Advertisement

3… 

மறந்தேனென்று.. 
நினைத்திருக்க.. 
உன் நிழற்படத்தில் 
மீண்டும்  உருப்பெறுகிறது.. 
உன் மீது நான் கொண்ட 
உயிர்க் காதல்.. 

சரியானக் காரணத்தை தெரிவிக்காமலேயே விஷல்யா தன் மகனை மறுத்துச் சென்றதன் காரணம் புரியாமல் இருந்த பானுஸ்ரீ.  இருவருக்கும் முன்பே அறிமுகம் இருந்திருக்ககூடுமோ என்ற எண்ணத்தில் இருவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கத் துவங்கினார். 

கட்டிடக் கட்டுமானத்தில் அமுதேவ் வளர்ந்து நிற்க.. கட்டிடங்களின் உட்புறத்தில் அலங்கரிக்கும் உள் அலங்காரத் துறையில் முன்னேறிக் கொண்டிருப்பவள் விஷல்யா. இருவருக்கும் இடையில்  இதுவரை தொழில் ரீதியாகக் கூட  தொடர்பு இல்லை என்பது உறுதியானதும், மேலும் குழப்பம் அதிகரித்தது.

“ நம்ம பையனுக்காகப்  பார்த்தப் பொண்ணு என்னக் காரணம்னு சொல்லாமலேயே அவனை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா,     வெளிய விசாரிச்சும்  எந்த விபரமும் தெரியல, அடுத்து என்னப் பண்ணுறதுன்னு புரியாம முழிச்சுட்டு இருக்கேன். எனக்கு இருக்கிற கவலை உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா? “ என்று உணவு மேசையில்  ஒன்றன் மேல்  ஒன்றாக   அடிக்கி  வைத்திருந்த  பூரியை உண்போமோ வேண்டாமா என்று  ஏக்கத்துடன்  வெறித்துக்  கொண்டிருத்த கணவரிடம் வினவினார் பானுஸ்ரீ. 

“ அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு போயிடுச்சு இதுக்கு மேல என்னச் செய்யறது பானு. நம்மப் பையன்  வாழ்க்கைத்  தப்பிச்சதுன்னு சந்தோசப்பட்டுட்டு அடுத்த இடம் பார்க்க வேண்டியது தான்.  ” என்று மகனின் வாழ்வில் அக்கறையற்று தனக்காக வெகுநேரமாய்  காத்திருக்கும் உணவில்  கவனம் செலுத்தினார் வாசுதேவ். 

“ என்னச்   சொன்னீங்க? உங்கப் பையன் வாழ்கை தப்பிச்சுடுச்சா.. அப்போ நீங்க என்கிட்ட மாட்டிட்டுத் தவிச்சுட்டு  இருக்கீங்க அப்படித் தானே!” என்று  கோபமாய் கண்ணை உருட்டினார் பானு.

“ சேச்சே.. அப்படி இல்லை பானு. காதலிச்சு…  கட்டுனா உன்னைத் தான் கட்டுவேன்னு ஒத்தக் காலுல நின்னு  கல்யாணம் பண்ணுன உன்னைப் போய்  அப்படி சொல்வேனா..  “ என்று மழுப்பலாய் பதில் தந்தார் வாசுதேவ். 

“ காதலிச்சது மட்டும் தான் நீங்க.. ஒத்தக் காலுல நின்னு  கல்யாணம் பண்ணுனது நான்.. “ என்று அவர் வரியில் இருந்த பிழையைத் திருத்தினார் பானு. 

“ நான் அந்த மாடுலேஷன்ல தான், சொன்னேன் பானு.  நீ சரியா  கவனிக்கலன்னு  நினைக்கிறேன், காதலிச்சது   நான்  கல்யாணம் பண்ணது நீ.. “ என்று வாயெல்லாம் பல்லாக  இளித்தப்படி வாக்குமூலம் வழங்கினார் வாசுதேவ். 

“இப்போ என்ன சொல்ல வரீங்க.. நீங்க காதலிச்சது தப்பு இல்ல,  நான் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணது தான் தப்புன்னு சொல்ல வரீங்களா?” என்று தன் மனநிலையை படிக்க முடியாத வெறுமையான குரலில் வினவினார் பானு. 

‘ பேசுற டோனே சரியில்லையே எந்தப் பக்கம் பேசினாலும்  பலமான அடி நமக்குத் தான் விழும் போலயே..  ‘ என்று உள்ளுக்குள் தன் நிலையை எண்ணி வருத்தம் கொண்டவர்…” ரெண்டுமே தப்பு இல்ல.. சூழ்நிலை புரியாம   நான் வாயைத் திறந்தது தான் தப்பு.. “ என்றார் வாசுதேவ்.

“ காதலிக்க தெரிஞ்சவருக்கு அம்மாவ எதிர்த்து  கல்யாணம் பண்ணத் தைரியம் வரல… மனசுல உங்கள நினைச்சுட்டு இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட எனக்கு மனசு வரல.. அதான் பிடிவாதமா  கல்யாணம் பண்ணினேன். அம்மாவுக்கு  பயப்படுற ஆளு நம்மளை எப்படி நல்லாப் பார்த்துக்குவார்ன்னு  அப்பவே  கொஞ்சம் யோசிச்சிருந்தா என் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் .. “ என்று சலித்தபடி கூறினார் பானுஸ்ரீ. 

“இப்போ நாம பேசிட்டு இருக்கிறது நடந்து முடிஞ்ச  நம்ம கல்யாணத்தப் பத்தி இல்ல, இனி நடக்கப் போற நம்மப் பையனோட கல்யாணத்தப் பத்தி.. அதப் பத்தி பேசுவோமா..? “என்று நடந்து கொண்டிருந்த விவாதம் செல்லும் விதம் சரியல்ல என்று புரிந்து மனைவியின் கவனத்தை திசை திருப்பினார் வாசுதேவ். 

“ பேச்ச மாத்தினது நானா நீங்களா..?” என்று பானுஸ்ரீ அதற்கும் நெற்றிக்கண் திறந்திட.. 

“ நான் தான்  தெரியாம வாயை திறந்ததுட்டேன், மன்னிச்சிடு..” என்று கையெடுத்து கும்பிட்டவர், “  நம்ம பையனோட குணம் என்னென்ன நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்ல, அவனோட அகராதியில பொண்ணுங்களுக்கான  ஃடெபனிஷனே வேற.. அப்படிப்பட்டவனுக்கு இந்த மாதிரி அதிகப்பிரசங்கித் தனம் பண்ணுற பொண்ணு செட்டாக மாட்டா,  பேசாம.. அம்மா ஆசைப்படியே எங்கச் சொந்த பந்தத்துல ஏதாவது ஒரு பொண்ணப் பார்த்துப் பேசி முடிச்சிடுவோம்”   என்று  மனைவியின்   பிடிவாதக்  குணம் அறிந்தும் உளறினார் வாசுதேவ்.

“ என்னது உங்க அம்மா ஆசைப்பட்ட மாதிரியா. ? அப்போ தாலிக்கே அர்த்தம் தெரியாத சும்மா கட்டிப் பிடிச்சாலே குழந்தை பிறந்திடும்னு யோசிக்கிற பத்தாம்பசலித் தனமான  பொண்ணத் தான் என் பையனுக்கு கட்டி வைக்கமுடியும். சின்னத் தம்பி படத்துல வர்ற பிரபுவோட லேடி வெர்ஷன்.. கதைக்கு கேட்க நல்லா இருக்கும் ஒரிஜினல் வாழ்க்கைக்கு ஒத்து வராது.” என்றார் பானு.

“   இதுக்கு அதுவே பரவாயில்ல.. “ என்று   உள்ளத்தின் உணர்வுகளை உளறிக்கொட்டினார்  வாசுதேவ்.

“என்ன?” என்று பானு கோபமாய் துவங்க, “  அம்மா  ஆசைப்பட்ட மாதிரி  பொண்ணுக்கு  இந்தப் பொண்ணு பரவாயில்லன்னு  சொல்ல வந்தேன் ” என்று மழுப்பினார் வாசுதேவ்.

“ யூ ஆர் ரைட்!..  பொண்ணாவே  நடந்துக்கத்  தெரியாத என் வளர்ப்பு சரியா இருக்காது,  என் பேரப் பிள்ளைய நானே  வளர்க்கிறேன்னு,  என்கிட்ட இருந்து பிரிச்சுட்டு போய்,  அவன்    மனசுல  தப்பானா விஷயங்களை விஷம் மாதிரி விதைச்சு வச்சிருக்காங்க   உங்க அம்மா விதைச்ச விஷச் செடியை களையெடுக்க இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்  தனமானப்  பொண்ணு தான் சரியான ஆள்.  நம்மப் பையனுக்கு வாழ்க்கையோட நிதர்சனத்தை கத்துக்கொடுக்க  இவ தான் சரிப்பட்டு வருவ!. நான் முடிவு பண்ணிட்டேன்,  இவ தான் என் வீட்டு மருமக இதுல எந்த மாற்றமும் இல்ல. “ என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் தனது முடிவை அறிவித்தார் பானுஸ்ரீ. 

“ நீ  சொல்லிட்டாப் போதுமா?   கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வேண்டிய ஒரு ஆள் பிடிக்கலன்னு போயிட்டா, இன்னொரு ஆளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குறதே தெரியாது,   இந்தச்  சூழ்நிலையில இப்படி ஒரு சபதம்  உனக்கு தேவை தானா?” என்றவர் பானு கோபமாய் முறைக்கவும், “  நீ எந்த முடிவு எடுத்தாலும் அதுல  ஜெயிச்சேப்   பழகிட்ட,   இதுல  அதுமாதிரி  நடக்க வாய்ப்பு இல்ல, “ என்று தன் வார்த்தைக்கு  விளக்கம் கொடுத்தார் வாசுதேவ்.

“ நடக்காத விஷயத்தை எப்படி நடத்தி முடிக்கணும்னு எனக்குத் தெரியும், சாப்பிடத்தானே வந்தீங்க,  அந்த வேலைய கவனிங்க..  அவங்க  இரண்டு போரையும் நான் கவனிச்சுக்கிறேன்” என்று கணவரின் வார்த்தையை பொருட்படுத்தாது அடுத்து  செய்ய வேண்டிய  விஷயத்தில் கவனம் செலுத்தத் துவங்கினார் பானுஸ்ரீ.

  திருமண ஏற்பாட்டை நிறுத்தச் சொல்லும் அளவிற்கு  இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது என்று அமுதேவ்விடம் கேட்டால்  சரியானப்  பதில் கிடைக்காது என்று எண்ணிய  பானுஸ்ரீ,  விபரம் அறிந்திட விஷல்யாவை  அணுகிட  முயன்றார்.

மாப்பிள்ளையைப் பார்த்து வருகிறேன் என்று சொல்லிச் சென்ற மகள் அங்கிருந்து வந்ததிலிருந்து சரியில்லை என்று கவனித்த தாமரை  கணவரிடம் தன் கவலையைப் பகிர்ந்துக் கொண்டார். 

“ மாப்பிள்ளை பார்த்துட்டு வரேன்னு வீரப்பா சொல்லிட்டுப் போன உங்கப் பொண்ணு இந்த ரெண்டு நாளா சரியில்ல. நீங்க கவனிச்சீங்களா?.” என்ற மனைவியின் கேள்விக்கு ஆமாம் என்பது போல் தலையசைத்தார் தாமோதரன். 

“ எப்பவும் அடாவடியா திரிகிற பொண்ணோட திடீர் அமைதிக்கு காரணம் என்னன்னு ஏதாவது தெரிஞ்சதா.. ?” என்று அவரே அடுத்த கேள்வியை கேட்டிட.. “ என்கிட்ட கேட்டா எனக்கு என்னத் தெரியும்! என்னைக்கு உங்கப் பொண்ணு என்கிட்ட மனசு விட்டுப் பேசிருக்கா..”என்று அலுத்துக்கொண்டார் தாமரை. 

“கேட்குற விதமா கேட்டா பதில்  கிடைக்கும், ஏற்கனவே வருத்தத்துல இருக்கிறவக்கிட்டப் போய் இன்னும் மனசு நோகடிக்கிற மாதிரி கேள்விக் கேட்டா.. சரியான பதில் எப்படி கிடைக்கும்.. “ என்று மகளுக்கு ஆதரவாக பேசினார் தாமோதரன். 

“   எனக்குத் தான் பேசத் தெரியல.. உங்களுக்கு நல்லாத் தெரியுமே!,   நீங்க கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியது தானே.. “ என்றார் தாமரை. 

“  கேட்டேன்..  அந்த இடம்   செட்டாகாது, இப்போதைக்கு  கல்யாணம் வேணாம்னு பிடிவாதமா சொல்லுறா.. ஆனா காரணம் என்னன்னு தெளிவா  சொல்ல மாட்டேங்கிறா.. “என்றார்  தாமோதரன். 

“ சுத்தம் உங்ககிட்டயே  சொல்லலையா!.  இனி யார் வந்து கேட்டாலும் சரியான பதில் கிடைக்காது” என்று தாமரை அலுத்துக்கொள்ள..  தாமோதரனின் அலைபேசி மெதுவாய் சிணுங்கியது. 

திரையில் தெரிந்த எண்ணை வெறித்துப் பார்த்தவர், “ மாப்பிள்ளை வீட்டிக்காரவங்க கூப்பிடுறாங்க, என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலையே!” என்று கவலையுடன்  கூறினார் தாமோதரன். 

“ பதில் சொல்ற வேலைய உங்கப் பொண்ணு  உங்களுக்காக விட்டு வைச்சிருப்பான்னு நினைக்கிறீங்களா?.. அவங்களுக்கான  பதில அவளே அன்னைக்கே  சொல்லிட்டு தான் வந்திருப்பா.” என்று மகளின் குணத்தை சரியாக கணித்த படி குணத்தை சரியாக கணித்த படி  கூறினார் தாமரை.

“   ஷாலு  அவளோட முடிவத்    தெளிவா சொல்லிட்டு  வந்திருந்தா எதுக்கு நம்மளத் திரும்பக் கூப்பிடுறாங்க?”       என்று குழப்பத்துடன் வினவினார்  தாமோதரன்.

“  அதை  என்கிட்ட  எதுக்கு கேட்குறீங்க?  அவங்கக்கிட்டயே  கேளுங்க” என்ற மனைவியின்  வார்த்தைக்கு செவிமடித்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவர்,  என்னப் பேசுவது என்று  புரியாமல் தடுமாறி  யோசிக்க..  அவரை மேலும் சிரமப்படுத்தாமல் பானுவே தொடர்ந்தார்.

“ வணக்கம் சார்,  என்னை ஞாபகம் இருக்கும்னு நம்புறேன், என் பையனுக்காக உங்கப் பொண்ணைப்  பார்த்திருந்தோம்,  அன்னைக்கு உங்கப் பொண்ணு  எங்க வீட்டுக்கு வந்து பேசினா..  எங்களுக்கு உங்கப்  பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு,  அதைப் பத்தி உங்கப் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணும்.. ”  என்று முழுமையான விபரம்  கூறாமல்  விஷல்யாவை    சந்திக்க அனுமதி  கேட்டார் பானு.

“  இதுவரைக்கும் எங்கப் பொண்ணோட  எந்த முடிவுலயும் நாங்கத் தலையிட்டது இல்ல, உங்கள  பார்க்க வரதும்  அவளோட விருப்பமா மட்டும் தான் இருக்கும், நான் என் பொண்ணுக்கிட்ட பேசிட்டு சொல்லுறேன் மேடம்.   ” என்றவர்   அழைப்பைத்  துண்டித்து மனைவி புறம் திரும்பி, “  அவங்களுக்கு நம்மப் பொண்ணப் ரொம்பப் பிடிச்சிருக்காம்,  அவக்கிட்ட பேசணும்னு சொல்லுறாங்க” என்று   அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் கூறினார்  தாமோதரன்.

“ என்ன  அவங்களுக்கு நம்மப் பொண்ணப் பிடிச்சிருக்கா.. புரட்சிகரமா மாப்பிள்ளை  பார்க்கப் போறேன்னு  பினாத்தின  நம்மப் பொண்ண அவங்களுக்கு பிடிச்சதே  பெரிய விஷயங்க.  தேடி வர நல்ல வாழ்க்கையோட அருமை  புரியாம முரண்டு பிடிச்சுட்டு  இருக்க..   அவளை எப்படிச் சமாதானப்படுத்தி  இந்தக்  கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறதுன்னு  புரியலையே” என்று தன் புலம்பலைத் துவங்கினார் தாமரை.

“ஷாலுவை சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க  வேண்டிய  வேலையை நீ   விட்டுடு,  இது அவளோடக் கல்யாணம், அவ தான் முடிவு எடுக்கணும்,  பையனோட அம்மா ஏதோ  தனியாப்  பேசணும்னு ஆசைப்படுறாங்க, அவங்க  பேசிப் பார்க்கட்டும்  அவளுக்கு  விருப்பம்  இருந்தா மேற்கொண்டு பேசலாம், இல்ல இந்தப் பேச்சை இத்தோட விட்டுடலாம்” என்று முடிவுடன் கூறினார் தாமோதரன்.

Advertisement