Advertisement

23… உறுதுணையான உறவே…

ஒருவரை

நேசிக்கத் துவங்கும் போதே

அவரின் விருப்பங்களையும்

நேசிக்க துவங்கிடுங்கள்…

அப்போதுதான் அந்த அன்பு

உண்மையானதாகவும்…

நீண்ட காலம்

தொடரக்  கூடியதாகவும் இருக்கும்..

கண்ணன் வீட்டிலிருந்து திரும்பும்போது  தனுஜை வாகனத்தை இயக்க சொல்லிவிட்டு பக்கத்து இருக்கையில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்த அமுதேவ்,  கண்ணன் விஷல்யாவிற்கு  பரிசளிக்க வழங்கிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் புரட்டி பார்த்தபடி வர… “ என்னடா அந்த புக்கையை வெறிச்சு பாத்துட்டு வர… “ என்றான் தனுஜ்.

“ இதை  எப்படி ஷாலு கிட்ட கொடுக்கிறதுன்னு யோசிச்சுட்டு வரேன்… “ என்றான் அமுதேவ்.

“ என்னடா இது வம்பா போச்சு கையால தான் கொடுப்பாங்க!,  இதுக்கா இவ்வளவு யோசிக்கிற?” என்று தனுஜ் நக்கல் செய்து சிரிக்க… “ கையாள கொடுக்கிறது பிரச்சனை இல்ல, இதை கொடுத்ததுக்கு அப்புறம் அவ கிட்ட இருந்து அடுத்தடுத்து வருமே கேள்வி அதுக்கு பதில் சொல்றது தான் பிரச்சனை” என்றான் அமுதேவ்.

“ டேய் நண்பா நீயா டா இது!. “ என்று வியப்பைக் காட்டியவன்… “ ஆனா உன்னை இப்படி பார்க்கவும் நல்லா தான்டா இருக்கு.. “ என்று சிரித்தான்  தனுஜ்.

“ சிரிக்காதடா…  இந்த புக்கை நான் போய் கொடுத்தா,  இது எப்படி வந்ததுன்னு  ஆரம்பிச்சு எதுக்காக அங்க போனேன்,  என்ன பேசினேன் எதை பத்தி டிஸ்கஸ்  பண்ணுணோம்னு டீடைல் சொல்ல வேண்டியது வரும். ஏற்கனவே எதையாவது பேசி   மூளையை குழப்பிட்டு இருக்கா, இதுல நானே குழம்பிப் போய் தான் இருக்கேன்னு தெரிஞ்சா இன்னும் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குவா.. “ என்றான் அமுதேவ்.

“ அதுசரி…  இப்போதைக்கு குழந்தை வேணாம்னு சொல்லிட்டு இருக்கிறவ கிட்ட போய்.. இப்படி ஒரு புக்கை நீட்டினா… உன் கதி கந்தல் தான். சரி இப்போ என்னதான் செய்யப் போற?, இந்த புக்கை எப்படி தான் ஷாலுகிட்ட கிட்ட குடுக்க போற?” என்றான் தனுஜ்.

“ அதுதான் புரியல டா… உன்கிட்ட ஏதாவது ஐடியா  இருந்தா சொல்லேன்! “  என்று அவனிடமே அமுதேவ் யோசனை கேட்க… “ இதை நீ போய் கொடுத்தா தானே பிரச்சனை கண்ணன் சாரே கிப்ட் பண்ணுற மாதிரி கொரியர் பண்ணிட்டா என்ன?” என்று நண்பனின் பிரச்சனைக்கு வழி சொன்னான் தனுஜ்.

“ ஹேய் கிரேட்,  இது பெஸ்ட்  ஐடியா இதனால  எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது,  எனக்கு பிரச்சனையும்  வராது “ என் நண்பனின் யோசனையை  ஏற்றான் அமுதேவ்.

தனுஜ் அறிவித்த திட்டத்தின் படி…  கண்ணன் மற்றும் கமலி தம்பதியினர் அனுப்பி வைத்தது போல் புத்தகம் விஷல்யா கைக்கு கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வீடு நோக்கி  சென்றான் அமுதேவ்.

அமுதேவ்  வரவிற்காகவே காத்திருந்தது போல… வரவேற்பில் விஷல்யா  அமர்ந்திருக்க… எதுவும் நடவாததுபோல் அவள் அருகில் வந்து அமர்ந்தவன்… “ எனக்காக தான் காத்துட்டு இருக்கியா?, “ என்று ஆவலும் அக்கறையுமாய் வினவிட… “ இல்ல உன்  தாத்தாவுக்காக காத்துட்டு இருக்கேன்” என்று குத்தலாக  பதில் தந்தாள் விஷல்யா.

“ ஷப்பா… ரொம்ப கோபமா இருக்க போல… “  என்று அமுதேவ் வினவ… “  இன்னைக்கு தான் ஊருக்கே திரும்பி வந்திருக்கோம்,  அதுக்குள்ள என்னை மட்டும் தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு சுத்த கிளம்பிட்ட.. “ என்று தனது கோபத்தின் காரணம் கூறினாள் விஷல்யா.

“ போகும் போது உன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன், சாரி டா..” என்று அமுதேவ் சமாதானம்  செய்ய முயல…  “பார்டிக்கு போறேன்னு சொல்லிட்டுத் தான் போன.. ஆனா ஏன் விட்டுட்டு போன, என்னையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்ல, நீ மட்டும் என்னைய விட்டுட்டு பார்ட்டில வித விதமா கொட்டிட்டு வந்திருப்ப… எனக்கு ரொம்ப பசிக்குது.” என்று செல்லம் கொஞ்சி சிணுங்கினாள் விஷல்யா.

“ அது எங்க காலேஜ் பிரிண்ட்ஸ் பார்டி, உன்னை எப்படி கூட்டிட்டு போக முடியும் ஷாலு. ஆமா ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க?, வைரம் அம்மா எதுவும் சமைக்கலையா?” என்றான் அமுதேவ்.

“ மதியம் சமைச்சதே  நிறைய மீதம் இருந்தது, நம்ம இரண்டு பேருக்கு மட்டும் அளவா வைச்சுட்டு  எக்ஸ்ட்ரா இருந்ததை   அவங்களையே கொண்டு போக சொல்லிட்டேன்,   நைட்  வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டேன். “  என்று விஷல்யா சொல்லிக் கொண்டிருக்க இடையில் நுழைந்த அமுதேவ், “ அப்புறம் என்ன?, சாப்பாடு தான் இருக்குல சாப்பிட வேண்டியது தானே! எடுத்து வைக்க ஆள் வேணும்னு  என்னக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தியா?” என்று கிண்டலாய்  வினவினான் அமுதேவ்.

“ ஏற்கனவே உன் மேல கொலை காண்டுல இருக்கேன்,  எதையாவது பேசி இன்னும் கடுப்பை ஏத்தாத..” என்று விஷல்யா சிடுசிடுக்க… “ சும்மா கிண்டல் பண்ணினேன் இதை எதுக்கு இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற”  என்றான் அமுதேவ்.

“ பின்ன என்ன நானே   பசியில இருக்கேன், இந்த நேரத்துல காமெடிங்கிற பேருல கடுப்பேத்திட்டு,”  என்று   விஷல்யா பேசிட… மீண்டும் இடையில் நுழைந்த அமுதேவ்… “ சும்மா பசிக்குது பசிக்குதுன்னு ஏலம் போடாம, இருக்கிறதை சாப்பிட வேண்டியது தானே..” என்றான் அமுதேவ்.

“ முதல்ல என்னை பேச விடு, என்ன சொல்ல வரேன்னு தெரியாம முந்திரிக்கொட்டை மாதிரி நடுவுல நடுவுல பேசிக்கிட்டு, நான் பேசி முடிக்கிற வரைக்கும் வாய மூடிகிட்டு அமைதியா இருக்கணும்,  நடுவுல பேசின, இருக்கிற பசியில புருஷன்னு கூட பாக்காம உன்னை கொத்து புரோட்டா போட்டு சாப்பிட்டுடுவேன்  ..” என்று கோபமாய் கத்தினாள் விஷல்யா.

“ சாப்பிடறது ஓகே கொத்து புரோட்டா போட தெரியுமா…” என்று அமுதேவ் அதையும் கிண்டல் செய்ய… விஷல்யா கோபமாய் முறைக்க.. பயந்தவன் போல் உதட்டில் விரல் வைத்து அமுதேவ்  அமைதியாகிட,   அவன்  இருந்த நிலை அவளினுள் இருந்த கோபத்தை கரைந்தது,  அவளையும் மீறி உண்டான புன்னகையுடன்.. “ டிராவல் பண்ணுனது ரொம்ப டயர்டா இருந்ததா.. நீ  கிளம்பினதும் வைரம் அம்மாவை அனுப்பி வைச்சுட்டு தூங்க ஆரம்பிச்சவ, இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எந்திரிச்சேன், பசியா இருந்தது கிட்சென்ல போய் பார்த்த, சாப்பாட்டு கெட்டுப் போக ஆரம்பிச்சுடுச்சு போல, பேட் ஸ்மல் வருது.. “ என்றாள் விஷல்யா.

“ஓ… அதுக்கு எதுக்கு இப்படி  கன்னத்துல கைவைச்சுட்டு உட்கார்ந்திட்ட.. புட் ஆப்ல  ஆர்டர் போட்டிருக்கலாம்ல.  சரி இரு நானே போடுறேன்,  “ என்று அமுதேவ் அவன் அலைபேசியை எடுக்க…  அதை வெடுக்கென்று பிடிங்கி தன் அருகில் வைத்துக் கொண்டவள்… “ இதை  எனக்கு செய்யத் தெரியாதா… வீக் எண்ட் அதனால டெலிவரி லேட் ஆகும் எனக்கு ரொம்ப பசிக்குது… “ என்றாள் விஷல்யா. 

“ எனக்கும் பசியா தான் இருக்கு,  என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு… “ என்றான் அமுதேவ்.

“ உனக்கு பசிக்குதா ஏன் பார்ட்டில சாப்பிடலையா?” என்ற விஷல்யாவின் கேள்விக்கு… இல்லை என்பதுபோல் மறுத்து தலையை அசைத்தவன்.. “ பார்ட்டில  இருந்து சீக்கிரமே கிளம்பிட்டேன் அதனால சாப்பிடல.” என்றான் அமுதேவ்.

“ என்னது சீக்கிரமே கிளம்பிட்டியா, அப்புறம் எதுக்கு வீட்டுக்கு வர இவ்வளவு லேட்டாச்சு?, எங்க போய் சுத்திட்டு வர்ற?” என்று சற்று கோபமான குரலில்  விஷல்யா வினவிட… 

“ அது அது வந்து… “ என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் தடுமாறிய அமுதேவ், பேச்சை மாற்றும் முயற்சியாக… “ இப்ப அதுவா முக்கியம்,  பசிக்குது என்ன பண்ணலாம்னு சொல்லு” என்றான் அமுதேவ்.

“ ஹோட்டலுக்கு போனாலும்,  புட் ரெடியாகி நம்ம டேபிளுக்கு வர்றதுக்குள்ள பசி இருந்த இடம் தெரியாம  போயிடும்.  சோ வீட்டிலேயே ஏதாவது ஃப்ரிப்பர் பண்ணுவோம். “ என்றாள்  விஷல்யா.

“ வீட்ல சமைச்சா மட்டும் லேட் ஆகாதா, இங்கேயும் அதே நேரம் தான ஆகும்.. “ என்று அமுதேவ் வினவ… “ மதியம் சாப்பிட்டதே ஹெவியா,  இருக்கு சோ சிம்பிளா ஏதாவது செய்வோம்.. “ என்று யோசனை கூறினாள் விஷல்யா.

“ சிம்பிளா வா… உனக்கு ஸ்வீட் கோதுமை தோசை ஓகே வா.. “ என்று அமுதேவ் வினவ.

“ ஓகே,  பட் எனக்கு அது எப்படி செய்யணும்னு தெரியாதே!” என்று உதட்டை பிதுக்கி கூறினாள் விஷல்யா.

“ அது மட்டும் தான் தெரியாதா?” என்று கிண்டல் செய்தவன் தன்  மனைவியின் முகம் போன போக்கில்..  வாயடைத்துக் கொண்டான்.

“ நூடுல்ஸ் செய்யலாம்,  நான் அதை நல்லாவே செய்வேன் ” என்று   விஷல்யா கூறிட… “ பாக்கெட்டை பிரிச்சு  உள்ள இருக்கிற மசாலா சேர்த்து தண்ணில  கொதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை பாரு,  இதுல அதை  நல்லா செய்வேன்னு பெருமை வேற.. “ என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டான் அமுதேவ். 

“ ஹலோ என்ன ஓவரா கிண்டல் பண்ற?,  உனக்கு  சமைக்க தெரியுமா?, தெரியாதுல.. அப்போ அமைதியா இரு நான் நூடுல்ஸ் ரெடி பண்ணுறேன்.. “ என்று   விஷல்யா சமையலறை நோக்கி விரைந்து செல்ல அவளுக்கு முன் சென்று வழி மறைத்து நின்றவன். 

“ இன்னைக்கு நான் சமைக்கிறேன், உனக்கு ஸ்வீட் கோதுமை தோசை ஓகே தானே, உள்ள இருந்து கோதுமை  மாவு  மட்டும் எடு.. “ என்று கட்டளை பிறப்பித்தவனை விசித்திர ஜந்துவைப்போல் பிரமிப்புடன் பார்த்தபடி அங்கிருந்து விலகி சென்றவள், கோதுமை மாவினை கொட்டி வைத்த பாத்திரத்தை கொண்டு வந்து  கணவனிடம் நீட்டினாள்.

பாத்திரத்தை திறந்து மாவினை கையிலெடுத்து தொட்டு பார்த்தவன், “ கோதுமை எதுன்னே  தெரியல… இதுல நீ என்னை கிண்டல் பண்ண வந்துட்ட.. “ என்று அவள் தவறுதலாய் எடுத்து வந்த அரிசி மாவு பாத்திரத்தை மீண்டும் அவள் கையில் கொடுத்து விட்டு அவனே சென்று அவனுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வந்தான். 

அகலமான பாத்திரத்தில் கோதுமை கொஞ்சம் நாட்டுச்சக்கரை கொஞ்சம் எடுத்து,  அதற்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு  பதத்திற்கு கலக்கி கொண்டவன், முட்டை ஒன்றை எடுத்து அதில் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து விட்டு வெள்ளைக்கருவை  தோசை மாவுடன் கலந்து தோசைக்கல்லில் ஊற்றினான்.

கணவன் செய்த அனைத்தையும் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சந்தேகம் எழ…” கோதுமை தோசைல முட்டையா… ?” என்றாள்.

“ ஆக்சுவலி நிறைய பேர் முட்டை சேர்க்க மாட்டாங்க, பட் தோசை மாவு கல்லுல ஒட்டாம.. மொறுமொறுன்னு வர… முட்டை சேர்த்தா ஈசியா இருக்கும். மஞ்சள் கரு சேர்த்தா முட்டையோட வாடை  தெரியும்,  அதனால அத அவாய்ட் பண்ணிட்டேன்” என்றவன்.. சுடச் சுட வார்த்த தோசையை தட்டில் அடுக்கி மனைவிக்கு நீட்டினான்.

சூடான தோசையையும் கணவனின் அன்பையும் ரசித்தபடி… உண்ணத் துவங்கியவள், “நீ இப்படி எல்லாம் நடந்துக்கிற ஆள் இல்லையே இன்னைக்கு உன்கிட்ட ஏதோ ஒரு சேன்ஜ் தெரியுது. என்ன விஷயம் ?” என்று சந்தேகத்துடன் வினவினாள்  விஷல்யா.

“ ஒரு சேஞ்சும் இல்ல, நான் அப்படியே தான் இருக்கேன். “ என்றவன் அடுத்த தோசையை  கொடுக்க… அதை மறுக்காது வாங்கிக்கொண்டு, “ரியலி நைஸ், அம்மு. இதை யாரு உனக்கு சொல்லித் தந்தது,  உன் பாட்டியா?” என்றாள்  விஷல்யா.

அமுதேவ்  முகத்தில் அமைதி படர்ந்து விட…  சில நொடி தனக்குள் எதையோ யோசித்தவன்.. “  ஆம்பள பையன் அடுப்படிக்குள்ளேயே வரக்கூடாதுன்னு பாட்டி என்னை இந்தப் பக்கமே விட மாட்டாங்க. சாப்பாட்டைக் கூட வெளில நின்னு தான்  வாங்கிட்டு போகணும்  “ என்றான் அமுதேவ்.

“ வெளியில தான் நிக்கனுமா!, அப்போ தண்ணி குடிக்க கூட நீ அடுப்படிக்குள்ள வந்ததில்லையா?,” என்று விஷல்யா அதிர்ச்சியுடன் வினவிட… இல்லை என்பது போல அமுதேவ் தலையசைக்க… “ அப்போ இதை யாரு சொல்லிக் கொடுத்தது?” என்றாள் விஷல்யா.

“ அம்மா.. “ என்று  ஒற்றை   வரியில் பேச்சை நிறுத்தியவன்,  அவனுக்கும் சேர்த்து உணவு  தயாரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

‘என்ன மூஞ்சி மூஞ்சூரு  மாதிரி சுருங்கிடுச்சு, சம்திங் ராங் இதுல என்னமோ இருக்கு.. விடாத ஷாலு அதை என்னன்னு தெரிஞ்சுக்கணும்’ என்று  விஷல்யா உள்மனம் அவளை நச்சரிக்க.. கணவன் இருக்கும் இடம் சென்று அமர்ந்தாள்.

“  செம்ம டேஸ்ட் அம்மு. நீ உன் அம்மாகிட்ட வளரும் போது,   அடிக்கடி உனக்கு இதை  செஞ்சு குடுப்பாங்களா?” என்று தனது உள்ளத்தின் குறுகுறுப்பை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே வினவினாள் விஷல்யா.

இல்லை என்பதுபோல் மறுத்து தலையசைத்தான்… “ எப்படி செய்யணும்னு ஒரு தடவை சொல்லிக்  கொடுத்தாங்க,  எனக்கு வேணுங்கிறப்ப நானே செஞ்சுக்குவேன், கூட  மட்டும் துணைக்கு நிப்பாங்க. “ என்றான் அமுதேவ்.

“ அத்தை சரியாதான் செஞ்சிருக்காங்க, எப்பவும் குழந்தைகளுக்கு உறுதுணையா இருக்கணுமே தவிர அவங்கள ஒன்னுமே செய்யத் தெரியாத உதவாக்கரையா வளர்க்க  கூடாது. நானும் நம்ம பசங்கள இப்படித்தான் வளர்ப்பேன். “ என்றாள்  விஷல்யா.

அதுவரை குழந்தை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவள்,  முதல் முறையாக குழந்தை வளர்ப்பு பற்றி பேசிட..  அதில் ஆர்வம் கொண்ட அமுதேவ், “ அப்படியா வேற எப்படி எல்லாம் வளர்ப்ப… நம்மக் குழந்தைகள“ என்று அந்தப்  பேச்சைத் தூண்டினான். 

“ ஸ்ட்ரீட்டான மம்மியா இருக்க மாட்டேன் பட் தப்பு செஞ்சா கண்டிப்பா பனிஷ்மென்ட் இருக்கும்.  ஒரு அளவுக்கு வளர்ந்ததும் அவங்களுக்கு  வேணுங்கிறத அவங்களையே செஞ்சுக்கிற மாதிரி பாத்துக்குவேன்,  அப்போதான் அவங்க யாரையும் சார்ந்து இருக்கமாட்டாங்க… “ என்றவள் தட்டில் இருந்த தோசை காலியானதும்… எழுந்து கொள்ள முயல அவள் பற்றி தடுத்து நிறுத்தியவன்… “ குழந்தைங்கன்னு சொல்லுறியே, அப்போ நமக்கு எத்தனை குழந்தைங்க இருக்கும்… “ என்று  கண்ணடித்து வினவினான் அமுதேவ்.

“ அது… இருக்கும் ஒரு பத்து பதினஞ்சு… “ என்று நக்கலாய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் விஷல்யா.

அவள் சொல்லிச் சென்ற வார்தையிலேயே மனம்  நிறைந்து விட… உணவை உட்கொள்ள மனமில்லாமல்    அமர்ந்திருந்தான் அமுதேவ்.

கை கழுவி விட்டு, மீண்டும் பழைய இடத்திலேயே  அமர்ந்தவள்,  கணவனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைக்  கண்டு… ‘ குழந்தைங்கன்னா  உனக்கு அவ்ளோ இஷ்டமா, அம்மு’  என்று தனக்குள் எண்ணிக் கொண்டு,  அந்த ஆசை பேராசையாய் வளர்ந்து விடாதபடி பேச்சை தவிர்க்கும் விதமாய்..  “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுன்னு சொல்லுவாங்க, உன்னை எட்டு வயசு வரைக்கும் அத்தை ரொம்ப நல்லாவே வளர்த்திருக்காங்க, அந்த குணம் தான் இப்ப வரைக்கும் உன் கூடவே இருக்கு.  அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிற பழக்கம் கூட உனக்கு அத்தைக் கிட்ட இருந்து  தான் வந்திருக்கும். “ என்று மெச்சுதலாய்  கணவன்  தலையில் கைவைத்து செல்லமாய் தட்டிக் கொடுத்தாள்  விஷல்யா.

மனைவியின் முயற்சி புரிந்து விட்டுக் கொடுத்தவன், “ என் அம்மா கூட இருந்த வரைக்கும் நான் ரொம்பவே சந்தோஷமா தான் இருந்தேன். ஆனா அவங்களுக்கு நான் தேவையில்லைன்னு தெரியவும் தான் என்  சந்தோஷம் இருந்த இடமே தெரியாம போச்சு… “ என்றான் அமுதேவ். 

“ என்ன சொல்ற.. ?” என்று   விஷல்யா குழப்பத்துடன் வினவ… “ சொன்னாலும் உனக்கு புரியாது… நீ அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ..  இப்போ நான் நல்ல மூட்ல இருக்கேன், அதைக் கெடுத்துக்க விரும்பல,   நீ ரூமுக்கு போ..  நான் கொஞ்ச நேரம் கார்டன்ல நடந்துட்டு வர்றேன்” என்று அங்கிருந்தது சென்றான் அமுதேவ்.

அடர்ந்து விரிந்த மரங்கள் பல.. பழங்கள் தர தயாராக இருந்த நிலையிலும் இதமாய் வீசிய இயற்கை காற்றுக்கு அசைந்து கொடுத்தது. இங்கு வந்ததிலிருந்து அவனுக்கு மிகவும் பிடித்தமான மாமரத்தின் அருகில் வந்து நின்றவன்,  தனது வலது மணிக்கட்டில் வடுவாய் மாறியிருந்த தீக்காயத்தை   தொட்டுப் பார்த்தான்.

“ நான் வலியில் துடிக்கும் போது கூட உங்களுக்கு என்னைப்  பார்க்கணும்னு தோணலையா அம்மா, நான் அந்த அளவுக்கு உங்களுக்கு வேண்டாதவனா  போயிட்டேனா” என்று அவனை மீறி உணர்ச்சி வேகத்தில் வாய்விட்டு உளறினான் அமுதேவ்.

  கணவன் எதையோ மறைக்கிறான் என்பது புரிந்ததும்,  அது என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் அவனைப் பின்தொடர்ந்து வந்த  விஷல்யா காதுகளில் அவன் வார்த்தை விழுந்திட… “  தனியா எதை பத்தி பேசிட்டு இருக்க” என்று வினவியவள், சட்டென்று அவன் மறைக்க முயன்ற காயத்தின் வடுவை  பார்த்தவள், “ என்ன அம்மு இது… சூடு பட்ட தழும்பு மாதிரி இருக்கு” என்றாள் விஷல்யா.

“ சூடு பட்டது இல்ல சூடு  போட்டது… “ என்றவன் குரலில் வெறுமை விரவி இருந்தது, “ சூடு போட்டாங்களா யாரு?, அத்தையா!” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் விஷல்யா.

இல்லை என்பதுபோல் இடம் வலமாய் தலை அசைத்தவன், தனக்கு நடந்ததை சொல்ல மனமில்லை என்றாலும் சொல்லாமல் இவள் விட மாட்டாள் என்பது புரிந்தது, “  இங்க வந்த ஆரம்பத்துல    அம்மா ஞாபகம் ரொம்பவே இருக்கும், என்னை எப்போ அவங்க கூட கூட்டிட்டு போவாங்கன்னு ஏங்கிக்கிட்டு இருப்பேன். ஒரு நாள் அம்மா  சொல்லிக்கொடுத்த மாதிரி கோதுமை தோசை சாப்பிட ஆசையா இருந்தது. ஆம்பள பசங்க சமையல் கட்டுக்கு  வரக்கூடாதுன்னு பாட்டி என்னை எப்பவும் கிச்சன் உள்ளேயே விடமாட்டாங்க. அதனால அவங்க இல்லாத நேரம் பார்த்து கிச்சனுக்குள்ள போய் அம்மா சொல்லிக் கொடுத்த மாதிரி கோதுமை தோசை ஊத்த ஆரம்பிச்சேன். அந்த நேரம் என் பாட்டி வந்துட்டாங்க, உன்னை அடுப்படிக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல,  ஆம்பள பையனா.. கம்பீரமாய் இருக்கிறத விட்டுட்டு,  உன் அப்பா மாதிரி பொண்டாட்டிக்கு சமைச்சுப் போடப் போறியான்னு கோபமா கேட்டு, சூடா இருந்த தோசை கரண்டியால கையில சூடு வச்சுட்டாங்க.  நான் வலியில் துடிக்கும் போது,  ஆம்பள பசங்க சமைக்க பொறந்தவங்க இல்ல,  சாதிக்க பிறந்தவங்கன்னு என்னைக்கும் உனக்கு ஞாபகம் இருக்க தான் இந்த சூடு, இந்த வடுவை பாக்குறப்ப எல்லாம் உனக்கு இது தான் ஞாபகம் வரணும்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் எனக்கு இங்க இருக்க பிடிக்கல.  நான் என் அம்மாகிட்ட போகணும்னு அடம் புடிச்சேன். பாட்டியும் சரி உன்னை உன் அம்மா கிட்டே கூட்டிட்டு போறேன், அதுக்கு முன்னாடி நான் போய் அவங்க கிட்ட பேசிட்டு வரேன்னு கிளம்பி போனாங்க. சூடுபட்ட இடத்துல மருந்து வச்சுட்டு அடுத்த தடவை கவனமா இருக்க சொல்லுங்கன்னு  சொல்லி அனுப்பி இருக்காங்க. “ என்றான் அமுதேவ்.

“ அத்தை  அப்படி சொல்லிருக்க  வாய்ப்பே இல்லை… “  என்று  விஷல்யா அமுதேவ் அன்னைக்கு சாதமாக பேசிட… “ அவங்க  நிச்சயமா அப்படி தான் சொல்லிருப்பாங்க… ஏன்னா நான் ஃபர்ஸ்ட் டைம் சைக்கிள் ஓட்டி கீழே  விழுந்துட்டு வந்தப்பவும்   அவங்க அதையே தான் சொன்னாங்க. அவங்களுக்கு என்னைக்குமே என் மேல பாசம் இருந்ததே இல்ல. “ என்றான் அமுதேவ். 

“குழந்தைங்க கீழே விழும்போது நாம ஓடிப்போய் தாங்கி பிடிக்க ஆரம்பிச்சா,  அவங்களுக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய  ஆரம்பிக்கும். சோ  சைக்கலாஜிக்கல் படி பேரன்ட்ஸ் குழந்தைகளை அப்படித்தான் ஹான்டில் பண்ணனும். ஆனா இது அப்படி இல்ல, நீயா    விழுந்துட்டு வரதும்,  வேணும்னே சூடு வைக்கிறதும் ஒன்னா. உன் பாட்டி உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க.. “ என்று விடாமல் வாதம் செய்தாள் விஷல்யா.

“ அவங்க  எதுக்கு பொய் சொல்லணும், உண்மையிலேயே என் அம்மாவை விட பாட்டிக்கு தான் என் மேல பாசம் அதிகம்.  ஒரு நாள் இதோ இந்த இடத்துல   சைக்கிள் ஓட்டி கீழே விழுந்தப்போ,  என்னை என் பாட்டி எப்படி பார்த்துக்கிட்டாங்க  தெரியுமா?,  ரெண்டு நாள் என்னைய தரையில கூட நடக்க விடல,  அந்த அளவுக்கு பாசமா இருக்கிறவங்க எதுக்கு என்கிட்ட பொய் சொல்லணும். “ என்றான் அமுதேவ்.

“ அளவுக்கதிகமான பாசம், உன்னை இழந்துடுவோமோங்கிற பயம்  கூட பொய் சொல்ல வைக்கலாம்.. அம்மு, ஒருவேளை நீ உன் அம்மா கூட கிளம்பிப் போயிட்டா,  மறுபடியும் அவங்க தனியா தான இங்க  இருக்கணும்.   அதனால உன்னை அவங்க கூடவே  வைச்சுக்கிறதுக்காக பொய் சொல்லி இருக்கலாம்ல” என்றாள் விஷல்யா.

“  இதுக்கு தான் உன்கிட்ட என் அம்மாவை பத்தி பேசுறதே இல்ல.. நான் எப்ப அவங்களைப் பத்தி பேசினாலும் நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசுற.  நாளைக்கே  நம்ம குழந்தையை இப்படி என் அம்மா தூக்கிட்டு போய் தனியா வளர்க்க ஆரம்பிச்சா நீ என்ன செய்வ?,  அவங்க கூடயே இருக்கட்டும்னு விட்டுடுவியா, இல்லை  நம்ம  குழந்தைக்காக  போராடுவியா?” என்றான் அமுதேவ்.

“ நான் கண்டிப்பா நம்ம பிள்ளைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் தான். ஆனா பிள்ளைய பிரிஞ்சு வருத்தத்துல இருக்கிறவங்க கிட்ட இருந்து பேரனையும்  பிரிக்க வேண்டாம்னு யோசிச்சு உன் அம்மா அமைதியா இருந்திருக்கலாம்ல. “  என்றாள் விஷல்யா.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று விஷல்யா  சொன்னதே,  தனக்கு பெரும் நிம்மதியாக இருக்க, “ போதும் ஷாலு,  இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம். நாம நம்ம வாழ்க்கையை கவனிப்போம்.  ஆமா உன் ப்ராஜெக்ட் வொர்க் எந்த லெவல்ல இருக்கு. டிசைன் எதுவும் பிளான் பண்ணி வச்சிருக்கியா.. பில்டிங் கன்ஸ்டிரக்டட் பண்றதுக்கு முன்னாடியே உன்கிட்ட ஒரு ஐடியா கேட்டுட்டு தான ஸ்டார்ட் பண்ணுவாங்க.. “ என்றான் அமுதேவ்.

தன் அன்னையைப் பற்றிய பேச்சு வந்தாலே எப்போதும் அதை  தவிர்க்கவே முயற்சி செய்யும் அமுதேவ் எண்ணம் புரிந்து… “ என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அது அவங்களுக்கு புடிக்குமா இல்லையான்னு தான் டவுட்டா இருக்கு. “ என்றாள் விஷல்யா.

“இஃப் யூ டோன்ட் மைண்ட், உன்  பிளான் என்னென்ன நான் தெரிஞ்சுக்கலாமா.. பிகாஸ் சேம் பீல்டுல இருக்கிறதால,  உன் பிளான் அவங்களுக்கு புடிக்குமா இல்லையா, செட் ஆகுமா ஆகாதான்னு  என்னால ஓரளவுக்கு கெஸ் பண்ண முடியும்” என்று அமுதேவ் ஆர்வத்துடன் வினவ…  விஷல்யா தனது தொழில்முறை திட்டத்தை விவரிக்க துவங்கினாள்.

“ இப்போ அவங்க பிளான் பண்ணியிருக்கிற பில்டிங்  மகாபலிபுரத்துக்கு பக்கத்துல ஒரு ரிசார்ட்.  வீட்டை விட்டு வெளிய வந்து இந்த மாதிரி ரிசார்ட்ல இருக்க ஆசைப்படுறவங்களுக்கு  டிஃபரண்டான அட்மாஸ்பியர்  குடுத்தா நல்லா இருக்கும், அந்த மெமரிஸ் அவங்களுக்கு  சம்திங் ஸ்பெஷலாவும் இருக்கும், அதனால அந்த பில்டிங் என்ட்ரன்ஸ் பெரிய அரண்மனை கோட்டை மாதிரி டிசைன் பண்ணிட்டு, அப்புறம்  உள்ள இன்டீரியர் மகாபலிபுரத்துல இருக்கிற சிற்பங்கள் மாதிரியே  டெக்கரேட் பண்ணனும், டிஃபரண்ட் வெரைட்டி ரூம்ஸ்.. ரெடி பண்ணனும்… அதாவது கிங்… குயின் , பிரின்ஸ்  , பிரின்சஸ் இப்படி அந்த ரூம்ல இருக்கிற டெக்கரேஷன்ல  டிஃபரண்ட் வெரைட்டி காட்டலாம். “ என்று தனது யோசனையை விவரித்து முடித்தாள் விஷல்யா. 

“ உன் பிளான்  யூனிக்கா, ரொம்பவே டிஃபரண்ட்டா இருக்கு, அவங்களுக்கு நிச்சயமா பிடிக்கும். “ என்றான் அமுதேவ். 

“ பார்ரா… பிசினஸே  பண்ண கூடாதுன்னு  ஆர்க்கிவ் பண்ணுற ஆளு, இந்த அளவுக்கு பாராட்டுர..  நான் ஏதாவது கனவு கண்டுட்டு இருக்கேனா… “ என்று விஷல்யா  தன்னைத்தானே கிள்ளிக் பார்த்துக் கொள்ள, அசடு வழிந்தபடி அழகாய் சிரித்தவன்… அவள் கிள்ளிக் கொண்ட இடத்தை கைகளால்  தடவி விட்டு, … “ இனி என்னைக்கும் உன் விருப்பத்துக்கு தடையா இருக்க மாட்டேன் ஷாலு. என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு சப்போட்  பண்ணுவேன். அதேநேரத்துல நீயும் ரொம்ப கவனமா இருக்கணும், ஏன்னா  இந்த பீல்டுல யாரையும் நம்ப முடியாது “ என்றான்  அமுதே

வ். 

“ நிஜமா தான்  சொல்லுறியா?” என்று நம்பிக்கை இன்றி விஷல்யா வினவ…

“ உன் மேல ப்ரோமிஸ்” என்று அவள் தலையில் கைவைத்து தன் முடிவில் உண்டான  மாற்றம் குறித்து உறுத்தியளித்தான் அமுதேவ். 

தேகத்தை  மட்டும் விரும்பும் காதல்…

உணர்வுகளை மதியாது…

மனதை  விரும்பும் காதல்…

உயிர் உள்ளவரை பிரியாது… 

Advertisement