Advertisement

தூரம் 3

சக்திவேலுக்கு  சரோஜினியை விட லாலா என்ன  நினைப்பான் என்ற கவலையே அதிகம். தன் நட்பை அவன் எவ்வளவு மதிக்கிறான் என்று தெரியும்.

சரோஜினிக்கும் அவனுக்குமான காதல் இந்த ஐந்து வருடமாகத்தான். சக்திவேல் சென்னையில் படிப்பு முடிந்து, எஸ்.ஐ தேர்வுக்காக அகாடமியில் படித்தான். லாலா படிப்பு முடிந்ததும் ஊருக்கு வந்துவிட, சரோஜினி படிக்க சென்னை வந்தாள்.

லாலாவின் தங்கை என்பதால் கொஞ்சம் பாசமுண்டு, அதைத்தாண்டி அவளும் இவனிடம் விரோதம் பாராட்ட மாட்டாள். பார்த்தால் சிரிப்பு, பேச்சு என்று இருப்பாள். அவளுக்குத்தான் காதல் முதலில் பூத்தது, சக்தியிடம் சொல்ல அந்த பூவாசம் அவனுக்கும் பிடித்துப்போனது.

வேறு ஊரில் அவன் வேலையில் இருந்தவரை போனில் காதல் வளர்த்தார்கள், அப்போது நண்பனையும் காதலியையும் சமாளிப்பது  எளிதாக இருந்தது. இப்போது சவால்தான், ஆனால் சக்திக்கு சவால் பிடிக்குமே!

அவன் வீட்டில் இன்னும் பெண்பார்க்கவில்லை, சரோஜினிக்கும் வரன் பார்க்கவில்லை. அதனால் பொறுமையாக இருக்கிறான், பார்க்கிறார்கள் என்று தெரிந்தால் நேராக திலகர் வீட்டு வாசலில் நின்றுவிடுவான்.

நிச்சயம் அன்று ஊரே வேடிக்கைப் பார்க்குமளவு, இந்தியா பாகிஸ்தான் சண்டை உண்டு.

சக்திவேல், “சரிடி, போ தூக்கம் வருது” என்றதும் சரோஜினி வெளியே வந்தாள்.  இருவீட்டு மனிதர்கள் பிரிந்து இருந்தாலும் சுவர்கள் இரண்டும் அன்றிலாய் ஒட்டியிருந்தது.

ஆம்! இந்தியா பாகிஸ்தான் ராட்கிளிஃப் கோடு கூட இத்தனை ஒட்டி இருக்காது போல, என் பங்கை விட மாட்டேன் என்று இருவீட்டு பெரியவர்களும் அவரவர் பங்குக்கு இடைவெளி விடாது வீடு கட்டியிருந்தனர்.

சரோஜினி அந்த இருளில் வெளியே வந்து, மாடிப்படி சுவரில் கால்வைத்து காம்பவுண்ட் சுவரில் குதித்து பின் அவர்கள் மாடிக்குத் தாவினாள். சக்தி அவள் போனதும் தன் அறைக்குள் போனான்.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல், சக்தி அவன் வீட்டு மொட்டை மாடியில்  தாண்டால் எடுத்தான். சரோஜினி இவன் வருகைக்காவே அந்த நேரம் மாடி வர, அவளை கண்டதும் சக்திக்கு உற்சாகம்.

சரோஜினியைப் பார்த்ததும் புன்னகைத்தான். அவன் கண்காட்டிய இடம் பார்க்க, இவர்கள் வீட்டு மாடி சுவரில் சிவப்பு ரோஜா இருந்தது.

சரோஜினி ரோஜாவைப் பார்வையால் வருடி, போனை எடுத்து அவனுக்கு அழைக்க, விசிலடித்தபடியே அழைப்பை எடுத்தான்.

சரோஜினி, “என்ன எங்க வீட்டு மாடியில ரோஜா பூ பூத்திருக்கு?” என்று கேட்க

“சரோசாவுக்கு ரோசாப்பூ பிடிக்கும்னுதான், எங்கம்மா அதுவும் வைச்சுக்காத, நேரா சாமி படத்துக்கு வைக்கும். உங்க வீட்ல பூ பூக்கல, அதான் காலையில பார்த்ததும் பறிச்சிட்டேன்” என்றான்.

“சரோஜினி!” என்று அழுத்தி சொன்னவள் சக்தியை கிண்டலாகப் பார்த்தவாறே,

“போலீஸ்காரனுக்கு திருட்டுப்புத்தி” என்றாள்.

“போடி, போய் குளிச்சிட்டு பூ வைச்சிக்க” என்றான் சக்திவேல். காலையில் குளித்து சரோஜினி சக்தி கொடுத்த பூவை ஆசையாய் வைத்துக்கொண்டாள்.

சக்திவேலின் அம்மா சசிகலா  காலையில் பூ பறிக்க வந்தவர், நேற்றிரவு வரை இருந்த பூ காணாமல் போனது கண்டு கடுப்பாகிவிட்டார். அதில் சரோஜினியின் தலையில் இருந்த சிவப்பு ரோஜா கண்ணில் பட்டுவிட, திண்ணையில் உட்கார்ந்திருந்த சரோஜினியை காம்பவுண்ட் அருகே நின்று அழைத்தார்.

“ஹேய் இந்தாருடி சரோஜினி, எங்க வீட்டு பூவை ஏண்டி பறிச்ச?” என்று சத்தம் போட

“ஊர்லயே உங்க வீட்லதான் பூ பூத்திருக்கா அத்த? எங்க வீட்லயும் ரோஜா செடி இருக்கு, அதுல உள்ள பூ இது” என்றாள் சரோஜினி.

“ஏண்டி எங்க வீட்டுப்பூ எதுனு எனக்குத் தெரியாதா?” என்று கேட்க, இந்த சத்தம் கேட்டு திலகரின் மனைவி அஞ்சம்மாள் வந்துவிட்டார்.

“எவடி அவ? என் பேத்தியைப் பேசுறவ?” என்று சசிகலாவைப் பார்த்து கேட்க

“நான் செடி  நட்டு தெனைக்கும் தண்ணீ ஊத்தி பார்த்து, பூவுக்காக காத்து கிடந்தா உன் பேத்தி நோகாம பறிச்சி வைச்சிட்டு லாத்துவாளா(சீன் போடுவாளா?) என்றார் கோபத்துடன்.

“உன் வூட்டு பூவை வைக்கணும்னு அஞ்சம்மா பேத்திக்கு என்னாடி தலையெழுத்து, என் புருஷன் பெங்களூர் தோட்டத்து பூவை கொண்டு வந்து வைச்சிருக்கார், என் பேத்தி ஏண்டி உம்மூட்டு பூவை பறிக்கிறா?” என்று அஞ்சம்மாளும் பதிலுக்குப் பேச, நல்ல நேரமாக இந்தியாவும் இங்கிலாந்தும் வீட்டில் இல்லை. அதற்கு பதில் சக்தி சத்தம் கேட்டு வெளியே வந்தான்.

“என்னம்மா சத்தம்?” என்று யுனிஃபார்மில் கிளம்பி வந்தவன் கேட்க, சரோஜினி சக்திவேலை முறைத்தாள். அதனை சசிகலாவும் பார்த்துவிட்டார்.

“டேய் சக்தி! ஆசையா ரோஜா செடி வளர்த்து பூ பூக்கிறதுக்காக காத்திருந்தா,  இந்தா நிக்கிறாளே இவ, நம்மூட்டு பூவை திருடி வைச்சிருக்காடா” என்றதும்

“ம்மா, பூவுல எது நம்ம பூவுனு நமக்கு தெரியும்? அப்படியே பறிச்சாலும் பூவுதானே விடும்மா” என்றான் சக்திவேல். அவரோ

“பூவுதானே வா? போலீஸ்காரன் வீட்ல பூவை திருடினா உனக்கு அவமானம் இல்லையாடா? இன்னிக்குப் பூவை திருடினவ நாளைக்கு என்னத்த தூக்குவாளோ?” என்று சசிகலா பேசிக்கொண்டு போக

“ஏட்டி! இன்னொருவாட்டி எம்மூட்டு பேத்தியை திருடினு சொன்ன பேசின வாயைத் தைச்சுப்புடுவன் பார்த்துக்க” என்றார் அஞ்சம்மாள்.

‘திருட்டுப் போலீஸ்’ என்று சரோஜினி இதழ்கள் இதனை கண்டு முணுமுணுத்தன. சக்தியோ அம்மாவை எப்படி சமாளிப்பது என்று பார்த்தான்.

சசிகலா மகனை முறைக்க,
‘பூவுக்கே இந்த அக்கப்போராடா சக்தி?’ என்று நொந்து போனான்.

சத்தம் கேட்டு லாலாவும், அவன் அம்மா சித்ராவும் வெளியே வந்து பார்க்க, காம்பவுண்ட் சுவரின் ஒரு பக்கம் அஞ்சம்மாவும் சரோஜினியும் நின்றிருக்க, இன்னொரு பக்கம் சக்தியும் அவன் அம்மாவும் பேசினர்.

லாலா கண்ணாலயே என்னவென்று நண்பனை பார்க்க, அவனோ இவன் பக்கமே பார்க்கவில்லை. நட்பு நம்பிக்கையில் உருவானது, அதனால் லாலா சக்தியை ஆராய மாட்டான். ஆனால் காதல்?! அது மொத்தமாக கவனிக்கும், ரசிக்கும், கோபிக்கும்!

சரோஜினி சக்தியின் புருவ சுழிப்பை கூட கவனிப்பாள். அவள் இருக்கும்போது லாலாவை பார்த்தால், நிச்சயம் கேள்வி கேட்பாள்.

சித்ராவுக்கு இந்த சண்டையெல்லாம் ஆகாது. மகளும் மாமியாரும் பேசுவதைப் பார்த்தவர்,

“சரோ! என்ன சத்தம் இங்க? உள்ள போ” என்று அதட்டினார்.

சசிகலா விடவில்லை.

“இங்க பாரு சித்ரா, உன் மவ பண்றது சரியில்லை. உன் மாமியாரும் மவளும் சேர்ந்திட்டு என் வீட்டு செடியில இருந்த ரோஜாவை பறிச்சி வைச்சிட்டு வாயாடிக்கிறாங்க” என்று சொல்ல, சித்ரா மகளை பார்த்தார்.

அஞ்சம்மாவோ மருமகளிடம், “ இந்த கோழிமூட்டி கோவிந்தன் மக சொல்றானு என் பேத்தியை ஏன் டி முறைக்கிற?” என்று மருமகளை கேட்டவர்

“ஜில்லாவுலயே இவ வீட்லதான்  ரோசா பூ பூத்து குலுங்குதா?  நம்ம வீட்ல கூடத்தான் இருக்கு.” என்று திட்டினார்.

“இங்க பாரு பெரியம்மா சும்மா எங்கப்பாவை ஜாடை பேசுறதெல்லாம் வேண்டாம்” என்று சசிகலாவும் பதிலுக்குப் பேச, சக்திக்கு மண்டை காய்ந்தது.

‘ரோசாப்பூவுக்கு இவ்வளவு பெரிய போரா?’ என்று நினைத்தவன் இவர்கள் சண்டை ஓயாதென புரிந்து

“அம்மா! இப்போ சாப்பாடு எடுத்து வைப்பியா மாட்டியா? இல்ல இங்க நின்னு இந்த வெட்டி ஆளுங்களோட பேசிட்டு இருக்க போறியா?” என்றதும் அண்ணனும் தங்கையும் சக்தியை ஒன்றாய் முறைத்தனர். சக்தியோ வேறு வழியில்லை ஆத்தா என்ற நிலையில் இருந்தான். இப்படி பேசாவிட்டால் அவன் அம்மா இன்று பூவினால் பூகம்பம் உண்டாக்கிவிடுவார் என்று தெரியும்.

சசிகலா மகனின் குரலில் திரும்பினார். சக்தி வேண்டுமென்றே நில்லாமல் வீட்டுக்குள் சென்றான். சசிகலாவும் பக்கத்து வீட்டினரை முறைத்தபடி உள்ளே போனார்.

“ஏண்டா  உன் தாத்தா சண்டை போட்டா துணைக்குப் போற, நான் வளர்த்த பூ செடி பூவுனு சொல்றேன், என்னை நம்பாம பூதானே வைச்சா வைச்சிக்கட்டும்னு சொல்ற.” என்று திட்டினாலும் மகனுக்கு இட்லி எடுத்து வைத்தார்.

சரோஜினிக்குக் கடுப்பாக வந்தது. அவள் அம்மா வேறு,

“ஏண்டி உங்க ஆத்தா சண்டை போட்டா, நீயும் போடுவியா? பாரு எப்படி பேசுறாங்க.” என்று திட்டிவிட சக்திவேலை கண்டால் கத்திவிடும் ஆத்திரம் சரோஜினிக்கு.

‘இவன் கிட்ட  நான் பூ கேட்டேனா? இவனா பூ கொடுத்தான், இவன் அம்மா என்னை பேசுறாங்க’ என்று அவனை மனதுக்குள் திட்டியவள், ஏன் அதிலும் கஞ்சம் செய்ய வேண்டும், நேரடியாக திட்டிவிடலாம் என்று நினைத்து அவனுக்கு அழைத்தாள்.

அவர்கள் வீட்டு திண்ணையில் இருக்கும் மர சோஃபாவில் உட்கார்ந்து உண்டவன்,

“அம்மா! போன் அடிக்குது எடுத்துட்டு வாயேன்” என்றதும் சசிகலாவும் எடுத்து வந்தார்.

“எஸ்பிடா” என்று பவ்யமாக சொல்லி நீட்டியவருக்கு எஸ்பி என்றால் ‘சக்திவேல் பொண்டாட்டி’ என்று தெரியவில்லை.

சக்திவேல் ஒற்றைக்கையால் போனை வாங்கியவன் பேசாது அதனை உற்றுப்பார்க்க,

“பேசுடா” என்றவர் உள்ளே சென்றுவிட, சக்தி போனை கட் செய்தான். அங்கே இருந்து பேசினால் நிச்சயம் அம்மாவுக்கு கேட்கும். சக்தி அழைப்பை எடுக்காமல் இருக்க, சரோஜினிக்கு கோபம் வந்தது.

‘உங்கிட்ட ரோசாப்பூ கேட்டனா டா நான்?’

‘பெரிய காதல் மன்னனாட்டாம் பூ கொடுத்துட்டு, உங்க அம்மா கிட்ட பேச்சு வாங்க வைக்கிறியா?’

‘எப்படி எப்படி வெட்டியா இருக்கவங்க கிட்ட ஏன் பேசுறியாவா?’

‘காலையில என் மூடை ஸ்பாயில் பண்ணிட்ட இல்ல, போன் பண்ணினா எடுக்காம கொட்டிக்கிறியாடா?’ என்று கண்டபடி திட்டி அவனுக்கு வாய்ஸ் மெசெஜ் அனுப்பிவிட்டாள். சக்தி மெல்ல சத்தம் வைத்து அதனை கேட்டவன் முகத்தில் கோபமே இல்லை, மாறாக புன்னகை.

சக்திக்குத் தெரியும் சரோஜினியால் இவனோடு பேசாது இருக்க முடியாது என்று. கோபத்தை அந்த  நேரம் அடக்காது காட்டிவிட்டால், அவள் அமைதியாகிவிடுவாள்.

சக்திக்கும் அம்மா பேசியது சரியென்றாலும் அவன் மீதுதான் தவறென்று தெரியுமே, அதனால் உண்டு முடிக்கவும் ‘சாரி சரோ’ என்று அவளுக்கு செய்தி அனுப்பியிருக்க, சரோஜினி பார்த்தாலும் பதில் அனுப்பவில்லை.

சக்திவேல் வேலைக்கு சென்றுவிட, அன்றைய நாள் கல்லூரி மாணவி ஒருத்தியின் தற்கொலை மரணம் குறித்தான விசாரணையில் இறங்கியிருந்தான்.

சரோஜினி அவர்கள் டவுனில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள். அவள் வேலை முடிந்து வீட்டுக்கு வர, அவள் தாத்தா திலகர் போனில் கத்தி பேசிக்கொண்டிருந்தார்.

“யார்கிட்டம்மா தாத்தா பேசுறார்?” என்று சரோஜினி கேட்க

“உன் சித்தப்பா கிட்ட” என்றவர் மகளுக்கு டீ எடுக்க உள்ளே சென்றார். திலகர் தன் மகன் சித்ரஞ்சனிடம் கத்திக்கொண்டிருந்தார்.

“உனக்கு உன் பொண்டாட்டித்தான் முக்கியமா போய்ட்டாளாடா? பேரனைப் பார்க்கணும், குடும்பமா மண்டாபிடிக்கு வாடானு சொன்னா, சும்மா சாக்குப்போக்கு சொல்லிட்டிருக்க. என்ன சொல்றா அந்த வெள்ளைக்காரன் மவ?” என்று திலகர் கேட்க

சித்ரஞ்சன் தன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மனைவி வசுந்தராவைப் பார்த்தார். அவர்கள் மகன் பகத் அம்மாவிடம்,

“ம்மா, நீங்களும் எங்களோட வரீங்க. தாத்தா எவ்வளவு டைம் கூப்பிடுறாங்க. திருவிழாவுக்கு நான் போனதே இல்ல, ப்ளீஸ் மா, நீங்க வராம  நான் போகமாட்டேன்” என்று அடம் செய்தான்.

“அப்பா! நாளைக்கு மண்டாபிடிக்கு வரது கஷ்டம், எனக்கு  நிறைய வேலை. கண்டிப்பா கிடாவெட்டுக்கு வந்துடுறேன்பா, சரி… அவளோடதான் வருவேன்” என்று மனைவியோடு வருவேன் என்று அப்பாவுக்கு வாக்குத் தந்தார்.

**************

அடுத்த நாள் திலகர் வீட்டு மண்டகப்படி. திலகர் முதலில் செய்வதா லட்சுமணன் செய்வதா என்ற தகராறில், வழக்கம்போல் திலகர் முதலில் செய்வது என்று முடிவானது. அன்றிரவு சக்தி வீட்டில் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட, லாலா அவனுக்காக எடுத்து வருகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தான்.

கோவிலுக்குப் போய்விட்டு வந்தவுடனே அம்மாவிடம்,

“அம்மா! என் கூட்டாளிங்களுக்கு தனியா எடுத்து வைக்க சொன்னேனே, கொண்டா மா” என்று சமையல்கட்டில்  நின்று கேட்டான் லாலா.

சமையல்கட்டு சுவரில் சாய்ந்து நின்று, துப்பட்டாவின்  நுனியை பிடித்து விளையாடியபடி இருந்த சரோஜினி,

“உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்ன அண்டா கணக்கா தின்பானுங்களா? கோவில்லயே க்யூவுல நின்னு எல்லாம் வாங்கிட்டு போயாச்சு, நீ யாருக்கு இப்போ வாங்கற?” என்று விசாரித்தாள். அதில் லாலாவுக்கு சுர்ரென்று ஏறியது.

“என் ப்ரண்டுக்கு வாங்குறேன் சொல்லிட்டேன், ஆளு, அட்ரஸு, ஆதார் கார்ட் எல்லாம் கொடுக்கனுமா டி, போய் உன் வேலையைப் பாரு” என்று லாலா அதட்டினான்.

“என் வேலையை நான் பார்த்ததாலதான் உன்னை கேட்கிறேன், நானும் அம்மாவுக்கு சமைக்க ஹெல்ப் பண்ணிருக்கேன்.”

“ஏன் சமைக்கிற வேலை உன்னோடதுதானே? செஞ்சா என்னடி? அம்மா பாரும்மா சாப்பாடுக்கு இவ இப்படி பேசுறா?” என்று அம்மாவிடம் புகார் சொல்ல,

“ஏண்டி, பயலுங்க சாப்பிடதானே  கேட்கிறாங்க, பேசாம இரு” என்று சித்ரா மகளை  அதட்ட, தங்கைக்குப் பழிப்புக் காட்டினான் லாலா. சித்ரா மகன் கேட்டதால் முன்பே தனியே எடுத்து வைத்திருந்தார்.

“போடா” என்று சரோஜினி போனவள் தன் அறைக் கதவை சாற்றிவிட்டு, அவள் ஹாட்பாக்சில் சின்ன சின்ன கிண்ணத்தில் வைத்த புளிசாதம், வெஜிடபிள் சாதம், கொண்டைக்கடலை, சக்கரைப்பொங்கல் என்று எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தாள். லாலா நண்பர்களைப் பார்க்க சென்றுவிட, தாத்தாவும் அப்பாவும் இன்னும் கோவிலை விட்டு வரவில்லை.

அம்மாவும், ஆத்தாவும் சீரியல் பார்க்க, காம்பவுண்ட் சுவரில் குதித்து, சக்தி வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தவள் ஹாட்பாக்ஸை அவன் அறையில் வைத்துவிட்டு மீண்டும் வீடு வந்தாள்.

இரவு பதினொன்றரை போல் சக்தி வீடு வந்தான். அவன் அறைக்கு சென்று பார்க்க, புது வாசம்.

“இது என்ன லாலா வீட்டு புளிசோறா வாசம் இங்கதக்க வருது?” என்று முகர்ந்தபடி அறையை நோட்டம் விட, அவன் வந்த சத்தம் கேட்டு சரோஜினியிடமிருந்து அழைப்பு.

“சொல்லுடி சரோ” என்று சக்தி பேச, சரோஜினி மெல்லிய குரலில்,

“உங்க ரூம் டேபிள்ல ஒரு ஹாட்பாக்ஸ் இருக்கும், மண்டாபிடி சோறு இருக்கு. சாப்பிட்டு சொல்லுங்க” என்றாள்.

“சூப்பரு..” என்ற சக்தி

“உங்க வீட்டு தக்காளி சோறு  நான் தலைவணங்குறேன் டி” என்று சிலாகித்து சொல்ல,

“நான் தக்காளி சோறே கொடுக்கலயே, அது என் அண்ணன் அவன் ப்ரண்ட் ஏதோ பஞ்சத்துல அடிபட்ட பரதேசிக்கு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய்ட்டான்” என்று புலம்பிட, சக்திக்கு சரோஜினியின் பேச்சில் புரையேறியது.

 

 

 

 

Advertisement