16….

தேன் நிலவுப் பயணம்..

நிஜத்தில் கனவுகளின்
மாயங்களைத் தேடியும்..
கனவுகளில் நிஜத்தின்
நிழல்களை தேடியும்..
அலைந்திடும்
மனிதர்கள் பலருக்கு..
நிஜங்களின் கோலங்கள்                                                                                                                    பிடிப்பதில்லை…
கனவுகளின் மாயங்கள்                                                                                                                                     புரிவதில்லை..

கருத்துகளில் வேறுபாடு இருந்தாலும் கொண்ட காதலில் மாறுதல் நேர்ந்திடக்  கூடாது  எனும்   எண்ணத்தில் உறுதியாக இருந்த அமுதேவ்,  தன் காதல் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடான வாக்கு வாதத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் அலுவலகப் பணியில் முழுமூச்சுடன் கவனத்தை செலுத்தத் துவங்கினான்.

நீ நீயாகவே இரு என்று வாய் வார்த்தைக்கு கூறிவிட்டு..     தன்   கருத்தை பிடிவாதமாக மனைவி  மீது   திணித்திட முயலும்  அமுதேவ் செயலைக் குறித்து குழம்பித் தவித்தவள்,  அலுவலகப் பணியில் கவனம் செலுத்துவதை விடுத்து,  தனிமையில் சிந்திக்கத் துவங்கினாள்  விஷல்யா.

‘ எல்லா உண்மையும்  தெரிஞ்சதுக்கு பிறகு  ஒண்ணுமே சொல்லாம நல்லவன் மாதிரி கல்யாணம் பண்ணிட்டு, இப்போ வந்து இப்படி மாத்தி மாத்திப் பேசினா என்ன அர்த்தம்?.    கோபமா  பேசி மனசை காயப்படுத்திடக் கூடாதுனு நானும் பொறுமையா போனா!, ரொம்பத்  தான்   சோதிச்சுப் பார்க்கிறான்!  என்ன நினைச்சு இப்படிப் பேசுறான்.  ‘ என்று கணவனின்  எண்ணத்தை ஏற்கவும் முடியாமல் முழுதாய் எதிர்க்கவும் முடியாமல் தவித்தாள் விஷல்யா.

            ‘ ரொம்பக் குழப்பமா இருக்கே!, யார்கிட்ட பேசினா இதுக்கு ஒரு தெளிவு கிடைக்கும், அம்மா கிட்ட பேசுவோமா?, வேணாம் வேணாம் அவங்க… அம்முவுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பா   அவர்கிட்ட நடந்ததை சொன்னா இதுக்குத் தான் முன்னாடியே யோசிச்சு முடிவெடுன்னு சொன்னேன்னு சொல்லுவாரோ.. வேற யார் சரியா வருவா… அத்தை அவங்க தான் இதுக்கு சரியான ஆள்..’  என்று   தன் தவிப்பை யாரிடம் பகிர்ந்து கொள்வது  என்று  யோசனை செய்துக் கொண்டிருந்த   நேரம்  அவளது அலைபேசி மெதுவாய் சிணுங்கி   சிந்தனையை கலைத்தது.

அழைப்பது யார் என்று  தொடுத் திரையை  கவனித்தவள், தன்னிடம் தேங்கி நிற்கும் குழப்பத்திற்கு அவரிடம் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்  அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ நானே  உங்களைக் கூப்பிட்டு பேசலாமான்னு  யோசிச்சுட்டு  இருந்தேன்,  சரியான நேரத்துக்கு நீங்களே  போன் பண்ணிடீங்க அத்தை.” என்று குழப்பம் பொதிந்த குரலில் பேசினாள் விஷல்யா.

“ என்னமா!, ஏதாவது பிரச்சனையா?” என்று பானுஸ்ரீ  அக்கறையாக விசாரிக்க… “  பிரச்சனைன்னு சொல்ல முடியாது, கொஞ்சம்  குழப்பமா இருந்தது, அதான்” என்றாள் விஷல்யா.

“ கல்யாணம் முடிஞ்சு முழுசா இரண்டு நாள் கூட முடியல, இப்போ தான்  மாமியார் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சிருக்க, அதுக்குள்ள என்னக் குழப்பம்?” என்றார் பானுஸ்ரீ.

“ஒரு சின்னக் கரெக்ஷன், மாமியார் வீடு இல்ல என் மாமியாரோட மாமியார் வீடு” என்று பானுஸ்ரீ வார்த்தையில் இருந்த பிழையைத்  திருத்தினாள் விஷல்யா.

“ நீ சொல்லுறதும் சரி தான்… எனக்கும் உங்க இரண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு ஆசை தான், ஆனா அதுக்கு உன் புருஷன் சம்மதிக்க மாட்டானே!” என்று உள்ளத்தின் குமுறலைக் கூறினார் பானுஸ்ரீ.

“ நீங்கக்  கவலையேப் படாதீங்க அத்தை, கையக் காலக் கட்டியாவது உங்க பையனை  உங்ககிட்ட இழுத்துட்டு வந்துடுறேன்”என்று  குழப்பம் மறந்த புன்னகையுடன் விஷல்யா.

“  நீ செஞ்சாலும் ஆச்சரியப் படுறத்துக்கு இல்ல மருமகளே!,   ஆமா.. ஏதோ குழப்பத்துல  இருக்கேன்னு சொன்னயே! அது  என்ன?”  என்று  பானுஸ்ரீ காரணம் வினவ.. காலையில்  கணவன் மனைவிக்குள் நடுவில் நடந்த வாக்குவாதத்தை விவரித்து முடித்தாள்  விஷல்யா.

மருமகளின் பிரச்சனை என்னவென்று கேட்டறிந்து  கொண்டவர்.. ”   இது இப்படித்தான்  நடக்கும்னு தெரிஞ்சது தானே.. இதுல குழம்புறதுக்கு என்ன இருக்கு?  ” என்றார் பானுஸ்ரீ.

” நீ நீயா இருன்னு சொன்னவன் இப்போ என் பொண்டாட்டிய இருந்தா மட்டும் போதும்னு சொல்லுறான். அவன் விருப்பத்துக்கு என்னை  மாத்த  முயற்சிப் பண்ணுவான்னு  தெரியும்,  ஆனா அதை இவ்வளவு சீக்கிரமா..  அதுவும் இவ்வளவு  வெளிப்படையா சொல்லுவான்னு  நான்    கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..  “ என்றாள் விஷல்யா.

“ நான் எதிர்பார்த்தேன்.. “ என்றவர் மேலும்  தன் எதிர்பார்ப்பின் காரணத்தையும் அடுக்கத் துவங்கினார், “ நீ சொன்னப் பொய், அமுதேவ்  மேல  உனக்கு இருக்கிற காதலை அவனுக்கு புரிய வைச்சிருக்கும்,  அதனால தான்   நீ சொன்ன பொய்யை பெருசு படுத்தாம கல்யாணம் பண்ணிருப்பான். காதலுக்காகப் பொய் சொல்லத் துணிஞ்ச நீ அதே காதலுக்காக உன் கொள்கையை விட்டுக் கொடுத்துடுவன்னு நினைக்கிறான்.   “ என்றார் பானுஸ்ரீ.

“நான் அம்முவை ரொம்பவே காதலிக்கிறேன், அதுக்காக என் தன்மானத்தை விட்டுக் கொடுத்துட்டு அடிமையா வாழ முடியாது அத்தை. “ என்றாள் விஷல்யா.

“யாரும் யாருக்கும் அடிமையா வாழ வேண்டிய அவசியம் இல்ல ஷாலு. அமுதேவ்  மேல உனக்கு  இருக்கிற காதலை யூஸ் பண்ணி உன்னை பணிய வைக்க முயற்சி பண்ணுறான். நீயும் அதே ட்ரிக்கை ஃபாலோப் பண்ணி அவன் எண்ணம்  தப்புன்னு புரிய வைச்சிடு” என்று யோசனை வழங்கினார் பானுஸ்ரீ.

“ முடியுமா? ” என்று விஷல்யா ஒற்றை வரியில்  கேட்க… “    வாழ்கைக்கு        உண்மையான காதல் முக்கியமா!,  இல்ல அவன் பாட்டி சொல்லிக் கொடுத்துட்டு போன கொள்கை முக்கியமான்னு யோசிக்க வை.    நீ தான் முக்கியம்னு எண்ணம் வந்துட்டா மத்த  எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உன்கூட சந்தோசமா வாழ ஆரம்பிச்சிடுவான்” என்றார் பானுஸ்ரீ.

“ நான் யோசிக்க வைக்க முயற்சி பண்ணினாலும் உங்க பையன் காதுகொடுத்துக்    கேட்கணுமே  அத்தை.   அவன் அந்த மாதிரி பத்தாம்பசலித் தனமா பேசும் போது.. என்னடா இது இவன் இப்படி இருக்கானேன்னு  நினைச்சு  எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச பொறுமையும்  பறந்து…   கோபம் வந்துடுது. அதுக்கப்புறம் எப்படி என்னால பொறுமையா   எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியும்?” என்று தனது  பிரச்சனையை விளக்கினாள் விஷல்யா.

“ கோபம் வரது நியாயம் தான், ஆனா உன் கோபத்துல இருக்கிற நியாயம் அவனுக்கு   புரியணுமே!” என்று பானுஸ்ரீ கூறிக் கொண்டிருக்க, “ பொறுமையா சொன்னா கூட அவனுக்கு எதுவும் புரியப் போறது இல்ல,  அவன் பாட்டியோட போதனை அந்த அளவுக்கு அவன் புத்தியை பாதிச்சிருக்கு ” என்று அவர் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொள்ளாமல் இடையில்  நுழைந்தாள் விஷல்யா.

“ புத்தி தான பாதிச்சிருக்கு மனசு நல்லாத் தானே  இருக்கு!, நீ.. பொறுமையா எடுத்துச் சொல்லி,    புத்தி சொல்லுறதை விட்டுட்டு அவன் மனசு சொல்லுறதை கேட்க வை” என்றார் பானுஸ்ரீ.

“ சொல்றது ஈசி தான்… கோபப்படாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு   அந்த இடத்தில இருந்து பார்த்தா தான் தெரியும்.. “ என்றாள் விஷல்யா.

“ கோபம் இயலாமையோட வெளிப்பாடுனு நீ கேள்விப்பட்டதில்லையா ஷாலு.   தோத்துடுவோமோன்னு  பயம் வரும் போது.. அந்த பயத்தை மறைக்க யூஸ் பண்ற ஆயுதம் தான் கோபம்.  ஒரு விஷயத்துக்கு  கோபப்பட ஆரம்பிச்சுட்டோம்னா  அந்த இடத்துல நம்ம தோல்வியை ஒத்துக் ஆரம்பிச்சுட்டோம்னு அர்த்தம்.  இப்போ சொல்லு நீ உன்னோட தோல்வியை ஒத்துக்கிட்டயா?,  “ என்றார் பானுஸ்ரீ.

“ ஐ காட் யுவர் பாயிண்ட், பட் நான் பொறுமையா பதில் சொல்றதையே என்னோட பலவீனமா நினைச்சுட்டு.. அதிகமா பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சா நான் என்ன செய்யட்டும்  அத்தை.. ” என்று தன் மாமியாரின் வார்த்தையை ஆமோதித்தாலும்.. அதிலுள்ள சிக்கலையும் வினவினாள் விஷல்யா.

“ இன்னைக்கு என்ன செஞ்சயோ  அதையே செய். உன்னோட கோபத்தைப் வெளிப்படையா காட்டிக்காம பாரதியார் பாட்டு மூலமா எதிர்ப்பு  தெரிவிச்ச பாரு.. இதே  நிதானத்தோட  எப்பவும் இரு,  பிரச்சனையையும் ஹாண்டில் பண்ணு. இதை ஏன் சொல்லுறேன்னா கோபமா பேசும் போது நீ யூஸ் பண்ற கடுமையான  வார்த்தை அவன்   மனசை பாதிச்சதுன்னா,  அந்த இடத்துல உன் கோபம்  தான் பெரிய  பிரச்சனையா இருக்குமே  தவிர, உன் கோபத்துல  இருக்கிற  நியாயம்   புரியாது.  உன் விருப்பப்படி வாழ முடியாதுன்னு கோபமா  சொல்லுறதை விட,  உன்னால ஏன் அப்படி வாழ  முடியாதுன்னு காரணத்தை பொறுமையா எடுத்துச் சொன்னா  ஒருவேளை உன் தரப்பு நியாயம்  புரிய வாய்ப்பிருக்கு. இப்போ சொல்லு இனி நீ என்ன செய்யப் போற?” என்றார் பானுஸ்ரீ.

“ உங்க பையனுக்கு தோல்வி பயத்தை காட்டப் போறேன்.  இனி  அம்முவை  கோபப்படுத்திப் பார்க்க போறேன்..” என்று சிரித்தாள் விஷல்யா.

“ கோபப்படுத்தி பாக்குறது இருக்கட்டும், அவன்  கோபத்துல  பேசும்போது வார்த்தை முன்னப்பின்ன இருந்தா நீ அதை பெரிசா எடுத்துக்கக் கூடாது. கோபத்துல வெளிப்படுற வார்த்தை  உன்னை காயப்படுத்துற நோக்கத்துல சொல்லப்பட்டதா  மட்டும் தான் இருக்கும்னு புரிஞ்சுக்கோ. முடிஞ்ச அளவுக்கு நீயும் கோபப்படாம அவனையும் கோபப்படுத்தாம இருக்க முயற்சிப் பண்ணு, அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது “ என்று தன்னால் இயன்றவரை மருமகளுக்கு அறிவுரை வழங்கி அழைப்பைத் துண்டித்தார் பானுஸ்ரீ.

கடுமையான வார்த்தைகள் மூலம்  தன் காதலை இழந்து விடக் கூடாது,   எனும் முடிவில்   தெளிவாக  இருந்த விஷல்யா.  அன்று நடந்த  வாதத்தை அப்படியே மறந்து, அலுவலகப் பணியில் கவனம் செலுத்தத் துவங்கினாள்.

விஷல்யாவிற்கு இன்ப  அதிர்ச்சி தரும் வகையில்  தேன்நிலவு பயண ஏற்பாடு  குறித்து எந்தத் தகவலும்  தெரிவிக்காமலேயே பயணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை ரகசியமாக கவனித்துக்  கொண்டிருந்தான் அமுதேவ்.

இருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்திக்  கொண்டிருக்க… தேனிலவு பயணம் செல்ல வேண்டிய நாளும் வந்தது.

சென்னை எழும்பூரிலிருந்து பத்து நிமிட தூரத்தில் அமைந்துள்ள    துறைமுகத்தை நோக்கி கார் நகர்ந்து  கொண்டிருக்க.. “   என்கிட்ட எதுவுமே சொல்லாம சர்ப்ரைஸ்னு பிளான் பண்ணும் போதே எனக்கு தெரியும் இந்த மாதிரி தான் ஏதாவது செய்வன்னு, உண்மைய சொல்லு இப்போ என்னை  எங்க கூட்டிட்டு போகப்போற.. ” என்றாள் விஷல்யா.

” அதான் சர்ப்ரைஸ்னு  சொன்னேனே.. மிரட்டி கேட்டதும் உண்மையை உளறிட்டா  அதுக்கு பேர் சர்ப்ரைஸ் இல்ல பேபி,” என்று கேலியாய் சிரிக்க..  ” என்ன பெரிய சர்ப்ரைஸ் ஹனிமூன் டிரிப் ஷிப்ல பிளான் பண்ணி இருப்ப, இது தான உன்னோட சர்ப்ரைஸ்” என்று அமுதேவ்  திட்டம் என்னவென்று ஓரளவு கணித்து கூறினாள் விஷல்யா.

” என்னடி இப்படி பட்டுன்னு  சொல்லிட்ட.. இதுக்காக நான் எத்தனை நாள் பிளான் பண்ணுனேன்னு தெரியுமா?” என்று  ஏமாற்றத்துடன் கூறினான் அமுதேவ்.

” யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு பக்காவா ப்ளான் பண்றதுக்கு பேருதான் சர்ப்ரைஸ் மக்கு..   உன் சர்ப்ரைஸ் பிளான் ஃப்ளாப்பாகி ரொம்ப நேரமாச்சு மக்கு ” என்று விஷல்யா சிரிக்க.. ” பஸ் ஸ்டாண்ட் போனா பஸ்ல   ஏறுவாங்க, ஏர்போர்ட் போனா பிளைட் ஏறுவாங்க, அதே மாதிரி கப்பல் இருக்கிற துறைமுகத்துக்கு வந்தா கப்பல்ல தான போவாங்க . இதுல பெருசா  யூகிக்க   என்ன இருக்கு மக்கு.  ஷிப்ல  போகப் போறோம்னு மட்டும்தான  கெஸ் பண்ண முடிஞ்சது,  எங்க போகப் போறோம், எத்தனை நாள் போகப் போறோம்  இப்படி  வேற எந்த ஐடியாவும் இல்லேல..  அப்போ என் சர்ப்ரைஸ் இன்னும் ஃபிளாப் ஆகல.. புரிஞ்சதா மக்கு  ” என்று  அருகில் இருந்தவள் தலையில் நறுக்கென்று கொட்டினான் அமுதேவ்.

கொட்டுப் பட்ட இடத்தை மெதுவாய் தடவிக் கொண்டவள்.. “ கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு வாய்தா   நீளமாகிடுச்சுன்னு   நினைச்சேன், கையும் நீளுதா?.. கார் ஓட்டிட்டு இருக்கன்னு பாக்குறேன், இல்லைன்னா ஒன்னுக்கு ரெண்டா திருப்பிக் கொடுத்து இருப்பேன்.. “ என்று எரிச்சல் பட்டாள் விஷல்யா.

“  நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு.. அதை  மொத்தமா கொடு..” என்று விஷல்யா புறம் திரும்பி காதலுடன் கண்ணடித்து பாடினான்  அமுதேவ்.

“ ஹனிமூனுக்கு கிளம்பினதுல இருந்து நீ சரியில்ல சரியே இல்ல”  என்று  கணவனின் குறும்பை எண்ணி மெதுவாய் புன்னகைத்துக் கொண்டாள் விஷல்யா.

“ சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்க டி.. இப்படியே எப்பவும் சிரிச்சுக்கிட்டே இரு.. நான் உன்னை ரசிச்சுகிட்டே இருக்கேன்.. “ என்றவன், காற்றில் கலைந்து முகம் மறைத்து விழுந்த கூந்தலை விலக்கி விடுவது போல..   நெற்றி வருடி  இதமாய் கன்னம்  தடவி…

“உன் இதழில்
மிளர்ந்து மறையும்
வெட்கப்  புன்னகையை ரசிக்க…
எத்தனை முறை
வேண்டுமாயினும்
உரைத்திடுவேன்..
நீ ஒருத்தி மட்டுமே
உலகில் அழகி என்று..”

என்றான் அமுதேவ்.

“ உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கு வெட்கப்படத் தெரியாது.. “ என்று எங்கோ பார்த்து  விஷல்யா கூறிட… “ அதை ஏன் எங்கயோ பாத்து சொல்ற?, எங்க உனக்கு வெட்கப்பட தெரியாதுன்னு என் கண்ணைப் பாத்து  சொல்லு பாப்போம்.. “ என்று சவால் விடுத்தான் அமுதேவ்.

இது என்ன பெரிய விஷயம் என்பது போல அசட்டையாக அமுதேவ்  சவாலை ஏற்று…  அவன் புறம் திரும்பிப் பார்த்தாள்.

காதல் தாபத்துடன் விழிகளால் தன்னை விழுங்கிக் கொண்டிருந்தவன் கண்களைக்  கண்டதும்… பெண்ணவள் மனமோ.. வெட்கத்தை அரிதாரமாய் பூசிக்கொள்ள..  சொல்லவந்த வார்த்தையை மறந்து அமைதிக்  கொண்டாள்.

“ இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?,  சொல்ல வந்ததை சொல்லு!” என்று கிண்டலுடன்  புருவம் உயர்த்தி  வினவினான் அமுதேவ்.

“ என்ன சொல்லணும்?“  என்று வார்த்தை தந்தியடிக்க வினவினாள் விஷல்யா.

அவள் தடுமாற்றமே அவளது  மன நிலையைத் தெளிவாய் காட்டிட… வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தன்னவள்  தன் காதலுக்கு கட்டுப்பட துவங்கிவிட்டாள் என்பதை உணர்ந்த  அமுதேவ்… மகிழ்ச்சியுடன்,  “ உண்மைய சொல்லணும்!” என்றான்.

“ எந்த உண்மையைப் பத்தி கேட்குற?,”  என்று பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொள்ள விஷல்யா முயற்சி செய்ய.. அவளது  முயற்சியை முறியடித்து கன்னம்  பற்றித் தன் கண்ணைப் பார்க்கச்  செய்தவன்… “ நீ ரொம்ப மாறிட்ட.. ஷாலு. ஃபர்ஸ்ட் டைம் நான்   கோவில்ல  பார்த்த ஷாலுவுக்கும் உனக்கும் நிறைய டிஃபரண்ட் இருக்கு. அந்த ஷாலுவுக்கு நீ சொன்ன மாதிரி தான், வெட்கப்படத் தெரியாது, எதுவாயிருந்தாலும் ஃபேஸ் டூ ஃபேஸ்  தான். முகத்துல அடிச்ச மாதிரி சட்டுன்னு   பேசிடுவா. நீ அப்படி இல்ல.  எனக்காக என்னைக் கஷ்டப் படுத்தக் கூடாதுங்கிறதுக்காக உன்னை நீயே மாத்திக்கிட்ட..  எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா?, உன்னை  வேற எங்கேயும் போக விடாம என் கைக்குள்ளே வச்சு அழகு பார்க்கணும்னு ஆசையா இருக்கு “ என்றான் அமுதேவ்.

அமுதேவ் எண்ணம் என்னவென்று புரியவும் அதுவரை இருந்த காதல் மயக்கம்  மறைய  ‘ ஓ…. இது தான் விஷயமா! அதானே பார்த்தேன்.. என்னடா திடீர்ன்னு  ஆளே மாறி,  ரொம்ப அன்பா    பேசுறியேன்னு யோசிச்சேன்.  நான்  மாறிட்டேன்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா உன் விருப்பத்துக்கு என்னை  மாத்தப் பாக்குறியா?, நீ சரிப்பட்டு வர மாட்ட…  அத்தை சொன்ன  ட்ரிக்கை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்… ‘ என்று தனக்குள் விஷல்யா எண்ணிக்கொண்டிருக்க.. 

            “ என்னடி அமைதியாகிட்ட… நான் சொன்னது நடந்தா எப்படி இருக்கும்னு கற்பனையில  யோசிச்சு பார்த்ததும்  வெட்கத்துல வார்த்தை வரலையா?” என்று மீண்டும் கண்ணடித்து சீண்டினான் அமுதேவ்.

‘ வார்த்தை தானே… இதோ வருது பாரு’ என்று உள்ளுக்குள்   கறுவிக் கொண்டவள், “ எனக்கும் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உன் கைக்குள்ள அடங்கிக் கிடக்கணும்னு ஆசையா தான் இருக்கு அம்மு. ஆனா மூச்சு  முட்டுமே…“ என்று சிரியாமல் சீண்டினாள் விஷல்யா.

“ திகட்டத் திகட்ட காதலிக்கும் போது   அதெல்லாம் தெரியாது கண்ணம்மா…   அதையும் மீறி உனக்கு மூச்சு முட்டுச்சுனா… என்னோட மூச்சுக் காத்துல  பாதியை உனக்கு தந்துடுவேன்“ என்றவன்,

பேச்சுக்கள் பயனில்லா வேலையில்..

என் இறுகிய அணைப்பில்…

மூச்சுக் காற்றுக்கு நீ  தடுமாறினால்…

இதழோடு இதழ் பொருத்தி..

என்னில் சரிபாதியான உனக்கு..

என் மூச்சுக் காற்றில் பாதியை பரிசளித்து…

உன்னைக் காத்திடுவேன்..

என்றான் அமுதேவ்.

‘ சரியாப் போச்சு.. மூச்சு முட்டுமேன்னு  கேட்டா  முத்தம்  கொடுக்குறேன்னு  சொல்லுறான். இவன் கிறுக்கா இல்லை என்னை கிறுக்கா மாத்தப் பார்க்கிறானா? ’ என்று  தனக்குள் எண்ணிக் கொண்டவள், “  நீ சொல்லுறதை நினைச்சுப் பார்க்கும் போது சூப்பரா இருக்கு அம்மு,  என்னை உன்  கைக்குள்ள அடக்கி வைச்சுக்க ஆசைப் படுற மாதிரியே… எனக்கும் உன்னை  என்கூடவே  வைச்சுக்க ஆசையா இருக்கு. நீ ஒன்னு பண்ணு இனிமே ஆபீஸ் போகாத என்கூடவே வீட்டுல இரு, நானும் வீட்டுலயே இருக்கேன்,   இரண்டு  பேரும்  திகட்டத் திகட்டக் காதலிப்போம். பசி தாகம் தூக்கம் இப்படி எல்லாத்தையும் முத்தத்தை வைச்சே துரத்தி அடிச்சுடுவோம்” என்று பொறுமையாகவே பதில் தந்தாள் விஷல்யா.

எதார்த்தத்தை மீறிய  கற்பனைக்கு கடிவாளமிடுவது போல விஷல்யா பயன்படுத்திய வார்த்தைகள் சரியான இலக்கை அடைத்து  தாக்கிட.. அடுத்து பேசிட வார்த்தைகள் இன்றி அமைதியானான் அமுதேவ்.

“ என்ன அம்மு அமைதியாகிட்ட.. நான் சொன்னதை  நினைச்சுப் பார்த்து வெட்கப்படுறியா?, இல்ல நீ பேசினத  நினைச்சு வெட்கப் படுறியா?” என்று முன்பைப் போலவே பொறுமையான  குரலில் வினவினாள் விஷல்யா.

பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் அவள் புறம் திரும்பிப் பார்த்தவன், விஷல்யா முகத்தை கூர்ந்து கவனிக்க… “ என்ன அம்மு அப்படிப் பார்க்கிற.. என் அழகு  உன்னை கிறங்கடிக்குதா?” என்று கிண்டலாய் வினவ.. “ அழகு இல்ல, உன் அறிவு என்னை திணறடிக்குது, வரவேண்டிய இடம் வந்துடுச்சு மத்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம் “ என்று  வாகனத்தை அதற்கான  தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரின் பொருட்கள் அடங்கிய பைகளை தூக்கிக் கொண்டு முன் நடந்தான்  அமுதேவ்.

            ‘உன்னை வீட்டுல இருன்னு  சொன்னதும் வார்த்தை வராதே!” என்று தன்னவனை  தனக்குள் கிண்டல் செய்தபடி முன் நடந்தவனை பின் தொடர்ந்தாள் விஷல்யா.

வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து விட்டு, பயணிகளை நிறைத்துக் கொண்டு அந்தமான் நோக்கிய தன் பயணத்திற்கு  தயாரானது  எம்.வி. ஸ்வராஜ் ட்வீப் (M.V.Swaraj Dweep).சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் கப்பல்களில் இதுவும் ஒன்று.

கட்டண முறைப்படி மூன்று பிரிவுகளாக  பிரிக்கப் பட்ட பயணிகள்  அறைகளில்  தான் தேர்வு செய்த முதல் தரம் வாய்ந்த (Deluxe Cabin) அறைக்கு விஷல்யாவை அழைத்துச் சென்றான் அமுதேவ்.

சற்று பெரியதாகவும் ஹோட்டலின் சூட் அறைகள் போன்று  ஆடம்பரமாகவும் இருந்த அறையை சுற்றிப் பார்த்தவள்,   “இந்த இடம் ரொம்ப நல்லா  இருக்கு அம்மு.., “ என்றாள் விஷல்யா.

“ பின்ன இருக்காதா… இந்த ரூம் தான் இந்த ஷிப்ல இருக்குறதிலேயே ஹை ரேட். மோஸ்ட்லி ஹனிமூன்  கப்பில்ஸ்க்கு, இது தான்  பெஸ்ட்  சாய்ஸ்ஸா இருக்கும். கீழ இருக்கிறது,  ஏசி பங்க் கிளாஸ், (A/C bunk class ) மேலேயும் கீழேயும் அங்கங்க ஒரே இடத்தில நூத்துக்கு கணக்குல பெட்  இருக்கும். சாப்பாட்டுக்கு தனி ரேட்.. யு நோ ஒன் திங்.. அவங்க காமன் பாத்ரூம் தான் யூஸ் பண்ணனும். சாப்பாடு கூட எல்லாருக்கும் ஒரே இடத்துல தான் போடுவாங்க. டைட்டானிக் படத்துல  ஜாக் டிராவல் பண்ணுவானே அதே மாதிரி. அடுத்து இருக்கிறது செகண்ட் கிளாஸ் கேபின்,  இதுல சிக்ஸ் மெம்பர்ஸ் ஒரு ரூமை ஷேர் பண்ணிக்குவாங்க. பெரிய ஃபேமிலி இல்ல ஃபிரண்ட்ஸ் ட்ரிப்  போறதுக்கு இது பெஸ்ட் ஆப்ஷன்.   அடுத்து பஸ்ட் கிளாஸ் குடும்பமா போறவங்களுக்கு இது குட் ஆப்ஷன், ஒரு ரூமுக்கு 4  மெம்பர்ஸ்.. அந்தமான் பீப்பிள்ஸ்க்கு எல்லா கிளாஸ் டிக்கெட்டும் பாதி  ரேட் தான்.”  என்று விளக்கம் கொடுத்தபடி தான் கொண்டுவந்த உடைமைகளை பாதுகாப்பாக எடுத்து வைக்க துவங்கினான் அமுதேவ்.

அதுவரை அறையில் இருந்த ஒவ்வொரு பொருளையும் மகிழ்வுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் மனதில்  அமுதேவ் வார்த்தைகள்  ஏதோ ஒரு வெறுமையை பரப்பியது.

“ என்னாச்சு ஏன் திடீர்னு   டல்லா  தெரியுற?, ஆர் யூ ஓகே.. “ என்று அக்கறையுடன் வினவினான் அமுதேவ்.

“ இந்த உலகத்துல எல்லாரும் எல்லாரையும் அவங்க கிட்ட இருக்கிற பணத்த வச்சு தான் எடை போடுறாங்க. பணம் இருக்கிறவன் பன்னீர்ல  குளிக்கும் போது, பணம்  இல்லாதவன் பட்டினி கிடக்கிறான். மனுஷங்களை படைச்ச கடவுள் யாருக்கும் பாரபட்சம் பாக்குறது இல்ல.. ஆனா அவர் படைச்ச  மனுஷங்க கடவுளை கோவில்ல முன்னாடி நின்னு  பாக்குறதுக்கு கூட  பணத்தை  தான் எதிர்பார்க்கிறாங்க. “ என்று வேதனைக் குரலில் பேசினாள் விஷல்யா.

“ கோவில் விஷயத்துல நீ சொல்றது சரி தான், கடவுள கும்பிடுறதுல  பாரபட்சம் பார்க்கிறது தப்புதான். அதுக்காக இருக்கிறவங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்தை  அடுத்தவங்களுக்கு   அள்ளி கொடுக்கணும்னு சொல்லுறது  எந்த விதத்தில் நியாயம்?.” என்றான் அமுதேவ். 

“இருக்கிறவங்க தனக்கு தேவையானதை  வைச்சுட்டு   மீதியை  இல்லாதவங்களுக்கு கொடுத்தாத்தான் என்னவாம் குறைஞ்சா போயிடுவாங்க!,” என்று வாதம் புரியத்  துவங்கினாள்  விஷல்யா.

“ ஆர்கிவ் பண்ணனும்னு எதையாவது பேசாத ஷாலு. எத்தனையோ பேர் பஞ்சம் பட்டினின்னு இருக்கும் போது நாம மட்டும் சாப்பிட்டா எப்படின்னு  மத்தவங்களும் பட்டினி கிடக்க  முடியாது. தனக்கு வேண்டிய  வசதியையும் வாய்ப்பையும் தேடி அவங்கவங்க தான் ஓடனும்.  அவங்களுக்காக அடுத்தவங்க ஓட முடியாது. “ என்று ஏற்கனவே மனதில் இருந்த வெறுப்பையும் சேர்த்து காரசாரமான விவாதத்தில் இறங்கினான் அமுதேவ். 

“ வசதியையும் வாய்ப்பையும் தேடி ஓட முடியாதவங்களுக்கு உதவலாமே!” என்றாள் விஷல்யா.

“ கொடுக்கிறது பெரிய விஷயம் இல்ல.. உழைக்காம எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சா நாட்டுல  பாதிபேர் சோம்பேறியா தான் இருப்பான். இப்ப யாருமே இல்லாத அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்ய சொல்றயா,  அதை சரின்னு ஏத்துக்கலாம்.  அதுக்காக உழைச்சு சம்பாதிக்க வேண்டிய   எல்லாருக்கும் உதவி செஞ்சு அவங்களை  சோம்பேறியாக்குறது தப்பு.  “ என்றவன்  அலைபேசி சிணுங்கிட… “ போதும் இந்த டாபிக்கை இதோட விட்டுடு… உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் இப்படி ஒரு ட்ரிப்க்கு  அரேஞ்ச் பண்ணுனேன்.  இங்கேயும் வந்து தேவை இல்லாத விஷயத்தை பேசி  என்னை டென்ஷன் பண்ணாத.. வா கொஞ்ச நேரம் வெளிய போய் கடலை வேடிக்கை பார்த்துட்டு வருவோம், மைண்ட்  கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.. “ என்று விஷல்யாவின்  கை பிடித்து  அழைத்தான் அமுதேவ்.

“ இல்ல நான் வரல நான் இங்கயே இருக்கேன்.. “ என்று விஷல்யா வர மறுக்க… “ சும்மா அடம் பிடிக்காம வா” என்று வம்படியாக இழுத்துச் சென்றவன் அறையின் வாயிலில்  ஏற்கனவே காத்திருந்த கப்பல் பணியாளரிடம் தங்கள் அறைக்கான திறவுகோலை ஒப்படைத்துவிட்டு.. “ அரேஞ்ச்மெண்ட்ஸ் பக்காவா இருக்கணும்’ என்று  அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாக கூறிவிட்டு   விஷல்யாவுடன் கப்பலின் மேல் தளத்திற்கு  அழைத்துச் சென்றான் அமுதேவ்.

தயார் நிலையில் இருந்த கப்பல் மாலை மயங்கி நிலவு வான் வந்த வேலை  தனது நங்கூரத்தை அகற்றிவிட்டு கடல் அலைக்கு ஏற்றபடி மேலும் கீழுமாய் அசைந்து சென்று கொண்டிருந்தது.

கடல் காற்று கார் கூந்தலை கலைத்து  பெண்ணவள் முகத்தில் புது கவிதை ஒன்று வடித்துக்  கொண்டிருக்க… காற்றில் கலைந்த கூந்தலை இழுத்து பிடிக்க போராடியபடி கடலின் அழகை ரசித்துக்  கொண்டிருந்தாள்  விஷல்யா.

 தன்னவள் அழகை ரசித்தபடி நெருங்கி வந்து    நின்ற அமுதேவ்.   அவள் காதில் மெதுவாய்…

நீ என்னிடம் காட்டும்
காதலும் காற்றைப் போலத்தான்
கண்ணுக்கு தெரியாமல்
உள்ளத்தை நிறைக்கும்
அழகான உணர்வு..

என்றான் அமுதேவ்.

எத்தனை முறைக் கோபப்படுத்தி பார்த்தாலும் அடுத்த நொடியே, அதைவிட அதிக அளவு தன்னை நேசிக்கும் தன் காதல் கணவன் நெகிழ்ந்து போனவள்…

“ என் மேல உனக்கு கோபமே வராதா   அம்மு… “  என்றாள்   விஷல்யா.

“ கோவம் வராம இருக்குமா என்ன!  அதுவும் நீ குடுக்குற  இம்சைக்கு கோவப்படாம இருக்கிறது அதிசயம் தான்!.. “ என்றான் அமுதேவ்.

கோபம் போல் இடையில் கைவைத்து முறைத்த நின்றவள்.. “ நான்   இம்சையா?” என்று அடிப்பது போல் விஷல்யா கையோங்க…  அவள் கரம் பற்றி தன் கரத்திற்குள்  அடைத்து கொண்டவன்… “ கோபம் வரும் போதெல்லாம் நீ என் கூட இல்லாத நாளை நினைச்சுப்  பார்ப்பேன்… அந்தக் கொடுமையை விட உன்னோட இம்சை எவ்வளவோ பரவாயில்லைனு.. கோபத்தை எனக்குள்ளையே புதைச்சுடுவேன் “ என்றான் அமுதேவ்.

“ என்னை அவ்ளோ பிடிக்குமா! அம்மு ” என்று  வியப்புடன் வினவினாள் விஷல்யா.

“ உன்னை பிடிச்ச  அளவுக்கு இந்த உலகத்துல வேற யாரையும் எனக்கு பிடிக்கல… “ என்று பதில் தந்தான் அமுதேவ்.

“ நீ என்னை இந்த அளவுக்கு காதலிக்கிறத பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமா இருக்கு அம்மு. உண்மைய சொல்லவா நீ என்னை  காதலிக்கிறது பார்த்து தான் நானும் உன்னை  காதலிக்க ஆரம்பிச்சேன்,  இப்பயும் காதலிச்சுட்டு இருக்கேன்.” என்றாள் விஷல்யா.

“ தெரியும் “ என்று ஒற்றை வரியில் நிறுத்தியவன்.. தன் கைப்பிடிக்குள் இருந்த விரல்களை மெதுவாய் வருடிக் கொண்டே… “உன்னால எதையும் மறைக்க முடியாது. நீ கண்ணாடி மாதிரி ஷாலு.. உன் முகம் அப்படியே உன்னோட உணர்வுகளை காட்டிக் கொடுத்துடும். உனக்கு என்ன கிடைக்குதோ அதை தான் நீ  அடுத்தவங்களுக்கு திருப்பி கொடுப்ப.. நான் காதலிச்சா நீயும் காதலிப்ப.. நான் உன்னை கஷ்டப்படுத்தினா நீயும்  அதே அளவுக்கு காயத்தை எனக்கு திருப்பி கொடுப்ப.. “ என்றான் அமுதேவ்.

“ என்னைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க,  அப்போ நான் உனக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு கூட உனக்குத் தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் எப்படி உன்னால என்னை  இந்த அளவுக்கு விட்டுக்கொடுக்காம காதலிக்க முடியாது “ என்று தனது சந்தேகத்தை வினவினாள் விஷல்யா.

“ உண்மைய சொல்லவா… உன்னை முதல் தடவை பார்க்கும் போது, உன்கிட்ட என்னோட அம்மாவோட சாயலை உணர்ந்தேன்.  என் அம்மாவும் உன்னை மாதிரி தான் எதுக்கும் பயப்பட மாட்டாங்க.. எதுவாயிருந்தாலும் முகத்துக்கு நேரா பேசிடுவாங்க… எதிர்ல இருக்குறவங்க கண்ணைப் பார்த்து தான் பேசுவாங்க. அப்படிப் பேசும் போது அவங்க கண்ணுல சின்னதா  கர்வம் இருக்கும். நடையில தொய்வே இல்லாத தைரியம் இருக்கும். நீயும்  அப்படித்தான். என் அம்மாவை  நான் ரொம்ப மிஸ் பண்ணேன் ஷாலு. பல நாள் அவங்க இல்லாம ஏங்கியிருக்கேன்.  உன்னை பாக்கும்போது அவங்களைப் பார்த்த மாதிரி இருந்தது.  நீ என் பக்கத்துல இருந்தா என் அம்மாவே என் கூட இருக்கிற மாதிரி இருக்கும்னு தோணுச்சு. உன்னை விட்டுடக் கூடாதுன்னு யோசிச்சேன். கல்யாணம் பண்ணுனா  அது உன்னைத்தான் பண்ணிக்கனும்னு அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன். “ என்றான் அமுதேவ்.

அமுதேவ் தன் அன்னையை வெறுக்கிறான் என்று  அறிந்திருந்தாலும்.       வெறுப்பையும் மீறி ஆழமான அன்பு இருப்பதை உணர்ந்து  கொண்டவள்… “ அப்போ   என்னை விட உன் அம்மாவைத் தான் உனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்படித்தானே! “ என்றாள் விஷல்யா.

“  அப்போ பிடிச்சது…  இப்போ இல்ல. என்னைவிட அவங்களுக்கு அவங்களோட பிசினஸ் கெரியர் தான் ரொம்ப  முக்கியம்.  இப்போ அவங்கள நினைச்சாலே கோபமும் வெறுப்பும் தான் வருது.  “ என்றான் அமுதேவ்.

“நீ  நினைச்சுட்டு இருக்கிறது  பொய்யா இருந்து  உண்மை வேறயா இருக்கலாமே!.  நீ உன் அம்மாவ  தப்பா புரிஞ்சுகிட்ட இருக்க அம்மு.” என்று விஷல்யா  பானுஸ்ரீக்கு சாதகமாய் பேசிட முயல.. “ போதும் இனி அதைப் பத்தி பேசாத” என்று  விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தான் அமுதேவ்.

பானுஸ்ரீ சொன்னது போல அமுதேவ் இயல்பில் நல்ல குணத்துடன் இருந்திருக்கிறான், இடையில் நடந்த ஏதோ ஒன்று தான் அவன் இயல்பை மாற்றி உள்ளது என்பதை உணர்வுப் பூர்வமாய் புரிந்து  கொண்டவள், இதற்கு மேல் இதைப் பற்றி பேசினால் இருக்கும் மனநிலை கெட்டுவிடும் என்று உணர்ந்து  பேசாமல் அமைதி கொள்ள, கணவன் மனைவி இருவரும் வெகுநேரம் இரவில் மிளிரும் கடலின் அழகையும் அதில் தோன்றி மறையும் மிதமான  அலையின் ஓசையையும் ரசித்தபடி நின்றிருந்தனர். அவர்களின்  ரசனையை கலைக்கும் விதமாய் அவர்கள் அருகில் வந்து நின்ற ஒருவர், “  எக்ஸ்கியூஸ் மீ..  இங்க ஒரு அழகான  பொண்ணு வந்ததைப் பார்த்தீங்களா?” என்றார்.

“ எஸ் ஃஅப்கோஸ் சார். ஷீ இஸ் ஹியர்” என்று தன் மனைவி புறம் கை காட்டினான் அமுதேவ்.

“  இது உங்க அழகி, நான் தேடி வந்தது என்னோட அழகியை” என்று சிரித்தபடி   பதில் தந்து கொண்டிருக்க..  அவருக்கு பின் வந்து நின்ற பெண்மணி ஒருவர், “ தேடி வந்துட்டீங்களா, கொஞ்ச நேரம் என்னை தனியா விடமாட்டீங்களே!” என்று   அலுத்துக் கொண்டார்.

“ என்னத் தனியா விடணுமா!,  தனியா விடுறதுக்கு தான் ஹனிமூன் கூட்டுட்டு வந்தேனா?” என்றார்  அந்தப் பெண்மணியின் கணவர்.

“ அச்சோ கடவுளே..  எங்க வைச்சு என்னப் பேசுறதுன்னு இல்ல.. ரூம்க்கு வாங்க உங்களை கவனிச்சுக்கிறேன்” என்று வெட்கம் கலந்த சிடுசிடுப்புடன் கூறிச் சென்றார் அவர்.

“ வரேன் வரேன்.. நீ இவ்ளோ ஆசையா கூப்பிடும் போது வராம இருப்பேனா” என்று முகம் மலர்ந்த புன்னகையுடன் பதில் தந்தார் பெரியவர்.

இருவரின் விவாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அமுதேவ் மற்றும் விஷல்யா  ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள.. “இட்ஸ் டின்னர் டைம், டைனிங் ஹால்ல டின்னர்  பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க  நீங்க வரலையா”  என்று அழைத்தார் அவர்.

“ இன்பாம் பண்ணுனதுக்கு தேங்க்ஸ் சார்,  கடலைப் பார்த்துட்டே நின்னதுல நேரம் போனதே தெரியல..  “ என்றான் அமுதேவ்.

“ இட்ஸ் ஓகே யெங் பாய்..  என் டார்லிங் கூட இங்க தான்   கடலைப் பார்த்துட்டே கவிதை   எழுதப் போறேன்னு வந்தா.. இந்நேரம் கண்டிப்பா நிறைய கவிதை எழுதி இருப்பா ரூம்க்கு போனதும் படிச்சுக் காட்டுவா.. யூ நோ ஒன் திங் ஷீ இஸ் ரைட்டர்.” என்று மனைவியின் திறமை குறித்து பெருமிதத்துடன் பேசினார் பெரியவர்.

“ ரியலி.. நான் நிறைய கதை படிப்பேன், மேடம் பேரு என்ன?” என்று விஷல்யா ஆர்வத்துடன் விசாரிக்க.. “கமலி… அண்ட் மை செல்ப் கண்ணன்” என்று தன்னையும் தன் மனைவியின் பெயரையும் அறிமுகம் செய்து கொண்டார் அவர்.

“ கமலி.. யா.. நான் இவங்கக் கதையும் படிச்சிருக்கேன்.. ரொம்பவே எதார்த்தமா எழுதுவாங்க” என்றாள் விஷல்யா.

“ நீயும் படிச்சிருக்கியா மா.. நான் போய் அவக் கிட்ட சொல்லுறேன் ரொம்பவே சந்தோசப்படுவா” என்று அங்கிருந்து நகர்ந்தவர் மீண்டும் அவர்கள் புறம் திரும்பி.. “ சீக்கிரம் டைனிங் ஹால் வந்திடுங்க” என்று மீண்டும் அறிவுறுத்தி சென்றார்.

“ இந்த வயசுலயும் எவ்வளோ அன்னியோன்யமா  இருக்காங்க பாரு.. நாமளும் இப்படித் தான் இவங்கள மாதிரி சந்தோஷமா இருக்கனும் ஷாலு” என்று  கனவுகள் மின்னும் விழிகளுடன் காதலுடன் கூறினான் அமுதேவ்.

“ கண்டிப்பா… அம்மு..” என்று கணவனின் கனவை   தனதாய் ஏற்று சம்மதம் கூறினாள் விஷல்யா.

இரவு உணவு முடியும் வேலை,  ஒரு பணியாளர் அமுதேவ்விடம் வந்து  “ நீங்க சொன்ன மாதிரியே எல்லா அரேஞ்ச்மெண்ட் செஞ்சு வைச்சுட்டேம் சார்” என்று  அறையின் திறவுகோலை கொடுத்துவிட்டு  அவன்  கொடுத்த பணத்தை புன்னகையுடன் வாங்கிச் சென்றான்.

தனித் தனியாக கிடந்த படுக்கை  ஒன்றாய் இணைத்திருக்க அதனை வண்ண மலர்கள் கொண்டு அலங்கரித்திருந்தனர், அங்கங்கு வண்ண  விளக்குகள் அறையின் அழகை மேலும்  அழகாக்கியது, தன்னவன் தனக்காக செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டைக் கண்டு  அதிசயத்து  நின்றவள்.. பின் புறம் வந்து   அணைத்துப் பிடித்துக் கொண்டவன்.. “ பிடிச்சிருக்கா?” என்று  ரகசியக் குரலில்  வினவினான் அமுதேவ்.

“ ரொம்ப.. “ என்று விஷல்யா மகிழ்வுடன் கூறிட… அவளின் முழு சம்மதத்துடன்   தன்னுடன்  இணைத்துக்  கொண்டான் அமுதேவ்.

கடலை விட்டு என்றும் பிரியாத அலைகள் போல உறவாய் மட்டும் அல்லாது உடலாலும் அவன் வாழ்வில் ஒன்றெனக் கலந்தாள் அவனது காதல் மனைவி.  

நமக்குள் எழும்
அத்தனை உணர்வுகளையும்
கட்டுப்படுத்தும்
ஆளுமை கொண்டது
காதல் எனும்  ஓர் அற்புத உணர்வு..
 

காதல் எனும்

மந்திர சொல்லுக்கு

மயங்காத உயிர்கள்

எதுவும் இல்லை…

மகுடி இசைக்கு மயங்கும்

நாகம் போல்…

காதல் இம்சைக்கு

மயங்கிப் போகிறது

மனம்…