அத்தியாயம் – 16

தன் தந்தையைப் பார்த்த பரவசத்தில் எழுந்த போது, தவறி விழுந்த ஃபைலிலிருந்து பறந்த பேப்பர்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த செழியன்,

“நாகராஜ்” என்ற வார்த்தையில், தன் தந்தையை திரும்பிப் பார்த்தவன், “அப்பா, இவனை உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்க,

“என் சர்வீஸ்லயே, இவனைத்தான் எனக்கு ஏற்பட்ட கரும்புள்ளியா நினைச்சிக்கிட்டு இருக்கேன்பா, இவனை முடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனால், தன்னோட அரசியல் பலத்த வச்சி, தப்பிச்சிகிட்டே வந்துட்டான்.”

“இவனால பாதிக்கப்பட்ட ஒரு சின்ன இதயத்துக்கு, என்னால இன்னைக்கு வரை பதில் சொல்ல முடியாம, குற்ற உணர்ச்சியில தவிச்சிக்கிட்டு இருக்கேன்.” என்றவர், “இவன் மட்டும் இல்ல, இவன் கூட்டாளி ஒருத்தன் இருக்கான் பேரு….” என்று யோசிக்கவும்,

“சுந்தர பாண்டியன்” என்று முடித்தான் செழியன்.

“யா.. ரைட்” என்றவர், அவன் கையிலிருந்த ஃபைலை பார்த்துவிட்டு, “ஓ..இவனுங்களைத்தான் பாரதி! கொலை..” என்றவர், மீதியை செழியனின் மனம் கருதி சொல்லாமல் விட்டுவிட்டார்.

“ஆம்” எனும் விதமாக தலையாட்டிய செழியன், இதுல நாகராஜால தான், அவ பாதிக்கப்பட்டு இருக்காப்பா.” என்று கண் கலங்கியவன் மேலும் அதைப்பற்றி சொல்ல வர, இடைமறித்து ‘தெரியும்’ எனும் விதமாய் கண்களை மூடித் திறந்தவர், திரும்ப அதைச் சொல்லப்போய், மகன் கஷ்டப்படுவதை பார்க்க விரும்ப வில்லை.

மகனுக்காக வருத்தப்பட்ட மகேந்திரன், ஆதரவாக தோள் தட்டிக்கொடுத்தார். அவரும் கோர்ட்டில் நடந்ததை அறிந்திருந்தார் அல்லவா? பாரதி அடைந்த கொடுமைகளை நினைக்கவும் தான், ஏதோ நினைவு வந்தவராக தன் அலுவல் அறைக்குச் சென்றவர், தேடி எடுத்துக் கொண்டு வந்தார், அந்தக் காகிதத்தை.

பல வருடங்கள் ஆகி இருந்தாலும், அந்தக் கடிதம், மஞ்சள் நிறம் கொண்டு, தன்னில் சுமக்க முடியாத பாரத்தை, இத்தனை நாட்களாக சுமந்து கொண்டிருந்தது.

அதைத் தன் மகனிடம் கொடுத்தவர், “உனக்கு இந்த கேஸுக்கு தேவையானது, இதுல இருக்கலாம்பா. இதுவும் அந்த நாகராஜ் சம்மந்தப்பட்டதுதான்.” என்று ஒப்படைத்தார். கூடவே சில ஃபைலும் போட்டோக்களும்.

தன் கையிலிருந்த அந்தக் காகிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தான், செழியன்.

ஸ்கூல் நோட்டிலிருந்து கிழித்து, எழுதப்பட்டிருந்தது அந்தக் காகிதம்.

‘வணக்கம் சார், நான் கார்த்திக் இளவரசன்.’ என்று குண்டு குண்டு கையெழுத்தில் ஆரம்பித்து, மேலும் கீழுமாக இருந்த அந்த எழுத்தைப் பார்த்ததுமே தெரிந்தது, அது நிச்சயம் ஒரு சிறு பள்ளி செல்லும் சிறுவனால், அவசரம் அவசரமாக எழுதப் பட்டிருக்கிறது என்று.

‘நேத்து என் அம்முவோட கோவிலுக்குப் போயிருந்தப்போ…” என்று கல்மிஷம் இல்லாமல் தொடங்கிய அந்த கடிதத்தின் காட்சிகள், அதை எழுதிய சிறுவனின் பார்வையில்…

…………………….

அன்று கன்னூரில்..

கடைசி நாள் திருவிழாவில், விளையாடச் சென்ற மலைக்கோவிலில், கார்த்தி மற்றும் அம்முவின் திருமணமும் விளையாட்டாய் முடிந்திருக்க, சிறுவர்கள் புடை சூழ, கார்த்தியும் அம்முவும் ஒருவரின் கரங்களை ஒருவர் பற்றிக்கொண்டு, மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அப்போது தான், அந்தக் கொடிய அரக்கர்களின் கண்ணில் பட்டாள் அம்மு.. கார்த்திக்கின் தேவதை.

கோவிலின் அருகிலிருந்த குன்றின் பின்புறம் இருந்து அவர்கள் குடித்துக் கொண்டிருக்க, சிறுவர்களின் ஆரவாரத்தில் திரும்பிப் பார்த்தவர்களின் கண்களில்..

மாலையும் கழுத்துமாக,  பட்டுப் பாவாடைச் சட்டையில் தேவதை போல் கார்த்திக்கின் கரம் பிடித்து நடந்து வந்து கொண்டிருந்த அம்மு விழுந்தாள்.

சிறுவர்களின் திருமண நாடகம் சிரிப்பை வரவழைத்தாலும், ஏற்கனவே குடியின் முழு போதையில் இருந்தவர்களுக்கு, அம்மு.. குட்டி தேவதையாகத் தெரியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

அப்போது அங்கு வந்த அம்முவின் தாய்மாமன் சங்கர், “இது என்ன விளையாட்டு, உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணுமா, ம்ம்.. எல்லாம் ஓடுங்க.” என்று மிரட்டி விளையாடிக் கொண்டிருந்த சின்னப் பசங்களையெல்லாம் விரட்டி அடித்தான்.

கார்த்தியும் அம்முவின் கையை விடாமல் இழுத்துக்கொண்டு செல்லப்பார்க்க, அவனைத் தடுத்தவன்,

“மண்டையிலே போட்டுருவேன், முளைச்சி மூனு இலை விடல.. அதுக்குள்ள கல்யாணம், அம்முவ நான் கூட்டி வரேன். நீ போ.” என்று அவனையும் விரட்டி அடித்தான்.

கார்த்தியோ, “மாட்டேன், நானே அம்முவ கூட்டிப்போறேன், வா அம்மு, போலாம்.” என்றான் பிடிவாதமாக.

இவனை என்ன சொல்லி விரட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் சங்கர். ஏனெனில் அவனுக்கு அம்முவின் கழுத்தில் இருக்கும் செயினும், காதிலிருந்த கம்மலும் உறுத்திக்கொண்டே இருந்தது.

அம்மு தனியாக மாட்டும் சந்தர்ப்பத்திற்காகத்தான், அவனும் காத்திருந்தான். சின்னப் பசங்க எல்லாம் விளையாட மலைக்கோவிலுக்கு வந்தது அவனுக்கு வசதியாகிவிட்டது, மலைக்கோவில் சாதாரண நாட்களிலே கூட ஆள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது. இன்று திருவிழா வேறு, பின் கேட்கவா வேண்டும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த நரி, அங்கே இங்கே வேலை செய்வதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டவன், அப்படியே நழுவி, இங்கு வந்து சேர்ந்திருந்தான்.

குனிந்து அம்முவை தூக்கிக்கொண்ட சங்கர், “அம்மு! மாமா உன்னை அந்த மலைக்கு மேல கூட்டிப்போய் காட்டுறேன். கார்த்தி இருந்தா, அங்க போக விடமாட்டான், அப்பாகிட்ட போய் சொல்லிடுவான், நீ அவனப் போகச் சொல்லு, நீ சொன்னா, அவன் கேட்பான்.” என்று அம்முவின் காதில் சொல்ல,

வெகுநாளாக அந்த மலை மேல் இருக்கும் சுனைக்குச் செல்ல ஆசைப்பட்ட அம்முவும் “மாமா! பசிக்குது, நீ அம்மாகிட்டப் போய் பொங்கல் வாங்கிட்டு வரியா?” என்று கார்த்தியிடம் கேட்டாள்.

கார்த்தியோ, “அம்மு, நான் போய் எடுத்துட்டு வர லேட் ஆகும் அம்மு. நீயும் வா. அங்க போய் சாப்பிட்டுக்கலாம்.” என்று அவளையும் சேர்த்து அழைத்தான்.

“மாமா! ப்ளீஸ்… என் செல்ல மாமால்ல.., நான் சங்கர் மாமா கூட விளையாடுறேன். நீ போய் வாங்கிட்டு வா.” என்றாள்.

அதற்கு மேல் என்ன சொன்னாலும் அம்மு வரமாட்டாள் என்று அறிந்துகொண்ட கார்த்தி, அம்முவுக்கு பசிக்குது எனவும், அதற்கு மேல் தாமதிக்காமல் “சரி”  என்று சொல்லி, கிளம்பி விட்டான்.

சிறிது தூரம் சென்ற கார்த்தி, திரும்பிப் பார்க்கையில்… சங்கர் அம்முவை தூக்கிக்கொண்டு மலை மேல் ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது.

கார்த்திக்கும் அங்கு செல்ல ஆசைதான். ஆனால், மாதவன் என்றுமே அனுமதித்ததில்லை. அங்கு பாசி வழுக்கும் என்று மறுத்து விடுவார்.

பெரியவர்கள், அல்லது விடலைப் பையன்கள் மட்டுமே எப்போதாவது அங்கு சென்று சுனையில் குளித்துவிட்டு வருவார்கள்.

எனவே, அம்முவுக்கு விரைவாக பொங்கல் எடுத்து வந்தால், அவர்களுடன் சேர்ந்து அந்த மலைக்கு மேல் செல்லலாம் என்ற ஆசையில், ஓட்டம் எடுத்தான் கார்த்தி.

மது குடித்துக்கொண்டே, இவற்றையெல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நாகராஜும், அவன் நண்பன் சுந்தர பாண்டியனும், ஒருவருக்கொருவர் கண் காட்டிக்கொண்டு, பாட்டிலோடு சங்கரையும் அம்முவையும் பின் தொடர்ந்தனர்.

ஆள் அரவமற்ற பகுதிக்குச் சென்ற சங்கர், அம்முவிடம் “பாப்பா, நாம விளையாடலாமா?” என்று கேட்டு, பாக்கெட்டிலிருந்து கர்சிப்பை எடுத்து அம்முவின் கண்களை கட்டி விட்டு, “பாப்பா என்னைக் கண்டுபிடி” என்றான்.

அம்மு கைகளை விரித்துத் தேட ஆரம்பிக்கவும், சிறிது விளையாட்டு காட்டியவன், பின் அவள் பின்னாலிருந்து பிடித்துக்கொண்டு, அவள் நகைகளை கழட்ட ஆரம்பித்தான்.

பயந்து போன அம்மு! “மாமா.. மாமா.. நீ எங்கிருக்க” என்று அழைத்தவளிடம், பதிலே சொல்லாமல், யாரோ நகைகளை கழட்டுவது போல் நினைத்துக்கொள்ளட்டும் என்று மூச்சுக் காட்டாமல் அமைதியாக இருந்து கொண்டான்.

இல்லையென்றால், அம்மு சங்கரை தன் தந்தையிடம் காட்டி கொடுத்துவிடுவாளே, இப்போதென்றால் யாரென்றே தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டிருந்தான்.

அப்போது அவன் முன்னே வந்து நின்ற இருவரையும் பார்த்து மிரண்ட சங்கர், திரு திருவென முழிக்க,

“என்னடா பண்னிட்டு இருக்க” என்று மிரட்டினான் நாகராஜ்.

பயந்து போன சங்கர், “இல்ல சும்மா, நான் இல்ல” என்று உளற ஆரம்பிக்க,

அவனை பக்கவாட்டாக இழுத்துக்கொண்டு போன அந்த இருவரும், “இங்க பாரு, நீ கொஞ்ச நேரத்துக்கு பேசாம இருந்தீன்னா, நாங்க உன்னை காட்டிக் குடுக்க மாட்டோம்.” என்று டீல் பேசவும்,

எதற்கு இந்த டீல் என்று புரியாவிட்டாலும், அவர்களின் கைகளிலிருந்த பாட்டிலில் சங்கரின் பார்வை நிலைத்து நின்றது. அவன் பார்வையை கண்டு கொண்டவர்கள், இரண்டு பாட்டிலையும் கொடுத்து, மேற்கொண்டு பணமும் கொடுக்க, அந்த குடிகார நாயோ, பாட்டிலோடு அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டது. பாட்டிலைக் கண்டதும், அம்முவை பற்றி அந்த நாய் நினைக்கவே இல்லை.

அம்முவோ, வேறு வேறு பேச்சுக்குரல்கள் கேட்கவும், தன் கண்ணில் கட்டியிருந்த துணியை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

சங்கர் குடிக்க ஆரம்பித்ததும், அம்முவிடம் சென்ற அந்த நாய்கள், அவளை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டன.

சங்கர் திரும்பிப் பார்க்கவும்,

“பாப்பா கிட்ட சும்மா விளையாடிட்டு வரோம்.” என்று சொல்ல,

அந்த குடிகார நாயோ பல்லை இளித்துக்கொண்டே, அடுத்தடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டது.

யாரென்று தெரியாமல் கத்த முயற்சித்த அம்முவின் வாயைப் பொத்திய சுந்தரபாண்டியன், “இப்போதான உனக்கு கல்யாணம் முடிஞ்சிது, கல்யாணம் முடிஞ்சதும் இதுவும் நடக்கணும் பாப்பா, இல்ல தெய்வ குத்தமாயிரும்.” என்று தன் காரைப்பற்கள் தெரிய இளித்துக்கொண்டே, ஒதுக்குப்புறமாக தூக்கிச்சென்றான்.

தன் அத்தையிடம் கேட்டு பொங்கலை வாழை இலையில் கட்டி வாங்கிக்கொண்ட கார்த்தி, சாப்பிட்டு போகச் சொன்ன அத்தையிடம், “நான் அம்முவோட சாப்பிட்டுக்கறேன் அத்தை” என்று மறுத்துவிட்டு, அம்முக்காக ஒரு பாட்டிலில் தண்ணீரும் எடுத்துக்கொண்டவன் சிட்டாகப்பறந்தான், மலைக் கோவிலைத் தேடி.

மலைக்கோவிலில் யாருமே இல்லாமல் இருக்க, பின்னால் உள்ள மலையின் மேல் சிறுவனான அவன் தட்டுத்தடுமாறி ஏறி வந்த போது, அவனின் அம்மு கிழிந்த நாராகத்தான் கிடந்தாள்.

கார்த்தி மலை ஏறி செல்லும் வழியிலேயே, சங்கர் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்க, அவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து அம்முவின் செயின் வெளியே வந்து கிடந்தது.

சங்கரைப் பார்த்து பயந்துபோன கார்த்தி, ‘அம்மு இவன் கூடத்தான வந்தா.. எங்கப்போனா’ என்று தேடியபடி, “அம்மு.. அம்மு..” என்றழைத்துக் கொண்டே, மேலும் சிறிது தூரம் ஓடிச்சென்று பார்க்க,

அங்கோ, அவனின் அம்மு சுய நினைவின்றி கிடந்தாள்.

ஏற்கனவே ஒரு மிருகம் சிறுமி என்றும் பாராமல் சீரழித்து முடித்திருக்க, அடுத்த மிருகம் சூறையாடிக் கொண்டிருந்தது.

அதைப்பார்த்ததும், தன் அம்முவுக்கு என்னவோ என்று பதறிப்போன கார்த்தி, அம்மு இருந்த கோலத்தைப்பார்த்து, “அங்கிள் விடுங்க, என் அம்முவ விடுங்க” என்று அழுது கொண்டே, அந்த தடியனைப் பிடித்து இழுக்க,

மலைமாடுபோல் இருந்த சுந்தர பாண்டியனை கார்த்தியால் சிறிதும் அசைக்க முடியவில்லை. இருந்தும் விடாமல் “அம்முவ விடு.. அம்முவ விடு” என்று அழுத கார்த்தி, முதுகில் ஓங்கி ஓங்கி அடிக்க..

முதுகில் ஏற்பட்ட வலியில் எரிச்சலைடைந்த சுந்தர பாண்டியனோ, திரும்பி ஓரே தள்ளாக கார்த்தியை தள்ள, அருகிலிருந்த சிறு பாறையின் மேல் முட்டி நின்றான், கார்த்தி.

கூராக இருந்தப் பாறையில் நெற்றிப் பிளந்து இரத்தம் கொட்ட, மீண்டும் விடாமல் “அம்மு.. அம்மு..” என்று கதறிக்கொண்டே, திரும்பத் திரும்ப தாக்கினான்.

அருகில் போதையில் விழுந்து கிடந்த நாகராஜ், சத்தம் கேட்டு எழுந்து கார்த்தியை அடித்து விரட்ட,

தன்னால் இவர்களை விரட்ட முடியாது என்று யோசித்த சிறுவன், வழியெங்கும் குருதி வழிந்தோட, சங்கரைத் தேடி ஓடினான்.

சங்கரை எவ்வளவு எழுப்பியும் அவன் எழுந்து கொள்ளாமல் போக, தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்து வந்தவன், சங்கரின் மீது ஊற்றினான்.

அதில் சிறிதே அசைந்த அந்த குடிகார நாய், மீண்டும் திரும்பி படுத்துக்கொள்ள, அவன் மூஞ்சில் தாறுமாறாக அடித்த கார்த்தி, “அம்மு…” என்று அலறிக்கொண்டே அவளைத்தேடி ஓடி விட்டான்.

அவன் திரும்பிச் சென்ற பொழுது, அந்த மிருகங்கள் தன் தேவையை முடித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பியிருந்தன.

கண் கட்டு இன்னும் அவிழ்க்கப்படாத நிலையில், தான் சற்று முன் அணுவித்த மாலையிலிருந்த பூக்களெல்லாம் உதிர்ந்து அவள் மீதே சிதறியிருக்க, வெறும் மாலையின் நாரை மட்டுமே ஆடையாகக் கொண்டு, அந்தப் பூக்களைப்போலவே சிதறிக்கிடந்தாள், அவனின் குட்டி தேவதை.

கார்த்தி அறைந்ததில் சற்றே சுரனை வந்திருந்த சங்கர், கார்த்தியின் அலறல் கேட்டு, அங்கு வந்து அம்மு இருந்த நிலையை பார்த்தவன், பயத்தில் போதை தெளிய, விபரீதம் அறிந்து அம்முவின் நகைகளை எடுத்துக்கொண்டு, அந்த ஊரை விட்டே ஓட்டம் பிடித்தான்.

மயங்கி இருந்த அம்முவை பார்த்த கார்த்திக்கு, என்ன செய்வதென்றே தெரியாமல் “அம்மு.. அம்மு..” என்று அழுதபடி கன்னத்தில் தட்டி அவள் கண்களில் கட்டியிருந்த கர்சீப்பை அவிழ்க்க, தாயின் வயிற்றில் இருக்கும்போதே, அவன் குரலுக்கு துடித்தவள் இப்போது கேட்காமல் இருப்பாளா..? அதுவும் தன் செல்ல மாமனின் அழுகுரலுக்கு செவி சாய்க்காமல் இருப்பாளா..?

மெதுவே கண்விழித்து மலங்க மலங்கப் பார்த்தவள், “மாமா..மாமா வந்துட்டியா..? ரொம்ப பசிக்குது மாமா, பொங்கல் எடுத்துட்டு வந்தியா” என்று தன் வயிற்றைத் தொட்டு தடவிக்கொண்டே பாவமாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

தன் வயிற்றுப் பசியை மட்டுமே அறிந்து கொள்ளும் வயதில், எந்த மிருகத்தின் பசிக்கோ இறையாகிப்போனதில் அவளின் தவறென்ன…?

தன் ஆடையில்லா உடல் அவள் பொருட்டல்ல..

தன் கால்களின் வழி வழியும் குருதியும் பொருட்டல்ல..

இதுவெல்லாம் என்னவென்று அறியும் வயதுமல்ல…

இத்தனை நாளில் அறிந்ததெல்லாம் தன் வயிற்றுப் பசியைத்தானே..

கார்த்தியோ, அந்த மிருகம் தள்ளிவிட்டதில் விழுந்த பாறைக்கருகில் கிடந்த பார்சலை எட்டி எடுத்தவன், கையோடு அருகில் கிடந்த அம்முவின் ஆடையையும் எடுத்துக் கொண்டான்.

காலையில் அம்முவை தேவதையாக காட்டிய ஆடை, இப்போது அங்கங்கே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. அம்முவை எழவைக்க முயற்சி செய்ய, அவளால் அசையக்கூட முடியவில்லை. மெதுவாக ஆடைகளை மாட்டிவிட்டவன், அம்முவை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு, பொங்கலை பிரித்து ஊட்டி விட ஆரம்பித்தான். அவனின் அம்மு பசி தாங்கமாட்டாளே..!

கார்த்தியின் நெற்றிக் காயத்தை வருடிவிட்ட அம்மு, அவன் ஊட்டி விட மெல்ல வாய் திறந்து சாப்பிட்டவள், வலிதாங்க முடியாமல் கண்ணீரின் ஊடே,

“மாமா, நான் ரொம்ப தப்பு பண்ணினா தான, நீ என்னை கடிச்சி வைப்ப, நான்தான் எந்த தப்பும் பண்ணலியே, அப்புறம் ஏன் அந்த அங்கிள்லாம் என்னைய கடிச்சி வச்சாங்க.” என்று கேட்டவள் விசும்பிய படி..

“ரொம்ப வலிக்குது மாமா” என்றவளுக்கு, திடீரென விக்கல் வர, விக்கியபடி.. “மா….மா.. த.. த.. தண்ணீ..க்குடு” என்று சொல்லி முடிக்கும் முன், விக்கல் வலிப்பாக மாறி இருந்தது.

அம்முவை கீழே படுக்க வைத்து விட்டு, “இரு அம்மு..” என்றவன் ஓடிச்சென்று சங்கர் விழுந்துகிடந்த இடத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வருவதற்குள், அவனின் குட்டி தேவதை அவனை விட்டு நீண்ட தூரம் போய்விட்டிருந்தாள்.

என்ன தட்டியும், அம்மு எழும்பாமல் போகவும், அழுதுகொண்டே செய்வதறியாது திகைத்த கார்த்தி, யாரையும் அழைத்து வரவேண்டும் என்றாலும், அம்முவை தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல், அம்முவின் இரு கைகளையும் பற்றித் தூக்கி, தன் தோள் மீது உப்பு மூட்டையாகத் தூக்கிக்கொண்டு, மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தான்.