Advertisement

24. குலதெய்வ கோவில் வழிபாடு…

கற்கண்டையும் 

கண்ணாடித் துண்டுகளையும்

போல தான் 

அன்றாடம்

நாம் காணும் மனிதர்கள்…

பார்வைக்கு ஒன்றாக

தெரிந்தாலும்

பழகிப் பார்க்கும்போது தான்

தெரியும் அவர்களின் குணம் 

கற்கண்டை போன்று 

தித்திக்க கூடியதா!..

கண்ணாடி போன்று 

நம்மை கிழித்தெறிய 

கூடியதா என்று!…

எப்போதும் தன் மகனின் வாழ்வில் என்ன நடக்கின்றது என்பதை  அவனது நெருங்கிய நண்பன் தனுஜ் மூலம் அறிந்து கொள்ளும் பானுஸ்ரீ.  அன்றும் அதைப்போலவே தனுஜை தன்  வீட்டிற்கு வரவழைத்து… மகன் குறித்து விசாரிக்க  துவங்கினார். 

முதலில் சில விவரங்களை கூற தடுமாறிய தனுஜ்.. பின் நண்பர்களை சந்தித்தது, அங்கு நடந்த நிகழ்வு,  அதன் பின் கண்ணன் வீட்டிற்கு சென்றது,  அங்கு நடந்த அறிவுரை  என்று முழு விபரத்தையும் கூறி முடித்தான்.

நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பானுஸ்ரீ மனதில் பெரும் சந்தோஷமும் நிம்மதியும் குடிகொண்டது. “ சரியான ஆள் கிட்ட தான் அட்வைஸ் கேட்டு இருக்கான். அவரும் சரியான  நேரத்துல,  சரியான அட்வைஸ் தான் கொடுத்திருக்காரு.  கண்டிப்பா இதனால என் பையன் வாழ்க்கையில ஒரு மாற்றம் வரும்னு நம்பிக்கை இருக்கு” என்று நம்பிக்கையுடன் பேசினார் பானுஸ்ரீ.

“ நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா மாற்றம் அவன்கிட்ட மட்டும் இருந்தா போதாது… உங்க மருமகளும் அதற்கு ஒத்துழைப்பு தரணும். இப்போ ப்ராஜெக்ட் பண்ண போற கம்பெனியோட எம்டி சரியான ஃபோர்டுவன்ட்டி, பொண்ணுக விசயத்துல பக்கா பிராடு. இந்த ப்ராஜெக்ட் வேணாம்னு தேவ் எத்தனையோ தடவை சொல்லி பார்த்துட்டான்,  ஆனா உங்க மருமக கேக்குற மாதிரி இல்ல. “ என்றான்  தனுஜ். 

“ அப்படியா சொல்ற…  அவன் மோசமான ஆள்ன்னு, விஷல்யாவுக்கு தெரியுமா?” என்று பானுஸ்ரீ  வினவிட… “ இதே பீல்டுல இருக்க எங்களுக்கு தெரியும் போது, அவன் கூட ப்ராஜெக்ட் பண்ண ரெடியான அவளுக்கு தெரியாம இருக்குமா?.  செய்யப்போற ப்ராஜெக்ட்க்கும்  அந்த எம்டியோட  கேரக்டருக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்கிறா போல. அது மட்டும் இல்ல இந்த ப்ராஜெக்ட் முடியிற வரைக்கும்  குழந்தை வேணாங்கிற முடிவுல விஷல்யா பிடிவாதமா இருக்கா. இதனாலேயே இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பெரிய பிரச்சினை வந்திடுமோன்னு  எனக்கு பயமா இருக்கு. “ என்றான்  தனுஜ்.

“ என்ன குழந்தைக்கும்  தொழிலுக்கும் என்ன சம்மந்தம்..?, ஒருவேளை பிசினஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியாதுன்னு யோசிக்கிறா போல.. நான் வேணா அவ கிட்ட இத பத்தி பேசிப் பார்க்கட்டுமா” என்று பானுஸ்ரீ கூறிட..

“ யார் என்ன சொன்னாலும் அவ   முடிவு மாறாது.  என்னமோ இந்த ப்ராஜெக்ட் கையை விட்டுப்போன அவளோட  பிசினஸ்ஸையே இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துவிடுமோங்கிற   மாதிரி இந்த ப்ராஜெக்ட் விஷயத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கா.  என்ன சொன்னாலும் அவ முடிவுல எந்த சேஞ்சும் வராதுன்னு புரிஞ்சுக்கிட்டு தான், இப்போ தேவ்  விட்டுக்கொடுத்து போயிட்டு இருக்கான்.அது மட்டும் இல்ல விஷல்யாவுக்கே தெரியாம அவளோட  செக்யூரிட்டிக்காக ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கான்.  இந்த ப்ராஜக்ட் முடியுற வரைக்கும் என் நண்பனுக்கு நிம்மதியே இருக்காது. மனசுக்குள்ள ஆயிரம் கவலையும் குழப்பமும் இருந்தாலும், அவன்  ஷாலுவுக்காக எல்லாத்தையும் தனக்குள்ளேயே மறைச்சிட்டு வெளிய நார்மலா இருக்கிற மாதிரி நடிச்சுட்டு இருக்கான்.” என்றான் தனுஜ்.

“ எதுக்கும் நான் ஒரு தடவை  ஷாலுகிட்ட பேசிப் பார்க்கிறேன். “ என்ற பானுஸ்ரீ தனுஜை அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டு, தன் மருமகளுடன் பேசுவதற்கான வாய்ப்புத் தேடி  காத்திருந்தார்.

பானுஸ்ரீ எதிர்பார்த்திருந்த  வாய்ப்பை நல்கும் விதமாய், வீட்டின் பெரியவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது போல் குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு அமுதேவ் மற்றும்  விஷல்யாவின்  குடும்பம் கிளம்பியது.

தனது அன்னையும் தங்களுடன் பயணிக்க இருப்பதை அறிந்த அமுதேவ். தனக்கு சற்று வேலை இருப்பதால் பிறகு வந்து தங்களுடன் இணைந்து கொள்வதாக கூறி,    ஒன்றாக செல்லும் பயணத்தை தவிர்க்க முயல.. கணவனின் குணம் அறிந்த விஷல்யா தன் தந்தையின் மூலம் கணவனை வற்புறுத்த.. மாமனாரின் வார்த்தைக்கு மரியாதை அளித்து உடன் வர சம்மதித்தான் அமுதேவ்.

தனுஜும் இவர்களுடன்  இணைந்து கொள்ள,   எல்லோரும் ஒன்றாக குலதெய்வக் கோயிலுக்கு பயணிக்க துவங்கினர்.

“ ஆமா இப்போ நம்ம எங்க போயிட்டு இருக்கோம்” என்று ஆர்வக்கோளாறுடன்  தனுஜ் வினவ..  “ அதுவே தெரியாம தான் கூட கிளம்பி வந்துட்டியா.. “ என்று வழக்கம் போல அவனது காலை வாரினார் வாசுதேவ்.

“ குலதெய்வம் கோயிலுக்கு போறோம்ன்னு தெரியும், தெரிஞ்சுதான் வண்டில ஏறவும் செஞ்சேன்,   அந்த கோயில் எந்த ஊர்ல இருக்குன்னு கேக்குறேன்” என்று தான் முன்பு கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்தான் தனுஜ்.

“ எங்க சொந்த ஊரான பெருநாழி போயிட்டு இருக்கோம் தம்பி, அங்கதான் குலதெய்வ கோவில் இருக்கு” என்றார் தாமோதரன். 

“ அதென்ன பெருநாழி… அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று தனுஜ் வழக்கம் போல தனது கேள்வியை துவங்க… “  வழக்கம்போல ஆரம்பிச்சிட்டியா , உன் வாய் கொஞ்ச நேரம்  சும்மா இருக்காதா?” என்றார் வாசுதேவ்.

“ தெரியாததை கேட்டு  தெரிஞ்சுகிறதுல என்ன தப்பு அப்பா..” என்று அலுத்துக் கொண்டான் தனுஜ்.

“ விடுங்க சம்பந்தி ஏதோ ஆர்வத்துல கேக்குறாரு, அது வந்து தம்பி, பண்டைய காலத்துல நம்ம தமிழர்கள் நெல்லு தானியங்கள அளக்குறதுக்கு, உழக்கு,  படி,  நாழி மரக்கால்ன்னு பயன்படுத்திட்டு இருந்தாங்க, அப்போ  இந்த பக்கம் பயன்படுத்தின நாழி, மத்ததை விட பெருசா இருக்குமாம், அதனால இந்த ஊருக்கு பெருநாழின்னு பேரு   வச்சாங்க. “ என்றார் தாமோதரன்.

“ இந்த பேருக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா.. “ என்று தனுஜ் அமைதி கொள்ள.. ஒரு வழியாக வந்து சேர வேண்டிய ஊரும்  வந்தது. 

விஷல்யாவின் தந்தையின் பிறந்த ஊரான  பெருநாழியில் அவருக்கு சொந்தமான பூர்வீக  வீட்டிலேயே வந்தவர்கள்  தங்குவதற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார் தாமோதரன். 

பயணம் செய்து வந்த களைப்பு தீர.. சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, வீட்டின் அருகில் இருந்த காலி இடத்தில் சிறு கட்டிடம் எழுப்பி பராமரிக்கப்பட்டு வந்த அவர்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்றனர். 

ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தால் வழிபாடு முறை எதுவும் தடை இல்லாமல்  முறையே நடந்து கொண்டிருக்க…  அக்கோவிலையே  பூர்வீகமாக கொண்ட மற்ற உறவினர்களும் வழிபாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

திருமண ஜோடிகள்… ஒன்றாக இணைந்து குலதெய்வமான  விஷாலாட்சி அம்மனின் அபிஷேகத்திற்கு,  தேவையான தண்ணீர் மற்றும் பூஜை பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவர்களை கவனித்துக் கொண்டிருந்த உறவினர்களோ… “தாமோதரன் தேடிப்பிடிச்சாலும்  நல்ல பொறுப்பான மாப்பிள்ளையைத் தேடிப் பிடிச்சிருக்கான். “ என்று ஒருவர் அங்கலாய்த்துக் கொள்ள..

“ நீ சொல்றதும் சரிதான் நல்ல பொறுப்பான பையன் தான் போல, அதனாலதான் இந்த பொண்ணும் பொட்டி பாம்பா அடங்கி கிடக்கு… “ என்று  ஒரு பெண்மணி ரகசியக் குரலில் கிசுகிசுக்க..

“ என்னக்கா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல?” என்றார் அவர் அருகில் இருந்த இன்னொரு பெண்மணி.

“ இந்தப் பொண்ணு விஷல்யா  இருக்கே!, இதுக்கு முன்னாடி எத்தனை தடவை இந்த கோவிலுக்கு வந்திருக்கு. என்னைக்காவது இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சு  பார்த்திருக்க.. ஒரு துரும்பையும் இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்கம் எடுத்து வைக்காது, அப்படிப்பட்ட பொண்ணே இப்படி விழுந்து விழுந்து வேலை பாக்குதுன்னா… படியாத மாட படிய  வைக்கிற அளவுக்கு நல்ல வித்தைக்காரன் தான் மாப்பிள்ளைன்னு சொல்றேன்.. “ என்று கிண்டலுடன் கூறி சிரித்தார் முதல் பெண்மணி. 

ஊர் உலகம் உறவினர்கள் தங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்கின்ற கவலை சிறிதுமின்றி கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்த…   விஷல்யாவை  சற்றுத் தனியே  இழுத்து வந்த பானுஸ்ரீ… “ புது ப்ராஜெக்ட்ல சைன் பண்ணிட்டியா? “  என்றார்.

“இன்னும் இல்ல அத்தை இந்த வீக் எண்ட்ல தான் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க, அப்போதான் மத்த விஷயம் எல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு, அக்ரிமென்டில்ல சைன் பண்ற மாதிரி இருக்கும். “ என்றாள் விஷல்யா.

“உனக்கு இந்த ப்ராஜெக்ட் அவசியம்தானான்னு.. ஒரு தடவைக்கு இன்னொரு தடவை நல்லா யோசிச்சுக்கோ. ஏன்னா இப்போதான் உங்க லைப் நல்லா போயிட்டு இருக்கு,  இதுல எதுக்கு தேவையில்லாத குழப்பம் “ என்று பானுஸ்ரீ துவங்க.. “ என்ன அத்தை நீங்களும் நார்மல் மாமியார் மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிக்கிறீங்களா?” என்று கிண்டலாக வினவியவள் குரலில்.. சிறு குத்தலும் நிறைந்திருந்தது.

“ நான் அந்த மாதிரி ஆள் இல்லன்னு உனக்கே தெரியும்,  என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம பேசாத ஷாலு… ஒருவேளை நீ இந்த ப்ராஜெக்ட் செய்றது தேவ்வுக்கு பிடிக்காம இருந்தா உங்களுக்குள்ள பிரச்சனை வர வாய்ப்பிருக்கு அதுக்காகத்தான் சொல்றேன் “ என்றார் பானு ஸ்ரீ. 

“ சாரி அத்தை கொஞ்சம் அவசரப்பட்டு.. வார்த்தை விட்டுட்டேன்,  பட் நீங்க இதப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை,  அம்மு இப்போ எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கான். என்னோட பிசினஸ் ஐடியாவை கேட்டுட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்ட கூட செஞ்சான் . “  என்றாள்  விஷல்யா. 

“ என் பையன் உன்னை புரிஞ்சுகிட்டு உனக்கு சப்போட்டா இருக்கான்னு கேட்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.   ஆனா உண்மையிலேயே அவனுக்கு இந்த ப்ராஜெக்ட் டீலிங் புடிச்சிருக்கா! இல்ல உனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறானா?“ என்று சந்தேகத்துடன் வினவினார் பானுஸ்ரீ. 

“ ஆக்சுவலி முதல்ல அம்முவுக்கு இது பிடிக்கல தான்,  ஆனா எனக்கு இது எந்த அளவுக்கு முக்கியம்னு புரிஞ்சுகிட்டு, அவன் பிடிவாதத்தை மாத்திகிட்டு  இப்போ ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கான்.  நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, அம்மு இப்போ ரொம்பவே மாறிட்டான். எனக்காக வீட்ல வேலை எல்லாம் செஞ்சு கொடுக்கிறான் தெரியுமா?, ஈவ்னிங் ஆபீஸ்ல இருந்து நான் வர லேட்டாச்சுனா.  காபி போட்டு வைச்சுட்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான். அவன்கிட்ட சேஞ்ச் வரும்னு  எதிர்பார்த்தேன் தான்,  ஆனா அது இந்த அளவுக்கு ஃபாஸ்ட்டா இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல… “ என்று தன் கணவனிடம் உண்டான மாற்றத்தை  வியந்தபடி கூறினாள் விஷல்யா.

“ அப்படியா கேட்கவே சந்தோஷமா இருக்கு,  எப்படியோ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சந்தோஷமா இருந்தா அதுவே போதும் எனக்கு… “ என்று மனநிறைவுடன் கூறினார் பானுஸ்ரீ.

“ அம்மு கூட இருக்கிற வரைக்கும் என் சந்தோஷத்துக்கு குறையே இருக்காது, அதே மாதிரி அம்முவோட  சந்தோஷத்துக்கு எந்த குறையும் நான்  வர விடமாட்டேன். “ என்று உறுதியாக கூறியவள்,  அப்போதும் தன் மாமியாரின் முகம் ஏதோ வருத்தத்தை பிரதிபலிப்பது போல் இருக்க.. “ என்கிட்ட ஏதாவது விஷயத்தை சொல்ல  தயங்குறீங்களா அத்தை. “ என்றாள் விஷல்யா.

“ அது வந்து.. “ என்று பானுஸ்ரீ சொல்லத் தயங்கிட… “ என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் அத்தை,  எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க, நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. “ என்று விஷல்யா உந்துதல் தந்திட… “ அது வந்து  இப்போ நீ ப்ராஜெக்ட் பண்ண போற கம்பெனியோட எம்டி  சரியான ஆள் இல்ல, பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் ஒரு மாதிரியான கேரக்டர்ன்னு கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் தயங்கிட்டு இருந்தேன்.”  என்றார் பானுஸ்ரீ.

“ அப்படியா இதை யாரு உங்க கிட்ட சொன்னது, “ என்று விஷல்யா வினவ… 

தனுஜ் பெயரை சொல்ல நேர்ந்தால் அவன் கூறிய அனைத்து விபரத்தையும் கூறவேண்டிய நிலை வரலாம், அப்படி அனைத்தையும் சொல்ல நேர்ந்தால், அமுதேவ் அவளுக்கு  தெரியாமல்  செய்து வைத்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் கூற வேண்டியதாகிவிடும். அமுதேவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விஷல்யா எப்படிக் எடுத்துக்கொள்வாள் என்று  யோசித்தவர்  தனுஜ் பெயரை கூறுவதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து… “ உன் மாமாவும் முன்னாடி கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ்ல தான் இருந்தார்னு மறந்துட்டியா. “ என்று தனுஜ் பெயரை மறைத்து தன் கணவர் பெயரை கூறி மழுப்பினார் பானுஸ்ரீ.

“ நீங்க சொல்றதும் சரிதான் அந்த எம்டி கொஞ்சம் சரி இல்லாத ஆளுன்னு நானும் கேள்வி பட்டேன், அதுக்காக என்ன பண்ணமுடியும் அத்தை.  நாட்டுல இந்த மாதிரி ஆம்பளைங்க எத்தனையோ பேர் இருக்காங்க,  அவங்களுக்கு பயந்துட்டு நம்ம வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா?. அடுத்தவங்க எப்படியும் இருந்துட்டு போகட்டும் நாம சரியா இருக்கோமா அது தான் முக்கியம். “ என்றாள் விஷல்யா.

“ ஹம்… இந்த விஷயத்தை நீ ரொம்ப பிடிவாதமா இருக்கன்னு புரியுது. எது செய்றதா இருந்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிச்சு செய். என் பையன் உன் மேல ரொம்ப பிரியமா இருக்கான். உனக்காக பல விஷயத்தை விட்டும் கொடுத்திருக்கான், அதை  புரிஞ்சு நடந்துக்கோ. “ என்று பானுஸ்ரீ அறிவுரை  வழங்கிட…

“ இந்த விஷயத்துல மட்டுமல்ல அத்தை,  நான் எல்லா விஷயத்திலும்  பிடிவாதக்காரி தான். உங்க பையன் மேல வைச்சிருக்கிற அன்புல கூட அதே பிடிவாதம் தான் இருக்கு “ என்று விஷல்யா கூறிட…

“ நல்லது இதே பிடிவாதத்தோட எப்பவும் இரு, எதுக்காகவும் யாருக்காகவும் உன்னை  மாத்திக்காத!” என்று பானுஸ்ரீ கூறிக்கொண்டிருக்க… மனைவியை தேடிக்கொண்டு அவள் இருக்குமிடம் வந்து சேர்ந்த அமுதேவ் காதுகளில் அவன் அன்னையின் கடைசி வார்த்தை விழுந்தது.. ஏற்கனவே விஷல்யாவின் முடிவிற்கு தன் அன்னை தான் காரணமாய் இருப்பாரோ என்ற ஐயத்தில் இருந்தவனுக்கு ஐயம் தெளிவுர செய்தது  அவ்வார்தைகள். 

அமுதேவ் வந்ததை கவனித்த… விஷல்யா… அவனை கண்டும் காணாதது போல்  சட்டென்று..  “ அம்மு அவன்  பாட்டிகிட்ட  சந்தோஷமா தான் வளர்ந்திருப்பான்னு நினைக்கிறீங்களா?, அத்தை “ என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி எழுப்பினாள் விஷல்யா.

“ இப்போ நாம பேசிட்டு இருக்க விஷயம் வேற, இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ஷாலு,” என்று குழப்பத்துடன் வினவினார் பானுஸ்ரீ.

தனக்கும் இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்று எண்ணிய அமுதேவ் இருவரின் கண்களிலும் படாமல் சற்று மறைவாக நகர்ந்து கொள்ள… அமுதேவ் நடக்கும் விவாதத்தை கவனிக்கத் தான் மறைந்து  கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்ட விஷல்யா. அவனுக்கு உண்மையை புரிய வைத்துவிடும் வேகத்துடன், 

“ சம்மந்தம் இருக்கு, அம்மு இப்படி வளருறதுக்கு காரணமே நீங்கதான், சொல்லுங்க அத்தை அம்மு அவன் பாட்டி வீட்ல சந்தோஷமா தான் இருந்தான்னு உங்களுக்கு தெரியுமா?“ என்று விடாமல் விசாரித்தாள்  விஷல்யா.

“ கண்டிப்பா சந்தோஷமா தான் இருந்திருப்பான்,    அவன் பாட்டிக்கும் அவனை ரொம்ப பிடிக்கும், அதனாலதான் அவனை  அங்கேயே வச்சுக்கணும்னு ஆசைப்பட்டாங்க, அம்முவுக்கும் அங்க வளருறது தான் பிடிச்சிருந்தது.“ என்று கவலை படிந்த குரலில் கூறினார் பானுஸ்ரீ.

“  சந்தோஷமா  இருக்கேன்னு  அவனே சொன்னானா. அவன் சொல்லாத விஷயத்தை நீங்க எப்படி கன்பார்ம் பண்ணுனீங்க.  ஒரு தடவையாவது அம்முவை போய் பார்க்க  முயற்சி பண்ணுனீங்களா?, அங்கு போய் பார்த்திருந்தா    அவன்  என்ன மாதிரி சூழ்நிலையில வளர்ந்தான்னு தெரிஞ்சிருக்கும். அவன் கையில உங்க அத்தை சூடு வச்சிருக்காங்க தெரியுமா?” என்றாள் விஷல்யா.

“ என்ன?, சூடு வச்சாங்களா!, ஒரு தடவை இல்ல,  எத்தனையோ தடவை எங்க பையன பாக்க முயற்சி  பண்ணுனோம், ஆனா  அத்தை அதை தடுத்துட்டாங்க, அது மட்டும் இல்ல  அம்மா அப்பாவை பார்க்க பிடிக்கல அவங்க வீட்டுக்கு நான் போகமாட்டேன்,  பாட்டி வீட்டில்தான் வளருவேன்னு பிடிவாதம் பிடிச்சு, அவனுக்கு அவனே சூடு வச்சுக்கிட்டதா  எங்க கிட்ட சொன்னாங்க.” என்று ஆதங்கத்துடன் கூறியவர்,  “   நான்தான் தப்பு பண்ணிட்டேன். உண்மையிலேயே அவனே  பிடிவாதம் பிடிச்சிருந்தாலும், அவனை அவன் பாட்டிகிட்ட வளர விட்டிருக்க கூடாது.  என் பையன பார்த்துக்க எனக்கு தெரியும்னு  என் கூட கூட்டிட்டு வந்து இருக்கணும். “ என்று மகன் அன்று அனுபவித்த வேதனையை எண்ணி புலம்பினார் பானுஸ்ரீ.

“ உங்க கூடயே கூட்டிட்டு போய் என்ன பண்ணியிருப்பீங்க, அவன் வீட்ல தனியா இருந்திருக்கணும் நீங்க பிசினஸ் பிசினஸ்ன்ன்னு வெளிய அலைஞ்சுட்டு இருந்திருப்பீங்க. அன்னைக்கு உங்களுக்கு உங்க பையன விட உங்க பிசினஸ்தான முக்கியமா இருந்தது. “ என்று குற்றம்சாட்டும் குரலில் வினவினாள் விஷல்யா.

“ அந்த நேரத்துல நாங்க இருந்த சூழ்நிலை அப்படி, வாசுவுக்கு வேலை இல்ல,  நாங்க நடத்திட்டு இருந்த கம்பெனி வருமானத்தை வைச்சு தான்,  குடும்பத்தை நடத்திட்டு இருந்தோம். அதனால தான் நாங்க இரண்டு மடங்கு உழைக்க வேண்டியதாயிருந்தது.   எவ்வளவு சம்பாதிச்சு…  சாதித்தாலும் பெத்த பிள்ளை கூட வாழாத வாழ்க்கை,  அன்புக்கு ஏங்குன  நாட்கள்   நரகமா தான் இருக்கும். அப்படிப்பட்ட நரகத்துல தான் வாழ்ந்துட்டு இருக்கேன். என் பையன் என்னை விட்டு போனதுக்கு அப்புறம்  எந்த பெரிய ப்ராஜெக்ட்டும் எடுக்கிறது இல்ல. அன்றாட தேவைக்கு, எங்களுக்கும் ஒர்க்கர்ஸ்க்கும் தேவையான அளவுக்கு மட்டும் தான் பிஸ்னஸ் பண்றது. “ என்றார் பானுஸ்ரீ.

“ அப்போ உங்களுக்கு உங்க பையன் தான் முக்கியம்… அவனுக்காக உங்க பிசினஸ்ஸை கூட இழுத்து மூடிடுவீங்க… “ என்றாள் விஷல்யா.

இல்லை என்பதுபோல் மறுத்து தலையசைத்தவர், “ எனக்கு என் பையன் முக்கியம் தான், அதுக்காக என்னால சுயநலமா இருக்க முடியாது ஷாலு. நம்ம கம்பெனில வேலை பார்க்கிற பாதி பொண்ணுங்க புருஷன் இல்லாதவங்க,  இன்னும் மீதி பேர் புருஷன் கூட இருந்தும்  இல்லாத மாதிரிதான். எனக்கு விருப்பம் இல்லனாலும் இந்த கம்பெனி அவர்களுக்காக நான் நடத்துவேன். “ என்றார் பானுஸ்ரீ. 

அன்னையின் அன்பையும் பிடிவாதத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவன் மனதில்… சிறுவயதில் ஒருநாள் அவன் பாட்டி வீட்டு வாசலில்  கண்ணீரை துடைத்துக் கொண்டே  வெளியேறிய அன்னை முகம் வந்து போனது.. பாட்டியிடம்  விசாரித்த போது… ‘ உன் அப்பாவை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டு போன மாதிரி உன்னையும் எங்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய் அனாதை ஆசிரமத்துல சேர்த்து விட  வந்திருக்கா உன் அம்மா. பாட்டின்னு நான் ஒருத்தி இருக்க போய் நீ இங்க வந்து ஒண்டிக்கிட்ட… இல்லனா உன்னை  அனாதை ஆசிரமத்துல  விட்டிருப்பா அந்த ராட்சசி.   பிள்ளையை வளர்க்க தெரியலனா எதுக்கு பெத்துக்கணும், என் பேரனை   பாத்துக்க எனக்கு தெரியும்,  மத்த பிள்ளைகள அழிச்ச மாதிரி இவனையும்  செய்ய விடமாட்டேன்னு பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். உனக்கு வேற யாரும் வேணாம் ராஜா நான் இருக்கேன். இப்படிப்பட்ட தங்கமான பிள்ளை போய் வேணாம்னு சொல்ல எப்படித்தான் மனசு வருதோ…’ என்று அன்னை தந்தையை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் அழுதுகொண்டிருந்த பேரனுக்கு ஆறுதல் கூறினார் அமுதேவ் பாட்டி.

  அன்று பாட்டியின் வார்த்தையை உண்மை என நம்பிய  அமுதேவ் ஒட்டுமொத்தமாக அவன் அன்னையை  வெறுக்கத் துவங்கி இருந்தான். 

விஷல்யா  அடிக்கடி கூறுவது போல்.. பாட்டி  பொய் சொல்லியிருக்க கூடுமோ என்று யோசிக்க துவங்கிய அமுதேவ்.. ‘ பாட்டி சொன்ன சில விஷயம் பொய்யா இருந்தாலும். அந்த அபாசன் விஷயம் உண்மைதான.  ச்சே என்ன திடீர்னு இப்படி யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்.  பாட்டி எதுக்கு பொய் சொல்லணும். இவங்கதான் இவங்களை நல்லவங்களா காட்டிக்க பொய் சொல்லிட்டு இருக்காங்க. ‘ என்று தன் அன்னை புறம் சாயத் துவங்கிய மனதை பழைய நிலைக்கே இழுத்து வைத்து, மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தவன்,

“ஷாலு உன்னை உன் அம்மா கூப்பிடுறாங்க”  என்று மனைவியை  அனுப்பி வைத்துவிட்டு அவள் விலகிச் சென்றதும் அன்னை புறம் திரும்பி.. 

“ உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்  நில்லுங்க.. “ என்று அங்கிருந்து நகர்ந்தவரை தடுத்து நிறுத்தினான் அமுதேவ்.

வலிய வந்து தன்னிடம் பேச வேண்டும் என்று அழைக்கும் மகனின் மாற்றத்தை எண்ணி மனதிற்குள் மகிழத் துவங்கியவர், அடுத்து அவன் கூறிய வார்த்தையில் மொத்தமாய் உடைந்து விழுந்தார்.. “நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு  செஞ்ச ஒரே  நல்லதுனா.. அது ஷாலுவை என்கூட சேர்த்து  வைச்சது தான்.  சேர்த்து வச்ச நீங்களே பிரிச்சு விட்டு வேடிக்கை பார்க்காதீங்க.  எதுக்காக இப்போ இப்படி நல்லவங்க வேஷம் போட்டு ஷாலு மனச கலைக்க பார்க்கிறீங்க, நமக்குள்ள இருந்த உறவு என்னைக்கோ முடிஞ்சு போச்சு,  இல்லாத உறவை புதுப்பிக்க வீண் முயற்சி செய்யாம..  என் ஷாலுவ விட்டு விலகி இருங்க, அதுதான் எங்க வாழ்க்கைக்கு நல்லது.  “ என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்றான் அமுதேவ்.

மகனின் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த அன்னைக்கு அது பெரும் அடியாய் இருந்தது…. தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை துடைக்க மனமின்றி ஒரு ஓரமாய் பானுஸ்ரீ அமர்ந்துவிட மனைவி இருக்கும் நிலை பார்த்து அவ்விடம் வந்து சேர்ந்த வாசுதேவ் .. “ என்ன வழக்கம் போல உன் பையன் ஏதாவது பேசி கஷ்டப்படுத்திட்டானா.. இவனை” என்று கோபத்துடன் மகனை தேடி வாசுதேவ் செல்ல..

“ வேண்டாம் வாசு, எனக்காக  பேசி உங்களுக்குள்ள இருக்கிற உறவை கெடுத்திக்காதீங்க. என்னைக்காவது என் பையன் என்னை  புரிஞ்சிக்குவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதே நம்பிக்கையோட இப்படியே வாழ்ந்துட்டுப் போயிடுறேன்.” என்று கணவனை தடுத்து நிறுத்தினார் பானுஸ்ரீ.

தாங்கள் பேசியதை மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு தன் அன்னை மீது இருந்த வெறுப்பு மாறி இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை கொண்ட விஷல்யா… தனிமையில் அன்னையுடன் பேசி விட்டுத் திரும்பிய கணவனை புன்முறுவலுடன் வரவேற்றாள். 

அன்னையிடம் கடுமையான முகத்தை காட்டி விட்டு மனைவி இருக்குமிடம் வந்த அமுதேவ்… தன்னை இன்முகத்துடன் வரவேற்கும்  மனைவியிடம் புன்னகைத்துவிட்டு கோவில்  வழிபாட்டில் கலந்து கொள்ளத்

துவங்கினான் அமுதேவ்.

விட்டு விலகி இருப்பதால் 

எனக்கு நீ வேண்டாம் என்று 

அர்த்தம் இல்லை…

பிரிந்து இருப்பதால் 

உன் மீது 

வெறுப்பும் என்றும் 

பொருள் இல்லை…

என் அன்பை 

ஒவ்வொரு நொடியும் 

உனக்கு நிரூபித்து 

காட்டவேண்டிய

கடினமான சூழலை 

தவிர்க்கத்தான் இந்த பிரிவு..

Advertisement