திவ்யபாரதி மயங்கிச் சரிவதை அதிர்ந்து பார்த்த செழியன், தரையில் சாயும் முன் தாங்கிப் பிடித்திருந்தான். தன்னை காக்கிச்சட்டையில் கண்டதும் மயங்கியவளைப் பார்த்தவன், கார்த்தியைத்தான் முறைத்திருந்தான்.
‘இதற்குத்தான் சொன்னேன் கேட்டாயா?’ என்ற பார்வை அவனிடம்.
வேலை செய்ய வந்தவர் மூலம் அதற்குள் விசயம் பரவியிருக்க, ஊரே செழியனின் வீட்டின் முன் கூடி இருந்தது. திரையன் அரிமா அந்த ஊரின் வயதான மருத்துவச்சி ஒருவரை கையோடு கூட்டி வந்திருந்தார்.
அந்த மூதாட்டியோ, மயங்கியவளின் நாடி பிடித்துப் பார்த்தவர், “ஐயா கருப்பா!” என்று வானத்தை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டவர்,
செழியனிடம் “வாரிசு வரப் போகுதய்யா ராசா.” என்று சொல்லிச் சிரிக்க, செழியனோ சொல்ல முடியாத மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தான்.
அதற்குள் கண்முழித்த பாவையவள், செழியனின் முகம் பார்க்க, கண் சிமிட்டி சிரித்தவன், நெற்றியில் முட்டி தன் நன்றியை தெரிவித்திருந்தான்.
நாணம் கொண்ட பாவையவள் வீட்டுக்குள் ஓடி ஒளிய, எதிரில் சர்க்கரை டப்பாவுடன் நின்றிருந்த கார்த்தி! வாயைத் திறக்கச் சொல்லி அவள் வாய் முழுவதும் இனிப்பை நிறைத்து, தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.
மருத்துவரிடமும் இருவரும் சென்று உறுதிப்படுத்திக் கொண்டனர். அன்று ஊரே திருவிழாக் கோலம் பூண்டது.
திரையன் அரிமா ஊருக்கே விருந்து வைத்து, தன் பங்குக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நாளொரு மேனியும் போழுதொரு வண்ணமுமாய் செழியனின் வாரிசு வளர, ஏற்கனவே குழந்தையாய் வைத்து தாங்குபவன், இப்போது குழந்தையை சுமக்கும் பெண்ணரசியை இமைக்குள் வைத்துக் காத்தான்.
ஆரம்ப கட்ட வாந்தி மயக்கம் எல்லாம் செழியனும், செழியன் பணிக்குச் சென்ற நேரங்களில் தாயாய் இருந்து கார்த்தியும் பார்த்துக் கொண்டனர்.
கார்த்தியோ தான் விட்ட வேலையை மீண்டும் ஆரம்பித்திருந்தான். ஆம், தினமும் மாலை வேளையில் திண்ணையில் அமர்ந்து வயிற்றிலிருக்கும் வாண்டிடம் பேச ஆரம்பித்திருந்தான், எட்டு வயது கார்த்தியாக.
கார்த்தி பேசப் பேச வயிற்றில் குதியாட்டம் போடும் தன் வாரிசை, செழியன் சிறு புன்னகையோடு இரசித்திருப்பான்.
திவ்யபாரதி வயிற்றில் சுமந்த அன்றிலிருந்தே, கார்த்தியின் கட்டளை படி தள்ளியிருந்தே காவல் காத்தான், ஹென்றி.
ஒருநாள் ஹென்றி திவ்யபாரதியையே சுற்றி சுற்றி வர, அவன் ஆசையைப் புரிந்துகொண்ட செழியன் பாரதியை கண்களை மூடச் சொல்லியவன், கைகளைப் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, “பாப்பு..! ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோடி” என்றவன், ஹென்றியை அருகில் அழைக்க..
வயிற்றில் தன் பாஷையில் நாவால் வருடி தன் அன்பை செலுத்திய ஹென்றி, வயிற்றிலிருக்கும் சிசுக்கு இப்போதே சல்யூட் ஒன்றை வைத்து வாலாட்டி நின்றான்.
கூச்சத்தில் கண்களை திறந்த பாரதி பயந்து அலற, “ஒன்னும் இல்லடி அவ்வளவுதான். நம்மகிட்ட சொல்ல முடியலைன்னாலும், அவன் கண்ணுல ஆசை தெரிஞ்சதுடி அதான்…” என்றவனை முறைத்தவள்…
“என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. எனக்கு இப்போ ஒன்னும் அவன் கிட்ட பயம் இல்ல. அதான் 24 மணி நேரமும் என்னையே சுத்தி சுத்தி வரானே! திடீர்னு பார்க்கவும் தான் கொஞ்சம் பயந்துட்டேன்.” என்றிருந்தாள்.
ஒரு நன்னாளில் ஊரே திரண்டு திவ்யபாரதிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தது. தினமும் யாரோ ஒருவர் திவ்யபாரதிக்கு சீமந்தச் சோறு ஆக்கிக் கொண்டு வந்தனர். செழியன் எவ்வளவு தடுத்தும், அவர்களின் அன்பின் முன் தோற்றுப் போனான்.
திரையன் அரிமாவும், அவர் மனைவியும், தாய்வீடாய் இருந்து திவ்யபாரதியை பிரசவத்திற்கு அழைத்துப் போகத் தயாராய் இருந்தனர். ஓரே ஊராக இருந்தாலும், செழியனுக்கு தன் மனையாட்டியைப் பிரிய மனதே இல்லை. இருந்தும் திரையன் அரிமாவிடம் மரியாதை கொண்டிருந்தவன், மறுக்க முடியாமல் தவித்தான்.
ஆனால், திவ்யபாரதி போக மறுத்துவிட்டாள். திரையன் அரிமாவும் திவ்யபாரதியை புரிந்துகொண்டவர், வளை காப்பு நடத்திய அன்று மட்டும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், மறுநாள் செழியனின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
திவ்யபாரதிக்குதான் செழியன் இல்லாமல் இரவில் தூக்கம் வராதே. இப்போது வயிறு இடித்தாலும், தலை என்னவோ அவன் நெஞ்சில்தான் இருக்கும். இரவில் கால்வீங்கி அவதிப்படுபவளுக்கு, கால் அமுக்கிவிடவும் செழியன் தயங்கியதே இல்லை.
சமையலறையை தன் சொந்தமாக்கிக் கொண்டான், கார்த்தி. திவ்யபாரதிக்கு ஏற்றதாய் பார்த்து பார்த்து சமைத்துப் போட்டான். இப்படி பார்த்து பார்த்து தாங்குபவர்களை வைத்துக்கொண்டு, திரையன் அரிமா வீட்டில் தங்க விரும்பவில்லை பாரதி.
அன்று ஒருநாள் தங்கியதற்கே தூக்கம் வராமல் அவதிப்பட்டாள், பாரதி. அந்த ஒருநாள் கூட ஹென்றி, வாலாட்டிக் கொண்டே திவ்யபாரதியுடன் சென்றுவிட்டான்.
பத்தாம் மாதம் ஆரம்பித்திருக்க, செழியன் தவிர்க்க முடியாத காரணத்தால் தன் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில், அன்று வெளியில் சென்றிருந்தான்.
கார்த்தியும் சின்ன வேலைக்காக உடனே திரும்பி விடலாம் என்று தோட்டத்திற்குச் சென்றிருந்தான். ஹென்றியிடம் எச்சரித்துவிட்டே சென்றிருந்தான்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்க, துணைக்கு யாருமற்ற தனிமையில் அலறித் துடித்தாள், திவ்யபாரதி.
திவ்யபாரதியின் அருகில் வந்து வயிற்றில் தன் நாவால் வருடிக் கொடுத்த ஹென்றி, அடுத்த நொடி சிட்டாகப் பறந்திருந்தான், கார்த்தியைத் தேடி.
மற்ற மூவரும் கூட திவ்யபாரதியின் கதறலில் குரைத்துக்கொண்டு நாலாப் பக்கமும் சிதறி ஓடியவர்கள், சற்று நேரத்திற்கெல்லாம் ஊரையே செழியன் வீட்டு வாசலில் கூட்டி வைத்திருந்தனர்.
விசயம் கேள்விப் பட்டு செழியன் வருவதற்குள், கார்த்தி முதற்கொண்டு திரையன் அரிமா வரை, அந்த ஆரம்பச் சுகாதர மருத்துவ மனையின் வாசலில் தான் நின்றிருந்தனர்.
உள்ளே திவ்யபாரதி அலறும் சத்தம் கேட்க, பதறித் துடிக்க வேண்டிய செழியனோ, வெளியில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு வாயில் கை வைத்திருந்தான். எல்லாம் ஹென்றி, பைரவ், ராக்கி மற்றும் மாறன் பண்ணிய கூத்துதான்.
அவர்களுக்கு தன் விளையாட்டு தோழமை வரும் செய்தி தெரிந்ததோ என்னவோ, அந்த மருத்துவமனை முழுவதையும் துள்ளி குதித்து அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தனர்.
அனைத்திற்கும் மேலாக ஹென்றியோ திவ்யபாரதி இருந்த அறையின் வாயிலில் குறுக்கும் நெடுக்குமாக தவிப்புடன் அலைந்தவன், இறுதியில் வாயிலின் அருகிலேயே தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அடைமழையுடன் சேர்த்து வானம் இடி மின்னலுடன் ஆரவாரமாய் வரவேற்கத் தயாராக, அந்த ஊரின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இந்த உலகில் அடியெடுத்து வைத்திருந்தாள், செழியனின் பெண்ணரசி.
வீல் என்ற அலறல் சத்தம் கேட்க, எல்லோரம் நிம்மதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்து கொண்டு வந்த செவிலிப் பெண் “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு, அம்மாவும் நல்லா இருக்காங்க.” என்றவள் செழியனிடம் குழந்தையைத் தந்தாள்.
ஆசையோடு கைகளில் தாங்கியவன், பிஞ்சுப் பாதங்களில் முத்தமிட, செழியனின் கைகளில் இருந்த பெண்ணவளோ காலை உதறிக்கொண்டு வீறிட்டு அழுதாள். கைதியை கையாள்பவன் குழந்தையை கையாளத் தெரியாமல் தவித்திருந்தான்.
அருகில் வந்த கார்த்திக்கு சிறுவயதில் தன் அம்முவை தாங்கிக் கொண்ட அனுபவம் கைகொடுக்க, “ஒரு குழந்தையப் பிடிச்சிக்க தெரியுதா உனக்கு?” என்றவன்,
“என்னடா அம்முகுட்டி” என்று சொல்லிக்கொண்டே கையில் வாங்க, அவனது அம்முவைப் போலவே கார்த்தியின் குரலில் அழுகையை நிறுத்தி இருந்தாள், அந்தச் சில்வண்டு.
கார்த்தியின் கையில் தன் மகளை ஒப்படைத்தவன், அடுத்த நொடி தன்னவளைக் காண ஓடிவிட்டான், செழியன். தன் கனவு வாழ்க்கையை கைகளில் நினைவாக்கித் தந்தவள் அல்லவா.
விரல்கொண்டு அவன் வாயை மூடியவள் “இன்னும் பத்து புள்ளைனாலும் பெத்துத்தர நான் ரெடி DSP.” என்றவள் கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“அப்போ நான் பத்து கதை ரெடி பண்ணனுமா?” என்றவனை காதைத் திருகி முறைத்து வைத்தாள், செழியனின் பாரதி.
ஹென்றியோ, வாலாட்டிக் கொண்டே சில்வண்டை சுத்தி சுத்தி வந்தான். மற்ற மூவரும் கூட துள்ளிக் குதித்து தங்கள் பங்கு மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
செழியனின் தாய் அன்று சொன்னது போலவே, தன் பேரக்குழந்தையை கொஞ்சத்தான் வந்திருந்தனர் இருவரும்.
திவ்யபாரதி உண்டான செய்தி கேட்டு இடையில் வந்திருந்தாலும், ஊரே திவ்யபாரதியை தாங்க, நிம்மதியாகவே ஊர் திரும்பி விட்டனர்.
செழியனின் தாய் தந்தை இருக்கும் போதே, தொட்டிலிட்டு பெயர் வைக்க நினைத்த செழியன், ஒரு நல்ல நாளை தேர்வு செய்திருந்தான்.
முழுமதியாய் தாய்மையில் நிறைந்து நின்ற தன் மனைவியை விழி அகலாமல் பார்த்திருந்த செழியன், அவள் அருகில் வந்து மீசையை முறுக்கிவிட்டபடி “இன்னொரு கதை சொல்லவா பாப்புக்குட்டி.” என்று கண்ணடிக்க,
வெட்கத்தில் சிவந்தவள், மாறாக யாருக்கும் தெரியாமல் நாக்கு கடித்து முறைத்து வைத்தாள்.
அனைவரும் கூடியிருக்க, திவ்யபாரதியிடமிருந்து குழந்தையை வாங்கியச் செழியன், தன் தந்தை மகேந்திரனின் கையில் பெண்ணரசியைத் தந்தான்.
குழந்தையை சுமந்துகொண்டு தொட்டிலின் அருகில் சென்ற மகேந்திரன், ஓரமாய் மகிழ்வுடன் நின்றிருந்த கார்த்தியை அருகில் அழைத்தவர், அவன் கையில் குழந்தையை தரவும், அதிர்ந்து விழித்தான் கார்த்தி.
அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர், அவன் காதில் குழந்தையின் பெயரைச் சொல்ல, விழிகள் கலங்க செழியனை திரும்பிப் பார்த்திருந்தான், கார்த்தி.
செழியன் புன்னகையுடன் விழிகளை மூடித்திறக்க, பக்கத்தில் திவ்யபாரதியோ கார்த்தியைப் போலவே இரு கட்டை விரல் தூக்கி தம்ஸ்-அப் காட்டிச் சிரித்தாள்.
அதில் கண்களில் நீர் வடிய குழந்தையை நெஞ்சொடு அணைத்துக் கொண்டவன், பெண்ணரசியின் காதில் “அம்மு! அம்மு! அம்மு!” என்று மூன்று முறை சொல்லி, தொட்டிலில் படுக்க வைத்து, அருகில் இருந்த சர்க்கரை கலந்த நீரைப் புகட்டினான்.
சர்க்கரை தண்ணீரை சுவைத்து சப்புக்கொட்டிய சில்வண்டோ கார்த்தியைப் பார்த்து மலர்ந்து சிரித்தது.