர்டர் வர ஆரம்பிச்சது. நாங்க ரொம்பநாள் எதிர்பார்த்துட்டு இருந்த பெரிய ஆர்டர் கிடைச்சது அதை விட மனசு வரல… முழுநேரமும் அந்த ஆர்டருக்காக வேலை பார்த்து.. சொன்ன நேரத்துல ஆர்டர் டெலிவரியும் குடுத்து முடிச்சேன். டே அண்ட் நைட் ரெஸ்ட் இல்லாம வேலைப் பார்த்ததுல என் ஹெல்த் ரொம்ப மோசமாகிடுச்சு, கர்ப்பப்பை வீக்கா இருக்குன்னு சொன்னாங்க.. இப்போ இருக்கிற அளவுக்கு மெடிக்கல் பீல்ட் டெவலப்மெண்ட் அப்போ இல்லையே.. குழந்தையை காப்பாத்த முடியல.. ஏற்கனவே உடலளவில பலவீனமா இருந்த நான் மனசாலயும் பலவீனமான உணர ஆரம்பிச்சேன். அந்த நேரத்துல தான் தேவ் அவன் பாட்டி கிட்ட வளரவேண்டிய சூழ்நிலை. முதல்ல கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சு மொத்தமா என்னை வெறுக்க ஆரம்பிச்சான். என் பையனோட ஒட்டுமொத்த வெறுப்பையும் பார்த்த பிறகு, எனக்கு இதுக்கு மேல அவனைவிட்டு விலகி இருக்கிறது சரின்னு தோணல, என்ன ஆனாலும் தேவ்வை என் கூட கூட்டிட்டு வந்திடனும்னு ஏழு எட்டு வருஷமா போகாத என் மாமியார் வீட்டுக்கு போனேன். என் முகத்தை கூட பார்க்க என் பையனுக்கு விருப்பம் இல்ல ரூமுக்குள்ள போய் கதவை அடைச்சுக்கிட்டான். ஒரு நாள் கூட என்னை பார்க்காம இருக்க முடியாத என் பையன் ஒட்டு மொத்தமா என்னை ஒதுக்கி வைச்சான். என்கிட்ட வளர்ந்த வரைக்கும் அவன்கிட்ட அந்த ஆணாதிக்ககுணம் கொஞ்சம் கூட கிடையாது. இதுக்கெல்லாம் அவன் பாட்டி வளர்ப்பு முறை ஒரு காரணம்னா.. நான் அவனை அவங்க கிட்ட வளரவிட்டுக் கொடுத்ததும் ஒரு காரணம்“ என்று அமுதேவ் குணத்தில் மாற்றம் உண்டானதிற்க்கான காரணத்தை கூறி முடித்தார் பானுஸ்ரீ.

“அம்முவை ஏன் நீங்க அவன் பாட்டிகிட்ட வளரவிட்டீங்க.. ஆண்ட்டி. பிள்ளையை நல்ல விதமா வளர்கிறது பெத்தவங்க கடமை தானே! நீங்க எதுக்கு உங்க கடமையையும் உரிமையையும் அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்தீங்க,.” என்று எரிச்சலுடன் வினவினாள் விஷல்யா.

 அதுவரை மூன்றாம் நபரை அழைப்பது போல மேம் என்று அழைத்து வந்தவள் சட்டென்றுஉரிமை எடுத்துக் கொண்டு பேசியதில் தான் எண்ணி வந்த காரியம் நிறைவேறி விடும் என்று நிம்மதி கொண்ட பானுஸ்ரீ. “நானா விட்டுக் கொடுக்கல… கிட்டத்தட்ட என்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சாங்க. நான் அவங்கப் பையனை அவங்ககிட்ட இருந்து பிரிச்சதுக்குத் தண்டனையா என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சாங்க “ என்று பானுஸ்ரீ அன்றைய நினைவில் இறுகிய குரலில் கூறிட..முதலில் அதிர்ச்சியான முகபாவத்தை வெளிப்படுத்திய விஷல்யா.. பின்பு ஆறுதலாய் அவர் கையைப் பற்றிக்கொள்ள..கசந்த புன்னகை சிந்தியவர், “ என் கதையும் கிட்டத்தட்ட உன்னோடது மாதிரி தான், உன் கதையில நீ என் பையனை வேணாம்னு சொல்லிட்டு விலகி வந்த, என் கதையில என்னை வேணாம்னு அவர் விட்டுட்டு போனாரு.. “ என்று தன் கடந்த காலக் கதையை விவரிக்கத் துவங்கினார் பானுஸ்ரீ.

“வாசு.. அதான் தேவ்வோட அப்பா.. அப்போ ஒருபில்டிங் காண்ட்ராக்ட் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தாரு. அவர் கம்பெனி கன்ஸ்ட்ரக்சன் வொர்க் நடந்த பில்டிங் பக்கத்துல தான் என்னோட டெய்லரிங் கிளாஸ். கிளாஸ்க்கு வரும் போதும் போகும் போதும் பாப்பாரு, நம்ம குடும்பத்துக்கு இந்த காதல் எல்லாம் செட் ஆகாதுன்னு நான் கண்டும் காணாத மாதிரி போயிடுவேன். ஒருநாள் கிளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டு இருக்கும் போது வழி மறிச்சு அவரோட காதலை சொன்னாரு. இத்தனை நாள் தூரமா நின்னு பார்த்துட்டு இருந்தவர்.. திடீர்னு முன்னாடி வந்து காதலிக்கிறேன்னு சொல்லவும், என்ன பதில் சொல்றதுன்னு புரியாம எதுவுமே சொல்லாம அங்கிருந்து வந்துட்டேன். நான் அமைதியா இருந்தாலும் அந்த மனுசன் சும்மா இருக்கல பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வீடு வரைக்கும் வந்தாரு. ஒருநாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட மூணு மாசம் இதையே ஒரு வேலையா செஞ்சுட்டு இருந்தார். நமக்காக இவ்வளவு நாள் வெயிட் பண்றாரு.. இதுக்கு மேல அவர் பொறுமையை சோதிக்க வேணாம்னு, வீட்டுல என் அப்பா அம்மா கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி எனக்கும் அவரை புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். “ என்று பானுஸ்ரீ நிறுத்த..

“ என்ன அவர் கிட்ட காதலை சொல்றதுக்கு முன்னாடி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா?, அப்புறம் என்னாச்சு ஆண்ட்டி, உங்க அப்பா உங்க லவ்வுக்கு ஓகே சொன்னாங்களா இல்லையா?” என்று கதை கேட்கும் சுவாரஸ்யத்துடன் வினவினாள் விஷல்யா.

“லவ்வுக்கு ஓகே மட்டும் இல்ல நேரடியாக வாசு வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்கவே போயிட்டாரு. “ என்றார் பானுஸ்ரீ.

“வாட்.. ஓ.. அதுனால தான் நான் உங்கப் பையனை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கேன் சொன்னதைக் கூட நீங்க தப்பா எடுத்துக்களையா!” என்றாள் விஷல்யா.

ஆமாம் என்பது போல் மெதுவாய் தலையசைத்தவர், “ என் அப்பா முற்போக்கு சிந்தனைவாதி.. பெரியார் கொள்கைய தீவிரமா ஃபாலோ பண்றவர், பொண்ணுங்க எப்பவும் தைரியமா இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பாரு. எனக்கும் வாசுவை புடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கூட யோசிக்கல.. உடனே வாசு வீட்டுக்கு போய் அவங்க அம்மாவை பார்த்து எல்லா விபரமும் சொல்லி கல்யாணத்த பத்தி பேசினார். கல்யாணத்துக்கு மாப்பிள்ளைங்க தான் பொண்ணு வீடு தேடி வரணும். நீங்க என்னடான்னா மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கோம்னு சொல்றீங்க, உங்க முறையே சரியில்லன்னு கண்டபடி பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எங்ககிட்ட மாட்டேன்னு சொன்னதோடு நிறுத்தாம.. அவங்க பையனையும் கூப்பிட்டு அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட்டாக மாட்டா… நீ அவளை மறந்துடுன்னு சொல்லிருக்காங்க… அம்மா பேச்சை மீறாத பிள்ளையா இவரும் என்கிட்ட வந்து நாம பிரிஞ்சிடலாம்னு சொன்னார். “ என்றார் பானுஸ்ரீ.

 “ அச்சச்சோ அப்புறம் என்னாச்சு.. எப்படி உங்க கல்யாணம் நடந்துச்சு?” என்று தவிப்புடன் வினவினாள் விஷல்யா.

 “ அவர் வேணாம்னு சொன்னா நான் விடுவேனா.. உன்னைத் தான் காதலிச்சேன் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சொன்னதோடு நிறுத்தாம.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் .. அவர் மேல கம்ப்ளைன்ட் பண்ணி… அது பிரச்சனையாகி .. கடைசில வேற வழியில்லாம வாசுவோட அம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க. வேண்டாத மருமக கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்.. கதையா நான் என்ன செஞ்சாலும் குறை கண்டுபிடிச்சிட்டே இருந்தாங்க. சரி குடும்பத்துக்குள்ள அடிக்கடி சண்டை வேணாம்னு நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு பொறுத்துப் போனேன். என் கூட டெய்லரிங் கிளாஸ்ல படிச்ச நாலு பொண்ணுங்களை கூட சேர்த்து கார்மென்ட்ஸ் பிஸினஸ் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கும் போது. வீட்டு பொம்பளைங்க வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. சமையல் கட்டு தாண்டக்கூடாது இப்படி ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டாங்க. அதெல்லாம் முடியாது.. எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்னு பிடிவாதமா கார்மெண்ட்ஸ் பிசினஸ் ஆரம்பிச்சேன். அவங்க பேச்சைக் கேட்காத மருமக வீட்டுல இருக்கக்கூடாதுன்னு வீட்டை விட்டு வெளியே போக சொன்னாங்க. இதுக்கு மேல இவங்க டார்ச்சர் தாங்க முடியாதுன்னு நானும் வெளிய வந்துட்டேன்.. “ என்று சாதரணமாக கூறினார் பானுஸ்ரீ.

“பிசினஸ் பண்ணக் கூடாதுன்னு சொன்னதுக்காக நீங்க வீட்டை விட்டு வெளிய வந்துட்டீங்களா .. அங்கிள் எப்படி இதுக்கு சம்மதிச்சாரு, அவர் உங்களுக்காக எதுவும் பண்ணலையா?, ச்சே.. நான் என்ன உளருறேன்.. அங்கிள் கூட உங்க மாமியார் வளர்ப்பு தானே..அவர் மட்டும் எப்படி இருப்பாரு,” என்று எரிச்சலுடன் பேசினாள் விஷல்யா.

“ உன் அங்கிள் எனக்காக என்ன செஞ்சாருன்னு சொன்னா அதை உன்னால நம்பவே முடியாது .. “ என்று பீடிகையுடன் நிறுத்தியவர்.. விஷல்யா யோசனையாய் பார்க்க… “ எனக்காக அவர் அம்மா கூட சண்டை போட்டுட்டு என் கூடவே வீட்டை விட்டு வெளியவந்துட்டார். எப்பவும் தன் வார்த்தையை மீறாத பையன் மருமகளுக்காக அவங்களை விட்டுட்டு போனத என் மாமியாரால தாங்கிக்கமுடியல… என்னோட சேர்த்து அவங்கப் பையனையும் ஒதுக்கி வைச்சாங்க.. தேவ் பிறந்தப்ப கூட பார்க்க வரல.. ஒரே ஊருக்குள்ள இருந்தும் பார்க்காம பேசாம இருந்தாங்க..இரண்டாவது குழந்தை கலஞ்சு போன விஷயம் கேள்விப்பட்டு அவங்களே தேடி வந்து .. இப்போ நீ இருக்கிற நிலைமையில பிள்ளையை வளர்கிறது கஷ்டம் கொஞ்சநாள் தேவ் என் கூட இருக்கட்டும்னு கேட்டாங்க. பழச மறந்து பேரனை வளர்க்க முன் வந்ததே பெரிய விஷயம்ன்னு நானும் தேவ்வை அவங்க பொறுப்புள்ள விட்டுட்டேன். ரொம்ப நாளாவே பாட்டிப் பாசத்துக்காக ஏங்கி இருப்பான் போல.. போன கொஞ்ச நாள்லயே அவங்ககிட்ட ஒட்டிக்கிட்டான். நாங்க எவ்வளோவோ கொஞ்சிக் கூப்பிட்டும் எங்க கூட வரமாட்டேன்னு சொல்லிட்டான், சரி பிள்ளைக்காகன்னு நாங்களும் பழைய கோபத்தை எல்லாம் மறந்து.. பையன் கூடவே மாமியார் வீட்டுல தங்கிடலாம்னு முடிவுக்கு வந்தா.. என் மாமியார் அதுக்கும் சம்மதிக்கல.. அப்படியே என் பையனை பிரிஞ்சு இருபது வருஷம் ஆச்சு.. அவன் பாட்டி இறந்த பிறகும் கூட எங்க கூட வந்து இருக்கமாட்டேன்னு சொல்லிட்டான்.அடுத்தவங்க உணர்வுக்கு மரியாதை கொடுக்கணும், முக்கியமா பொண்ணுங்கள மதிக்கணும் இதைச் சொல்லித்தான் என் பையன நான் வளர்த்தேன், ஆனா அவன் என்னைக்கு என் கைய விட்டு போனானோ அன்னைக்கோட அவனோட நல்ல குணமும் அவனை விட்டு போயிடுச்சு“ என்று முடித்தார் பானுஸ்ரீ.

 அதுவரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தவள்… “ அங்கிள் எப்படி மனசு மாறினாரு ஆண்ட்டி. அவரும் அம்மு மாதிரி தானே.. பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருங்கணும்னு கொள்கை கோட்பாடோட வளர்ந்திருப்பாரு.” என்று குழப்பமாய் வினவினாள் விஷல்யா.

 “ இயல்பாவே ஆணாதிக்கம் குணம் இருக்கிற மனுஷங்க அவங்க கொள்கையை மாத்திக்கிட்டு மனசு மாறுவாங்களா மாட்டாங்களா அதை பத்தி எனக்கு எந்த ஐடியாவும் இல்ல. ஆனா இப்படி இருக்குறது தான் ஆண்களுக்கு அழகுன்னு சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவங்க கண்டிப்பா மனசு மாறுவாங்க. கல்யாணத்துக்கு பிறகு வர மஞ்சக் கயிறு மேஜிக்.. பொண்ணுகளுக்கு எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுமோ.. அதைவிட ரெண்டு மடங்கு ஆம்பளைங்களுக்கு ஒர்க் அவுட் ஆகும். எப்பேர்பட்ட ஆளா இருந்தாலும் பொண்டாட்டி பேச்சுக்கு அடங்கித்தான் ஆகணும், அதுதான் விதி” என்று சிரித்தபடி கூறினார் பானுஸ்ரீ.

 பானுஸ்ரீ கதையை கேட்ட பிறகு.. தெளிவாய் இருந்த முடிவில் சிறுசலனம் உண்டாவதை உணர்ந்தவள்.. அந்தச் சலனத்தைத் துடைத்தெரிந்து..

“ உங்க விஷயத்துல நடந்தது எனக்கும் நடக்கும்னு உறுதியா சொல்ல முடியாதே ஆன்ட்டி. அங்கிள் உங்களுக்காக மாறினார். அம்மு எனக்காக மாறுவான்னு நிச்சயம் இல்லையே. உறுதியா தெரியாத ஒரு விஷயத்தை நம்பி என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாதே” என்று நாசூக்காக தன் மறுப்பை அறிவித்தாள் விஷல்யா.

“நீ சொல்றதும் சரிதான். எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருந்தது. வாசுவும் என்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறார்ன்னு உறுதியா தெரிஞ்சது.. ஆனா என் பையன் காதல் இப்போ எந்த நிலைமையில இருக்குன்னு தெரியாம, கல்யாணத்துக்கு பிறகு அவன் மாறுவான்னு காத்திருந்து உன் வாழ்க்கையை வீணடிக்க முடியாதுல. நான் தான் ஏற்கனவே சொன்னேனே உன் முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் தான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை பார்த்து பேசுனதே சந்தோஷம். ரொம்ப நாள் மனசுக்குள்ளேயே அடக்கி வைச்சிருந்த பாரம் எல்லாம் உன்கிட்ட பேசவும் குறைஞ்சு போச்சு. நீ என் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லேன்னாலும் இதே உறவு நமக்குள்ள இருக்கணும்னு ஆசைப்படறேன். “ என்றார் பானுஸ்ரீ.

” நிச்சயமா ஆண்ட்டி, ” என்று விஷல்யா உறுதி கூறிட.. இருவருக்குமான நட்பின் அடையாளமாய் கைகுலுக்கி விடை பெற்றார் பானுஸ்ரீ.

சிறிது நேரம் தனிமையில் அமர்ந்து.. பானுஸ்ரீ சொன்னதையே அசைபோட்டு பார்த்தவள் மனதில் இறுதியாக அமுதேவ் முகம் வந்து நின்றது. எட்டு வயது குழந்தையின் கள்ளம் கபடமற்ற புன்னகையுடன் மனத்திரையில் தோன்றியவன்.. மெதுவாய்…. ‘ ஷாலு’ என்று ரசனையுடன் கூறிட… அதுவரை கொண்டத் தீர்மானம் கலைந்தது..’ என் மேல நீ கொண்ட காதல் இன்னும் மாறாம அப்படியே இருக்குன்னு மட்டும் தெரிஞ்சா போதும் அம்மு.. நிச்சயம் உன்னை யாருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன்.’ என்று தன்னையும் மீறி அதுவரை கொண்ட தீர்மானத்தில் மாற்றம் கொண்டாள் விஷல்யா.

உன் கஷ்டங்கள் மறக்கடித்து..

கவலை மறந்து சிரிக்க வைத்து..

சோகம் மறந்து சிரிக்கும் நேரம்..

கண்ணீரில் கரையவைத்து..

மீண்டும் உன்னை சோகத்தில்

 மூழ்கடிக்கும்

வல்லமை கொண்டது..

மனிதர்கள் கொண்ட

நிலையில்லா அன்பு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement