மறுநாள் விடியலில் கார்த்தி ஊருக்குக் கிளம்பி விட, அவன் சகாக்கள் செழியனுக்கு காவலாய் இருந்து கொண்டனர். காலையில் இருந்து ஒரு மார்க்கமாகவே சுத்திக் கொண்டிருந்தான், செழியன். சன்னமான விசில் சத்தம் வேறு, அவன் மனதை பட்டவர்த்தனமாக்கிக் கொண்டிருந்தது.
பாரதியை கண்டு கொள்ளாதது போலவே நடித்தவன், அவ்வப்போது தோட்டத்திற்கு மட்டும் சென்று வந்தான்.
மாலை மயங்கிய வேளையில் திவ்யபாரதியிடம் வந்தவன், “இதை கட்டிட்டு வா பாப்பு, கோவிலுக்கு போயிட்டு வருவோம்.” என்று கையில் ஒரு பார்சலை திணித்தான்.
ஆசையாக திறந்து பார்க்கப் போனவளை தடுத்தவன், “சீக்கிரம் கிளம்பி வாடி.” என்று விட்டு வெளியில் சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் பாரதி தயாராகி வெளியில் வர, கார்த்தியின் அறையில் குளித்து தானும் தயாராகிக் காத்திருந்தான், செழியன்.
ஆகாய வண்ணக் கலரில், நட்சத்திர பூக்கள் கொண்டு, எளிய வேலைப்பாடு செய்யப்பட்ட டிசைஞர் புடவையில், அந்த மேகத்து முகிலே ஆடை தறித்து வந்தது போல் இருந்தாள், பெண்ணவள்.
புடவையில் தயாராகி வந்தவளை பார்த்த செழியன், அமர்ந்த இடத்திலிருந்து தன்னையும் அறியாமல் எழுந்து நின்றான். எப்போதுமே அவள் கம்பீர அழகுதான். அவள் மெல்லுடலில் பாந்தமாகப் பொருந்திப்போகும் எந்த உடையானாலும். அதிலும் எப்போதாவது தான் புடவை அணிவாள், திவ்யபாரதி.
தான் தேர்ந்தெடுக்கும் போது கூட, இந்தப் புடவை இவ்வளவு அழாகாக இல்லையே என்று அதிசயித்துப் பார்த்திருந்தான், செழியன். ‘கொடியிடையாளால் புடவைக்கு அழகா? புடவையால் கொடியிடையாள் அழகா?’ என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தான் மனதினில்.
செழியனின் பார்வையில் கூச்சம் மேலிட, அன்றொருநாள் செழியனின் அறையில் நாணமுற்று நின்றது போல், கதவு நிலையைப் பிடித்தபடி உதடுகடித்து நின்றிருந்தாள், திவ்யபாரதி.
அவள் வெட்கத்தில் தன்னைத் தொலைத்தவன், கடித்த இதழ்களை விடுவிக்கச் சொல்லி பரபரத்த விரல்களை, அடக்கும் வழி அறியாது, அப்போதைக்கு மீசையை முறுக்கும் பணியைக் கொடுத்து, சமாளித்து வைத்தான்.
“கடவுளே! கோவிலுக்கு வர வரைக்கும் என்னை காப்பாத்து” என்ற கோரிக்கை மனு ஒன்றை அவசரம் அவசரமாக தாக்கல் செய்தான்.
ஒருவாறாக தன்னைச் சமாளித்து நிமிர்ந்தவன், வார்த்தைகள் வராமல் தடுமாற…
“வா” என்று கண்களால் அழைக்க…
ஓடி வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள், திவ்யபாரதி.
தன்னைப் பற்றியிருந்த கைகளுக்கு உரியவனை, அப்போது தான் நன்றாக நிமிர்ந்து பார்த்தாள், பாரதி. அவள் அணிந்து இருந்த புடவைக்கு ஏற்றார் போல், வெள்ளை நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தவன், அவள் புடவை நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் இரசித்திருக்க, பேச்சு அங்கே தடைபட்டுப் போனது. அதற்குள் கோவிலும் வந்திருக்க, இணைந்து சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்தனர்.
கோவிலின் வெளியே, தாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்த அதே நதியோரம் வந்தவர்கள், அதன் பின்னணியில் இருவருமாக இணைந்து நின்று மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திரும்பி வரும் வழியில், ஜீப் வீட்டுப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் செல்லவும், என்னவென்று புருவம் தூக்கிப் பார்வையால் வினவியவளிடம், கண்களை மூடித் திறந்தவனும் பதில் எதுவும் பேச முயலவில்லை.
தன்னவளின் அருகாமையையும், அந்தப் பயணத்தையும் விரும்பி இரசித்தவன், பேசி அதை கலைக்க விரும்பவில்லை.
தோட்டத்தை அடைந்ததும் ஜீப்பை நிறுத்தி இறங்கியவன் கைகளை நீட்ட, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு தானும் இறங்கி நின்றாள், திவ்ய பாரதி.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சை பசேலன நீண்டிருந்த சோலையில், யாருமற்ற தனிமை இருவரையும் ஒருவித மோனத்தில் தள்ளி இருந்தது.
அதை கலைக்கும் விதமாக, சுற்றுச் சூழலை இரசித்திருந்த திவ்யபாரதியின் மேல் இரு துளிகள் விழ, அண்ணாந்து பார்த்தவளை கருமேகக் கூட்டங்கள்… ‘நாங்கள் இரவெல்லாம் கானம் இசைக்கத் தயார்’ என்று சொல்லிச் சிரித்தன.
திடீரென மாறிய இயற்கை கூட செழியனுக்கு ஆதரவு கரம் நீட்ட…
இந்த தருணத்திற்காகவே காத்திருந்தவன் போல், பின்னிருந்து இடுப்போடு வளைத்து, திவ்யபாரதியின் தோளில் நாடி பதித்தவன்,
“கண்ணம்மா..!” என்று மிக மிக மெல்லிய குரலில் காதில் ராகம் போட்டு அழைத்தான்.
குத்தும் மீசையோடு சேர்ந்த இதழ்கள் காதில் உரச, ஜிமிக்கி அணிந்திருந்தவளின் காது மடல், இரத்த நிறம் பூசிக் கொண்டது.
ஆடவன் அணிந்திருந்த மௌனத்தை, தான் கையில் எடுத்தவள், பதில் பேச முடியாமல்.. இமைமூடி நின்றாள், அவன் கைவளைவுக்குள்.
கருமேகத்துக்கு இணையாக குளிர்ந்து நின்றவளின் நாணச்சிவப்பு, காளையவனை பித்தம் கொள்ளச் செய்தது.
காதுமடலில் இருந்து கழுத்து வளைவில் ஊர்வலம் நடத்தியவன், “கண்ணம்மா..!” என்று மீண்டும் ராகம் இசைத்தான்.
இப்போது, “ம்..ம்” என்ற ஒற்றை பதில் மட்டுமே பாரதியிடம்.
“நான் இப்போ ஒரு கதை சொல்வேனாம்.” என்றவனின் அணைப்பு இறுக, இதழ் ஊர்வலத்தில் சிக்கிக் கிடந்தவளின் இதயம் தடம் மாறி ஒலித்தது.
விழி மூடியிருந்த பாவையிடமிருந்து இப்போதும், “ம்..ம்” என்ற ஒற்றை சொல் மட்டுமே!
மேலும் இறுக்கி காற்றுப் புகாமல் அணைத்துக் கொண்டவன், “நான் ஒரு கதை சொல்வேனாம்.., நான் சொல்லச் சொல்ல, என் பாப்புக்குட்டி, இந்த உலகத்தை மறந்து அதை அப்படியே கற்பனை பண்ணிக்குமாம்.” என்றவன் கழுத்தில் குட்டியாய் இதழ் பதிக்க, சிலிர்த்து நிமிர்ந்தவள் வெட்கம் மேலிட, திரும்பி அவன் இதயக் கூட்டில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவள் ஒற்றை நாடி பற்றி முகம் நிமிர்த்தியவனை, ‘என்னவென்று’ இமை உயர்த்திப் பார்த்தாள் பாவை.
நெற்றிப் பொட்டில் இதழ் பதித்தவன், அவள் கண்களோடு உறவாடி அதில் ஆழப் புதைந்தவன், “எனக்காக இதைச் செய்வியா கண்ணம்மா..” என்றவனிடம், மேலும் கீழும் தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தாள், பாவை.
அவள் கண்களை மூடிக்கொண்டதும், “கண்ணம்மா! நாம இப்போ யாருமில்லாத ஒரு குட்டித் தீவில் இருக்கிறோம் சரியா!”
“ம்” கொட்டியவளிடம், “அங்க நானும் நீயும் மட்டும் தான்.” என்றதும், கண்களை மூடிக்கொண்டே ஏதோ பேச முயன்றவளை வாயில் விரல் வைத்துத் தடுத்தவன், “இடையில பேசக் கூடாது, ஜஸ்ட் இமாஜின் (கற்பனை பண்ணிக்கோ)” என்றவன் காதுமடலில் குட்டி முத்தம் வைக்க.
மயங்கிய பாவையோ, மகுடிக்கு மயங்கும் பாம்பானாள்.
“அந்தத் தீவில் இருக்கிற அழகான கடற்கரையில நீயும் நானும் மட்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பரந்து விரிந்த கடல் நீர் மட்டும் தான்.”
“ம்” கொட்டலும் கூட பாரதியிடம் நின்று போக, வெற்றிப் புன்னகை புரிந்தவன், மேலும் தொடர்ந்தான்.
“விண்ணில் இருந்து இறங்கிய முகில் ஒன்று, தன் கோலம் மறைக்க, அந்த நீல வானத்தை சேலையாக அள்ளிச் சொருகிக் கட்டிக்கொள்ள… மின்னும் நட்சத்திரங்கள் எல்லாம் அச்சேலை எங்கும் தூவிவிட்ட பூக்களாய் விரிந்து கிடக்க… வெட்கத்திற்குப் பதிலாக அந்த அந்திச் சூரியனின் செவ்வண்ணத்தை தேகத்தங்கத்தில் பூசிக்கொண்டு, எனக்காக நீ கடற்கரை மணலில் காத்திருக்க..
கிழக்கில் உதித்த சூரியனாய், அந்த வெண் மணற் பரப்புக்கு ஈடாய் வெண் ஆடை தரித்து உன்னை ஆட்கொள்ளும் ஆதவனாய் நான், உன் அருகில் வந்து தளிர் கரம் பற்ற…
நம் காதலைக் கொண்டாடி மகிழ, நடுக்கடலில் வடிவைமத்த மூங்கில் குடில் ஒன்று காத்திருக்க.. கடற்கரை தொட்டு கடலின் நடுவே குடில் வரை மிதவைப் பாலம் ஒன்று பூக்கள் தூவி அலங்கரித்திருக்க…
உன் கரம் பற்றி அழைத்துக்கொண்டு, பாலத்தில் இருவரும் ஒன்றாக கால் பதிக்க…
கடல் அலையின் மோதலில், ஏறித்தாழ்ந்த பாதையில், பேதை நீ தடுமாற, பதறி அணைத்த நான், காதல் கொண்டு உன்னை என் கைகளில் அள்ளிக்கொள்ள…”
அந்தரத்தில் பறக்கும் உணர்வில் கண்களை திறக்க முயன்றவளின் கண்களில் முத்தம் பதித்துத் தடுத்திருந்தவன், விட்ட இடத்திலிருந்து கற்பனையை தொடர்ந்தான்.
“உன் வெண்டைப் பிஞ்சு விரல்கள், என் கழுத்தோடு மாலையானதோ…”
மயங்கிய பாவையவளோ, மன்னனின் கைகளில் பூந்தோரணமாய்….
வாழ்த்த வந்த தேவதைகள், மேகத்தை தூதுவிடுத்து பன்னீர் தெளித்ததுவோ! பாவையவளின் வெண்பளிங்கு மேனியும் தான் குளிர் கண்டதுவோ!
நாலு பக்கமும் கடல் சூழ, பார்த்து இரசிக்க சுற்றிலும் தடுப்பு அமைத்து, குட்டியாய் ஜன்னல் வைத்து, நமக்காக காத்திருக்கிறது, மூங்கில் குடில் கண்ணம்மா.” என்றவன் கைகளில் சுமந்து வந்த பாவையவளை இறக்கிவிட்டிருந்தான்.
ஆம், செழியன் கதை பேசிக்கொண்டே தோட்டத்தில் தன் தேவதைப் பெண்ணுக்காக வடிவமைத்த மரக்குடிலுக்கு தூக்கி வந்திருந்தான்.
செழியன் இறக்கி விட்டதும், கண்களை கசக்கிகொண்டு விழித்துப்பார்த்த பாவையவளோ, தான் கண்ட காட்சியில் மயங்கித்தான் போனாள்.
ஓங்கி வளர்ந்த மரத்தின், பரந்து விரிந்த கிளைகளுக்கிடையே செழியன் அந்த மரக்குடிலை அமைத்திருந்தான். நடுவில் சின்னதாக குடில் ஒன்று இருக்க, குடிலைச் சுற்றி நாலு பக்கமும் மூங்கில்களால் தடுப்பு அமைத்து பால்கனி போல் செய்திருந்தான். மொத்த குடிலையும் சிறு சிறு ஊதாவும் வெள்ளையும் நிறைந்த மலர்கள் கொண்ட காட்டுக் கொடிகளால் அலங்கரித்திருந்தான்.
அங்கே நின்று பார்த்தால், பரந்து விரிந்த வானம் மட்டுமே சுற்றிலும் தெரிய, அது அவன் கதையில் சொன்ன நாலு பக்கமும் சூழ்ந்த கடல் நீராகவே திவ்யபாரதிக்கு காட்சியளித்தது.
ஆங்காங்கே தெரிந்த மலை முகடுகளும் கூட, கடலின் நடுவே தெரியும் பாறைக் குன்றாகவே காட்சியளிக்க… பாவையவளோ, தான் இன்னும் கற்பனையில் இருந்து வெளியில் வரவில்லையோ என மயங்கி நின்றாள்.
கடலில் மிதக்கும் பாலம் எங்கே என்று தேடியவளுக்கு, அங்கே மரத்தைச் சுற்றி சுற்றி அமைக்கப்பட்ட படிகள் தெரிய, இதில் எப்போது தூக்கி வந்தான் என்று குழம்பியவள், நிஜத்திற்கும் நிழலுக்கும் வேறுபாடு அறிய முடியாமல், குழம்பி நின்றாள்.
இதுவரை ஓரமாக நின்று தன்னவளின் முகமாற்றங்களை இரசித்திருந்த செழியன், மழை தன் கச்சேரியை ஆரம்பிக்கவும், மழையில் நனையாமல் கரம்பற்றி குடிலுக்குள் அழைத்துச் சென்றான்.
இப்போது பாவைக்குப் புரிந்திருந்தது, இங்கு வந்ததன் நோக்கம். ஆனால், தன்னவன் பார்த்து பார்த்து அமைத்த குடிலும், பரந்து விரிந்த இயற்கையும், கானக் கச்சேரி இசைத்த மழையும், பாரதியின் மனதில் பயம் என்ற ஒன்றை வேரறுத்து, அங்கு முழுக்க முழுக்க தன்னவனின் காதலின் ஆழத்தை நிரப்பி விட்டிருந்தது. அதில் செங்காந்தள் மலராய் சிவந்து நின்றாள், பாவை.
அந்தக் குடிலின் ஜன்னலோரம் நின்று மழையின் இசைக்கச்சேரியில் தன்னை தொலைத்து நின்றவளை பின்னோடு அணைத்த செழியன், “கதை இன்னும் முடியல கண்ணம்மா! மீதி கதையும் சொல்லவா?” என்றவன், பின்னங் கழுத்தில் இதழ் கொண்டு கோலமிட, மீசையின் உரசலில், அடிவயிற்றில் மின்னல் ஒன்று வெட்டிச் செல்ல, மோகம் கொண்டவள், மவுன ஆயுதம் தரித்து நின்றாள்.
அவள் கொண்ட மௌனத்தை சம்மதமாகக் கொண்டவன்..
மீதிக் கதையையும் பெண்ணிடத்தில் பேசலானான்.
உன் ஒற்றை மோகனப் புன்னகை ஆகணம் பேச..
இந்த கற்றைக் கார் கூந்தலில்
காணாமல் எனை நான் தேடவோ!
என்றவனின் கைகள் பெண்ணவளின் கார்கூந்தலுக்குள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“மோகத்தீயில் நான் மூச்சு விட
வெட்கம் கொண்டு நீ வேலியிட..
முத்த ஆயுதம் ஏந்தி நான் போர் தொடுக்க..
யுத்தம் தாளாமல் உன் செவ்விதழ் தாழ் திறக்க..
சத்தம் இல்லாமல் நான் தேன் குடிக்க..
தேன்சிட்டாய் மாறி நானும் முட்டி மோதவோ?
நடந்த முத்த ஊர்வலத்தில்
மொத்த தரிசனம் காண
நீ கொண்ட ஆடைகளும் தடையாகுமோ..?
இப்போதே ஆணையிடு கண்ணம்மா!
தடை நீக்கி விடை கொடுக்கிறேன்…
வாள் கொண்டு அல்ல..
இதழ் கொண்டு இடை நீக்கம் செய்யவோ?
தலை வாழை இலை போட்டு..
படையலிட்டு பரிமாறிடு கண்மணியே!
உன் மொத்தமும் எனக்காக..
என் உயிர் மூச்சு துடிப்பதும் உனக்காக..
மடியில் வீணையாய் நீயும் தவழ்ந்திட..
விரல் கொண்டு நானும் சுதி மீட்டிடவோ?
என் விரல்களின் வேண்டுதலுக்கு
ஒப்புதல் பத்திரம் வாசித்ததோ..
உன் சிலிர்த்த செங்காந்தள் மேனி!
தப்புதல் வழி அறியேன்!
உன் தளிர் இடையில்
எனக்கு மீளாச் சிறையோ?
உன்னை அறிந்து கொள்ளும் என் ஆராய்ச்சியில்..
கண்களின் பயணம் நீளுமோ?
கண் வழி விரல்களும் தொடருமோ..
இதழ்களும் கூட இணை சேருமோ?
இதழ்கள் தான் இறுதியில் பசியாறுமோ..
இடையினில் கொஞ்சம் இளைப்பாறவோ..
பெண் அறியா மச்சம் நான் காணவோ..
தடையின்றி மிச்சத் தடம் பதிக்கவோ..
எச்சங்களும் இனிப்பாகுமோ!
என் முதுமையிலும் வேண்டும் வரமாகுமோ!
கதை பேசிய காவலன், பேச்சிற்கிடையே தன் காரியத்திலும் கண்ணாயிருந்தான் போலும்…
கதை பேசிப் பேசியே, பூவுக்கே தெரியாமல் அதன் தேனை திருடியிருந்தான், அந்தக் காவலன்.
கலைத்து களைத்தவன், நெற்றியில் இதழ் பதித்து பாவை முகம் பார்க்க..
பாவையவளோ மொத்தமும் மறந்து முகம் பார்க்க நாணி, அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்துகொண்டாள்.
தான் தீண்டும் போது, பழைய நினைவுகளில் பாரதி துடித்திருந்தால் அந்த இடத்திலேயே உயிரோடு மரணித்திருப்பான். அதற்காகவே திவ்யபாரதியை நிகழ் காலத்தை மறக்கவைத்து கற்பனையில் ஆழ்த்தி காதல் பாடம் படித்தான், அந்த கா(த)வலன்.
மீதமிருந்த மூன்று மாதங்களில், பெண்ணவளிடம் நித்தம் ஒரு கதை படித்திருந்தான் செழியன். பயந்திருந்த காதல் வாழ்வை, பழைய கசப்புகள் அண்டாமல் இருக்கவே பெண்ணவளை கற்பனையில் ஆழ்த்தி, கதை படிக்க ஆரம்பித்தவன், பின்னர் அதையே தன் வாடிக்கையாக்கிக் கொண்டான்.
இதமாக கடந்த இல்லற வாழ்வில், செழியன் பணியில் சேரும் அந்த நாளும் வந்து சேர்ந்தது. முட்டி மோதி அந்த கிராமத்தைச் சுற்றியே பணிமாற்றல் வாங்கிக்கொண்டான்.
அன்று காலையிலிருந்தே மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டான் செழியன். இருக்காதா பின்னே!
கிட்டதட்ட ஒருவருடம் கழித்தல்லவா, அவன் விரும்பிய காக்கிச் சட்டையை அணியப் போகிறான்.
வெளியில் காவல்துறை வாகனத்துடன் டிரைவர் ஒருவர் தயாராக இருக்க, வெகுநாட்களுக்குப் பிறகு காக்கிச் சட்டையை அணிந்துகொண்டு, சிங்கத் தலை கொண்ட தொப்பியை தலையில் வைத்தவன் சிங்கமென நடந்து வர… எதிரில் வந்தாள் திவ்யபாரதி.
பாரதியைக் கண்டதும் கண்ணடித்தவன், தன் வலது கை இடது பக்க மீசையை முறுக்கிவிட, கம்பீரமாய் நடந்து வந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தவள், அடுத்த நொடி மயங்கிச் சரிந்திருந்தாள்.