தேனிலவு பயணம் செல்லும்போது கடல்வழி சென்றவர்கள். மீண்டும் நாடு திரும்பும் போது வான் வழியாக தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
புதுமணத் தம்பதியர்கள் வீடு திரும்புவதை அறிந்ததும் அவர்களை வரவேற்க இருவரின் பெற்றோர்களும் ஆவலுடன் காத்திருக்க அவர்களுடன் இணைந்து கொண்டான் தனுஜ்.
தன் நண்பனையும் மனைவியின் பெற்றோரையும் இன்முகத்துடன் வரவேற்றவன் அவர்கள் அருகிலிருந்த தன் பெற்றோரை வேண்டாதவர்களை பார்ப்பதுபோல் வெறுப்புடன் பார்த்திருந்தான் அமுதேவ்.
கணவனின் பார்வையின் பொருள் புரிந்து… “எதுக்கு இப்படி விரைச்சுப் நிக்கிற?, வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூப்பிடுற பழக்கமே இல்லையா..” என்று கிண்டல் போல் வினவியபடி கணவனின் தோளில் மெதுவாய் தட்டிட…” அதான் வந்துட்டாங்கல அப்புறம் எதுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு… “ என்று எரிச்சலுடன் கூறினான் அமுதேவ்.
“ உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்.. எந்த நேரத்துல யார் கூட விளையாடுறதுன்னு இல்ல… “ என்று இம்முறை வலிக்கும் படி இடையில் குத்தினாள் விஷல்யா.
மனைவியின் செயலின் அர்த்தம் புரிந்தது வீடு தேடி வந்தவர்களை வரவேற்க மனமில்லை என்றாலும் போலியான புன்னகையை இதழில் ஏந்திக்கொண்டு.. “ வாங்க..” என்று பெயருக்கு வரவேற்றான் அமுதேவ்.
எப்போதும் பாராமுகம் காட்டும் மகனின் ஒரு வார்த்தையையே தனக்கு போதுமானதாக எண்ணினார் பானுஸ்ரீ.
அந்தமான் தீவில் தாங்கள் ரசித்த இடங்களைப் பற்றி ரசனையுடன் விஷல்யா விவரித்துக் கொண்டிருக்க… “ டேய் நண்பா… என்னோட கல்யாணத்துக்கு நீ ஏதாவது உருப்படியா பண்ணனும்னு ஆசைப்பட்டா.. மேரேஜ் கிப்ட்டா அந்தமான் ஹனிமூன் ட்ரிப் பேக் பிரசன்ட் பண்ணிடு… என் பரம்பரையே உன்னை வாழ்த்தும்.. “என்றான் தனுஜ்.
“ அப்படி ஒன்னும் உன் பரம்பரை என்னை வாழ்த்த வேணாம்.. ஹனிமூன் போகனும்னு ஆசைப்பட்டா அது உன் சொந்த காசுல போடா…. இப்படி மேரேஜ் கிப்ட்ங்கிற பேர்ல அடுத்தவனுக்கு சூனியம் வச்சுட்டு போகாத.” என்று நண்பனின் நக்கல் செய்தான் அமுதேவ்.
“ என்னப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட நண்பா.. உனக்கு கல்யாணம் நடக்கவே நான்தான் காரணம் அதை மறந்துட்டு பேசாத” என்று தான் செய்த உதவியை தனுஜ் சொல்லிக்காட்டிட…
“ செஞ்சு உதவியை சொல்லிக் காட்டுறத விட கேவலமான விஷயம் எதுவும் இல்லை. இப்படி அடிக்கடி அதை சொல்லி காட்டுறதுக்கு பதிலா, அப்படி ஒரு உதவியை நீ எனக்கு செய்யாமலேயே இருந்திருக்கலாம். “ என்று தன் அன்னை மீது இருக்கும் கோபத்தை நண்பனின் மீது காட்டினான் அமுதேவ்.
அமுதேவ் இருக்கும் மனநிலை புரியாமல்.. “ ஏன் பேசமாட்ட மாட்ட.. கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா ஹனிமூன் எல்லாம் சுத்திட்டு வந்துட்டு நீ இதையும் பேசுவ, இதுக்கு மேலயும் பேசுவ” என்றான் தனுஜ்.
“ டேய் கொஞ்ச நேரம் அமைதியா இரு… ஏற்கனவே காண்டுல இருக்கேன்.. இதுக்கு மேல பேசுன, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. “ என்று தனுஜை தன் அருகில் இழுத்து மற்றவர்களுக்கு கேட்காத விதத்தில் மிரட்டல் விடுத்தான் அமுதேவ்.
நண்பர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை என்றாலும் அமுதேவ் முகபாவத்தையும், தனுஜ் அமைதியையும் கவனித்த விஷல்யா.. “ நீங்க ஏன் திடீர்னு அமைதியாகிட்டீங்க தனுஜ். இவன் ஏதாவது மிரட்டினானா?” என்று விசாரித்தாள் விஷல்யா.
“ ச்சே ச்சே அதெல்லாம் இல்ல” என்று தனுஜ் மறுத்துக் கொண்டிருக்க.. “ ஆமா மிரட்டினேன், அதுனால உனக்கு என்ன வந்தது?,” என்று வெடுக்கென்று பதில் தந்தான் அமுதேவ்.
“ உன் வாய் சும்மாவே இருக்காதா அம்மு. யாரையாவது எதையாவது சொல்லி கஷ்டப்படுத்துறதையே வேலையா வைச்சிருக்க?” என்று கணவனை அடக்கிவிட்டு, தனுஜ் புறம் திரும்பிய விஷல்யா..” உங்களுக்கு என்ன அந்தமான் ட்ரிப் போகணும் அவ்வளவுதானே.. நான் அரேஞ்ச் பண்றேன், அதுக்கு முன்னாடி நீங்க உங்க மேரேஜ்க்கு அரேஞ்ச் பண்ணுங்க. “ என்று நண்பர்களுக்கு நடுவில் இருந்த சுணக்கத்தை சமாதானம் செய்ய முயன்றாள்.
“ இந்த அண்ணனைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட தங்கச்சி. திடீர்ன்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா!, நான் என்ன பண்ணுவேன் யாரப் பண்ணுவேன், எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு யார்கிட்ட போவேன். ” என்று திரைப்படச் சாயலில் வசனம் பேசி அதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்தான் தனுஜ்.
தனுஜ் பேசிய வசனத்தைக் கேட்டு சுற்றி இருந்தவர்கள் வாய்விட்டு சிரித்திட..” உன் அப்பா கிட்ட போ.. உனக்காக நல்லப் பொண்ணா பார்த்து தருவாரு.. “ என்று அமுதேவ்வும் நமட்டுச் சிரிப்புடன் நண்பனை கேலி செய்யத் துவங்கினான்.
“ அய்யோ அம்மா… என் அப்பாவா!, அவர் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு பதிலா அப்படி ஒரு சம்பவம் நடக்காமயே இருக்கலாம், நான் கட்ட பிரம்மச்சாரியாவே வாழ்ந்திடலாம்.” என்று பதறித் துடித்தான் தனுஜ்.
“ ஏன் தம்பி.. இப்படிப் பாதறுறீங்க.. அப்பானா பயமா ?” என்று தாமோதரன் கேள்வி எழுப்பி தானும் அங்கிருப்பதைக் காட்டிக் கொண்டார்.
“ அது ஒன்னும் இல்ல மாமா. ஊருல இவனுக்கு ஒரு அத்தைப் பொண்ணு இருக்கா.. அந்தப் பொண்ணைத் தான் இவனுக்கு கட்டி வைக்கணும் இவன் அப்பா ஒரு முடிவோட இருக்காரு. அதுக்கு பயந்துட்டு தான் ஊருப் பக்கமே போகாம இங்கேயே சுத்திட்டு இருக்கான். என்னைக்காவது ஊருக்கு போனான்னு வைங்க கட்டாயக் கல்யாணம் கன்ஃபார்ம்” என்றான் அமுதேவ்.
“ அடடா… இது தான் விஷயமா.. இதுக்காகத் தான் அடிக்கடி என்கிட்ட நீங்களே ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க அப்பான்னு சொல்லுறியா!, நான் கூட இந்த அப்பா மேல இருக்கிற பாசத்துல சொல்லுறன்னு நினைச்சு சந்தோசப் பட்டேன்!, நீ என்னடான்னா உன் அப்பா மேல இருந்த பயத்துல சொல்லிருக்க படவா ராஸ்கல் ” என்று உரிமையுடன் அதட்டினார் வாசுதேவ்.
“ உங்க மேல பாசம் இல்லாம இருக்குமா யூத் டாடி. அதெல்லாம் பாசம் டன் கணக்குல கொட்டி கிடக்கு. அந்த பொண்ணு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க. என் பர்சனாலிட்டிக்கு ஏத்த மாதிரி நல்ல படிச்சு, பெரிய வேலையில இருக்கிற, என் அப்பா அம்மாவை அவ அப்பா அம்மா மாதிரி அன்பா பார்த்துக்கிற.. நல்ல அடக்கமான பொண்ணா பாருங்க… “ என்று மணமாலை விளம்பரத்திற்கு வந்தவன் போல் அட்டவணையிடான் தனுஜ்.
“ அடக்கமான பொண்ணு தான எனக்கு அப்படி ஒரு பொண்ணு தெரியும்.. “ என்று அதுவரை நடந்து கொண்டிருந்த விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பானுஸ்ரீ கூறிட..
“ அம்மான்னா அம்மாதான்.. பாருங்க பையனோட மனச எப்படி டக்குனு கேட்ச் பண்ணிட்டாங்கன்னு. யாருமா அந்த பொண்ணு பாக்க எப்படி இருப்பா?” என்று ஆர்வத்துடன் வினவினான் தனுஜ்.
“ அது யாரு பானு எனக்குத் தெரியாத அடக்கமான பொண்ணு.. “ என்று வாசுதேவ் வினவிட…” நம்ம வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி தான். நான் சொல்லுற பொண்ணோட வீடு இருக்கு. “ என்றார் பானுஸ்ரீ.
“ இரண்டு தெரு தள்ளியா!, அங்க வீடு எங்க இருக்கு சுடுகாடு தான இருக்கு!” என்று குழப்பத்துடன் வினவினார் வாசுதேவ்.
“ என்னது சுடுகாடா!” என்று தனுஜ் அதிர்ச்சி காட்டிட… “ நீதான அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்ட.. நான் சொல்ற பொண்ணு ஒரு வாரத்துக்கு முன்னாடி அடக்கம் பண்ணுன பொண்ணு தான்.. “ என்று பானுஸ்ரீ சிரியாமல் கூறிட.. அறையில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினர்.
“ வெரி பேட் மம்மி இட்ஸ் வெரி பேட், வர வர இந்த யூத் டாடி கூட சேர்ந்து நீங்களும் மொக்க ஜோக் அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இது கொஞ்சம் கூட சரியில்ல “ என்றான் தனுஜ்.
“ ஜாடிக்கேத்த மூடி… எங்களைப் பார்த்து கண்ணு வைக்காத கேடி.. “ என்று வாசுதேவ் வசனம் பேசிட… “ இதெல்லாம் ஒரு பஞ்ச் டயலாக்னு பேசுறீங்களே… உங்களை என்ன செய்றது?, இதையும் அம்மாவுக்கு கத்துக் கொடுத்துடுங்க… பத்து பொருத்தமும் பக்காவா பொருந்திடும்” என்று தன்னை கிண்டல் செய்த வரை பதிலுக்கு கேலி செய்தான் தனுஜ்.
கலகலப்பான சூழ்நிலையை மற்றவர் அனைவரும் ரசித்து உடன் சேர்ந்து நகைத்துக் கொண்டிருக்க… அமுதேவ் மட்டும் அமைதியுடன் தன் அன்னையை பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
குடும்பமாக அமர்ந்து உணவருந்தி விட்டு, பெரியவர்கள் தங்கள் இருப்பிடம் கிளம்பும் நேரம் விஷல்யா தந்தை குலதெய்வ கோவிலுக்கு செல்வது பற்றி பேசத் துவங்கினார்.
“ நீங்கள் ஏற்கனவே இதைப் பத்தி பேசினது தானே மாமா. எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல, இந்த வீக் எண்ட் ஒரு ட்ரிப் பிளான் பண்ணிடலாம்… “ என்றான் அமுதேவ்.
“ இல்ல என்னால முடியாது இந்த வீக் எண்ட் தான் புது ப்ராஜெக்ட்டுக்காக மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்கோம்.. சோ வேற ஏதாவது டேட் பிக்ஸ் பண்ணுங்க” என்றாள் விஷல்யா.
அதுவரை அமைதியாக இருந்த அமுதேவ் முகம் கோபத்தையும் குழப்பத்தையும் ஒருசேர பிரதிபலிக்க… மருமகனின் முக பாவனையை கவனித்த தாமரை “ என்ன ப்ராஜெக்ட் எதைப் பத்தி பேசுற” என்று விளக்கம் கேட்டார்.
“ இதை பத்தி உங்க கிட்ட சொல்லவே இல்லையோ!. எதை எதையோ பத்திப் பேசி கடைசியில இதைச் சொல்ல மறந்துட்டேன் சாரி அம்மா.. சாரி அப்பா. ஒரு பெரிய கம்பெனியோட இன்டீரியர் டிசைன் ப்ராஜெக்ட் என் கம்பெனிக்கு கிடைச்சிருக்கு. சோ இனிமே நான் ஒர்க்ல பிஸியாகிடுவேன். “ என்றாள் விஷல்யா.
வீடு திரும்பியதில் இருந்து மருமகனின் முகமும் செயலும் சரியில்லை என்பதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த தாமரைக்கு அதற்கான காரணம் விளங்கியது.
மகளின் பிடிவாத குணம் அறிந்திருந்தவர். இருவருக்கும் நடுவில் நிகழ்ந்திருக்கும் விவாதத்தையும் ஓரளவுக்கு யூகித்து.. “ நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் முடிஞ்சுருச்சு, இனியாவது ப்ராஜெக்ட் கம்பெனி அது இதுன்னு உளறிட்டு இருக்காம.. மாப்பிள்ளை வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது அவர் வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு அவருக்கு வேணுங்கிறதை பக்குவமா செஞ்சு கொடு.. காலாகாலத்துல ஒரு பிள்ளையைப் பெத்துகிட்டு உன் குடும்பத்தை கவனிச்சுக்கிற வழியை பாரு. இனி இதுதான் உன் வாழ்க்கை. இது தான் உனக்கான கடமையும் கூட…” என்றார் தாமரை.
“ என்ன பேசுற தாமரை…” என்று தாமோதரன் மனைவியை அடக்க முயல.. “ அம்மா…” என்று விஷல்யா கோபமாய் துவங்க… “ என்னப் பேசுறீங்க அண்ணி. நம்ம பொண்ணு கணவை நாமலே கலைக்கலாமா!? வீட்டு வேலை செய்றது மட்டும் பொண்ணுகளோட கடமை இல்ல. பொண்ணுங்க மட்டும் தான் இதை செய்யணும்னு அவசியமும் இல்ல. ஆணுக்கு பெண் சரிசமம்னு வாய் வார்த்தைக்கு சொல்லுறதோட நிறுத்தாம அதை செயல்லையும் காட்டணும்னு நினைக்கிறவ நான். என் மருமக அவளோட கனவை புதைச்சுட்டு வீட்டுக்குள்ள முடங்கிக்கிடக்க நான் விடமாட்டேன். அவ பிஸினஸ்ல எவ்ளோ சாதிக்கணுமோ சாதிக்கட்டும் தடுக்காதீங்க.. தடுக்க நினைக்கிறவங்க அவளுக்கு உறுதுணையா நான் இருக்கேங்கிறத மறந்துடாதீங்க “ என்று தனது சம்பந்திக்கு சொல்வதுபோல் மகனுக்கும் சேர்த்து அறிவுறுத்தினார் பானுஸ்ரீ.
“ அது வந்து… மாப்பிளைக்கு பிடிக்கலானா… “ என்று தாமரை சந்தேகத்துடன் இழுக்க… “ அவ விருப்பத்துல தலையிட நான் விரும்பல அத்தை. பிஸ்னஸ் தான் உங்க பொண்ணோட சாய்ஸ்ஸா இருந்தா அதுக்கு தடையா நான் இருக்க மாட்டேன்.” என்று பதில் தந்தவன், தன் அன்னை புறம் திரும்பி… “ அவளுக்கு பக்கபலமாக சிலர் இருக்கிறதால பயந்துட்டு இதை சொல்லுறேன்னு நினைக்க வேணாம். உண்மையிலேயே என் மனைவியோட உணர்வுகளுக்கு மதிப்பு தந்து தான் இந்த முடிவுக்கு நான் சம்மதிக்கிறேன் “ என்றான் அமுதேவ்.
“ உங்களுக்குள்ள மனஸ்தாபம் வராம இருந்தா அதுவே எனக்கு போதும்…” என்று தாமரை அமைதியாய் விலகிக்கொள்ள… இன்னும் இரு தினங்களில் குலதெய்வ கோவிலுக்கு சொல்லலாம் என்று அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
மகளின் வீடு கடந்ததும்.. “ நம்ம பொண்ணுக்கு பிசினஸ்ல இன்ட்ரஸ்ட் அதிகம்னு உனக்கே தெரியும்ல அப்புறம் எதுக்கு அப்படி பேசின?, நீ அப்படி பேசுனதால வீட்ல அத்தனைபேருக்கும் சங்கடமா போச்சு. “ என்று மனைவியை கடிந்து கொண்டார் தாமோதரன்.
“ நான் பேசினது சங்கடமா இருக்கும்னு யோசிக்கிறீங்களே!, உங்க பொண்ணு நடந்துக்கிற முறையில மாப்பிள்ளை எவ்வளவு சங்கடப்பாடுவார்ன்னு யோசிச்சு பாத்தீங்களா!” என்றார் தாமரை.
“ மாப்பிள்ளை சங்கடப்படுற அளவுக்கு நம்ம பொண்ணு எந்த தப்பும் பண்ணலையே.. பிசினஸ்ல புது ப்ராஜெக்ட் வந்திருக்கு அதை சக்சஸ் ஃபுல்லா செஞ்சு முடிக்க நினைக்கிறா, இதுல மாப்பிள்ளை சங்கடப்பட என்ன இருக்கு?” என்று குழப்பத்துடன் வினவினார் தாமோதரன்.
“ நீங்க தான் உங்க பொண்ணுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்து வச்சிருக்கீங்களே! அவ என்ன பண்ணுனாலும் உங்களுக்கு சரின்னு தான் தோணும். சும்மாவே ஆம்பள மாதிரி சட்டம் பேசிட்டு திரியுறவ.. இதுல ஆம்பளைங்க செய்யற பிசினஸ் வேற.. பிடிவாதம் பிடிச்சு புடிச்சவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவருக்கு புடிச்ச மாதிரி வாழுறத விட்டுட்டு இதெல்லாம் தேவையா அவளுக்கு. பிசினஸ் அது இதுன்னு கண்ட நேரத்துல வெளியே சுத்திட்டு இருந்தா கல்யாண வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். “ என்றார் தாமரை.
“எனக்கு என் பொண்ண பத்தி நல்லா தெரியும். மாப்பிள்ளை கிட்ட சம்மதம் வாங்கிட்டு தான் அவ பிசினஸ் ப்ராஜெக்ட்டுக்கே ஓகே சொல்லி இருப்பா. மாப்பிள்ளையே இத பெருசா எடுத்துக்கல, நீ எதுக்கு இதை இவ்ளோ பெரிய விஷயமா பாக்குற. ஷாலு மாமியார் கூட அவளுக்கு சப்போட்டா தான் இருக்காங்க சோ அவ குடும்ப வாழ்க்கைக்கு எந்த பிரச்சினையும் வராது. நீ கவலை படாத..” என்று மனைவியை சமாதானம் செய்ய முயன்றார் தாமோதரன்.
“ அவங்க சப்போட்டா இருக்கிறது தான் என்னோட கவலையே!, நம்ம மாப்பிள்ளை அவங்க அம்மாவ எந்த அளவுக்கு மதிக்கிறார்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. பெத்த பிள்ளைய கவனிக்கிறதா விட பிசினஸ் தான் முக்கியம்னு இருந்ததால தான் மாப்பிள்ளை அவர் அம்மாவையே வெறுக்க ஆரம்பிச்சாரு. அதேமாதிரி நம்ம பொண்ணையும் வெறுத்துட்டா என்ன பண்றது?” என்று தன் கவலைக்கான காரணத்தை கூறினார் தாமரை.
“ என்ன நீ இப்படி பேசுற… நம்ம பொண்ணுக்கு டேலன்ட் இருக்கு. இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு… திறமையை தனக்குள்ளேயே புதைச்சுக்காம வெளி உலகத்துக்கு காட்டணும்னு ஆசைப்படுறா. மாப்பிள்ளையும் அவர் விருப்பத்துக்கு தடையா இருக்கல.. அப்படியே தடையா இருந்தாலும் அதை சமாளிக்க அவளுக்கு தெரியும். நீ தேவையில்லாம குழம்பி என்னையும் குழப்பாத..” என்று மனைவியின் கவலைக்கும் புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் தாமோதரன்.
விஷல்யாவின் பெற்றோர்கள் கிளம்பிச் சென்றதும்.. தன் அன்னையின் முன் தனித்து இருக்க விரும்பாமல் தனி அறைக்கு சென்றான் அமுதேவ்.
அமுதேவ் கோபமாக செல்வதை கவனித்த தனுஜ் நண்பனை பின்பற்றி சென்றான்.
மகனின் குணம் அறிந்திருந்த பெற்றோர்கள் அவனின் செய்கையை பெரிதுபடுத்தாமல் மருமகளிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு கிளம்பினர்.
அதுவரை நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த தனுஜ். “ உங்க மிஸஸ்க்கு பெரிய கம்பெனியோட ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு, சோ சாரோட ஆங்கிரி மூடுக்கு இதுதான் காரணமா… “ என்றான்.
பதிலேதும் கூறாமல் அமுதேவ் அமைதியாய் அமர்ந்து இருக்க… “ ஷாலு வை பத்தி தெரிஞ்சு, இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு முன்னாடியே யோசிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட… அப்புறம் எதுக்கு உனக்கு இந்த வெட்டி வீராப்பு.. “ என்றான் தனுஜ்.
“ என் கோபம் ஷாலு மேல இல்ல,” என்று அமுதேவ் வெறுமையான குரலில் பதில் தர.. “ அப்புறம்?” என்று குழப்பமாய் வினவினான் தனுஜ்.
“ அவள இந்த மாதிரி செய்யச் சொல்லி ஏத்திவிடுறவங்க மேல தான் கோபத்துல இருக்கேன்” என்று மனதில் இருந்த வெறுப்பை வார்த்தையில் ஒட்டியபடி அருகிலிருந்த சுவரில் ஓங்கி தட்டினான் அமுதேவ்.
“ டேய் என்னடா செய்ற?, எதுக்கு இப்படி உன்னை நீயே காயப்படுத்திக்கிற?.. இங்க இருந்தா கோபத்துல இப்படித்தான் ஏதாவது பண்ணிட்டு இருப்பா.. கிளம்பு என்கூட” என்று கோபத்தில் செய்வது அறியாது நின்றிருந்த அமுதேவ்வை தன்னுடன் அழைத்துத் தான் தனுஜ்.
“ நான் வரல… எனக்கு மனசு சரியில்ல… “ என்று அமுதேவ் மறுக்க… “ சரியில்லாத மனசை சரி பண்ணதான் கூப்பிடுறேன்… வா டா” என்று வம்படியாக இழுத்துச் சென்றான்.
“ என்ன தனுஜ்…. கிளம்பிடீங்களா?, அம்மு நீயும் கிளம்புறியா.. ட்ராவல் பண்ண டயர்ட் போக கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்று வெளியில் செல்லத் தயாரானவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு கொடுத்தாள் விஷல்யா.
இந்த அக்கரைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்பது போல் அலட்சியமாய் அமுதேவ் பார்த்திருக்க… “ டயர்டா இருக்குன்னு தான் சொன்னான். எங்க காலேஜ் பிரண்ட்ஸ் ஒரு கெட் டு கெதர் பிளான் பண்ணியிருக்காங்க.. பழைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க… இவன் இல்லாம இருந்தா நல்லா இருக்காதுனு நான் தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறேன்” என்றான் தனுஜ்.
“ ஓ… ஏன் சார் அதை சொல்ல மாட்டாங்களா!” என்று அமைதியாய் இருந்த அமுதேவ்வை விஷல்யா வம்பிலுக்க.. “ அதான் அவன் சொல்லிட்டான்ல, நான் வேற தனியா சொல்லனுமா?,” என்று முகம் திருப்பி நின்றான் அமுதேவ்.
“ இன்னும் கோபம் குறையல போல…” என்று விஷல்யா விசாரிக்க… “ நான் வெளிய கார் கிட்ட வெயிட் பண்றேன். “ என்று வீட்டை விட்டு வெளியேறினான் தனுஜ்.
“ அத்தை நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு தான் இப்போ கோபமா இருக்கியா?“ என்று கணவனின் கோபத்திற்கான காரணத்தை கணித்துக் கூறினாள் விஷல்யா.
“ தெரியுதுல அப்புறம் எதுக்கு கேக்குற?, “ என்று கடுமையுடன் பேசினான் அமுதேவ்.
“ நான் தெரியாம தான் கேக்குறேன் அவங்க உன் அம்மா தான!, உன் வீட்டுக்கு வர அவர்களுக்கு உரிமை இல்லையா?, ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு வந்தவங்கள வாய் வார்த்தைக்கு கூட வாங்கன்னு சொல்லாம முறைச்சுட்டு நிக்கிற.. “ என்றாள் விஷல்யா.
“ அம்மாவா! யாருக்கு யார் அம்மா, , இது என் பாட்டி வீடு.. இந்த வீட்டுக்குள்ள வர்ற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. என் பாட்டி உயிரோட இருந்தவரைக்கும் இவங்களையும் அப்பாவையும் எத்தனை தடவை வீட்டுக்கு வரச் சொல்லி கெஞ்சிருப்பாங்க தெரியுமா?. உயிரோட இருக்கிற வரைக்கும் அந்த வீட்டுக்குள்ள நுழைய மாட்டேன்னு சவால் விட்டுட்டு, இப்ப எந்த முகத்தை வெச்சுட்டு இங்க வந்து நிக்கிறாங்க… ஓ பாட்டி இறந்துட்டாங்கல அதனால அந்த சவாலும் முடிச்சுடிச்சுன்னு நினைச்சுட்டாங்க போல.” என்று ஆவேசமாக பேசினான் அமுதேவ்.
“ இந்தக் கதையையும் உன் பாட்டி தான் சொன்னாங்களா?” என்று ஏளனமாய் இதழ் சுளித்து வினவினாள் விஷல்யா.
“ என்னக் கதையா… வயசான காலத்துல பிள்ளையைப் பார்க்க முடியலன்னு என் பாட்டி எத்தன நாள் என்கிட்ட அழுது புலம்பி இருக்காங்க தெரியுமா?, அவங்க கண்ணீர் உனக்கு கதையா தெரியுதா..?. சரி என் பாட்டியை விடு, அவங்க மேல வெறுப்பு இருந்தது அதனால அவங்களைப் பார்க்க வரல.. நான் என்னப் பண்ணுனேன் என்னை எதுக்கு ஒதுக்கி வச்சாங்க. நான் அவங்கள தேடும் போதும் அவங்க பாசத்துக்காக ஏங்கும் போதும் வராதவங்க இப்போ மட்டும் எதுக்கு வர்றாங்க. இன்னைக்கு உன் அப்பா அம்மா இருந்ததால தான் அமைதியா இருந்தேன். இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கட்டும். இனிமே அவங்க என் வீட்டுக்குள்ள வரக்கூடாது. நீ அலோ பண்ணவும் கூடாது” என்று கோபம் குறையாமல் பேசினான் அமுதேவ்.
“ உன் அம்மாவும் அப்பாவும் உன்னை தேடி வரலன்னு உன்கிட்ட சொன்ன அதே பாட்டி தான் வீடு தேடி வந்தவங்களை வீட்டுக்குள்ளேயே நுழைய விடாம துரத்தி அடிச்சிருக்காங்க. இது உன் அம்மா சொன்ன கதை. என்னை பொருத்தவரைக்கும் கேட்டு தெரிஞ்சிக்கிற எல்லா விஷயமும் கதைதான். ஒரே கதையை உன் அம்மா வேற விதமா சொல்றாங்க உன் பாட்டி வேற விதமா சொல்றாங்க. ரெண்டு பேரும் சொன்ன கதையில எது உண்மைன்னு கண்டுபிடிக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் பொறுப்பை சரியா செஞ்சு உண்மை என்னன்னு கண்டுபிடிச்சத்துக்கு அப்புறம் உன் அம்மா மேல பழி போடு.. இந்த வீட்டுக்குள்ள நுழையக்கூடாதுன்னு சொல்ல நான் ஏத்துக்கிறேன்” என்றாள் விஷல்யா.
“ பாம்பு விஷம்னும்… நெருப்பு சுடும்னும் அனுபவிச்சு தெரிஞ்சுகிட்டவங்க எச்சரிக்கை கொடுக்கும்போது ஏத்துக்காம, எங்க அதை நிரூபிச்சு காட்டுனு முட்டாள்தனமா வாதம் பண்றவங்களுக்கு பட்டால் தான் புரியும். நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் இந்த உலகம் நீ நினைக்கிற மாதிரி நல்லது இல்ல. பட்டு தான் தெரிஞ்சுக்குவேன்னா தெரிஞ்சுக்கோ. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. “ என்று வெடுக்கென்று பதில் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி சென்றான் அமுதேவ்.
‘ என்ன ஆச்சு இவனுக்கு, நேத்து வரைக்கும் அத்தையை பத்தி யோசிக்கிறேன்னு சொல்லிட்டு இன்னிக்கு வந்து வேற மாதிரி பேசுறான். கோபம் அதிகமானா மனுஷங்க முட்டாள் ஆயிடுவாங்க போல அது இந்த அம்மு விஷயத்துல சரியா இருக்கு. பாட்டியை பிடிக்குங்கிறதுக்காக அவங்க சொல்றது மட்டும்தான் உண்மைன்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான். கடவுளே இவனுக்கு உண்மை என்னன்னு புரிய வச்சு நல்ல புத்தி குடுங்க..’ என்று தனது அப்பாவி கணவனுக்காக கடவுளிடம் மனு போட்டு விட்டு தனது அன்றாட வேலையை கவனிக்க துவங்கினாள் விஷல்யா.