Advertisement

தன் அன்னையின்   வற்புறுத்தல் காரணமாக  பாவை நோம்பு மேற்கொள்ள  மார்கழி மாதத்தின் அதிகாலையில் எழுந்து   நோம்புக்கு ஏற்ற முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு,    சென்னையில் பிரசித்திப் பெற்ற மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலுக்கு   தாமரையுடன் சென்றாள் விஷல்யா.

முதல் ஒரு வாரம் விஷல்யாவுடன் வந்த தாமரைக்கு விடியற்காலைப் பனிக்காற்று ஒத்துவராமல் உடல்நலக்குறைவு  உண்டானதால் அடுத்து வந்த நாட்களில்..  விஷல்யா மட்டும் தனித்து கோவிலுக்கு சென்று நோம்பு  முறையை மேற்கொள்ளத்  துவங்கினாள்.

கோவிலுக்கு வரத் துவங்கிய நாள் முதல் யாரோத் தங்களைக் கவனிப்பது போல உணர்ந்த விஷல்யா  ‘ இந்த குளிர்ல எந்த ரோமியோ எந்திரிச்சு.. சைட் அடிக்க வரப் போறான்’ என்று தனக்குத்தானே எள்ளலுடன் எண்ணிக்கொண்டு விளக்கேற்றும் இடத்தில்  வழக்கம்போல விளக்கேற்றி விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வரத் துவங்கினாள்.

முதல் முறைச் சுற்றி வரும்போது விஷல்யாவிற்கு பின் வந்து கொண்டிருந்தவன் இரண்டாம் முறை சுற்றும் போது உடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான்.

தன்னுடன் இணைந்து பிரகாரத்தை சுற்றி வருவதற்கு ஆர்வம் காட்டும் புதியவனை ஓரப் பார்வையில் கவனிக்கத் துவங்கினாள்.

விஷல்யா தன்னைக் கவனிப்பது  புரிந்ததும்..  மற்றவர்களை எளிதில் கவர்ந்திட தான் வழமையாய் பயன்படுத்தும் மந்தகாசப் புன்னகை செய்தான்  அப்புதியவன்.

பற்பசை விளம்பரத்திற்கு வந்தவன் போல் பற்கள் அனைத்தையும் பந்தாவாகக் காட்டி சிரித்தவனை விசித்திரமாய்  பார்த்து. ‘ பையன் ஏரியாவுக்கு  புதுசு போல,  என்னைப் பத்தி தெரியாம பல்லக் காட்டுறான்.. உண்மை தெரிஞ்சா ஓடிடுவான் ‘ என்று தனக்குள்ளேயே இளக்காரமாக எண்ணிக் கொண்டவள்.. பதிலுக்கு சிரிக்க.. தனக்கான அனுமதி கிடைத்தது போல் இன்னும் அருகில் இறங்கி வந்தான் புதியவன்.

“ஹாய் நான் அமுதேவ்.. பிரண்ட்ஸ்க்கு தேவ், பாட்டிக்கு அமுதன். “ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான் அமுதேவ்.

“ இருந்துட்டு போங்க அதனால எனக்கு என்ன வந்தது.. ?” என்று அலட்சியமாய் பேசி முன் நடந்தாள் விஷல்யா.

அவள் அலட்சியத்தையும் ரசித்தவன் போல் இயல்பாய் சிரித்து, “ உங்கப் பேரு ஷாலு  தானே! எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா?” என்றான் அமுதேவ்.

“ இதுல யோசிக்க என்ன இருக்கு!, என் அம்மா என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டத வைச்சு கெஸ் பண்ணிருப்பிங்க!,   கோவிலுக்கு வர ஆரம்பிச்ச நாள்ல இருந்து யாரோ    டீப்பா  கவனிக்கிறாங்களோன்னு என் உள்ளுணர்வு   நச்சரிச்சுட்டே இருந்து  அது எதுக்கு நச்சரிசுன்னு இப்போ தானே புரியுது! , ”  என்று  அலட்டிக்கொள்ளாமல்  கூறினாள் விஷல்யா.

“ அப்போ நீயும் என்னை சைட் அடிச்சிருக்க.. “  என்று சம்மந்தமே இல்லாமல் அமுதேவ் கூறிட..  ஓரப்பார்வை விடுத்து நேரடியாக அவன் புறம்  திரும்பி  நின்றவள்,  “  நான் சைட் அடிக்கிற அளவுக்கு நீங்க ஒன்னும் அவ்ளோ  அழகு இல்ல,  கோவிலா இருக்குன்னு  பார்க்கிறேன், இதுக்கு மேல வம்பு பண்ணுனா நடக்குறதே வேற!” என்று மிரட்டல் விடுத்தாள் விஷல்யா.

 முகம் கொஞ்சம் மாறினாலும், சமாளித்து சிரித்தவன், “    ஷாலு ரிலாக்ஸ், எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு,  முதல் தடவை உன்னை  அம்பாள் சன்னதில  விளக்கு ஏத்திட்டு இருக்கும் போது தான் பார்த்தேன்   அப்போ எப்படி இருந்த தெரியுமா?” என்று அமுதேவ் நிறுத்த.. “  என்ன குஷி பாடம் எப்பெர்ட்டா.. வழிய விடுங்க மிஸ்டர்.. இன்னொரு சுத்து முடிச்சுட்டு வீட்டுக்குப் போகணும்” என்று அமுதேவ் வார்த்தையை அவமதித்து விலகிச் சென்றாள் விஷல்யா.

“ ஷாலு..” என்று உரிமையுடன் அமுதேவ் தடுத்து நிறுத்த..  கோபமாய் திரும்பிப் பார்த்தவள், “ ஹலோ என்னப்  பல வருஷமா பழக்கம் இருக்குற மாதிரி உரிமையா  கூப்பிடுறீங்க?”  என்றாள் விஷல்யா.

“ உண்மைய சொல்லனும்னா.. எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிற மாதிரி இல்ல. நமக்குள்ள ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருந்திருக்கும்னு  நினைக்கிறேன்,   அதனாலதான் எத்தனையோ பொண்ணுகள பார்த்தும், பழகியும் வராத காதல் முதல் தடவை உன்னைப் பார்த்ததும் வந்துடுச்சு. “ என்று உணர்வுபூர்வமாக பேசினான் அமுதேவ்.

“ அடடடடா.. ரோமியோ ஜூலியட்,  லைலா மஜ்னு இப்படி  சரித்திரம் பேசுற காதல் ஜோடிங்க எல்லாம்  ரொமான்ஸ் டயலாக்குக்கு உங்ககிட்ட தான் கடன் வாங்கணும்  போலயே.. என்னமா   பேசுறீங்க வார்த்தை ஒவ்வொன்னும் நச்சுனு நங்கூரம் மாதிரி மனசுல அழுத்தமா பதியுது, “ என்று ஏளனத்துடன் இதழ் சுளித்து கூறினாள் விஷல்யா.

“ ஷாலு ஐ அம் நாட் ஜோக்கிங்,   ப்ளீஸ் பி சீரியஸ்..  எனக்கு உன்னை பிடிச்சிருக்கு,  கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைபடுறேன்.. உங்க வீட்ல  நம்ம  மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டாங்கன்னா நான் வந்து உங்க வீட்ல நமக்காக பேசுறேன்.. “ என்று அவளே  சம்மதம் சொல்லாத திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்தை பெறுவதை பற்றிப் பேசினான்  அமுதேவ்.

“ அப்பப்பா என்ன ஃபாஸ்ட்.. நானே இன்னும் உங்க ப்ரொபோஸ்ஸல ஏத்துக்கல.. இதுல நீங்க என் ஃபேரண்ட்ஸ் வரைக்கும் போயிட்டீங்க.. கோவில் கோவிலாப் போய் பொண்ணுங்க பின்னாடி சுத்துற விட்டுட்டு,    வேற வேலை இருந்தா போய் பாருங்க மிஸ்டர் “ என்றவள்  மேலும் விளக்கம் கொடுத்துக் கொண்டு  நில்லாமல் விலகிச் சென்றாள்.

 தனக்குச் சாதமாக சம்மதமெனும் பதில்  கிடைக்காதப் போதும்  விஷல்யாவைக் காண நாள் தவறாமல் கோவிலுக்கு வந்தான் அமுதேவ்.

 தொலைவில் நின்று பார்வையால் தொடர்பவன் அதற்கு  மேல்  தொந்தரவு செய்ய  முயலாத விதம்  பெண்ணவள் கர்வத்தை கலைத்து மனதைக் கவர்ந்தது, முதல் பார்வையில் ஈர்க்கவில்லை  என்றாலும் நடத்தையால் தன்னைக் கவர்ந்தவனை மெல்லமெல்ல விரும்பத்     துவங்கினாள் விஷல்யா.

 மார்கழி மாதம் இறுதியில் பாவை நோம்பை எந்தக் குறையும் இல்லாமல்  முடித்தவள்,   தொலைவிலிருந்தே தன்னைக் கவனிக்கும் அமுதேவ் அருகில் வந்து, “ என்ன ரோமியோ.. இன்னும் காதல் கனவுல தான் மிதந்துட்டு இருக்கீங்களா?” என்று கிண்டலுடன் வினவினாள்.

கிண்டலை ரசித்து சிரித்தவன், “ என் கனவு ஒருநாள் நிஜமா  மாறும்.. ஷாலு” என்று அப்போதும் நம்பிக்கையுடன் பேசினான் அமுதேவ்.

“ ஓ.. “ என்று புருவம் உயர்த்தி தன வியப்பை வெளிபடுத்தியவள், “  இன்னைக்கு  ஈவினிங் மெரீனா   வர முடியமா?” என்றாள் விஷல்யா.

“ மெரீனாவா? எதுக்கு?” என்று அமுதேவ்  குழப்பமாய் வினவ.. “ கனவு  கண்டுட்டே இருந்தா நிஜத்துல காதல் எப்போ பண்ணுறது, “ என்று தன் சம்மதத்தை சொல்லாமல் சொன்னவள், அமுதேவ் கண்கள் வியப்பில் விரிய.. “ இப்படி பார்த்துப் பார்த்து தான் என்னை உன் பக்கம் இழுத்துட்ட அம்மு,  மறுபடியும் அப்படியேப் பாக்காத இன்னும்   உன்கிட்ட  சறுக்கி   விழுகுறதுக்கு என்கிட்ட எதுவும் மிச்சம் இல்ல.. “ என்று தலைசரித்து காதலாய் கூறினாள் விஷல்யா.

ஒரேப் பார்வையில் தன்னுள் மாற்றம் தந்தவளின் செல்லச் சுருக்கத்தில் கிறங்கிப் போனவன், “ ஷாலு “ என்று ஆர்வமாய் நெருங்கிட, சுற்றும் முற்றும் பார்த்து கண்களால் எச்சரிக்கை செய்து அமுதேவ்வின் அதீத ஆர்வத்திற்கு தடைவிதித்தாள் விஷல்யா.

அவள் பார்வையில்  உண்டான மாற்றத்தை உணர்ந்து தயக்கத்துடன் இரண்டடி பின் நகர்ந்து  நின்றவன், “  சாரி ஷாலு..  திடீர்ன்னு உன் காதலை சொல்லிச்  ஷாக் குடுக்கவும்  எனக்கு தலைகால் புரியல ” என்று  அசடுவழிந்த படி கூறினான் அமுதேவ்.

சிறிது நேரம் இருவரும் பொதுவான விஷயங்களும்  தங்களது குடும்ப விபரங்களும் பேசிக்கொண்டிருந்தவர்கள்,  விடைபெற்று வீடு திரும்பினர்.

அமுதேவ்விடம்  காதலுக்கு சம்மதம் சொல்லி வந்த விஷல்யா தன் பெற்றோரிடமும் தன் காதல் விவகாரத்தைக் கூறினாள், தாமோதரன் எந்த மறுப்பும் சொல்லாத போதும் தாமரை முகம் திரும்பி கோபமாய் அமர்ந்து கொண்டார்.

மனைவியின்  கோபத்தின் காரணம்  அறிந்த தாமோதரன், “ நம்மப் பொண்ணுக்கு கல்யாணம் நடக்குறது தான் முக்கியம், அந்தக் கல்யாணம் அவ விருப்பப்பட்டதா   இருக்கும் போது இரண்டு மடங்கு சந்தோசப் படனும் இப்படி  முகத்தை தூக்கி வைச்சுட்டு உட்காரக் கூடாது” என்று சமாதானம் செய்து வைத்தார்.

ஜோதிடர் சொன்னது போலவே காதல்  திருமணதிற்குத் தான் யோகம் இருக்கிறது போல என்று கணவரின் வார்த்தையை ஏற்றுத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், மகள் மனம் கவர்ந்தவனைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார்.

“  கொஞ்ச நாளைக்கு  முன்னாடித்  தான் கோவில்ல வைச்சு  காதலை சொன்னான், எனக்கு  அப்போ அவன் மேலயும் காதல் மேலயும் அந்த அளவுக்கு  இண்டரஸ்ட் இல்ல..  அதுனால   உடனே  ஓகே சொல்லல, கொஞ்சநாளா  கவனிச்சதுல நல்ல குணமா  தெரிஞ்சான், நீங்களும் கல்யாணம் பண்ணிக்கோன்னு  டார்ச்சர் பண்ணிட்டே இருந்தீங்களா.. எப்படியும் ஒருத்தனை கல்யாணம் பண்ணித்தான்  ஆகணும் அது நம்மள   காதலிக்கிறவனா  இருந்தா என்னத் தப்புன்னு யோசிச்சேன்,   ஓகே சொல்லிட்டேன்” என்று தன் மனதில் வந்து போன காரணங்களை  மறைக்காமல் கூறினாள் விஷல்யா.

“ அதான்  உங்கப் பொண்ணு   அந்தப் பையனைத் தான்  கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாளே இதுக்கு மேல எதுக்கு லேட் பண்ணனும்,  நீங்க அந்தப் பையன் குடும்பத்தைப் பத்தி விசாரிங்க   பொண்ணுப் பார்க்க வரச் சொல்லுவோம்,  சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சு வைச்சுட்டு  கடமை முடிஞ்சதுன்னு நிம்மதியா இருக்கலாம் ” என்று படப்படத்தார் தாமரை.

“ நோ வே அம்மா, ஆள் பார்க்க நல்லா இருக்கான், நல்லப் பையனாவும் தெரியுறான் அதுக்காக உடனே கல்யாணம் பண்ணிக்க முடியுமா?… ஐ நீட் சம் டைம்” என்று    திருமணப் பேச்சு வார்த்தைக்கு  சிலகாலம் தடை விதித்தவள், அமுதேவ்வை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டத் துவங்கினாள்.

முதல் முறை நடந்த பீச் சந்திப்பு போலவே இருவரும் அடிக்கடி சந்தித்து  ஒருவரை ஒருவர்  அறிந்தலும் புரிதலுமான செயலில் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படியாக சில காலம் கடந்திருக்க… அன்றும்   பீச்சில் இருவரும் சந்தித்துக் கொள்ள தீர்மானித்து அமுதேவ் வருகைகாக விஷல்யா காத்துக்  கொண்டிருந்த நேரம்,    கண்களில் காமத்தை தேக்கித்  தவறான பார்வை பார்த்து  அவளைக் கடந்து சென்றான் ஒருவன்.

தன்னைக் கடந்து சென்றவன் பார்வையில் இருந்த அர்த்தம் புரிய ‘ பொறுக்கி ராஸ்கல், இதுக்குன்னே வருவானுங்க போல’  என்று எரிச்சலுடன்  எண்ணிக்கொண்டு அமுதேவ் வரும்  திசையை பார்த்துக் கொண்டிருக்க ..  மெல்ல அவள் அருகில் வந்து  நின்றவன் ஒருவிரல் கொண்டு அவள்  கைவிரலை   சுரண்டி, “ என்ன  வெயிட்டிங்கா,  சும்மா நச்சுன்னு இருக்க இன்னுமா  கிராக்கி  கிடைக்கல, நான் ஓகே வா உனக்கு?  என்ன ரேட்?” என்று  அவளின் உடற்கட்டை  வருணித்து  தகாத முறையில் பேசிட, கொதித்துப்  போனவள் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கி நின்றவன்  சட்டையப் பற்றி இழுத்து  அவன் சுதாரிக்கும் முன்  ஓங்கிக் கன்னத்தில் அறைந்த்திருந்தாள்.

 நொடிப் பொழுதில் நடந்து முடிந்த சம்பவத்தில்  திகைத்து விழித்தான்  தவறான  எண்ணத்தில் நெருங்கியவன், “ என்ன கேட்ட? ரேட்டா, இப்போ தெரிஞ்சதா என் ரேட் என்னன்னு?, பொண்ணுங்கன்னா அவ்ளோ இளக்காரம், பொறுக்கி ராஸ்கல்..  “ என்று மீண்டும் அடிக்க கையோங்கினாள் விஷல்யா.

ஏதோ தவறென்று உணர்ந்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள்  “ என்னமா பிரச்சனை?” என்று  விசாரிக்க, “ தனியா நிக்கிற பொண்ணுகிட்ட  அசிங்கமா பேசுறான் பொறுக்கி, “ என்றாள் விஷல்யா.

  “  இதுக்குன்னே வருவானுங்க போல..  நீ விடுமா.. இவனுக்கு இதெல்லாம் பத்தாது,  இந்தப் பொறுக்கிய நாங்கப் பார்த்துக்குறோம்.. “ என்று வந்தவர்கள்  விஷல்யாவிற்கு உதவ முன்வர,  அதை அலட்சியம் செய்து  தன் கைப் பிடியில்   இருந்தவன் தலை முடியைப் பற்றி   இரு கன்னத்திலும்   ஓங்கி அடித்து தனக்கான பதிலை  தன் முறையில் சொல்லத் துவங்கினாள்.

             அன்றாட அலுவலகப் பணிகளை முடித்துக்கொண்டு தன்னவளை காணும் ஆவலுடன்  வழமையாய் சந்திக்கும்  கடற்கரைக்கு  வந்தவன், விஷல்யாவை சுற்றி வளைத்து   சிறுக் கூட்டம் நின்றிருக்க,  பதற்றத்துடன் வேடிக்கைப்  பார்த்துக் கொண்டிருந்தவர்களை  விளக்கிக்கொண்டு  உள்நுழைந்தான் அமுதேவ்.

  விஷல்யா    ஒருவனை கொலை வெறியுடன்  அடித்து நொறுக்கிக்  கொண்டிருக்க,   அங்கிருந்த சூழ்நிலையைக் கண்டு      “ ஷாலு” என்று  அதிர்ச்சியாய்  அழைத்தபடி விஷல்யாவை நெருங்கினான் அமுதேவ்.

            அதுவரை தன்னை  நெருங்க முயற்சித்தவர்களை  அனல் பார்வையில்  விளக்கி நிறுத்தி  தனது கோபம் அனைத்தையும் தன்னிடம் சிக்கிக்கொண்டவனிடம் காட்டிக்கொண்டிருந்தவள், அமுதேவ்வைக் கண்டதும் கொண்டிருந்த கோபம் கரைந்து, “ அம்மு..”  என்று ஆவலுடன் அழைத்தாள் விஷல்யா.

            “ இங்க என்ன நடக்குது ஷாலு?,இவன் யாரு?” என்று குழப்பமும் எரிச்சலுமாய் அமுதேவ் வினவ.. இருவருக்கும் ஏதோ உறவு  இருப்பதை உணர்ந்து   கூடி நின்றவர்களில்  விஷல்யா அடித்த அடிக்கு  துவண்டு விழுந்தவன் மீது அனுதாபம் கொண்ட ஒருவர்.. “ இது உங்களுக்கு தெரிஞ்சப் பொண்ணாத் தம்பி,  இந்தப் பையனை அடிச்சே  கொன்னுடும் போல இங்கயிருந்து கூட்டிட்டு போங்க” என்றார்.

            “ உங்க வீட்டுப்  பொண்ணுக்கு நடந்தா இப்படித் தான் இவனுக்காக சப்போர்ட் பண்ணுவீங்களா?,    இவன  மாதிரி  ஆளுங்கள விட  இவனுங்க செய்யுற தப்புக்கு  சப்போர்ட் பண்ணிட்டு சப்பக் கட்டுக் கட்டுற  உங்கள மாதிரி ஆளை  முட்டிக்கு முட்டித் தட்டி உள்ள  தள்ளுனா   தப்பு பண்றவங்களு தானா புத்தி வரும்.. “ என்று  தன்னை  குறைக் கூறியவர் புறம் திரும்பினாள் விஷல்யா.

            “ உன் அப்பா வயசு இருக்கும் என்னையே   உள்ளத் தள்ளனும்னு    சொல்லுறியா? நீயெல்லாம்    பொண்ணா! , ” என்று தலையில் அடித்துக்கொண்டு   அங்கிருந்து விலகிச் சென்றார் அந்தப் பெரியவர்.

வயது வித்தியாசம் பாராது எதிர்த்துப் பேசும் விஷல்யாவின் குணத்தைக் கண்டு  திகைத்துப் போன அமுதேவ்  அவள் கைப்பற்றி   வலுகட்டாயமாக  தன் புறமாக  இழுத்தான்.

            “ கைய விடு அம்மு, அவன் ஓடிடப் போறான்” என்று விஷல்யா பிடித் தளரவும் அங்கிருந்து தப்பிச் செல்ல  முயன்றவனை பாய்ந்துப் பிடிக்க முயன்றாள் விஷல்யா.

             நடந்து கொண்டிருக்கும் கலவரத்தை  உணர்ந்தக்  காவல்  அதிகாரிகள்  “இங்க  என்னப்  பிரச்சனை? எதுக்கு பப்ளிக்ல கூட்டம் போட்டுட்டு இருக்கீங்க, ” என்று விசாரணையைத் துவங்க.. “     இந்தப் பையன் இந்தப் பொண்ணுக்கிட்ட  பிரச்சனை  பண்ணிருக்கான்”   என்றனர்  கூடி நின்றவர்கள்.

            “ என்னமா பிரச்சனை பண்ணுனா..  நீயே  கைநீட்டிடுவியா  அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்.. “ என்று  பிரச்சனைச் செய்தவனை தங்கள்  வசம் கொண்டுவந்தவர்கள், “  கேஸ் பைல் பண்ண ஸ்டேஷன் வரைக்கும்          வர வேண்டியது இருக்கும், ” என்று   கட்டளைக் குரலில் வினவினர் காவல் அதிகாரிகள்.

            “ இல்ல மேடம் கம்ப்ளைன்ட் குடுக்க எங்களுக்கு  இஷ்டம் இல்ல,   அவனை  விட்டுடுங்க, “ என்று  விஷல்யாவை முந்திக்கொண்டு  பதில்  தந்து,  குழப்பமாய்  பார்த்து நின்ற விஷல்யாவை தன்னுடன்  இழுத்துச் சென்றான் அமுதேவ்.

            “   என்னை எதுக்கு இழுத்துட்டு வந்த அம்மு,  கம்ப்ளைன்ட் வேணாம்னு எதுக்கு சொன்ன? இந்த மாதிரி ஆளுங்கள சும்மா விடக் கூடாது, நீ முன்னாடிப் போ நான் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வரேன்,”  என்று அமுதேவ் பிடியை  விளக்கிக் கொண்டு விலகி நடக்க   முயன்றாள் விஷல்யா.

            மீண்டும் அவள் கரம் பற்றி  தடுத்து நிறுத்தியவன், கோபம் கக்கும் கனல் பார்வையுடன் “சுத்தி நின்னு ஒருக் கூட்டமே உன்னை வேடிக்கை பார்த்துட்டு இருக்கு.. நீ என்னடானா  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம பஜாரி மாதிரி ஆம்பளைக் கூட சரிக்கு சமமா சண்டை போட்டுட்டு இருக்க..   உன் அப்பா வயசுல இருக்கிற பெரியவர  எதிர்த்து பேசுற,  இப்ப வரைக்கும்  செஞ்சது பத்தாதுன்னு  ஸ்டேஷன் வேறப் போய் மானத்தை வாங்கப் போறியா.. ?” என்றான் அமுதேவ்.

முதல் முறை அமுதேவ் பார்வையில் காதலை விடுத்து கோபத்தைக் கண்டவள், தன் செயலில் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை எனும் உறுதியுடன்  தன் காதலன் புரிதலில் இருக்கும் தவறை  தெளிவுப்படுத்தும் நோக்கத்தில், அவன் வார்த்தையில் உண்டான கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு..

“ என்ன நடந்ததுன்னு புரியாமப் பேசாத அம்மு. அவன் எவ்வளவு அசிங்கமா என்கிட்ட பேசினான் தெரியுமா?.. கிராக்கிங்கிறான், ரேட் என்னங்கிறான். அவனை  சும்மா விடமுடியுமா . “ என்று தன் செயலுக்கான காரணத்தை கூறினாள் விஷல்யா.

தன் காதலியை தவறாகப் பேசினான் என்று அறிந்ததும்  கோபம் உண்டானாலும் அந்தக்  கோபத்தின் காரணத்தையும் அவள் புறமே திருப்பி தனக்கு முன் நின்றவளை  அருவருப்பாக மேலும் கீழுமாய்  பார்த்தவன், “ தப்பு செஞ்சவனுக்கு  தண்டனை குடுக்கணும் சரி,  தப்பு செய்யத் தூண்டுறவங்களுக்கும் தண்டனை கிடைக்கணும்  இல்லையா?” என்று  வெறுமையான குரலில் வெறுப்பை உமிழ்ந்தான் அமுதேவ்.

எதிரில் இருந்தவன் வார்த்தை புரிந்தும் புரியாமலும் குழம்பி நின்றவள், “ புரியல!” என்று ஒற்றை வரியில் நிறுத்த…

“ உன்கிட்ட தப்பாப்  பேசுனது தப்புன்னா,  அப்படிப் பேசத் தூண்டினது உன்னோட தப்பு இல்லையா?..” என்றவன் விஷல்யா தன்னை விசித்திரமாய் பார்க்க, அவளுக்கு இன்னும் தான் சொல்ல வரும் செய்தி புரியவில்லை என்று எண்ணிக்கொண்டவன்…

“இந்த மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தா வேற எப்படிக் கேட்பான்!.. கோவில்ல பார்க்கும் போது எவ்வளவு அடக்க ஒடுக்கமா  சுடிதார் போட்டு மேலத் துப்பட்டா போட்டு மறைக்க வேண்டியத கரெக்டா மறைச்சிருந்த.. இப்ப என்னடான்னா கண்டபடி டிரஸ்  பண்ண ஆரம்பிச்சிட்ட,   ஒரு ஆர்வத்துல தான் இந்த  மாதிரி டிரஸ் பண்ணுறன்னு நானும் ஆரம்பத்துல இதை  பெருசா எடுத்துக்கல, போகப் போக உன் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப மோசமாகிட்டே போகுது.  லைட் க்ளோத் டாப் அதுல ஸ்லீவ் லெஸ் வேற பார்க்கவே  அருவருப்பா  இருக்கு. நம்ம டிரஸ்  அடுத்தவங்க உணர்வைத் தூண்டாத விதத்துல இருக்கணும்னு என் பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. எந்நேரமும்  சேலையை சுத்திட்டு இருக்க முடியாது தான், அதுக்காக இப்படி உடம்போட    ஷேப் அப்பட்டமா தெரியுற அளவுக்கு கிளாமரா டிரஸ்  பண்ணனும்னு இல்லையே!,    இனி நீ  இந்த மாதிரி அறைகுற டிரஸ் எல்லாம் போடக் கூடாது   சுடிதார் தான் போடணும், .. “ என்று கட்டளையுடன் கட்டுப்பாடு விதித்தான் அமுதேவ்.

“ ஒருத்தர் உடுத்துற உடை அடுத்தவங்க உணர்வத் தூண்டக் கூடாதுன்னு உங்க பாட்டி சொன்னது ஓகே.   அது எந்த வகையான உணர்வுன்னு  தெளிவாக் கேட்டீங்களா?.. ஏன்  கேட்குறேன்னா!  அன்பு, கோபம் , மகிழ்ச்சி , பொறாமை, வெறுப்பு , விரக்தி , அமைதி, பயம்,  ஏமாற்றம், வெட்கம்,  இரக்கம், காதல், காமம் ,குற்றுணர்வு, மனவுளைச்சல் ,பெருமை,வலி, இப்படி மனுஷங்களுக்குள்ள   எத்தனையோ வகையான உணர்வுகள் இருக்கு,  இதுல எந்த உணர்வை தூண்டுறது தப்புன்னு தெளிவா தெரிஞ்சா அடுத்த தடவை அந்த தப்புச் செய்யாம இருக்கலாமேன்னு கேட்டேன்.. “ என்று ஏளனம் நிறைந்த குரலில் வினவினாள் விஷல்யா.

“ என்ன கிண்டல் பண்ணுறயா?”  என்று அமுதேவ் கோபத்துடன் குரலை உயர்த்த…

“ சேச்சே நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் மிஸ்டர் அமுதேவ்.  என்னோட டிரஸ் உங்களுக்கு வெறுப்பு உணர்வ ஏற்படுத்திருக்கு.  அந்தப் பொறுக்கி ராஸ்கலுக்கு.. காம உணர்வத் தந்திருக்கு,   அதே டிரஸ்  ஒருப் பொண்ணுக்கு  பொறாமை உணர்வத்   தந்திருக்கலாம்.   இப்படி  மனுஷங்களுக்கு வர   வித்தியாசமான   உணர்வுல எதைத் தூண்டுறது  எதைத் தூண்டாம இருக்கிறது சரி தப்புன்னு தெளிவாச் சொன்னா நல்லா இருக்கும்… “ என்று அதே எள்ளலுடன் வினவினாள் விஷல்யா.

“ எந்த உணர்வைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு தெரியும் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காத.. விஷல்யா  “ என்று கோபத்தில் பற்களைக் கடித்தபடி எரிச்சலுடன் வார்த்தைகளை துப்பினான் அமுதேவ்.

அமுதேவ்வின் கோபக் குரலில் உண்டான எரிச்சலை அடக்கிக் கொண்டு“ யா ஐ காட் இட் மிஸ்டர்.  அமுதேவ். நீங்க சொல்றது காம உணர்வு.. அதாவது  செக்ஸுவல் அட்ராக்ஷன். ,   “ என்றவள் அமுதேவ் ஆம் என்பது போல் அலட்சியமாய் தலையசைக்க, ஆச்சரியத்தில் இரு புருவம் உயர்த்தி உதட்டைச் சுழித்தபடி.. சுற்றுமுற்றும் பார்வையால் தேடியவள் தனது தேடு பொருள் கிடைத்த கர்வத்துடன் பார்வையை அமுதேவ் புறம் திருப்பி..

“ அதோ   நாயை வாக்கிங் கூட்டிட்டு போறாரே அந்த ஆளைப் பாருங்க,  பாட்டிக் காலத்துல ஆள் பாதி ஆடை பாதின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே… அந்தப் பழமொழிக்கு சரியா இருக்கு அவரோட டிரெஸ்ஸிங் சென்ஸ்.   ஃசாட்ஸ்.. ஸ்லீவ்லெஸ்  டீஷர்ட்.  நீங்க ஒரு விஷயத்தை  கவனிச்சீங்களா நான் அவரை விட அதிகமாவே டிரஸ் பண்ணிருக்கேன், . அண்ட் ஒன் மோர் திங்…   அவரை விட என்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் பெட்டராவே  இருக்கு!.. ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கிற  பப்ளிக் ப்ளேஸ்ல கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அரைகுறை டிரஸ் போட்டு  திரியுற..   அந்த ஆளைப் பார்க்கும்போது எனக்கு நீங்க சொன்ன காம உணர்வு வரலையே.. அப்போ உணர்வுகள் இருபாலருக்கும் பொதுவானது இல்லையோ!, பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும்   உணர்வுல  நிறைய வேறுபாடு இருக்குதா என்ன?  “என்று  அவன் புரிதலில் உள்ள தவறைச் சுட்டிக்காட்ட   முயன்றாள் விஷல்யா.

“ பசங்களும் பொண்ணுங்களும் ஒன்னா.. பசங்க அரைகுறை டிரஸ் போட்டா தப்பு இல்ல.. பொண்ணுங்க போட்டா தப்பு.. “ என்று விஷல்யா வார்த்தையில் இருக்கும் உண்மையை ஏற்க  மனமற்று..  மீண்டும் பிடிவாதமாக அதையே கூறிக் கொண்டிருந்தான் அமுதேவ்.

“ அதான் ஏன்னு கேக்குறேன்..  பசங்களுக்கு இருக்கிற எலும்பும் தோலும் தான எங்களுக்கும் இருக்கு.. அந்த உடம்ப பார்க்கும் போது வராத சலனம் பொண்ணுகளை பார்க்கும்போது எதுக்கு வரணும்.  ஒரு ஆண அரைகுறை ஆடைல பார்க்கும் போது எந்த பொண்ணும் சலனப் பட்டு   அவனக் கைய புடிச்சு இழுக்கவோ.. தப்பான எண்ணத்துல நெருங்குறதோ,   ரேப் பண்றதோ இல்லையே.. இந்த ஆண்களுக்கு மட்டும் ஏன் பொண்ணுங்கள அரைகுறையா பார்த்ததும் அப்படி ஒரு வெறித்தனமான உணர்வு வருது. அப்போ ஒருத்தர் உடுத்துற உடை தான் அடுத்தவங்களோட காம உணர்வைத் தூண்டுதுன்னு சொல்லுறது  தப்பு.. உடைக்கும் உணர்வுக்கும் கொஞ்சம் கூட  சம்மந்தம் இல்ல, உணர்வு தூண்டப்படுறது வளர்ப்பு  சம்மந்தப்பட்ட விஷயம்.  வளர்ப்பு சரியா இருந்தா.. பொண்ணுங்கள அரைகுறையா இல்ல.. ஆடையே இல்லாம பார்த்தா கூட சலனம் வராது. பொண்ணுங்கள செக்ஸ்வல் சிம்பிளா பார்க்குறத  முதல  விட்டுத் தொலைங்க..  அவங்களும் உங்கள மாதிரி உயிரும் உணர்வும் இருக்கிற மனுஷங்கதான்..  உங்களுக்கு என்னென்ன ஆசைகள் எண்ணங்கள் இருக்கோ  அதெல்லாம்  எங்களுக்கும் இருக்கு,  எங்களால அடக்க முடிஞ்ச   உணர்வை உங்களால அடக்க முடியலனா அந்த இடத்துல தப்பு நீங்களும் உங்கப் பார்வையும் உங்கள வளர்த்த விதமும் தானே தவிர..   நாங்களோ எங்க அரைகுறை உடையோ இல்ல.. ” என்று பொது இடம் என்றும் பாராமல் கோபமாய் குரலை உயர்த்தி நியாயம் பேசினாள் விஷல்யா.

தங்களை கடந்து செல்பவர்கள் விசித்திரமாய் பார்த்து செல்வதை உணர்ந்த அமுதேவ்.   “ வாய மூடு.. எதுக்கு இப்போ இந்தக் கத்துக் கத்துற..”என்று  தான் வந்த காரின் முன்  இருக்கையில் ஏறச்செய்தவன்,  தானும் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

”என்னவோ வளர்ப்பை பத்தி பக்கம் பக்கமா பாடம் எடுக்குற,    என் வளர்ப்பை குறை சொல்லுறதுக்கு உனக்கு என்னத் தகுதி இருக்கு, உன் வீட்டுல உன்னை எப்படி  வளர்த்திருகாங்கன்னு நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே.   இதுவரைக்கும்  எப்படி இருந்தயோ அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல. இனி என் பேச்சைக் கேட்டுத் தான்  நடக்கணும்,  ஒரு விஷயம் நான் சொன்னா அது சரியோ தப்போ நீ கேட்டுத்தான் ஆகணும் எதிர்த்து ஆர்கிவ் பண்ணக்கூடாது. புரியுதா..?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கோபமாய் எச்சரிக்கை  விடுத்தான் அமுதேவ்.

“  நான்  வளர்ந்த விதம் தான் சரியில்லையா சரிதான்!, அப்புறம் என்னவோ சொன்னீங்களே  சரியோ தப்போ உங்கப்  பேச்சைக் கேட்கணுமா.. ஏன் எனக்குன்னு சுயபுத்தி இல்லையா…இல்லன்னா சரி தப்பை  பிரிச்சுப் பார்க்குற பக்குவம் பத்தலையா!. நான் எதுக்கு உன் பேச்சைக் கேட்கணும், ” என்று அலட்சியமாய் தலை சிலுப்பி காரை விட்டு இறங்கிட முயன்றாள் விஷல்யா.

தன்னை அற்பப் புழுவைப்  போல் பார்த்து விலகி சென்றவள் கைபற்றி.. நிறுத்தியவன், “  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவன்,  என் பேச்சை நீ கேட்டுத்தான் ஆகணும் அம்மு, இதுக்கு மேல என் பேச்சை எதிர்த்து ஆர்க்கிவ் பண்ணிட்டு   இருந்தேனா..  என்னப் பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது ” என்று மிரட்டல் விடுத்தான் அமுதேவ்.

“ ஓ.. மை காட், இதை நான்  எப்படி மறந்தேன்.., நாம  சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ல.  உங்களை காதலிக்கிற விஷயத்தை என் அம்மா அப்பாகிட்டச் சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம்  கூட வாங்கிட்டேன்,  அது விஷயமா பேசத்தான் உங்கள வரச்சொன்னேன். வந்த விஷயத்தை மறந்து என்னென்னவோ பேசிட்டு  இருக்கேன் பாருங்க, ஆனா இதுவும் நல்லதுக்கு தான் போல அதனாலதான் நீங்க யாரு எப்படிப்பட்டவர்ன்னு  என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.. “ என்று தன்னுள் மூண்ட கோபத்தை மறைத்த படி  விஷல்யா பேசிக்கொண்டே செல்ல….

விஷல்யா  முகம்  பார்த்திராத அமுதேவ்   அவள் குரலில் மறைந்திருந்த கோபத்தைக்  கவனிக்கத் தவறி அவள் பேசி முடிப்பதற்குள்   இடையில்  நுழைந்து   “ அதான் இப்போ ஞாபகம் வந்துருச்சுல, இனிமே இப்போ செஞ்ச மாதிரி முட்டாள் தனம் செய்யாத.. எனக்கு இந்த மாதிரி திமிருத் தனமான  பிஹேவியர்  சுத்தமா புடிக்காது. இந்த ஒரு தடவை ஏதோ தெரியாம பண்ணிட்டனு மன்னிச்சு  விடுறேன். இதே மாதிரி இன்னொரு தடவ நடந்துக்கிட்டேனா அப்புறம் நான்  நம்ம கல்யாண விஷயத்துல வேறு மாதிரி முடிவெடுக்க வேண்டியது வரும், “ என்று  பெரிய மனது வைத்து விஷல்யா தவறை மன்னிக்க முன்வந்தான் அமுதேவ்.

தவறை எல்லாம் அவன் மீது வைத்துக்கொண்டு தன்னை மன்னிக்க முன்வரும் அமுதேவ் மனதில் இன்னும்  என்ன இருக்கிறது என்று அறியும் ஆவலுடன், “நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சைப் போட வந்த வள்ளல்.. உங்க பேச்சை மீறி உங்களையே எதிர்த்து பேசி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் நான் தெரிஞ்சும் தெரியாம செஞ்ச தப்பையும் மன்னிக்கிற நீங்க தான் கிரேட்.. நான் வேஸ்ட்..  உங்களுக்கு மனைவியா  அடிமையா வாழ்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். உங்களுக்கு மனைவியா    வரப் போறவங்க என்ன மாதிரி இருந்தா  உங்களுக்கு பிடிக்கும்னு இப்பவே சொல்லிட்டா  நான் என்னை மாத்திக்க வசதியா இருக்கும் “ என்று  தேன் போல தித்திக்கும் தோணியில் வினவினாள் விஷல்யா.

தனக்காக  விஷல்யா தன்னை மாற்றிக் கொள்ள முன்வருகிறாள் என்று கர்வம் கொண்ட அமுதேவ், அவள்  கேள்வியில் இருக்கும் உள்ளர்த்தமும் அதனால் நேரப் போகும்  விபரீதமும் புரியாமல் தன் வருங்கால மனைவிக்கு இருக்க வேண்டிய குணநலன்களை  வரிசையாக அடுக்கிடத் துவங்கினான்.

 “ கல்யாணம் முடிஞ்சதும் நீ வீட்டை  நல்லபடியா கவனிச்சுட்டு எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்  போட்டுட்டு இருந்தாப் போதும்,  அதனால ஆப்டர் மேரேஜ்  உன் வேலையை விட்டுடனும்.  நான் சாப்பிட்ட  தட்டுல சாப்பிடனும், நேரத்துக்கு விளக்கு ஏத்தி பூஜை பண்ணனும், என் பேச்சைக் கேட்டுத் தான் நடந்துக்கனும், அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் செய்யக்கூடாது. காலையில நான்  எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சு  வாசல் தெளிச்சு கோலம் போட்டு எல்லா வேலையும் முடிக்கணும். நைட்  என் தேவை எல்லாம் தீர்த்து வைச்சுட்டு நான் தூங்குனதுக்கு பிறகு தான் தூங்கணும், நமக்கு இரண்டு குழந்தைங்க போதும்… பிள்ளைங்க பொறுப்பு உன்னோடது, அவங்கள  நீ தான்  சரியா வளர்க்கணும்,   “ என்று   பெண்மைக்கான அடையாளம்  என்று அந்தக் காலத்தில் வரையறுத்த  இலக்கணங்களை வரிசையாய் அடுக்கிக்கொண்டே சென்றான் அமுதேவ்.

அதுவரை பொறுமையாய் இருந்ததே   பெரிது  என்பது போல “ பேசி முடிச்சுட்டீங்களா. இல்ல இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருக்கா, அதென்ன உங்கத் தேவையெல்லாம் தீர்ந்த பிறகு “ என்று அருவருப்புடன் முகம் சுருக்கி, “  இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல?” என்று கட்டுப்படுத்த முடியாத  கோபத்துடன் வினவினாள்  விஷல்யா.

“  இது காலம் காலமா நடக்கிறது தானே.. இதுல  நான் வெட்கப்பட என்ன இருக்கு?” என்று  அலட்சியமாய் வினவினான் அமுதேவ்.

நீண்ட  நெடு மூச்சை  வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.. “     யா ரைட், இது காலம் காலமா நடக்கிறது தான், பட் இந்தக் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படுற ஆள் நான் இல்ல மிஸ்டர்.  நீங்க  உங்க வாழ்க்கைக்கான துணைய தேடல, உங்கப் பேச்சை கேட்டு..  உங்களுக்கு தொண்டு செய்ய  ஒரு கொத்தடிமைய தேடுறீங்க…  அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன், நீங்க போட்ட லிஸ்ட்ல ஒன்னைக் கூட என்னால ஃபாலோ பண்ண முடியாது.  நான்னு இல்ல    சுயமரியாதையோட  வாழணும்னு ஆசைப்படுற எந்தப்   பொண்ணும்  உங்கக் கண்டிசனுக்கு சம்மதிக்கமாட்டா,    நீங்க இந்த ஜென்ரேஷன்ல பிறக்க வேண்டிய ஆளே இல்ல,   நீங்க  ஒன்னுப் பண்ணுங்க, ஒரு டைம் ட்ராவல் மிஷின்  கண்டுபிடிச்சு  உங்கப்  பாட்டிக் காலத்துக்குப் போய் நீங்க சொன்ன மாதிரி தலையாட்டி பொம்மை ஒன்னத் தேடிக் கண்டுபிடிங்க. என்னை ஆள விடுங்க,  ” என்று கார்க் கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள் விஷல்யா.

அவள் கரம் பற்றி இழுத்து அமரச் செய்தவன், “ நான் இன்னும் பேசி முடிக்கல, விஷல்யா… முடிவா என்ன தான் சொல்லுற?” என்று  அவளின் இறுதி முடிவை  அறிய வினவினான் அமுதேவ்.

“இப்போ என் முடிவு என்னன்னு தெரியனும் அவ்ளோ தானே… கையை விடுங்க சொல்லுறேன்..  “ என்றவள் அமுதேவ்விடம் இருந்து கரத்திற்கு விடுதலை கிடைத்தும், “  யோவ் உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா… நானெல்லாம் அன்பா சொன்னாலே கேட்கமாட்டேன் இதுல ஆயரத்தெட்டு ரூல்ஸ் போட்டு என்னை  அடக்கப் பாக்குறியா?. என்னால உன் ரூல்ஸ்க்கு அடங்கி வாழ முடியாது, உன் ரூட் வேற என் ரூட் வேற  இரண்டு  பேரும் ஒரே ரூட்ல ட்ராவல் பண்ண வாய்ப்பே இல்ல. ஏற்கனவே ஓவர் கடுப்புல இருக்கேன் இன்னும் கடுப்பேத்தாம ஒழுங்கா ஓடிடு.  இதுக்கு மேல காதல் கல்யாணம்னு பேசிட்டு என் பின்னாடி வந்த கால்ல இருக்கிறத கழட்டி அடிப்பேன்… “ என்று ஒரேடியாக   காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விலகிவிட்டாள் விஷல்யா.

தானும் அமுதேவ்வும் காதல் கொண்ட விதத்தையும்  வாதம் செய்து பிரிந்த விதத்தையும் விஷல்யா கூறி முடிக்க,   வாய்விட்டு சிரிக்கத்  துவங்கினார் பானுஸ்ரீ.

Advertisement