Advertisement

12…

மனம் விரும்பும் மணம்  நிகழுமா?…

 

காதலும்

மனித உணர்வுகளில்

ஒன்றென்று எண்ணியிருந்தேன்

நானடா..

காதல் தான்

மனிதனை மனிதனாய்

உணரச்செய்யும்

உணர்வு என்று

உணர்த்திச் சென்றாய்

நீயடா…

உறவில் விரிசல் கொண்டு வருடக் கணக்கில் பிரிந்திருந்த உறவுகள்   ஒன்று கூடும் திருமண நிகழ்வில், மனைவி பேச்சைக் கேட்டு அன்னையை ஒதுக்கி வைத்த  வாசுதேவ் மீது  வெறுப்பில் இருந்த தாய் வழி உறவுகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.

 “ என்னப்பா வாசு நல்லா இருக்கியா?” என்று  வாசுதேவ்வின் அன்னை அமுதவல்லி வழி உறவினப் பெண்மணி நலம் விசாரிக்க.. “ நான் நல்லா இருக்கேன் சித்தி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பதிலுக்கு நலம் விசாரித்தார் வாசுதேவ்.

“ எனக்கு என்னக் குறை!, பேரப்பிள்ளைங்க கூட நிம்மதியா இருக்கேன். இத்தனை வயசுக்கு பிறகும் என் பிள்ளை என்னை பாரமா நினைக்காம அவன் கூடவே வைச்சு நல்ல விதமா  பார்த்துக்கிறான். பாவம் அமுதவல்லி அக்காவுக்கு தான் அந்தக் குடுப்பனை இல்லாம போச்சு.” என்று  இல்லாத அக்காவை எண்ணி அங்கலாய்த்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

“கடைசிக் காலம் வரைக்கும், எங்கப் பையன்….  அவங்கப் பேரன் அவங்கக் கூடவே தானே இருந்தான். அதானால குறையோடத் தான் போனாங்கன்னு சொல்ல முடியாது சித்தி.   “ என்றார் வாசுதேவ்.

“ எத்தனை பேர் கூட இருந்தாலும் பெத்தப்பிள்ளைக் கூட இருக்கிற நிம்மதி கிடைக்காது வாசு. உன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் அக்கா உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தாங்கன்னு எங்களுக்குத் தான் தெரியும். நேத்து வந்த ஒருத்திக்காக, உன்னை பாடுபட்டு படிக்கவைச்சு சமுதாயத்துல மதிக்கும்படி ஆளாக்கின அம்மாவை ஒதுக்கி வைச்சது ரொம்பத் தப்பு. அம்மா அம்மான்னு பாசமா இருந்த பிள்ளையப் பெத்தவக் கிட்ட இருந்து பிரிச்சப் பாவத்துக்கு உன் பொண்டாட்டி அனுபவிப்பா… “ என்று  அந்தப் பெண்மணி விடாமல் வாதாட.. “ நீங்க சொல்லுறது சரிதான் சின்ன அத்தை. எத்தனை உறவு நம்மப் பக்கத்துல இருந்தாலும்  பெத்தப் பிள்ளைங்க கூட இல்லாத வாழ்க்கை நரகம் தான்.   அந்த அனுபவத்தையும் அனுபவிச்சுப் பார்க்க வாய்ப்பு குடுத்த என் அத்தைக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும். ” என்றபடி அவர்களுக்கு பின் வந்து நின்றார் பானுஸ்ரீ.

அன்னையிடம் இருந்து பிள்ளையைப் பிரித்தது தன் தவறு என்றால்   அதே தவறைத் தான் அவர்களும் செய்தார்கள் என்று பானுஸ்ரீ சொல்லாமல் சொல்லிக் காட்டிட.. அவர் சொல்ல வந்ததை தவறாகப்  புரிந்துகொண்டு,  “ பண்ணின பாவம் சும்மா விடுமா.. அதான் அனுபவிக்கிற..   இப்பத் தானே பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போற..  இன்னும் அனுபவிப்ப. நாம பார்த்து வளர்த்தப் பையன் நம்மப் பேச்சைக் கேட்காமப் பொண்டாட்டி பேச்சக் கேட்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு இனி தான் உனக்கு புரியும்.“ என்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள் என்றும் பாராமல் மனதில் உள்ள வஞ்சத்தைக் கொட்டித் தீர்த்தார் அந்தப் பெண்மணி.

“ என் பையன் என் பேச்சைக் கேட்டு நடந்தா நல்லாத் தான் இருக்கும். ஆனா அதுக்கான வாய்ப்பை என் அத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுக்கலயே சின்ன அத்தை!. அது சரி நடந்து முடிஞ்சதப் பத்தி பேசி என்னப் பிரோஜனம்… இனி நடக்கப் போறதப் பத்தி பேசுவோம்.  பொண்ணுகளோட உணர்வை மதிக்க தெரிஞ்சவன் தான்  உண்மையான ஆண்மகன்னு நினைக்கிற ஆள் நான்,  அதனால நீங்க சொல்லுற மாதிரி என் பிள்ளை அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடந்தா எனக்கு சந்தோசம் தான். “ என்றார் பானுஸ்ரீ

“ பேசும் போது ஈஸியா தான்  இருக்கும்!, அனுபவிக்கும் போது தான் என் அக்கா அனுபவிச்ச வேதனை என்னன்னு புரியும்” என்றவர் அதற்கு மேல் நின்று வீண் வாதம் புரியாமல் அங்கிருந்து விலகிச் சென்றார்.

மனைவி முகத்தில் இருந்த வெறுப்பான உணர்வை கவனித்த வாசுதேவ்.. “  அடுத்தவங்க  நல்லவங்கன்னு புகழ்ந்து தள்ளுறதால… இந்த உலகம்  நம்மளத் தலையிலத் தூக்கி வைச்சுக் கொண்டாடப் போறதும் இல்ல, துரோகின்னு தூக்கி எறியுரதாலக் கொன்னுப் புதைக்கப் போறதும் இல்லன்னு சித்தாந்தம் பேசுற நீயே.. என் சித்தி பேசுனத கேட்டு சங்கடப்பட்டு நிக்கிறது  நல்லாவா இருக்கு.  உண்மை என்னன்னு எனக்குத் தெரியும் உனக்குத் தெரியும்.  தேவை இல்லாம அடுத்தவங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல பானு. அம்மா சொன்னதை வச்சு உன்னை அவங்க எண்ணத்துல வேறு விதமா உருவகப்படுத்தி வச்சிருக்காங்க.. இவங்களுக்கு விளக்கம் கொடுக்கிறதும் வேஸ்ட் தான்.  ” என்றார் வாசுதேவ்.

“ உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கலன்னா அது அவங்களோட தனிப்பட்ட விஷயம், அதை தனக்குள்ள வைச்சுக்காம   சுத்தி  இருக்கிறவங்க கிட்டயும் என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து, மத்தவங்க மனசுலயும் என் மேல வெறுப்பை உருவாக்கி வச்சிருக்காங்க.    சரி உங்க அம்மாதான் என் மேல இருந்த கோவத்துல ஒன்னுக்கு ரெண்டா சொல்றாங்கன்னா… இவங்களாவது உண்மை என்னன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணக் கூடாது!, நமக்கு கொஞ்சம் கூட பழக்கம் இல்லாதவங்க குணத்தைப் பத்தி அடுத்தவங்க சொல்லுறதை கேட்டு ஒரு முடிவுக்கு வரதும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காயப்படுத்துறதும் என்ன மாதிரி மனநிலைனு எனக்கு புரியல.” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினார் பானுஸ்ரீ.

மனைவியின் கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தாலும் இது கோபத்தை காட்டும் நேரம் இல்லை என்பதை உணர்ந்த வாசுதேவ், ” உன்னை வார்த்தையால காயப்படுத்துறது தான்  அவங்களோட நோக்கம்னு தெரிஞ்சும், உன்னோட உணர்வுகளை வெளிப்படையா காட்டுக்கிறது சரியில்ல பானு. அவங்க வார்த்தை உன்னை  பாதிக்குதுன்னு தெரிஞ்சா மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி   காயப்படுத்திட்டு தான் இருப்பாங்க.  அவங்க பேசுனத பெரிசா எடுத்துக்காம கடந்து போயிடு,  அதுக்கப்புறம் உன் பக்கம்  வர மாட்டாங்க. இங்க பாரு கோபத்துல  உன் முகமே  ஒரு மாதிரி ஆயிடுச்சு. பையன் கல்யாணத்துல அம்மா இப்படி உம்முனு இருந்தா நல்லாவா இருக்கும், சும்மா ஜம்முனு சிரிச்ச முகமா இரு.. உன்னை கஷ்டப்படுத்தி பார்க்க நினைக்கிறவங்களுக்கு  உன் சிரிப்பு பதிலடியா இருக்கட்டும். ” என்றார் வாசுதேவ்.

” நான் கோபப்பட்டா அழகா இருக்குனு,  அடிக்கடி என்னை கிண்டல் பண்ணி கோபப்படுத்திப் பார்ப்பீங்க,  இப்ப என்னமோ கோபத்துல ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்றீங்க!, ரெண்டுல எது உண்மை எது பொய்?” என்று  அதுவரை கொண்டிருந்த மனநிலையை மாற்றிக்கொண்டு செல்லக் கோபத்துடன் வினவினார் பானுஸ்ரீ.

” என் பொண்டாட்டி கோபப்பட்டா அழகா தான் இருக்கும், ஆனா அந்தக் கோபம் என் மேல மட்டும் தான் இருக்கணும், அதுவும்  செல்லக் கோபமா மட்டும் தான் இருக்கணும்” என்றார் வாசுதேவ்.

” ஓ அப்போ உங்களைத் தவிர யாரும் என்னை கோபப்படுத்தக் கூடாது அப்படி தானே.. ” என்று கிண்டலுடன் வினவினார் பானுஸ்ரீ.

” எஸ் அப்கோஸ்.. ” என்று மனைவியின் வார்த்தையை ஆமோதித்தவர், திருமண நிகழ்விற்கு வந்திருந்த உறவினர்களை கவனித்து.. ” கெஸ்ட்   வர ஆரம்பிச்சுட்டாங்க, பொண்ணு வீட்டுக்காரவங்க வந்துட்டாங்களான்னு   போய் பாரு, நான் போய் வந்தவங்களக் கவனிக்கிறேன்  “ என்று கவலையில் இருந்த மனைவியின் மனநிலையை மாற்றி கனிவுடன் கட்டளை பிறப்பித்தார் வாசுதேவ்.

 

அமுதேவ் அழைப்பை ஏற்று வந்திருந்த கல்லூரித் தோழர்கள்..  சிலர் தனுஜ்னுடன் அமுதேவ்வை சந்தித்தனர்.

“ என்னடா.. தேவ், வந்ததிலிருந்து நாங்களும் கேட்டுக்கிட்டே  இருக்கோம், நீ உன் மிஸஸ்ஸை கண்ணுல கூட காட்ட மாட்டேங்குற..?” என்று கிண்டலுடன் வினவினான் ஒருவன்.

“அட.. இருங்கடா நானே இன்னும் பார்க்கல, “என்று அமுதேவ் வெட்கம் கலந்த ஏக்கத்துடன் மணமகள் அறைக் கதவை நோட்டமிட… “ பார்ரா.. புதுசா வெட்கம் எல்லாம் படுற,. உன்னை இந்த அளவுக்கு மாத்துன மாயகாரிய நாங்களும் பாக்கணும்.. “ என்று ஒருவன் கேலி செய்ய மற்ற அனைவரும் அதே ஆர்வத்துடன் மணமகள் அறையை நோட்டமிட்டனர்.

“ஆமா உன் ஆள் எப்படி?, நீ எதிர்ப்பார்த்த மாதிரியே.. சாந்தமான சாத்வீகமா?, இல்ல மிரட்டிப் பார்க்கிற பயானகமா?” என்று சந்தேகம் வினவினான் ஒருவன்.

“சந்தேகமே வேணாம் சாத்வீகமாத் தான் இருக்கும், அந்த மாதிரி பொண்ணுங்கள மட்டும் தான் சார் திரும்பிப் பார்ப்பார்னு உனக்கு தெரியாதா என்ன?” என்றான் மற்றவன்.

“யா தட்ஸ் ரைட், என் ஷாலு எனக்கு பிடிச்ச மாதிரியே சாத்வீக டைப் தான்“ என்று முதலாமவன் வார்த்தையை ஆமோதித்தான் அமுதேவ்.

‘சாத்வீகமா!, கல்யாணம் முடியட்டும் உன்னை வச்சு சாத்து சாத்துன்னு சாத்துரதுல தெரியும் அவ சாத்வீகமா! இல்ல பயானகமான்னு.. ‘என்று உண்மை அறிந்த தனுஜ் தனக்குள் கூறிக் கொண்டான்.

“ டேய் தனு நீ ஏன் அமைதியா இருக்க… நீதான் பொண்ண ஏற்கனவே பார்த்து இருப்பேல.. நீ சொல்லு விஷல்யா குணம்  எப்படி? “என்று அதுவரை அமுதேவ்வை குடைந்துக் கொண்டிருந்த நண்பர்கள் கேள்வியை தனுஜ் புறம் திரும்பினர்.

“அதை எப்படி என் வாயால சொல்லுவேன்!” என்று வடிவேலு பாணியில் நெஞ்சில் கை வைத்து சோகத்துடன் தனுஜ் கூறிட…

“ஏன்டா.. இவ்ளோ பீல் பண்ணுற?” என்று அனைவரும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் விசாரிக்க..

“ அது ஒரு பெரிய கதை டா ”என்று கதை கூறும் ஆர்வத்துடன் பேசத் துவங்கினான் தனுஜ்.

“அவன் கிடக்கிறான் லூசு.. பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசிக்கிட்டே இருப்பான். ஃபங்ஷனுக்கு நேரமாச்சு நான் போய் ரெடி ஆகுறேன்.. “என்று வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு, விழாவிற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள மணமகன் அறையை நோக்கிச் சென்றான் அமுதேவ்.

அமுதேவ் விலகிச் சென்றதும் தனுஜ் சொல்லத் துவங்கிய கதையை அறிய அவனை மொய்க்கத் துவங்கினர் நண்பர்கள்.

“நீங்க நினைக்கிற மாதிரி இது அரேஞ்ச் மேரேஜ் இல்ல. நம்ம ஆள் ஏற்கனவே பொண்ணுகிட்ட லவ்ல லாக் ஆகிட்டாரு.. அதுக்கப்புறம் பெரியவங்களா பார்த்து பாவம் பிள்ளைங்க பிழைச்சுப் போகட்டும்னு பொண்ணு பாக்க அரேஞ்ச் பண்ணி நடக்கப் போற லவ் கம் அரேஞ்ச் மேரேஜ் இது…“என்று ஏதோ பெரிய ரகசியத்தை கூறுவது போல துவங்கி,  முழுவிவரத்தையும் கூறாமல் மேலோட்டமாக கூறி முடித்தான் தனுஜ்.

“பெரிய கதைன்னு சொல்லவும், தேவ் மேரேஜ் விஷயத்துல நிறைய ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சேன். உப்பு சப்பு இல்லாத இந்த கதையச் சொல்றதுக்கு தான்  இவ்வளவு சீன் போட்டயா.. “ என்று எதிர்பார்த்த திருப்பங்கள் இல்லாமல் போன  ஏமாற்றத்தில் ஒருவன் கதை கூறி ஏமாற்றிய தனுஜ் தலையில் கோபமாய் கொட்டிட.. அவனைப் பின் தொடர்ந்து மற்ற நண்பர்களும் அதையே செய்து தனுஜ் தலையைப் பதம் பார்த்தனர்.

     ‘ வெறும் ட்விஸ்ட் இல்ல,  பெரிய டிராஜடியே இனிமே தான் இருக்கு..  அதை சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம தான் நான் தவிச்சுட்டு இருக்கேன்’ என்று அடிபட்ட இடத்தை தடவிக் கொண்டே எண்ணிக்கொண்டான் தனுஜ்.

  உறவுகள் கூடி நின்ற சுபவேளையில் நிச்சயப் பத்திரிக்கை  வாசிக்கப்பட்டு முறையில் பெரியவர்கள், நாளை நடக்கவிருக்கும் திருமணத்தை உறுதி செய்யும் விதத்தில் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

 தாம்பூலத்  தட்டில் இருந்த தங்க நிறப் புடவையை விஷல்யா உடுத்திவர.. வைத்தக் கண் வாங்காது அவளையே காதலுடன் ரசித்தபடி இருந்தான் அமுதேவ்.

 

அமுதேவ் விஷல்யா இருவரும் ஜோடியாய் மேடையில் நிற்க…   உறவினர்கள் ஒவ்வொருவராக மேடையேறி சந்தனம் குங்குமமிட்டு  மணமக்களை வாழ்த்தி விட்டு,  உருவப் பொருத்தை கண்டு  அவரவர் குணத்திற்கு ஏற்ப புகழ்ந்தும், புகைந்தும்  கொண்டிருந்தனர்.

” ஜோடி பொருத்தம் ரொம்ப அற்புதமா இருக்கு தாமரை வீட்டுக்கு போனதும் சுத்திப் போடு.. ” என்று  உறவில் மூத்தவர் கூற.. அடுத்தடுத்து வந்து  உறவுப் பெண்மணிகள் சிரித்த முகமாக  வாழ்த்திவிட்டு,  மேடை இறங்கிச் செல்லும் போது.. ” நல்ல பையனா   தெரியுறானே ராதா அக்கா..   இந்த பொண்ணு கிட்ட எப்படி மாட்டினான் ” என்று  அனுதாபப் படுவதுபோல் அங்கலாய்த்துக் கொண்டார்.

” அதுதான் எனக்கும் தெரியல கீதா.. நானும் தாமரை கிட்ட விசாரிச்சு பார்த்தேன். தேடிவந்து பொண்ணு கேட்டாங்கனு சொல்லுறா. உண்மை என்னன்னு முழுசா தெரியல.என் பொண்ணுக்கும் இவளுக்கும் குணத்துல ஏணி வைச்சாக்  கூட எட்டாது, இவளுக்கு சொந்தமா பிசினஸ் பண்ற பையன் அதுவும் வீட்டுக்கு ஒரே பையன் வேற, ஆஸ்தி அந்தஸ்து மொத்தமும் கைக்கு  வந்திடும்.   என் மகளுக்கு வரன் தேடும் போதெல்லாம் இப்படி நல்ல இடம் அமையவே இல்லை,  கடைசியா வந்த வரைக்கும் போதும்னு பெங்களூர்ல சாப்ட்வேர்ல வேலை பாக்குற பையனுக்கு முடிச்சு வச்சேன், கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தெரியுது அவன் ஒரு தண்ணி வண்டின்னு, கல்யாணம் முடிஞ்சு போனதுலயிருந்து என் பொண்ணு கண்ணீர் விட்டுட்டு  இருக்கா.  ”  என்று அவர் பங்கு புகைச்சாலை வெளிப்படுத்தினார்  முதலாம் பெண்மணி.

” ஆள் பார்க்க அழகா இருக்கான்னு தேடிவந்து முடிச்சு இருப்பாங்களா இருக்கும், குணம் என்னன்னு தெரிஞ்சா நாலு மாசத்துல அத்து விட்டு போயிடுவாங்க. ” என்று அவர்கள் விரும்புவதே   விஷல்யா வாழ்வில்  நடக்கப் போவது போல ஆருடம் கூறிக்கொண்டனர் பெண்கள் இருவரும்.

 நண்பனின் வாழ்கை துணையாக இணையப் போகும் பெண்ணைக் காண ஆவலுடன் காத்திருந்த நண்பர்கள் பட்டாளம் மொத்தமாய் மேடையேறி மணமக்களை கேலியும் கிண்டலும் செய்து திருமண அரங்கத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தனர்.

ஆண்களுடன் பேசியே பழக்கம் இல்லாதது போல் குனிந்த தலை நிமிராது பாவை போல் பாசாங்கு காட்டிக்கொண்டிருந்த  விஷல்யாவிடம் நண்பர்கள் பட்டாளம் ஏதேனும் கேள்விகள் எழுப்பினால், அதற்கு பதில் கூறலாமா வேண்டாமா என்பது போல்..  அமுதேவ் முகம் பார்த்து அனுமதி கேட்டு,  அவன் சம்மதமாய் தலையசைத்தால் மட்டுமே.. பேசும் வார்த்தை பிறர் காதில் விழாத அளவிற்கு மிகவும்  மெதுவாய் பதில் கூறிக்கொண்டிருந்தவளை வெகு நேரமாய் ஆராயும் பார்வையில் அளந்து கொண்டிருந்தான் நண்பர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

 

அதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் விஷல்யாவை அடையாளம் கண்டு கொண்டவன் அதிர்ச்சியுடன் கண்களை அகல விரித்து.. ” நீங்க ரெண்டு நாளைக்கு  முன்னாடி.. பீனிக்ஸ் மால் வந்தீங்க.. தானே. ?” என்று கேள்வியுடன் நிறுத்த… தயக்கத்துடன் இல்லை என்பது போல் தலையசைத்தவள், ” நீங்க  யாரோன்னு நினைச்சு என் கிட்ட பேசிட்டு இருக்கீங்க, பொதுவா நான் வீட்டை விட்டு  வெளியே போகவே மாட்டேன். அதுவும் இவர் கிட்ட சொல்லாம போகவே மாட்டேன் ” என்று கேட்காத கேள்விக்கும் சேர்த்தே பதில்   கூறினாள் விஷல்யா.

”  நீங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி பீனிக்ஸ் மால் வந்தீங்க அங்க… ” என்று அவன் எதையோ சொல்லத் துவங்க, அதுவரை இருவரின் உரையாடல்களை கவனித்துக்கொண்டிருந்த தனுஜ். ”  அதான் அவங்க வரலன்னு சொல்லுறங்கல.. பந்தி ஆரம்பிச்சிட்டாங்க, வா நம்ம போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வருவோம்” என்று அவனை மட்டும் தனியாக அங்கிருந்து  வலுக்கட்டாயமாக இழுத்துச்  சென்றான்  தனுஜ்.

” டேய், சாப்பாடா முக்கியம், அங்க என்ன நடந்தது தெரியுமா, ? என்று தனுஜால் இழுத்து வரப்பட்ட வினோத்  கோபமாய் வினவ.. ” சாப்பாடு தான் முக்கியம் அப்புறம் எனக்கு பசிக்கும்ல.. ” என்று சிறு குழந்தைபோல் தேம்பியவன்,  நண்பன் முகம் போன போக்கை கவனித்து ”  நாம வாழ்றதே அதுக்கு தானடா.. ” என்றான் தனுஜ்.

தோழனின் வார்த்தையில் இருந்த பொய்யை கணித்தவன் போல், ” இல்ல நீ பொய் சொல்ற சாப்பிடப் போகனுங்கிறதுக்காக   நீ என்னை  இழுத்துட்டு வரல, உனக்கும் ஏதோ உண்மை தெரிஞ்சு இருக்கு, அப்படித்தானே ” என்று   சந்தேகத்துடன் வினவினான் வினோத்.

” எனக்கு எந்த உண்மையும் தெரியாது, நீயும்  தேவ்கிட்ட எந்த உண்மையையும்  சொல்லக்கூடாது ” என்றான் தனுஜ்.

 ” தேவ்  நினைக்கிற மாதிரி இந்த பொண்ணு சாத்வீகம் இல்லடா  பயங்கரமான பயானகம். நம்ம தேவ்வை ஏமாத்தி கல்யாணம் பண்ணப் பார்க்கிறா.  கல்யாண விஷயத்துல தேவ்  விருப்பம் என்னனனு எங்களை விட உனக்குத்தான் நல்லாவே தெரியும்.  தேவ்வுக்கு இந்த பொண்ணு செட்டாக மாட்டா, வா  உடனே கல்யாணத்தை தடுத்து நிறுத்துவோம்.. ” என்றான் வினோத்.

” என்ன கல்யாணத்தை தடுத்து நிறுத்தப் போறியா?, அவனவன்   இந்தக் கல்யாணத்தை நடத்த என்னென்ன பாடு பட்டுட்டு இருக்கோம், ஈஸியா வந்து கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்லுற..”  என்று தனுஜ் கோபம் கொள்ள…”  அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதான் உனக்கும் எல்லா உண்மை தெரிஞ்சிருக்கு நீயும் சேர்ந்து தான் தேவ்வை ஏமாத்தப் பார்க்கிற… ” என்று தனது சந்தேகம் உறுதியான தீர்மானத்தில் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினான் வினோத்.

” டேய் புரியாம பேசாத,  தேவ்வை  ஏமாத்தணும்னு மறைக்கல, இந்த கல்யாணம் நடக்கிறது தான்  அவனுக்கு   நல்லது.  ” என்று தனுஜ் காரணம் கூறத் துவங்க,  கையை உயர்த்தி அவனை தடுத்து நிறுத்திய வினோத்.. ” சும்மா சப்பக் கட்டுக் கட்டாதடா, கல்யாண விஷயத்துல தேவ் விருப்பம் என்னன்னு எங்கள விட உனக்கு  நல்லா தெரியும்,  தேவ்வுக்கு இந்த மாதிரி அடமெண்ட்டானா பொண்ணுகளை பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தும்,  உண்மையை மறைச்சு இந்த கல்யாணத்த நடத்தி வைக்க நினைக்கிறயே உனக்கு வெட்கமாயில்ல.   உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற நட்பை பார்த்து எத்தனை பேர் பொறாமைப்பட்டு இருக்காங்கன்னு தெரியுமா?… மூணாவது மனுஷங்களை  விடுடா,  உன்  இடத்துல நான் இருந்தா நல்லா இருக்கும்னு நானே  எத்தனை நாள்  ஃபீல் பண்ணி இருக்கேன் தெரியுமா?.  பார்க்கும் போது  எல்லாம் நண்பா  நண்பான்னு  உருகுவியே!, அவனும், மத்தவங்களை   விட   உன்னை  தானடா அதிகமா நம்புனான்.   உன்னை நம்புனவனுக்கு  துரோகம் பண்ண எப்படிடா மனசு வந்துச்சு.. ” என்று  பேசவே விடாமல் பொரிந்து தள்ளினான் வினோத்.

 ” என்னை கொஞ்சம் பேசவிடு வினோத்.. தேவ் ஷாலுவ  காதலிக்கிறான். ” என்று தனுஜ் கூற… ” உண்மை என்னன்னு தெரிஞ்சா காதலிக்க மாட்டான் ” என்று வெடுக்கென்று பதில் தந்தான் வினோத்.

” அதனாலதான் உண்மையை மறைக்க முயற்ச்சி பண்ணுறோம்.” என்றான் தனுஜ்.

” நீயே ஒரு துரோகின்னு தெரிஞ்சிடுச்சு,  இதுக்கு மேல உன் கிட்ட பேசி என்ன பிரயோஜனம் நான்  தேவ்கிட்ட பேசிக்கிறேன், ” என்று  மணமேடை நோக்கி நகர்ந்தான் வினோத்.

”  எது பேசுறதா இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பேசிக்கோ.. இப்போ கிளம்பு” என்று   வினோத்தை விடாப்பிடியாக    வாகன தரிப்பிடத்திற்கு தன்னுடன் இழுத்துச் சென்றான் தனுஜ்.

”  நீ பண்ணுறது ரொம்பத் தப்பு தனுஜ். ” என்று வினோத் எச்சரிக்கை விடுக்க.. ”  தப்பு தான்.. இந்தத் தப்பு தான் தேவ்வுக்கு நல்லது.  நீயும் அவனுக்கு நல்லது பண்ணனும்னு  நினைச்சா, உனக்கு தெரிஞ்ச உண்மையை உனக்குள்ளேயே வச்சுக்கோ….  ”  என்று  காரில் ஏற்றி அனுப்பிவைத்து.. வினோத் கார் மண்டபம் கடந்து   செல்லும் வரை பார்த்திருந்து அதன் பிறகே நிம்மதி பெருமூச்சை வெளியேற்றி  அரங்கத்தினுள் சென்றான் தனுஜ்.

அமுதேவ் அருகில் ஒருவித பதற்றத்துடன் நின்றிருந்தவள்  அருகில் சென்று.. ” நீ  டென்ஷன் ஆகாத!, அவனை அனுப்பி வைச்சுட்டேன். ” என்று  ரகசிய குரலில் ஆறுதல் கூறிட.. ”  தேங்க்ஸ் ” என்று அதுவரை இருந்த பதற்றம்  அகன்ற நிம்மதியுடன் கூறினாள் விஷல்யா.

”  தனு வினோத் எங்க? உன்கூடத் தானே பேசிட்டு இருந்தான்” என்று அமுதேவ் மற்றும் மற்ற  நண்பர்கள் வினவிட..  ” என் கூட பேசிட்டு இருந்தான், ஒரு போன் வந்தது இம்பார்டன்ட் வொர்க்  இருக்குன்னு சாப்பிடாமக் கூடக் கிளம்பி  போயிட்டான்” என்று பொய் உரைத்தான்  தனுஜ்.

” இந்த வினோத் எப்பவுமே இப்படித்தான் கால்ல சுடுதண்ணி  ஊத்துன மாதிரி ஒரு இடத்துல நிக்காம ஓடிட்டே தான்  இருப்பான் ”   என்று தனுஜ் கூறிய பொய்யை உண்மையென நம்பிய  நண்பர்கள்   வினோத் பற்றிய பேச்சை அத்தோடு விட்டனர்.

நிச்சயவிழா நல்லபடியாக முடிந்து மணமகளுக்கு   நலங்கும் வைத்து முடிக்க..  வந்திருந்த உறவினர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று முடங்கினர்.

அமுதேவ்வும் மணமகன் அறைக்கு வந்து தனது உடைகளை களைந்துவிட்டு இயல்பான இரவு உடைக்கு மாறிய நேரம் அவனது அலைபேசி அலறியது…

நிச்சய விழாவிற்கு வர முடியாத எவரேனும் அலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து கூறுவர் என்று எண்ணி அழைப்பது யார் என்று கவனித்த அமுதேவ்.. அதில் வினோத் எனும் பெயரைக் கண்டதும், ‘ இவனா இன்னைக்கு இருக்கு இவனுக்கு’ என்று கடுகடுத்த படி, அலைபேசி அலறலை நிறுத்தி காதில்  வைத்து  எதிர்முனையில் இருந்தவன் பேசத் துவங்கும் முன்பே, ” ஏண்டா நல்லவனே,  பாக்குறப்ப எல்லாம்   கல்யாண சாப்பாடு எப்ப போடுவன்னு  கேட்கிறது,  கல்யாணச் சாப்பாடு போடுற நேரத்துல முக்கியமான வேலை இருக்குன்னு    ஓடுறது.. நல்லா இருக்குடா நீ பண்றது” என்று நிச்சயதார்த்த விழாவில் இறுதிவரை இல்லாமல் போன கோபத்தை காட்டினான் அமுதேவ்.

” நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும் தேவ், பக்கத்துல தனுஜ் இல்லையே..  அவன் இருந்தான்னா நான் தான் பேசுறேன்னு சொல்லாம தனியா வா” என்று    கட்டளைப் பிறப்பித்தான் வினோத்.

”  தனுவுக்கு தெரியாம பேச என்ன இருக்கு, வினோ.. உனக்கே தெரியும் தனு என் பெஸ்ட்  ஃப்ரெண்ட்.. அவன்கிட்ட மறைக்கிற அளவுக்கு இதுவரைக்கும் என்கிட்ட எந்த ரகசியமும் இருந்தது இல்ல, இப்போ அவன் பக்கத்துல இல்ல,  இருந்தாலும் அவன் வந்ததுக்கு பிறகு நீ என்கிட்ட பேசின விஷயத்தை கண்டிப்பா நான் அவன் கிட்ட சொல்லிடுவேன் ” என்று தன் நண்பன் மீது தான் கொண்ட நம்பிக்கையில் தீர்மானமாக கூறினான் அமுதேவ்.

” நீதான் அந்தப் பச்சை துரோகியை  பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு நம்பிட்டு இருக்க.. ஆனா அவன் உனக்கு உன்  கூடவே இருந்து குழிப் பறிச்சுட்டு இருக்கான். ” என்று கோபமாய் கூறினான் வினோத்.

” வார்த்தையை அளந்து பேசு வினோத்..   தனுஜ் பத்தி பேச உனக்கு எந்த ரைட்சும் இல்ல” என்று கோப மிகுதியில் கொதிப்புடன் கத்தினான் அமுதேவ்.

” இப்போ உன் போனுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன் அதை பாத்துட்டு, அதுக்கப்புறம்  உன் கோபத்தை என் கிட்ட காட்டு” என்று அழைப்பை துண்டித்து…  உடனடியாக அமுதேவ் எண்ணிற்கு ஒரு காணொளி ஒன்றை அனுப்பி வைத்தான் வினோத்.

வினோத் அனுப்பி வைத்த காணொளியை காண விருப்பமே  இல்லாமல்  வேண்டா வெறுப்பாக.. பார்த்தவன், அதில்  கண்டக் காட்சியைக் கண்டதும்  அதிர்ச்சியும் கோபமுமாய் மீண்டும் வினோத்தை தொடர்பு கொண்டான் அமுதேவ்.

” இது என்னைக்கு  எடுத்த வீடியோ.. இது  எப்படி உனக்கு கிடைச்சது?”  என்று அமுதேவ் வினவிட… ” ரெண்டு நாளைக்கு முன்னாடி பீனிக்ஸ் மால் கார் பார்க்கிங்ல எடுத்தது. மண்டபத்துல இதைப் பத்தி தான்,    இத்தனை நாளா நல்லவ மாதிரி நடிச்சு உன்னை  ஏமாத்திட்டு இருக்கிற கல்யாணப் பொண்ணுக்கிட்ட கேட்க ஆரம்பிச்சேன்.  என்னை பேசவே விடாம தனுஜ் தனியா இழுத்துட்டு போயிட்டான்” என்று இருவருக்கும் நடந்த விவாதங்களை கூறி முடித்தவன், “தனுஜ் பேச்சை பெருசா எடுத்துக்காம உள்ளே வந்து நான் உண்மையைச் சொல்லியிருக்கலாம்.. ஆதாரமில்லாம சொன்னா அதை நீ நம்பமாட்ட.. அவங்க நம்பவும் விடமாட்டாங்க.. அதனால தான் என் பிரண்டு கிட்ட இருந்து இந்த வீடியோவை வாங்கி உனக்கு  அனுப்பி வைச்சேன். இப்போ சொல்லு அந்த  தனுஜ் நல்லவனா..  துரோகியா?” என்றான் வினோத்.

” அவன் மட்டும் இல்ல.. இங்க இருக்கிற அத்தனை பேரும் துரோகிங்க தான்” என்று ஏமாற்றத்தின் உச்சத்தில் கொதிப்புடன்  கூறியவன் அழைப்பை துண்டித்து விட்டு திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

எல்லையில்லா அன்பே

அதிகளவு எதிர்பார்ப்பை

ஏற்படுத்தி விடுகிறது..

ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்பு

ஏமாற்றத்தில் முடியும் போது..

எல்லையில்லா அன்பும்

பொய்த்தது போல

மாயப் பிம்பம் காட்டுகிறது..

பொய் பிம்பம் உடைத்து

உண்மை அறிவேனோ!..

மெய் அறிய மனம் விரும்பாது

உன்னைப் பிரிவேனோ!..

என்ன நான் செய்வேன்…

இனி என்ன நான் செய்வேன்!…

Advertisement