Advertisement

15..

 

புரிதலான உறவு…

 

 

யாரை நம்புவது

நம்பக் கூடாது…

என்ற கேள்விக்கு…

அனுபவத்தின் மூலம்

விடை அறியும் முன்…

பாதி ஆயுள்

முடிந்துவிடுகிறது…

 

விஷல்யா  குறித்த உண்மையை அமுதேவ்விற்கு  தெரியப்படுத்தி விட்டதால் அவன் எப்படியும்  திருமணத்தை நிறுத்திவிடுவான் என்றத் தீர்மானத்தில் இருந்த வினோத்,  தன்னை அவமானப் படுத்தியவள்  அவமானப்பட்டு நிற்பதை காணும் ஆவலுடன் முகூர்த்த நேரம் கடந்த பிறகும் கூட திருமண மண்டபத்திற்கு வந்து  சேர்ந்தான்.

அமுதேவ் திருமணத்தை நிறுத்தியிருப்பான், அந்த அதிர்ச்சியிலும் அவமானத்திலும்  கண்ணீருடன் தலைக் கவிழ்ந்து நிற்கும் விஷல்யாவை காணும் ஆவலுடன் வந்தவன், அவன் எண்ணத்திற்கு எதிர்மறையான நிகழ்வுகளையும்  முகம் மலர்ந்த புன்னகையுடன்  ஜோடியாய் நின்றவர்களையும் கண்டு அதிர்ச்சியானான்.

முன்பே வந்திருந்த மற்ற நண்பர்கள் வினோத்தை கண்டதும், “  ஏன்டா  லேட்? ஜஸ்ட் மிஸ்..  கொஞ்ச நேரத்துக்கு  முன்னாடி வந்திருந்தா.. ஒரு டான்ஸ் ஷோவே பார்த்திருப்ப” என்றிட.. “ நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு நேரத்துக்கு வரணும்னு தான் லேட்டா வந்தேன்” என்று தன் எண்ணத்தை மறைக்காமல் உளறிக் கொட்டினான் வினோத்.

“ நடக்காத கல்யாணமா என்னடா சொல்லுற?” என்று சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சிக் காட்டிட.. “ நடக்காத கல்யாணம்னா சொன்னேன்?, அது வந்து  இன்னொரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், அந்தக் கல்யாணம் நடக்காம பாதியில நின்னுடுச்சு,  அதைப் பத்தி  சொன்னேன்.  ஆமா அதென்ன டான்ஸ் ஷோ… ஏதாவது டான்ஸ் டீம் வந்து ஃபெர்பாம் பண்ணுனாங்களா என்ன? “ என்று வாய்க்கு வந்த காரணத்தைக் கூறி சமாளித்து பேச்சை திசைத்  திருப்பினான் வினோத்.

“ டான்ஸ் டீம் இல்ல, கல்யாணப் பொண்ணே  செம்மையா  டான்ஸ் ஆடி மாப்பிள்ளை வரவேற்பு குடுத்தாங்க” என்று ஒருவன் கூறிட “ என்ன? கல்யாணப் பொண்ணே டான்ஸ் ஆடுச்சா?, தேவ் ஒன்னும் சொல்லலையா?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் வினோத்.

“ தேவ் என்ன சொல்லுறது? வாயடைச்சு போய் வேடிக்கை  பார்க்கிறத விட வேற என்ன செய்ய முடியும்?” என்று தேவ் நிலையை  கிண்டல் செய்தான் ஒருவன்.

“ ஆனா தேவ் எப்படி இந்த டான்ஸ் பர்பாமன்ஸ்க்கு அலோ பண்ணுனான்னு புரியல. அவனுக்குப் பொண்ணுங்க இந்த மாதிரி  பிஹேவ் பண்ணுனா  பிடிக்காதே. “ என்று ஒருவன் வியப்பைக் காட்டிட..

“அவனுக்கு இல்ல அவனோட பாட்டிக்கு தான் பிடிக்காது.  குடும்பப் பொண்ணுங்க எப்படி இருக்கணும்னு அவங்க பாட்டி நிறைய சொல்லுவங்களாம். அதைத் தான் இவனும் ஃபாலோ பண்ணிட்டு இருந்தான். இப்போ பாட்டி இல்ல, அதனால அவங்க வார்த்தையை ஃபாலோ பண்ண வேண்டிய அவசியமும் இல்லை, சோ மாப்பிள்ளை பொண்ணுக்கிட்ட  மடங்கியாச்சு. “ என்று அமுதேவ் நடவடிக்கையில் உண்டான மாற்றத்திற்கு தான் கணித்த காரணத்தை கூறி.. கேலி செய்தான்   ஒருவன்.

“ நோ வே.. தேவ் வளர்ந்ததே அவன் பாட்டிக்கிட்ட தான், சோ அவனோட பாட்டினா உயிரு.. அவங்கப் பேச்சை எப்பவும் மீற மாட்டான், அது மட்டும் இல்ல,  தேவ் இப்படி அடிக்கடி  குணத்தை மாத்திக்கிற டைப்  இல்லை, நேத்துக்கூட உண்மை தெரியவும் ரொம்ப டென்ஷன் ஆனான்” என்றான் வினோத்.

“என்ன உண்மை?, எந்த உண்மையை பத்தி சொல்ற?” என்று கூடிநின்ற நண்பர்கள் கூட்டம் ஒரே கேள்வியை வேறு வேறு கோணத்தில் வினவிட.. தனக்குத் தெரிந்த உண்மையை எப்படி அனைவருக்கும் உரைப்பது  என்று குழப்பத்துடன்   தடுமாறி நின்றான் வினோத்.

“அது ஒன்னும் இல்ல, நேத்து மண்டபத்துல இருந்து   சார் பாதிலேயே கிளம்பி போயிட்டார்ல.. அதுக்கு தேவ் ரொம்ப டென்ஷன் ஆனான், அதை தான் சொல்ல வராரு. என்ன அப்படித்தானே வினோத்!” என்று வினோத்திற்கு பதிலாக பதில் கூறிய படி அங்கு வந்து நின்றான் தனுஜ்.

“நேத்து நீ பாதியில கிளம்பி போனதுக்கு தேவ் மட்டும் இல்ல இங்க இருக்கிற  எல்லாருமே உன் மேல செம காண்டுல தான் இருக்கோம்,  எங்க  கோபத்துல இருந்து தப்பிக்கணும்னு நினைச்சா  காஸ்ட்லியா ஒரு ட்ரீட் வைச்சிடு. “ என்று ஒருவன் கூறிட ஆமாம் என்று சத்தமிட்டும், தலையசைத்தும் ஆமோதித்தனர் மற்றவர்கள்.

‘ இவனுங்க ஒருத்தங்க என்ன பிரச்சனை ஓடிட்டு   இருக்குன்னே  தெரியாம   ட்ரீட் ட்ரீட்னு இம்சை பண்ணிட்டு… நான் நினைச்சது  நடந்திருந்தா கண்டிப்பா வைச்சிருப்பேன், இப்போ அதுக்கு வாய்ப்பு இல்லன்னு  தெரியுது இருந்தாலும், வேற வழி இல்ல.. ட்ரீட் வாங்காம விடமாட்டானுங்க!’ என்று  தனக்குள் சலித்துக் கொண்டவன், நண்பர்களிடம்  அவர்கள் கேட்ட நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டது போல் தலையசைத்தான்.

” எப்படியோ ஒரு ட்ரீட் கரெக்ட் பண்ணிட்டோம். அடுத்த டார்கெட் புதுமாப்பிள்ளை தான்” என்று ஒருவன் சந்தோஷ மிகுதியில் ஆரவாரம் செய்திட… ” டேய் அவன் இன்னும் ஃபேச்சுலர் பார்ட்டி கூட வைக்கல, சோ புது மாப்பிள்ளைனு பாவம்  பார்க்காம ஸ்டேஜ்ல வச்சே செமத்தியா செஞ்சுட்டு வரணும்.. நாம அடிக்கிற லூட்டில தேவ் மிரண்டுப் போய் ரெண்டு ட்ரீட்க்கும் ஓகே சொல்லிடணும்.  என்ன புரியுதா மச்சான்ஸ்.. ” என்று உடன் இருந்த நண்பர்களை ஏற்றிவிட்டான் மற்றொருவன்.

“சரி சரி.. இங்கயே நின்னு அரட்டை அடிச்சுட்டு  இருக்காம நகருங்க…  ஸ்டேஜ்க்கு போறோம்  ட்ரீட் கேட்கிறோம்” என்று  தனுஜ்  கூறிட, மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் தங்களுக்குள் கலகலத்தபடி   நண்பர்கள் கூட்டம்  மேடையை நோக்கி முன்னேறியது.

வினோத் தோள்களில் கை போட்டுக்  கொண்டு  நடந்த தனுஜ். ” நேத்து நான் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும், என் பேச்சைக் கேட்காம.. வேலை மெனக்கெட்டு வீட்டுக்கு போய்.. போன் போட்டு  தேவ் கிட்ட உண்மையை சொல்லிருக்க!, அப்படியிருந்தும் இந்தக் கல்யாணம் எப்படி  எதனால நடக்குதுன்னு தெரியுமா?, காதல்!, தேவ் விஷல்யா மேல வைச்சிருக்கிற உண்மையான காதல் தான்…  நீ சொன்ன உண்மைய  ஒன்னும் இல்லாம செஞ்சு இந்தக் கல்யாணத்தை  நடத்தி  வைக்குது.  ” என்றவன் மேடையில் ஜோடியாய் நின்ற மணமக்களை பார்த்து மனம் நிறைந்த மகிழ்வுடன் புன்னகைத்தபடி,  ”    தேவ் அடிக்கடி குணத்தை மாத்திக்கிற டைப் இல்லன்னு சொன்னேல!, அது உண்மைதான்..  அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு  தரது தான் தேவ்வோட  இயல்பான குணம்.  அதை  என்னைக்கும் அவன் மாத்திக்க மாட்டான். ” என்று  தன்  நண்பனைப் பற்றி பெருமையாக பேசியபடி வினோத்தை மேடைக்கு அழைத்துச் சென்றான் தனுஜ்.

” நீ எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும் என்னை பொருத்தவரைக்கும் இது நியாயம் இல்லாத கல்யாணம்.. நீங்க எல்லாரும் சேர்ந்து தேவ்வுக்கு அநியாயம் பண்ணிட்டீங்க.. ” என்றான் வினோத்.

”  என்ன நியாயம் இல்லாத கல்யாணமா?, …  பொய் சொல்லி கல்யாண ஏற்பாடு பண்ணும் போதும் சரி, உண்மைய  சொன்னதும் தேவ்வே மனசு மாறி கல்யாணத்தை  பண்ணிக்கிட்ட போதும்  சரி..  ரெண்டுமே உனக்கு அநியாயமாத் தான்  தெரியுது அப்படித்தானே!, எல்லாருக்கும் சரியா தெரியுறது உனக்கு மட்டும் தப்பாத் தெரியுதுனா…   அது எங்கத் தப்பு இல்ல, உன்னோட ஏழாம் அறிவு தான் இப்படி ஏடாகூடமா திங்க் பண்ண வைக்குது. இதுக்கு நாங்க  ஒன்னும் செய்ய முடியாது. உன்னை மாதிரி என்ன செஞ்சாலும்  குறை சொல்லிட்டு திரியுற  ஜென்மங்களுக்கு என்ன எடுத்துச் சொன்னாலும்  புரியப் போறது இல்ல.  இதுக்கு மேல நான் உனக்கு பதில் சொல்லப் போறதும் இல்ல” என்று  என்ன நடந்தாலும் குறை கூறும் மனநிலையில் இருப்பவனுக்கு உரைக்கும் படி வெடுக்கென்று பதில் கூறினான் தனுஜ்.

” உன் கூட உண்மையா பழகின நட்புக்கு துரோகம் பண்ணிட்டு.. ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத… துரோகி” என்று தன்னை மூடன் போல் சித்தரித்தவனை  காயப்படுத்தும்  வேகத்தில் பேசினான்  வினோத்.

”  என்  செயல்ல இருந்த   நியாயத்தை புரிஞ்சிக்க தெரியாத உன்னை  மாதிரி  ஆட்களுக்கு  நான்  துரோகியாவே இருந்துட்டு போறேன். போடா” என்று திமிராகவே பதில் கூறிவிட்டு  விலகிச் சென்றான் தனுஜ்.

 மேடையேறிய நண்பர்கள் கூட்டம் அவரவர்  கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை மணமக்கள் கையில் கொடுத்துவிட்டு வாழ்த்து கூறி.. குழு புகைப்படத்திற்கு வரிசையாய் நின்றிட… தனுஜ் பேசிய வார்த்தையில் உண்டான   வெறுப்புடன்  அவர்களைவிட்டு சற்று விலகி நின்றான் வினோத்.

” டேய் மச்சான் கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு எங்கள கண்டுக்காம விட்டுடாத.. வீ பாவம்.. ஃபேச்சுலர் பார்ட்டி கூட பெண்டிங்ல நிக்குது.. ” என்று ஒருவன் துவங்கிட…” நீ என்னடா அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க.. ” என்று முதலாமவனை அடக்கி விட்டு.. ” இங்க பாரு தேவ் நீ ஃபேச்சுலர் பார்ட்டி கூட கொடுக்கல, அதனால பெரிய ட்ரீட்க்கு அரேஞ்ச் பண்ணிடு.. இல்லைனா  காலம்பூரா  தயிர்சாதமாவே  இருந்திடுவ பாத்துக்கோ.. ” என்று பகிரங்க மிரட்டல் விடுத்தான் ஒருவன்.

” ஒரு சின்ன ட்ரீட்டுக்காக என் வாழ்க்கையையே   பணயம்  வைக்கிறீங்களே! ஏன்டா நீங்க அடங்கவே மாட்டீங்களா டா.. இன்னைக்கு தான் கல்யாணமாகிருக்கு இப்படி ஒரு சாபம்  குடுக்குறீங்களே!,  உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா?,பிளடி  பிகிளட்ஸ்..   ” என்று அமுதேவ் அதிர்ச்சியும் தவிப்புமாய் வினவிட…

” பார்ரா மச்சானுக்கு தயிர்சாதமாவே  இருந்திடுவோமோன்னு  பயம் வந்துருச்சு.. அந்த பயம் இருக்குல அப்ப ட்ரீட்க்கு  ஏற்பாடு பண்ணு” என்று விடாமல் வம்பு செய்தான் நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

” அதென்ன தயிர் சாதம்! அப்படின்னா என்ன அர்த்தம் அம்மு. ” என்று அதுவரை அமைதியாய் நண்பர்களின் கேலி கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  விஷல்யா வினவிட… ” டேய் அம்முவாம்  டா.. தயிர் சாதத்துக்கு ஏத்த பேருதான்.. ” என்று  அதையும் கிண்டல் செய்தான் ஒருவன்.

” ஹலோ என்ன  ஓவரா கலாய்க்கிறீங்க?” என்று விஷல்யா தனது வழமையான குணத்தை வெளிப்படுத்த… அவள் கரத்தை இறுகப் பற்றி அமைதிப் படுத்தியவன் ” இது பசங்களுக்குள்ளச்  சகஜம் ஷாலு,  பார்ட்டிக்காகத் தான்  இப்படி கலாய்க்கிறானுங்க,  பார்ட்டி தரேன்னு சொன்னாப் போதும்.. வாய் நிறைய வாழ்த்துவானுங்க” என்றான் அமுதேவ்.

” அப்போ பார்ட்டி தரேன்னு சொல்லிடு அம்மு,  அவங்க வயித்தெரிச்சல் நமக்கு எதுக்கு?” என்றாள் விஷல்யா.

”  அதான் உன் லேடி பாஸ்ஸே ஓகே சொல்லிட்டாங்களே.. பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணிடு..  மச்சான்”  என்று ஒன்றாக கூக்குரலிட்டது நண்பர்கள் பட்டாளம்.

” சரிடா தரேன்.. ஓவரா ஓட்டாதீங்க, அண்ட்   ஒன் மோர்  கிலாரிஃபிக்கேசன் ஷீ இஸ் நாட் மை பாஸ், ஷீ இஸ் மை லைப் பார்ட்னர்.” என்று  நண்பர்களின் கூற்றில் இருந்த தவறை திருத்திவிட்டு அவர்களின்  விருப்பத்திற்கு சம்மதம் கூறினான் அமுதேவ்.

” டபுள் ட்ரீட் டபுள் ஹேப்பி.. ” என்று உற்சாகத்துடன் பேசிக்கொண்டே வம்பு செய்த நண்பர்கள்  விலகிச் சென்று விட,  திருமணம் நடக்காது என்ற எண்ணத்துடன் வெறும் கையுடன் வந்த வினோத்..  அமுதேவ்வை மட்டும்     தனியாக இழுத்துச் சென்று, “ நம்ம பிரண்ட்ஸ்  கேங்ல  நீ மட்டும் தான் என்னை மாதிரியே யோசிக்கிற..  புத்திசாலின்னு நினைச்சேன், கடைசில நீயும்   உணர்வுகளுக்கு  அடங்கிப் போற செண்டிமெண்டல்  கிறுக்குன்னு  நிரூபிச்சுட்ட.  என்னடாக் கல்யாணத்துக்கு வந்து நாலு நல்ல வார்த்தை  சொல்லாம நம்மள முட்டாள்ன்னு சொல்லுறானேன்னு யோசிக்கிறியா?, எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கு அப்புறம் தனுஜ்ஜோட சுயரூபத்தை புரிஞ்சுக்காம, அவனை மன்னிச்சது மட்டும் இல்லாம,   துணிஞ்சு இந்தக் கல்யாணத்தை பண்ணிக்கிற, உன்னை முட்டாள்ன்னு சொல்லாம  வேறு என்னன்னு சொல்றது!,  “என்று புதிதாக மணவாழ்க்கையில் நுழைந்திருக்கும் நண்பனுக்கு வாழ்த்து கூறுவதற்கு பதிலாக தன் எண்ணம் ஈடேறவில்லை என்ற புகைச்சலில் பொரிந்து தள்ளினான்.

” புத்திசாலியா?, முட்டாளா?,  நல்லவனா?, கெட்டவனா?, இப்படி நான் யாருங்கிறதும்,  நான் எடுத்த முடிவு சரியாத் தப்பாங்கிறதும் எனக்குத் தெரிஞ்சா மட்டும் போதும் வினோ,  உனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம்  இல்லை.  உனக்கு நான் எப்படி  தெரியுறேங்கிறதும் எனக்கு  முக்கியம் இல்ல.  எனி.. வே  என் கல்யாண விஷயத்துல ஏதோ பிரச்சனை இருக்குன்னு  தெரிஞ்சதும் எனக்காக  யோசிச்சு.. உனக்கு  தெரிஞ்ச  உண்மையை சொல்லி எனக்கு எச்சரிக்கை கொடுத்ததுக்கு தேங்க்ஸ். நீ மட்டும் அந்த நேரம் எதுவும் சொல்லாம இருந்திருந்தா எனக்கு எந்த உண்மையும் தெரிஞ்சிருக்காது,  எனக்குள்ள இப்படி ஒரு மாற்றமும் வந்திருக்காது. ”  என்று வினோத் வார்த்தையை பெரிது படுத்தாமல் பேசினான் அமுதேவ்.

” உன் தேங்க்ஸ் யாருக்கு வேணும்?, உன் நன்றியை எதிர்பார்த்து நான் எதுவும்  செய்யல, உன் மேல இருந்த அக்கறையில  தான், உன் கூடவே இருந்து துரோகம் பண்ணுன  தனுஜ் தடுத்தும் உன்கிட்ட உண்மைய சொன்னேன். இப்போவும் உன் மேல இருக்கிற அக்கறையில தான்  பேசிட்டு இருக்கேன்.  உன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட்டாகாத இவ உன்னோட லைஃப் பார்ட்னரா வந்தா உன் வாழ்க்கையே நரகமாக மாறிடும்னு புரிஞ்சும், இப்படி ஒரு முடிவு  எடுத்ததுக்காக நீ பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ” என்றான் வினோத்.

“நம்ம வாழ்க்கை சொர்க்கமாக அமையுறதுக்கும் நரகமா மாறுறதுக்கும் நாம தான் காரணமாக இருக்க முடியும், வினோ.   நம்ம எண்ணமும் செயலும் தான் நம்மளோட சந்தோஷத்தை தீர்மானிக்கிது.  விஷல்யாவோட பொய்யையும் உண்மையா மாத்துற சக்தி என்னோட  காதலுக்கு இருக்கு. என் அன்பு அவளை எனக்குப் பிடிச்சமாதிரி மாத்தும். ”  என்று நம்பிக்கையுடன் பேசினான் அமுதேவ்.

” உன் காதல்  எல்லாத்தையும் மாத்தும்னு வெறும் வாய் வார்த்தைக்கு சொல்லுறத விட்டுட்டு, உண்மையிலேயே   அதைச் செஞ்சு காட்டு அப்போ உன் காதலுக்கும் அன்புக்கும் பவர் இருக்குன்னு  நம்புறேன். ” என்று சவால் விடுத்தான் வினோத்.

” நீ நம்புறதும் நம்பாததும் உன் தனிப்பட்ட விஷயம், அதுல தலையிட எனக்கு விருப்பமில்ல. உனக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லைனானும் எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு,  எனக்காகவும் என் வாழ்க்கைக்காகவும்  இதை நான் செஞ்சு காட்டுவேன்.” என்று தன் முடிவை தீர்மானமாகவும், அதில் நீ தலையிடுவது சரியல்ல என்று தெளிவாகவும் எடுத்துக் கூறினான் அமுதேவ்.

“உன் தனிப்பட்ட விஷயத்துல தலையிடாதன்னு  சொல்லாம சொல்றியா!,  உன் அன்பு அவளை மாத்துதா… இல்ல அவளோட அடாவடித்தனம் உன்னை அடக்குதான்னு நானும் பார்க்கத்தான போறேன், “என்றவன் அமுதேவ் முகத்தில் உண்டான மாறுதலை கவனித்து.. ” எப்படியோ நீ சந்தோஷமா இருந்தா அதுவே  போதும்” என்று தனக்குள் இருக்கும் வன்மத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் நல்லவன் போல் பேசினான் வினோத்.

இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருக்க அவ்விடம் வந்து சேர்ந்த தனுஜ்… ” பொண்டாட்டியத் தனியா விட்டுட்டு இங்க இவன் கூட வந்து என்னடா அரட்டை அடிச்சுட்டு இருக்க.. ” என்று அமுதேவ்வை தன்னுடன் இழுத்துச் செல்ல…” நீயும் வா.. வினோ ஷாலுக்கு இண்ட்ரோ குடுக்குறேன்” என்று தங்களுடன் வினோத்தையும் அழைத்துச் சென்றான் அமுதேவ்.

புகைப்படக் கலைஞர்கள் புதுமண தம்பதிகள் உடன் இணைந்து  நின்ற வினோத் மற்றும் தனுஜுடன் சேர்த்து நினைவுப் புகைப்படம் எடுத்துக்கொள்ள.. ” கங்கிராட்ஸ் அண்ட் ஆல் த பெஸ்ட் பார் யுவர் நியூ ப்ராஜெக்ட் தேவ்” என்று அமுதேவ்விற்கு வாழ்த்து கூறிவிட்டு,   விஷல்யா புறம் திரும்பி, ” நீ  செய்றதை எல்லாம் சகிச்சுட்டு போகக்கூடிய புருஷன் கிடைச்சிருக்கான், இனியாவது ஊரைத்  திருத்துறேன்,  உலகத்தை திருத்துறேன்னு சுத்திட்டு  திரியாம  குடும்பத்தை நல்ல படியா கவனிச்சுக்கோ” என்று இலவச அறிவுரை  வழங்கினான் வினோத்.

தன்னை மட்டும் தட்டி பேசியவன் வார்த்தையில் உண்டான கோபத்துடன்.. ”  நாட்டுல என்ன நடந்தாலும் நமக்கு என்னென்னு ஏதோ ஒன்னு மேல மழை பெஞ்ச மாதிரி அமைதியா இருக்கிற சில ஜென்மங்க திருந்தினா.. நான் எதுக்கு  நாட்டைத் திருத்த சிரமப்படப் போறேன்  தோழா.. ” என்று அவன் பாணியிலேயே பதிலடி  தந்தாள் விஷல்யா.

 ” ஷாலு..  ” என்று குரலை உயர்த்தி  அமுதேவ் அடக்கிட.. தன்னை மட்டம் தட்டியவனையே.. மட்டம் தட்டி பதிலடி கொடுத்த விஷல்யாவின் துடுக்குத்தனமான தைரியத்தை  எண்ணி   தனுஜ் தனக்குள் சபாஷ் என்று மெச்சிக்கொள்ள.. மேலும் மேலும் அவமானப்பட விரும்பாமல் அடுத்த வார்த்தை பேசாது அங்கிருந்து கிளம்பினான் வினோத்.

திருமணம் முடிந்தக் கையேடு  பிறச் சடங்குளை நிறைவேற்ற புதுமணத் தம்பதிகளை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் தாமோதரன் மற்றும் தாமரை.

பகல் முடிந்து இரவு தொடர்ந்தும்… கருநிற வானில் நிலவு மகள் படர்ந்ததும், புதுமண ஜோடிகள் தனி அறையில் தனித்து விடப்பட்டனர்.

கட்டிலில் சாய்ந்தபடி கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அமுதேவ் அருகில் வந்து..   விஷல்யா அமர்ந்ததும், “சோ… ஒரு வழியாக் கல்யாணம் முடிஞ்சுடிச்சு.. “என்றான் அவன்.

“அதை எதுக்கு இவ்வளவு சோகமா சொல்லுற உனக்குப் பிடிக்கலையா?” என்று விஷல்யா வினவிட…“ பிடிக்கலன்னு இல்ல.. பிடிக்காம இருந்திருந்தா இந்தக் கல்யாணத்தை நானே நிறுத்தி இருப்பேன். இன் ஃபேக்ட் நானே இந்த நாளுக்காகத் தான்  ஆவலாக காத்திட்டு இருந்தேன், கல்யாண தேதியை மாத்தி முன்னாடியே குறிச்சத்தும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?. நான் நினைச்சபடியே கல்யாணம் நடந்துச்சு இருந்தாலும் மனசுல ஒரு வருத்தம்“  என்று தன் அருகில் இருந்த  விரல்களை இதமாய் பற்றிக் கொண்டான்.

கோர்த்த விரல்களை விலக்காமல் ஒருவித பிடிவாதத்துடன்  பிடித்திருந்த  அமுதேவ் நெருக்கம் உள்ளுக்குள் ஏனோ நெருடலை கொடுக்க, இறுக்கத்துடன்  இணைந்திருந்த விரல்களை விலக்க முயன்றாள் விஷல்யா.

அவள் முயற்சியை புரிந்து கொண்டு  மேலும் அழுத்தமாய் பற்றிட.. “ என்னப் பண்ணுற அம்மு,  கைய விடு வலிக்குது..” என்று   மெதுவாய் முணுமுணுத்தாள் விஷல்யா.

“ வாழ்நாள் முழுக்க என் கையைப் பிடிக்கணும்னு தான இவ்வளவும்  செஞ்ச… இப்போ பிடிச்ச கையை விடுன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவளைப் போலவே ரகசியக் குரலில் வினவினான் அமுதேவ்.

“ உன் கையப் பிடிக்கணும்னு தான் ஆசைபட்டேன்.. உன் கைக்குள்ள அடங்கிக்  கிடக்க இல்ல. கையை விடு” என்றவள் அவன் விடாமல்  பிடித்திருக்க…  நகம் கொண்டு கீறி அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் விஷல்யா.

“ வலிக்குதுடி ராட்சசி!, புருஷன் இந்த நேரத்துல இந்த மாதிரி ஆசையா வலிக் கொடுத்தா பொண்டாட்டி அதை சந்தோஷமா ஏத்துக்கணும், அப்போதான் இரண்டு பேருக்கும் நடுவுல காதல் அதிகமாகும், சம்திங் சம்திங் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்“ என்ற படி நகக் கீறல் பட்ட இடத்தை விரல் கொண்டு தடவிவிட்டு.. விஷல்யா விரல்களை மீண்டும் பற்றிக் கொண்டான் அமுதேவ்.

“ என்னடா  இது!, எனக்குத் தெரியாத புது  விதிமுறையா இருக்கு, வலி இரண்டு பேருக்கும் பொது தானே!, நீ வலி குடுக்கும்போது நான் சந்தோஷமா ஏத்துக்கணும், நான் கொடுத்தா அது தப்பா?” என்றாள் விஷல்யா.

” ஏற்கனவே நீ கொடுத்த வலி போதும் ஷாலு,  இதுக்கு மேலேயும் என்னை காயப்படுத்த முயற்சி பண்ணாத… என்னாலத் தாங்கிக்க முடியாது” என்று இணைந்திருந்த விரல்களை விலக்கி கொண்டு  இரண்டடி தள்ளி  அமர்ந்தான் அமுதேவ்.

” நான் சொன்ன பொய் தானே அந்த வலி?”என்றாள் விஷல்யா.

“பொய்…“என்று சற்று இழுத்தவன்.. “ உன் பொய்க்கான காரணம் என் மேல இருந்த காதல் தான்னு நினைக்கும் போது எனக்கே என்னை  நினைச்சு  கர்வமா  இருக்கு ஷாலு ” என்று அதே கர்வத்துடன் புன்னகை  செய்தான் அமுதேவ்.

” நான் சொன்ன பொய் உனக்கு   கஷ்டத்தைக்  கொடுக்கலனா, வலின்னு எதை சொல்லுற.. ?” என்றாள்  விஷல்யா.

” நான் வேணாம்னு முடிவு எடுத்து என்னை விட்டு நீ பிரிஞ்சு இருந்தது தான் எனக்கு வலியை   கொடுத்தது ஷாலு.. ” என்று இருவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை குறைத்து ஒட்டி அமர்ந்து கொண்டவன்… அவள் தோள்களில் மெல்லச் சரிந்துக் கொண்டு.. ” உன்னோட பிரிவை என்னால தாங்கிக்கவே முடியல குட்டிமா.  நீ இல்லாத வாழ்க்கையை என்னால  நினைச்சுக்  கூட பாக்க முடியல.. உணர்வோட இருக்கும் போதே  யாரோ என்னோட உடம்பை விட்டு உயிர மட்டும் தனியா பிரிச்சு  எடுக்குற மாதிரி வலிச்சது”  என்றான் அமுதேவ்.

தன்னவன் உணர்வுபூர்வமான  வார்த்தையில்  தன் மீது அவன் கொண்ட  உயிர் காதலை உணர்ந்தவள், “   உனக்கு என் மேல கோபம் இல்லையா அம்மு.  ?“ என்றாள் விஷல்யா.

” கோபத்தை விட காதல் தான் அதிகமா இருக்கு குட்டிமா”  என்றான் அமுதேவ்.

தன்னை இந்த அளவுக்கு காதலிப்பவனை, விட்டுப் பிரிந்து வருத்தியதும் இல்லாமல் பொய் சொல்லி மேலும் காயப்படுத்தி விட்டோம் என்று உணரத் துவங்கியவள், குற்ற உணர்ச்சியில் குன்றத் துவங்கினாள். ” சாரி அம்மு.. நான் உன்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன் ” என்று உள்ளார்ந்த வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டினாள் விஷல்யா.

” சாரி எல்லாம் வேணாம் குட்டிமா. இனிமே என்ன நடந்தாலும் என்னை  விட்டு நீ பிரிஞ்சு போகாம இருந்தாலே போதும்” என்றான் அமுதேவ்.

” பிரிஞ்சு போகணும்னு நினைச்சு  இருந்தா நீ மண்டபத்தை விட்டு  யார்கிட்டயும் சொல்லாம கிளப்பி  போனதுமே.. கல்யாணத்தை நிறுத்திட்டு  நானும் கிளம்பி இருப்பேன் அம்மு. என்னவோ தெரியல என்னால உன்னை விட முடியல. ” என்றவள், ஒருநொடி அமைதி கொண்டு.. எதையோ யோசித்தபடி மேலும் தொடர்ந்தாள், ” இவ்வளவு பேசுற நீ  என்னை வேணாம்னு தூக்கி  போட்டுட்டு  தானே மண்டபத்தை விட்டு வந்த?.. ” என்றாள்.

நீண்ட  உரையாடலுக்கு தயாராபவன் போல் பெருமூச்சை வெளியேற்றி விலகி அமர்ந்தவன்,   “மால் பார்க்கிங்ல வச்சு யாரையோ நீ செமத்தியா கவனிச்ச வீடியோவை வினோத் எனக்கு அனுப்பி வச்சான். அதைப் பார்த்தும்  முதல்ல கோபம்  தான் . இப்படி ஏமாந்துட்டோமேன்னு  என் மேல எனக்கே வெறுப்பா  இருந்தது. நீங்க சொன்னப் பொய்க்கு எல்லாம்  தனுஜும் உங்களுக்கு உடந்தையா இருந்தான்னு   தெரியவும் எனக்கு வந்தக் கோபத்துக்கு அளவே இல்ல. அந்த நேரம் மட்டும் நீங்க இரண்டு  பேரும் என் கையில கிடைச்சிருந்தா உங்கள என்னப்  பண்ணிருப்பேன்னு கூடத் தெரியாது, அந்தளவுக்கு  கோபத்துல  இருந்தேன். நான் நம்புனவங்க  எல்லாம் என்னை  ஏமாத்திட்டாங்கன்னு கோபத்துல இருந்த எனக்கு மண்டபத்துல இருக்க முடியல, மூச்சு முட்டுற மாதிரி பீல் ஆச்சு. நேரம் போகப்போக  பொய் சொல்லி  ஏமாத்துறதுக்கு  என்ன காரணமா இருக்கும்னு யோசிக்க  ஆரம்பிச்சேன். நாம யாரைப்  பிரச்சனையா நினைக்கிறோமோ  அவங்கப் பக்கத்துல   இருந்து யோகிறத விட  அவங்கள விட்டு விலகி இருந்து யோசிக்கிறது நல்லதுனு தோணுச்சு அதனாலதான் வீட்டுக்கு கிளம்பிப் போனேன். வீட்டுக்கு போய் தனியா இருந்து யோசித்துப் பார்க்கும்போது எனக்கு ஒரு தெளிவு கிடைச்சது ” என்றான் அமுதேவ்.

” அடடா இது தெரியாம நான் வேற வாலண்டியாரா வந்து  குத்தத்தை ஒத்துக்குறேன்  சாமின்னு, உன்  முன்னாடி  ஒப்புதல் வாக்குமூலம்   குடுத்துட்டேனே!” என்று சோகம் போல கூறினாள் விஷல்யா.

” எது…!,  ஆமா நான் இப்படித்தான், எனக்கு புடிச்ச மாதிரி தான் இருப்பேன்,  என்னை  மாத்த முடியாது, மாத்த முயற்சி பண்ணாத,  நீ விட்டாலும் உன்னை விடமாட்டேன்னு பன்ச் டயலாக் பேசுறது தான் உங்க ஊருல ஒப்புதல் வாக்குமூலமா?” என்று கிண்டல் செய்தான் அமுதேவ்.

” திருட்டு ராஸ்கல், குடிச்சுட்டு போதையில கிடக்குறன்னு நினைச்சா நீ எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தயா?” என்று அதிர்ச்சியுடன்  விஷல்யா வினவ… ” என்ன நடக்குது,  அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்க தானே மண்டபத்தை விட்டு கிளம்பி வந்தேன்னு சொன்னேன்.  ஃபுல்லா குடிச்சுட்டு போதையில் மயங்கி கிடந்தா என்ன யோசிக்க முடியும் அறிவு ஜீவி!”  என்று கிண்டலாய் சிரித்தான் அமுதேவ்.

” சிரி சிரி நல்லா சிரி உன்னைக் காணோம்னு தெரிஞ்சதும்,  வீட்ல எல்லாரும் எப்படி பதறிப்  போயிட்டாங்கன்னு தெரியுமா?, நாளைக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு  நாங்க எல்லாம் மண்டபத்தில் தலையை பிச்சிட்டு   நிற்கிறோம்,  நீ என்னடான்னா வீட்டுக்கு வந்து யோசிக்கிறேங்கிற பேர்ல தூங்கிட்டு இருந்திருக்க.. ” என்று பொய்யான கோபம் காட்டினாள் விஷல்யா.

தன்னவள் பொய்க்கோபத்துடன் தன்னைச் சாடுவதை ரசித்துப் பார்த்திருந்தவன், ” என்னது  தூங்கிட்டு இருந்தேனா?,  தூக்கத்துல இருந்திருந்தா.. என்னால எப்படி யோசிக்க முடியும்?, நீ  பேசினது எப்படி எனக்கு கேட்டிருக்கும்?, லூசு” என்று கேலி செய்து சிரித்தான் அமுதேவ்.

” என்னது லூசா நான் லூசா..?, லூசு என்ன செய்யும் தெரியுமா?, ” என்று கேட்டபடி அமுதேவ் கரத்தினை விஷல்யா கடிக்க முயல…  அவள் முயற்சியை முறியடித்து..  தன்னோடு  சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன். ”  சொல்லி வாயை மூடல அதுக்குள்ள லூசுன்னு நிரூபிக்கிற பார்த்தியா.. ?” என்றபடி கன்னத்தில் முத்தம்  ஒன்றை பதித்து விட்டு… முத்தக்   கிறக்கத்தில் அவள் முழுதாய்  மூழ்கும் முன்.. வலிக்கும்படி கடித்து வைத்தான்.

” ஆ.. ” என்று அவள் அலறித் துடிக்கும் போதே… கழுத்து வளைவில் முகத்தை  பதித்து… ” லவ் யூ டி.. பொண்டாட்டி. நீ மட்டும் பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்த முயற்சி பண்ணாம இருந்திருந்தா எனக்கு நீ கிடைச்சு இருக்கவே மாட்ட..  தேங்க்ஸ் டி..” என்றிட…

” வெறும் பொய் மட்டுமா சொன்னேன், இந்த கல்யாணம் நடக்கலன்னா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்ட வேற செஞ்சேனே!, நீ கூட தனுஜ் கிட்ட நான் குடுத்த லெட்டரைப் பார்த்துட்டு தானே வேற வழியில்லாம  கல்யாணத்துக்கு சம்மதிச்ச..” என்றாள் விஷல்யா.

” எந்த லெட்டர்?,   நீ சொல்ற மாதிரி தனுஜ் எந்த லெட்டரையும் எங்கிட்ட கொடுக்கலையே.. கல்யாண மண்டபத்துல  இருந்து கோபமா வீட்டுக்கு  வந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் எதுவுமே யோசிக்க முடியல,  என்ன செய்றதுன்னு தெரியல லைட்டா  ட்ரிங்க் பண்ணுனேன். ஓவரா போச்சுன்னா யோசிக்க முடியாதுன்னு ட்ரிங்க் பண்றத ஸ்டாப் பண்ணிட்டு, நீ எதுக்கு எனக்காக  உன்னையே மாத்திக்கிட்ட  மாதிரி பொய்  சொல்லி நடிக்கணும்னு   யோசிக்க ஆரம்பிச்சேன். என் மேல இருந்த காதல்ல என்னை மறக்க முடியாம தான் பொய் சொல்லியிருப்பனு புரிஞ்சது. அதுக்கப்புறம் உன் மேல இருந்த கோபம் குறைஞ்சு அதுக்கு முன்னாடி    இருந்ததை விட காதல் அதிகமாயிடுச்சு.  இந்தக்  கல்யாணம்  எனக்கு முக்கியம்னு நான்  ஒரு முடிவுக்கு வந்தப்ப தான்..  நீயும் தனுஜும் வந்தீங்க. அதுநாள் வரைக்கும்  பொய் சொல்லி என்னை ஏமாத்தினதுக்கு தண்டனையா அடுத்த நாள் காலைல வரைக்கும் கல்யாணம் நடக்குமோ நடக்காதோங்கிற தவிப்புல நீ இருக்கணும்னு தான்.. மயக்கத்தில் கிடந்த மாதிரி நடிச்சேன். என்ன நடந்தாலும் சரி உன்னை விட்டு தர மாட்டேன்னு  நீ பிடிவாதமா சொன்ன பாரு… அந்த வார்த்தை..   அந்த ஒரு வார்த்தை உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும் துடைச்சு எறிஞ்சிடுச்சு. அதுவரைக்கும் இருந்த  ஸ்ட்ரெஸ் நீ பேசிட்டு போனதுக்கப்புறம் ஃரிலீப் ஆன மாதிரி ஃபீல் ஆனது. கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிட்டேன். காலைல எந்திருச்சு பார்க்கும் போது தனுஜ் கொறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தான். என்னதான் இருந்தாலும்  நீ சொன்ன பொய்க்கு அவனும் தான உடந்தையா இருந்தான். அதான் அவனை எழுப்ப கூட இல்ல நான் மட்டும் கிளம்பி மண்டபத்துக்கு வந்துட்டேன். ” என்று தன் மன மாற்றத்திற்கான காரணத்தை கூறினான் அமுதேவ்.

தன்னால் இரு நண்பர்களுக்குள் நடுவில் இருந்த நட்பில் விரிசல் உண்டானதை உணர்ந்து.. குற்ற உணர்வுடன்,  ” சாரி அம்மு தனுஜ்  மேல எந்த தப்பும் இல்ல… இன் ஃபேக்ட் ஆரம்பத்துல எதுக்கு என் நண்பனை இப்படி ஏமாத்தறீங்கன்னு,   எங்க மேல கோபப்பட தான் செஞ்சாரு . நாங்க தான் அவரை சமாளிச்சு எங்க திட்டத்திற்கு சம்மதிக்க வைச்சோம். சோ என்னை மன்னிச்சு மாதிரியே அவரையும் மன்னிச்சிடு. ” என்றாள்  விஷல்யா.

” உனக்காக  யோசிச்ச நான், அவன் தரப்பு நியாயம் என்னன்னு யோசிக்காம இருப்பேனா.. என் கூட பல வருஷமா பழகிட்டு இருக்கிறவன், எப்பவும் எனக்கு நல்லதை மட்டும் யோசிக்கிறவன் திடீர்னு இப்படி ஒரு ஸ்டெப் எடுத்திருக்கான்னா..    நீங்க அவனைக் கட்டாயப்படுத்துனது மட்டும் காரணம் இல்ல , எனக்காகவும் யோசிச்சு தான்  தனு இதை  செஞ்சிருக்கான். நான் உன்னை   அளவுக்கு அதிகமாக காதலிச்சதும், உன்னை பிரிஞ்சதுக்கு பிறகு  நான் அனுபவிச்ச வலியும் வேதனையும் அவனைத் தவிர யாருக்கும் தெரியாது. நீ இல்லாம நான்  கஷ்டப்படுறதை பார்க்க முடியாம உன்கூட திரும்பச் சேரச் சொல்லி பல தடவை கட்டாயப்படுத்தியிருக்கான்.. நான் தான் நீ பேசினா வார்த்தைய  மனசுல வைச்சிட்டு,  பார்த்துட்டு உன்னை விட்டு விலகியே இருந்தேன். நானா வந்து உன்கூட சேர வாய்ப்பு இல்லைனு தெரிஞ்சு தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பான். ” என்று தன் ஆருயிர் நண்பன் செயலில் இருந்த நியாயத்தை கூறினான் அமுதேவ்.

” பார்ரா என் அம்முவுக்கு இப்படியெல்லாம் கூட யோசிக்க தெரியுமா?, ரொம்ப பக்குவமா  பிரச்சனையோட எல்லா பக்கத்திலிருந்தும் யோசிச்சு சொல்யூஷன் கண்டுபிடிச்சிருக்கயே!, ” என்று தன் கணவன் பிரச்சனையை கையாண்ட விதத்தை மெச்சிக் கொண்டாள்  விஷல்யா.

” ஏன் என்னோட பக்குவத்துக்கு என்ன குறைச்சல்?, கோபமா இருக்கும்போது யாராலயும் தெளிவா யோசிக்க முடியாது. நம்ம பக்கத்து நியாயம் மட்டும்தான் அப்போ நமக்கு பெருசாத் தெரியும். நமக்குள்ள இருக்குற கோபத்தை ஒதுக்கி  வைச்சுட்டு, பிரச்சனைய மூணாவது மனுஷனோட கண்ணோட்டத்திலிருந்து பார்க்க ஆரம்பிச்சோம்னா அப்போ  நமக்கு எதிர்த்தரப்பு ஆட்களோட நியாயமும் தெளிவாத் தெரியும். இரண்டு பக்கத்து நியாய அநியாயத்தை அலசிப் பார்க்க ஆரம்பிச்சா பிரச்சனைக்கு சொல்யூசன் ஈஸியா கிடைச்சுடும். ” என்றான் அமுதேவ்.

” இந்தப் பக்குவம் உன் அம்மா விஷயத்துல இல்லாம  போச்சே ஏன் அம்மு?” என்று அமுதேவ்   தன் அன்னை  விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் நிலையை சுட்டிக்காட்டினாள் விஷல்யா.

” இப்போ எதுக்கு அவங்கள பத்தி பேசுற நம்ம வாழ்க்கைய பத்தி மட்டும் யோசி.. ” என்று அதுவரை கொண்டிருந்த இலகுவான முறையை கைவிட்டு கண்டிப்புடன் பேசினான் அமுதேவ்.

” இவ்வளவு நேரம் பக்குவமா பேசிட்டு இருந்த, உன் அம்மாவைப் பத்தி பேச்சு வந்ததும்  சின்னப்புள்ளத்தனமா கோபப்படுறயே இது உனக்கு சரியாபடுதா  அம்மு. உனக்கு பிடிச்சவங்க செஞ்ச தப்பை மன்னிச்சு அவங்க தரப்பு நியாயத்தை யோசிக்கத் தெரிஞ்ச  உனக்கு உன் அம்மா பக்கத்து நியாயம் புரியலையா?, உனக்கு பிடிச்சவங்களுக்கு ஒரு நியாயம் பிடிக்காதவர்களுக்கு ஒரு நியாயமா?, ” என்றாள் விஷல்யா.

” ஷாலு.. ஜஸ்ட் ஷட் அப்.. என் மூட ஸ்பாயில் பண்ணாத” என்று அதுவரை தன்னை ஒட்டி அமர்ந்து இருந்தவளை விலக்கித் தள்ளி விட்டு அங்கிருந்து விலகிச் சென்றான் அமுதேவ்.

“நீ இந்த அளவுக்கு கோபப்பட என்ன இருக்கு அம்மு?,  நான் உன்கிட்ட திரும்பி வந்ததுக்கு தேங்க்ஸ் சொன்னயே!, அந்த தேங்க்ஸ் எனக்கு இல்ல உன் அம்மா கிட்ட சொல்லி இருக்கணும். நாம ஒன்னு சேர்ந்ததுக்கு முக்கியமான காரணமே அவங்க தான். ” என்று பெண் பார்க்க துவங்கியதிலிருந்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி முடித்தாள் விஷல்யா.

” வாட் அப்போ அந்த ராங் கால் பண்ணினது நீதானா?.. அதனாலதான் நேத்து பேசும்போது ஹாஸ்பிட்டல்ல வச்சு உனக்காக  துடிச்சத பார்த்து..  என்னை விட்டுடக் கூடாதுன்னு முடிவு எடுத்தேன்னு சொன்னயா? ” என்று அதிர்ச்சியுடன் வினவினான் அமுதேவ்.

” ஒருவேளை உன் மனசு மாறி இருந்தா.. என்ன பண்றது அதுக்காக தான் அப்படி ஒரு டெஸ்ட்  வைச்சேன். ” என்றாள்  விஷல்யா.

” ஹே.. ஃபிராடு.. என்னென்ன சீட்டிங் வேலை பண்ணிருக்க.. ” என்று தனக்கு எதிரில் இருந்தவள் இடை பற்றி இழுத்து  இருவருக்குமான இடைவெளியை குறைத்துக் கொண்டவன்,  ”  இதையெல்லாம் நீ எனக்காக தான் செஞ்சன்னு நினைக்கும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” என்று   அதுவரை கொண்டிருந்த சச்சரவை விடுத்து காதல்  சரசத்தில் இறங்கிடத் துவங்கினான் அமுதேவ்.

தன்  அன்னை பற்றிய பேச்சை வேண்டுமென்றே  தவிர்க்கிறான்  என்று புரிந்து.. மெது மெதுவாக பேசிதான்  பானுஸ்ரீ  மீது இவன் கொண்ட தவறான அபிப்ராயத்தை மாற்ற வேண்டும் என்று தனக்குள் எண்ணிக்கொண்டிருந்த  விஷல்யா.. அமுதேவ் விரல்கள் தாபத்துடன்   தன்னைத்  தழுவிட…  சிந்தனையை கைவிட்டு..  ” அம்மு.. ” என்று எதையோ சொல்லத் துவங்க..  அவசரமாய் அவள்  இதழை தன் இதழ் கொண்டு சிறை பிடித்து… வார்த்தைகளை விழுங்கச் செய்தான் அமுதேவ்.

திருமணம் நல்ல விதமாக நடக்குமோ நடக்காதோ என்று தவிப்புடன் இருந்தது… திருமணம் நடந்தேறிய களைப்பு என்று உடலாலும் உள்ளத்தாலும் சோர்வை உணர்ந்தாலும்,  தன்னை முழுதாய் ஆட்கொள்ளத்  துடிக்கும் காதல் கணவனின்   விரலுக்கும் விரகத்துக்கும் தடை சொல்லாமல் தன்னை வழங்கிடத் துவங்கினாள்.

விஷல்யா வாய்விட்டு  சொல்லாத அயர்வின் சோகத்தை அவள்   விழிகளில் படித்தவன், காதல் வேகத்தை கைவிடுத்து, ” ரொம்ப டயர்டா இருக்கும்,  இப்போ இது போதும் நீ போய் தூங்கு… ”   என்று கை சிறையிலிருந்து  விடுதலை வழங்கினான் அமுதேவ்.

தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்னவன் அன்பை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டவள் இரவு உறக்கத்தை தழுவினாள்.

‘ உனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா நீ இப்போ என் பேச்சை கேட்க   ஆரம்பிச்சுட்ட ஷாலு,    சீக்கிரமே உன்னை என் வழிக்கு கொண்டு வந்துடுவேன்.. ‘ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவன்.

அன்பிற்கு மட்டுமே அடங்க கூடியவள் என்று அறிந்து… அதன் வழியிலேயே தன்னவளை தன் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்றத் தீர்மானத்துடன்…  அருகில் இருந்தவளை அணைத்துப் பிடித்தபடி உறங்கிப் போனான் அமுதேவ்.

 

எப்போதும் உன்னை

மறக்கமாட்டேன் என்று

சொல்லும் உறவை விட..

என்ன நடந்தாலும்

உன்னை வெறுக்கமாட்டேன்..

என்றஉறுதியுடன்

அன்பு கொள்ளும் உறவு

கிடைப்பது  வரம்…

Advertisement