Advertisement

17…

நிலையில்லா நிர்ப்பந்தங்கள்…

வார்த்தைகள் இல்லா

மௌனத்தின் அர்த்தத்தையும்..

கோபத்தில் வெளிப்படும்

அர்த்தமற்ற வார்த்தைகளில்

பொதிந்துள்ள அன்பையும்

 புரிந்து கொண்டால்

உறவில் பிரிவில்லை…

தன் அன்னை தந்தையின் இல்லம் விடுத்து… தன் கணவனின் வசிப்பிடம் நுழைந்து இருந்தாள் விஷல்யா.

வீட்டின் ஒவ்வொரு  அறைகளையும் அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டவனாக… ” இது ஹால், ரைட் சைடு ரூம்  சும்மா இப்போதைக்கு  ஸ்டோர் ரூம் மாதிரி  யூஸ் பண்ணிட்டு இருக்கேன், வீட்டுல இருக்கிற வேண்டாத  குப்பையெல்லாம்  இங்க தான் கிடக்கும்,  அதுக்கு பக்கத்துல இருக்கிறது என்னோட ஆபீஸ். நம்மக் காதல் அரங்கேறுற  ஸ்பெசல் பிளேஸ், ஐ மீன் நம்ம  பெட் ரூம் மாடியில இருக்கு” என்று கண்ணடித்து காதலுடன் கூறினான் அமுதேவ்.

“ நேத்து  நடக்காததை இன்னைக்கு நடத்திக்க பிளான் பண்ணுறியா படவா?” என்று  ஒருவிரல் நீட்டி விஷமத்துடன் வினவினாள் விஷல்யா.

நீட்டிய விரலைப்  பற்றி தன் புறம்  இழுத்து நெற்றி முட்டி நின்றவன், “  கேட்குற  விதத்தைப் பார்த்தா.. நீ தான் ஏதோ பிளானோட  இருக்குற மாதிரி இருக்கு. என்னப் பிளான் இருந்தாலும் அதை ஓரம் கட்டி வைச்சுடு, நான் வேறப் பிளான்ல  இருக்கேன்” என்றான் அமுதேவ்.

“    அதென்னப்   பிளான்?”   என்று  விஷல்யா இழுத்து ராகம் பாடிட.. “ அதுவா?  அது வேறப் பிளான்…” என்று இரகசியக் குரலில்  கூறியவன்   மெதுவாய்  பின்னிருந்து அணைத்துக் கொண்டு, “  கல்யாண வயசு  வந்ததும் நமக்குள்ள ஆயிரம் எதிர்பார்ப்பு  முளைக்கும்,  அதுல வெளிய சொல்ல முடியாத  ஸ்பெசலான  எதிர்பார்ப்பு ஃபஸ்ட்  நைட்.   எனக்கும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கு…” என்றான் அமுதேவ்.

“ ஆரம்பிச்சிட்டியா? உன்னால  ப்ராக்டிகல்லா யோசிக்கவே முடியாதா? “ என்று விஷல்யா சலித்துக் கொள்ள… “ உனக்கு ரொமாண்டிக்கா யோசிக்கவே தெரியாதா?      ” என்று   அலுத்துக் கொண்டான் அமுதேவ்.

 “கல்யாணம் முடிஞ்சா எல்லாம் ஆட்டோமேட்டிக்காக நடக்குறது தான்,  இதுல எதிர்பார்க்க என்ன இருக்கு” என்று அசட்டையாக  பதில் வர… “எல்லாருக்கும் இருக்கிற   சாதாரண  பீலிங் கூட  இல்லன்னு சொல்லுற, நீ மனுஷியா இல்ல மிஷினா?,” அவளை விட்டு விலகி நின்றான் அமுதேவ்.

தன்னவன் விலகலை  உணர்ந்து, “ என்னக் கோபமா? உனக்குத் தான்  என்னைப் பத்தி  தெரியுமே அம்மு!,   காதல் கல்யாணம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நீ என் ஃலைப்குள்ள    வந்ததுக்கு பிறகு தான் யோசிக்கவே ஆரம்பிச்சேன்.   நீ ஒன்னொன்னா சொல்லிக்குடு நான்  கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிறேன்.” என்று அமுதேவ்  கரத்தை இழுத்து தன் கழுத்தைச் சுற்றி மாலையாய்   போட்டுக் கொண்டாள் விஷல்யா.

அதுவரை கொண்டிருந்த கோபம்  மறைய கொஞ்சலாய் பார்த்தவன், “  உலகத்துலேயே கட்டின  புருஷனை கொஞ்சுறது எப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா கத்துகிறேன்னு சொல்லுற  பொண்டாட்டி நீ ஒருத்தியா  மட்டும் தான் இருப்ப!, அதையும் நானே கத்துக் குடுக்கணும்னு சொல்லுற பாரு அது தான் ஹைலைட்” என்று கேலி செய்தான் அமுதேவ்.

“ என்னக் கிண்டலா?, உன்னால  முடியாதுன்னா விடு,  நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்” என்று கோபம் போல பேசினாள் விஷல்யா.

” கல்யாணம் முடிஞ்சுடுச்சு  ஷாலுமா.. இனி உனக்கு என்னை  விட்டா வேற ஆளும் இல்ல,  ஆப்ஷனும் இல்ல. ” என்று கர்வத்துடன் சட்டை காலரை உயர்த்தி விட்டுக் கொண்டான் அமுதேவ்.

” பார்ரா..”  என்று ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தியவள்.. ”    ஆப்ஷன் நிறையவே இருக்கு அம்மு  பேபி. நாலு ஐஞ்சு  தமிழ் சினிமா, ஆறு ஏழு தெலுங்கு சினிமா, கொஞ்சம்  ஹிந்தி சீரியல், நிறைய   கொரியன் டிராமா,   பார்த்தா போதும் நானும் உன்னை மாதிரியே  எதார்த்தமே இல்லாம  ரொமான்ஸ் பண்ணக் கத்துக்குவேன்” என்றாள் விஷல்யா.

” என்ன?” என்று புரியாத குழப்பத்துடன்  அமுதேவ்  விழிக்க… ” அதான் பா  நல்லா படிச்சு நல்ல பொசிஷன்ல இருந்தாலும். ஹீரோயின்  மேல லவ் வந்ததும்    இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு அவப் பின்னாடியே அரை லூசு மாதிரி  திரியுற  ஹீரோ.  அப்படி இல்லையா,  ஒழுங்கா படிக்காம  வேலைக்கு கூட  போகாம.. ஹீரோயின் பின்னாடி சுத்துறதையே பொழப்பா வச்சிருக்கிற அரைவேக்காடு ஹீரோ.  இப்படி எந்த டைப் ஹீரோ பார்த்தாலும் உடனே  காதல் வர அளவுக்கு.. மொழு மொழுன்னு மெழுகுல செஞ்ச வச்ச  சிலை மாதிரி இருந்துட்டு,   கால் தரையிலயே படாம வானத்துக்கும் பூமிக்கும் வானரம் மாதிரி குதிச்சுட்டு,  எல்லாமே  தெரிஞ்சு இருந்தாலும் ஒன்னுமே தெரியாத  அப்பாவி மாதிரி   ஹீரோ கைக்குள்ள   அடங்கிக் கிடக்குற ஹீரோயின், இவங்களுக்குள்ள நடக்குற  மோதல்  காதல் சண்டை சமாதானம் , இந்த மாதிரி தெய்வீகக் காதலை தான  நீ சொல்லுற !,   எனக்கும்  அறிவை அடகு வைச்ச அறிவாளி மாதிரி  நடிக்க நல்லாவே தெரியும். நீ கூட ரெண்டு மூணு சாம்பிள் பார்த்திருக்கயே!,  உனக்கு என்னை அந்த மாதிரி தான் பார்க்க பிடிச்சிருக்குன்னா சொல்லு, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. உன்கூட வெளிய வரும் போது மட்டும்.. மூளைய வீட்டில் ஒரு ஓரமா கழட்டி வச்சிட்டு உன் பின்னாடி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி வர நான் ரெடி.. என்னை அப்படி பார்க்க நீ ரெடியா?” என்றாள் விஷல்யா.

திருமணம் நிச்சயக்கப்பட்ட புதிதில் நிகழ்ந்த சந்திப்புகளின் போது      விசித்திரமாய் நடந்துகொண்ட விஷல்யாவின் நடவடிக்கைகள் வினாடிப் பொழுதில் மனக்கண் முன் தோன்றி மறைய…”  ஓ.. நோ.. நோ..  ஷாலு ப்ளீஸ்.. டோன்ட் டூ லைக் தட். அன்னைக்கு உன்னோட பிஹேவியர் பார்த்து உண்மையிலேயே மிரண்டு போயிட்டேன். நீ அந்த மாதிரி ஆட்டிட்யூட் காட்டும்போது  உன்னை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாம  பலதடவை நம்ம மீட்டிங்கை கூட  அவாய்ட் பண்ணியிருக்கேன்.  ப்ளீஸ் நீ நீயாகவே இரு. அதுதான் எனக்கு நல்லது. ” என்று பயந்தவன் போல் பதட்டத்துடன் பேசினான் அமுதேவ்.

” பரவாயில்லையே பட்டுனு புரிஞ்சுகிட்ட.. குட் பாய் கீப் இட் அப்… ” என்று அவன் கன்னத்தில் விஷல்யா முத்தமிட… ” என்னை பயமுறுத்தி பயமுறுத்தியே காரியம்   சாதிச்சுக்கிற.. ” என்று சோகம் போல் முகத்தை வைத்துக் கொண்டான் அமுதேவ்.

” சரி சரி அழுது சீன் போடாத அடுத்த இடத்தை காட்டு” என்று வீட்டைச் சுற்றி பார்க்கும் வேலையில் கவனத்தை திசை திருப்பினாள் விஷல்யா.

எந்த விதத்தில் பேசினாலும்  அவள்  விருப்பத்திற்கு ஏதுவாய், கொஞ்சியோ!,  மிஞ்சியோ!,  தன்னை சரிகட்டி விடுகிறாள்  என்பதை கடினத்துடன் கிரகித்துக் கொண்டவன்.. மேலும் வீட்டின் அறைகளை  அறிமுகப்படுத்தத் துவங்கினான்.

”  திஸ் இஸ் யுவர் கிங்டம்… ஐ மீன் கிச்சன்.. ” என்று  சமையலறையை   சுட்டிக் காட்டி…”  உனக்குத் தேவையான  வசதியெல்லாம் இருக்கான்னு செக் பண்ணிக்கோ, எதுவும்  தேவைப்பட்டா  தயங்காமச் சொல்லு   உடனே வாங்கிடலாம்,    ”  என்றபடி ”  நாளையில இருந்து வழக்கமா  சமைக்க வர   சமையல்  அம்மாவை   நிறுத்திடுறேன்,   இனி  நீயே  உன் கையால சமைச்சு எனக்கு ஊட்டி விடுவியாம், நானும்  உன்  அழகை ரசிச்சுக் கிட்டே..    சாப்பாட்டை ருசிச்சு சாப்பிடுவேணாம்”  என்றபடி தன் கைபிடிக்குள் விஷல்யாவை இழுத்து வந்தான் அமுதேவ்.

” நான்  சமைக்கணுமா?” என்று சற்று அழுத்தத்துடன்  விஷல்யா வினவிட… ” யெஸ்.. நீ தான்,  இதுல என்ன டவுட்?” என்று அவள் குரலில் இருந்த அழுத்தத்தை அலட்சியப்படுத்தி  எதிர்க் கேள்வி எழுப்பினான் அமுதேவ்.

“நான்  சமைக்கிறது பெரிய விஷயம் இல்ல, அதுக்குன்னு எத்தனையோ யூடியூப் சேனல்…  குகிங் புக்ஸ் இருக்கு அதப் பாத்து   சமைச்சிடுவேன், ஆனா நான்  சமைக்கிறதுக்கும்  ரெகுலரா வர   சமையல் ஆளை  நிறுத்துறதுக்கும் என்ன சம்மந்தம் ?, புரியல!” என்று அவன் கைபிடிக்குள் இருந்தபடியே விளக்கம்  கேட்டாள் விஷல்யா.

”  அதான்  நீ வந்துட்டாயே,  எல்லா வேலையும் நீ பார்த்துக்கும் போது, அவங்களுக்கு இங்க என்ன வேலை!, வேலையே இல்லாம சம்பளம் கொடுக்க முடியுமா என்ன ?   ”  என்றான் அமுதேவ்.

”  எல்லா வேலையுமா?,இந்த வீட்டுல  அப்படி என்னென்ன வேலை எனக்காக காத்திட்டு  இருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று எதையும் வெளிக்காட்டாத குரலில் அமைதியாகவே வினவினாள் விஷல்யா.

குரலிலும் நிற்கும் நிலையிலும்  மாறுதல் இல்லை என்பதால் தன் எண்ணத்தையும் விருப்பத்தையும் ஏற்கத் துவங்கிவிட்டாள்  என்று எண்ணிக் கொண்ட அமுதேவ்.. ” எல்லா வேலையும் தான், இது உன் வீடு ஷாலு. நான் உன்னோட ஹஸ்பண்ட், எனக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு கொடுத்து என்னை  கவனிச்சுக்கிறதும்,  வீட்டை   நீட்டா மெயின்டெய்ன் பண்ண வேண்டியதும் உன்னோட கடமை.   புதுசா செய்றதால கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போகப் போக பழகிடும். ”  என்று  அறிவுரை வேறு வழங்கினான்.

” அப்ப இது உன் வீட்டு இல்லையா.. ?” என்று விஷல்யாவிடமிருந்து குதர்க்கமான  கேள்வி  வர… ” சரி சரி இனி உன் வீடுன்னு  சொல்லமாட்டேன்…  நம்ம வீடு போதுமா?” என்றான் அமுதேவ்.

” போதாது… நம்ம வீட்டு வேலைகள செய்யுறதுலயும் , நமக்காக சமைக்கிறதுலயும்  ,  எனக்கு எந்தப் பிரச்சனையும்  இல்ல, ஆனா  இந்த வேலைகளை எல்லாம் நான் மட்டும்  செய்யணும்னு எதிர்பார்க்கிறதும், இது மட்டும் தான் எனக்கான வேலையா இருக்கணும்னு  யோசிக்கிறது  தான் பிரச்சனையே  ” என்றாள்  விஷல்யா.

” இதுல  என்ன  பிரச்சனை ?, பொண்ணுங்க வீட்டை கவனிச்சுக்கிறதும், ஆம்பளைங்க வெளி வேலைக்கு போயிட்டு வரதும்…  காலம் காலமா நடக்கிறது தானே!, நான் புதுசா ஒன்னும் சொல்லையே!”  என்றான் அமுதேவ்.

”  கொஞ்ச நேரத்துக்கு  முன்னாடி நீ நீயாவே இருன்னு சொன்னயே, இப்போ  நான் நானா இருக்கணுமா இல்ல  உனக்கு  வேலைக்காரியா இருக்கணுமா?” என்றாள் விஷல்யா.

விஷல்யா கழுத்து வளைவில் முகம் பதித்து..”  ரெண்டுமே வேணாம்.. நீ என் பொண்டாட்டியா     எனக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா போதும்..  காலம் முழுக்க  உன் காதலுக்கு  அடிமையா கிடக்க நான்  ரெடி” என்று சரசம் பேசியபடி முகம்  பதித்திருந்த இடத்தில் இதழ்   பதித்தான் அமுதேவ்.

“இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை அம்மு.  ஏதோ  ஒன்னை  எதிர்பார்த்து  அடிமையா வாழ ஆரம்பிச்சா தன்மானத்தை இழக்க  வேண்டி வரும்.    தன்மானத்தை இழந்து  கிடைக்கிற    வெற்றி ருசிக்காது..  ரொம்ப நாளைக்கு நிலைக்கவும்  நிலைக்காது. ”  என்று  பதில் தந்தாள் விஷல்யா.

” நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்,  நமக்குள்ள என்ன.. !, ” என்று அமுதேவ் பேசி முடிப்பதற்குள், ” என்னைக்கு நாம  காதலிக்க ஆரம்பிச்சோமோ  அன்னைக்கு இருந்து  என்னை நீ உன்னோட லைஃப் பார்ட்னராத்  தான் பார்க்கிறதா பல தடவை சொல்லியிருக்க, அப்படி இருந்தும்  நான் சொன்ன ஒரு வார்த்தை உன் தன்மானத்தை சீண்டவும் தான… என்னை விட்டு  பிரிஞ்சு போக முடிவெடுத்த!,   எந்த உறவாக இருந்தாலும் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.  ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்வாவே  இருந்தாலும் பர்சனல்  ஸ்பேஸ் இருக்கணும்.  அடுத்தவங்க பீலிங்ஸ்க்கும்  மதிப்பு கொடுக்கணும். அப்போ தான் ரிலேஷன்ஷிப் ஸ்மூத்தா போகும். உணர்வுகளை காயப்படுத்திட்டு உறவுல நிலைக்க முடியாது ” என்று வழக்கத்திற்கு மாறான பொறுமையுடன் பேசினாள் விஷல்யா.

” ஹேய் ரிலாக்ஸ் நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு சென்சிட்டிவ்வா பேசுற..   வீட்ல இருக்கிற சின்ன சின்ன வேலையை செஞ்சுட்டு  ரிலாக்ஸா இருக்கலாமேன்னு    உன் மேல இருக்குற அக்கறையில தான் இதை சொல்றேன். இன் ஃபேக்ட் உன் ஆபீஸ் ஒர்க்கை கம்பேர் பண்ணும்போது இது உனக்கு ஈசியான வேலை . சோ இனி நீ  ஆஃபீஸ் போகத் தேவை இல்லை. ” என்று குரலை உயர்த்தாமலேயே  கட்டளைப் பிறப்பித்தான் அமுதேவ்.

சமையலறைக்குள் முடங்கிக் கிட என்று  சொல்லாமல் சொல்லும்  கணவனின் செய்கையில் உண்டான கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தன்னைடமிருந்து விலகி நிறுத்தியவள்,   ஏளனப்  பார்வையுடனும், புன்னகையுடனும்  கடந்து சென்று,  இதழ் சுமந்திருந்த  ஏளனத்தை  குரலிலும் விரவிக் கொண்டு….  தனக்கே உரித்தான கம்பீரத்துடன்,

 

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்                                றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;                                           வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்

மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,

வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை

வெட்டிவிட் டோமென்று கும்மியடி!

 

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த

நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?

கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை

கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.

காத லொருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து,

மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!”

என்று பாரதியார்  பாடல் வரிகளை  கூறியவள்… சற்று நேரத்திற்கு முன் கடந்து வந்த அறையின் முன்  சென்று.. ” இது இனிமே ஸ்டோர் ரூம் இல்ல,  என்னோட ஆபீஸ்.  அவுட் ஸ்டேஷன் போகனும்னு சொன்னேல,  அதுக்கு முன்னாடி என்னோட  பெண்டிங் வொர்க்ஸ் முடிக்கணும் சோ எனக்கு டைம் இல்ல, நான் ஆபிஸ்க்கு கிளம்புறேன்…  லஞ்ச் ஆர்டர் பண்ணி உன் ஆபீஸ்க்கும் அனுப்பி வைக்கிறேன். நீயும் உன் ஆபீஸ்க்கு கிளம்பு” என்று நிதானமாகவே தன் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்பினாள் விஷல்யா.

பெண் என்ற வரையறைக்குள் தான் வகுத்து வைத்த வரையறை  சரியா?,  இல்லை.. தன்னை எதிர்த்து பெண்ணியம் பேசுபவள்    எண்ணம் சரியா?, என்று அமுதேவ்வின்  மனம் நிலையற்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்தது.

இருதலைக் கொள்ளியாய் எந்த திசையில் செல்வது என்று புரியாத தவிப்புடன் இருந்த அமுதேவ் நிலையற்ற மனதிற்கு நிம்மதியைத் தேடி அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

திருமணம் முடிந்த மறுநாளே அலுவலகம் வந்து பணி செய்யத் துவங்கிய நண்பனை விசித்திரமாக பார்த்த தனுஜ்.. ” டேய் நண்பா.. உன் சின்சியாரிட்டிக்கு  அளவே இல்லையா.. நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது இன்னைக்கே ஆபீஸ் வந்துட்ட.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க.. ” என்றான்.

” யார் என்ன நினைச்சா  எனக்கு என்ன?” என்று ஏனோதானோவென்று பதில் தந்தான் அமுதேவ்.

” அடுத்தவங்க நினைக்கிறத விடு, உன் வொய்ஃப் என்ன நினைப்பான்னு  யோசிச்சு பார்த்தியா?” என்றான் தனுஜ்.

” அவ எதுக்கு தேவையில்லாம என்னை பத்தி யோசிக்க போறா…  அவளுக்கு என்னை விட அவளோட ஆபீஸ் வேலை தான் முக்கியம். ” என்று அலுத்துப் போன குரலில் பதில் தந்தான் அமுதேவ்.

” என்ன சொல்ற அப்போ ஷாலுவும் ஆபிஸ் போயிட்டாளா.. ” என்று ஆச்சரியத்துடன் வினவினான் தனுஜ்.

ஆமாம் என்பது போல அமைதியாக தலையசைத்தான் அமுதேவ்.

” அதான் உன் முகம்  இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வாடிப் போய் இருக்கா?” என்று நண்பனின்  மனநிலை அறியாது கேலி செய்தான்  தனுஜ்.

தன்னுடைய   நிலைக்கு எதிரில் இருப்பவனும்  ஒரு காரணம் என்று ஒரு நொடி  கோபமாய் முறைத்தவன்,   தான் நினைத்திருந்தால்  இந்த நிலை நேராமல் தவிர்த்திருக்கலாம் என்ற உண்மை புரியவும்  மறுநொடி கோபம் விடுத்து.. ” இதுதான் சரியான வழின்னு  நீ ஒரு பாதையை தேர்ந்தெடுத்து வைச்சிருக்க..    புதுசா உன்கூட நடக்க ஆரம்பிச்சவங்க.. நீ  போற பாதை சரியில்லன்னு உன்னை

திசை திருப்ப முயற்சி பண்ணுனா .. நீ என்ன செய்வ?”  என்று எதையும் புரிந்து கொள்ள  முடியாத விதத்தில் கேள்வி எழுப்பினான் அமுதேவ்.

” என்னடா.. கேள்வி  இது?, இதுக்கு நான்  கண்டிப்பா பதில் சொல்லித்தான் ஆகணுமா?, ” என்று தனுஜ் வினவிட..  ஆமாம் என்பது போல பிடிவாதமாக அவனையே  பார்த்தபடி அமர்ந்திருந்தான் அமுதேவ்.

” சொல்லுற ஆளைப் பொறுத்து என் முடிவு இருக்கும்”  என்று பதில் தந்தான் தனுஜ்.

” புரியல” என்று   ஒற்றை வரியில்   அவன் பதிலுக்கு விளக்கம் கேட்டான் அமுதேவ்.

” புதுசா வந்த ஆள்..    சொன்னதை கேட்டு ஒரு  முடிவுக்கு வரதுக்கு முன்னாடி   என் பாதையை திசை  திருப்புறதால அவங்களுக்கு என்ன கிடைக்கும்னு கால்குலேட்ட பண்ணுவேன், அவங்க  எனக்கு எந்தளவுக்கு முக்கியம்னு யோசிப்பேன். உண்மையிலேயே என் மேல இருக்கிற அக்கரையிலதான் அந்த மாதிரி அட்வைஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சா.. கண்டிப்பா தேர்ந்தெடுத்த பாதையை  மாத்திடுவேன்” என்றான் தனுஜ்.

”  பொண்ணுகளை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு ஒரே வார்த்தையில சொல்லு”  என்று அமுதேவ் அடுத்த கேள்வி  எழுப்பிட… ” அழகான கொலைகாரிகள்” என்றான் தனுஜ்.

” மனைவி?” என்று  அடுத்த     வார்த்தை கேள்வி போல் வர.. ”  மனைவி எப்படி இருக்கணும், எந்த மாதிரி  நடந்துக்கணும்னு  நீதான் ஒரு டெபனிஷன் வைச்சிருக்கயே, அப்புறம் எதுக்கு    என்கிட்ட கேட்கிற?, ”  என்றான் தனுஜ்.

” கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..   ” என்று அமுதேவ் குரலை உயர்த்திட..”கொடுமையான  அதிகாரிகள்” என்று சிரித்தபடி பதில் தந்தான் தனுஜ்.

” உனக்கு வரப்போற ஃவொய்ப் எப்படி இருக்கணும்னு ஆசைப்படுற?, ” என்று அமுதேவ்விடம் இருந்து  அடுத்த கேள்வி வர.. ” திடீர்னு இன்னைக்கு உனக்கு என்னாச்சு?,  ஏன் கேள்வி மேல கேள்வி கேட்டு இம்ச பண்ணுற!”  என்று சலித்துக் கொண்டான் தனுஜ்.

” உனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல, அதைத்தான் கேட்கிறேன் சொல்லுடா” என்று நண்பனை கட்டாயப்படுத்தினான் அமுதேவ்.

” என் லைப் பார்ட்னர் எப்படி இருக்கணும்னா.. எதுக்குமே என்னை டிபன் பண்ணாம செல்ப் டிபன்டன்ட்டா இருக்கணும். . அவளோட முடிவை அவளே தேர்ந்தெடுக்கிற அளவுக்கு தெளிவான பொண்ணா இருக்கனும். நானே தப்பு செஞ்சாலும் என் தப்பை சுட்டிக்காட்டி தட்டிகேக்குற தைரியம் இருக்கணும். வீட்டுக்குள்ளேயே முடங்கிக்  கிடக்க  கூடாது. சுருக்கமா சொல்லணும்னா பாரதி கண்ட புதுமைப்பெண் மாதிரி போல்டான கேரக்டரா இருக்கணும்”  என்றான் தனுஜ்.

” லைக் விஷல்யா… ” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி  வினவினான் அமுதேவ்.

” என்ன?” என்று தனுஜ் அதிர்ச்சியாகிட… ”   உனக்கு போல்டான கேரக்டர் இருக்கிற பொண்ணுங்கள தான பிடிக்கும்,  அதனாலதான் உனக்கு என் அம்மாவையும் பிடிச்சிருக்கு அப்படித்தானே!” என்றான் அமுதேவ்.

” உண்மைதான்.. ஏன்னா என் அம்மா உன் அம்மா மாதிரி போல்டா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுறேன். நீ சொல்லுவியே அடக்க ஒடுக்கமான குடும்பப் பொண்ணுங்க அதுக்கு   முழு உதாரணம் என் அம்மா.     என் அப்பா நல்ல அப்பா தான்.. ஆனா நல்ல புருஷன் இல்ல… ” என்று மனதிற்குள் பல  நிகழ்வுகளை நினைத்துப்  பார்த்து கசந்த புன்னகையுடன் கூறினான்  தனுஜ்.

” அப்போ பொண்ணுங்களை பத்தி  என் கண்ணோட்டம்  தப்பு அப்படித்தானே!” என்றான்  அமுதேவ்.

” பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும்னு உனக்கு நீயே ஒரு வரைமுறை வச்சிட்டு உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க… உன் பாட்டி சொன்ன பிற்போக்குத்தனமான வார்த்தைகள  ஒதுக்கி வைச்சுட்டு.. உண்மையான எதார்த்த  உலகத்துல வாழக் கத்துக்கோ.. லைஃப் ஹாப்பியா இருக்கும்” என்று அறிவுரை வழங்கினான் தனுஜ்.

பதிலேதும் பேசாமல் தனக்குள் ஏதோ சிந்தனை செய்து கொண்டபடி அமுதேவ் அமைதியாய் அமர்ந்திருக்க… ” என்னடா… திடீர்னு அமைதியாகிட்ட.. எதுவும் பிரச்சனையா?” என்று காரணம் வினவினான் தனுஜ்.

இல்லை என்பது போல் மறுத்து தலையசைத்து… ” இன்னும் ரெண்டு நாள்ல.. அந்தமான் ட்ரிப் போறோம்.. திரும்பி வர பதினஞ்சு நாளைக்கு மேல ஆகிடும். சோ ஆபீஸ் வேலைகளை  நீ மட்டும் தனியா தான் பாத்துக்கணும். ஒர்க்  எதுவும்  பென்டிங்  இல்லாம பாத்துக்கோ…” என்று  தன் பயணச் செய்தியை அறிவித்து செய்யவேண்டிய பணிகளை அறிவுறுத்தினான்  அமுதேவ்.

” ஆபிஸ் ஒர்க் நினைச்சு தான்  டென்ஷனா இருக்கியா?,  நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்.. நீ ஒன்னும்   கவலைப்படாத.. வேலை எல்லாம் பக்காவா நான் பார்த்துக்கிறேன்… ” என்று நம்பிக்கையுடன் ஒப்புதல் வழங்கி அங்கிருந்து விலகிச் சென்றான் தனுஜ்.

தாய் தந்தையை விட்டு வெகுதூரம் விலகியிருக்கும் தனுஜ் வீட்டு நிலவரம் என்னவென்று நன்கு அறிந்தவன் அமுதேவ்.

அதிகம்  படித்திராத  தனுஜ் அன்னையின் வார்த்தை அவர்கள் வீட்டில் என்றும் எடுபடாது…    தந்தை மட்டும் தனியாக  ராஜ்ஜியம் செய்யும்  வீட்டில் தந்தைக்கு நேரெதிர் மனநிலையில்   வளர்ந்தவன்… மனநிலை வேறு எவ்வாறு இருக்கும்  என்று தனக்குள் எண்ணிக்கொண்டவன்.. தன் அன்னை குறித்து எண்ணிப்பார்க்கத் துவங்கினான்..  ‘ என் பிள்ளைங்க என்னை மாதிரி அம்மா பாசத்துக்கு ஏங்கக்  கூடாது.. விஷல்யா எனக்கு மனைவியா என் குழந்தைகளுக்கு அம்மாவா இருந்தா மட்டும் போதும்.’ என்று  கொஞ்சம் தளர்ந்த மனதை மீண்டும்  திடப்படுத்திக்   கொண்டு தன் தீர்மானத்தில் உறுதியானன் அமுதேவ்.

Advertisement