அத்தியாயம் 18
“அப்பா… அப்பா… அப்பா… அப்பா…” தூங்கிக் கொண்டிருந்த ஜெராடின் மேல் ஏறி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள் ஜெஸி.  
“ஹேய் குட்டி ஜெஸி… குட் மோர்னிங்” ஜெஸியை தன்னுள் இறுக்கிக் கொண்டு முத்தம் வைத்தான் ஜெராட்.
“கத சொல்லுப்பா…” ஜெராடின் கன்னத்தை தனது பிஞ்சு கையால் தட்டியவாறே கொஞ்சலானாள் ஜெஸி.
“இங்கபாறேன் உலக அதிசயத்தை. நான் தான் உங்க அப்பா என்ன புரிஞ்சிக்கணும் என்று விட்டுட்டு வந்தேன். இங்க ஒருத்தி அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா. ஒரே கல்லுல ரெண்டு மங்க இல்ல ஜெராட்” நடப்பது எல்லாமே நன்மைக்கே என்று சிரித்தாள் பரா. 
“இப்படி நடக்கும் என்று தெரிஞ்சிருந்தா நான் உன் மேல கோபப்பட்டிருக்கவே மாட்டேன் பரா. என்ன ரெண்டு பேரும் ஒரே நேரத்துலயா என் கிட்ட வருவீங்க? இவள ஒதுக்கவும் முடியாது. இவள வச்சிக்கிட்டு உன்ன கொஞ்சவும் முடியாது” ஜெராட் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெஸி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“பாரேன் என் செல்லத்த. வாடி தங்கம் சொல்லு உனக்கு என்ன வேணும்?” பராவை ஏக்கமாக பார்த்திருந்தாலும் ஜெராட் ஜெஸியை கொஞ்சுவதை விடவில்லை.
“எனக்கு லெனின் இருக்கான். நீங்க அப்பாவும் பொண்ணும் கொஞ்சிக்கோங்க, என்னவோ பண்ணிக்கோங்க” பொறாமை கொஞ்சம் தலை தூக்க,  தலையணையை அவர்களை மீது வீசி விட்டு எழுந்து சென்று விட்டாள் பரா.
காலை உணவின் பொழுது ஜெஸி “அப்பா… அப்பா… என்று அவனோடு ஒட்டிக் கொண்டு லெனினை கூட நெருங்க விடாமல் முரண்டு பிடித்தாள்.
ஜெராட் தான் அவளுக்கு காலை உணவையும் ஊட்டி விட்டான்.
“செல்லக்குட்டி நீ என் பொண்ணுனா, லெனின் என் பையன். அவன் உன் அண்ணன் தானே. ரெண்டு பேரும் ஒத்துமையா ஒண்ணா இருக்கணும். உனக்கு அண்ணனா ரொம்ப பிடிக்குமில்ல. அப்போ சண்டை போடக் கூடாது சரியா” ஜெஸிக்கு புரிய வைக்க, அப்போதைக்கு அவள் தலையசைத்து வைத்தாள்.  
“இவ எப்படி திடீரென்று இந்த அளவுக்கு அப்பா பொண்ணாகிட்டா?” ஜெராட் ஜெஸியின் தலையில் முத்தமிட்டவாறே பராவிடம் கேட்டவன் லெனினுக்கு ஊட்டி விட்டான்.
“நான் பசங்களுக்கு ஊட்டுறேன். நீங்க சாபிடுங்களேன்” என்றாள் பரா.
“எத்தனை நாளா என்ன மிஸ் பண்ணியிருப்பாங்க  பாரு… நீயும் உக்காரு உனக்கும் ஊட்டி விடுறேன்” என்றான் ஜெராட். இவர்கள் இங்கே கிளம்பி வர மூன்று வாரங்களுக்கு முன்பாகவே ஜெராட் குடும்பத்தோடு உணவு உண்ணவுமில்லை. குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்து செல்லவுமில்லையே. இங்கே வந்து பத்து நாட்களுக்கு மேலாகி இருக்க அங்கு நடந்ததையும், இங்கு வந்ததையும் சேர்த்துதான் கூறியிருந்தான்.   
“இது நல்ல இருக்கு” என்று அவனருகில் அமர்ந்தவள் அவன் கையால் சாப்பிட்டவாறே அவனுக்கு ஊட்டி விட, ஜெராட் சந்தோசமாக அவள் கையால் உண்ண ஆரம்பித்தான்.
ஊட்டிவிட்டவாறே “நான் வீட்டுக்கு வந்ததுல இருந்து அப்பா… அப்பான்னு எங்க அப்பாவ கூப்டுறேனே அதனால கூட ஜெஸி நீங்க தான் அவ அப்பான்னு ஒத்துக்கிட்டு ஏத்துக்கிட்டாளாக இருக்கும்” என்றாள் பார.
பால்ராஜும் பராவும் பாசத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளும் அப்பா மகள் கிடையாது. பரா பால்ராஜிடம் செல்லம் கொஞ்சும் ரகமெல்லாம் கிடையாதே. பராவுக்கு சின்ன வயதில் அந்த ஆசை இருந்தாலும் பால்ராஜிடம் நெருங்கவே பயந்திருந்திருப்பாள்.  பால்ராஜோடு பரா ரெஹானை விவாகரத்து செய்த பின்தான் ஒழுங்காக பேசவே ஆரம்பித்திருந்தாள். பால்ராஜும் இப்பொழுதுதான் எதற்கெடுத்தாலும் பராவை அழைக்கிறார். தந்தை மகள் மீதும், மகள் தந்தை மீதும் காட்டும் அன்பையும், அக்கறையையும் பார்த்து ஜெஸி தன்னுடைய தந்தையை நினைவு கூர்ந்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
குழந்தையானாலும் ஜெஸிக்கு ஒன்றாக இருந்து விட்டு சட்டென்று ஜெராடை பிரிந்தது வந்த பின் மெல்ல மெல்ல தந்தையை உணர ஆரம்பித்து இருப்பாள்.
எது எப்படியோ ஜெஸி ஜெராடை அப்பாவாக ஏற்றுக்கொண்டு விட்டாள்.
இவர்களை கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்த பால்ராஜுக்கும், ஜான்சிக்கும் மகள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து அளவில்லாத சந்தோசம்.
பிள்ளைகளை கண்டிப்போடு வளர்க்க வேண்டும் என்று எண்ணிய பால்ராஜ் இன்று பராவை புரிந்து கொண்டு நல்ல தந்தையாக மாறி இருந்தார். ஆனால் இன்னும் மூத்தமகளை குடும்பத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை.  
ஜேம்ஸ் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணான லியோனாவின் வீட்டில் ஏற்கனவே பேசி ஜெராட் இலங்கைக்கு வந்த உடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எஸ்தர் கூறியிருந்தால் ஜெராட் இலங்கை வந்த உடன் லியோனாவின் அப்பாவை அழைத்த எஸ்தர் திருமண திகதியை குறித்து விட்டாள்.
எல்லா ஏற்பாட்டையும் செய்து கொண்டு மணமகனும், மணமகளும் மணமகனின் அண்ணனுக்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை. தனக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டாமென்று ஜெராட் கூறினாலும், எஸ்தர் கேட்கவில்லையே.
ஜான்சியின் உடல்நிலை காரணமாக பரா இலங்கை வந்ததில் அவளை பிரிந்து இனி வாழவே முடியாது என்று ஜெராட் அவளை தேடி வந்ததில் எஸ்தரின் ஆசையும் நிறைவேற போகிறது.
கல்யாண ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று எஸ்தர் அழைத்தது மருமகளான பராவை தான்.
“ஏன்மா ஒண்ணுக்கு மூணு பொண்ண பெத்து வச்சிருக்கியே என் பொண்டாட்டிதான் உனக்கு ஷாம்பிங் பண்ணிக் கொடுக்கணுமா?” பராவோடு இருக்கும் நேரத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் ஜெராட் முறைத்தான்.
“அவளுங்க வந்தா எனக்கு செலவை இழுத்துதான் வைப்பாளுக. பராவோட போனா என்னென்ன வாங்கணுமோ அத மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்” என்றாள் எஸ்தர்.
“பசங்கள கூட்டிகிட்டு போக முடியாது. பரா இல்லாம பசங்க இருக்கவும் மாட்டாங்க. நான் பணம் கொடுக்குறேன் நீ உன் பொண்ணுங்கள்ள யாரையாச்சும் கூட்டிகிட்டு போம்மா” ஜெராட் மீண்டும் சொல்லிப் பார்த்தான்.
“ஏன்டா நீ உன் புள்ளைங்கள பாத்துக்க மாட்டியா? நீ தான் நல்லா பேபி சிட்டிங் பண்ணுவியாமே” மகனை கிண்டலாக கேட்டவள் மருமகளைத்தான் பார்த்து வைத்தாள். அலைபேசியில் மகன் எப்படியிருக்கிறான் என்று ஆரம்பித்து, உன்னையும் குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொள்கிறானா என்று கேள்வி கேட்டு மருமகளின் வாயை பிடுங்கியதில் அறிந்து கொண்ட தகவலல்லவா. அப்போது சந்தோஷப்பட்டாலும் இப்போது அதையே மகனுக்கு எதிராக பாவிக்க உபயோகித்தாள் எஸ்தர்.
“நாங்க ஷாப்பிங் போற இடத்துக்கு பசங்கள கூட்டிட்டு வந்தா… எங்களுக்கு ட்ரைவர் வேல பார்த்து போலவும் ஆச்சு. குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் பண்ண ஆள் கிடைச்சுடும். எங்களுக்கு பாடிகார்டும் கிடைச்சுடும். அப்பொறம் அப்படியே உன் ஏ.டீ.எம் கார்டையும் கொடுத்தீனா நாங்க எங்க ஷாப்பிங்க முடிச்சிடுவோம். இல்லையா மருமகளே” ஜெராடை பார்த்து குறும்பாக சிரித்தவாறே பராவை ஏறிட்டாள் எஸ்தர்.
எல்லா இடத்திலும் தாய்க்கும், தாரத்துக்கும் இடையில் சிக்கி முழிபிதுங்கி நிற்கும் கணவனுக்கு மத்தியில் பரா அன்னைக்கும், மகனுக்கும் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டு திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை.
“நான் என்ன ஆள் இன் அழகுராஜாவா? அதுவும் உங்களுக்காக எல்லாம் பண்ணி கொடுத்துட்டு நான் எதுவும் கேட்காம அமைதியா நிற்கணுமா?” கடுப்பில் உச்சத்தில் இருந்தான் ஜெராட்.
ஜெராட் கவலையாக இருக்கும் பொழுது கோபித்து பார்த்தவளுக்கு, இது கொஞ்சம் புதிது. அவனை மேலும் சீண்ட அவள் மனம் தூண்ட “இது நல்ல ஐடியாவா இருக்கு அத்த” பரா ஜெராடை பார்த்து கண்சிமிட்டி புன்னகைக்க, ஜெராட் அவளை முறைக்க முடியாமல் நின்றிருந்தான்.
எதோ பேச்சுக்குத்தான் எஸ்தர் ஜெராடை ஷாப்பிங் செல்ல அழைத்தாள். ஆனால் உண்மையில் அதுதான் நிகழ்ந்தது. ஜேம்ஸுக்கு கல்யாண வேலைகள் இருக்க, குடும்பத்தாருக்கு வாங்க வேண்டிய துணிகளை அன்னையை அண்ணியோடு சென்று வாங்குமாறு பணம் கொடுத்திருந்தான்.
அவன் தனியாக லியோனாவோடு ஷாப்பிங் செல்வதாக திட்டமிட்டிருக்க, தம்பியின் ஆசைக்கு குறுக்கே நிற்க வேண்டாமென்று அன்னையோடு கிளம்பினான் ஜெராட்.
ஷாப்பிங் சென்றவனுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்வது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கவில்லை. சாதாரணமாகவே லெனினும் ஜெஸியும் சமத்துக் குழந்தைகள். காணும் பொருட்களையெல்லாம் கேட்டு அடம் பிடித்து ஜெராடை தொந்தரவு செய்யாததால் குழந்தைகள் விளையாடும் இடத்தில் விட்டு அவர்களை பார்த்துக்கொள்ள அவனால் முடிந்தது.
எஸ்தரும், பராவும் குடும்பத்தார் அனைவருக்கும் துணிகளை வாங்கிக் கொண்டு வந்த பின் அனைவரும் ஒன்றாக உணவருந்தி விட்டு வீடு திரும்பினர்.
பால்ராஜ் மற்றும் ஜான்சியின் கல்யாணனாலும் வந்தது. காலையிலையே குடும்பமாக அனைவரும் ஆலயத்துக்கு சென்று வந்தவர்கள் காலை உணவை வீட்டில் தடல்புடல் விருந்தாகவே சமைத்து உண்டார்கள்.
அதன்பின் சினிமாகும் சென்று மதிய உணவையும் முடித்துக் கொண்டு ஷாப்பிங் சென்றவர்கள் ஜான்சிக்கும், பால்ராஜுக்கும் துணிகளை வாங்கினார்கள்.
“இவ்வளவு சுத்தியும் நேரம் போகலையே” பரா அலுத்துக்கொள்ள
“கோல்ட்பேஸ் போலாம். அங்க இருக்குற ரோட்டு கடையிலையே டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்” என்றான் ஜெராட்.
பீச் என்றதும் குழந்தைகளும் குஷியாக, பட்டம் விட்டு விளையாடி மகிழ்ந்தவர்கள் இரவுணவுக்கு பின் வீடு திரும்பினார்.
திருமணத்துக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்க, ஜெராட் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தெஹிவளையிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு செல்ல தயாரானான்.
“கல்யாண வேலை இவ்வளவு இருக்கு இப்போ போய் ஜூ பார்க்க போறீங்க” பரா தடுக்க,
“நாங்க ஒன்னும் தனியா போகல. நீயும் கூட வர. நம்ம தின்க்ஸ் எல்லாம் யாரு சுமப்பதாம். அதுக்குன்னு தனியா ஆள கூட்டிகிட்டு போகவா முடியும்?” டிஷர்ட்டை அணிந்தவாறே ஜெராட் கூற, அவனை பின்னாலிருந்து முறைத்தாள் பரா.
“என்னால எல்லாம் வர முடியாது. யாரோ வீட்டு கல்யாணம் போல பேசுறீங்க. உங்க தம்பி கல்யாணம். எம்புட்டு வேல இருக்கு? நீங்க வேணா பசங்க கூட போயிட்டு வாங்க. அத்த கேட்டா நீங்களே பேசிகோங்க” முறைப்போடுதான் கூறினாள். கல்யாண வேலைகளை வைத்துக் கொண்டு இப்படி ஊர் சுற்றினால் எஸ்தர் என்ன நினைப்பாள்? எஸ்தர் நினைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தன்னை பெற்ற அன்னையே உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணிவிடுவாள். பராவின் சிந்தனை இவ்வாறு ஓடிக்கொண்டிருந்தது.
“அம்மா கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். கல்யாணம் முடிஞ்சி அடுத்த நாள் நமக்கு ஊருக்கு போக பிளைட். கல்யாணம் முடிஞ்சி ஒரே ஒருநாள்தான் ரெஸ்ட்டு. ஊருக்கு போன கையோட பசங்க ஸ்கூல் போவாங்க, நான் வேலைக்கு போகணும். ஜெஸி புக்ல அனிமல்ஸ் பேரெல்லாம் கரெக்ட்டா சொல்லுறா. சரி வந்ததுக்கு ஜூக்காவது கூட்டிகிட்டு போலாம்னு முடிவு பண்ணேன். நீ வரேன்னா வா. இல்லையா உன் அத்தை கூட போய் கல்யாண வேலைய பாரு. அப்பொறம் பேமிலியா நாம போன ஜூ ட்ரிப்ல உன் போட்டோ இல்லனு பத்து வருஷம் கழிச்சி புலம்பக் கூடாது” தலையை வாரியவாறே கிண்டலடித்தான்.
“என்ன நக்கலா…” அவன் முதுகில் ரெண்டு வைத்தவள் “அத்த கேட்டா நீங்கதான் பதில் சொல்லணும். நான் இல்லாம பேமிலி ட்ரிப்பா… உதை விழும்” மிரட்டி விட்டே கிளம்பத் தயாரானாள்.
தெஹிவளை ஜூ என அழைக்கப்படும் மிருகக்காட்சிசாலை இலங்கையிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவாகும்.
“பொறந்ததுல இருந்தே {Colombo} கலம்போலத்தான் இருக்கேன். ஸ்கூல் படிக்கிறப்போ ஒரே ஒரு தடவ வந்திருக்கேன். அவ்வளவுதான்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் பரா.
“அப்போ நான் பரவால்ல. ஸ்கூல் போறப்போ ரெண்டு தடவ. பேமிலி கூட ஒரு தடவ, ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் கூட ஒரு தடவ மொத்தம் நாலு தடவ வந்திருக்கேன்” என்றான் ஜெராட்.
ஜெராட் ஜெஸியின் கையை பிடித்துக்கொள்ள, பரா லெனினின் கையை பிடித்துக் கொண்டாள். ஆளாளுக்கு ஒரு மினி பேக் முதுகில் சுமந்துக் கொண்டு மிருகக்காட்சிசாலையின் வரைபடத்தை பார்த்து அதன் வழியாக அவர்களின் பயணத்தை ஆரம்பித்தனர்.
முட்டையிட்டிருக்கும் ஆஸ்ட்றிச்லிருந்து பிளமிங்கோ வரை உள்நாட்டு வெளிநாட்டு பறவைகள் மாத்திரமன்றி சிங்கம், புலி, கரடி, ஜாகுவார் என்று பயங்கரமான மிருகங்கள் தரையில் அமைக்கப்பட்ட கூண்டில் இருப்பதை பார்த்தவாறே பயணித்தனர்.
மக்களின் பாதுகாப்பை கருதி சிங்கம், புலி போன்ற மிருகங்களின் கூண்டுகள் தரையில் அமைக்கப்பட்டிருந்தாலும் பெரியவர்களின் இடுப்புவரை மதில் சுவரும், அதற்கு மேல் கம்பிகளும் பொறிக்கப்பட்டிருந்தன. ஜெஸி போன்ற சின்னக் குழந்தைகளுக்கு மதி சுவர் எட்டாமல் போவதால் மிருகங்களை பார்க்க முடிவதில்லை. அக்கணம் பெற்றவர்கள் தான் தூக்கி வைத்துக் கொண்டு காட்டுவார்கள்.
ஜெராட் ஜெஸியை தூக்கி வைத்துக் கொண்டு புலியை காட்ட தரையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்த புலி சட்டென்று உறுமியது.
அதன் சத்தத்தில் ஜெஸி பயந்து விடக் கூடாதென்று ஜெராட் ஜெஸியை அணைத்துக் கொண்டான்.
“அப்பா…” என்று ஜெஸியும் ஜெராடை இறுகக் கட்டிக் கொண்டாள்.
லெனின் பயப்படாமல் பராவின் கையை பிடித்துக் கொண்டு பார்த்திருந்தான்.
படிப்படியாக முன்னேறி மீன்கள் உலகத்துக்குள் நுழைந்தனர். கண்ணாடியிலான தொட்டிகளுக்குள் கலர், கலரான மீன்கள் வகைவகையாக கண்களுக்கு விருந்தாகின.
கலர்கலரான மீன்களை ஜெஸிக்கும், லெனினுக்கு ரொம்பவே பிடித்திருக்கும் போலும் “நம்ம வீட்டுலையும் பிஷ் டாங்க் வைக்கலாம்மா? ம்மா… சொல்லுமா…” லெனின் பராவை கேட்க,
“வைக்கலாம்டா” என்றாள்.
எனக்கு இந்த பிஷ் வேணும், அந்த பிஷ் வேணும் என்றவன் பிராணாவும் வேணும் என்று சொல்ல, ஜெராடும், பராவும் சிரிக்கலாயினர். அங்கே குடும்பமாக புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
சிறிய பெரிய என பலவகையான பறவை இனங்களை பார்த்ததோடு, பறக்க முடியாத பறவைகள் சுதந்திரமாக சுற்றிவருவதை பார்த்தவாறே நடப்பது கண்கொள்ளாகாட்ச்சியாக இருந்தது.
ஊர்வன வீட்டில் விதவிதமான பாம்புகள் கண்ணாடி அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததோடு அனகொண்டா குட்டிகளும் இருப்பதை பார்த்து பரா வியக்க, ஜெஸி அஞ்சி ஜெராடின் மேல் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள். 
இடையில் கொண்டு அந்த மதிய உணவையும் உண்டு முடித்து பட்டாம் பூச்சி தோட்டத்தில் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளுக்கிடையே நடந்து சென்று மகிழ்ந்தனர்.
பட்டாம்பூச்சியை பிடிப்பது தடைசெய்யப்பட்டிந்தாலும், அந்திசாயும் வேளையில் மழை தூரினால் அவ்விடமே வேறு உலகம் போல் காட்ச்சியளிக்கும். எங்கோ ஒரு மாயாஜால உலகத்துக்குள் பிரவேசித்த உணர்வைக் கொடுக்கும்.
மிருகக்காட்சிசாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டவர்கள் அதன் பின் கலிபோனியா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் சிங்கத்தின் விளையாட்டையும் கண்டு ரசித்து, கடைசியாக இசைக்குழுவின் இசைக்கு ஏற்ப நடனமாடும் யானைகளின் நிகழ்ச்சியையும் கண்டு மகிந்த பின் வீடு திரும்பினார்.
ஜெஸியும், லெனினும் வீட்டுக்கு வந்தும் தாங்கள் பார்த்த, முதலை, குரங்கு என்று எல்லா மிருகங்கள், மற்றும் பறவைகளை பற்றி மட்டுமே பேசலாயினர்.
“தாத்தா… பாட்டி… புலி உருமிகிட்டே என்ன கடிக்க வந்தது. அப்பாதான் என்ன புலிக்கிட்ட இருந்து காப்பாத்தினாரு” என்று ஜெஸி மழலையில் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“இது எப்போ நடந்தது?” பரா ஜெராடை சிரித்தவாறே பார்க்க,
“ஏன் நீ அங்கதான் இருந்த, நீ பார்க்கல” ஜெராடும் பதிலுக்கு புன்னகைத்தான்.
“இந்த சின்ன வயசுலயே நமக்கு ஒன்னுனா அப்பா இருக்காரு என்று ஜெஸி நினைக்கிறாளே அதுதான் ஒரு தந்தை மகளுக்கு கொடுக்க வேண்டிய உண்மையான பாசமும், பாதுகாப்பும். என் மகளுக்கு நான் கொடுக்க தவறி விட்டேன். ஆனாலும் ஜீசஸ் அவளுக்கு நல்ல கணவனை அமைச்சிக் கொடுத்துட்டார் ஜான்சி. அது போதும் எனக்கு” கண்கள் கலங்கியவாறு கூறினார் பால்ராஜ்
ஜெஸியை ஜெராட் புலியிடமிருந்து காப்பாற்றிய கதை ஜேம்ஸின் திருமணமன்றும் உறவினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
“அப்படியாடா குட்டி, அப்படியாடா தங்கம்” ஜெராடின் சகோதரிகளும் ஜெஸியையும், லெனினையும் தூக்கி வைத்து கொஞ்ச ஆரம்பித்தனர்.
ஜெராட் பராவை திருமணம் செய்வது கூட ஜெராடின் சகோதரிகளுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியதும் வெகுண்டெழுந்தனர்.
“ஏன்? உனக்கு ஏதும் பிரச்சினையா? இல்ல அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் பிரச்சினையா?” என்று பேச ஆரம்பித்தனர்.
“வாய மூடுங்கடி. ஊரு உலகம் பேச வேண்டியதில்ல. நீங்களே கண்டபடி பேசுறீங்க” எஸ்தர் பேசும் மகள்களை அடிக்கவே பாய்ந்தாள். 
“அம்மா… நீ அமைதியாக இரு. எதுக்கு இவங்க கிட்ட பேசி புரியவைக்க போய் உன் பிபிய ஏத்திக்கிற? இங்க பாருங்க கல்யாணம் எனக்கு. குழந்தைகளை தத்தெடுக்கணும் என்றது என் முடிவு. கல்யாணத்துக்கு வரதா இருந்தா வாங்க. பிரச்சினை பண்ண நினைக்காதீங்க. அப்பொறம் நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியிருக்கும்”
“என்னடா… என்ன பண்ணுவ?” ஜெராடின் அக்கா கோபத்தில் எகிற,
“அம்மா இங்க இருக்குறதாலதானே ஆட்டம் போடுறீங்க? பராவ கல்யாணம் பண்ணி அம்மாவ கையோட கூட்டிட்டு போறேன். திரும்ப இங்க வராமலே இருந்தா என்னதான் பண்ணுவீங்க என்று பார்க்கலாம்” பதிலுக்கு ஜெராடும் மிரட்டினான்.    
ஐவியை திருமணம் செய்ததால் தான் எஸ்தர் இங்கிலாந்துக்கு வராமல் இருக்கின்றாள். பரா என்றால் வருவாள் என்ற நம்பிக்கையில் அன்னையிடம் கேளாமல் கூறி விட்டான்.
“அம்மா…” ஜெராட் செஞ்சாலும் செஞ்சிடுவான் என்று அக்கா, தங்கை மூவருமே அன்னையிடம் முறையிட்டிருந்தனர்.
“ஆமா… எனக்கு என் பையன் வாழ்க முக்கியம், அவன் சந்தோஷமா இருக்கணும். நான் அவன் சொல்லுறதைத்தான் கேப்பேன்” என்றாள் எஸ்தர்.
“நாங்களும் அவன் வாழ்க்கையை பத்திதான் பேசுறோம். நாங்க சொல்லுறது உங்களுக்கு பிடிக்கலைன்னா. நாங்க என்ன பண்ண? என்னத்தையோ பண்ணிக்கோங்க” என்றவர்கள்தான் குழந்தைகளை தத்தெடுக்கும் பொழுது வரவே இல்லை.
ஜேம்ஸின் திருமண வேலைகளின் பொழுதுதான் ஜெஸியையும், லெனினையும் சந்தித்திருக்க, குழந்தைகள் தங்களது மழலை பேச்சால் பெரியவர்களின் மனதை கவர்ந்திருந்தனர். யாருக்குத்தான் குழந்தைகள் என்றால் பிடிக்காமல் போகும்? அதுவும் ஜெஸி, லெனின் போன்ற சமத்துக் குழந்தைகளை பிடிக்காமல் போகுமா?
ஜெராடின் திருமணம் ஹோட்டலில் நடந்தது. ஆனால் ஜேம்ஸின் திருமணம் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமகன் ஜேம்ஸ் குடும்பத்தினருடன் ஆலயத்துக்கு வந்து மணமகள் லியோனாவுக்காக காத்திருந்தான். லியோனா தந்தையுடன் கைகோர்த்து ஆலயத்துக்குள் நுழைய, அவர்களுக்கு பின்னால் மலர்பெண்களும் வரிசையாக வருகை தந்தனர்.
திருச்சபைத் தலைவரால் ஜேம்ஸ் மற்றும் லியோனாவின் திருமணமும் நடாத்தப்பட, இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர்.
திருமணம் இனிதே நிறைவுபெற்று எல்லா சடங்கும், முடிந்த பின் அனைவரும் விருந்துக்காக ஹோட்டலுக்கு வண்டிகளில் கிளம்பியிருந்தனர்.
ஹோட்டலில் வைத்துதான் எஸ்தர் தானும் ஜெராடோடு இங்கிலாந்து செல்வதை குடும்பத்தாருக்கும், உறவினருக்கும் தெரிவித்தாள்.
“என்னமா சொல்லுற?” ஜேம்ஸ் தான் பதறினான்.
“உனக்காகத்தான் இவ்வளவு நாளும் அங்க போகமா இருந்தேன். உண்ண லியோனாகிட்ட கொடுத்துட்டேன். இப்போ நான் ப்ரீபர்ட் எங்க வேணா பறக்கலாம். உன் அண்ணன் அங்க என்னதான் பண்ணுறான்னு நீதான் அடிக்கடி கேப்பா. இப்போ நானே போய் பார்த்துட்டு வரேன்” என்று சிரித்தாள்.
“என்ன அத்த இது. நான் வீட்டுக்கு வரும் போது நீங்க கிளம்புறீங்க?” லியோனா வருத்தமாக கூறினாள்.
“அம்மாடி அந்த குளிருல எல்லாம் என்னால ஒரு மாசம் கூட தங்க முடியுமான்னு தெரியல. போன வேகத்துல ஓடி வந்துடுவேன். என்னைக்கும் நான் இங்கதான் இருப்பேன். நீ ஒன்னும் கவலைப்படாதே. நாம ரெண்டு பேரும்தான் சண்டை போடணும்” என்று சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
எஸ்தர் மகள், மருமகள் என்று வேறுபாடு பார்பவளல்ல. சரியென்றால் சரியென்று சொல்பவள். திருமணம் பேசியதிலிருந்து பரா போல் லியோனாவும் எஸ்தரின் விசிறிதான்.
வெள்ளைக்காரிய கட்டியவன் வெளங்காம போவான்னு நினச்சா, அவ மூளைல கட்டி வந்து செத்துட்டாளாம். அங்க வீடும் வாங்கிட்டானாம், கைநிறைய சாம்பாதிக்கிறான். ரெண்டாம் தாரமா நம்ம பொண்ண கட்டிக் கொடுத்திருந்தாலும் இந்த குடும்பத்துல எந்த பிக்கள் பிடுங்களும் இல்லாம இருந்திருக்கும் என்று ஒருசிலர் தங்களுக்குள் பேசிக்கொள்ளத்தான் செய்தனர்.
யார் யாரோடு சேர வேண்டும் என்பது கடவுள் போடும் முடிச்சல்லவா. அதை நாம் எவ்வாறு தீர்மானிப்பது?
அடுத்த நாள் இங்கிலாந்து பயணிக்க ஜெராட் குடும்பத்தோடு எஸ்தரும் நிற்க, “இங்க தனியா நிக்கிறதுக்கு நீங்களும் வந்திருக்கலாம்” பெற்றோரை பார்த்து கூறினாள் பரா.
“பின்ன அம்மா அங்க போய் யார் கூட பேசுறதாம்? உன் கூட பேச ஆரம்பிச்சா? என் நிலைமை என்ன ஆகுறது? ஜெராட் பராவின் காதுக்குள் சொல்ல,
“என்ன?” என்றவளுக்கு அப்பொழுதுதான் பெற்றோரும் அவர்களோடு வருவது தெரிந்தது.
எப்பொழுது ஏற்பாடு செய்தான்? ஒன்றும் தெரியவில்லை. பெட்டிகளை அடுக்கும் பொழுது கூட தெரியவில்லை. வீட்டை பார்த்துக் கொள்ளத்தான் மாமா வந்தாரா? இப்படியா சப்ரைஸ் கொடுப்பீங்க? அன்னையிடமும், கணவரிடமும் முறையிட்டவாறே பாத் நகரத்துக்கு வந்து சேர்ந்தாள் பரா.